சின்னவயசுல, குறிப்பாக தேர்வுகள் நெருங்கும் சமயம் அக்கம் பக்கத்து கோயில்களில் லவுட்ஸ்பீக்ர் வைத்து, பக்தி பாடல்கள் & படங்களின் ஒலிநாடாக்களை போடுவார்கள். அது ஏழு ஊருக்கு காதை கிழிக்கும். தேர்வுக்கு படிப்பது ரொம்பவே கஷ்டம். படிக்கும் பிள்ளைகளை, வயதானவர்களை, உடல் நலம் சரியில்லாதவர்களை தொந்தரவு செய்கிறோம் என்ற நினைவு இந்த கோயில் சார்ந்த மக்களுக்கும்/ நிர்வாகிகளுக்கும் இருப்பதே இல்லை. இப்போதும் அது தொடர்ந்தாலும், முன்பு போல், அதிகமாக இல்லாமல், ஆடி மாதங்களில் மட்டும் அம்மன் கோயில்களில் கேட்க முடிகிறது. எப்போதாவது மற்ற கோயில்களில் கேட்க முடிகிறது. குறிப்பாக சென்னையில் மிக குறைவே.

விழுப்புரத்தில், எங்கள் தெருவிற்கு பின் தெருவில் ஒரு முத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. அங்கு எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பாடிய எல்லா அம்மன் பாடல்களும் போட்டபடி இருப்பார்கள். டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.ஆர்.ரமணி அம்மாளின் பாடல்களும் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் தானாக வந்து காதில் விழுந்து விழுந்து, பாட்டு மனப்பாடம் ஆகிவிடும். அதே போன்று திருவிளையாடல், சரஸ்வதி சபதம், ஆதிபராசக்தி போன்ற பக்தி படங்களின் வசனங்களும் அத்துபடியாக இருக்கும்.  திருவிளையாடல் பார்க்கும் முன்னரே, அத்தனை வசங்களையும் வீட்டில் சொல்லிக்கொண்டு இருப்போம். அந்த காட்சி படத்தில் எப்படி இருக்கும் என கற்பனை வேறு இருக்கும். படம் பார்த்தபோது, தட்சன் யாகம் நடத்தும் காட்சி மட்டும், நான் கற்பனை செய்தவாறு இல்லை என்பது என் கவலை. :( .

இப்போது, அதே போல,  வீட்டிற்குள் கொடுமை நடக்கிறது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், காதில்   ஒய்ய்ய்ய்ய்ய்ன்ன்ய்ய்ய்ய்ய்ய்ய்........என்ற ஒரு சத்தமும், ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு செத்து, அதை பார்த்து மக்கள் கத்தி கூப்பாடு போடும் சத்தம் என்னேரமும் வந்து விழுந்துக்கொண்டே இருக்கிறது.

ஒன்று ஃபார்முலா 1 ரேஸ்,
இரண்டாவது WWE.

நவீனிடம் எவ்வளவு கத்தி திட்டி, அட்டகாசம் செய்து, அடம் பிடித்தாலும் இந்த நிகழ்ச்சிகளை அவன் மாற்றவே மாட்டான்.  இந்த இரண்டிலும் எப்போதுமே வெறித்தனமான ஆர்வம். என் தலையெழுத்து பிடிக்காவிட்டாலும் கூட உட்கார்ந்து பார்க்கனும் இல்லைன்னா, சத்தத்தை சகிச்சிக்கிட்டு உள்ள போயி உட்கார்ந்துக்கனும். இதுல கொடுமை என்னான்னா, என் புள்ள பார்முலா 1 ரேஸ் ஐ  குவாலிஃபைங் ரவுண்டுலிருந்து பார்ப்பான். அந்த கார் ஓடற சத்தம் இருக்கே, ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.. என் காதுக்குள்ளவே அவங்க கார் ஓட்டற மாதிரி  இருக்கும். :(

இப்படி கேட்கும் சத்தம் பழகிப்போய், அடிக்கடி காதில் வந்து விழும் பெயர்.. "மைக்கேல் சூமேக்கர்". அப்படி இப்படி நடக்கும் போது, நவீனைப்பார்த்தும் பார்க்காமலும் "சூமேக்கர் சூமேக்கர்" ன்னு சொல்லிக்கிட்டே போவேன்......அவன் திருப்பி, துப்புவதை எல்லாம் உங்கக்கிட்ட சொல்லமுடியுமா என்ன?.விடுங்க.. எப்படி எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாவின் பாடல்கள் கேட்டு கேட்டே மனப்பாடம் ஆகியதோ அது போல....

