பேரூந்து பிரயாணம்.....

வீட்டுக்குள் நம்மை பூட்டி வைக்கும் போதே,  நம்ம மூளை ஆயிரம் விஷயங்களை அசைப்போடும்.  வண்டியில் போனால், சிக்னலில் நிற்கும் 1-1.5 நிமிடங்களில் சுற்றி இருப்பதை கவனித்தாலே இன்னும் பல ஆயிரம் விஷயம் தலைக்குள் புகுந்து குடைச்சல் கொடுக்கும்.. வண்டி சர்விஸ் விடும் ஒரு நாள், பஸ்ஸில் தான் போக வேண்டி இருக்கும். அந்த ஒரு நாளில் 10-15 கதைகளோடு வீட்டுக்கு வருவேன். இப்போது தினம் பஸ்ஸில் செல்கிறேன். கேட்கனுமா?  குறைந்த காலத்தில், பஸ் பயணம் எரிச்சல் ஊட்டுகிறது. பணம் கொடுத்து நாம் உண்டு நம் வேலை உண்டு என்று தான் சென்று வருகிறோம். ஆனால் சுற்றி நடக்கும் விஷயங்கள் பொறுமையை இழக்க செய்து, கோவமும் எரிச்சலும் தான் மிஞ்சுகிறது. வாயை திறக்காமல் வர ரொம்பவே சிரமப்பட வேண்டி இருக்கிறது.

பார்க்கும் காட்சிகள் :

1. ஆண்களும் பெண்களும் மணிக்கணக்காக செல் ஃபோனில் சத்தமாக பேசி வருவது. இது ஒரு தொடர் நிகழ்வு :(. அதுவும் காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் கருமத்தை காதுக்கொடுத்து கேட்கமுடியவில்லை. காதலன்’கள் இப்படி பொதுவெளியில் பேசுவதில்லை (உஷார் மாக்கானுங்களாச்சே!) , பெண்கள் தன் நிலை இழந்து பேசுகிறார்கள். இவர்கள் பேசுவதிலிருந்து எதிர்பக்கம் கொஞ்சுவது காதலன் என்று தெரியவருகிறது. காதலிகளைப் பார்க்க பாவமாக இருக்கிறதே ஒழியே, வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

2. அலுவலக, வீட்டு பிரச்சனைகளை சுற்றம் பாராது, கத்தி பேசுகிறார்கள். இரண்டு நாளைக்கு முன் ஒரு உயர் அதிகாரி, தன் சக ஊழியரிடம் கோவத்தில் கத்திய கத்தில், பஸ்ஸே டக டக டிகு டிகு ன்னு ஆடியது.  அத்தனை முகங்களும் அவரின் குரலுக்கு அலண்டுப்போய் அவரைப்பார்க்க, அவரோ, எதையும் கவனிக்காது  கத்துவதை மட்டுமே தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தார். :(

3. வேலைக்கு செல்லும் போதும், திரும்ப வரும் போதும், நம்ம ஐ.டி நாயகிகளும் நாயகர்களும் அந்த ஐடி கார்ட் ஐ கழட்டாமல் காட்டும் சீன் இருக்கே !  யப்பா.. .!! :) ஷாப்பிங் காம்பளக்ஸ், சினிமா தியேட்டர்,  பஸ் நிறுத்தங்கள், கடைகள், பீச், ஹோட்டல் என்று எதுவும் இவர்களுக்கு பாக்கி இல்லை, எங்கு போனாலும் ஐடி கார்ட் டோடு தான் போகிறார்கள்...”கொண்டை”  பளீச் ந்னு தெரியுது.! :)

4. நடுத்தரவயது மற்றும் வயதான கணவன் மனைவி வந்தால், மனைவியிடம் பணம் வாங்கித்தான் கணவர் டிக்கட் எடுக்கிறார். மனைவி சொல்லும் இடத்தில் தான் அமருகிறார், எழுந்திருக்கிறார், பேசுகிறார், சிரிக்கிறார். மனைவி சொல்லே மந்திரம். இது பொதுவாக 90% காணமுடிகிறது. பெண்கள் ஆட்டி படைக்கிறார்கள் ! :)

5. டாஸ்மாக் கடையில் ஒரு பெண், ஒரு சின்ன பாட்டில் வாங்கி, அதை ரவிக்கைக்குள் வைத்துக்கொண்டு, பார் என்று அம்புக்குறி போட்டு இருந்த சந்தில் நுழைந்து சென்றார்.  குடிக்கத்தான் உள்ளே செல்கிறார் என்றால், ஏன் பாட்டிலை ரவிக்கைக்குள் ஒளிக்க வேண்டும் ?!  (கூகுல் பஸ் ஸில் இதை மட்டும் பதிவிட்டேன்)

