எங்க வீட்டு சமையல் - ஸ்டஃப்ட் சப்பாத்தி

தினம் இரவில் சப்பாத்தி தான் உணவு என்றாகிவிட்டது. இதற்கு தொட்டுக்கொள்ளும் உணவை எப்படி மாற்றி மாற்றி செய்தாலும், ஒரு சில சமயங்களில் சப்பாத்தியை சாப்பிட சளிப்பு ஏற்படுகிறது. அதனால் நடுநடுவில் ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்வேன்.

குறிப்பு.: இந்த பதிவில் முள்ளங்கியை வைத்து ஸ்டஃப்ட் செய்ததை எழுதியிருக்கேன்.   முள்ளங்கி தவிர, கோஸ், கேரட், வெந்தையக்கீரை, அரைக்கீரை, பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃபெளவர், சுரக்காய், பீர்க்கங்காய் என எதில் வேண்டுமேனாலும் உங்களின் விருப்பப்படி செய்யலாம். ஆனால் ஒவ்வொன்றின் செய்முறையும் தேவையான பொருட்களும் அந்தந்த காய்கறி, கீரைக்கு தகுந்த மாதிரி மாறும்.   

ஸ்டப்ஃட் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள் :

சப்பாத்தி செய்ய : 

கோதுமை மாவு - 2 கப்
எண்ணெய் - 1-2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

மசாலா செய்ய :

வெள்ளை (அ) சிகப்பு முள்ளங்கி : 3 
வெங்காயம் : 1 
பூண்டு : 4-5 பல்
இஞ்சி - சின்னத்துண்டு
பச்சைமிளகாய் - 1 
மஞ்சள் தூள் : ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் :- 1 1/2 ஸ்பூன் (தனியா, மிளகாய் கலந்தத்தூள்)
எண்ணெய் : 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை : சிறிது
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :  கோதுமை மாவை தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துவிடவும்.

முள்ளங்கியை கேரட் சீவலில் சீவி வைத்துக்கொள்ளவும், அதன் கூடவே இஞ்சி, பூண்டையும் பொடியாக சீவி கலந்து வைத்துக்கொள்ளவும்.
மைக்ரோவேவ் அவன் (Oven) கண்ணாடி கிண்ணத்தில் எண்ணெய் விட்டு 30 செகண்ட் சூடு செய்யவும். சூடானவுடன் வெளியில் எடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கலந்து 1-2 நிமிடம் சூட்டில் வைக்கவும். வெங்காயம் வதங்கியிருக்கும், இத்துடன் முள்ளங்கி, இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலக்கி 8 நிமிடங்கள் சூட்டில் வைக்கவும். நடுவில் ஒருமுறை நிறுத்தி கலக்கிவிடவும்.


கடைசியாக, கிண்ணத்தை வெளியில் எடுத்தப்பிறகு, பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து கலக்கி விடவும்.

சப்பாத்தி மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்து, படம் 1 ல் உள்ளது போல உருட்டி, அதன் மேல் முள்ளங்கி மசாலாவை வைத்து, படம் 2 ல் உள்ளது போல மடக்கி, படம் 3 ல் உள்ளது போல மிருதுவாக மெதுவாக
உருட்டவும். சப்பாத்தி உருட்டும் குழவி மெல்லியதாக இருந்தால், இந்த ஸ்டஃப்ட் சப்பாத்தியை உருட்டுவது எளிது, மசாலா வெளியில் வராமல் உருட்ட முடியும். 
தோசைக்கல்லை சூடாக்கி,  சப்பாத்தியை இட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு, நன்கு வெந்ததும் எடுக்கவும்.  இதற்கு தொட்டுக்கொள்ள எதும் தேவையிருக்காது. ஒரு வேளை தேவைப்பட்டால் ஊறுகாய் வகைகள் நன்றாக இருக்கும்.

 அணில் குட்டி : பாவம் அம்மணி ஊட்டுக்காரு, அம்மணி என்னைக்கு ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்யறாங்க.. என்னைக்கு வெறும் சப்பாத்தி செய்யறாங்கன்னு தெரியாம..  ஸ்டஃப்ட் சப்பாத்தியை தட்டில் வச்சிக்கிட்டு "தொட்டுக்க எங்க" ன்னு கேட்டு நல்லா வாங்கிக்கட்டிக்குவாரு... :)

பீட்டர் தாத்ஸ் :  “There is no spectacle on earth more appealing than that of a beautiful woman in the act of cooking dinner for someone she loves.”  ― Thomas Wolfe

பென்சில் சீவலின் மிச்சத்தில் வரைந்த படங்கள்...









