பெண் இல்லாமல்
பூமிக்கு வந்துவிட்டதாக
நினைக்கும்
ஆணவக்காரர்களே!
பெற்றத்தாயையும்
உடன் பிறந்த தமக்கையும்
உன்னை நம்பிய துணைவியும்
உனக்கு பிறந்த பெண்ணும்
உனக்காக எதையும் செய்யும் உன் தோழியும்
எப்போதும்
வேண்டும் உங்களுக்கு…
அடித்துக்கொண்டு
சாகும்போதும் கூட .......??
ஆம் வேண்டுமே….
ஆத்தா..அம்மா’ வென்று
அன்புடன் அழைக்க……………
பெண் வேண்டுமே…!!
உங்களின்
வீரத்தை(??)க்காட்ட
வீட்டு பெண்கள்
அத்தனை பேரையும்
வீதிக்கு இழுங்கள்
ஆம்
ஒருவரையும்-
விட்டு விடாதீர்கள்
அவன் வீட்டு பெண்ணை
நீ நிர்வாணமாக்கு
உன் வீட்டு பெண்ணை
அவன் நிர்வாணமாக்கட்டும்
உங்களையே
உலகமென்று நம்பும்
ஒரு பெண்ணை க்கூட
நீங்கள்
விட்டுவிடக்கூடாது -
அடித்துக்கொண்டு சாகும்
ஆணவக்காரர்களே…
உங்களின் வீரத்திற்கு ??!!
பின்னால் கூட
பெண் வேண்டுமா????…….
வெட்கமாயில்லை…………..?????????
குறிப்பு :- வீரம் அதிகமாகி என்னிடம் வந்துவிடாதீர்கள்… அய்யோ!!முடிந்தால் எந்த ஒரு பெண்ணை’யும் வீதிக்கு இழுக்காமல் சண்டையிட்டு செத்து மடிந்துத்தான் போங்களேன்….
உங்களை-
பெற்றவள் பெருமிதம் கொள்வாள்,
கட்டியவள் நிம்மதி பெருமூச்சு விடுவாள்
உடன் பிறந்தவளும் ஒழிந்தான் இன்றோடு என்று விழா எடுப்பாள்,
தோழிகள் மட்டுமே துக்கப்படுவார்கள்–(கடைசிவரை இவனை திருத்தவே முடியவில்லையே என்று)-
அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா………….நான் எஸ்கேப்பு… .. அம்மணி ரெம்ப சூடா இருக்காங்கோ………….நான் எஸ்ஸ்ஸ்ஸ் ஆயிக்கிறேன்ன்ன்ன்னுங்க….நீங்களாச்சு, அவங்களாச்சு…..
பீட்டர் தாத்ஸ்:- The scars you acquire by exercising courage will never make you feel inferior.
அடித்துக்கொண்டு சாகுங்கள் ஆணவக்காரர்களே!!
Labels: கவிதை 48 Comments
பத்மா’ ஸ் கிட்ச்சன்
ரொம்ப நாட்களாக சமையலையும் பதிவுல சேர்க்க வேண்டும் இருந்தேன், சமையல் இல்லாமல் நாம் இல்லை. அடிக்கடி உடல் நலமின்றி டாக்டரிடம் போவதற்கு பதில், நல்ல சாப்பாட்டை சாப்பிட்டாலே போதும் என்று என் ஆயா அடிக்கடி சொல்லுவார்கள்.
பத்மாவதி அம்மாள்’ என்னுடைய ஆயா,(அப்பாவின் அம்மா) அவர்களுடைய சமையலை சாப்பிட தவம் செய்து இருக்கவேண்டும். சமையல் மட்டுமே அல்ல, அதை மற்றவர்கள் வயிறு நிறைய சாப்பிட வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. மனசு நிறைய, சாப்பிடுபவர்கள் நல்ல உடல் நலத்துடன் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று பரிமாறுவார்கள். அவர்களிடம் சாப்பிட்ட உடம்பு மற்றவர்களிடம் இருந்து தனியாக நம்மை காட்டும். என் ஆயாவின் சமையலை சாப்பிடவே சொந்தக்காரர்களும், நண்பர்களும் வீட்டுக்கு வருவதுண்டு.
என்னுடைய ஆயாவிற்கு என்று தனி கைப்பக்குவம் இருந்தது, என் அத்தைகளும், நானும் அவர்களிடம் தான் சமையல் கற்றுக்கொண்டோம், ஆனால் அவர்கள் செய்வது போன்ற ருசி எங்களது சமையலில் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. சமையல் சொல்லி தரும் போது, சமையலை தவிர, உடன் என்ன வேலைகளை செய்யலாம், என்பதையும் சொல்லி தருவார்கள். கண் பார்த்து கை வேலை செய்யவேண்டும், யாரும் சொல்லிதராமேலேயே வேலை செய்ய பழக வேண்டும் என்று, கண்களால் பேசியே வேலை வாங்கும் திறமை அவர்களிடம் இருந்தது.
எனக்கு அவரின் சமையலில் பிடித்தது, அல்லது எனக்காக நான் விரும்பி சாப்பிடுவேன் என்பதற்காக அவர்கள் சமைக்கும் உணவு.
1. எல்லா வகை கீரையும்
2. வாழைக்காய் வருவல்
3. கத்திரிக்காய் பொறியல்
4. ரசம்
5. மீன் குழம்பு, (மீன் முள்’ளிற்கு பயந்து அதை சாப்பிடமாட்டேன்,ஆயா, ஆய்ந்து கொடுக்க கொடுக்க சாப்பிடுவேன். இன்னமும் எனக்கு மீன் ஆய்ந்து சாப்பிட தெரியாது, 1, 2 முறை முயற்சி செய்து தொண்டையில் மாட்டி பிரச்சனை ஆகி, அந்த பக்கமே தலைவைப்பதில்லை, சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்)
பொதுவாக எல்லோருக்கும் அவரின் எல்லா சமையலுமே பிடிக்கும், குறிப்பாக மீன் குழம்பு, ரசம்.. சான்ஸே இல்லை, இது வரை அப்படி யாருமே ருசியாக சமைத்தது இல்லை. வெறும் ரசமும், வாழைக்காய் வறுவலும் இருந்தால் போதும் உலகமே மறந்து போகும். சாப்பாட்டின் ருசியால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து இருந்தார்கள்.
பத்மா ஆயா எனக்கு கொடுத்த சில நல்ல குறிப்புகள் :-
1. தலைக்கு குளிக்கும் தினம், முடியை முடிந்துக்கொள்ளாமல் (முடியை விரித்து போட்டு) சமையல் அறைக்கு மட்டும் அல்ல, வீட்டிற்க்குள்ளேயும் வரக்கூடாது என்பார்கள். தலைமுடி சாப்பாட்டில் வந்துவிட கூடாது என்பதற்காக சொல்லுவார்கள். சமையல் செய்யும் போது தலைமுடி கட்டி இருக்கவேண்டும்.