6. பள்ளி மாணவர்கள் 5-10 வகுப்புக்குள் இருக்கும், எல்லா வயது பிள்ளைகளும் மிகச்சரளமாக தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் பேசுகிறார்கள் ! :(((((((((   எங்கே சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை. :(((((. அதாவது, அந்த வார்த்தைகளை கோவத்திலோ, சண்டை போடும் போதோ பயன்படுத்தவில்லை (நான் அப்படி பேசுபவர்களை தான் பார்த்திருக்கிறேன்)  இயல்பாகவே அவர்களின் மொழியே அப்படித்தான் இருக்கிறது. :((

7. எப்போதுமே எனக்கு இந்த சந்தேகம் உண்டு. பெண்களுக்கு எப்படி மேக்கப் செய்ய இத்தனை நேரம் கிடைக்கிறது? அதுவும் காலை வேலை பரப்பரப்பில்..?  பொறாமை' என்று சொல்லமுடியாது, எனக்கு மேக்கப் என்பதே 100% இவர்களை பார்க்கும் போது தான் நினைவுக்கே வருகிறது. சிலர், 1 இன்ச்’க்கு 2 கோட் வீதம் பூசிக்கொண்டு வருகிறார்கள் . ... கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது!

8. பல அழகான பெண்களை பார்க்க முடிகிறது. மிகவும் லட்சணமாக , சாந்தமாக இருக்கும் பெண்களை பார்க்கும் போது ஏனோ ஒரு அமைதி மனதுக்குள் நிலவுவதை தடுப்பதற்கு இல்லை.

9. ஸ்லீவ் லெஸ் அணியும் பெண்கள் கையைத்தூக்கும் வரை அழகாகத்தான் இருக்கிறார்கள். பேரூந்தின் ஆட்டத்தில் மேலே பிடிக்க கையை தூக்கினார்கள் என்றால்..... கடவுளே... ! :((((( என்ன கொடுமை இது ?!! :(.  வீட்டில் கையைத்தூக்கி கண்ணாடியில் ஒரு முறை இவர்களே இவர்களை பார்த்தால் மற்றவர்களின் நலன் பாதுக்காக்கப்படும். !!  இந்த கொடுமையை பஸ் ஸை தவிர ஜிம் மில் அதிகமாக அனுபவித்து இருக்கிறேன். நானாவது தள்ளி தூரப்போய் விடலாம். ட்ரைனர்களின் நிலைமை ரொம்பவே பாவம். சிலர் சகிக்கமுடியாமல் ஒன்றும் பாதியுமாக சொல்லிக்கொடுத்துவிட்டு தலைத்தெறிக்க ஓடி வந்துவிடுவதும் உண்டு.

10. நடத்துனர் சிலரிடம், சில்லறை திருப்பிப்பெற போராட்டமே நடத்தவேண்டி இருக்கிறது. சில்லறை திருப்பி க்கேட்கும் போது அவர்களுக்கு வரும் கோவத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 50 பைசா நிச்சயமாக திரும்பி வருவதில்லை. அதிகபட்சமாக 5 ரூ வரை மனசாட்சியே இல்லாமல் ஆட்டையை போடுகிறார்கள். இந்தியா நன்றாகவே வளர்ந்துக்கொண்டு வருகிறது. !

11. சில நடத்துனர்கள் பள்ளியில் குழந்தைகளை நடத்துவது போன்றே பிரயாணம் செய்பவர்களையும் நடத்துகிறார்கள். நேராக போயி வலது பக்கம் திரும்பி இடது பக்கம் பார்த்து நிற்கவும்,  இங்கே நிற்கக்கூடாது அங்கே நிற்கக்கூடாது என ஓவர் இன்ஸ்ட்ரக்ஷ்னஸ் ரூல்ஸ் யுவர் ஆனர்.. முடியவில்லை !  அவர்கள் சொல்லுவதை காதில் வாங்காமல் இருந்தால், பஸ்ஸில் இருப்போர் அத்தனை பேர் காதில் விழும்படி கத்தி கூப்பாடு போடுகிறார்கள். 

