இது மிகவும் புதியதகவல், சினிமாவிலும், செய்திகளிலும் மட்டுமே பார்த்தும் படித்தும் வந்த எனக்கு, நேரடியாக செய்வினை’யால் பாதிக்கபடுகின்றேன் ?? என்று சொன்ன ஒரு பெண்ணெய் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. மூடநம்பிக்கைக்கு அளவில்லாமல் போய் விட்டதாகவே கருதுகிறேன். அவள் இப்படி சொல்லும் போது எல்லாம் அவளின் தன்னம்பிக்கையை மட்டுமே எண்ணிப்பார்க்க முடிந்தது. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் எல்லோருமே பிரச்சனைக்கு காரணமாக மற்றவர்களை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

எனக்கு மிகவும் தெரிந்த ஒரு பெண், நன்கு படித்தவள், வேலைக்கும் செல்கிறாள், அவளுடைய குடும்பத்திலும் எல்லோரும் படித்து இருக்கிறார்கள். அவளுக்கும் மாமியாருக்கும் எப்போதும் ஓயாத பிரச்சனை, புலம்பிக்கொண்டே இருப்பாள். ஆனால் அதிகபட்சமாக “என் மாமியார் எனக்கு செய்வினை வைத்து விட்டார்கள்,என் இரண்டு கையையும் தூக்கமுடியாத அளவு வலி, வீங்கி வேறு போய் விடுகிறது, எந்த உடல் உபாதைகளும் இல்லாமல் எனக்கு அடிக்கடி இப்படி ஆகிறது” என்று ஓரே அழுகை, அதற்கு காரணம் மாமியாரின் செய்வினையே என்று ஆணித்தரமாக நம்புகிறாள்

எனக்கு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை, செய்வினையில் நம்பிக்கை சுத்தமாக இல்லாததால், அவளிடம் டாக்டரிடம் சென்றாயா? என்றேன். அவளோ இல்லை சாமியாரிடம் சென்றேன் அவர் என்ன சொல்கிறாரோ அப்படி நடந்து க்கொள்கிறேன் என்றாள். படித்தவர்களே இப்படி மூடநம்பிக்கையுடன், செய்வினை சாமியார், செய்வினை எடுக்கும் நல்ல சாமியார் என்று நம்பி நேரத்தையும், நிம்மதியையும், பொருளையும் இழக்கிறார்கள். மிச்சமாவது என்னவொ மன உளைச்சல் மட்டுமே.

அவளின் செய்வினையை சரி என்று இன்னொரு நண்பரும் உதாரணம் சொன்னார். ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் அந்த பையனின் வீட்டில் , அந்த பெண்ணுக்கு செய்வினை வைத்ததால் அவள் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டும், பின்பு மனநிலை பாதிக்கப்பட்டும் போனாள், அந்த பெண்ணின் கணவர் எல்லா நல்ல ஆஸ்பித்திரிகளிலும் மனைவியை அழைத்துசென்றும், நோயை குணப்படுத்தமுடியவில்லை என்றும், அதற்கு காரணமும் செய்வினையே என்றார்.

சரி செய்வினை என்றால் என்ன ? என்று அவர்கள் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டது. செய்வினை செய்யும் சாமியார்கள் கொடுக்கும் மருந்தை நமக்கு பிடிக்காதவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அது எந்த மருத்துவரிடம் சென்றாலும் குணமாகாது???? அதை வெளி எடுக்க நாம் மற்றொரு செய்வினையை எடுக்கும் நல்ல சாமியாரின் உதவியை நாடவேண்டும்.

கதை என்னவோ நன்றாக தான் இருக்கிறது. நான் அந்த பெண்ணிடம் கேட்ட சில கேள்விகள்.

1. மாமியார் ஏதோ சாப்பாட்டில் கலந்து கொடுக்கிறார்கள் என்றால், ஏன் அவர்கள் சமைத்து கொடுக்கும் உணவை சாப்பிடுகிறாய்?
2. மாமியார் இல்லாமல் தனிவீட்டில் உன் வாழ்க்கையை துவக்கலாமே.
3. உன்னுடைய நல்ல சாமியார் அவ்வளவு நல்லவராக, நடப்பதை சொல்பவராக இருந்தால், அவரே மாமியார் செய்வினை வைக்கபோகிறார்கள் இல்லை இனிமேலும் வைப்பார்கள் என்பதை ஏன் சொல்லவில்லை. அல்லது.. தெரிந்தும் ஏன் அதை அவரால் தடுக்க முடியவில்லை.
4. அந்த நல்ல சாமியாருக்கு நீ அடிமையாகிவிட்டாய் என்பதை ஏன் உணராமல் இருக்கிறாய்?
5. அவரால் தான் உனக்கு வாழ்க்கையில் நிம்மதி என்றால், உனக்கு வேறு யாருமே வேண்டாமே?
6. உனக்கு என்று சுயபுத்தி இல்லையா? சுயமாக எது உண்மை எது பொய் என்று யோசிக்க மாட்டாயா.. ஏன் இப்படி நடக்கிறது, அதற்கு நீ என்ன செய்யவேண்டும் யோசித்து செயல் படமாட்டாயா?.. அதைவிட்டு ஏன் இப்படி செய்வினை, சாமியார் என்று அலைந்து கொண்டு இருக்கிறாய்?

எதற்குமே அவளிடம் சரியான பதில் இல்லை என்றாலும், சாமியாரிடம் செல்வதை மட்டும் குறைத்துக்கொள்ளவில்லை. அதில் அதிகபட்சமாக, சாமியார் என்னிடம் எப்படி பேச வேண்டும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று கூட சொல்லிக்கொடுத்து உள்ளார்.

இப்படி படித்தவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட இப்படி சாமியார்களிடம், செய்வினை செயல்பாட்டுவினை, பில்லி சூனியம் என்று பழிகிடந்தால்… என்னவாவது…???

அணில் குட்டி அனிதா:- ஆஹா… கவி..நீங்களே ஒரு சூனியக்காரி ரேஞ்சுக்கு எல்லாம் செய்வீங்கன்னு அந்த அக்காவுக்கு தெரியாம இல்ல போச்சி… உங்க கிட்டேயே..எப்படி பேசனும்னு சாமியார் சொன்னாராமா…? முடியலப்பா !! உங்கள பத்தி தெரியாம அவரு சொல்லிட்டாரு…....சரி வுடுங்க..…நீங்க ஒரு ஹாஃ ஹவர் அந்த சாமியாரை பாத்து பேசுங்க..போதும் !! சாமியார் துண்ட காணோம் துணியக்கானோம்னு ஓடிடுவாரு……. ம்ஹீம்….!! எல்லாரும் என்னைய மாதிரியே இருந்துருவாங்களா,,…கவீஈஈஈஈ…………….


பீட்டர் தாத்ஸ் :- In the middle of the every difficulty lies an opportunity