மீசை மேல எப்பவும் எனக்கு ஒரு கண்.. :). கொஞ்சம் வித்தியாசமாக மீசை வைத்து இருப்பவர்களை பார்த்தால், எப்படி இதை வைக்கறாங்க.. மெயின்டெயின் பண்றாங்கன்னு யோசிப்பேன்.  அப்பா, தாத்தா சவரம் செய்யும் போது கிட்டவே உட்கார்ந்து ரொம்ப கூர்ந்து கவனிப்பேன்.  தாத்தா கீழே உட்கார்ந்து தான் செய்வார். தாத்தா சவரப்பெட்டிய கொண்டுவந்தாலே... தாத்தா "சவர கல்யாணம்" ஆரம்பிச்சிட்ட்டார் ன்னு குரல் கொடுப்போம், அவ்வளவு நேரம் ஆகும். சவரம் செய்ய அப்பாவும் தாத்தாவும் சவரக்கத்தியை தான் பயன்படுத்துவார்கள். கத்தின்னா அது கத்தி! அவ்வளவு கூர்மையாக இருக்கும், என்னை தொட விடமாட்டார்கள், பார்க்க மட்டுமே அனுமதி. அதை துடைத்து, பேப்பரில் சுற்றி, துணியில் சுற்றி, அதற்கான கவரில் போட்டு, ஒரு பெட்டியில் வேறு வைப்பார்கள். ரேஸரில் அண்ணன் தான் ஷேவ் செய்துக்கும்.

எங்கள் வீட்டில் இடுப்பு வரையிலான முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அப்பா அங்கு நின்றுக்கொண்டே ஷேவ் செய்வார். நான் கண்ணாடிப்பக்கமாக நின்று அவர் ஷேவ் செய்வதை பார்ப்பேன். தாத்தாவும், அப்பாவும்  மீசை சரியாக இருக்கிறதா என்று பெரிய மனுஷியான என்னிடம் கேட்பார்கள். நானும் சரியாக சொல்லுபவளாக இருந்து இருக்கிறேன், இல்லைன்னா வீட்டில் உள்ள அத்தனை பேரை விட்டுவிட்டு என்னை கேட்பார்களா..?  பாருங்க சின்ன ப்புள்ளையிலேயே எம்புட்டு புத்திசாலியா இருந்து இருக்கேன் ன்னு ??! சரி.. சரி...நோ புகைச்சல்.... அதெல்லாம் பிறவியிலேயே இருக்கனும்.. நீங்க யாரும் வருத்தப்படக்கூடாது. ஏன்னா இப்ப என் கணவருக்கும் நானே சொல்கிறேன். (பாவம் அவர் தலையெழுத்து.. வேற யார் கிட்டத்தான் கேட்பாரு? )
இதுல இரண்டு பேருமே ரொம்ப மெல்லிய மீசை மேல் உதட்டை ஒட்டிய மாதிரி வைப்பாங்க.. தாத்தா ஒரு காலக்கட்டுத்துக்கு மேல முழுசும் சவரம் செய்ய ஆரம்பிச்சிட்டாரு. அப்பா அப்படி மீசையை வைக்கும் போது, ரொம்ப கவனமாக கத்தியை பயன்படுத்துவார், நான் உற்று கவனிப்பேன்,  விட்டால் அவர் முகத்தோட ஒட்டிக்கற மாதிரி கவனிப்பேன். சில சமயம் திட்டி, தள்ளி நில்லு பாப்பா, கத்தி பட்டுட போகுதுன்னு சொல்லுவாங்க. என்னவோ அவர் மீசையை சரி செய்வதை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம். இதில் இடது, வலதில் கடைசியில் செய்யும் போது வாயை ஒரு மாதிரி கோணி செய்வார். அப்போது முகம் அஷ்ட கோணலாக இருக்கும், அதை பார்த்து ரிஜிஸ்டர் செய்துக்கொண்டு, அப்பா முடித்தவுடன், அப்பா நீங்க ஷேவ் செய்யறப்ப இப்படித்தான் முகம் இருந்தது என நானும் வாயை கோணிக்காட்டுவேன். தாத்தா மட்டும்.. "இந்த குட்டி என்னா கிருவி" யா இருக்காளே..அவங்கப்பன் கிட்ட எல்லாரும் நின்னு பேசவே பயப்படுவாங்க.. இவ மட்டும் பயமத்து திரியறாளே.. பத்தா (பத்மா), இதெல்லாம் நீ கொஞ்சம் சொல்லக்கூடாது" ன்னு ஆயாவிடம் சொல்லுவார்.  தாத்தா நீங்க கூட ஷேவ் செய்யும் போது அப்படித்தான் கோணறீங்க ன்னு சொல்லிவிட்டு செல்வேன். :)