12. சந்தோஷமான ஒரே விஷயம் கைக்குழந்தைகளும், குட்டி குட்டி சிட்டுகளும், மொட்டுகளும் செய்யும் சேஷ்டைகளும், மழலையில் கொஞ்சி, அழுது, அடம் பிடித்து கத்தி ஆர்பாட்டம் செய்வதும் பார்க்க பார்க்க கண் ஆயிரம் வேண்டும்.

13. பக்கத்தில் உட்காரும் ஆண்களின் உடல் மொழி.. :) இயல்பாக இருக்கமுடியாமல் ஏன் இப்படி தவிக்கிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒன்று அட்டென்ஷன், இல்லைன்னா ஓவர் ஸ்டேன்ட் அட் ஈஸ்.. இது இரண்டுக்கும் நடுவில் ஒரு நிலைபாடு இருக்கிறது என்பது இவர்களுக்கு தெரியவே தெரியாதா என்பது எனக்கு தெரியவில்லை.

14. தினம் பார்க்கும் முகங்கள், சிலர் அறிமுகமானதில் (பார்த்துக்கொள்வதை வைத்தே) சிரிக்கிறார்கள். பலர் கண்டுக்கொள்வதில்லை. அவர்களில் நானும் ஒருத்தி. சிரித்தால் திரும்ப சிரித்தும், முறைத்தால் திரும்ப முறைத்தும் ... :)

15.கடைசியாக, போக்குவரத்து நெரிசல். தொடர்ந்து தினப்படி போக்குவரத்து நெரிசல் நான் செல்லும் வழியில் அதிகமாக இருக்கும் பகுதி : கிண்டி - சின்னமலை - ஹால்டா ஜக்‌ஷனை சொல்லலாம். மாலை நேரத்தில் எப்போதுமே அங்கு நெரிசலோ நெரிசல். அதை அடுத்து திருமங்களம். இங்கு காலநேரமின்றி நெரிசல் காரணம் மெட்ரோ ரயில்.

அணில் குட்டி : இன்னும் என்னென்ன வெளியில் வரப்போகுதோ.. வூட்டுக்குள்ள பூட்டி வைங்கன்னா கேட்டா த்தானே.. அவங்க கஷ்டம் அவங்களுக்கு... பாவம்.. தாக்குப்பிடிக்க முடியலப்போல... :((

பீட்டர் தாத்தா : A bus is a vehicle that runs twice as fast when you are after it as when you are in it”

ஏதேதோ சொல்கிறேன்...


கல்லும் கடவுளும் !

கல்லை செதுக்கி
சிலை வடித்தான் சிற்பி

கடவுளாக பாவித்து
வேண்டியவை வேண்டினான் !!

கடவுள் அசைவேனா என்றது  !!
கோபமும் ஏமாற்றமும் சிற்பிக்கு..

சிற்பம் அப்போதும் இப்போதும்
"கல்" தான் !!

செதுக்குமுன் கல்லாகவும்
பின்னே கடவுளாகவும் பார்த்தவன் சிற்பி !

யார் தவறு ???

நம்பிக்கை

அடுத்தவரை நம்புவது
பொய்க்கிறது !
என்மேலேயே நம்பிக்கை
வைக்கிறேன்..
அதுவும்
பொய்க்கிறது.. :))))))
நம்பிக்கையை
அர்த்தமற்றதாக்கும்
வாழ்க்கை....!!

ஆசை

"ஆசையே துன்பத்துக்கு காரணம்! "
சொன்ன
புத்தர்
துறவியானார்..

துறவும்
ஆசைதானே.....???!!

இவரது ஆசையில்
துன்பப்பட்டது
இவரது மனைவியும் குழந்தையும் ..........

துறவியாகக்கூட
ஆசை
இருப்பதில்லை
வெறுமை
மனதை சூழும் போது... !

வெறுமைகள்
ஆசைகளை
அறவே
அகற்றுகின்றன !!

துரத்தல்

விடுபட்டு
ஓடும் நேரங்களில்
பிடித்து இழுக்கும்
இதயங்கள்..

திரும்பினால்
திரும்ப
ஓடவிடும்
அதே
இதயங்கள்.. !

இதயங்களின் மேல்
தவறில்லை
அவற்றை இயக்கும்
வாழ்க்கை... ???

ஓடிப்பிடிக்கும்
ஓட விடும்
"நிற்க " மட்டும்
விடவே விடாது...  !

பார்வைகள்

கடந்து செல்லும் கால்களை
அனிச்சையாய்த் தொடுகிறது
செருப்பு தைப்பவரின்
பார்வை !

*Image - thx google 
.

