சென்னை மாநகர், தண்ணீர் பிரச்சனையில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த சமயம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, லாரிகளில் தண்ணீர் வந்து, தெருக்களில் வைக்கப்பட்டிருந்த, கறுப்பு நிற தொட்டிகளில் தண்ணீரை நிரப்பிவிட்டு செல்லும். குடங்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று/நிற்காமல் முட்டி மோதி தண்ணீர் பிடித்து வந்துவிட்டால், இமாலய சாதனைதான். இரண்டு நாளைக்கு ஒரு முறை இந்த சாதனையை செய்ய வேண்டிய நிர்பந்தம் சென்னை மாநகரில் அத்தனை குடும்பத்தினருக்கும் இருந்தது.

அப்படி ஒரு காலக்கட்டத்தில் தான் , யமுனா சித்திக்கு முதுகு வலி வர ஆரம்பித்தது. தண்ணீர் தூக்கி தூக்கியே முதுகு வலி வந்து விட்டதாக நினைத்த சித்தி, வலியை குறைக்க கை வைத்தியத்தில் இறங்க ஆரம்பித்தார். முதலில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்து பார்த்தார்.  இது ஒரு 15 -20 நாட்களுக்கு தொடர்ந்தது, முதுகு வலியும் விடுவேனா என தொடர்ந்தது. சித்திக்கு, வலியின் மேல் சந்தேகம் வர ஆராய்ச்சியில் இறங்கினார். எப்படி வலிக்கிறது, எங்கே வலிக்கிறது, எப்படி உட்கார்ந்தால், எழுந்தால், படுத்தால் வலிக்கிறது என ஒரு பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதி வைக்கும் அளவுக்கு முதுகு வலியின் தன்மையைப்பற்றி தெரிந்துக்கொண்டு, கட்டுரை முடிவையும் வெளியிட்டார். அது தான் முதுகு சுளுக்கு.

அடுத்து, கைவைத்தியம் முதுகு சுளுக்குக்கு மாறியது. ஒரு தட்டில் தண்ணீர் நிரப்பி வைத்து , சுளுக்குக்கு எண்ணெய் விட்டு நீவி விட்டு, தட்டில் குறைகிறதா என பார்த்துக்கொண்டே வந்தார். சுளுக்கு விலக விலக, தண்ணீர் குறைய ஆரம்பிக்குமாம். அட.. தண்ணீர் குறையவில்லை, சித்தியின் சுளுக்கும் விலகவில்லை.

வீட்டில் சித்தப்பாவும் , பிள்ளைகளும் டாக்டரிடம் வர சொல்லி எத்தனை முறை அழைத்தும், கைவைத்தியத்தில் கில்லாடியான சித்தி வர மறுத்துவிட்டு, சிரித்துக்கொண்டே சொன்னார், "தண்ணீ தூக்கறதுல வர முதுகு வலிக்கு, யாராச்சும் செலவு செய்து டாக்டர்கிட்ட போவாங்களா?" போங்க போங்க. .இதோ இன்னும் கொஞ்ச நாள்ல, என் கை வைத்தியத்தாலேயே குணப்படுத்தி காட்டறேன்னு " சவால் விட்டார்.

நாட்கள், மாதங்களாகி கடந்தது, முதுகு வலியுடன். நடு நடுவே குடும்ப மருத்துவரிடம் சென்று, வலிக்கு மருந்தும் வாங்கி சாப்பிட்டார். ஆனால் வலி அவரை விடுவில்லை. ஆமாம், வலியோடு சித்தி கடந்த மாதங்கள் மொத்தம் எட்டு.  எட்டாம் மாதத்தில் ஒரு நாள், வலி தாள முடியாமல் துடிக்க, குண்டுக்கட்டாக சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றுக்கு தூக்கிக்கொண்டு சென்றார்கள்.  அங்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மருத்துவர்கள் முதுகு வலிக்குக்காரணம் மார்பகப்புற்று நோய் என்றார்கள். .

