கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் தமிழச்சி!

இன்றைக்கு எங்களிடம் கேப்பங்கஞ்சி குடிக்க மாட்டியவர், அக்மார்க் தமிழச்சி..மதுரா அவர்கள். இவருடைய படைப்புகள் அனைத்துமே நல்ல வித்தியாசமான தமிழில் எழுதிய படைப்புகள். எனக்கும் அணிலுக்கும் நல்ல தமிழே புரியாது..இவங்க தமிழ் சுத்தமா புரியாது... ஆனாலும் நல்ல தரமான படைப்புகளை தருகிறார்கள் என்பதால் படிப்போம்.. இதோ நம்மிடையே..மதுரா..

வாயைப்புடுங்கற ரவுண்டு:-

கவிதா :-வாங்க தமிழச்சி! எப்படி இருக்கீங்க ?!! இப்ப எங்க இருக்கீங்க.? உங்களை பற்றி சொல்லுங்க....
உங்கள் பதிவில் எனக்கு எழுத வாய்ப்பளித்தமைக்கு (பெருமையுடனும் சந்தோஷத்துடனும்) மனமார்ந்த நன்றி கவிதா. ஜமாய்ச்சிக்கிட்டுருக்கேன்! மஸ்தினியாக இருக்கேன்! :) இப்ப அத்தான் பக்க்க்க்க்க்கத்தில இருக்கேன்! :) நம்ம நாட்டு மண்ணுல. நான் யாருன்னு எனக்கே ரொம்ப டவுட்டு உண்டு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடத்திலயும் வேறு வேறு கோணங்களில் உலகமும், வாழ்கையும், சுயமும், புரியாம புரிஞ்சு குழப்புனதுல, மொத்தமா கலங்குன பார்டின்னு வச்சுக்கோங்க! :)

கவிதா:- உங்க தமிழ் நிஜமாகவே ரொம்ப வித்தியாசமா இருக்கு, . பேச்சு நடை, எழுத்து நடை..ஏன்..சில சொற்கள் கூட ரொம்ப புதிதாக இருக்கு.. காரணம் என்ன?
கன்னா பின்னான்னு நிறைய மொழிகளை பேசும் யதார்த்ததில் வாழ்கை அமைஞ்சதாலன்னு நினைக்கிறேன். மொழி சம்பந்தப்பட்ட மூளையின் செல்கள் எல்லாம் எப்பவும் எக்குத்தப்பா கெமிக்கல் ஃபயர் பண்ணி வார்த்தைகளை எங்க எங்கருந்தோ தோண்டி எடுத்து சொதப்பிருது.

கவிதா:- உங்கள் எழுத்தில் நாங்கள் கண்டது..ஒரு சமயம் கலவி பற்றி பேசும் தீடீரென்று டவுசர் பாண்டிச்சி.. தீடீரென்று ஹிட்லர், கார்டிரைவிங், நீச்சக் என்று தாவுகிறீர்கள் எப்படி..இப்படி?!
அதுதான் என் சுய ரூபம்னு நினைக்கிறேன். மாமியார் வீட்டுல பாத்திரம் கழுவிக்கிட்டே, ஒரு பக்கம் சினிமா பாட்டு கேட்டுகிட்டே, இன்னொரு பக்கம் குவான்டம் மெகானிக்ஸ் நிஜமா பொய்யான்னு தீவிரமா யோசிச்சிட்டிருப்பேன். டம்முன்னு தட்டு சோப்புல நழுவி கீழ விழுந்து, டென்ஷனா பாப்பேன். யாரும் திட்ட மாட்டாங்க, நானே என்னைய திட்டிக்குவேன்!

கவிதா:- நிறைய நல்ல பதிவுகள் இருந்தும் நிறைய பார்வைகள் உங்கள் எழுத்தின் மேல் படவில்லை என்று நினைக்கிறேன்.. நீங்கள் அதைப்பற்றி?
அய்யோ இருக்கிறவங்களே போதுமையா சாமி. போட்டு வறுத்து எடுத்திடாங்க சில பேரு. இப்படியெல்லாம் கூட கோவிச்சாப்பாங்களா ஒண்ணுமில்லாத உளறுலுக்கெல்லாம்னு மண்ட காஞ்சு போயிட்டேன். நமக்கேத்த நாலு பேர் போதும் என்னைக்கும்!

