பசியில்லாமல் சாப்பிட்டு
தூக்கமில்லாமல் தூங்கி
முகத்தளவில் சிரித்து
அத்தியாவசமாக பேசி
எப்போதும் போல்
இயல்பாக
இருப்பதாகவே........
தொடரும்..
நாட்கள் !
தொடரும் நாட்கள்....
Labels: கவிதை 13 Comments
சோனா கஞ்ச்' சோகமா? சுதந்திரமா? அங்கீகரிக்கப்பட்ட தொழிலா?
சோனா கஞ்ச் என்ற இடம் இருப்பது தெரியவந்தது, மகாநதி என்ற திரைப்படத்தின் மூலம். என்னை போன்றோர் திரைப்படங்களின் மூலம் ஓரளவு பொது அறிவை இப்படித்தான் வளர்த்துக்கொள்கிறோம் என்று சொல்லவேண்டும். :) மகாநதி வெளிவந்த ஆண்டு 1994. அதில் சோனா கஞ்ச் என்ற விபசாரம் செய்யும் இடத்திற்கு பெண்கள் விற்கப்படுகிறார்கள், கடத்த படுகிறார்கள் என்ற செய்தி தெரிந்தது. பச்சிளம் சிறுமிகள் கூட அந்த படத்தில் காட்டப்படுவார்கள். என்னை மனதளவில் ரொம்பவே பாதித்த ஒரு படமாக அது இருந்தது. ஆனால், சமீபத்தில், அதே சோனா கஞ்ச் இடத்தை பற்றி சன் டிவி யின் 'நிஜம்' நிகழ்ச்சியில் காண நேர்ந்தது..
மனதை பாதிக்கவில்லை, மாறாக அதுவும் ஒரு தொழில் என்றே என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இதனை ஒரு பார்வையாளராக மட்டுமே முடிவு செய்துக்கொள்ளவில்லை, அதில் பேசிய பெண்கள், அவர்களின் பணம் மற்றும் உடல் தேவைகள் குறித்து பேசியதை கொண்டும், அவர்களின் முகத்தில் எந்த வருத்தமோ, சலனமோ அல்லது கஷ்டமோ இல்லை என்பதை அவர்கள் உடல் மொழி மற்றும் பேச்சின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. அடிப்படை காரணம் வறுமை என்றாலுமே, இந்திய நாட்டை பொறுத்தை வரை வறுமையின் காரணமாக சிறு வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வது என்பது, குழந்தைகளில் ஆண், பெண் என்ற பேதமின்றி நடைபெறுகிறது என்றே சொல்லலாம். :(
இந்த சோனா கஞ்ச் இடத்தை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள, கூகுலில் தேடிய போது, மேற்கு வங்க அரசு, இந்த தொழிலுக்கு சட்ட பூர்வமாக ஒப்புதல் அளித்து உள்ளது. அவர்களுக்கு அரசு சம்பந்தப்பட்ட எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. பாலியல் நோயிலிருந்து காக்க இலவச மருத்துவ வசதி, மருந்துகள், ஆணுறை போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு 65000 மேலான பாலியல் தொழிலாளிகள் இருக்கிறார்கள், இவர்கள் அனைவருமே அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட Durbar Mahila Samanwaya Committe யில்உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கமிட்டி 1995 ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இதில் உறுப்பினர் அல்லாதவர்கள் இந்த தொழிலில் ஈடுபட வாய்ப்பில்லை. உறுப்பினர்கள் அனைவருமே அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரிலே அங்கு இந்த தொழிலை செய்து வருகிறார்கள்.
திருமணம் ஆனவர்கள், கணவரின் அனுமதியோடு, அவருக்கு தெரிந்து, அவரால் அனுப்பப்பட்டும் இந்த தொழிலுக்கு வருகிறார்கள். அவர்கள் பொதுவாக சொல்லும் கருத்து, மற்ற தொழில்கள் போல இதுவும் ஒரு தொழில் தான். படிப்பு இல்லை, வறுமை, குழந்தைகள், குடும்பம் என்று எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை போன்றவை எங்களை இந்த தொழிலில் ஈடுபட வைக்கிறது. "எங்களை பற்றி தவறாக பேசும் யாரும், நாங்கள் வறுமையில் இருக்கும் போதோ, சாப்பாடு இல்லாமல் இருக்கும் போதோ உதவி செய்ய முன்வரவில்லையே. அப்படி இருக்க, எங்களின் வயிற்றுக்கு தேவையானதை எங்களுக்கு தெரிந்த வழியில் சம்பாதித்து கொள்கிறோம், அதைப்பற்றிய மற்றவர்களின் கருத்துக்கள் எங்களுக்கு தேவையே இல்லாத ஒன்று", என்கின்றனர்.