2. சமையல் செய்யும் போது பேசக்கூடாது, சிலர் பேசும் போது வாயிலிருந்து எச்சில் தெறிக்கும். ஆனால் எச்சில் தெறிப்பது அவர்களுக்கே கூட தெரியாது. அது சமையல் பொருட்களில் படும், அதனால் பேசக்கூடாது என்பார்கள். சாமிக்கு படையல் வைக்கும் நாட்களிலும் எச்சில் படாமல் சமையல் செய்யவேண்டும், அதற்கும் இதே தான் –பேசக்கூடாது.
3. சமையல் செய்யும் போது நல்ல மனதுடன், நிதானுத்துடன் செய்யவேண்டும், அதாவது கோபமாக இருக்கும் போது சமைத்தால் அதன் ருசி நன்றாக இருக்காது என்பார். பிறரின் பசியை போக்கும் உணவு நல்ல மனதுடன், அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்தால் நல்ல ருசியாகவும், பக்குவமாகவும் சமைக்க முடியும் என்பார்.
4. டிவி பார்த்துக்கொண்டு, அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டும் சமைக்க கூடாது என்பார். சமையலில் பல்லி விழுந்தால் கூட நமக்கு தெரியாது சமையல் விஷமாகிவிடும், கவன குறைவால் சமையல் தீய்ந்து விடும், அல்லது அதிக நேரம் அடுப்பில் இருந்தால் அதன் ருசி மாறிவிடும் என்பார்.
5. எந்த வகை சமையல் செய்தாலும் அதற்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் சமையலை தொடங்க வேண்டும், இல்லையென்றால், அதை வாங்கிவந்த பிறகே அந்த சமையலை செய்வார். சரி வெந்தயம் இல்லை, பரவாயில்லை என்று காரக்குழம்பு தாளிக்கவே மாட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு பொருள் சேர்ப்பதும் அது சாப்பாட்டிற்கு தனி ருசியும், சக்தியும் தரும் என்பதற்காகவே. அதனால் ஒன்று இல்லை, பரவாயில்லை என்று விட்டு விட்டு சமைக்க கூடாது என்பார்.
6. சமைத்த பாத்திரங்களுடனே பரிமாற எடுத்துசெல்லக்கூடாது. பரிமார தனிப்பாத்திரம் வைக்கவேண்டும்.
7. சாம்பார் கரண்டியை மற்ற உணவுகளில் போடக்கூடாது. கெட்டுவிடும்.
8. பால் காய்க்கும் பாத்திரங்களை வெயிலில் காயவைக்க வேண்டும். பொதுவாகவே பாத்திரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்த பிறகு தான் கவிழ்த்து வைக்கவேண்டும், இல்லையென்றால், பூச்சிகள் அண்டும் என்பார்.
9. சூட்டு உடம்புக்கார பெண்கள் இட்லி மாவை அவர்கள் கைவைத்து கரைக்க க்கூடாது. சீக்கிரம் புளித்துவிடும் என்பார்.
10. கீரை, மீன் குழம்பு போன்றவை சமைக்க தனித்தனி சட்டி வைத்து இருப்பார்கள். இதில் தனித்தனி என்றால் அசைவம், சைவம் வித்தியாசம் இல்லை. சட்டியின் டிசைன் அப்படி இருக்கும். கீரை கடையும் சட்டி உட்புறம் வரி வரியாக இருக்கும். ஆனால் மீன் குழம்பு செய்யும் சட்டி டிசைன் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.
11. எப்போதுமே (அவர் இருந்த வரை) முழு சமையலுக்கும் நல்லண்ணெய் மட்டுமே உபயோகித்தார். நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் தோற்றம் இளமையாக இருக்கும். அவருக்கு தலைமுடி 82 வயதிலும் நரை இல்லாமல் இருந்தது, இப்படி ஒரே எண்ணெய்யை பயன்படுத்தியது தான் அதற்கு காரணம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அப்பளம் , வத்தல் பொறிக்க மட்டும் ரீபைன் ஆயில் உபயோகித்தார்.
எல்லாமெ எனக்கு அவர்கள் சொல்லிக்கொடுத்தது என்றாலும், 2, 3 ம் எனக்கு அவர் அடிக்கடி சொல்லும் உபதேசங்கள். நான் இருந்தாலே வீட்டில் சத்தம் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இருப்பேன், வேகமாக வேறு பேசுவேன். அவர்களுக்கு வயதாகி விட்டது அல்லவா அதனால், சில சமயம் காதை மூடிக்கொண்டு, “பாப்பா எனக்கு நீ பேசவதை ஜீரணிக்க முடியவில்லை, காது வலிக்குது, கொஞ்சம் அமைதியா இரு” நீ பேசறதனால் நிறைய சத்து உடம்பை விட்டு போய்டும், அப்புறம் வேலை எப்படி செய்வே? “ என்பார்கள். எந்த வேலை செய்தாலும் அமைதியாக செய்”என்பார்கள்.
நிறைய பதிவுகளில் சொன்னது போன்று அதிவேக கோபம், பிடிவாதம் போன்ற குணங்கள் என் சொத்தாகி போனதால், நான் சமைக்கும் போது நெடி நிறைய வந்து அனைவருக்கும் தும்மல் வருகிறது என்று, என் குணத்தை மாற்ற சொல்லுவார்கள். “நல்ல பெண்மணி இவள் நல்ல பெண்மணி “ என்ற பாட்டை அடிக்கடி பாடி என்னை வெறுப்பேற்றுவார்கள்.
இன்று ஒரு இனிப்போடு “பத்மா’ஸ் கிட்சன் ” னில் சமையலை ஆரம்பிக்கலாம். இது என்னுடைய ஆயாவின் சமையல் இல்லை. அத்தையிடம் கற்றுக்கொண்டு, இப்போது அடிக்கடி ஓவன்’ ல் எளிதாக செய்ய கற்றுக்கொண்ட டிஷ்.
பத்மா’ஸ் கிட்சன் – 1. பீட்ரூட் ஹல்வா
பீட்ரூட் – 4 மீடியம் சைஸ் (துருவி, கப்’பில் அளந்து கொள்ளவும்)
சர்க்கரை – பீட்ரூட் அளவில், 3/4 அளவு (இனிப்பு வேண்டும் என்றால் அதிகமாக போட்டு க்கொள்ளலாம்)
ஏலக்காய் :- 1 (நுணுக்கியது)
நெய்:- 5 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4-5 (சிறு துண்டுகளாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.)
1. ஓவனில் வைக்கும் கண்ணாடி/பீங்கான் பாத்திரத்தில் மைக்ரோ வேவ்’ 100 ல், 1.5 mins செட் செய்து நெய்யை ஊற்றி சூடு செய்யவும். பிறகு அதில் பொடித்த முந்திரி பருப்பை போட்டு 2-3 mins வைக்கவும்.
2. முந்திரியை நெய்யை வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யுடன் பீட்ரூட் துருவலை போட்டு – 4-5 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.