கவிதா:- வியாபார நோக்கோடு.. பதிவுகள் பார்வையிடப்படனும்னு நீங்க நினைக்கிறீங்களா?.. அதாவது.. அதிக மறுமொழி வரவேண்டும்.. அதற்காக..நாம் நம்மை அதிகபடியாக விளப்பரம் செய்து கொள்ள வேண்டும் , அரசியல் செய்தோ..அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிலோ அல்லது எல்லோருடைய பதிவுலும் போய் ஒரு பின்னூட்டம் போட்டு விட்டு வந்தாலோ..அடுத்தவர்களின் பார்வை நம் மேல் விழும் அல்லவா? இதை பற்றி உங்களின் கருத்து
ஹி ஹீ. எனக்கும் நிறைய கமெண்டு வந்தா புடிக்கும்தான். :) பாராட்டு இன்னுமே ரொம்ப பிடிக்கும்! :) ... அப்பட்டமா அதை சொன்னா அல்பம்னு நினைப்பாங்களோன்னு ஒரு பயம் உண்டு. ஆனாலும் வெக்கப்படுறதுக்கு நமக்கு கொஞ்சம் மானம் கம்மி. :) ஆனா விளம்பரப்படுத்தி எழுதுற அளவுக்கு, என் எழுத்து மேல எனக்கு மரியாதை இன்னும் வரலை. சில பேரு நிஜமாவே பயங்கர ஆழமான குறிக்கோள், தத்துவம், எல்லாம் வச்சு எழுதுறாங்க - அவங்கல்லாம் பெரியவங்க. நான் சும்மாத்தான் எழுதுறேன். ஆனா நிறைய பதிவுகள் போய் வாழ்கையின் பல கோணங்கள், அதன் அழகான பார்வைகள் பார்த்து நிஜமாவே ரசிச்சு சந்தோஷப்புட்டுருக்கேன். பின்னூட்டம் விடதுக்கு சோம்பல் பட்டு விட்டுருக்கேன். ரசிச்சதோட சரி.

கவிதா:- உங்கள் எழுத்துக்களில் பெண்ணியம் பற்றிய சிந்தனை நிறைய இருக்கு..அதில் எனக்கு உடன் படாத கருத்துக்கள் நிறையவே இருக்கு.. பெண்ணியம் - என்பதை பற்றி சுருக்கமா நச்சுன்னு சொல்லுங்க
பெண்ணின் இயம் அவ்வளவுதாங்க. பெண்களின் இயம் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டதாய் எனக்கு தோணும் அடிக்கடி. அதை அன்பும் ஆனந்தமுமாய் சமுதாயத்தில் பார்வைக்கு வெளிக்கொண்டு வரணும்னு ஒரு ஆசை உண்டு. குழப்பம், கோபம்தான் சில சமயம் வாங்கிக் கட்டிருக்கேன். :) சுய வாழ்கையில பயப்படுறதே இல்ல, உண்மைய உளறி கொட்டி நிம்மதியா இருந்திருவேன். ஆனா சமுதாயத்தில எப்படி வெளி கொண்டு வரணும் - அவை அறிதல் இன்னும் முழுசாத் தெரியல.

கவிதா:- நீங்கள் எழுதியதில் குறிப்பா
பச்சைக் குத்தின பாண்டிச்சி! ..... இவிங்க யாரு.. சும்மா சூப்பரா பாட்டு எல்லாம் பாடி இருக்கீங்க இந்த பதிவுல.. நீங்க இவிங்க கூட சேர்தவங்களா?"
நானே நானா... யாரோ தானா? மெல்ல மெல்ல மாறினேனா?" :) சொன்னதெல்லாம் உண்மைதான் பேரைத்தவிர :)

அணில்:- தமிழச்சியக்கா..அது என்னாங்கக்கா..
இஸ்.பேக்கு ? “டவுசர் பாண்டிச்சி இஸ் பேக்கு??
எனக்குக்குள்ள ஆயிரம் தமிழச்சி; அதுல ஒண்ணு டவுசர் பாண்டிச்சி. அதுதான் பேக்கு மத்தெல்லாம் கோக்கு மாக்கு :)
எனக்குக்குள்ள ஆயிரம் தமிழச்சி; அதுல ஒண்ணு டவுசர் பாண்டிச்சி. அதுதான் பேக்கு மத்தெல்லாம் கோக்கு மாக்கு :)


கவிதா :- ஹா..ஹா...கோக்கு மாக்கா?!! சரி..உங்களின் ஒரு பதிவில் “
விவாக ரத்து - யதார்த்தமான கண்ணோட்டம்.." பதிவை படித்திருக்கிறேன். அதிகபடியான விவகரத்து பெண்களுக்கு ஆக்கப்பூர்வமானதுன்னு நீங்க நினைக்கறீங்களா?
இனிமையும் இன்றி, இயமும் அன்றி, வாழும் பெண்மையை போற்றும் கொடுமையான கலாசாரமாக நான் தமிழர்களின் வாழ்வு முறையை பார்க்கவில்லை. கலாசார போர்வையில் புகுந்து, இயம் மாறி அஞ்சி வாழாமல், இனிமை இழக்காமல் சிறகு விரித்து புதிய வானில் ரம்மியம் தேடுங்கள் அவ்வளவுதான் என் கருத்து.