மேலுள்ளவைகளை வரைவதற்கு முன் அவற்றின் படங்கள் : 

பென்சில் சீவி எடுத்த மிச்சத்தை வைத்து எதையோ செய்ய போனேன்...அதை செய்து முடிக்கும் போது...இதிலிருந்து ஏதாவது உருவம் செய்யலாம் போலவே'ன்னு யோசனை வர கூகுளில் தேடினேன்..நிறைய ஐடியா கிடைச்சது.. அதையும் பயன்படுத்திக்கிட்டேன்..நானும் கூட சிலதை வரைந்துப்பார்த்தேன்...  பிறகு புகைப்படங்கள் எடுத்து அவற்றை MSpaint டில் கற்பனைக்கேற்ற படங்களாக வரைந்தேன். டிசைன்ஸ் நல்லாவே வந்தது.... (நாமே சொல்லாட்டி எப்படி?)

உங்களுக்கும் பென்சில் சீவலிலிருந்து புதுசா டிசைன் வரைய ஐடியா கிடைத்தால் சொல்லுங்க .. வரைந்துப்பார்ப்போம்!.  உங்க வீட்டு குட்டீஸ்'க்கு காட்டுங்க, அவர்களிடம் நிறையவே ஐடியா கிடைக்கும்.. அவற்றை இங்கே பகிரவும்...

அணில் குட்டி : ம்க்கும்...இதை செய்யறேன் அதை செய்யறேன்னு, பென்சிலை சீவி சீவிப்போட்டு, அது பாட்டுக்கும் ஃபேன் காத்தில் பறந்து அங்க இங்கன்னு வீடுப்பூராவும் ஒரே குப்பை....அம்மணி அதையெல்லாம் கண்டுக்காம தீவிரமா படம் வரைய..பாவம் அவங்க வூட்டுக்காரு.. பொறுக்கமுடியாம ஒவ்வொன்னா எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுக்கிட்டு இருந்தார்.... இதையெல்லாம் இந்தம்மா வெளியில் சொல்ல மாட்டாங்களே... ??!!

பீட்டர் தாத்ஸ் : “Art doesn’t have to be pretty. It has to be meaningful.” ~Duane Hanson

Thx : Google.

ராஜநாகம்

25 வருடங்களாக  ராஜநாகத்தை’ (King Cobra) ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், இந்தியாவின் மேற்குப்பகுதியில், கர்நாடக காடுகளில் தன் ஆராய்ச்சியை தொடர வருகிறார். இந்திய மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் உடன் பணி செய்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட வேலையாக, ஆண், பெண் என இரண்டு ராஜ நாகங்களை, காடுகளில் மிகுந்த சிரமங்கங்களுக்கிடையில் தேடி பிடிக்கின்றனர். பிடிக்கப்பட்ட நாகங்கள் இரண்டிற்கும் மயக்கம் செலுத்தப்பட்டு, அவற்றின் உடலில் பாம்புகள் இருக்குமிடத்தை காட்டக்கூடிய இண்டிக்கேட்டர் பொறுத்தப்படுகிறது. 

மயக்கம் தெளிந்து, உடல்நிலை சீரான இரண்டு ராஜநாகங்களும்,  பிடிக்கப்பட்ட இடத்தை விடுத்து, வெகுதூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, காட்டில் வெவ்வேறு இடங்களில் விடப்படுகின்றன. இரண்டையும்
ஆராய்ச்சியாளர்கள், இண்டிகேட்டரின் உதவியோடு பின் தொடர்கின்றனர். இரண்டு ராஜநாகங்களும் தன் இறையைத்தேடுவதோடு, தன் துணையையும் தேடுகின்றன.  ஒரு கட்டத்தில் காதலன் காதலி இரண்டும் சந்திக்கின்றன. இரண்டும் கூடி சந்தோஷமாக இருக்கின்றன. பெண் ராஜநாகம் கருவுகிறது. 
இந்நிலையில், வேறொரு இடத்திலிருந்து வரும், ஒரு ஆண் ராஜநாகம்(2) இவ்விடத்தில் குடியேற முனைக்கிறது. அப்படி புது இடத்தில் குடியேற நினைக்கும் ராஜநாகம்(2), அங்கு ஏற்கெனவே இருக்கும் ஆண் ராஜநாகத்தோடு(1) சண்டையிட்டு, அதனை வெற்றிப்பெற்றால் தான் குடியேற முடியும். அதனால், இந்த புதிய ஆண் ராஜநாகமும்(2), அங்கு முன்னமே இருக்கும் ஆண் ராஜநாகமும்(1) –(இண்டிகேட்டர் பொறுத்தப்பட்ட) சண்டையிட தொடங்குகின்றன. 2-3 மணி நேரம் நடைபெறும் இந்த பெரிய ஆக்ரோஷமான யுத்தத்தின் முடிவில், புதிய ராஜநாகம்(2) வெற்றிப்பெற்று அந்த இடத்தில் வெற்றிக்களிப்போடு குடியேறுகிறது.

