நிசப்த நிமிடங்கள்..

அன்று நாகமணிக்கு முதல் தேர்வு, அறையை கண்டுபிடித்து, செளகரியமாக ஒரு இடத்தைப்பார்த்து அமர்ந்து கொண்டாள். விடைத்தாள் கொடுக்கப்பட்டதும் பூர்த்திசெய்து, கேள்வித்தாளுக்காக காத்திருந்தாள். அப்போது தான் அந்த பெரியவரும் பெண்ணும் உள்ளே நுழைந்தனர்.

பெரியவர் அந்தப்பெண்ணை, நாகமணிக்கு முன் இருந்த காலி இருக்கையை காட்டி அங்கே அமரசொன்னார்.  உட்காரும் முன் பெண் தன் தோளில் மாட்டியிருந்த கைப்பையை பெரியவரிடம் கொடுத்தாள், அவரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு பேசாமல் நின்றாள். பெரியவர் அவளை உட்காரசொல்லிவிட்டு, அறையில் இருந்த சூப்பர்வைசரிடம் அந்த பெண்ணைக்காட்டி ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்தார்.

"இவ்ளோ பெரிய பெண்ணிற்கு தனியாக வந்து அமர்ந்து பரிட்சை எழுதத்தெரியாதா? அதுவும் இது மூணாவது மாடி, அந்த வயதானவரை இங்கு வரை அழைத்து வர வேண்டுமா?" நாகமணியின் மனதுக்குள் எழுந்த தேவையற்ற எரிச்சலின் நடுவே கேள்வித்தாள் வந்தது. அத்தோடு அந்த பெண்ணை மறந்து தேர்வெழுத ஆரம்பித்தாள்.

நாகமணியின் பக்கத்தில் வந்த சூப்பர்வைசர்களில்  ஒருவர் மற்றவரிடம்,  "அந்த பெண்ணிற்கு காது கேட்காது, பேசவும் வராது அதனால் என்ன கேள்வி தாள் வேண்டுமென ஹால் டிக்கட்டைப்பார்த்து கொடு" என்று சொன்னது நாகமணியின் காதில் விழு. "அடடா... இது தெரியாமல் அந்தப் பெண்ணின் மேல் எரிச்சல் பட்டோமே, அந்த பெரியவர் பெண்ணின் அப்பாவாக இருக்கும்... " தனக்குள் உச் கொட்டிக்கொண்டாள்.

தேர்வு முடிந்து வந்து, இரண்டு சக்கர வண்டியை எடுக்கும் போது, அந்த பெண்ணின் நினைவு வர சுற்றி பார்த்தாள், அவள் கண்ணில் தென்படவில்லை. அவளின் நினைவூடே வண்டியை ஓட்டிச்சென்றாள். போரூர் பூந்தமல்லி சாலை, மாலைவேளை போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. பெரிய வாகனங்கள், ஷேர் ஆட்டோ டுபுடுபு சத்தங்களுக்கு நடுவே நாகமணியின் நினைவு மட்டும் அந்தப் பெண்ணைத் துரத்தியது.

ஒரு வேளை அந்த பெண்ணைப்போல தானும் இருந்தால்???? வினாடித்துளிகளில் போரூர் பூந்தமல்லி சாலையில் வாகனம் செல்ல, இவளின் நினைவுகள் படு வேகமாய் அதே சாலையின் வழியே பின்னோக்கி ஓடியது..... பேரூந்துகள், ஷேர் ஆட்டோக்கள், டூவிலர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போக,  இவள் மட்டும் வேக வேகமாய் பின்னோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தாள்......

"நிச்சயம் அப்பா கூட வந்திருக்க வாய்ப்பில்லை. திருமணம் கூட ஆகியிருக்காது, அதனால் கணவரோ அவர் சார்ந்தவர்களோ வந்திருக்க வாய்ப்பேயில்லை. தேர்வெழுத நிச்சயம் நான் தனியாக தான் வந்திருப்பேன், பேசவும் கேட்கவும் முடியாததால், ஒரு காகிதத்தில் நானே என்னைப்பற்றிய குறிப்புகளை எழுதி சூப்பர்வைசருக்கு சைகைக்காட்டி, அதைப்படிக்க செய்திருப்பேன்.......நிச்சயம் நன்றி சொல்ல புன்னகைத்திருப்பேன். வாழ்க்கை இன்னமும் போராட்டம் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.. எல்லாரிடமும் சைகை செய்தே பேசியிருப்பேன், என்னைக்கிண்டல் செய்து பார்த்து சிரிப்பவர்களை பார்த்து விசயமறியாது மரியாதைக்கருதி நானும் சிரித்திருப்பேன். ... இந்தளவு யாரையும் கவனித்திருக்க முடியாது..இப்படி யோசித்திருக்கக்கூட முடியாது...