கவிதா:- “ஹிட்லரும், நானும், எங்கள் தோட்டியும்" என்ற பதிவில் தோட்டி பற்றியும் உங்க மனஓட்டத்தையும் புர்ஞ்சிக்க முடிஞ்சிது.. இப்பவும் நாகரீகமாக இது நடக்குது தெரியுமா?
இப்பவும் நான் அதை பார்க்க நேர்ந்தால் என்னால் ஒண்ணும் செய்ய முடியாதோன்னு நினைச்சா பயமாதான் இருக்கு. என்ன செய்யணும், எப்படி செய்யணும், அதை பற்றி ஆழமாய் சிந்திக்க வேண்டும், சிந்திப்பதோடு இல்லாமல் செய்ய வெண்டும். செய்வேனா? செஞ்சப்புறம் சொல்றேன். இப்ப வெறும் பேச்சு தான்! கறிக்காவாது.

கவிதா:- ஆண் - ??
பெண்ணின் இயம் அறியாமல் எத்தனையோ வித்தைகள் செய்து பார்க்கும் அப்பாவிகள். மற்றபடி இந்த குழப்பத்திலிருந்து எஸ்கேப் ஆகி, அவர்கள் போக்கில் அவர்கள் இருக்கும் போது இனிமையானவர்கள், அருமையானவர்கள், அன்பானவர்கள், ஆனந்தமானவர்கள்.

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-

மதுரா / தமிழச்சி - ஒற்றுமை வேற்றுமை
தமிழச்சி நிஜம்; பல விதம். நிஜத்தை எழுத்தில் வடிக்கும் ஒரு முயற்சி மதுரா. மதுராவும் ஒரு வகையில் தமிழச்சியே.

உங்கள் மச்சானிடம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் ஒன்று-
எனக்கு என்னை விட உன் மனதில் தெரியும் என் பிம்பம் மிகவும் பிடித்தமானதாய் உள்ளது. அதனையே எதிர்பார்த்து உன்னை மணந்தேனோ இந்த சுய-நல வாதி?

உங்கள் குழந்தைகள் “தமிழச்சிகளாக வளர்க்கபடுவார்களா?
தமிழர்களின் அருமையான உணவு, அழகிய உடைகள், அமுதமான இலக்கிய உலகம் அவர்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் விடப்படும். பாடல்கள், கவிதைகள், நடனங்கள், நாட்டுப்புற கலைகள் அனைத்தும் அவர்களுக்கு காட்டித்தரப்படும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்; திரைகடல் ஓடி திரவியம் தேடு" என்னும் தமிழ் சொல்லாடல்களும் சொல்லிக் கொடுக்கப்படும்! :)

உங்கள் எழுத்தில் உங்களுக்கு பிடித்த பதிவுகள்
அன்பர் நண்பர்களிடமே பகிராத உண்மைகளை, எண்ணங்களை, அப்பட்டமாய் எழுதிய அத்தனை வார்த்தைகளும், மிகவும் பிடிக்கும். அங்கங்கு காணக் கிடைக்கும் அவை.

உங்களுக்கு ப்ளாக் ளில் பிடிக்காத விஷயங்கள்
என் அன்புக்குரியவர்களின் நிஜங்களை வைத்து தருமமாய் செய்கிறேன் என்று நினைத்து சூதாட்டமாய் போன விளையாட்டு, சில பதிவுகள். அது எனக்கு மிகுந்த வருத்தம் தந்தது. அடுத்தவர்கள் பதிவு அவர்கள் விருப்பம். நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.

நீங்கள் ஒரு தமிழச்சி யாக சாதிக்க நினைப்பது ?
வளர்த்த மண்ணில் என்னால் முடிந்த அளவு இனிமை விதைப்பது; ஆனந்தம் காப்பது; உண்மையை மேடை ஏற்றுவது! எப்படின்னு தெரியல.
நீங்கள் எழுதவந்தது ஏன்?என்னைப் போல யாராவது இதே மாதிரி குழப்பங்கள் கண்டு கலங்கியிருந்தால், ஒரு தோழமை காண்பார்கள் என் எழுத்தில் என்பதால். அவ்வகை தோழமைக்காக நான் பல முறை ஏங்கி இருக்கிறேன்.

