நமக்கு, குழந்தை பிறப்புக்கு தாலாட்டும், இறப்புக்கு ஒப்பாரி பாடல்களும் என்பது அறிந்தவை. இவை இரண்டுமே நாட்டுப்புற பாடல் வகையை சேர்ந்தவை. நகரங்களில் இவற்றையெல்லாம் பல வருடங்களாகவே பார்க்க முடிவதில்லை. எங்கள் வீட்டிலும் இவை நிறுத்தப்பட்டு விட்டது. தாத்தா மறைவின் போது மட்டும் பார்த்த நினைவு. அதிலும் எங்கள் வீட்டு பெண்கள் கலந்துக்கொள்ளவில்லை, ஆயாவையும் சேர்த்து.

புகுந்தவீட்டில் இந்த சடங்குங்கள் இப்போது இல்லை எப்போதுமே நிற்காது என்றே நினைக்கிறேன். திருமணம் ஆன புதிதில் அவரின் சொந்தம் ஒருவர் இறந்தவிட்ட போது, பெண்கள் 4-5 பேராக  சிறு சிறு குழுக்களாக கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்க, நான் தனியாக நின்று வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன். அக்கா (கணவரின் அண்ணனின் மனைவி), நான் சும்மா நிற்பதை பார்த்துவிட்டு,  என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழ சொன்னார்கள். எனக்கு அழுகையும் வரவில்லை, ஒப்பாரி வைக்கவும் தெரியவில்லை, அப்போதே வீட்டைவிட்டு ஓடி வந்து விடலாமா என்றே தோன்றியது. அழுகை என்பது தானாக வரவேண்டும். அல்லது ஒப்பாரி பாடல் பாட அந்த மனிதரை ப்பற்றி ஏதேனும் தெரிந்திருக்கவாவது செய்ய வேண்டும்.

அது என்ன பெரிய கஷ்டம்? கூட்டத்தோடு கூட்டமாக குனிந்து அழுதுவிட்டு வரவேண்டியது தானே என்று யாரும் சொன்னால்.. :) அது அத்தனை எளிதானது அல்ல என்றே சொல்லுவேன்.

*  அழுகை வரனும், வராவிட்டால் வர மாதிரியே நடிக்கனும்
* ஒருத்தரோடு ஒருத்தர் தோளோடு கட்டிக்கொண்டு அழவேண்டும்.
* உருவம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட, பெரிய உருவங்களுக்கு மத்தியில் மாட்டினால், வெளியில் வரும் போது நைந்து போன துணியாகத்தான் வரவேண்டும். கசக்கிவிடுவார்கள்.
* அழுகையும், நடிப்பும் ரித்தமிக்காக, அவர்கள் குனியும் போது நாமும் குனியனும், இந்த பக்கம் அந்த பக்கம் ஆடி ஆடி அழும் போது நாமும் கூடவே போயிட்டு ஆடிட்டு வரனும்.
*  இறந்தவரை பற்றி பேசி பேசி அழனும்,
* இவைத்தவிர ஒருவர் தலையோடு ஒருவர் முட்டி அழவேண்டும். அங்க இருக்க எல்லாம் நம் தலைக்கு வந்துவிடும்.
* இறந்த வீட்டிற்கு வந்தவர்கள் யாரும் குளித்திருக்க மாட்டார்கள் (முன்னமே, எத்தனை நாள்  குளிக்கவில்லைன்னும் தெரியாது) நெருக்கமாக உட்கார்ந்து அழும் போது அந்த கொடுமையை சகிச்சிக்கனும்.
* மூக்கை சிந்திவிட்டு அதே கையோடு நம் தோளை பிடித்து அழுத்துவார்கள், நைஸாக நம் துணியில் அவர்களின் சளியை துடைத்தும் விடுவார்கள்.
*வெற்றிலை பாக்கு போடும் பெண்களாக இருந்தால், கத்தி அழும் போது, வாயிலிருந்து வெற்றிலை எச்சியும் வந்து அடிக்கும்,

இதெல்லாம் அழாத எனக்கு எப்படித்தெரியும்னு கேட்கப்பிடாது, எதுக்கு நின்னு வேடிக்கை பார்க்கிறோம்? இதையெல்லாம் கூட கவனிக்காவிட்டால் எப்படி.?

என்(ங்களின்) ஆயா, நான் சின்னவளாக இருக்கும் போது  ஒப்பாரி பாடல் ஒன்றை வேடிக்கையாக சொல்லிக்காட்டுவார். நினைவில் இருக்கும் வரை எழுத முயற்சிக்கிறேன்..

"பந்தலிலே காய்த்து
தொங்குதடி பாவைக்காய்
பார்த்தியாடி சின்னவளே....

