100 ஆஆஆஆஆஆ?

இது 100 ஆவது பதிவு.. இது வரைக்கும் என்ன எழுதியும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இங்கு எழுத ஆரம்பித்து நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள், சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். 100 ஆவது பதிவை எழுதும் போது எனக்கு தோன்றியது இனி நிறைய எழுதவேண்டும், நடுவே எதற்காகவோ யாருக்காகவோ எழுதுவதில் தடைகள் இருந்தன.. ஒரு முறை இல்லை மூன்று முறை இனிமேல் எழுதவே கூடாது என்று நினைத்தேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தைக்கு எப்போதும் என்னுடைய எழுத்துக்கள் என்னுடைய நினைவுகளாக இருக்க வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவுடன் வந்துள்ளேன்.

100 என்றவுடன் சட்டென்று/பட்டேன்று நினைவுக்கு வந்த சில -

1. சச்சின் :))))))
2. போலிஸ்
3. 100 ரூபாய் அதில் காந்தி தாத்தாவின் சிரிப்பு
4. ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா..
5. கமல்ஹாசனின் ராஜபார்வை
6. பிளாகர்கள் எழுதும் அவர்களின் 100 ஆவது பதிவு....
7. 100 ஆவது நாள் - திரைப்படம்
8. எல்.கெ.ஜி யில் முழு ஆண்டு தேர்வில் ஆங்கிலோ இந்தியன் டீச்சரிடம் 100/100 என்று என்னுடைய சிலேட்டில் வாங்கிய மதிப்பெண். அதை அழிக்காமல் வீடு வரை கொண்டு வந்து காட்டி எல்லோரிடமும் முத்தம் பெற்றது.
9. பத்தாம் வகுப்பில் கணிதத்தில் 100 வாங்க முயற்சி செய்து 99 வாங்கி 1 மதிப்பெண்' ணில் 100 ஐ இழந்தது.
10. நமக்காக, நாட்டுக்காக உயிர் விட்ட ராணுவ வீரர்கள் பற்றிய பதிவர் சந்தோஷ்' சின் 100 ஆவது பதிவு.

உங்களுக்கு இந்த 100 என்ற எண்ணை பார்த்தவுடன் நினைவுக்கு வருவதை எழுதுங்களேன்...

அணில் குட்டி அனிதா : இந்த அநியாயத்த கேக்க ஆள் இல்லையா? எப்படிங்க இது அம்மணிக்கு 100 ஆவது பதிவாகும். கொஞ்சூண்டு லெப்ட் சைட் பாருங்க.. லேபல்ஸ் ல பாருங்க.. 17 பதிவு நான் எழுதி இருக்கேன். .இவிங்க என்னானா... 100 ஆவது பதிவுன்னு போடறாங்க... இதுல கணக்கல 99 மார்க் ன்னு வேற பீத்தல்... .. கவி.. இதை என்னால ஒத்துக்க முடியாது...... பதிவ மாத்தி எழுந்துங்க...

பீட்டர் தாத்ஸ்:- We cannot adopt the way of living that was satisfactory a hundred years ago. The world in which we live has changed, and we must change with it.

எங்க வீட்டு சமையல் : சோளா பட்டூரா

நம்மில் நிறைய பேர் ஹோட்டலுக்கு சென்றால் விரும்பி சாப்பிடுவது சோளா பட்டூரா... அதை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே...

சன்னாமசாலா செய்ய தேவையான பொருட்கள்:-

வெள்ளை கடலை - 1 கப்
வெங்காயம் : 2
தக்காளி -4
பச்சைமிளகாய் : 1
மிளகாய் + தனியா தூள் - 1.5 ஸ்பூன்
மஞ்சள் பொடி: 1/2 சிட்டிகை
கேசரிப்பொடி (சிகப்பு) - 1/2 சிட்டிகை
பூண்டு : 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
பட்டை, லவங்கம் : 2, 2
சோம்பு : சின்ன ஸ்பூன்
பட்டை இலை - சிறிய துண்டு
எண்ணெய் : தேவைக்கேற்ப
கொத்தமல்லி : சிறிது