உங்கள் மச்சான் உங்களை பாராட்டிய ஒரு நிகழ்வு.
மச்சான் பாராட்டித் தள்ளிருவாரு. ஒண்ணா இரண்டா, எப்பவுமே பாராட்டு தான். ஆனா அப்பப்ப குசும்பு நடக்கும் "அந்த பொண்ணு எவ்வளவு அழகு, உன்னை மாதிரி கண்ணு என்னை மாதிரி மூக்கு" அப்படின்னுவாரு - "என் மூக்கு குடை மிளகாய்ன்னு சொல்ற" அப்படின்னு வேதாளம் உடனே ஆரம்பிச்சிரும்! விக்கிரமாதித்தன் மாதிரி பதில் சொல்லி அனுப்பிருவாரு! :)

தமிழச்சி - பிளாக்கில் என்ன சாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? தமிழில் பெண் இயத்தின் உண்மைகளை இனிமையாய் ஆனந்தமாய் எழுதி சமுதாயத்தின் பார்வையில் வைக்கும் மொழித் திறன் மட்டுமில்ல மனப் பக்குவமும் வரவேண்டும் அப்படின்னு ஒரு பேராசை உண்டு! :)

உங்களுடைய மற்ற interest..
பயணம் - பல தொலைவுகளில், பல கலாச்சாரங்களில். பயிரிடுதல் - பழங்கள், நெடு மரங்கள், எனக்குரிய பூமியில், என் வியர்வையில்.

சினிமா எப்படி பார்க்கவேண்டும்?


சினிமா பொதுவாக எல்லோருக்கும் எல்லாமும் பிடித்துவிடாது.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கதைகள் பிடிக்கும். ஒரு படத்தை சிலர் ஆஹா ஓஹோ என்பார்கள்..ஆனால் அதையே..மற்றவர்கள் சே! என்னைய படம் இது “செம கடி” என்பார்கள். “அன்பே சிவம்” என்ற படத்தை நான் எங்கள் வீட்டில் ரசித்து ப்பார்த்தேன்..என் கணவரும் மகனும், என்னை ப்பார்த்து தலையில் அடித்து கொண்டு போனார்கள்.. அவர்களுக்கு பிடிக்கவில்லை.

இங்குள்ள படத்தை பாருங்கள் . இந்த படம் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பில் கட்டும் டேபிளில் கண்ணாடியில் பதிக்கப்பட்ட பூச்சாடியின் படம். இந்த ஹோட்டலுக்கு நாங்கள் மாதம் ஒருமுறையாவது போவோம். இந்த படத்தை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அது சீனக்காரின் முகம் போல தோன்றும். முதலில் தூர இருந்து பார்த்த நான்..அது சீன க்காரிர் ஒருவரின் முகம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் கணவர் முதல் முறை பார்க்கும் போதே “லூசே! அது பூச்சாடி” என்றார். நான் நம்பாமல் பக்கத்தில் சென்று உறுதி செய்தேன். இருந்தாலும் நான் பார்க்கும் போது அது சீனக்காரின் முகம் போல த்தான் எனக்கு தோன்றும்.. அதற்கு என் மகனும் “ அம்மா! உனக்கு கண்ணு தெரியலன்னு சொல்லு அதவிட்டுட்டு அறிஜீவிக்கணக்கா பேசதான்னு நக்கல் அடிப்பான்”..


உங்களுக்கு எப்படி தெரியுதுன்னு பாருங்க.. ?!! இது நான் ஏதோ முடிந்தவரை அந்த பூச்சாடி போல் வரைந்தது..

சரி விஷயத்துக்கு வரேன்.. நம்ம தல கைப்புள்ள ஏதோ பெண்ணியத்தை பற்றி சொல்லும் போது அவர் பார்த்த படம் கருத்தம்மா’ விலிருந்து ஒரு காட்சியை அவர் எப்படி ரசித்தார், எந்த நோக்கத்தோடு பார்த்தார் என்றும் சொல்லியிருந்தார். அது ஒரு தப்பா..?!! அத்தனை பேரும் கருத்தம்மா கண்ணீர் கதையை கேட்டு அழத்தான் வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா.. ? என்னங்க ஒருத்தர் படம் அவங்க இஷ்டத்துக்கு பார்த்து ரசிக்க கூட உரிமை இல்லையா?.. அவர்கள் கருத்தை சொல்ல உரிமை இல்லையா?.. எது சொன்னாலும் பின்னால் ஓடி ப்போய் ஒரு பதிவு அவர் இதை இப்படி சொன்னார் அதை அப்படி சொன்னார் என்று போட்டு எந்தவிதமாக நாம் மிக சிறந்த அறிவாளி என்று நிருபித்து கொள்ள போகிறோம்னு தெரியவில்லை..

இந்த பதிவு கூட அவசியம் இல்லாத பதிவுதான்..ஆனா.. எதையுமே அவர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மனக்குமறல்களை சொல்லவிட கூடாது என்பது போல் ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் பார்க்கும் நோக்கிலேயே பதிவுகளை படித்து அதையும் ஒரு பதிவாக போடுபவர்களக்காக அஞ்சியே நிறைய பேர் தங்களின் உண்மை கருத்தை சொல்லவே தயங்குகிறார்கள்.. மாற்று கருத்து சொல்லித்தான் நாம் யாரென்றும் நம் சிந்தனை ஓட்டம் இப்படி ப்பட்டது என்றும் அடுத்தவர்களுக்கு புரியவைக்க வேண்டுமா என்ன?..