ஃபார்முலா 1 (F1)  : இது வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் உலக கார் பந்தயம், மொத்தம் 11 குழுக்கள்.  ஒவ்வொரு குழுவிலும் 2 பேர் இருப்பார்கள். இந்த குழுக்களில் உறுப்பினர்கள் வருடந்தோறும் அதே நபர்களாக இருக்க வாய்பில்லை, மாறவும் செய்யும். வியாபாரமும் பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும் ஒரு பந்தயம்.  1946-47 ல் தொடங்கப்பட்ட பந்தயம் தொடர்ந்து இன்று வரையில் நடந்துவருகிறது.  பலவிதமான கார்கள் வந்து இருந்தாலும், தற்போதைய கார்களின் டிசைன்,  ஓட்டுனரையும் சேர்த்து வெயிட் 640 கிகி,  350 km/h (220 mph) கிமி/ஹவர் வேகத்திற்கு செல்லக்கூடியவை.  அதிகபட்சமாக ஹோண்டாவின் கார் 2006 ல் 415 கிமி/ஹவர் சென்றது.  கடைசியாக கார் பந்தயம் அபுதாபியில் நடந்தது. நடப்பு ஆண்டு 2011 ல் தொடங்கி இருக்கும் இந்த பந்தயம், இந்தியாவிலும், டெல்லியில் நடக்கவிருக்கிறது, அது இன்னும் திட்டவட்டமாக முடிவு செய்யப்படவில்லை. சர்க்கியூட் எல்லாம் சரியாக அமைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, வெற்றி அடைந்தால் மட்டுமே டெல்லியில் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்குபெற்ற ஒரே இந்தியர்.  கோயமுத்தூரில் பிறந்த, நாராயன் கார்த்திகேயன். இவரின் பெயர் நரேன் என்று சுருக்கப்பட்டுள்ளது. 2005 ல், ஜோர்டான் டீமிற்காக பார்முலா 1 ல் டயட்டோV10 காரை ஓட்டினார், இவர் கலந்துக்கொண்ட முதல் பந்தயத்தில் 12 ஆவது இடத்தை பிடித்தார்.  அடுத்து வந்த சில போட்டிகளில் அதிகபட்சமாக அவர் பிடித்த இடம் 11.

இந்த டீம்'களில் அடிக்கடி என் காதுகளில் வந்து விழுந்த பெயர்  "ஃபெராரி".  45 வயது ஜெர்மன் நாட்டை சேர்ந்த, மைக்கல் சூமேக்கர் ஃபெராரி டீம் மிற்காக கார் ஓட்டியுள்ளார். இவர் தொடர்ந்து 7 உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். அடிக்கடி கேட்பதால் மட்டும் அல்ல, என்னவோ மைக்கெல் சூமேக்கரை ரொம்ப பிடித்துப்போனது.  இவர் சூபெர்த் என்ற கம்பெனியுடன் இணைந்து 2004 ல் குறைந்த எடையுள்ள கார்பனால் செய்யப்பட்ட தலைக்கவசத்தை உருவாக்க உதவியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.  

http://www.formula1.com/default.html -  ஃபார்முலா 1 ன் இணையதளம். இதில் கொடுக்கப்பட்டுள்ள காலண்டரில் 2011 ல் போட்டிகள் ஆரம்பநிலையிலிருந்து எங்கெங்கே நடக்கவிருக்கின்றன, நடந்துக்கொண்டு இருக்கின்றன என காணலாம். 

WWE : World Wrestling Entertainment தமிழில் "மற்போர் மகிழ்கலை" ன்னு கூகுல் சொல்லுது. எனக்கு அறவே பிடிக்காத ஒரு மகா கொடுமையான விளையாட்டுன்னு சொல்லனும். நவீன் 2-3 ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து பார்க்கிறான். இதனை அமெரிக்காவின் முதன்மையான விளையாட்டுகளின் ஒன்று என்றும் சொல்லலாம்.  Vince McMahon என்பவர் நடத்திவருகிறார், இவரே WWE கம்பெனியின் சொந்தக்காரரும் ஆவார். இவருக்கு அடுத்து இவரின் மனைவி, பிள்ளைகள் தொடர்ந்து இந்த கம்பெனியில் பங்கு தாரர்களாகவும், கம்பெனியையும் நடத்தி வருகின்றனர்.

