முதல் பதிவு - பயணக்குறிப்புகள் -சபரிமலை-அச்சன்கோயில்-ஆலப்புழா
'ஐடி ப்ரூஃவ் காட்டுங்க'
ஆதார் & மருத்துவக்கோப்புகளை காட்டினோம்,
'இருங்க, பெரிய ஆபிசர் ட்ட பேசிட்டு வரேன்னு' போனார்,பார்த்துக்கொண்டே இருந்தோம். வெகு நேரம் பேசினார்.
திரும்ப வரும்போது, கூடவே ஜீப்பிலிருந்த பெரிய போலிஸ், ட்ரைவர் சீட்டில் இருந்த போலிஸ், எங்கிருந்தோ ஒரு நடுத்தர வயது யுனீஃபார்ம் போட்ட போலீஸம்மா, எங்கள் பின்பக்கமிருந்து இரண்டு போலீஸ் என 6 பேர் ஒரே சமயத்தில் எங்களை ரவுண்டு கட்டினர்.
மஃப்ட்டி பெண் போலீஸ் மலையாளத்தில் பேச ஆரம்பித்தார்
'மேடம்........ 50 வயது ஆனால் தான் போகமுடியும், நீங்க இப்ப போகமுடியாது, சார் வரைக்கும் போயிட்டு வரட்டும், நீங்க இங்கவே இருங்க'....
உடனே பெரிய போலீஸ், 'இங்கப்பாருங்கம்மா, உங்களை அனுப்புவதில் எங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லை, நடு வழியில் மலையாள சாமிகள் பிரச்சனை செய்வாங்க, ரொம்ப சிரமம் ஆயிடும், உங்களால மேலயும் போகமுடியாது, கீழவும் திரும்ப வரமுடியாது. '
நடுவில் இன்னொரு போலிஸ், 'நீங்க எங்கிருந்து வரீங்க' என்றார். 'சென்னை 'னு சொன்னதும், 'தமிழா 'ன்னு தமிழில் பேச ஆரம்பித்தார்.
'மேல ஏறவிடாமல் தடுப்பாங்க, உங்களை கல்லால் அடிப்பாங்க, கட்டையால் அடிப்பாங்க, கோஷம் போடுவாங்க.. எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது, முடியுமென்றாலும், பிரச்சனையாகும், மீடியா வேற ரெடியா காத்துக்கிட்டு படம் பிடிப்பாங்க, உங்களுக்குதான் கஷ்டம் 'என்றார்,
அந்த நடுத்தர வயது போலீஸ்ம்மா, அவங்க பங்குக்கு பயமுறித்தினார்.
திரும்பவும் பெரிய போலீஸ் '50 வயசு ஆனவுடன் வாங்க.., யாரும் உங்களைத் தடுக்க முடியாது.. நீங்க போயிட்டு வரலாம்' சொல்லிவிட்டு மென்மையாக சிரித்தார்.
'மேல பிரச்சனை செய்வாங்கன்னு சொல்றீங்களே அவங்க, ஐடி கார்ட் கேட்பாங்களா?? என்றேன்.
மஃப்ட்டியும், தமிழும் 'கேட்பாங்க' என்றனர்.
'அப்ப சரி அவங்கக்கிட்ட என் மருத்துவ ரெக்கார்ட் காமிக்கிறேன், அப்ப போக சொல்லி விட்ருவாங்கில்ல' என்றேன்.
உடனே பெரிய போலீஸ் முகம் மாறியது. 'நீங்க என்னசொன்னாலும் விடமாட்டாங்கம்மா, புரிஞ்சிக்கோங்க.. 50 வயசானவுடனே வாங்க, யாரும் உங்களை தடுக்க முடியாது. தைரியமா போலாம்.' என்று வராத சிரிப்பை வரவழித்து சிரித்தார்.