அவ்வபோது இவர்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி, பாலியல் தொழிலாளர்களுக்கு பாலியல் தொற்று நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதை சொல்லிக்கொடுக்கிறார்கள். அது மட்டுமல்லாது 1992 ல் தொடங்கிய ஹெச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு தேவையான அறிவுரையையும், உதவியையும் தொழிலாளிகளுக்கு அளித்து வருகின்றன.
மகாநதியில் காண்பித்தது போன்ற மனதை பாதிக்கும் கொடூரங்கள் (இப்போது) அங்கு இருப்பதாக தெரியவில்லை. அதாவது கட்டாயபடுத்தியோ, ஆட்களை கடத்தியோ, விற்றோ அங்கு தொழில் செய்துவிட முடியாது. அதை அவர்களுக்கான கமிட்டி அனுமதிக்காது. விருப்பத்திற்கு மாறாக வரும் பெண்கள், பாதுக்காப்போடு அவர்கள் இடத்திற்கு அனுப்பி வைக்க படுகிறார்கள். மேலும், ஒன்றிரண்டு முறை தொழிலில் ஈடுபட்டு, பிடிக்கவில்லை என்று திரும்பி செல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டாலும், அவர்களின் விருப்பம் நிறைவேற்ற படுகிறது. எங்கும் போக வழியில்லை, மேற்க்கொண்டு படிக்கவோ, வேறு வேலைக்கு செல்லவோ விரும்பும் பெண்கள் அதனையும் செய்ய அந்த கமிட்டி உதவி செய்கிறது. அதே இடத்தில் தனியாக இருந்துக்கொண்டு பெண்கள் தங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளலாம். அதற்காக அவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கேயே பல வருடங்களாக தொழில் செய்து, வயதாகி உடல் மனம் தளர்ந்தவர்களுக்கும், ஓய்வு ஊதிய வசதி செய்யப்பட்டும், அவர்களும் அங்கேயே தொடர்ந்து தங்குவதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் குழந்தைகளும் இதே தொழிக்கு தான் வர வேண்டும் என்று யாரும் கட்டாயம் செய்வதில்லை. அது அவர்களின் சொந்த விருப்பமாக கருதப்பட்டு முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது என்பது சந்தோஷமான செய்தியே.
இங்கு, பெண்கள், நிரந்தரமாக ஒரு இடத்தில் (விடுதியை போன்று) தங்கிக்கொண்டு, தொழில் செய்ய மட்டும் அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்கின்றனர். அதற்கான அறை, சம்பந்தப்பட்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேடிக்கொள்ள படுகிறது. அதற்கான வாடகையும் அவர்களே தான் கொடுக்க வேண்டும். அதனால் இந்த அறைகள் வாடகைக்கு விடுபவர்கள் இதையும் தனி வியாபாரமாகவே செய்து வருகின்றனர். புதிதாக வருபவர்களை ஏமாற்றி பணத்தை பிடிங்கிக்கொண்டு அனுப்பும் கும்பளிடமிருந்து, அவர்களை இந்த கமிட்டி ஆட்களே கண்கானித்து காப்பாற்றி, ஏமாந்துவிடாமல் உதவியும் வருகிறார்கள்.
ஆக, சோனாகஞ்ச் பற்றிய தகவலை சேகரித்த போது, பெண்கள் மிக பாதுக்காப்போடும், விருப்பப்பட்டுமே இந்த தொழிலை செய்து வருகிறார்கள் என்று தெரிகிறது. இதிலும் வருத்தப்பட கூடிய விஷயம், 15-16 வயதுடைய சிறுமிகள், வறுமையின் காரணமாக இங்கு தஞ்சம் புகுந்தது மட்டுமல்லாது, குடிக்கு தன்னை அடிமைப்படுத்தி க்கொண்டு இந்த தொழிலை செய்கிறார்கள். அவர்கள் மட்டுமே அல்லாது அங்கிருக்கும் ஏனைய பெண்களும், குடித்தால் மட்டுமே இந்த வேலையை செய்ய முடியும்,அதனால் பழக்கி கொண்டோம், முதலில் ரொம்பவே கஷ்டமாக இருந்தது..ஆனால் இப்போது பழகிவிட்டது என்று சிரித்துக்கொண்டே சொல்கின்றனர். வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் ஆண்குழந்தைகளும் கூட சிறு வயதிலேயே இப்படி கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிவிடுவது வாடிக்கையாக பார்ப்பது என்றாலும். சிறு வயதிலேயே கையில் பணத்தை பார்க்கும் இவர்கள் அதனை தன் ஆசைப்படி செலவு செய்யவும் பழகிவிடுகிறார்கள் என்பது நடைமுறை உண்மை.
இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து இங்கு பெண்கள் வருகின்றனர். குறிப்பாக, ஆந்திராவிலிருந்து பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்தியன் என்பதை தாண்டி சந்தோஷப்பட்ட விஷயம் தமிழ் பெண்களை இதில் குறிப்பிடிவே இல்லை.
சரி , இந்த சோனா கஞ்ச எப்படி உருவானது.? ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்தில், அவர்களின் சிப்பாய்களின் உடல் தேவைக்கு, பெண்கள் அனுப்பப்பட்டு வந்தனர். அது கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து, ஒரு தொழிலாகவே மாற்றப்பட்டது, இதற்கான சரித்திர சான்றுகள் ஒன்றும் இல்லை.. செவி வழி கேட்டு கேட்டு வந்தவை மட்டுமே. இருந்தாலும் மிக பெரிய அளவில் நடக்கும் இந்த தொழில், அவசியமா அவசியம் இல்லையா என்ற கேள்விக்கு முன், பல பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் குடும்பமும் பிழைக்கின்றனர்.
மங்கைஜி - யின் கருத்துக்களை இந்த பதிவிற்காக வரவேற்கிறேன்.
நன்றி :-
http://www.durbar.org
Sun News Channel
http://en.wikipedia.org/wiki/Sonagachi
http://www.youtube.com/watch?v=hUO_RZdM-is
அணில் குட்டி அனிதா : இதனால் தாங்கள் சொல்ல வரும் கருத்து என்னவோ?
பீட்டர் தாத்ஸ் : * If nobody wants to sell sex, it is a crime to force anyone to do so. But when men or women do want to sell their bodies, they should have that full right without encountering punishment or discrimination. If the client behaves decently, the relationship between the sex buyer and the sex seller must be considered a purely private transaction.
* Prostitution will always lead into a moral quagmire in democratic societies with capitalist economies; it invades the terrain of intimate sexual relations yet beckons for regulation. A society's response to prostitution goes to the core of how it chooses between the rights of some persons and the protection of others.
சோனா கஞ்ச் பற்றி தொடர்புடைய பதிவு : நன்றி ஆயில்யன்
Labels: சமூகம் 20 Comments
ஏன்ன்ன்ன்ன்ன்?
ஒரு பிறவியே
ஏன்
எதற்கு
எப்படி
எப்போது
முடியும் என காத்திருக்க...
ஏனோ
நினைவுகள்
அடுத்த
பிறவியிலாவது.........
என
அறியாத
ஒன்றின் பின்னால்
அடிக்கடி செல்கிறேதே...
ஏன்ன்ன்ன்ன்ன்?
அணில்குட்டி : அப்படி மட்டும் ஒன்னு இருந்தா.. .அதோ.. அந்த வெட்டுகிளி மேல சத்தியமா... நான் உங்க கூட மட்டும் இருக்க மாட்டேன் அம்மணி... போதும்ம்ம்ம்ம்.. !!!... முடியலஅஅஅஅ.... .!!
பீட்டர் தாத்ஸ் : “Laugh as much as you breathe and love as long as you live.”
Labels: கவிதை 20 Comments
எம்.ஜி.ஆர் என்ற வில்லன்
எப்போதும் நம்ம மக்கள் இரண்டு பெரும் கட்சிகள் சார்பாக விவாதம் செய்துக்கறாங்க. .அதை படிக்கும் போது, இதை எழுதனும்னு நினைச்சேன்.
திராவிடம் சின்ன வயசில் இருந்து குடும்பத்தில் ஊற்றி வளர்க்கப்பட்டது. அண்ணா, அவருக்கு அடுத்து கலைஞர் இது தான் எங்கள் வீட்டு பெரியவர்களுக்கு தெரிந்தது, அவர்களை பற்றியே பேசுவார்கள். எம்.ஜி.ஆர் ஐ திட்டிக்கொண்டே இருப்பார்கள், அதனால் நாங்களும் எம்.ஜி.ஆர் ஐ ஒரு வில்லனாகவே பார்த்து பழகிவிட்டோம். அதை மாற்ற முடியுமா என்பது வேறு விஷயம், தரம் பிரித்து பார்க்க நம் அறிவு நன்றாக வேலை செய்ய வேண்டும், தேவையான முதிர்ச்சி வேணடும். இது இரண்டும் இல்லைன்னா. .வழி வழியாக நம் மில் ஊட்டப்பட்ட கட்சியும் அதை சார்ந்த கொள்கைகளும் மட்டுமே தெரியும், தனிமனித துதிபாடல், அவர்களுக்கு பூஜை, புனஸ்காரம் செய்ய தோன்றும்.