இந்த விளையாட்டை அமெரிக்காவில் மட்டும் 13 மில்லியன் மக்கள் கண்டுக்களிக்கின்றனர், 30 மொழிகளில், 147 நாடுகளில் இது ஒளிப்பரப்பட்டு வருகிறது.  1952 ல்  Capitol Wrestling Corporation என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி பின்னர் World Wide Wrestling Federation (WWWF) என்ற பேனருக்கு மாறியது, அதுவே பின்னர் 1982 ல் World Wrestling Federation (WWF), பின்னர், இது அதே குடும்பத்தினருக்கு சொந்தமான Titan Sports company க்கு விற்கப்பட்டது, அதற்கு பின்னர் இவ்விளையாட்டின் பெயர் World Wrestling Federation Entertainment, என்று மாறியது. எனக்குமே இந்த விளையாட்டு, WWF என்றே பழக்கப்பட்டு இருந்தது. 2002 ல் World Wrestling Entertainment  என்று மாற்றப்பட்டு, அதன் சுருக்கமாக, 2011 லிருந்து "WWE" என்று அழைக்கப்பட்டு வருகிறது.

நவீனின் அடிக்கும் பழக்கும் தொடர்வதற்கும், என்னை மட்டுமே அவன் டார்கர் செய்யவும் முழு முதற்காரணமாக அமைந்தது இந்த டிவி நிகழ்ச்சியே. பார்த்துக்கொண்டு இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு, ஓடி வந்து என்னை எட்டி எட்டி உதைப்பான். அம்மா நீயும் நானும் WWF  விளையாடலாம் வா, ன்னு கூப்பிட்டு, நான் தயாராகிவிட்டேனா இல்லையா என்றெல்லாம் கவனிக்காமல் அடிக்க ஆரம்பித்துவிடுவான். அவனிடன் அடிவாங்கியே நான் வளர்ந்தேன்னு சொல்லலாம். இப்போது அடிப்பதை நிறுத்திவிட்டான் என்றாலும், பார்ப்பதை நிறுத்தவில்லை.

இது விளையாட்டா, நிஜமாகவே அடித்துக்கொள்கிறார்களா? இல்லை சும்மாவா என கண்டுப்பிடிக்க முடியாதபடி, முன்னமே தயார்படுத்திக்கொண்டு, பயிற்சி செய்து நடத்துகிறார்கள். பலமுறை அது சும்மா நடிப்பு என்று நவீன் சொல்லியிருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சந்தேகத்தோடே பார்ப்பேன். அத்தனை இயல்பாக, உண்மை என நம்பும் படியாக அடித்துக்கொள்வார்கள். பயமாகவும் இருக்கும். அதில் இந்தியர் ஒருவர் வரும் போது மட்டும் கூப்பிட்டு காட்டுவான்.

இந்த இந்தியரின் பெயர்  "The Great Khaali "  எவ்ளாம் பெரிய உருவம்.. !!  :). கூடியிருக்கும் கூட்டமும்,  உற்சாக மிகுதியில் அவர்கள் போடும் சத்தமும், இந்த விளையாட்டிற்கு இத்தனை லட்ச ரசிகர்களா என வியக்க வைக்கிறது.  இந்த விளையாட்டே பிடிக்காது என்றாலும், கூடுதலாக பெண் போட்டியாளர்கள் வந்தால் சுத்தமாக பிடிப்பதில்லை. அப்போது மட்டும் நவீனிடம் வேற மாத்தி வைன்னு சத்தம் போடுவேன்,   ஆனால் எங்க, இதுவரையில் மாற்றியதே இல்லை. :( . மேலும் படிக்க/பார்க்க  http://wwe.sify.com/ ...

தகவல் & படங்கள் : - நன்றி கூகுல்


அணில் குட்டி : . நவீனூஊ... நீ இனிமேலு எல்.ஆர். ஈஸ்வரி அம்மா அம்மன் பாட்டை போட்டு. .ஆத்தாடி மாரியம்மா.. சோறு ஆக்கிவச்சேன் வாடியம்மா" ன்னு பாட்டு கேப்பியாம்.... இல்லன்னா உங்க அம்மா இதெல்லாம் யார் வீட்டீலேயும் நடக்காத ஒரு மேட்டர் னு எழுது எழுதுன்னு எழுதுவாங்க..

பீட்டர் தாத்ஸ் : “If you read a lot of books you are considered well read. But if you watch a lot of TV, you're not considered well viewed.”
.