எல்லாமே நிசப்தம்....ஆமாம்.. நான் நிசப்தம்..என்னை சுற்றிலும் நிசப்தம்...அந்த நிசப்தத்தை சற்றே கண்ணைமூடி ரசிக்க .........."  பின்னோக்கி வேக வேகமாய் ஓடிய நினைவுகளின் வேகம் இரத்த அழுத்தம் சோதிக்கும் போது குறையும் நாடித்துடிப்பை போல குறைந்துக்கொண்டே வந்தது...

வெகு நெருக்கத்தில் "ப்ப்பாம் ப்பாம்ம்ம் "  ..சட்டென்று சாலையில் வந்து குதித்தவளாய்.... அதிர்ச்சியோடு வலதுப்பக்கம் பார்த்தாள்..பெரிய லாரி ஒன்று இவளை ஒட்டி வந்து சத்தமாக ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தது..  சன்னலோரம் அமர்ந்திருந்தவன் எட்டிப்பார்த்து கெட்ட வார்த்தைகளில் எக்கச்சக்கத்து திட்டினான்.....

நாகமணியின் முகம் சுருங்கி, உதடுகள் சத்தமில்லாமல் அசைந்தன... "நிஜமாகவே காதுக்கேட்காமல் பிறந்திருக்கலாமோ.... ?! "



*படங்கள்: நன்றி கூகுள்!

நடுவுல & முன்ன பின்னவும் கொஞ்சம் பக்கத்த காணோம்..!

நவீன் சந்தர் எங்க?

அம்மா நவீன்' மா.. உங்கக்கிட்ட வந்து சொல்லிட்டு தானம்மா போனான். படிக்கப்போயிருக்கான் ம்மா..

ஆங்...ஆமா நீ சொன்னியே.. மறந்துட்டேன்..

நவீன் சந்தர் எப்ப வருவான்?

அம்மா நவீன்'மா.. நவீன்னு சொல்லுங்க..

அவன் பொறந்தப்ப நவீன் சந்தர்னு தானே பேர் வச்சீங்க.. (இதெல்லாம் மட்டும் தெளிவு)

ஆமாம்மா... அப்புறம் நவீன்'னு மாத்திட்டோமே...

ஆங்க்...ஆமாம்மா மறந்துட்டேன்...நவீன் சந்தர் எப்ப வருவான்..?!

அவன் படிக்கனுமா இல்லையா..படிப்பை முடிக்க 2 வருசம் ஆகும்....ஃபோட்டோ பார்க்கறீங்களா?. (மொபைலிலிருந்த அவன் ஃபோட்டோவை எடுத்து காட்டினேன்.. உடனே ஃபோனை வாங்கி..)

ஹல்லோஒ....நவீன் சந்தர்.....எப்ப வருவ???

அம்மா, ஃபோட்டோ பாக்க கொடுத்தேன்...அவன் லைன்ல இல்ல..

நான் சொல்லுவதை துளியும் காதில் வாங்காமல், "ஹல்லோ, நவீன் சந்தர்..அம்மும்மாவை பாக்க எப்படா வர?

ஞே..!!

***************

கவிதா... இவ்ளோ லேட்டா வரியே இப்பதான் அப்பா இங்க வந்துட்டு...அதோ அந்த பக்கமா போனாரு...பாரு......

ஓ..(நானும் அவங்க சொன்ன திசையில் பார்த்துவிட்டு), சரிம்மா அப்புறமா நான் போயி பாக்கறேன் ....

பக்கத்து பெட்டில் துணையிருந்த பெண் : ஏங்க, அப்படி யாரும் இங்க வரலங்க...

தெரியுங்க....அப்பா இறந்து பல வருஷம் ஆச்சிங்க............

ப.பெ.து.பெ: ஞே! 

********************

கவிதா...இங்க வா.... என் பக்கத்தில் உக்காரு... நவீன் சந்தர் ஐ கூட்டிட்டு வர சொன்னேனே...கூட்டிட்டு வரல?

(ஸ்ஸ்ஸ்ஸ்.... ) முதல் பத்திய திரும்ப படித்துக்கொள்ளவும்..