3. பீட்ரூட் நன்றாக வதங்கி இருக்கும், இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி, திரும்பவும் 6-8 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.
அவ்வளவு தான் பீட்ரூட் ஹல்வா ரெடி – ஓவனிலிருந்து எடுத்து, பரிமாற தட்டில் கொட்டி ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி பருப்பு தூவி பரிமாறவும். இதே போன்று கேரட் ஹல்வாவும் செய்யலாம். இதை சூடாகவும் சாப்பிடலாம், பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடலாம்.
அணில் குட்டி அனிதா:- ம்ஹீம்! வீட்டுல 2 பேரு கஷ்டபடறது பத்தாதுன்னு… இது வேற ஆரம்பிச்சிட்டாங்களா?.. நீங்க எல்லாம் இவங்க சமையலை படிக்கறதோட நிறுத்திக்கோங்க.. அவ்ளோத்தான் நான் சொல்லுவேன்……….அவங்க ஆயா சமைச்சத சாப்பிட்டு இவங்க என்னவோ நல்லாத்தான் இருக்காங்க. .ஆனா இவங்க செய்த சமையல சாப்பிட்டுட்டு இவிங்க வூட்டுக்காரரும், பையனும்… எப்படா விடுவு காலம் கிடைக்கும்னு ..வெயிடிங்ஸ்………..!! ரொம்ப யோசிக்காதீங்க.. நானும்தேன்……….
பீட்டர் தாத்ஸ்:- The secret of happiness is not in doing what one likes, but in liking what one does.
Labels: பத்மா'ஸ் கிட்ச்சன் 12 Comments
6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா--Part-2
சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு- தொடருது............
பாவம் அம்மணிக்கு டிரிப்ஸ் ஒரு கையில ஒரு stage க்கு மேல ஏத்த முடியாம..போக......இன்னொரு கைக்கு மாத்தினாங்க. என்ன பிரச்சனைன்னு தெரியாமையே 3 நாளும் போய்ட்டு இருக்கு.. நம்ம கொசு அண்ணனால், மலேரியா வந்திருக்குமோன்னு ஒரு சந்தேகமே தவிர அதுவும் டெஸ்ட் ரிசல்ட் எதிலும் பாஸிட்டிவா இல்ல..பாஸிட்டிவா வரும்னு யூகத்திலேயே இத்தன டிரீட்மெண்டும் நடக்குது..................(ஒரு வேல சிக்குன் குனியவாக்கூட இருக்கலாம் னு நான் guess பண்னேன்..எதுவா இருந்தாலும்..அம்மணியோட இம்சை இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் எனக்கு......ஹி..ஹி...)
4வது நாள்....குடுத்த மருந்து, மாத்திரையால அம்மணி நிலைம ரொம்ப மோசமாயிடுத்து. மனசு இறங்கி, அவங்க hubby, டாக்டர் தம்பதிகளை ரொம்ப request பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. வந்த பிறகு தான் தெரியுது, over dosage ஆல், அம்மணி வயிரெல்லாம் வெந்துபோய், தண்ணி க்கூட குடிக்க முடியாம ஆயிடுத்து. ஒரு ஸ்பூன்(ஆமாங்க நெசந்தான்) ஜீஸ் குடிப்பாங்க.. அப்படியே வாந்தி எடுப்பாங்க.. எதுவுமே உள்ளே போகல.. பேசற திராணிக்கூட இல்லாம போச்சு. திருப்பி டாக்டர் கிட்ட வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.. வாந்தி எடுக்க பயந்துக்கிட்டு liquid food ஒரு ஸ்பூன், 2 ஸ்பூன் ன்னு குடிக்க யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.......சாப்பிடவே முடியாம நிலைம ரொம்ப மோசமாயிடுத்து.........
அவங்க வூட்டுக்காருக்கு..ஒரே டென்ஷன்.. .வீட்டுல வந்து படுத்துக்கிட்டு ஓவரா சீன் போட்டு இம்சை கொடுக்கறாளே என்ன செய்யறதுன்னு தெரியல...... சரி என்ன ஆனாலும் ஆஸ்பித்திரியிலேயே ஆகட்டும்னு.. அம்மணிய நைஸ்ஸா ஏத்தி விட்டாரு.. எப்படி இருந்த உன்னை இப்படி ஆக்கிட்டாங்களேமா.. வா..போய் சண்டைப்போட்டுடு வரலாம்னு.. சொன்னதுதான்.. “சண்டை” ன்ற ஒரு வார்த்தைய கேட்டவுடனே...எங்க இருந்துதான் அம்மணிக்கு வீரம் வந்துதுன்னே...தெரியல.....” ஆமாங்க..விட கூடாது வாங்க போலாம்...” வரிஞ்சிக்கட்டிகிட்டு கிளம்பிட்டாங்க........
திருப்பியும் அதே ஆஸ்பித்திரி........அதே நர்ஸ் அக்கா.......ஆனா இந்த தரம் டாக்டர் அம்மா இல்ல டாக்டர் ஐயா..பார்த்தாரு.. கவிதாவோட கேஸ் ஹிஸ்ட்ரி (3 நாள்ல சாதரண ஜுரம் ஹிஸ்ட்ரி ஆயிடுத்து) படிச்சிட்டு, பெட்ல வந்து படுங்கம்மான்னாரு.
டாக்டர் “என்னமா ஆச்சு.?.”ன்னு .
(கவிதா செம கடுப்புல இருக்காங்க..அவங்கள பாத்து இந்த மாதிரியா அவரு கேப்பாரு)..
“ ம்ம்..சங்கு ஊதல ..அது ஒன்னுதான் பாக்கினாங்க..”
.டாக்டர் காதுல சரியா விழல.. உடனே..அவரு அவங்க hubby பக்கம் திரும்பி,
மேடம் என்ன சொல்றாங்க சார்?..
மேடத்தோட படத்துக்கு மால போடற நிலைமைக்கு கொண்டுவந்ததுக்கு நன்றின்னு மனசுல சொல்லிக்கிட்டு..
“டாக்டர், நீங்க ஹிஸ்டிரிய படிச்சிங்க..அவ்வளவு drugs கொடுத்த நீங்க அசடிட்டி கன்ட்ரோல் பண்ண ஒரு மருந்து கூட கொடுக்கல..அதனால அவங்களால தண்ணி க்கூட இப்ப குடிக்க முடியாம கஷ்ட படறாங்க..”
“ஓ..is it, அசடிட்டி கன்ட்ரோல் பண்ண மருந்து கொடுக்கலையா? “ஏன் கொடுக்கல.?”.
கவிதா வீட்டுகாரரும் டென்ஷன் ஆயிட்டாரு.. ‘என்ன டாக்டர் என்ன கேட்கறீங்க?”
டாக்டர், கவிதாவின் வயிரை அவரால் முடிந்த அளவுக்கு அழுத்தி (சோதனை பண்றாராமா) பார்க்க..