மீசை என்பது ஆண்களுக்கு ஒரு பெரிய விஷயம் என்பதாக எனக்குப்பட்டது. அதற்காக நேரம் ஒதுக்கி, அதை சரியாக வைத்துக்கொள்ள பெரும் பாடுபடுவதாக தோன்றும். அலுவலகங்களில் என்னுடைய நண்பர்களும் மீசை க்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள். பள்ளி பருவத்தில் என்னுடன் படித்த பிள்ளைகளுக்கு மீசை வர ஆரம்பித்து இருந்தால், அதை நன்றாக, பெரியதாக வளர்க்க பெரும்பாடு படுவார்கள். மீசை தான் அவனை ஆணாக பிரதிபலிப்பதாக நினைக்கிறார்கள் என்றே எனக்கு தோன்றும். பள்ளியில் எங்களின் சீனியர் அக்கா ஒருவருக்கு மீசை இருக்கும். அவரை "அந்த மீசை அக்கா: என்று அட்ரஸ் செய்வோம். இப்போது நினைத்தால் கவலையாக இருக்கிறது, அவரின் மனது வேதனைப்பட்டு இருக்கும். அப்போது எல்லாம் இப்படி அழகு நிலையங்கள் இல்லை. அத்தோடு, கம்பியூட்டர் க்ளாஸ் போக பஸ் ஸில் போகும் போது, தினம் அதே பஸ்ஸில் வரும் ஒரு தோழிக்கும் மீசை இருக்கும். :( இந்த பெண் மிகவும் கலராக வேறு இருப்பார், அதனால் பளிச்சென்று தெரியும். அதைப்பற்றி பேசவும் தயக்கமாக இருக்கும். அதை காட்டிக்கொள்ளாமல் பேச மிகவும் முயற்சி செய்வேன்.

அதே சமயம் வெளிநாடுகளில், வட இந்தியாவில் மீசை இல்லாமல் தான் ஆண்கள் இருக்கிறார்கள்.  சிலருக்கு மீசை ரொம்பவே அழகைத்தரும், சிலர் மீசை இல்லாமல் தான் அழகாக இருப்பார்கள். மீசை இல்லாதவர்கள் முகம் இன்னமும் இளமையாக தெரியும்.  எனக்கு கொஞ்சம் அறிமுகம் ஆகி பழகி இருந்தாலே போதும், அவரிடம் அவரின் மீசை யை பற்றி சொல்லாமல் இருக்கவே மாட்டேன்.. :). அவங்க என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாமல், மனதில் நினைப்பதை சொல்லிவிடுவதும் பழக்கமாக இருந்தாலும், இந்த மீசை விஷயத்தில் மட்டும் என்னவோ ரொம்பவே ஓவர்.

தென் இந்தியாவில் கடவுள்'களுக்கு மீசை இல்லை. அதாவது சிவன், பெருமாள், கனேஷ், முருகன் & குடும்பத்தில் யாருக்கும் மீசை இல்லை. அதுவே வட இந்தியாவில் சிவனுக்கு மிசைவைத்து இருக்கிறார்கள். பூரி கோயில் ஜெகனாத்' க்கு மீசை இருக்கிறதா என்ற சந்தேகம், உதட்டை அப்படி வரைந்து இருக்கிறார்களா இல்லை மீசையா என்று தெரியவில்லை.  இருப்பினும், வட இந்திய க்கோயில்களில் சிவனை மீசையோடு பார்க்கும் போது ஒரு அந்நியம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நாம் வழிவழியாக பார்த்த உருவம் வேறு மாதிரி தெரியும் போது அதை உடனடியாக எளிதில் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. தவிர்த்து நம் அய்யனாரும்,  சார்ந்த கடவுளர்களும் மீசை வைத்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.

எனக்கு மீசை என்றாலே அப்பாவின் மீசை தான் முதலில் நினைவுக்கு வரும். பிறகு சார்லி சாப்ளின், ஹிட்லர், பாரதியார், கமலின் எல்லா மீசைகளும் பார்க்க பிடிக்கும், ரஜினி, வீரப்பன், மாபோசி & காந்திஜி. மீசை இல்லாதவர்களில் நெதாஜி , நேரு மாமா, தில்லு முள்ளு ரஜினி.

மீசை என்பது எதன் அடையாளம் என்று தெரியவில்லை. அதற்கு ஏன் பலர் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் புரிவதில்லை. :) தெரிந்தவர்களை விளக்கச்சொல்லி கேட்கவே இந்த பதிவு.


அணில் குட்டி : ஹி ஹி..அம்மணி ரெம்ப பிடிக்கும்னா... நீங்க வேணா மீசை வளத்துக்கோங்களேன்... ... :))


பீட்டர் தாத்ஸ் : “A man without a mustache is like a cup of tea without sugar”