நம்பியாரை விடவும் எம்.ஜி.ஆர் வில்லனாக பல வருடங்களாக தெரிந்தார். ஆனால் இப்போது அப்படி இல்லை, அதை விட்டு வெளி வந்தாகிவிட்டது. அதற்காக இது அரசியல் சார்ந்தது என்ற எண்ண வேண்டாம், இல்லை. எந்த கட்சியையும் சாராமல் நடுநிலையாக சிந்திக்க முடிகிறது.
மேலும் இப்படி ப்பட்ட குடும்பத்திலும் என் ஆயா காங்கரஸ் க்கு ஓட்டு போட்டு வந்து தாத்தாவிடம் அப்பாவிடமும் தைரியமாக சொன்னது அப்போது எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் இப்போது பிடிக்கிறது. அந்த காலக்கட்டதிலும் அவங்க அவங்களாகவே இருந்தார்கள் :)
ஆனால் என் அண்ணன்கள் இன்னமும் திமுக வின் துதி பாடுபவர்களாவே தான் இருக்கிறார்கள், ஆழமாக ஊட்டப்பட்டது, அவர்களை வெளியே விடாதோ... இல்லை ஏதோ ஒன்றை சார்ந்து இருக்கனும், அதற்கு நம் வழிவழியாக வந்ததே பரவாயில்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ.
தெரியல...
அணில் குட்டி அனிதா : எதை தான் முழுசா எனக்கு தெரியும்னு உங்க வாழ்க்கையில சொல்லி இருக்கீங்க.. ?! எதுவும் தெரியாது ஆனா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பில்டப்... இப்படி ஒரு பொழப்பு உங்களுக்கு தேவையா அம்மணி.. ?!! துப்பனும்னு தோணுது. .அதை படிக்க வரவங்க செய்வாங்கன்னு நம்பி கிளம்பறேன்...
பீட்டர் தாத்ஸ் : Every form of addiction is bad, no matter whether the narcotic be alcohol or morphine or idealism.”
Labels: சமூகம், பழம்-நீ 12 Comments
நீயாக தெரிகிறேனே நானெங்கே..?!
மெது மெதுவாய்
செதுக்கி
சிற்பமாக்கினாய்
நெளிவு சுளிவுகளுடன்
அற்புதமாய்
உன் கைகளில்
அழகாய்
இருக்கிறேன்..
ஆனால்
நீயாக இருக்கிறேனே
நான் எங்கே....????
****
இடித்தாய்
குழைத்தாய்
குத்தினாய்
மிதித்தாய்
இழைத்தாய்
உருட்டினாய்
மிரட்டினாய்
சுத்தினாய்
வெட்டினாய்
உலர்த்தினாய்
ஏதேதோ
செய்கிறாயே
அத்தனையும் புதிது
எத்தனை அழகு...
அட....
இதிலும்
நீயாகவே இருக்கிறேனே......
நான் எங்கே..?
என்னை இழந்து
உன்னை பெறுகிறேனா..??
இல்லை
என்னுள் உன்னை
நீ தேடுகிறாயா?
அணில் குட்டி அனிதா : அம்மணி.. ஏன் எப்பவும் உங்களை நீங்க தேடிக்கிட்டே இருக்கீங்க? பேசாம போலிஸ் ல கம்ப்ளைட்டு கொடுங்க. .அவங்களுக்கு எப்படி உண்மைய உங்கக்கிட்ட இருந்து வரவெக்கனும்னு தெரியும்.....
பீட்டர் தாத்ஸ் : “If a householder moulds himself according to the circumstances just like nature moulds Herself according to seasons and performs his Karma then only shall he acquire happiness. One who does this successfully gains in all walks of life.”
Labels: கவிதை, பழம்-நீ 10 Comments
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ! அன்றும் இன்றும் என்றும்...