கவிதா..“டாக்டர்..ப்ளிஸ்..ரொம்ப வலிக்கது..”
டாக்டர்..”எங்கமா வலிக்குது..இங்கயா..இங்கயா..” என்று வயிறை ஒரு இடம் விடாம அழுத்த...
கவிதா..”டாக்டர்ர்ர்ர்ர்ர்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..நீங்க அழுத்தறதுதான் வலிக்குது..” விட்டுடுங்க...” என்றார்கள்
டாக்டர் ”இல்லமா..உங்களுக்கு என்ன problem ன்னு தெரிய வேண்டாம..பொருத்துகோங்க...”
“ டாக்டர் நான் தான் சொன்னேனே அசடிட்டி problem“ என்றார் கவிதாவின் வீட்டுக்காரர்.
“ஓ is it soo..” சரி சரி வாங்க உட்காருங்க.. உங்களுக்கு நான் புரியரமாதிரி சொல்றேன் “ ன்னு சொல்லிட்டு, நர்ஸ் அம்மாவை கூப்பிட்டு “அந்த 106 நம்பர் ரூம் ரெடி பண்ணுங்க..மேடம் ரொம்ப சீரீயஸ்யா இருக்காங்க..அட்மிட் பண்ணனும்..”
சார், மேடம் நிலைமைய பார்த்தா ஒரு 2 days complete rest and observation ல இருக்கணும், அதுக்கு அப்புறம் தான் என்ன ப்ராப்ளம்னு சொல்லவே முடியும்.....அதனால் நான் அவங்கள அட்மிட் பண்ணிக்கிறேன்..
(கவிதா “அது எப்படி புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசி, ஆளமடக்கறீங்க” ன்னு மனசுலதான் நினைச்சிக்கிட்டாங்க.. வெளியில சொல்லவா முடியும்.)
“இல்ல அட்மிட் எல்லாம் வேண்டாம் டாக்டர், அசிடிட்டிக்கு மருந்து கொடுங்க போதும், அவங்கள வீட்டுல வச்சே நாங்க பார்த்துக்கறோம் “ என்றார் கவிதா வீட்டுக்காரர்.
கொஞ்ச நேரம், டாக்டரும், கவிதா வீட்டுக்காரரும் அட்மிஷன் பற்றி விவாதத்தில் இறங்க.. கவிதா..என்னடா இது வம்பா போச்சு திருப்பியும் நம்மை அட்மிட் பண்ணிடுவாங்களோன்னு பயந்து போய்,..........
“ Excuse me டாக்டர்,” என்று சொல்லிவிட்டு.........முடியாட்டாலும்....:ஓட்டமும் நடையுமா..ஆஸ்பித்திரிய விட்டு வெளியில வந்து..........அவங்க வண்டி பக்கதுல வந்து நின்னக்கிட்டு...ஸ்.ஸ்ஸ்ஸ்… தப்பிச்சேன்..ன்னு பெருமூச்சி விட்டாங்க..!
அப்புறம் என்ன, அசடிட்டிக்கு மருந்து சாப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆனாங்க.....இதில இன்னும் ஒரு வாரம் ஆயிடுத்து….
ஆஸ்பித்திரியிலிருந்து வந்த பிறகு அம்மணி நினைச்ச அளவுக்கு நிஜமாவே இளைச்சுதான் போய் இருந்தாங்க.. கொஞ்சம் நார்மல் ஆன பிறகு office போனவங்கள..”யாரு நீங்க” இந்த சீட்டுல வேற ஒருத்தங்க இல்ல இருந்தாங்க..நீங்க நுயூ அப்பாயின்மெண்டான்னு” கேக்கற அளவுக்கு ஆளு இளைச்சு போய் இருந்தாங்கன்னா..பாருங்களேன்...
இதான வேணாங்கறது.. எப்படி இருந்த கவிதா இப்படி இளைச்சாங்கன்னு சொன்ன நான்..அவங்க actual weight என்னன்னு சொல்லலையேன்னு நீங்க கேட்கறது புரியுது.. அதெல்லாம் கேக்கப்பாடது........ஏன்னா சொல்லவே முடியாது.....அம்மணி இன்னமும் அடங்காம........கொசு அண்டாத ஜிம்’மா கண்டுபிடிச்சி போய்க்கிட்டு தானே இருக்காங்க.. ......
யாருக்காவது வெயிட் குறையனும்னா.. தனி மெயில் அனுப்புங்க.......... அந்த ஆஸ்பித்திரி அட்ரஸ் தரேன்.....நேரா போனீங்கன்னா..அவங்களே அட்மிட் பண்ணிடுவாங்க.. அப்புறம் வெயிட் என்ன வெயிட்..............டேரக்ட் சங்குதாண்டீஈஈஈஈஈஈஈஈ.........................
பீட்டர் தாத்ஸ்:- Everything you need for a happy life is within yourself.
Labels: அணில் குட்டி 3 Comments
6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா-ஒரு உண்மை கதை ..
அணில் குட்டி அனிதா:- கவிதா 6 நாளில் எடைகுறைத்த நிஜத்தை எழுதபோவது நான் தேன்..வேற யாரு?? அம்மணி எவ்வளவு மிரட்டியும் இந்த ரகசியத்தை உங்கக்கிட்ட சொல்லாம விடறது இல்லைன்னு கலத்துல இறங்கிட்டேன்ங்க.........அம்மணியின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத நெஞ்சம் படைத்த அசிங்கம்..ச்சே..ச்சே........சிங்கம்” இந்த “அணில்குட்டி” ன்னு சொல்லி, இந்த கதையல்ல நிஜத்தை எழுதுகிறேன்...
கவிதாவுக்கு எப்பவும் மார்கண்டேயினி'ன்னு நெனப்பு... அவங்க பையன் குழந்தையா இருக்கும் போது.........கவிதாவ எல்லாரும் அவனுக்கு “அம்மா” ன்னு சொன்னாங்க..பையன் கொஞ்சம் பெரிசா ஆனதும், பையனுக்கு “அக்கா” ன்னு சொன்னாங்க.. அதனால இப்போ அவங்க பையனுக்கு “தங்கச்சி” ன்னு சொல்ல வைக்கனுமாம்?!!!. ம்ம் ஆசை யாரைவிட்டது..அதுவும் இது பேராசை..யாராவது ரோடுல பார்த்து..என்னங்க உங்க பையன் வளர்ந்துகிட்டே போறான்..நீங்க..இன்னும் அப்படியே இருக்கீங்கன்னு சொல்லிட்டா போதும்..அம்மணிக்கு தலக்கால் புரியாது,..அன்னைக்கு பூரா..சீனோ சீன் தான்... என்ன நவீனோட “பாப்பா” ன்னு (அவங்க சொல்லல இவங்களே சொல்லிக்குவாங்க) சொன்னாங்கன்னு, பில்டப் பண்ணி சொல்லிக்குவாங்க..(ரொம்ப over தான், பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு பாப்பா ன்னா?) என்னத்த பண்ண, எனக்கு தங்கச்சி” ன்னு சொல்லாத வரைக்கும் நான் பிழைச்சேன்.
