இன்றைக்கு எங்களிடம் கேப்பங்கஞ்சி குடிக்க மாட்டியவர், அக்மார்க் தமிழச்சி..மதுரா அவர்கள். இவருடைய படைப்புகள் அனைத்துமே நல்ல வித்தியாசமான தமிழில் எழுதிய படைப்புகள். எனக்கும் அணிலுக்கும் நல்ல தமிழே புரியாது..இவங்க தமிழ் சுத்தமா புரியாது... ஆனாலும் நல்ல தரமான படைப்புகளை தருகிறார்கள் என்பதால் படிப்போம்.. இதோ நம்மிடையே..மதுரா..

வாயைப்புடுங்கற ரவுண்டு:-

கவிதா :-வாங்க தமிழச்சி! எப்படி இருக்கீங்க ?!! இப்ப எங்க இருக்கீங்க.? உங்களை பற்றி சொல்லுங்க....
உங்கள் பதிவில் எனக்கு எழுத வாய்ப்பளித்தமைக்கு (பெருமையுடனும் சந்தோஷத்துடனும்) மனமார்ந்த நன்றி கவிதா. ஜமாய்ச்சிக்கிட்டுருக்கேன்! மஸ்தினியாக இருக்கேன்! :) இப்ப அத்தான் பக்க்க்க்க்க்கத்தில இருக்கேன்! :) நம்ம நாட்டு மண்ணுல. நான் யாருன்னு எனக்கே ரொம்ப டவுட்டு உண்டு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடத்திலயும் வேறு வேறு கோணங்களில் உலகமும், வாழ்கையும், சுயமும், புரியாம புரிஞ்சு குழப்புனதுல, மொத்தமா கலங்குன பார்டின்னு வச்சுக்கோங்க! :)

கவிதா:- உங்க தமிழ் நிஜமாகவே ரொம்ப வித்தியாசமா இருக்கு, . பேச்சு நடை, எழுத்து நடை..ஏன்..சில சொற்கள் கூட ரொம்ப புதிதாக இருக்கு.. காரணம் என்ன?
கன்னா பின்னான்னு நிறைய மொழிகளை பேசும் யதார்த்ததில் வாழ்கை அமைஞ்சதாலன்னு நினைக்கிறேன். மொழி சம்பந்தப்பட்ட மூளையின் செல்கள் எல்லாம் எப்பவும் எக்குத்தப்பா கெமிக்கல் ஃபயர் பண்ணி வார்த்தைகளை எங்க எங்கருந்தோ தோண்டி எடுத்து சொதப்பிருது.

கவிதா:- உங்கள் எழுத்தில் நாங்கள் கண்டது..ஒரு சமயம் கலவி பற்றி பேசும் தீடீரென்று டவுசர் பாண்டிச்சி.. தீடீரென்று ஹிட்லர், கார்டிரைவிங், நீச்சக் என்று தாவுகிறீர்கள் எப்படி..இப்படி?!
அதுதான் என் சுய ரூபம்னு நினைக்கிறேன். மாமியார் வீட்டுல பாத்திரம் கழுவிக்கிட்டே, ஒரு பக்கம் சினிமா பாட்டு கேட்டுகிட்டே, இன்னொரு பக்கம் குவான்டம் மெகானிக்ஸ் நிஜமா பொய்யான்னு தீவிரமா யோசிச்சிட்டிருப்பேன். டம்முன்னு தட்டு சோப்புல நழுவி கீழ விழுந்து, டென்ஷனா பாப்பேன். யாரும் திட்ட மாட்டாங்க, நானே என்னைய திட்டிக்குவேன்!

கவிதா:- நிறைய நல்ல பதிவுகள் இருந்தும் நிறைய பார்வைகள் உங்கள் எழுத்தின் மேல் படவில்லை என்று நினைக்கிறேன்.. நீங்கள் அதைப்பற்றி?
அய்யோ இருக்கிறவங்களே போதுமையா சாமி. போட்டு வறுத்து எடுத்திடாங்க சில பேரு. இப்படியெல்லாம் கூட கோவிச்சாப்பாங்களா ஒண்ணுமில்லாத உளறுலுக்கெல்லாம்னு மண்ட காஞ்சு போயிட்டேன். நமக்கேத்த நாலு பேர் போதும் என்னைக்கும்!