*********************

கையில் போட்டிருந்த வளையல் எங்கம்மா? (திக்க்...)

என் கையில வளையலே போடலியே...

அம்மா..... நாந்தானமா போட்டுவிட்டேன்... எங்கம்ம்ம்ம்மா?

இங்க பாருடி கழுத........என் கையில் வளையலே இல்ல...

இப்ப இல்லம்மா..இதுக்கு முன்ன வளையல் இருந்துச்சே எங்க??

சிஸ்டர் : கவிதா.. கழட்டி வச்சிட்டாங்க.. எடுத்து வச்சி இருக்கேன். இனிமே போட்டுவிடாதே...

தாங்ஸ் சிஸ்டர்..

********************

கவிதா உன் வீட்டுக்கார் எப்ப மும்பை போறாரு... ?

அம்மா, அவர் சென்னை வந்து இரண்டு வருசம் ஆச்சே...மறந்துட்டீங்களா? நவீனோட உங்களை வந்து பார்த்தாரே...

ஆமாம்ம்மா..வந்தாரே...டிரஸ் வாங்கி கொடுத்தாரே..பீச் போனோமே.... (இதெல்லாம் மட்டும் தெளிவு)

அட... பீச் போனது ஞாபக இருக்கா..?

ஏன் இல்ல...(ஒரே சிரிப்பு)...ஐஸ்க்ரீம் வாங்கி தந்தியே... (நெற்றிய சுருக்கிக்கொண்டு) ஆமா அவரு மும்பாய்க்கு எப்ப திரும்ப போறாரு...??

(ஆத்தா முடியல ஆத்தா என்னைவுட்ரூ.)

*************************

லைட்டா ஃபீவர் இருக்கும்மா..

ஆமா...இருக்கு..எனக்கு அப்பவே தெரியுமே....  (சரிங்க டாக்டர்)

சிஸ்டர்கிட்ட மாத்திரை வாங்கி தரவா?

உனக்கேன் இந்த வேல? அவங்க இப்ப வந்து செக் பண்ணிட்டு, அவங்களே மாத்திரை கொடுப்பாங்க. நீ அமைதியா உக்காரு...

சரி..(ங்க டாக்டர்) .:(.

*********************

அம்மா... அம்மா இங்க பாருங்களேன்..நான் சொல்றதை கொஞ்சம் கவனிக்கறீங்களா..?

கவனிச்சிட்டு தான் இருக்கேன் கவிதா..என்ன சொல்லு? (ம்க்கும் கேக்கும் போது தெளிவு தான்)

பாத்ரூம் போனா மறக்காம தண்ணீ ஃப்ளஷ் பண்ணிவிடனும். தண்ணீ  ஊத்தாம வந்தீங்கன்னா..நாத்தம் அடிக்கும்..க்ளீன் பண்றவங்க பாவம் இல்லையா?

நான் என்ன சின்னக்குழந்தையா கவிதா.. உபதேசம் பண்ற...(ஆவ்வ்வ்வ்.......)

சிஸ்டருங்க தினம் கம்ப்ளைட் பண்றாங்கம்மா...உங்க வேலைய நீங்கதான்ம்மா செய்யனும்.. நம்ம வீடு இல்லமா இது ஹாஸ்பிட்டல்....

சரி.... .நானு போயி பாத்ரூம் கழுவி விட்டுட்டு வரட்டா....?!

அய்யோஒ... பாத்ரூம் கழுவ சொல்லல்லமா..நீங்க தண்ணி மட்டும் ஃபள்ஷ் பண்ண மறந்துட்டு வந்துடறீங்க..

இல்லையே........சரியாத்தானே செய்யறேன்...நீ வேணா போயிப்பாரு...

(ஸ்ஸ்ஸ்........இதை இத்தோட முடிச்சிப்போம். அடுத்து சிஸ்டரை சமாளிக்கனும்)  

*************************

பக்கத்து பெட் பாட்டி : கஸ்தூரி, இது யாரூஊ?

அம்மா : என் மக

ப.பெ.பா : பேர் என்ன?

அம்மா : க்க்கவிதாஆஆ

ப.பெ.பா: கவிதா என் பொண்ணாச்சே... நானும் கவிதாவும் இப்ப வெளியில் போகப்போறோம்...

அம்மா : இல்லல்ல கவிதா என் மக.. (என்னை இறுக்கி கட்டிக்கொள்கிறார்)

ப.பெ.பா: என்ன படிக்குது?