பீப்பாவின் sorry sorry ! பாப்பாவின் எடையை குறைக்க என்ன வழின்னு யோசிச்சி, gym க்கு போலாம்னு முடிவு பண்ணாங்க. ஆனா வீட்டுல ஆத்துகாரர் சரின்னு சொல்லனுமே?! நைசா matter ஐ ஆரம்பிச்சாங்க.. அவரோ ஒரு super look விட்டுட்டு, “உனக்கு அவசியம் தானா.. சும்மா இருக்கும் போதே அங்க கொடையது, இங்க குத்துதுன்னு சொல்லுவ..gym எல்லாம் உனக்கு சரிவராது, படுத்துடுவ..ன்னு” சொல்லிட்டு விட்டா பரவாயில்லையே.. “உனக்கு என்னமா.. இப்பவும் கல்யாணம் பண்ணப்ப எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க “ என்றார்.
ம்ம்..இதுக்கு நீ குண்டாத்தான் இருக்கேன்னு நேரடியா சொல்லியிருக்கலாம். புருஷன்காரன் சொல்லி எந்த மகராசியாவது கேட்டதா சரித்தம், பூகோளம் இருக்கா?! நம்ம கவிதாவும் அப்படிதான்.. விடறதா இல்லை, “அப்படின்னா நான் தினமும் 2 வேலைதான் சாப்பிடுவேன், ஒரு வேலை பட்னி இருப்பேன்” னாங்க. அவரோ.. “நீ 3 வேலை சாப்பிடாம இருந்தாலும் பரவாயில்ல gym க்கு போகக்கூடாது” ன்னு சொல்லிட்டாரு. அம்மணி, விடல, நச்சறிச்சு, உண்ணாவிரதம் இருந்து, கடைசியில “என்ன பிரச்சனை வந்தாலும் என்னை (அவரை) தொந்தரவு செய்ய கூடாதுன்னு”சொல்லி, பர்மிஷன் குடுத்தாரு.
முதல் நாள் போனாங்க.. exercise எப்படி செய்யனும், எவ்வளவு நேரம் செய்யனும்னு சொல்லி கொடுத்தாங்க. வேகாதி வேகமா செய்ய ஆரம்பிச்சாங்க.. அம்மணி உள்ள போனதும், fan போட்டுக்கிட்டு தான் exercise பண்ணுவாங்க. ஆனா அந்த gym ஆளுங்க fan எல்லாம் போடக்கூடாது, வியர்வை வராதுன்னு சொல்லிடாங்க. அப்புறம் தான் அம்மணிக்கு பிரச்சனை நம்ம அண்ணன் “கொசு” மூலமா வந்தது. அம்மணிக்கு கொசுன்னாவே அலர்ஜி, bus, train ல போகும் போது கூட கொசுவத்தி ஏத்தி வச்சிகிட்டு போற கேசு.. இங்க ஒன்னும் முடியில.. கொசுவ விரட்டுவாங்களா?..வேக வேகமா exercise பண்ணுவாங்களா.?? பாக்க கொஞ்சம் பாவமா இருந்தது.. போன 2 -3 நாள்ல அவங்களுக்கு நின்னுடலாம்னு ஆயிடுத்து............
ஆனா ஆத்துக்காரரும், பையனும் கிண்டல் பண்ணுவாங்களேன்னு போய் வந்துக்கிட்டு இருந்தாங்க..3 ஆவது நாள் முடிந்த நிலையில்.. இராத்திரி தூங்கும் போது “உம்” கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. “அப்பவும்..இதெல்லாம் உன் உடம்புக்கு சரிவராது..நிறுத்திடுன்னு, அவங்க வீட்டுல வூட்டுக்காரரும், பையனும் சொல்லி பாத்தாங்க…. ம்ம்.. இவங்க எங்க...!! எப்படியும் ஒரு 5 கிலோ குறைச்சிட்டு தான் நிறுத்துவேன்னு சொல்லிடாங்க.. 4வது..நாள்...இராத்திரி.. பூரா உடம்பு வலியில தூக்கம் வராம கஷ்டப்பட்டாங்க.........ஆனாலும் எங்க கவிதா யாரு? விடுவாங்களா.. .5..நாள்..உடம்பை யாரோ முறுக்கி எடுக்கிற மாதிரி வலி, அப்புறம் லேசா சுரம் வந்துவிட்டது.. இராத்திரி ஒரு 1.30 மணி இருக்கும்..அம்மணிக்கு ஜன்னியே வந்துடுத்து.. இவங்க அனத்தறது தாங்கமுடியாம, இவங்க hubby என்னாச்சுன்னு தொட்டு பார்த்தா..?!! fever எகுறுது...105 டிகிரி....... அவரு அப்ப கோவத்தை காட்டமுடியாம..அர்த்த இராத்திரியில ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போனாரு..
இவங்க வீட்டு பக்கதுல..ஒரு super டாக்டர் “தம்பதி” சகிதமா ஆஸ்பித்திரி நடத்தி ஓஹோன்னு சம்பாதிக்கறாங்க. 24 மணி நேர ஆஸ்பித்திரி என்பதால் அங்க கூட்டிட்டு போனாங்க.. எப்படா பேஷண்டு வருவாங்க அட்மிட் பண்ணலாம்னு ஒரு கும்பலே அங்க காத்துக்கிட்டு இருந்தது.. ஒரு நர்ஸ் அக்கா, அம்மணி போட்ட சீனை பார்த்துட்டு..”இவங்க ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க.!! டாக்டர எழுப்பி கூட்டிட்டு வரோம்னு போனாங்க.. ம்ம்! வந்தாங்க டாக்டர் அம்மா, அவங்கள பார்த்தவுடனே அம்மணி சுரம் இன்னும் ஒரு டிகிரி ஜாஸ்தியாயிடுத்து........பின்ன என்னங்க,..அர்த்த இராத்திரியில பூதம் மாதிரி நைட்டீன்னு ஒன்ன மாட்டிக்கிட்டு..தல நிறைய (தூங்கறதுக்கு முன்னாடி வைச்சிருப்பாங்க போல) பூ வைச்சிக்கிட்டு...நெத்தி நிறைய பெரிய ரவுண்டு ஸ்டிக்கர் பொட்ட வைச்சிக்கிட்டு வந்தா.. பாக்கறவங்களுக்கு கதி கலங்கி போகாதா..?!!