இப்படியே இவங்களோடு பேசிக்கிட்டு இருப்பதில் பிரயோசனமில்ல, மேல போயிட்டு திரும்ப வந்து, நாங்க வீடு திரும்பனும், நேரமில்லன்னு மனசுல நினைச்சிக்கிட்டு,
'இத்தனை பிரச்சனையோடு சாமி ப்பார்க்கனும்னு இல்லீங்க, கோயிலுக்கு வரதே அமைதிக்காகவும், நிம்மதிக்காகவும், இதுல இதெல்லாம் தேவையில்லாத வேல, அவர் போயிட்டு வரட்டும், நான் எங்கே காத்திருக்கனும்? " என்றேன்.
'இந்த மண்டபத்திலேயே உக்காருங்க, எங்க கூடவே வேணும்னாலும் உக்காந்துக்கோங்க' என்றார் பெண் மஃப்ட்டி.
'அவர் சென்று வர எவ்வளவு நேரமாகும்?? ' என்றேன்
'3-4 மணி நேரம் ஆகும்... .'. என்றார் பெரிய போலிஸ்
என்னை அனுப்பாவிட்டால், என்ன செய்வதென, தோளில் மாட்டும் சின்னப்பையில், அவருக்கு ஒரு மாற்று உடை, சாக்லெட், பிஸ்கேட், தண்ணீர், சின்ன டவல், கொடை வைத்து எடுத்து வந்திருந்தேன்.. அதை அவரிடம் கொடுத்து, 'நீங்க கிளம்புங்க' னு அனுப்பியபோது காலை மணி 10.30.
மற்ற பைகளை எடுத்துக்கொண்டு மஃப்ட்டி போலிஸ் பின்னாடி நடந்தேன். அவர்கள் எல்லோரும் அமர்ந்திருந்த பெஞ்சின் அருகில் இருந்த நாற்காலியில் அமர சொல்லி கைக்காட்டினார். மறுத்துவிட்டு, காலியாக இருந்த ஒரு தூணின் அருகில், துணியை விரித்துப்போட்டு அமர்ந்துக்கொண்டேன்.
**********
முதல் போலிஸ் அம்மாவிலிருந்து கடைசியாக என்னிடம் பேசிய போலிஸ் அதிகாரிகள் வரை, எங்களிடம் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதே இங்கு பதியப்பட வேண்டிய விசயம்
நீதிமன்ற உத்தரவு, அதை தொடர்ந்த பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தரிசனத்திற்கு வருகின்ற பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என நன்றாகவே பயிற்சிக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் கூட, அதிர்ந்து பேசவில்லை, புன்னகையோடு, சத்தமில்லாமல், பக்குவமாக பேசினர்.
"Way of approach" னு சொல்லுவோமே அதை உணர முடிந்தது. போலிஸ் அதிகாரம், அவர்கள் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்ற தொனி இல்லை.
தவிர, நம்மிடம் பேசி, நாம் எப்படிப்பட்டவர், பெண் புரட்சியாளரா? புரட்சி செய்ய வந்திருக்கிறோமா?? நம்மால் அங்கு பிரச்சனை ஏற்பட வாய்பிருக்கிறதா? மீடியாவை அழைத்து விடுவோமா?? போன்றவற்றை கிரகித்து, அப்படியான அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடாமல், சாதுரியமாக பேசுகின்றனர்.
யாரும் அறியாமல் மஃப்ட்டியில், ரகசியமாக காதோடு பேசுவதுக்கூட, அங்கிருக்கும் பக்தர்களும், கேரள சாமி/ஆசாமிகளின் கவனம் எங்கள் மீது திரும்பாமல் இருக்கவே என ஊகித்தேன். .
அங்கிருந்து புறம்படும் வரை, போலீஸ் என்மேல் ஒரு கண் வைத்திருந்தினர். அது மட்டும் ஏன்னு என்னால் ஊகிக்க முடியல...