கவிதா:- வியாபார நோக்கோடு.. பதிவுகள் பார்வையிடப்படனும்னு நீங்க நினைக்கிறீங்களா?.. அதாவது.. அதிக மறுமொழி வரவேண்டும்.. அதற்காக..நாம் நம்மை அதிகபடியாக விளப்பரம் செய்து கொள்ள வேண்டும் , அரசியல் செய்தோ..அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிலோ அல்லது எல்லோருடைய பதிவுலும் போய் ஒரு பின்னூட்டம் போட்டு விட்டு வந்தாலோ..அடுத்தவர்களின் பார்வை நம் மேல் விழும் அல்லவா? இதை பற்றி உங்களின் கருத்து
ஹி ஹீ. எனக்கும் நிறைய கமெண்டு வந்தா புடிக்கும்தான். :) பாராட்டு இன்னுமே ரொம்ப பிடிக்கும்! :) ... அப்பட்டமா அதை சொன்னா அல்பம்னு நினைப்பாங்களோன்னு ஒரு பயம் உண்டு. ஆனாலும் வெக்கப்படுறதுக்கு நமக்கு கொஞ்சம் மானம் கம்மி. :) ஆனா விளம்பரப்படுத்தி எழுதுற அளவுக்கு, என் எழுத்து மேல எனக்கு மரியாதை இன்னும் வரலை. சில பேரு நிஜமாவே பயங்கர ஆழமான குறிக்கோள், தத்துவம், எல்லாம் வச்சு எழுதுறாங்க - அவங்கல்லாம் பெரியவங்க. நான் சும்மாத்தான் எழுதுறேன். ஆனா நிறைய பதிவுகள் போய் வாழ்கையின் பல கோணங்கள், அதன் அழகான பார்வைகள் பார்த்து நிஜமாவே ரசிச்சு சந்தோஷப்புட்டுருக்கேன். பின்னூட்டம் விடதுக்கு சோம்பல் பட்டு விட்டுருக்கேன். ரசிச்சதோட சரி.

கவிதா:- உங்கள் எழுத்துக்களில் பெண்ணியம் பற்றிய சிந்தனை நிறைய இருக்கு..அதில் எனக்கு உடன் படாத கருத்துக்கள் நிறையவே இருக்கு.. பெண்ணியம் - என்பதை பற்றி சுருக்கமா நச்சுன்னு சொல்லுங்க
பெண்ணின் இயம் அவ்வளவுதாங்க. பெண்களின் இயம் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டதாய் எனக்கு தோணும் அடிக்கடி. அதை அன்பும் ஆனந்தமுமாய் சமுதாயத்தில் பார்வைக்கு வெளிக்கொண்டு வரணும்னு ஒரு ஆசை உண்டு. குழப்பம், கோபம்தான் சில சமயம் வாங்கிக் கட்டிருக்கேன். :) சுய வாழ்கையில பயப்படுறதே இல்ல, உண்மைய உளறி கொட்டி நிம்மதியா இருந்திருவேன். ஆனா சமுதாயத்தில எப்படி வெளி கொண்டு வரணும் - அவை அறிதல் இன்னும் முழுசாத் தெரியல.

கவிதா:- நீங்கள் எழுதியதில் குறிப்பா
பச்சைக் குத்தின பாண்டிச்சி! ..... இவிங்க யாரு.. சும்மா சூப்பரா பாட்டு எல்லாம் பாடி இருக்கீங்க இந்த பதிவுல.. நீங்க இவிங்க கூட சேர்தவங்களா?"
நானே நானா... யாரோ தானா? மெல்ல மெல்ல மாறினேனா?" :) சொன்னதெல்லாம் உண்மைதான் பேரைத்தவிர :)

அணில்:- தமிழச்சியக்கா..அது என்னாங்கக்கா..
இஸ்.பேக்கு ? “டவுசர் பாண்டிச்சி இஸ் பேக்கு??
எனக்குக்குள்ள ஆயிரம் தமிழச்சி; அதுல ஒண்ணு டவுசர் பாண்டிச்சி. அதுதான் பேக்கு மத்தெல்லாம் கோக்கு மாக்கு :)
எனக்குக்குள்ள ஆயிரம் தமிழச்சி; அதுல ஒண்ணு டவுசர் பாண்டிச்சி. அதுதான் பேக்கு மத்தெல்லாம் கோக்கு மாக்கு :)


கவிதா :- ஹா..ஹா...கோக்கு மாக்கா?!! சரி..உங்களின் ஒரு பதிவில் “
விவாக ரத்து - யதார்த்தமான கண்ணோட்டம்.." பதிவை படித்திருக்கிறேன். அதிகபடியான விவகரத்து பெண்களுக்கு ஆக்கப்பூர்வமானதுன்னு நீங்க நினைக்கறீங்களா?
இனிமையும் இன்றி, இயமும் அன்றி, வாழும் பெண்மையை போற்றும் கொடுமையான கலாசாரமாக நான் தமிழர்களின் வாழ்வு முறையை பார்க்கவில்லை. கலாசார போர்வையில் புகுந்து, இயம் மாறி அஞ்சி வாழாமல், இனிமை இழக்காமல் சிறகு விரித்து புதிய வானில் ரம்மியம் தேடுங்கள் அவ்வளவுதான் என் கருத்து.


கவிதா:- “ஹிட்லரும், நானும், எங்கள் தோட்டியும்" என்ற பதிவில் தோட்டி பற்றியும் உங்க மனஓட்டத்தையும் புர்ஞ்சிக்க முடிஞ்சிது.. இப்பவும் நாகரீகமாக இது நடக்குது தெரியுமா?
இப்பவும் நான் அதை பார்க்க நேர்ந்தால் என்னால் ஒண்ணும் செய்ய முடியாதோன்னு நினைச்சா பயமாதான் இருக்கு. என்ன செய்யணும், எப்படி செய்யணும், அதை பற்றி ஆழமாய் சிந்திக்க வேண்டும், சிந்திப்பதோடு இல்லாமல் செய்ய வெண்டும். செய்வேனா? செஞ்சப்புறம் சொல்றேன். இப்ப வெறும் பேச்சு தான்! கறிக்காவாது.