வந்த டாக்டர் அம்மா, உடனே அட்மிட் பண்ணனும், டிரிப்ஸ் ஏத்தனும். ஜுரத்த குறைக்கனும்னு சொல்லி வேக வேகமா எங்க ஓடிட போறாங்களோன்னு ஒரு ரூம்ல போட்டு அடச்சி, டிரிப்ஸ் ஏத்த ஆரம்பிச்சிட்டாங்க...அடுத்த நாள் காலையில ஒரு பெரிய (மாத்திரை, ஊசி, மருந்து) லிஸ்ட் கொடுத்து வாங்கிட்டு வரசொன்னாங்க.. ஊசி மாத்திரமே ஒரு 20 இருக்குங்க.. அப்புறம் ஒரு நர்ஸ அம்மா வந்து, இரத்தம், யூரின் டெஸ்டு எடுக்க எழுதி கொடுத்தாங்க. அதுவும், அவங்க சொல்லற லேப்ல போய்த்தான் எடுக்கனுமாம். பாவம் அவங்க hubby, பெருங்குடியில், ஏதோ ஒரு சந்துல இருந்த அந்த லேப்பை கண்டுப்பிடிச்சி, கொடுத்து, ரிசல்ட் வாங்கி வர்றத்துகுள்ள நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தாரு,,,,,.
நம்ம கவிதா நிலைமைக்கு வருவோம், காலையில போட ஆரம்பிச்ச ஊசிங்க..நர்ஸம்மா..நிறுத்தல.. இந்த கை, அந்த கை, இந்த இடுப்பு, அந்த இடுப்புன்னு போட்டு தாக்கறாங்க...... எனக்கு சிரிப்பு அடக்க முடியல.........அம்மணிக்கோ வாய திறக்க முடியில. அந்த பக்கம் அவங்க hubby நடக்கறத எல்லாத்தையும் “மவளே வேணான்னு சொன்னேன் கேட்டியா, அனுபவி” ன்னு பார்த்து ரசிச்சிகிட்டு இருந்தாரு.. 3வது நாள் கவிதாவால பேசக்கூட முடியல..தட்டு தடுமாறி அவங்க hubby ஐ கூப்பிட்டு, “பழிவாங்கனும்னு முடிவோடதான் இருக்கீங்களா..படிச்சவரு தானே நீங்க?.. இவ்ளோ ஊசி போடறாங்க.. என்ன என்னவோ மாத்திர தராங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா?.. இன்னும் ஒரு நாள் இங்க நான் இருந்தா..எனக்கு சங்கு ஊத வேண்டியது தான்..என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க..ப்ளிஸ்..”: கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க........... அவரோ ‘’அப்போ ஒரு நாள் கழிச்சே வீட்டுக்கு போலாம்னு” கூலா சொல்லிட்டு போய்ட்டாரு.. வாழ்க்கையில அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் தவற விட தயாரா இல்ல.
சரி ..சரி.............சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு....அடுத்த பதிவுல பார்ப்போம்......
பீட்டர் தாத்ஸ் :- A new attitude invariably creates a new results.
Labels: அணில் குட்டி 7 Comments
அய்யோ! இந்த பக்கம் வந்துடாதீங்க!! கவிதா பாடியிருக்காங்க..
அணில் குட்டி அனிதா:- ஜன கன மன பாட சொன்னா... இங்க பாருங்க..அம்மணி அழுது தீத்துட்டாங்க..அத வேற சர்வேசன் அண்ணன் சூப்பர் ன்னு சொல்றாரு.. நிசமாத்தான் கேட்டாறா..இல்ல..அம்மணி வருத்தப்பட போறாங்கன்னு.. சொன்னாறான்னு தெரியல.. அவ்வளவு சோகமா பாடியிருக்காங்க.... அம்மணிய பாட வேண்டாம்னு நானும் எவ்வளவோ தடுத்துப்பார்த்தேன்..முடியல... நீங்களும் கூட அழணும்னா... இங்க போங்க...!!
http://neyarviruppam.blogspot.com/2007/07/12.html
சரி..அம்மணி'மட்டும் இல்ல இன்னும் நிறைய பேரு பாடி அசத்தி இருக்காங்க.. நீங்களும் சீக்கிரம் பாடி அசத்துங்க.. .பாவம் சர்வேசன் அண்ணே... கூவி கூவி அழைக்கிறாரு..நீங்க யாரும் கண்டுக்கவே மாட்டேன்ங்கறீங்க...
கொஞ்சம் அவரை கண்டுக்கோங்களேன்.........
பீட்டர் தாத்ஸ்:- Success is a journey, not a destination.
Labels: அணில் குட்டி 2 Comments
சினிமாவை பார்த்து திருந்தியவர்கள் உண்டா?
சினிமா என்பது ஒரு தனிமனிதனின் கற்பனை. நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது தன்னுடைய கற்பனையை கதைகளாக்கி சினிமாவை படைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனின் படைப்பு அன்றி வேறு ஒன்றும் இல்லை. ஒரு படத்தின் மொத்த அம்சமும் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட கருத்தே. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.
ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை அவர் காசாக்குகிறார். நாமும் அவரின் கற்பனையை, திறமையை கண்டு மகிழ்ந்து, திரைப்படத்தை காசாக்கி கொடுக்கிறோம். ஒரு படத்தில் சொல்லியிருக்கிற கதையில் வரும் நல்லவை, கெட்டவை எல்லாமே அந்த தனி நபரின் முழு கற்பனை, அவருடைய பார்வையில் அவர் சொல்ல நினைப்பதை சொல்லியிருப்பார் அல்லது அவரின் இயற்கை குணத்தின் பிரதிபலிப்பாக கூட இருக்குமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. அப்படியிருக்க ஒரு கதையை இது சரி, இது தவறு என்று யாராலும் யாரையும் சாடமுடியாது, அதில் எந்த அர்த்தமும் இல்லை.
அப்படி நாம் விமர்சனம் செய்தால் அந்த குறிப்பிட்ட திரைப்படத்தை நம் சிந்தனையில், நம் பார்வையில் நாம் எப்படி யோசிக்கிறோம் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம் என்ற தனிப்பட்ட கருத்தே. பருத்திவீரன் என்ற திரைப்படத்தை அனைவரும் பாராட்ட ஒருவர் மட்டும் அது ஒரு படமா? பெண்ணிடம் பணத்தை வாங்கி, வேலை வெட்டி இல்லாமல் ஊரை ஏமாற்றி சுற்றும் ஒரு உதவாக்கரை இளைஞனின் கதை. இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று எழுதி இருந்தார். இப்படியும் சிலரால் திரைப்படங்களை அவர்களின் பார்வையில் விமர்சிக்க முடிகிறதுதான்.
இதில் சினிமாவை பார்த்து பாதிப்பு என்று சொன்னால், “காதல்” என்ற ஒரு விஷயம் மட்டுமே. காதலினால் சிந்திக்கும் தன்மையை இழந்த நம் மக்கள், சினிமாவை பார்த்து அதில் வரும், ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை மையமாக வைத்து சொல்லப்பட்ட காதலை, பின்பற்றும் காதலர்கள் அதிகம். “ஜில்லுன்னு ஒரு காதல் “ படம் பார்த்துவிட்டு, அதைபோன்று வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண், எந்த அளவு தன் அறிவை இழந்தவளாக இருக்கிறாள் என்பது அவளுக்கே தெரிவதில்லை. “ஏக் துஜே கேலியே “பார்த்து தற்கொலை செய்து கொண்ட காதலர்களும் உண்டு. "அலைபாயுதே" பார்த்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் பைத்தியங்கள் உண்டு. "இதயத்தை திருடாதே" பார்த்து, எல்லோரைடமும் "ஓடி போலமா?" என்ற கேட்டவர்களும் உள்ளனர்.
