சபரிமலைக்கு போகனும் என்பது சிறுவயது ஆசை.  காரணம் அப்பா, 48 நாள் விரதமிருந்து 7 முறைக்கு மேல் சென்றுவந்தவர், ஒவ்வொரு வருடமும் அவரின் விரத நாட்களில் அவரோடு கோயிலுக்கு செல்வதும், இருமுடிக் கட்டுவதிலிருந்து,  அவரை கோயிலுக்கு அனுப்பும் வரை கூடவே இருந்ததும், அப்பாவிடம் சபரிமலை கதை கேட்டதாலும், இந்த ஆசை வளர்ந்திருந்தது. ஆனால் பெண்கள் அனுமதி இல்லாதது, அங்கு செல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது. எனக்கிருந்த இந்த ஆசை என் கணவருக்கு தெரியும். 

இப்பதான், பெண்கள் செல்ல அனுமதி இருக்கே, தவிர கருப்பை நீக்கியாச்சி, இதையும் சொல்லி போய்விடலாம் என்று கிளம்பினோம். பொதுவாக எனக்கு கூட்டமிகு கோயில்கள் நெருச்சலில் அடிச்சி புடிச்சி போக பிடிப்பதில்லை. அத்திவரதரை பார்க்காமல் விட்டதற்கு இதே கூட்டம் தான் காரணம். ஓணம் பண்டிகையை அடுத்து கோயில் 5 நாட்கள் திறந்திருக்கும் என்பதை அறிந்து, கிளம்பினோம்.  தேக்கடி செல்லும் போதே  இரவு 10 மணி ஆகிவிட்டதால், அங்கு அறை எடுத்து தங்கிவிட்டு, விடியற்காலை 5 மணிக்கு சபரிமலை நோக்கிப் புறப்பட்டோம்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும், ஏற்ற இறக்கத்தோடு
வளைந்து  நெளியும் சாலைகளும் சொல்லில் அடங்கா அழகு, காரின் சன்னலை திறந்து சில்லென்ற இயற்கைக்காற்றை ரசித்தவாரே சென்றோம். 'நிலக்கல்' அடையும் போது காலை 8 மணி இருக்கும், காவல்துறை தடுத்து நிறுத்தியது. பம்பை வரை செல்ல அனுமதி இல்லை, இங்கேயே காரை நிறுத்தி பேரூந்தில் செல்லுங்கள் என அறிவுருத்தினர். 

காரை நிறுத்திவிட்டு, பெண்களுக்கான கழிவறைத்தேடி ஓய்ந்துப்போனோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெண்கள் யாரும் கண்ணில் படவில்லை. நான் மட்டும் தனியாக அனைவரும் கவனிக்கும் படி நடமாடினேன் என்றெஏ சொல்லவேண்டும். எங்களின் பிரச்சனையை கண்டுக்கொண்ட தமிழ் சாமிகள் சிலர், ஆண்கள் செல்லும் கழிப்பறையை உபயோகித்துக்கொள்ளுங்கள், வேறு வழியில்லை என சொல்லியதில், என் கணவரை கழிவறை வாசலில் நிற்க வைத்துவிட்டு சென்று வந்தேன். அசுத்தம், அசிங்கம், நாற்றம். ஓவ்வேக் ..வகை.....வேற வழியில்லை.

காலை உணவு அப்பம் , சோயா குழம்பு, கடலை குழும்பு ன்னு ஆளுக்கு ஒன்றாக சாப்பிட்டு முடித்து, பேரூந்து நிறுத்தம் தேடி வந்து, பேரூந்தில் அமர்ந்தோம்.  ஒரு போலீஸ் அம்மா எங்க பின்னாடியே ஏறி வந்து, சத்தமில்லாமல் ரகசியமாக புன்னகையோடு ஹிந்தியில் பேச ஆரம்பிச்சாங்க.  'மலைக்கு ப்போறீங்களா?' இந்த கேள்வி எனக்கு மிக அபத்தமாக ப்பட்டது. 'ஆமா'ன்னு பதில் சொல்லிக்கிட்டே,  மருத்துவ குறிப்புகளை எடுத்து காட்டினோம்.அடுத்து  'வயசு என்ன?' ன்னு கேட்கவும், ஆதார் கார்டை காட்டினோம். 'இருங்க எங்க பெரிய ஆபிசர் 'ட்ட கேட்டுட்டு வரேன்'னு சொல்லிட்டு போனாங்க. பக்கத்தில் ஜீப்பில் இருந்த பெரிய ஆபிசரிடம் என்னவோ பேசிவிட்டு திரும்ப வந்து, போக சொல்லிட்டாரு, பம்பையில் செக்கிங் நடக்கும் அவங்க பாத்துப்பாங்கன்னு சொல்லிட்டு, இறங்கிட்டாங்க. 