மேலே சொன்ன படம் மாதிரிதாங்க.. ஒவ்வொருத்தரின் பார்வையும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகிறது...

அணில் குட்டி அனிதா:- சரி, நீங்க படம் வரைவீங்கன்னு சொல்லறதுக்கு ஒரு பதிவா.. ஆமா அடுத்தவங்கள குத்தம் சொல்லதன்னு நீங்க அடுத்தவங்கள குத்தம் சொல்றீங்க.. எந்த வூரு நியாயம் இது .? நல்லவா இருக்கு.. இது உங்களுக்கு.. ம்ம்..... ஆனா..இந்த பதிவுல ஒரு நல்ல விஷயம் இருக்கு அது என்னான்னா... கண்ணு தெரியமா எதையோ பார்த்துட்டு.. எதுவோ மாதிரி தெரியுதுன்னு சொல்லி..அதுல வேற.... நீங்க ஒரு அறிவு ஜீவிய போல பார்க்கறதா நெனச்சிகறீங்க.. பாருங்க.. ஹய்யோ ..ஹய்யோஒ........ தாங்கலடா சாமீ . கவி.. கவி........இங்க பாருங்க..நான் யாருன்னு தெரியுதா..??

பீட்டர் தாத்ஸ் :- Don’t measure yourself by what you have accomplished, but by what you should have accomplished with your ability.

கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் -ஜொள்ஸ்

இன்றைக்கு நாங்க சந்திக்க போகிறவரை boat ல போய் பார்த்துத்தான் இன்டர்வயூ பண்ணவேண்டியதா இருந்தது.. ம்ம்... ஜொள்ளுவால மிதிக்கற ஜொள்ளுப்பேட்டைக்கு எப்படி நடந்து போகமுடியும்.. YES !!! இன்றைக்கு நம்ம கூட ஜொள்ளுவிட வந்து இருக்கறது.. நம்ம.. பாண்டி... ஜொள்ளூபாண்டி.. தான்..!!! .... அவரு விடற ஜொள்ளுக்கு..பரிசா.. வேற என்ன..நம்ம சூப்பர் கேப்பங்கஞ்சி .....தான்..!! :)

வாயைப்புடுங்கற ரவுண்டு

அணில் :- வாங்க ஜொள்ளு அண்ணே எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் ஆச்சி பார்த்து.. ..
வா அணிகுட்டி !!! நான் இங்கன தானே சுத்திகிட்டு இருக்கேன் லேட்டஸ்டா நம்ம தானைய தலைவிய கொஞ்சம் Replace பண்ண வேண்டிய பணிகள் இருந்ததாலே கொஞ்சம் பிஸி !!

அணில்:- அண்ணே...ஜொள்ளுவிடவே ஒரு ப்ளாக் ரெடிபண்ணி விடாம தொடர்ந்து ஜொள்ளு விட்டுக்கிட்டே இருக்கீங்களே.. எப்படி இது?
அல்லாரும் பண்றதுதானே ! மத்தவங்கெல்லாம் சத்தம்காட்டாம பண்ணிகிட்டு இருக்காங்க நான் அதையே எழுதிகிட்டு இருக்கேன். அதெல்லாம் தானா வருது அணிலு ! என்ன பண்றது ?

கவிதா: பாண்டி..உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்க..உங்க படிப்பு, வேலை, குடும்பம் பற்றி நீங்க விருப்பப்பட்டா....
நெம்ப கஷ்டப்பட்டு என்ஜினியரிங் முடிச்சிட்டு இப்போ IT யிலே குப்பை கொட்டிகிட்டு இருக்கேன் !! வேறென்னத்த சொல்ல !

அணில்:-அட அண்ணே...நீங்க.. என்ஜினியரா?.. ம்ம்..நாங்க எல்லாரும்..நீங்க ஜொள்ளு விடறதால Ph.d ன்னு இல்ல நெனச்சிக்கிட்டு இருக்கோம்..!
அட சும்மா இரு அணிலு ! வெட்கமா இருக்கு ! ஆமா ஆராச்சும் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கறாங்கன்னா சொல்லு ! Dr. ஜொள்ளுப்பாண்டி நல்லாத்தேன் இருக்கு பேரு !!

அணில்:- அது சரி..ஓசி..பட்டம் வாங்க காத்துக்கிட்டு இருக்கீங்க போல.. அதுக்கு நீங்க அரசியலத்தான் சேரனும்.. சரி..அண்ணே..ஜொள்ளுவிட நீங்க..புது புது ஐடியாவா குடுக்கறீங்களே..எப்படி ரூம் போட்டு யோசிப்பீங்களா?
அட இதுக்கெல்லாம் ரூம் போட்டா செலவு என்னாவறது ? அப்படியே லேடீஸ் காலேஜு , IT பார்க்கு , பீச்சு, சினிமாதியேட்டர், ஷாப்பிங் மால் ன்னு அப்படியேக்கா 360 டிகிரியிலே கண்ணை ஓட்டினாவே போதுமே !!