சினிமாவை பின்பற்றி, அது பொழுது போக்கிற்கு மட்டுமே என்பதை மறந்து, தன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் இவர்கள், சினிமாவில் சொன்னப்பட்ட ஒரு விஷ்யம் ஒரு தனிமனிதனின் கற்பனை, அது சினிமாவிற்கு மட்டுமே பொருந்தும், யாதர்த்த வாழ்க்கைக்கு பொருந்தாது என்பதை சிந்திக்க தவறுகிறார்கள். Start Camera, Action, and Pack up, என்பதோடு சினிமா காதலும், காதல் வசனங்களும் முடிந்து போகின்றன.
வியாபார நோக்கோடு, கவிர்ச்சிக்காக வேண்டி, பெண்கள், பாட்டு, நடனம் இத்தியாதிகள் சேர்க்கபடுகின்றன. இதில் ஒரு விஷயம் புரியவில்லை, பெண் அமைப்புகள் - பெண்களை திரையில் இழிவாக பேசிவிட்டாலோ, பாடல்கள் எழுதிவிட்டாலோ, குய்யோ, முய்யோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ஆனால், அவிழ்த்து போட்டுவிட்டு ஆடும் பெண் நடிகைகளை எதிர்த்து இதுவரை போர்கொடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்ததாக தெரியவில்லை.
மிகவும் சமுதாய நோக்கோடும், சிந்தனையோடும் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவது இல்லை. நாமும் அந்த படங்களை பார்த்து திருந்திவிடுவதும் இல்லை. அப்படி திருந்தி இருந்தோமானல், அப்படி படங்கள் மட்டுமே திரைக்கு இப்போது வந்திருக்கும். சினிமாவை நம்பியே வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அது அவர்களின் தொழில், செய்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.
அதற்கு அடிமையாகி மூடர்கள் போல திரியும் நாம், சினிமா என்பது ஒரு பொழுது போக்குக்காக மட்டுமே என்பதை உணர்ந்து அதற்கு எந்த அளவு நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவும் தரவேண்டுமோ, அவ்வளவே தரவேண்டும்.
கறுப்பு பணம் என்பதை கருவாக கொண்டு எடுத்த “சிவாஜி” படத்தில் உள்ளேயும் , வெளியேயும் எவ்வளவு கறுப்பு பணம் நடமாட்டத்தில் இருந்தது என்பதை அனைவரும் அறிவர். சமீபத்தில் தான் ஜாக்கி சேனின், “Rob B Hood “ திரைப்படம் பார்த்தேன், அதில் வருகின்ற சில முக்கிய காட்சிகள் “சிவாஜி” படத்தில் அப்பட்டமாக அப்படியே வருகின்றன. இப்படி தனிமனித கற்பனையன்றி, அடுத்தவர்களின் கற்பனையையும் திருடி படங்கள் வெளிவருகின்றன. நாமும் அதை பார்த்துவிட்டு ஆகா..ஓகோ என்று கொண்டாடுகிறோம், திரை அரங்குகளில் அடித்துக்கொள்கிறோம், பால் அபிஷேகம் செய்கிறோம்.. பாராட்டு மழையும் பொழிகிறோம்….
அணில் குட்டி அனிதா:- மக்கா… தனியா லெட்டர் அனுப்பி சினிமா விமர்சனம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. …...அடடா….அம்மணி திருந்திட்டாங்க போல இருக்குன்னு நினைச்சேன்….ம்ஹீம்.. எங்க.. …. பதிவா எழுதிட்டாங்க… முடியலைங்க….!!
பீட்டர் தாத்ஸ்:- Failure is the opportunity to begin again more intelligently.
Labels: சமூகம் 4 Comments
எங்கள் வீட்டு மரம்ஏறி’யும் - சட்டியில் சாப்பாடும்
எங்கள் வீட்டில் தென்னை மரம் ஏறி, தேங்காய் மற்றும் ஓலைகளை வெட்டி தருபவரை “மரம் ஏறி” என்று அழைப்போம். அவரின் பெயர் ஜெயபால். ஆயா, தாத்தா, அப்பா மட்டுமே பெயர் சொல்லி அழைப்பார்கள். மற்றவர்கள் “மரம் ஏறி” என்று தான் கூப்பிடுவோம். 3 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து அவரே வேலை இருக்கிறதா என்று கேட்பார்.
எங்களுக்கு தேவை என்றால், யாராவது அவருடைய கிராமத்திற்கு போய் தான் அழைத்து வர வேண்டும். விழுப்புரம் தாண்டிய உடனே சென்னை வரும் நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம் வரும். (இப்போதும் உள்ளது), அதனை அடுத்த சிறு கிராமம் தான் அது. பெயர் மறந்துவிட்டது. அங்கே சென்று ஜெயபால்’ என்று கூறினால் போதும், அவர் எங்கிருந்தாலும் மக்கள் நம்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள்.
இவர் வரும் போது ஒரு குடுவை (படம் #.1) எடுத்து வருவார். இந்த குடுவை முறம் செய்யும் நாரை கொண்டும், தென்னைமரத்து பாலையை கொண்டும் செய்திருப்பார்கள். மிக கடினமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். இந்த குடுவையை இடுப்பில் பச்சை கலர் பெல்ட்டை கொண்டு எப்படியோ முடிந்து இருப்பார். அது மரம் ஏறும் போது அவருடன் இருக்கும். அதில் தேங்காய், ஓலைகளை வெட்டும் கத்தி இரண்டு, ஒரு சிகப்பு கலர் துண்டு இருக்கும். கால்களில் விழலால் அல்லது வைக்கோலால் செய்த ஒரு பெல்ட்டை (படம் #.2) மாட்டிக்கொண்டு (படம் #.3) மரம் ஏறுவார். இந்த பெல்ட்டை அவர் தோலில் தொங்கவிட்டுக்கொண்டு வருவார்.
கூலி,தேங்காய்’களின் எண்ணிக்கை பொருத்து தான், ஒரு மரத்திற்கு ரூ.3ம், ஒரு தேங்காய்க்கு மட்டை உரித்து கொடுப்பதற்கு 10 பைசா கொடுப்பார்கள். கடைசியாக 5 ரூ & 25 பைசாவாக அவரின் கூலி உயர்ந்தது. ஓலை பின்னுவதற்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது எனக்கு மறந்துவிட்டது. அநேகமாக ஒரு ஓலைக்கு ரூ.1 –க்குள் தான் இருக்கும். அதற்கு மேல் இருக்க வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை.