அம்மா : அவ எம்.பி.ஏ படிச்சி இருக்கா..


ப.பெ.பா: இதுல எல்லாம் தெளிவாத்தான் இருக்க..ஆனா செத்துப்போன உன் புருஷன் வந்தாரு வந்தாருன்னு சொல்லி எங்க எல்லாத்தையும் ராத்திரியும் பகலுமா ஆட்டி வைக்கறியே தாயீ.....

அம்மா : (ரொம்ப கேஷுவலாக) ஆமா, கெஜானனன் இங்க தான் எப்பவும் இருக்காரு...

ப.பெ.பா: ஞே...!! (பீதியோடு சுத்திப்பார்க்கிறார்)

********************

சிரிக்கவும் முடியாம அழவும் முடியாம ந.கொ.ப.கா நண்பர்கள் போல, பேஎஎஎ...ன்னு...உக்காந்து,  அம்மா பேசறதை வேடிக்கை பார்ப்பது தான் எனக்கு வேலையாப்போச்சி.

அம்மாவிற்கு கொஞ்சம் மாதங்களாக நினைவாற்றலில் அதிக தடுமாற்றம். இப்போது அடிக்கடி அப்பாவை பார்த்ததாக சொல்லுகிறார். மறக்காத எப்போது கேட்டாலும் தடுமாற்றம் இல்லாமல் நினைவில் இருக்கும் ஒரே விசயம், 3 பிள்ளைகள் அதில் 2 ஆண், 1 பெண், பேரக்குழந்தைகளில் நவீன். நவீனை தவிர, அண்ணனின் பிள்ளைகளும் இருக்காங்க. ஏனோ அவங்களைப்பற்றிய நினைவே அம்மாக்கு இல்லை. :(


வீடு, மருத்துவமனை என அம்மாவின் காலம் ஓடுது. நினைவாற்றல் தவிர்த்து வேறு எந்த பெரிய உடல் பிரச்சனையும் இப்போதைக்கு அவங்களுக்கு இல்லாமல் இருப்பது நிம்மதியை தருகிறது. எனினும் குழந்தையாகவே மாறிவிட்டார். சாப்பாடெல்லாம் அப்படித்தான்.  ஏதோ ஒரு சில நேரங்களில் மிகத்தெளிவாகவே ஞாபகசக்தியோடு பேசுகிறார்.  மற்ற நேரத்தில் எல்லாம்..............ம்ம்ம்..தலைப்பை படிங்க...

அணில்குட்டி : அவங்களாச்சும் இந்த வயசுக்கு மேல இப்படி இருக்காங்க.. அம்மணி இப்பவே அப்படித்தான் இருக்காங்க... எப்படியோ ஹாஸ்பிட்டல் போகாமல் வீட்டிலேயே நாங்க சமாளிச்சிக்கறோம்..

பீட்டர் தாத்ஸ் :  At a stage, parents become our children.

சாவு வீடு

அபிராமி நுழையும் போதே கவனித்தாள், ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தளவு நடித்துக்கொண்டிருந்தனர். நெருங்கிய உறவினர் சிலருக்கு நிஜமான துக்கம் இருக்கத்தான் செய்தது, அது அவர்களின் முகத்திலும் தெரிந்தது, இருந்தாலும் சுயநலங்களும் இருந்தன. இறந்தவர் விட்டுச்சென்றவையில் தனக்கு என்ன கிட்டும், கிட்டசெய்ய வேண்டுமென்ற யோசனை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது அவர்களின் கண்களில் தெரிந்தது.

அபிராமிக்கும் இறந்தவர் நெருங்கிய சொந்தம் தான், அப்பாவின் சொந்த தங்கை. ஆனால் ஏதேதோ பிரச்சனைகளை கடந்து, ஒதுங்கி வந்து பல வருடங்களாக யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்தாள். யார் மூலமாகவோ இறந்த விசயத்தை அபிராமி காதில் போட சொல்லியிருந்தனர் உறவினர். நல்லதுக்கு போகாட்டியும் கெட்டதுக்கு தலைக்காட்டனும்னு வந்திருந்தாள்.