**********
மண்டபத்தில், என்னைப்போல அமர்ந்திருந்த இரண்டு தெலுங்கு பெண்கள் என்னிடம் வயதைக்கேட்டனர், கேட்ட மாத்திரத்தில், சிரித்துக்கொண்டே ' 50 வயசானாதான் விடுவாங்க, எங்க கூட வந்தவங்க மேல போயிருங்காங்க, அவங்களுக்காக தான் காத்திருக்கோம் .' னு சொல்லிவிட்டு, என் பதிலை எதிர்ப்பார்த்தனர்.
புன்னகையை பதிலாக்கிவிட்டு, பைகளை ஒன்றோடு ஒன்றுபிணைந்து, மேலே என் துப்பட்டாவை சுற்றி, கையை அதுமேல் வைத்துக்கொண்டு, தூணில் சாய்ந்து தூங்கிப்போனேன். தூங்கலாம்அல்லது வேடிக்கை ப்பார்க்கலாம் இதைத்தவிர, தனியாக அங்கே வேறேதும் செய்வதற்கில்லை.
ஒரு தாத்தா சாமி 60+ இருக்கும், நடக்க முடியாமல் சாய்ந்து சாய்ந்து நடந்து வந்தவர், பேச்சுக்கொடுத்தார்.
'அம்மா, என் பையை கொஞ்சம் பார்த்துக்கறீங்களா ? ராத்திரி தங்க ரூம் பார்த்துட்டு வரேன்'
'சரி.. போயிட்டு வாங்க ...'
கொஞ்ச நேரம் கழித்து வந்தார். 'எல்லா இடத்திலும் விசாரிச்சிட்டேன், ரூம் எதுமே கிடைக்கல. உங்கள முதல்ல பார்த்தப்ப மலையாளம்னு நினைச்சேன், நீங்க பதில் சொன்னப்பிறகு தான் தமிழ்னு தெரிஞ்சிக்கிட்டேன் ...'
'ஓ அப்படியா... கீழ ரூம் இருந்ததே..பம்பை ஆறு பக்கத்தில்..... விசாரிச்சீங்களா... '
அது டாய்லட் 'டோட சேர்ந்திருக்கு... அங்க தங்க முடியாது ஒரே நாத்தம்... னு முகம் சுளித்தார்.
'நீங்க சுவாமி பார்த்துட்டீங்களா..'
'காலையில் 4.30 க்கு போயிட்டு 10.30 வந்துட்டேன்...'
'ஹும், விடிய காத்தாலன்னா ஈசியா ஏறமுடியும்....'
'உங்களை எல்லாம் அனுப்ப மாட்டாங்க... என்ன ஒரு 40 வயசு இருக்குமா உங்களுக்கு.?.. நீங்கெல்லாம் மேல ஏறினா.. ஏறும் போதே மென்சஸ் வந்துடுமே... அதான் விடமாட்டாங்க. இந்த சாமிக்கிட்ட அப்படியெல்லாம் விளையாடக்கூடாது.
.............. ( இந்த கிழத்துக்கிட்ட உசாரா பேசனும், வயசானவர்னு பாவம் பாக்கக்கூடாதுன்னு முடிவு செய்துக்கிட்டேன்)
அப்புறம் ராத்திரிக்கு என்ன நாஷ்டா... ??
ஞே.... !! (ராத்திரியா? யோவ் தாத்தா.. நான் மதியமே சாப்பிடல..இதுல ராத்திரிக்கா?) 'என்னோட ஹஸ்பென்ட் மலைக்கு போயிருக்கார், இப்ப வந்துடுவார், நாங்க ராத்திரி தங்க மாட்டோம்.'
'யாரு அந்த பால்ட் ஹெட் ஆ ?'
(ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...) இல்லீங்க..தலையில் முடி இருக்கும்..'