கண் சிமிட்டாமல் கவனித்தால் கூட எப்படியும் 1, 2 தேங்காய்களை அவர் எடுத்து குடுவையில் மறைத்து விடுவார். அவர் குடுவையை கழட்டி வைத்துவிட்டு அப்படி இப்படி போகும் சமயம் பார்த்து, நான் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பேன். நல்ல பழக்கம் இல்லை என்றாலும், கூலி கொடுத்த பின்னும் அவர் தேங்காய்களை மறைத்து வைப்பது வாடிக்கை என்பதால், எத்தனை எடுத்து வைத்துள்ளார் என்பதை பார்ப்பேன். அதில் அவரின் சாமர்த்தியத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அன்றி வேறொன்றும் இல்லை. அந்த தேங்காய்களை கடையிலோ, வீடுகளிலோ விற்றுவிடுவார். அதில் அவருக்கு கொஞ்சம் பணம் வரும். மேனஞ்மென்ட் படித்தவர்கள் இப்போது இவையெல்லாம் என்னையும் சேர்த்து தொழில் சாதூரியம் என்று சொல்லுவார்கள்.
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவருக்கு சாப்பாடு சட்டியில் ஓரமாக கைப்படாமல் வைப்பார்கள். அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, கழுவி ஓரமாக கவிழ்த்துவிட்டு போவார், பிறகு அதனை நாங்கள் ஒரு முறை நன்றாக கழுவி அதற்கான இடத்தில் எடுத்து வைப்போம். நாங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களை அவர்கள் தொட்டதே இல்லை. ஓரமாக சந்து வழியே வந்து அப்படியே சென்று விடுவார்கள். வீட்டிற்க்குள் அவர்களாகவே வரமாட்டார்கள். வெளியில் கொடியில் தொங்கும் துணிகளை கூட தொடாமல் குனிந்து அல்லது ஒதுங்கி செல்வார்கள். வேலை நடக்கும் போது அவர்கள் தொட்டுவிடுவார்களோ என்று , ஆயா துணிகளை உள்ளே எடுத்துவந்து விடுவார்கள்.
அவர் ஓலை கழித்து , ஓலை பின்னும் வேலைக்கு வரும்போது எல்லாம், சாப்பாடு நாங்கள் தான் தருவோம். சாதம் வடித்த கஞ்சி, சாதம், புளிவிட்டு கடைந்த அரைக்கீரை தான். ஓலை பின்ன வரும் போது குடும்பத்தோடு வருவார். பெண் ஆட்களும் வேலை செய்ய வருவார்கள். ஒரு 4, 5 ஆட்கள் வேலைக்கு வருவார்கள்.
ஆயாவை நான் தான் ரொம்பவும் தொந்தரவு செய்து கேள்விகள் கேட்பேன். அவர் தொட்டு வெட்டி கொடுக்கும் தேங்காவை மட்டும் நாம தொட்டுத்தானே உள்ளே எடுத்து வைக்கிறோம், சாமிக்கும் அந்த தேங்காவை தானே உடைக்கிறோம். ஏன் இப்படி சட்டியில் சாப்பாடு கொடுக்கிறாய்?, மனுஷன் தானே அவர்? பாவமாக இருக்கிறது என்பேன். “உனக்கு அது எல்லாம் புரியாது, தெரியாது, பேசாமல் சொன்னதை மட்டும் செய், கூட கூட பேசாதே” என்று வாயை அடைத்து விடுவார்கள். எனக்கு மட்டும் இந்த பாகுபாடு பிடிக்காது. “ஏன் சுட சாதம் கொடுக்கும் போது கஞ்சி வேற கொடுக்கற?, என்று கேட்பேன். அதற்கு அவர்- “கஞ்சி அவங்களுக்கு குளுக்கோஸ் கொடுக்கற மாதிரி, வெயில்ல நிறைய வேலை செய்யறாங்க, இது தான் தாகத்தை தணிக்கும் “ என்பார்கள்.
அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிணற்றலிருந்து இரைத்து ஊற்றவேண்டும், குனிந்து கையை குவித்து குடிப்பார்கள் அல்லது அவர்கள் கொண்டு வந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற சொல்லி வாங்கி வைத்து க்கொள்வார்கள். எனக்கு இதில் புரியாத விஷயம், அவர்கள் பின்னிய ஓலையை எண்ணும்போது நாங்களும் தொட்டு தான் வாங்கி அடுக்கி வைப்போம். ஓலைகளில் அவர்களின் கைப்படாத இடம் இருக்கவே முடியாது.
எப்படியும் மதியம், என்னை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஆயா தூங்கிவிடுவார்கள். அப்போது யாருக்கும் தெரியாமல் மரம் ஏறி குடும்பத்துடன் ஒன்றுக்குள் ஒன்றாகி ஆகிவிடுவேன். மரம் ஏறி மனைவி பக்கத்தில் உட்கார்ந்து ஓலை பின்ன கற்றுக்கொள்வேன், வித விதமான முறைகளை சொல்லிதருவார்கள். சின்ன சின்ன சொப்பு கூட நான் விளையாட ஓலையில் பின்னித்தருவார்கள். (என் தொந்தரவு தாங்காமல்) எனக்காக சில கழித்த (வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட) ஓலைகளை ஜெயபால் வெட்டி தருவார், நானும் அவர்களுடம் உட்கார்ந்து பின்னுவேன், அவர்களின் குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு சுற்றி வருவேன், ஓடிப்பிடித்து விளையாடுவேன். ஓலையை வைத்து பாம்பு செய்து அவர்களை பயமுறித்தி விளையாடுவேன். ஓலையை மேல் நோக்கி பிடித்து வேகமாக கிழித்து ராக்கெட் விடுவேன்.
ஆயா எழுந்துவிடும் சமயம், நானும் அவர்களிடமிருந்து தள்ளி வந்து விடுவேன். நான் யாரோ அவர்கள் யாரோ என்று. கூலி வாங்கும் போது என்னன குழந்தைகளும், பெண்களும் தூர இருந்து பார்த்து லேசாக சிரிப்பார்கள்.
அணில் குட்டி அனிதா:- கதை சொல்லிட்டாங்களா? ம்ஹீம்..அப்பன்னா.. இந்த வேலை இல்லன்னா.. வீடு வீடா போயாவது ஓலைபின்னி நீங்க பொழச்சிக்குவிங்களா கவிதா?.. மக்கா உங்க வீட்டுல ஏதாவது ஓலை பின்ற வேல இருந்தா சொல்லுங்க………..அம்மணி துள்ளி குதிச்சி வந்து செஞ்சி குடுத்துடுவாங்க… as she mentioned above, you guys can pay to her.. oopppppppps….ஏழை மக்களை ஒரு குடும்பம் கூலி விஷயத்துல எப்படி ஏமாத்தி இருக்கு பாருங்க.. ??!!
பீட்டர் தாத்ஸ் :- We will not know unless we begin.
Labels: பழம்-நீ 13 Comments