கவிதா:- ஆண் - ??
பெண்ணின் இயம் அறியாமல் எத்தனையோ வித்தைகள் செய்து பார்க்கும் அப்பாவிகள். மற்றபடி இந்த குழப்பத்திலிருந்து எஸ்கேப் ஆகி, அவர்கள் போக்கில் அவர்கள் இருக்கும் போது இனிமையானவர்கள், அருமையானவர்கள், அன்பானவர்கள், ஆனந்தமானவர்கள்.

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-

மதுரா / தமிழச்சி - ஒற்றுமை வேற்றுமை
தமிழச்சி நிஜம்; பல விதம். நிஜத்தை எழுத்தில் வடிக்கும் ஒரு முயற்சி மதுரா. மதுராவும் ஒரு வகையில் தமிழச்சியே.

உங்கள் மச்சானிடம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் ஒன்று-
எனக்கு என்னை விட உன் மனதில் தெரியும் என் பிம்பம் மிகவும் பிடித்தமானதாய் உள்ளது. அதனையே எதிர்பார்த்து உன்னை மணந்தேனோ இந்த சுய-நல வாதி?

உங்கள் குழந்தைகள் “தமிழச்சிகளாக வளர்க்கபடுவார்களா?
தமிழர்களின் அருமையான உணவு, அழகிய உடைகள், அமுதமான இலக்கிய உலகம் அவர்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் விடப்படும். பாடல்கள், கவிதைகள், நடனங்கள், நாட்டுப்புற கலைகள் அனைத்தும் அவர்களுக்கு காட்டித்தரப்படும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்; திரைகடல் ஓடி திரவியம் தேடு" என்னும் தமிழ் சொல்லாடல்களும் சொல்லிக் கொடுக்கப்படும்! :)

உங்கள் எழுத்தில் உங்களுக்கு பிடித்த பதிவுகள்
அன்பர் நண்பர்களிடமே பகிராத உண்மைகளை, எண்ணங்களை, அப்பட்டமாய் எழுதிய அத்தனை வார்த்தைகளும், மிகவும் பிடிக்கும். அங்கங்கு காணக் கிடைக்கும் அவை.

உங்களுக்கு ப்ளாக் ளில் பிடிக்காத விஷயங்கள்
என் அன்புக்குரியவர்களின் நிஜங்களை வைத்து தருமமாய் செய்கிறேன் என்று நினைத்து சூதாட்டமாய் போன விளையாட்டு, சில பதிவுகள். அது எனக்கு மிகுந்த வருத்தம் தந்தது. அடுத்தவர்கள் பதிவு அவர்கள் விருப்பம். நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.

நீங்கள் ஒரு தமிழச்சி யாக சாதிக்க நினைப்பது ?
வளர்த்த மண்ணில் என்னால் முடிந்த அளவு இனிமை விதைப்பது; ஆனந்தம் காப்பது; உண்மையை மேடை ஏற்றுவது! எப்படின்னு தெரியல.
நீங்கள் எழுதவந்தது ஏன்?என்னைப் போல யாராவது இதே மாதிரி குழப்பங்கள் கண்டு கலங்கியிருந்தால், ஒரு தோழமை காண்பார்கள் என் எழுத்தில் என்பதால். அவ்வகை தோழமைக்காக நான் பல முறை ஏங்கி இருக்கிறேன்.

உங்கள் மச்சான் உங்களை பாராட்டிய ஒரு நிகழ்வு.
மச்சான் பாராட்டித் தள்ளிருவாரு. ஒண்ணா இரண்டா, எப்பவுமே பாராட்டு தான். ஆனா அப்பப்ப குசும்பு நடக்கும் "அந்த பொண்ணு எவ்வளவு அழகு, உன்னை மாதிரி கண்ணு என்னை மாதிரி மூக்கு" அப்படின்னுவாரு - "என் மூக்கு குடை மிளகாய்ன்னு சொல்ற" அப்படின்னு வேதாளம் உடனே ஆரம்பிச்சிரும்! விக்கிரமாதித்தன் மாதிரி பதில் சொல்லி அனுப்பிருவாரு! :)

தமிழச்சி - பிளாக்கில் என்ன சாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? தமிழில் பெண் இயத்தின் உண்மைகளை இனிமையாய் ஆனந்தமாய் எழுதி சமுதாயத்தின் பார்வையில் வைக்கும் மொழித் திறன் மட்டுமில்ல மனப் பக்குவமும் வரவேண்டும் அப்படின்னு ஒரு பேராசை உண்டு! :)

உங்களுடைய மற்ற interest..
பயணம் - பல தொலைவுகளில், பல கலாச்சாரங்களில். பயிரிடுதல் - பழங்கள், நெடு மரங்கள், எனக்குரிய பூமியில், என் வியர்வையில்.