இந்த புதிய ராஜநாகம்(2), அங்கிருக்கும் பெண் ராஜ நாகத்தை சந்திக்கிறது. அதன் மேல் மையல் கொண்டு தன் இச்சையை வெளிப்படுத்துகிறது. ஆனால்,  அதற்கு அடிபணிய மறுக்கும் பெண் ராஜநாகம், அதனை விட்டு விலகிசெல்கிறது. ஆனால் விடாமல் துரத்தும் புதிய ஆண் ராஜநாகம், கெஞ்சியும் கொஞ்சியும் மிகவும் நாகரீகமான முறையில் தன் ஆசைக்கு
இணங்க வைக்க எல்லாவிதமான முயற்சியும் செய்கிறது.

பெண் ராஜநாகமோ, தன் காதலனின் கருமுட்டைகளை சுமந்துக் கொண்டிருப்பதால் புதிய ஆண் ராஜநாகத்தை அறவே வெறுத்து ஒதுக்குகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொறுமை இழக்கும் ஆண் ராஜநாகம், கோபம் கொண்டு வெறித்தனமாக அந்த பெண் ராஜநாகத்தை மிகச்சரியாக அதன் கழுத்தில் கடித்து, கொஞ்சம் கொஞ்சமாக துடிதுடிக்க சாகடிக்கிறது. சிறிது நேரப்போராட்டத்திற்கு பிறகு பெண் ராஜநாகம் இறந்தேப்போகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண் ராஜநாகத்தின் வயிற்றை அறுத்துப்பார்க்கையில் அதனுள் 17 முட்டைகள் இருந்தன. இந்த இறந்த நாகத்தை நெருப்பு மூட்டி  எரித்துவிடுகின்றனர்.

பின்னர், அதே காட்டில் புதிய ராஜநாகத்தின் மூலமாக கருவுற்ற வேறொரு பெண் ராஜநாகம் 21 முட்டைகளை இட்டு, அதை அடைக்காக்க காய்ந்த மூங்கில் தழைகளையும், இலைகளையும் ஒரு அடி உயரத்திற்கு குவித்து, முட்டைகளுக்கு தேவையான சீதோஷனநிலையை உருவாக்கி அவற்றிற்கு பாதுக்காப்பாக அங்கேயே இருக்கிறது.

இப்படியாக முடிவுபெறும் இந்த ராஜநாகத்தின் ஆராய்ச்சி கதையை "நேட் ஜியோ" வில் பார்த்த போது, காதலன் பாம்பு காதலியை தேடும் போதும், அவற்றின் தவிப்புகளும், தேடிக் கிடைத்தப்பின் அவற்றின் காதல் லீலைகளும், இரு ஆண் ராஜநாகங்களுக்கு இடையே நடக்கும் சில மணி நேர நிஜமான யுத்தமும், பின்பு பெண் ராஜநாகத்தை கொல்லும் போது ஆண் ராஜநாகத்தின் வெறித்தனத்தையும் பார்க்கையில் ஒரு வித பதட்டமும் ஆச்சரியமும் ஏற்படாமல் இல்லை.

சிறந்த திரைக்கதையில் அமைந்த ஒரு தமிழ் புராணக்கதை பார்த்தது போன்றே இருந்தது.  இது இப்பவும் நடக்கும் உண்மை சம்பவம் என்பதை அறிவுஏற்றுக்கொள்ள நேரம் பிடித்தது. 

ஆண்’ என்பவன், இந்த உலகத்தில் எந்த ஜீவராசி வடிவில் பிறந்திருந்தாலும் அதீத வீரத்தோடும், பெண்ணை அடக்கி ஆள்பவனாகவும், அடிமைப்படுத்துபவனாகவும், அதே சமயம் அவனே பெண்ணிற்கு சிறந்த பாதுகாப்பாளனாகவும் இருக்கிறான். இதை இயற்கையின் படைப்பில் ஒன்றாகவே பார்க்கவேண்டுமே ஒழிய.... பெண்ணீய பிதற்றல்களோடு பார்த்து..... .....அடடே  சப்ஜெக்ட் மாறுதே....?!!... ராஜநாகத்திற்கு வருவோம். 