செய்முறை:- கடலையை முதல் நாளே ஊறவைத்து விடவேண்டும். மாலையில் செய்ய காலையில் ஊறவைத்துக்கொள்ளலாம். இஞ்சி,பூண்டு, பட்டை 1, லவங்கம் 1, சோம்பு சேர்த்து அரைத்துவைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும். வாணல் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை இலை, ஒரு பட்டை, ஒரு லவங்கம் போட்டு சிவந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு அடிப்பிடிக்காமல் வதக்கவும், நன்கு வதங்கியவுடன் வெங்காய விழுதை போட்டு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.


இவை நன்கு வதங்கியவுடன் வேகவைத்த கடலையை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி இந்த கலவையில் போட்டு மிளகாஉ, மல்லித்தூள், மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கிளரி சிறு தீயில் கொதிக்கவிடவும். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. தக்காளி வெங்காயத்தில் உள்ள தண்ணீரே போதுமானது. மிளகாய் தூள் வாசனை போகும் அளவிற்கு கொதித்தவுடன் நிறுத்திவிடவும்.
மேல் அலங்காரத்திற்கு கொத்தமல்லியை சின்ன சின்னதாக வெட்டி மேலே தூவி விடலாம்.

பூரிசெய்ய தேவையான பொருட்கள் :

மைதாமாவு : 3 கப்
நெய் : 3 ஸ்பூன்
 தயிர் : 1/4 கப்
பால் : 1/4 கப்
ஆப்பசோடா : 3-4 சிட்டிகை
எண்ணெய் :- தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை : மைதாமாவுடன் நெய், ஆப்பசோடா, உப்பு சேர்த்து கலந்துக்கொண்டு அதில், தயிர், பால் சேர்த்து பிசையவும். தேவைப்படுமாயின், தண்ணீர் ஊற்றி பூரிமாவு பதத்திற்கு பிசைந்து, 3-4 மணி நேரம் ஊறவைக்கவும். பூரியை விட பெரிய உருண்டைகளாக்கி,  சற்றே கனமான பூரிகளாக  திரட்டி, எண்ணெய் காய்ந்தவுடன் போட்டு, நன்கு வெந்தவுடன், சன்னாவுடன் பரிமாறவும். .

அணில் குட்டி அனிதா:- பத்மா பாட்டி ஒருவழியா போய் சேந்துட்டாங்க.. இந்த அம்மணி அவங்க பேர்ல சமையல் சொல்லித்தரேன் னு நம்ம எல்லாரையும் சாக அடிக்க போறங்கன்னு நினைக்கிறேன்.. மக்கா எதுக்கும் உஷாரா இருங்க.. சமையல செய்து பாத்தாலும் உங்களுக்கு பிடிக்காதவங்க யார் கிட்டயாவது முதல்ல டேஸ்ட் பண்ண சொல்லி அப்புறம் நீங்க சாப்பிடுங்க..

பீட்டர் தாத்ஸ் :- A will finds a way

திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு…..

உங்களுடைய தசாவதாரம் பார்த்தப்பிறகு, மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். நிறைகளை பாராட்டியும் குறைகளை சொல்லி விமர்சனம் செய்வதும் மிக மிக மிக எளிது…. அதை உணர்வேன்.. அதனாலேயே திரை விமர்சினங்களை நான் எழுதுவதில்லை. அதனால் இந்த கடிதத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அந்த படத்தில் நீங்கள் எடுத்து க்கொண்ட உழைப்பையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேவையான மேக்கப் செய்து கொள்ள நீங்கள் எடுத்துக்கொண்ட நேரமும், சிரமமும், பொறுமையையும் கண்டிப்பாக பாராட்டாமல் இருக்கவே முடியாது….. உங்களின் உழைப்பிற்கு HATS OFF.

அதே சமயம் உங்களுடைய சில படங்களையும் அதில் உங்களின் மேக்கப்பையும் நினைவு கூறவேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் நடிப்பை விடவும் உங்களின் மேக்கப்பில் அசந்துபோன சில படங்கள்.