காதலிக்க நேரமில்லை..

காதலிக்க வயது வரம்பு இருக்கிறதா என்ன.. ? காதல் என்ற வார்த்தை ஒரு ஆணிடம்/பெண்ணிடம் உடல், மனம் சார்ந்த ஒன்றாக மட்டும் பார்க்காமல் கேட்கப்படும் கேள்வியாக இருந்தாலுமே, வயது வரம்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படித்தான் வரலாறுகள், நடைமுறை கதைகளும் சொல்கின்றன.

காதல், காதலிக்கும் வயதில் பலமுறை என்னை நெருங்கி வந்து, அதை கடக்கவிட்டு ஒதுங்கி இருக்கிறேன். எனக்குத்தான் என்னவோ காதலிக்க நேரமில்லை.

நேரமில்லை என்பதை இப்படியும் மாற்றி சொல்லாம்.. வயிற்றில் பசி, எதிர்காலத்தைப் பற்றிய பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள் நிறைந்த வாழ்க்கை பயணம், வளர்ப்பவர்களின் மேல் இருந்த அதீத காதல் இவற்றை எல்லாம் தாண்டி எனக்கு காதல் வரவேயில்லை. 

எந்த ஆணும் என்னை ஈர்க்கவேயில்லை. இந்த பக்கம், என்னிடம் காதல் சொல்லி வந்தவர்களை பார்த்து, அறிவே இல்லாதவர்கள் என்ற எண்ணமே வந்தது. இப்படி வரக்கூடிய வயதல்லவே, இருந்தாலும் வந்தது, அப்போதே வாழ்க்கை கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த பாடம்  "காதல்" என்ற வார்த்தைக்கும் எனக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தியது.  காதலிக்க தகுதியில்லாத ஒரு பெண்ணாக என்னை நானே பார்த்தேன் அல்லது அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு இருந்தது. அழகு என்பது இதற்கு ஒரு தடையாக இருப்பதாக நினைக்கவில்லை. 

எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு, சென்ரல் ஸ்டேஷனில், ரயிலுக்கு தினமும் மாலை ஓடி வந்து அமருவேன், அந்த ரயிலை விட்டிவிட்டால், இன்னமும் 40 நிமிடங்கள் அடுத்த ரயிலுக்கு நிற்கவேண்டும், காலையில் சாப்பிட்டு இருக்கமாட்டேன், அதிகாலையில் நான் கிளம்பும் நேரத்தில் சித்தப்பாவீட்டில் சாப்பாடு ரெடியாகி இருக்காது. காப்பி குடித்த வயிற்றோடு கிளம்பி இருப்பேன். காலேஜ்'  ஜில் ஆன்ட்டியின் முயற்சியில், கேண்டீனில், மதியம் இலவச சாப்பாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இலவச சாப்பாடு வாங்கி சாப்பிடுவதால், கேண்டீனில் வேலையாட்கள், எங்களை ஒரு பொறுட்டாக மதிக்க மாட்டார்கள், பசியோடு வெகு நேரம் ஓரமாக நிற்க வேண்டும், பணம் கொடுத்து வாங்குபவர்கள் அத்தனை பேரும் வாங்கி சென்றவுடன் தான் கொடுப்பார்கள், அப்படி காத்திருக்கும் பல சமயங்களில், உணவு தீர்ந்து போயி இருக்கும். ஏதோ கிடைப்பதை வாங்கி வந்து, தோழிகள் பிடிங்கியது போக சாப்பிட்டாலும், வயிறு காது கிழியும் படி சத்தம் எழுப்பும். வயதுக்கே ஏற்ற கெளரவம் நிறைய இருக்கும், பசி என்று யாரிடமும் சொல்லக்கூடாது, தோழிகளிடமும் காட்டிக்கொள்ள பிடிக்காது.  வெளியில் காட்டிக்கொள்ளாத திருட்டு சிரிப்பை அந்த கெளரவம் வரவழைக்கும்.  கொஞ்ச நாளில் இரண்டு வேளை  "பசி" பழகிப்போனது. 