ராஜநாகங்களைப் பற்றிய சில தகவல்கள் : 

ராஜநாகங்கள், 300 அடி தொலைவுக்குள் தன் இறையை பார்க்கும் வலிமைப்பெற்றது.  இவற்றிற்கு மிகவும் பிடித்த உணவு மற்ற பாம்பினங்களே. 

இவை, நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்கி, மயக்கத்தை உண்டாக்கி, தூக்க நிலைக்கு செல்லவைத்து பிறகு இறக்கவைக்கும் விஷத்தன்மை கொண்டவை. 

ராஜநாகங்கள், மிக அறிதாகவே மனிதர்களை தாக்குக்கிறது. அதேசமயம்,  யானையை ஒரே கடியில் சாய்க்குமளவுக்கு தன்னுள் கடுமையான விஷத்தைப்பெற்றவை. அவ்விஷமானது ஒரே நேரத்தில் 20 மனிதர்களை சாகடிக்க வல்லவை. 

தன் உடலின் நீளத்தில், மூன்றில் ஒரு பங்கு உடலை தூக்கி நிற்ககூடியது. 

மேற்கிந்தியாவில் அதிகமாக ராஜநாகங்கள் காணப்படுகின்றன. 

காய்ந்த இலைகள், காய்ந்த மூங்கில் தழைகளைக்கொண்டு தன் முட்டைகளை மூடி அதற்கு தேவையான சீதோஷன நிலையை உருவாக்குகின்றது.  இதனை ஒரு மலைப்போல ஒரு அடி உயரத்திற்கு முட்டைகளின் மேல் கூட்டிவைத்து தன் முட்டைகளை காக்கிறது. 

அதிகபட்சமாக 24 முட்டைவரை இடக்கூடியவை, ஆனால் எத்தனை முட்டைகள் இட்டாலும், அவற்றில் பிழைத்து வருவது என்னவோ 1-2 ராஜநாகங்கள் மட்டுமே.

நன்றி : நேட் ஜியோ & கூகுள்.

அணில் குட்டி : ம்ம்ம்...இனி இப்படியெல்லாம் வேற பதிவு வருமோ ?! டிவி கேபிள் ஒயரை முதல்ல புடுங்கிவுடனும்... 

பீட்டர் தாத்ஸ் : Owing to ignorance of the rope the rope appears to be a snake; owing to ignorance of the Self the transient state arises of the individualized, limited, phenomenal aspect of the Self.- Guru Nanak

கணினி ஓவியங்கள்

 ஆற்றோரம் குடிசை, அத்தோடு இணைந்த வாழ்க்கை என என் கனவுகளில் வரும் இந்த காட்சியை சின்ன வயதிலிருந்தே அடிக்கடி வரைந்து வைத்து அழகுப்பார்ப்பேன். இப்போது பெயின்ட் பிரெஷ்ஷில் தொடருகிறது....

   கூகுள் கிலிப் ஆர்ட் பார்த்து வரைந்த காப்பி - நாய்க்குட்டி

 பறவை - இதும் கூகுள் க்லிப் ஆர்ட் பார்த்து வரைந்த காப்பி

வினாயகர் சதுர்த்தசி அன்று,  #Ganesh #OneLine #1Min #MsPaint  இப்படியொரு Tag 'ல், G+ ல் , இளா (விவாஜி) ஒரு ஓவியத்தை பதிவிட்டுருந்தார். அட... நாம ஏன் வரைந்துப்பார்க்க கூடாதுன்னு வரைந்தேன்.. என்னுடையது  #Gajananam #OneLine #27 Seconds #MsPaint  - நன்றி விவாஜி

 சில வெள்ளிக்கிழமைகளில் எங்கள் வீட்டு வாசலில் நான் இடும் கோலம்...


கலர்ஃபுல் கிளி..  இதும் கூகுள் இமேஜ் பார்த்து வரைந்ததே.. :)


மற்றுமோர் இயற்கை காட்சி... என் வானிலே...

* MSPaint ல் வரைந்தவை.

அணில் குட்டி : ஆங்...அம்மணி..?!... கூகுள் பார்த்து காப்பி அடிக்க இவ்ளோதானா கிடைச்சது ???

பீட்டர் தாத்ஸ் : Drawing is rather like playing chess: your mind races ahead of the moves that you eventually make - David Hockney