“எனக்குள் ஒருவன்” – இந்த படத்தில் இரண்டாவது கதாபாத்திரத்தில் செய்து இருந்த மேக்கப்பில் உங்களை அடையாளமே தெரியவில்லை. அதில் உங்கள் முகத்தில் இந்தியன் தாத்தாவை போன்றோ, தசாவதார கதாப்பாத்திரங்களை போன்றோ முகத்தில் ஒரு செயற்க்கைதனம் தெரியவில்லை.

கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன், சலங்கை ஒலி வயதான பாத்திரம், அன்பே சிவம் விபத்து பிறகு காண்பிக்கப்பட்ட முகம், ஹே ராம், மகாநதி படங்களில் காலத்திற்கு ஏற்றாற்போன்று நீங்கள் போட்டுக்கொண்ட கதாபாத்திரம் – இவை அனைத்துமே மிக மிக யதார்த்தமாக இருந்தன.

இன்னும் இதைப்போன்ற உங்களின் பல கதாப்பாத்திரங்களை பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.

நமக்கு முகத்தில் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் காண்பிப்பது முகத்தில் உள்ள தசைகள் தானே? அந்த தசைகளை மூடிமறைத்து சமீபகாலமாக நீங்கள் போட்டுக்கொள்ளும் மேக்கப்பால் கதாபாத்திரங்களின் முகங்களை உணர்ச்சிகள் அற்ற பொம்மைகளை பார்ப்பது போன்று உள்ளதே தவிர.. யதார்த்த உணர்வுகளையும் முகத்தில் ஏற்படும் பல உணர்ச்சிகளை குறிப்பாக முகச்சுளிப்பு, புருவத்தை சுருக்குதல், கண்கள் அசையும் போது முகத்தில் ஏற்படும் மாற்றங்கள், கோபம், சிரிப்பு என்று எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. முடியவில்லை என்பதை விட அவை இல்லவே இல்லை எனலாம். மாபெரும் நடிகனான உங்களுக்கு இதைப்பற்றி சொல்ல தேவையில்லை இருப்பினும் இதை நீங்கள் உணர்ந்தீர்களா என்று தான் தெரியவில்லை.

இந்தியன் தாத்தாவில் கூட உங்களின் உழைப்பை போன்று நடிகை சுகன்யாவிற்கு இருந்ததா என்றால் இல்லை. என்னவோ பொம்மை முகம் இங்கே அங்கே போவதும் வருவதுமாக இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி’ யில் இப்படி அதிகமான மேக்கப் என்று எதுவுமே இல்லாமல் கதாப்பாத்திரங்களில் வித்தியாசம் காட்டி இருந்தார். ஒருவருடன் ஒருவரை ஒப்பிடுவது சரியில்லை என்றாலும், இதற்கு முன் அவர் 9 கதாபாத்திரங்கள் செய்து இருக்கும் போது ஏனோ அப்படத்தின் கதாப்பாத்திரங்களையும் அவற்றின் யாதார்த்தையும் நினைவு கூற நேரிடுகிறது.

இனி வரும் படங்களில் முகத்தில் உள்ள உணர்ச்சிளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின் மேக்கப் இருக்கும் என்று நம்புகிறேன்….

கடும் முயற்சி செய்து அற்புதமான படம் அளித்த உங்களுக்கு நன்றி…..

உங்களின் சிறப்பான படங்களை பார்த்து ரசித்த, ரசிக்கும் ஒரு ரசிகை....

அணில் குட்டி அனிதா:- ஐயோ..!! கவி.. இது நியாயமா? உலக நாயகன் கே அறிவுரையா? இது உங்களுக்கு ரொம்ப ஓவரா தெரியலையா? அது எப்படி கவி.... கைப்பூ மாதிரி எவ்வளவு அசிங்க பாட்டாலும், அடிப்பட்டாலும் எதையுமே வெளியில தெரியாதமாதிரி திருப்பி திருப்பி ...உங்களாள இருக்கமுடியுது....??? நிசமாவே நீங்க ரெம்பபபபப..... நல்லவங்க கவி...... !! :((((((((

பீட்டர் தாத்ஸ்:- You can never get enough of the things you don't need, because the things you don't need can never satisfy.