'ராத்திரியெல்லாம் திரும்ப மாட்டார், இப்பதான் என் கூட வந்தவங்க ஃபோன் செய்தாங்க, ஓணம் பூஜையாம், சாமிய பாக்க முடியலையாம், எப்ப திறப்பாங்கன்னு தெரியலையாம். விடிய விடிய பூஜை நடக்கும், அவரு வரமாட்டாரு....'
லேசாக நெஞ்சை பிசைய ஆரம்பிச்சது.. இந்த கிழம் சொல்றது உண்மையா? ஃபோனும் சிக்னல் கிடைக்கல, இந்தாள் ஃபோன் மட்டும் எப்படி சிக்னல் கிடைக்குதுன்னு தெரியல, போலிஸ் கூட வாக்கி டாக்கி தான் வச்சி இருக்காங்க. ராத்திரியாகிடுமோ??? இப்பவே மண்டப்பத்தில் கூட்டம் கம்மி ஆகிட்டே வருது, போக போக எப்படி இங்க உக்காந்துட்டு இருக்கறது.. ன்னு உள்ள இருக்க கலவரத்தை வெளியில் காட்டாமல்,
'என்ன ஆனாலும் வந்துடுவாரு, ராத்திரி அங்க தங்கமாட்டாரு '
'ராத்திரி இங்க தனியா உக்காந்திருந்தா.. சேஃப் கிடையாது.. ரேப் பண்ணிடுவாங்க '
ஷ்ஷ்ஷ்.. இந்தாளோட... 'ஒஹோ?'
என்னோட இந்த ரியாக்ஷனை கிழவன் எதிர்ப்பார்க்கல.
எதிர்ப்பார்த்தது என்னவோ... '..அய்யயோ ரேப் பண்ணிடுவாங்களா? எப்படி இங்க தனியா உக்காந்து இருக்கறது, எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா.... 'நீங்க ரூம் எடுத்தா, என் ஹஸ்பன்ட் வரும் வர உங்களோட நானும் ரூம் ல வந்து இருக்கவா?, நாம இரண்டு பேரும் ஒன்னா நாஷ்டா சாப்பிடலாம்.. ஹி ஹி.ஹி...'
அந்த கிழவனின் நல்ல நேரம், அதற்கு மேல் பேசமுடியாமல், மேலேருந்து அந்தாளோட வந்தக்கூட்டம் நீயும் வந்துடுன்னு பிரஷர் கொடுக்க, வேற வழியில்லாமல், முட்டி வலியால், மலை ஏற முடியாமல், டோலி க்கு 5000 ரூ பேசி, மூட்டை முடிச்சை த்தூக்கிக்கிட்டு போய் சேர்ந்தார்.
ஒருத்தனுக்கு ஏன்ச்சே நடக்க முடியலையாம்......
இந்த கிழம் மட்டும் தமிழா இல்லாட்டி, நேரா போலிஸ் கிட்ட தான் போயிருப்பேன். இவனையெல்லாம் தாத்தா ன்னு கூப்பிட்டு பாசத்தைக்காட்ட வீட்டுல பேரக்குழந்தைகள் இருக்கும், நாசமா போனவன்..
தனியா ஒரு பெண் இருந்தால், இப்படி பேசி செட் ஆகுமான்னு பாக்கத்தான் ஆண்கள் நினைக்கிறார்கள். இதற்கு வயது வித்தியாசமே இல்லை. சின்னப்பசங்க க்கூட கொஞ்சம் பயப்படுவாங்க..ஆனா இந்த கிழங்க இருக்கே.... இத்தனைக்கும் யாரோடும் நான் பேசல, தூங்கினேன், முழிச்சிட்டு இருந்த நேரம் வேடிக்கைப்பார்த்துட்டு இருந்தேன்... ஹூம்... எங்க இருந்தாலும், இப்படியான ஆட்களை சமாளிக்க தான் தைரியம் தேவைப்படுகிறது.
மதியம் 2.45 இருக்கும், என் கணவர் திரும்பி வந்தார்...
தொடரும்.....