கவிதா:- எப்பவும் ரொம்ப ஜாலியா ஜொள்ளுவிட்டு க்கிட்டு இருக்கீங்களே.. உங்களுக்கு கொஞ்சம் சீரியசாக சமுதாயம், அரசியல் சார்ந்த பதிவுகள், கவிதைகள், கதைகள் போன்றவை எழுத ஆர்வம் இல்லையா?
இதெனாங்க கவிதா கோக்குமாக்கா கேக்குறீங்க ? சமுதாயம் அரசியல் எல்லாம் பேப்பர்ல பார்கறதோட சரிங்க. கவிதையிலயும் கதையிலயும் கொஞ்சம் ஆர்வம் உண்டுங்க !

கவிதா:- ம்ம்...ஜாலிய எழுதற உங்ககிட்ட..சில சீரியஸ் கேள்விகள் கேட்கலாம் என்று நினனக்கிறேன்.. ப்ளாக்ல இப்ப எல்லாம் சங்கங்கள் அதிகமாகிகிட்டே வருது.. இதை பற்றி உங்களின் கருத்து..?!!
சங்கங்கள் ப்ளாக் உலகின் அங்கங்கள் !! இருந்துட்டு போகட்டுமே !!

கவிதா :- சங்கங்கள் உள்ள உறுப்பினர்களுக்கு ஒரு Direct /Indirect support இருக்குன்னு நினைக்கறேன்.. நீங்க அதைப்பற்றி..
அதெல்லாம் கெடையாதுங்க நீங்க வேற ! நம்ம எழுத்தை பிடிச்சவங்க நம்மளை சப்போர்ட் பண்ணுவாங்க அவ்வளவுதான்.

கவிதா:- ஜொள்ளுவிடறது தவிர பெண்ணைப் பற்றி -
என்னைய பொறுத்த வரையிலே பொண்ணுங்க எல்லாருமே ரொம்ப அன்பானவங்க. அவங்களோட எக்கசக்கமான அன்பை சில சமயம் நாமெல்லாம் தப்பா possessiveness ன்னு நெனச்சுக்குறோம். என்னடா இந்த பொண்ணுங்க எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு அழுகாச்சியா அழுவறாங்கன்னு நாமெல்லாம் நெனக்கிறோம். நம்ம வள்ளுவர் தாத்தா என்ன சொல்லியிருக்காருனா

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்


அர்த்தம் என்னான்னா “அன்பை அடைச்சு வைக்க முடியாது. கண்ணீரே காட்டிக்கொடுத்துவிடும்.” அன்பு கண்ணா பின்னான்னு நெரம்பி கெடக்குறதாலவோ என்னவோ இந்த பொண்ணுங்க அன்பை அடைச்சு வச்சுக்க முடியாம பொசுக்கு பொசுக்குன்னு அழுதுபுடுறாங்க.அம்புட்டுதேன் ! வாழ்க தாய்குலங்கள் !!

கவிதா:- ம்ம் நான் ஏதோ கேட்டு உங்க வாயை புடுங்களாம்னு நெனச்சா நீங்க ஏதோ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ ன்னு கதை சொல்றீங்க..ம்ம்..பரவாயில்லை Next - ஆணாதிக்கம் பற்றிய உங்கள் பார்வை-
ஆண் அன்பிலே ஆதிக்கம் செலுத்தினால் போதுங்க. இந்த வார்த்தையே ஒழிஞ்சிடும் !

கவிதா:- குஷ்பு கலாச்சாரம் உங்களின் அலசல்
அலசலா ? என்னா கவிதாக்கா இப்படி கேட்டுபுட்டீக? எப்போவாச்சும் துணி துவைச்சா அலசுவேன் அவ்ளவுதாங்கோ !!

அணில்:- அண்ணே..அம்மணிக்கிட்ட இருந்து செம சூப்பரா எஸ்கேப் ஆகறீங்க..ம்ம்..நம்ம தல (கைப்புள்ள தான்) இது தெரியாம.. Net ல எல்லாம் search பண்ணி .......ம்ம்.. இதுக்கு மேல என்னத்த சொல்ல................சரி நாம அம்மணிய ஓரம் கட்டிட்டு 2 nd round க்கு போகலாம்.

ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு :-

1. ஜொள்ளு பாண்டிக்கு எதிரா ஒரு ஜொள்ளு பாண்டச்சி இருக்காங்க போல? ..
அட ஆமாங்க. ஒரு அம்மணி இருக்காக. எதிரான்னு சொல்லாதீங்க எல்லாரும் நமக்கு ப்ரெண்டுதாங்கோ !!