ஆனால், சித்தி அசரவில்லை." எனக்கு புற்றுநோய் வர வாய்ப்பேயில்லை.என் மூன்று குழந்தைகளுக்கும், 3 வயது வரை தாய்ப்பால் கொடுத்திருக்கிறேன். எனக்கெப்படி புற்றுநோய் வரும். இதை நான் நம்பத்தயாராக இல்லை, வேறு எதாவது காரணம் இருக்கலாம் " என மருத்துவரிடம் வாதிட்டார். மருத்துவர்கள் அடுத்து, பயாப்சி டெஸ்ட் எடுத்து பார்த்துவிடலாம் என்று சொல்லவும், வீட்டில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தவும், டெஸ்ட் எடுக்கப்பட்டது.

முடிவு, புற்றுநோய் முற்றிய நிலை கண்டறியப்பட்டது. மார்பங்களை அகற்ற முடியாத நிலையில் புற்று நோய் பரவிவிட்டு இருந்தது. வேறென்ன செய்யமுடியும் இனி, ஒரளவு குணப்படுத்த மருத்துவர்கள் சொன்ன கிமோத்தெரஃபி(Chemotherapy) மற்றும் ரேடியஷன் தெரஃபி(Radiation Therapy) சிகிச்சை முறைகளை சித்தி தொடர்ந்து செய்ய வேண்டி வந்தது.

சென்னை, அடையாரில் உள்ள, புற்றுநோய் மருத்துமனைக்கு சென்று, தகுந்த சிகிச்சை மேற்கொண்டார்கள். முதுகு வலி ஆரம்பித்தது அவரது 50 ஆவது வயதில்.  எட்டு மாதங்கள் கழித்த நிலையில், நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டு , தொடர்ந்து இரண்டு வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். இரண்டாவது வருட முடிவில் பரவியிருந்த மார்பக புற்றுநோய் , விரைந்து குறைய ஆரம்பித்த நிலையில், சித்திக்கு திடீரென்று சாப்பாடு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. ஏனிந்த பிரச்சனை என , திரும்பவும் மருத்துவர்களை நாடியதில், மார்பகத்தில் குறைந்த புற்றுநோய், நுரையீரலை ப்பற்றி பரவ ஆரம்பித்தது தெரிய வந்தது.

மாதம் ஒரு முறை மருத்துவமனை சென்று, கீமோத்தெரஃபி மற்றும் ரேடியஷன் சிகிச்சைகளை பெற்று வந்த சித்தி, ஒரு கட்டத்தில், முடியாமையில், மருத்துவமனையில், நிரந்தர நோயாளியாக சேர்க்கப்பட்ட்டார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது 53 ஆவது வயதில் எங்கள் அனைவரையும் விட்டு மறைந்தார்.

இப்பவும் சித்தியின் மன தைரியத்தை அனைவரும் பாராட்டினாலும், கைவைத்தியம் பார்க்காமல், வலி வந்தவுடனேயே மருத்துவரை சென்று பார்த்து, அனைத்து பரிசோதனைகளையும் செய்திருந்தால், இன்றும் அவர் எங்களுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது.

படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி அனைவரும் செய்யும் ஒரே தவறு... நமக்கு நாமே டாக்டர் ஆவது தான்.

*** **** ***

மார்பகப்புற்று நோய் பற்றி மேலும் விபரங்கள் அறிய :


1. மார்பகப்புற்று நோயின் அறிகுறிகள் :


http://en.wikipedia.org/wiki/Breast_cancer
http://health.msn.com/health-topics/breast-cancer/5-surprising-signs-of-breast-cancer
http://www.medicinenet.com/breast_cancer/article.htm
http://www.webmd.com/breast-cancer/guide/breast-cancer-symptoms-and-types2. மார்பகப்புற்று நோய் விளக்கப்புகைப்படங்கள் :


http://breastcancerpictures.blogspot.in/2010/08/sign-of-breast-cancer.html
http://beauty-healthcare.blogspot.in/2010/12/breast-cancer-treatment-breast-cancer.html3. மார்பகப்புற்று நோய் காணொளிகள் : 

What Is Breast Cancer?  http://www.youtube.com/watch?v=YNUBnX9JHQs 

How to Recognize Breast Cancer Symptoms  http://www.youtube.com/watch?v=yTHyMNBkbOY

Breast Cancer Progression and Staging  http://www.youtube.com/watch?v=l2lRZuEK4Y0&feature=related

 


இது நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை க்காக எழுதப்பட்டது.