அழுகை வரவில்லை. இறந்தவர் உடலுக்கு பக்கத்தில் சென்றாள், பல வருடம் கழித்து உறவினர்கள் சூழ இருந்த ஒரு இடத்தில் இவள் உள்ளே நுழைவதால், அனைவரும் இவளையே கவனித்தனர். இவள் வயதை ஒத்த பெண்களுக்கு அவளின் தலைமுடி, உடல்வாகு, காது, கை, கழுத்து நகைகள் சார்ந்து கவனம் சென்றது. சிலர் அணிந்திருந்த புடவையைக்கூட விட்டுவைக்கவில்லை. பார்வைகள் இவளைத்தொடர்ந்தாலும், இவள் யாரையும் பொருட்படுத்தாமல் இறந்தவரின் காலைத்தொட்டு கும்பிட்டாள். கண்ணை மூடி, அத்தையின் நினைவுகளில் மூழ்கினாள். அப்பாவிற்கு மிகவும் பிடித்த தங்கைகளில் ஒருத்தி, ஆனால் அவளே அதிக வில்லத்தனம் பிற்காலத்தில் செய்தாள் என்பதை நினைத்தபோது கண்கள் பட்டென்று திறந்துக்கொண்டன. ஒருத்துளிக்கூட கண்ணீர் வரவில்லை. சாவு வீடு அழவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக அவளுக்குத்தெரியவில்லை. அழுகைதான் வரவில்லையே. பார்த்தவர்கள் அனைவருக்கும் "கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லையே? சொந்த அண்ணன் பொண்ணு.."  என்ற ஆச்சரியம் இருக்கத்தான் செய்தது.

வருடங்கள் பல ஓடிவிட்டதாலோ என்னவோ யாரும் இவள் பக்கத்தில் வரவில்லை. இவளும் உறவினர்கள் யாரிடமும் செல்லாமல், முகமறியாத சிலர் இருக்கும் திசை நோக்கிச்சென்று அமர்ந்துக்கொண்டாள்.

அப்போதும் விட்டேனே பார் என, அறிமுகம் இல்லாதவர்களும் இவளை விசாரிக்க ஆரம்பித்தனர். எந்தக்கேள்விக்கும் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். கேட்டவர்கள் மனதுக்குள் சபித்தபடி கேள்விகளை நிறுத்திக்கொண்டனர். சற்றே அசுவாசப்படுத்திக்கொண்டு, கண்களால் சுற்றி வட்டமிட ஆரம்பித்தாள்.

அப்போது தான் கவனித்தாள். பேரூந்தில் இவளுடன் பயணம் செய்த இரண்டு பெண்கள் அங்கு தென்பட்டனர். பேரூந்தில் அவர்கள் பேசி வந்தது நினைவுக்கு வந்தது.

"அக்கா, சாவு வீட்டுக்கு போறோம்..எதுக்குக்கா நெக்லஸ்..உள்ள வச்சிடேன்..திரும்ப வரும்போது போட்டுக்கறேன்.".

"ஒன்னுமில்லாதவன்னு நினைச்சுக்குவாளுங்க.. போட்டுக்க..".

"இல்லக்கா, ரொம்ப பளப்பளன்னு இருக்கு..உள்ளவே வய்... (வேகமாக கழட்டிக்கொடுத்தாள்)"

"அதுவுஞ்சரிதான்..ஒப்பாரி வெக்கற வீட்டுக்கு எதுக்கு நெக்லஸ்.. அதான் கைல நன்னாலு வளையல் போட்டு இருக்கியே..அது போதாது..?"

"போதும் போதும்..இதுங்க கெட்ட கேட்டுக்கு..."

அத்தை மாமாவிற்கு சொந்தமாக இருக்குமோ..? இவர்களும் இங்குதான் வருகிறார்கள் என அப்போது அபிராமி அறியவில்லை. வருவோர் போவோரை பார்க்கும்போதேல்லாம்...முகத்தை சுருக்கி அழுதனர்.. சிலரை கட்டிக்கொண்டு சத்தம் போட்டு அழுதனர், அழுது அவர்கள் விலகும்முன், தன் நகைகளை அவர்கள் பார்த்து விசாரிக்கும் படி கை, கழுத்து, காதுகளில் கவனம் செல்லும் படி பேசினர். அபிராமிக்கு அவர்கள் பேசிவந்தது முன்னமே தெரிந்ததால், பேச்சிலும், அழுகையிலும் இருந்த போலித்தனம் அப்பட்டமாக தெரிந்தது.

அழுகை வராமலேயே திடீரென்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் அந்த பெண்களை பார்க்க பார்க்க அபிராமிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. தன்னை மறந்து குபுக்"கென சிரித்தும் விட்டாள்.