பார்த்தேன்டி பெரியவளே..
போறப்ப பறிச்சிக்கிட்டு
போவோம்
அடுத்து தொங்கற
அவரைக்காயையும் சேர்த்து.. "
 
இந்த ஒப்பாரி ஒரு பக்கம் இருக்கட்டும், கணவரை இழந்த பெண்கள் முன்னமே நொந்து இருப்பார்கள், அவர்களின் வருத்தம், நினைவுகள், அழுகை, இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால், இறப்பிற்கு வரும் அத்தனை பெண்களும், அவர் எங்கே என பார்த்து, அவரின் தோளை கட்டி ஒரு ஆட்டு ஆட்டி அழும் போது, இந்த அம்மாவின் உயிரும் எங்கே கூடவே போயிவிடுமோ என்ற பயம் வரும். அந்த அளவு மேலே போயி விழுந்து பாசத்தை க்கொட்டுவார்கள். அவர்களோ முன்னமே அழுது அழுது, சாப்பாடும் இல்லாமல் பலகீனமாக இருப்பார்கள். இதை போன்று, சம்பரதாயம் என்ற பெயரில், இறந்தவர்களின் நெருக்கமானவர்களுக்கு கஷ்டங்களை கொடுப்பது, கொடுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏன் தள்ளியிருந்து அழுது பாசத்தை காட்டினால் தான் என்ன?

சிலர் பாடி அழும் ஒப்பாரி, நிஜமாகவே கேட்கும் ஆர்வத்தை உண்டு பண்ணும்.  . சமீபத்தில் கேட்டவையில் சில வரிகள்

என்னென்ன சொல்ல நினைச்சியோ..
என் மாமா...
ஒரு வார்த்த சொல்லாம போனியே...
என் மாமா

உன் உடம்பு என்ன பண்ணுச்சோ
என் மாமா
அத தாங்காம போனியோ
என் மாமா

போகிற வயசா உனக்கு
என் மாமா
போகாத இடம் போனியே
என் மாமா..

உனை இப்படிப்பாக்கத்தான்
வந்தேனோ
என் மாமா
உனக்கு முன் நான்
போயிருக்கக்கூடாதோ
என் மாமா...

தொடர்ந்து ஒப்பாரிப்பற்றி கூகுலில் தேடிய போது..

விக்கியில் ஒப்பாரிப்பற்றிய குறிப்பும் பாடல்களும் :-
அதில் ஒப்பாரி ஒன்று ..
ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு நான் ஒய்யாரமா வந்தேனே இப்ப நீ பட்ட மரம்போல பட்டு போயிட்டையே.
பொட்டு இல்ல பூவில்லை பூச மஞ்சலும் இல்ல நான் கட்டன ராசாவே என்ன விட்டுத்தான் போனிங்க.
பட்டு இல்லை தங்கம் இல்லை பரிமார பந்தல் இல்ல படையெடுது வந்த ராசா பாதியியில போரிங்க்கலே
நான் முன்னே போரேன் நீங்க பின்னே வாருங்கோ என சொல்லிட்டு இடம்பிடிக்கப் போயிதங்களா.
நான் காக்காவாட்டும் கத்தரனே, உங்க காதுக்கு கேக்கலையா கொண்டுவந்த ராசாவே உங்களுக்கு காதும் கேக்கலையா.
***************
http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=315

இந்த பதிவில் லட்சுமியம்மா என்ற பெண்ணிடம் பணம் கொடுத்து ஒப்பாரி பாடல்களை பாடச்சொல்லுகிறார்கள் என்பது புது செய்தி. அதுவும் எல்லோர் முன்னிலையிலும் அழ அசிங்கப்பட்டு உறவினர்கள் இதை செய்வதாக எழுதப்பட்டுள்ளது !..
************
ஒப்பாரி பாடல்கள் பதிவுகள் :-

http://kavithamil.blogspot.com/2011/06/blog-post.html

இதில் உள்ள பாடல் - முழுக்க முழுக்க ஒவ்வொரு மனிதனின் உள்ளே இருக்கும் சுயநலம் வெளிப்பட வைத்திருக்கிறது. :((.
*****************

ஒப்பாரி பாடல்களும் நாட்டுப்புற பாடல் வகையை சேர்ந்தவை என்பதற்கு, இப்பாடல் ஒரு உதாரணம்.

தந்தநானே தானநன்னே
தந்தநானே தானநன்னே
தந்தானே தானநன்னே
தானநன்னே தந்தநானே

வானம் கருத்திருக்கு
வட்டநிலா வாடிருக்கு
எட்டருந்து பாடுறேனே
எங்கப்பா எங்கபோன?

இவை எதிலுமே ஆண்களின் பங்கு அறவே இல்லை என்பது ஏன் என்று தெரியவில்லை. :(.

அணில் குட்டி :  நல்ல வேள இதையெல்லாம் பாடி போஸ்ட் பண்ணாம இருந்ததுல நாம எல்லாம் தப்பிச்சோம்..  :)

பீட்டர் தாத்ஸ் :   “We celebrate people's memories here. We acknowledge death through the celebration of people's lives.”

இணைப்புகள் :- கூகுல் மற்றும் இதைப்பற்றி எழுதியுள்ள நண்பர்களுக்கும் நன்றி