இத்தனை பசியோடு மாலை ரயிலில் உட்கார்ந்து இருக்கும் போது, எதிரில் வந்து அமரும் "அரசு" என்ற இளைஞர் மூன்றாம் ஆண்டு பிரசிடன்ஸி கல்லூரி மாணவர், என்னை காதலிப்பதாக சொன்னபோது, சிரிப்பு தான் வந்தது. என்னை தினமும் ஒரு 35 நிமிட பயண நேரத்தில்  சில வாரங்களாக பார்த்திருக்கிறார், பேசி இருக்கிறார்.  அவருக்கு காதல் வந்துவிட்டது. என்னைப்பற்றி எதுவும் அவருக்கு தெரியாது, என் படிப்பு, காலேஜ் தவிர.  எனக்கு? எனக்கு அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமே இல்லை. என்ன காரணம் அவர் என்னை காதலிக்க? ஒரு மண்ணும் இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை.  யாரென்று தெரியாத, ஒரு சீனியர் மாணவர் என்ற பயமின்றி, அவர் ஒரு ஆண் என்ற தயக்கமின்றி, எதை எதையோ பேசிக்கொண்டு வந்தது காரணமாக இருக்கலாம். இருந்த பசியிலும் அவன் வேற்கடலை வாங்கி சாப்பிட்டு எனக்கு கொடுத்த போது, வேண்டாவே வேண்டாம் என்று தடுத்துவிட்டது காரணமாக இருக்கலாம். அவர் கண்ணுக்கு நான் அழகாக தெரிந்திருக்கலாம்.

அழகு என்பதை தாண்டி வாழ்க்கையில் பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தேன். என்னையும் சேர்த்து யாருடைய அழகும் எனக்கு ஆர்வமளிக்கவில்லை, அவரின் காதல், மனிதர்கள் எத்தனை முதர்ச்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற அதிருப்தியை தந்தது. ரயிலை மாற்றினேன்,  என்னை த்தேடி சுற்றி வர முயற்சி செய்தாரா என்றால், ஒரே முறை, வழிமறைத்து பேசியதாக நினைவு. வழியையும் மாற்றிக்கொண்டேன். யாரையும் நீ மாறி விடு என்று சொல்வதை விடவும், என்னை மாற்றிக்கொள்வதை அப்போதே வழக்கமாக்கி கொண்டிருப்பதை இப்போது நினைவு கொள்கிறேன்.

காதல் என்பதே பிடிக்காமல் போனது, வித்தியாசம் இல்லாமல் பேசும் பழக்கமே சிலருக்கு என் மேல் காதல் வர காரணமாக எனக்கு தோன்ற ஆரம்பித்தது. அது சரியா இல்லையா என்று அந்த சிலரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டேன், அதுவும் சரி என்ற பதிலில் எனக்கு திருப்தி. பேசுவதை மாற்றிக்கொள்ளவில்லை, காதலுடன் வந்து நிற்பவர்களை மட்டும் மாற்றிக்கொண்டே வந்தேன். பழகுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆண்கள் என்றாலே தள்ளி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக என்னை ஆட்க்கொள்ள ஆரம்பித்து, செயற்படுத்தியும் வந்தேன், வருகிறேன்.

காதல் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணமும் எப்போதும் இருந்தது. காதலிக்க தகுதியில்லாத ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லுபவர்களை என்னவென்று சொல்வது?!  இதை தான் கண் மூடித்தனமான காதல் என்பார்கள், புரிந்துக்கொண்டு காதலிக்க முடியாதளவு முரண்பாடனவளாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும்.புரிந்தவர்கள் என்னை விட்டு விலகி தான் செல்வார்கள் என்பார்கள் என்பதும் எனக்கு தெரிந்திருந்தது. அதனால் புரிந்ததாக நினைத்துக்கொண்டு, புரியாமல் காதலிப்பவர்களை எனக்கு பிடிக்காமல் போனது. எனக்கு பிடித்தவர்கள் யாரையும் காதல் என்ற வரைமுறைக்குள் கொண்டுவரவில்லை அல்லது என்னுடைய பிடித்தம் காதலாக இருக்க வாய்பில்லாமல் இருந்தது அல்லது அதையும் தாண்டி ஏதோ ஒன்றாக இருந்தது.  எல்லாவற்றையும் கடந்து வரும் போது அல்லது சில பல காலம் அதிலேயே தொக்கி நிற்கும் போது,  அனுபவம் கிடைக்கிறது. அனுபவம் மட்டுமே நம் அறிவை கொஞ்சமாக வளர்க்க உதவுகிறது. அதையும் பலமுறை தவறவிடுவது எனக்கு பழக்கமாகி இருந்தது.  