சாவு வீட்டில் இருந்தோர் அபிராமியை ஒரு மாதிரியாக திரும்பி பார்த்தனர்......

என்றோ ஒருநாள் அபி நண்பனுடன் சண்டையிட்ட போது அவன் ரொம்பவும் கடுப்பாகி,  "யதார்த்தம் என்றால் என்னவென்றே தெரியாத உன்னுடன் எனக்கு சரிப்பட்டு வராது ....." என்றான்.  ஆமாம் அவன் சொன்னது எத்தனை உண்மை?!!  சாவு வீட்டில் யாராவது சிரிப்பார்களா?! அழத்தானே வேணும். அழுகை வராவிட்டால் என்ன? சிரிக்காமலாவது இருக்கலாமே?.  மற்றொரு நாள் இன்னொரு தோழியோ "யதார்த்தம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" என்றாள். உடனேயே சந்தோஷப்பட்டுக்கொண்டாள், நண்பன் சொன்னதில் இருந்த வருத்தம் அபிக்கு காணாமல் போனது. 

அவளின் பெரியப்பா இறந்தபோது அக்காக்களில் ஒருத்தி சொன்னாள், "அபி,  அப்பா இறந்துடுவார்னு தெரியும், அப்பா இறந்துபோறது தான் அவருக்கு நல்லது, கோமாக்கு போயிட்டாரு...ஆனா மருந்து, ஊசி, ஆக்ஸிஜன், ட்ரிப்ஸ்'ன்னு அவரை உயிர்வாழ வச்சி என்ன பயன்?. கடைசி நேரம் இங்க வந்து பார்த்தப்ப, அப்பா இவ்ளோ கஷ்டப்படாம இறந்து போயிடலாம்னு தான் நினைச்சேன். இப்பக்கூடப்பாரு,  எனக்கு அழுகை வரல. ஆனா, என்னோட சிஸ்டர்ஸ் எல்லாரும் அழறாங்க..நான் மட்டும் அழாமல் இருந்தா அவங்களே என்னை எதாச்சும் சொல்லுவாங்க.. அதுக்காக சும்மாவாவது அழவேண்டி இருக்கு..."


இது தான் வாழ்க்கை. இது தான் சொந்தம். இந்த நடிப்பு தான் நிஜம். இந்த நிஜத்தைத்தான் நம்மைச் சுற்றியுள்ளோர் நம்மிடம் எதிர்பார்க்கின்றனர். இந்த நிஜம் தான் சொந்தங்களையும் நட்புகளையும் பிடித்து வைக்கிறது. உள்ளத்தில் என்னவிருந்தாலும் சபை மரியாதை கருதி உதட்டோரம் சிரிப்பதோ, பல்காட்டி சிரிப்பதோ தான் இயல்பு, யதார்த்தம், நடைமுறை. இதோ அழுகை வராவிட்டாலும் அழுது நடிக்கனும் அல்லது ஒரு டன் சோகத்தை முகத்தில் தேக்கி வைக்கனும். அப்போது தான் உன்னையும் சக மனுஷியாக ஏற்றுக்கொள்ளும் இந்த கூட்டம்....

அபிராமியும் நடிக்க தயாரானாள்...



*படங்கள் நன்றி கூகுள்

க்ளிக்..க்ளிக்..க்ளிக்....

 தெரியாமல் எடுத்தது, யாரென்றும் தெரியாது. சட்டையின் பின்னால் அவரவர் பெயரும் எழுதியிருந்தது.

 ஊன்றுகோல் 2 in 1
 பட்டுப்போன மரங்கள் தான் இருந்தாலும் அழகு... :)

 தென்னைமரத்தை முன்னமே இதுப்போன்று எடுத்திருக்கிறேன். பனை மரத்தை ஆகாயம் நோக்கி எடுத்துப்பார்க்க ஆசைப்பட்டு... :)
 கொஞ்சல்ஸ்... 
(இவங்க இரண்டு பேரும் பொறுப்பாக நிறைய ஃபோட்டோக்கு போஸ் கொடுத்தாங்க.)
எவ்ளாம் பெரிய குச்சி...

தேடல்...

எங்கேயோ எதையோ
தொலைத்து
அதை
எதனிடலித்தோ
தேடி...
........
..........
............
.................

தேடி...தேடி
தெளிந்து 
வளர்கிறது புத்தி
இனி தேடல் வெளியில்லை-



Image : Thx Google.