2. ப்ளாக்ல ஜொள்ளு ...வெளியில...........
வெளியிலே நான் ஒரு Silent ஜொள்ளந்தேன். நான் ஜொள்ளுவிடுறது என் வாய்க்கு கூட தெரியாதுன்னா பார்த்துக்குங்களேன் !!

3. உங்களின் ஜொள்ளின் சாதனையாக நீங்கள் நினைப்பது
அட போங்க இதையெல்லாம் ஒரு சாதனையா கேட்டுகிட்டு. ஆனா ஜொள்ளுப்பேட்டைய படிக்கறவுக நெறையா பேரு என்னோட ப்ளாக் படிச்சுட்டு நல்லா சிரிச்சு ரிலாக்ஸ் ஆனேன்னு சொல்லிட்டு போறதுதான் என்னோட சாதனையா நெனைக்கிறேன். எல்லாரும் சந்தோசமா சிரிச்சிகிட்டே இருக்கனும்கறதுதான் என்னோட ஆசை !

4. இப்படி நீங்க அநியாயத்துக்கு ஜொள்ளுவிட்ட விஷயம் வருங்காலத்துல உங்க மனைவிக்கு தெரிஞ்சா? (கல்யாணத்துக்கு எங்கள கூப்பிடுவீங்க இல்ல)
அட என்னாங்க நீங்க இப்படியெல்லாம் கேட்டு பீதியக்கொளப்பறீங்க ! என்னைய பொருத்த வரைக்கும் மனைவினா ஒரு நல்ல ப்ரெண்ட் மாதிரிங்க. ஒரு நல்ல ப்ரெண்ட் என்னைய புரிஞ்சுக்க மாட்டாங்களா என்ன ?

5. உங்களின் ப்ளாக் பெண் ரசிகைகள் பற்றி - (எங்களையும் சேர்த்துக்கோங்க)
ஆஹா !!! பெண் ரசிகைகள்னு ஏங்க அவங்களை தனிமைப்படுத்தறீங்க? ஜொள்ளை பொண்ணுகளும் ரசிக்கராங்கன்னு எனக்கு புரியவச்சவங்க அவங்க ! எனக்கு ஊக்கம் கொடுத்து மேன்மேலும் ஜொள்ளுவிட வைக்குறாகுளே அவுக அன்புக்கு நான் அடிமை !!

6. உங்களின் வீட்டில் “ஜொள்ளு பேட்டையின்” ரசிகர்கள் யாராவது?
வீட்டிலேயா ? மொதோ மொதலா குங்குமத்திலே வந்த கதைதான் என்னோட பேரை என் வீட்டிலே சொல்ல வச்சது. என் பேரை கேடுபுட்டு எங்கம்மா கேட்டது “என்னடா பேரு இது ஜொள்ளுப்பாண்டி? ன்னு ஆமா ஜொள்ளுன்னா என்னா ஏதாச்சும் பலகாரமா ? “

7. ஜொள்ளுபாண்டியா நீங்க இல்லைனா வேற யாரா இருந்து இருப்பீங்க? யாரா இருக்க ஆசை படறீங்க?
நான் இப்படியேதாங்க இருக்க ஆசைப்படறேன். நான் நானாகவே இருக்க ஆசை.

8. உங்களின் எந்த பதிவில் ஓவர் ஜொள்ளுல எல்லாரும் மிதந்தாங்கன்னு நினைக்கறீங்க?
அப்படியேல்லாம் வகைப்படுத்த முடியாதுங்க. ஆனா நம்மளோட ஜொள்ளாராய்ச்சியெல்லாமே மக்களை ஜொள்ளிலே நல்லா மிதக்க வச்சிருக்கு !! லேட்டஸ்டா
இஞ்சி இடுப்புன்னா என்னாங்கற வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த பதிவில் வந்த இலியானாவைப் பார்த்து பலபேறு சுனாமியா ஜொள்ளுவிட்டதாக அறிகிறேன்.

9. பிடித்த பெண்கள் - எந்த துறையா இருந்தாலும் (ஜொள்ளுவிடாம சொல்லனும் சரியா)
கேள்வியே தப்புங்க !! எப்படி என்னால குறுகிய மனப்பான்மையோட இருக்க முடியும்னு எதிர் பார்கறீங்க? ஒருதவங்களை சொன்னா இன்னொருத்தவங்களுக்கு கோவம் வந்துடாது ? எல்லாப் பெண்களுமே ஏதாசும் ஒரு வகையிலே பிடிச்சு போய்டுறாங்களே !!

10. கடைசியாக உங்களுக்கு பிடிக்காத கேள்வி- பிடித்த ஆண்கள்
அட யாருங்க இப்படியெல்லம் குண்டக்க மண்டக்க போட்டு விடுறது ? எனக்கு பிடிச்ச ஆண் என் அப்பாதான் !