நண்பர் ஒருவரிடம்,  என்னை உடல் சார்ந்து பார்க்காமல் இருக்கும், ஆண்கள் இருக்கும் இடத்தில் இருக்க விரும்புகிறேன், அப்படி ஆண்கள் உண்டா ? அல்லது அப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்றேன். நண்பரின் பதில், "இல்லவே இல்லை :)" உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் ஆண்கள் உண்டு, அவர்களின் எண்ணங்களினால் பெண்களின் மீதான பார்வையை உன்னால் கட்டுப்படுத்தவோ.மாற்றவோ முடியாது , அது இயற்கை" என்றார்.   காதல் என்பது உடலும் சார்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இல்லை என்று யாரும் விவாதிக்க வேண்டியதே இல்லை. நேர விரயம்.

காதலிப்பவர்களை பார்க்கும் போது எல்லாம், இவர்களின் வயிற்றுக்கு நேரத்திற்கு சோறு கிடைக்கிறது, தேவையான பணம் கிடைக்கிறது, நாளை எப்படி இருக்கும் என்ற கேள்வியோ, பாதுகாப்பு பற்றிய பயம்மோ இல்லை.  பெற்றோர் இருக்கும் ஒரு வீட்டில், பெற்றோர் இல்லாமல் தனியான தன்னை தானே கவனித்து, மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற நம் செய்கைகளைப்பற்றிய சுய அலசல், கட்டுப்பாடு, அடுத்து எப்படி இருக்க வேண்டும் என்ற யோசனை எதுவும் இவர்களுக்கு இருப்பதில்லை, வாழ்க்கை இவர்களுக்கு மிகவும் எளிமையானதாக, கேள்விகள், பயம் உணர்வு போன்றவை இல்லாததாக இருக்கிறது,அத்தோடு பெற்றோர் சம்பாதிக்கும் பணமும், பாதுக்காப்பும், உதவியும், உடையும், உட்கார்ந்த இடத்தில் சாப்பாடும் கிடைக்கிறது.  அதனால் காதல் வருகிறது.. .அது சுகமாகவும் இருக்கிறது..

எனக்கு வரவில்லை... காதலிக்க நேரமில்லாமல் என் தலையில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன... என்னைப்பற்றி புரிந்துக்கொள்ளாமல் என்னை காதலித்தவர்கள் எல்லாம் எனக்கு இன்னமும் முட்டாள்களாவே தெரிகிறார்கள். பாவம் ஒரு வேளை அவர்களில் யாரையாவது என்னை திருமணம் செய்திருந்தால் நிம்மதியை இழந்திருப்பார்கள், வாழ்க்கையின் அத்தனை கஷ்டமும் என்னாலேயே என என்னை அடித்து, துரத்தி இருப்பார்கள்.  காதலே வேண்டாம் என்று வந்ததால், அப்படிப்பட்ட  துக்கம் எனக்கு இல்லை.

இன்னமும் என்னை நேசிப்பவர்களுக்கும், என்னால் நேசிக்கப்படுவர்களுக்கும் எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறேன்...... ம்ம்ம்ம் . :( இதற்கும் மேல் என்ன சொல்ல...

அணில் குட்டி : எச்சுச்சுமீ கவி... எதுக்கு இந்த....ஃப்ளாஷ்ஷூ...பேக்கூ.. ?!! 

பீட்டர் தாத்ஸ் : One of the hardest things in life is having words in your heart that you can't utter
.



க்ளிக்..க்ளிக்...க்ளிக்...

 ஏடிஎம் க்யூவில் நிற்கும் குழந்தைகள். உடன் வந்த குழந்தைகளின் அப்பா , வெயில் அதிகமாக இருக்கிறதென்று, குழந்தைகளை வெயிலில் நிறுத்திவிட்டு அவர் நிழலில் போய் நின்றுக்கொண்டார். :(

 :))) ????????? :))))))

 கை, கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,  பஸ்ஸில் வந்து, நோட்டிஸ் கொடுத்து பிச்சை எடுத்து பிழைக்குது !! :(. 
மொட்டைத்தலையில் சுரேஷ் நல்லாத்தான் இருக்கானில்ல ?! :)
 மாரியம்மா மாரியம்மா.. ஆடி மாசம் ! :) சிங்கத்துக்கு ஒரு கண்ணு மிஸ்ஸிங்..!:)
 ஒரு வீட்டு மதில் சுவரில்...
மேலுள்ள அம்மனும் இந்த அம்மனும் ஒரே இடத்தில் மாறி மாறி வருகிறார்கள். லைட்டிங் எஃப்க்ட் ! :)

படங்கள் : மொபைல்' லில் எடுத்தவை.