பெப்சி, க்ரீம் கோக்...குங்கோ...!!

அணில் குட்டி அனிதா:- நம்ம கவிதா க்கு ஒரு புள்ள இருக்குதுன்னு ஊரு உலகத்துக்கு நல்ல தெரியும்.. அந்த புள்ள எப்பவும் எல்லாருக்கும் தான் தெரியுமே சொன்ன பேச்சி கேக்காது..!! :))) அடங்காத புள்ள.. மேட்டர் என்னான்னா அந்த புள்ள போன மாசம் நம்ம ஊர்ல விக்கற பெப்சிய வாங்கி குடிச்சி குடிகாரப்பயலா இருக்கான்ங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல... டெய்லி ஒன்னு இரண்டுன்னு உள்ள தள்ளி ..என்னா ஆச்சின்னு கேக்கறீங்களா.. ஒரு வாரம் தம்பி படுக்கைக்கு போற மாதிரி ஆயுடுத்து...

டாக்டர் கிட்ட போயி ஓவரா பேசினாரு எதப்பத்தின்னு நீங்க கேக்கனும்... அதாங்க.. அவர் குடிச்ச பெப்சிய பத்தியும் அதோட பராக்கிறமத்தியும் அதுமட்டுமில்லாம அதானால அவருக்கு கிடைக்கற சக்திய பத்தியம் பேசினாரு..பேசினாரு.. பேசினாரு..கவியோட புள்ள இல்ல பேச்சுக்கு சம்பந்தம் இல்லாம இருக்குமா? சரி என்னாச்சுன்னு கேளுங்க...

டாக்டர்.. சீ..வாயமூடுன்னு சொல்லவரைக்கும் பேசினாரு.. அப்புறம்.. டாக்டர் இப்ப பேச ஆரம்பிச்சாரு.. சொன்னாரு பாருங்க..சூப்பரா... தம்பி உங்க வீட்டுல டாய்லட் இருக்கு இல்லப்பா.. அதுல பெப்சிய சுத்தி கொஞ்சம் ஊத்தி 3 மணி நேரம் கழிச்சி கழுவி பாரு.. டாய்லட் பளிச்சின்னு ஆயிடும்னு... ஆஹாஹாக ஆஹா... தம்பி மொகத்த பாக்கனுமே... எனக்கு சந்தோச்சமா இருந்துச்சி...

இதுல ஹைலைட் என்னான்னா நம்ம கவி இல்ல... அதிசயமா.. அவங்க இரண்டு பேரும் பேசறத கேட்டுட்டு ரெம்பத்தான்..அமைதியா இருந்தாங்க... ஏன் ன்னு நீங்க ரெம்பவும் யோசிக்காதீங்க.... பெத்த தாய் இல்லையா புள்ளைக்கு உடம்புக்கு முடியலன்னா சந்தோச்சப்பட முடியுமா? அதான் அந்த அமைதி சோகம் etc எல்லாம்...

சரி இப்ப இன்னொரு விஷயம் அமெரிக்காகாரன் நல்ல பெப்சிய அவன் வச்சிக்கிட்டு கெட்ட டாய்லட் கீளினர நமக்கு கொடுத்துட்டான்...அதனலா.. கவிதா புள்ளக்கைக்கு நல்ல பெப்சி எப்படி இருக்கும்னு காட்ட நான் ஆசப்படரேன்.. சோ... யாராவது அமெரிக்கக்காரன் கிட்ட இருந்து ஒரு சேம்பல் பெப்சி டின்' னும், ஒரு கோக் கீரும்...எப்படி வாங்கி இங்க எடுத்துட்டு வரதுன்னு சொன்னீங்கன்னா... கவிதாக்கிட்ட... நானு கொஞ்சம் காசு பாப்பேன்.. யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா....அயோ.. அம்மாவா விட்டுட்டேன்.. பண்ணுங்கம்மா...


பீட்டர் தாத்ஸ் : Wise saying often fall on barren ground; but a kind word is never thrown away.