அத்திவெட்டி ஜோதிபாரதி
நட்பு
நகைப்புகிடமில்லாத சிறு குறு பெரு
நகையுடன் கூடிய அணி
எள்ளல் எள்ளளவு கூட இல்லாத இடம்
கொள்ளல் மட்டும் உண்டு நிரம்ப
கொடைகளை எதிர்பாக்காத
நிழற்குடைகள்
குறிப்பறிந்து கொடுக்கும் அன்புக்கொடைகள்
அறிவுரைகள் மட்டுமல்ல - அம்புகள் தவிர்த்து
இருவழிப்பாதையில் ஏற்படும்
இதயப்பகிர்வு - ஒருவழிப்பாதை ஒவ்வாது
இருதரப்புக்கும் நடுவில் இருப்பது முள்
ஒருபக்கம் சாய்ந்தால் குத்திவிடும்
நட்பு என்பது கற்பு இரு தரப்புக்கும்
பொதுவானது!
தாரணிபிரியா
நான் வேற என் ப்ரெண்ட்ஸ் வேற அப்படி எல்லாம் இல்லை. அதனால என்னோட நண்பர் தமிழ் எழுதின கவிதை இது. எங்க நட்பு வட்டாரத்தில் எல்லாருக்கும் பிடிச்ச கவிதை. அதையே இங்க எல்லாருக்கிட்டயும் பகிர்ந்துக்க விரும்பறேன்.
எல்லாருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)
--
தாய்மைக்கும்
காதலுக்குமிடையே
இதயத்தில்
இடம் பிடித்தால்
அதன் பெயர்......
நட்பு......
தொப்புள் கொடிக்குத்
தாய்...
தொட்டில் இட
காதல்...
உதிரம் கலவாது
காமம் படியாது
உயிராய் கலப்பது
உயிரைத் தருவது
நட்பு..!!!
உடலென்றால் பரவத்தான் உதிரம்!
உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்!
துயரென்றால் பகிரத்தான் நட்பு!
கேவிஆர்
நண்பர்கள் தினத்தில் எல்லா நட்புகளுக்கும் வாழ்த்துகள்.
வித்யா
அன்று .... 4-August-2006
கைப்புள்ள
நட்பைப் பற்றி எனை எழுதத் தூண்டினீர்! நான் கவிஞனும் அல்லன் எழுத்தாளனும் அல்லன். ஆயின் இரு கைகள் இல்லாத ஒருவன் தான் இடுப்பில் அணிந்துள்ள உடை விலகி கீழே விழ இருக்கும் அக்கண நேரம், அவனுடைய மானத்தினைக் காக்க தக்க நேரத்தில் (கவனத்தில் கொள்க: தக்க நேரத்தில்) உதவ ஓடோடி வரும் அவ்வுறவே நட்பு என்பதனை குறள் வழி நானறிந்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
நாகை சிவா
தலைப்பை பார்த்தவுடன் ஏதுவும் எழுத தோன்றவில்லை. நண்பர்களை பற்றி நினைவுகளில் மூழ்க தான் முடிகின்றது. நண்பர்களால் நான் காயப்பட்டது உண்டு. ஆனால் ஒரு போதும் நண்பர்களை நான் காயப்படுத்தியது இல்லை(எனக்கு தெரிந்த வரை) நேற்றயே பொழுது நல்ல நினைவுகளோடு நாளைய பொழுது நல்ல எதிர்பார்ப்புகளோடு இன்றைய பொழுது நல்ல நண்பர்களோடு
நட்பு:
நம்ம நட்பு வட்டாரம் ரொம்ப பெரியது.
"பள்ளியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
படித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
சைட் அடித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
தெருவில்(ஏரியாவில்) பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
அலுவலகங்களில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
உறவுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
NIIT யில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
நண்பர்களால் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
வெளிநாடுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
" இவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள். ஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........உற்ற தோழர்கள் அளவுக்கு நேரடியாக நெருங்கி விட்ட ஒரு வட்டம். ஒளி பொருந்திய மிகப் பெரிய வட்டம்.
நேரில் பார்த்ததும் இல்லை, பல பேரிடம் தொலைப்பேசியிலும் பேசியது இல்லை இருந்தாலும் இந்த நண்பர்கள் என்னுடைய ஒவ்வொரு நாளையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கவும், முடிக்கவும் செய்கின்றார்கள். ஒருவரா, இருவரா எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான நண்பர்கள், வயது வித்தாயசமின்றி..... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முத்துக்கள்..... இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பவில்லை... காலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன். என்னுடைய நண்பரானதுக்கு உள்ளங்கை பற்றி நன்றி சொல்வேன்.
!! அனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!! :)
Labels: கதம்பம், சமூகம் 14 Comments