பம்பையில் இறங்கியவுடன், டோலியில் தூக்கி செல்லும் ஆட்கள் வந்து கேட்க ஆரம்பித்தனர், டோலி தூக்குபவர்கள் அத்தனைப்பேரும் 'தமிழர்கள் ' என்பது குறிப்பிடத்தக்கது. தேவஸ்தானத்தில் லைசன்ஸ் பெற்று இந்த வேலையை செய்வதாக சொன்னார்கள்.  ஒரு டொலிக்கு தூக்குபவர் 4 பேர், 5000 ரூபாய் கேட்கிறார்கள். மிக சிரமமான வேலைதான்.  தமிழர்கள் கேரளாவில் செருப்பு தைப்பதும், இப்படி சுமைத்தூக்கும் வேலைசெய்வதும், மும்பையில் கூலிக்கு வேலை செய்வதும் பார்க்கும் போது எனக்கு மிகுந்த அவமானமாக இருக்கும், இதே வேலையை ஏன் இவர்கள் தமிழ்நாட்டிலேயே செய்யக்கூடாதுன்னு தோணும். எதுக்கும் பிரயோசனம் இல்லாத என் ஆதங்கத்தையும் கோவத்தையும் தூக்கி அப்படிக்கா வச்சிட்டு, பிரயாணத்தை பார்ப்போம்.

முதலில் என்னை அனுமதிப்பார்களா எனப்பார்க்கலாம், அப்படியே அனுமதித்தாலும் நடந்து தான் போவோம், அதனால் டோலி தேவையில்லை என மறுத்துவிட்டு, பம்பை ஆற்றை நோக்கி நடந்தோம்.  சற்று தூரத்தில், மஃப்ட்டியில் இருந்த பெண் போலிஸ்  என்னை நெருங்கி என்னுடன் நடந்தவாரே, எதற்கு வந்திருக்கிறேன் என ரகசியமாக, சத்தமில்லாமல் கேட்க, உடனே ஆதார் கார்ட்டையும், மருத்துவ ரெக்கார்ட் களையும் காட்டினோம், ஃபோட்டோ எடுத்து, வாட்சப் பில் பெரிய ஆபிசருக்கு அனுப்பி, பதில் வந்ததும், 'நீங்கள்  செல்ல அனுமதியில்ல, அவர் மட்டும் செல்லட்டும், நீங்க கணபதி கோயில்ல உட்கார்ந்திருங்க' ன்னு சொல்லவும், திரும்ப நாங்க எத்தனை கேட்டும் அதே பதிலே வந்ததால், சரிங்க'ன்னு சொல்லிட்டு ஆற்றுக்கு வந்தோம்.

பம்பை, ஒரே குப்பை, மூழ்கி எழுந்தால் குப்பையும் துணியும் தலையில் மாட்டியிருக்கும், சில நேரம் மலம் கூட மிதந்து வரும்னு அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் தற்போது அப்படியில்லை. சமீபத்தில் வந்த வெள்ளத்தில் எல்லா அழுக்கும், அசிங்கங்களும் அடித்து செல்லப்பட்டு,  சுத்தமாக கண்ணாடி மாதிரி தண்ணீர் மின்னியது.  உள்ளேயிருக்கும் குழாங்கற்களும், மணலும் பளீச்சின்னு தெரிய, நீரோட்டம் வேகமாக இருந்தது. கால் வைத்ததும், சில்லுன்னு உடல் நடுங்க ஆரம்பிச்சித்து. நான்  படியில் அமர்ந்து மெது மெதுவாக ஒவ்வொரு படியாக கீழே இறங்கி உட்கார்ந்து குளிக்க ஆரம்பித்தேன். என் கணவரோ தண்ணீரின் வேகத்தில் நிற்க முடியாமல், நீரோட்டத்தோடு நகர ஆரம்பித்தார். அவ்வப்போது அவரை இழுத்து ப்பிடித்து, 'பிடிச்சிக்கிட்டு குளிங்க'ன்னு அவர் கையை வலுக்கட்டாயமாக இழுத்துப்பிடித்துக்கொண்டே நானும் குளித்தேன். அவரோ என் கையை விடுவிச்சி, நின்ற இடத்தில் குதிப்பதும், உட்காருவதும், நீரோட்டதோடு ஓடி திரும்ப நான் இழுப்பதுமாக குளித்தார்.  இருவருக்குமே எழுந்துவர மனசேயில்ல. அப்படியோரு நீரோட்டம். நேரம் அப்படியே நிற்குமா.. மேலே சென்று திரும்ப வேண்டுமே... 

மனசில்லாமல் எழுந்து, துணி மாற்றி, கணபதிகோயிலை சென்று அடையும் போது மணி 10 ஆகியிருந்தது, களைப்பு ஏற்பட்டால் சாப்பிட பிஸ்கெட் சாக்லேட் வாங்கிக்கொண்டு, வேக வேகமாக மலையேற செல்லும் பாதை நோக்கி சென்றோம்,  மஃப்ட்டி போலீஸ் அம்மா என்னை பின் தொடர்ந்து வந்து வழிமறித்தார்....


தொடரும் .......