அணில்:-அண்ணே..எங்க அதுக்குள்ள தப்பிச்சி ஓட பார்க்கறீங்க நாட்டுக்கு ஒரு தத்துவம் சொல்லிட்டு போங்க...

ஜொள்ஸ்ஸின் தத்துவம்:- Time is like a river. You cant touch the same water twice because the flow that passed will never pass again. Enjoy every moment of your Life .

அணில்:- நம்ம ஜொள்ளு சும்மா ஜாலியா..சூப்பரா... கவிதாக்கிட்ட.. எங்கேயும் மாட்டிக்காம ரொம்ப சாதூர்யமாக பதில் சொல்லி .. அம்மணி வீசிய வலையிலிருந்து தப்பிச்சி ஓடிட்டாரு.. ம்ம்... அம்மணி எரிச்சல் தாங்கமுடியாம..... உப்புப்போடத..... ஒழங்கா வேகவைக்காத கஞ்சிய அவருக்கு குடிக்க கொடுத்து..... அவரை வேறு விதமா பழிவாங்கிடாங்க ..ம்ம்.. அவரு இனி.. 2- நாளைக்கு .. பாத்ரூம் விட்டு வெளியில வரமாட்டாருங்கோ..

கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் கைப்புள்ள!

ஒவ்வொரு வெள்ளியும்(முடிந்தவரை), இனி புதிய பகுதி கேப்பகஞ்சி with கவிதா & அனிதா வரவிருக்கிறது. இதில் நம்முடைய பிளாக் நண்பர்கள் மற்றும் வெளியிலிருந்தும் நேர்காணல் செய்து அதன் உரையாடல் தொகுப்பு பதிவாக்கப்படும். நேர்காணலின் போது நண்பருக்கு கேப்பங்கஞ்சி ஒரு லோட்டா பால் விட்டு சர்க்கரை போட்டோ இல்லை தயிர் விட்டு உப்பு போட்டோ அவரவர் விருப்பபடி கொடுக்கப்படும்.. எங்களிடம் முதலில் மாட்டியவர் - நம்ம ஒன்லி ஒன் கைப்புள்ள

வாயைப்புடுங்கற ரவுண்டு :-
கவிதா :-வாங்க கைப்ஸ்! எப்படி இருக்கீங்க ?!!
வணக்கம் கவிதா, ஹாய் அனிதா! இது வரைக்கும் நல்லா தான் இருக்கேன். இனிமே எப்படி இருக்கப் போறேங்கிறது உங்க கேள்வி முடிஞ்சப்பிறகு தான் தெரியும்.
கவிதா -
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லு-ங்களேன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜாலியாக சிரித்து மகிழ நகைச்சுவையான பதிவுகளை இட்டு, படித்தவர்கள் மகிழ்ச்சியான நினைவுகளுடன் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒத்த கருத்துடைய நண்பர்களினால், தொடங்கப் பட்ட ஒரு ‘Cool Hangout Place’ போன்ற ஒரு கூட்டு வலைப்பூ முயற்சி. அனைவரது உழைப்பினாலும், ஒத்துழைப்பினாலும் சங்கத்துக்கு நல்ல ஆதரவு கெடைச்சு நல்லபடியா நடந்துட்டிருக்கு.
கவிதா :-
உங்க படிப்பு, வேலை, உங்க குடும்பம் பற்றி, நீங்க விருப்பப்பட்டா சொல்லுங்க..
அது என்ன விருப்பப்பட்டா...? அதுக்குத் தானே வந்துருக்கோம். நீங்க ஊத்தப் போற கேப்பங்கஞ்சிக்காகவாச்சும் ஒரு ரெண்டு கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லித் தானே ஆவனும்? எம்பி எம்பி ஒரு எம்பிஏ டிகிரி வாங்குனதாலே ஊர் ஊராச் சுத்தி ப்ளாக் படிக்கிறதுக்கு ஒரு கன்சல்டண்ட் வேலை கெடச்சிருக்கு. எதோ எங்கூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனாராம்னு ‘நான் கன்சல்டண்ட், நான் கன்சல்டண்ட்’னு ஊரை ஏமாத்திட்டிருக்கேன். என்னோட குடும்பத்தைப் பத்தி சொல்லனும்னா, எங்க தோப்பனார் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர், தாயார் தடிப்பசங்களுக்காகவே உழைச்சு ஓடாத் தேய்ஞ்ச ஒரு இல்லத்தரசி, இளவல் ஒருத்தரு இருக்காரு...சமீபத்துல அவரும் விரிவுரையாளரா சென்னையில் ஒரு கல்லூரியில் பணியில் சேர்ந்திருக்காரு. நாலு பேரைக் கொண்ட மகிழ்ச்சியான குடும்பம் எங்க குடும்பம். என்னைத் தவிர எல்லாரும் சென்னையில தான் இருக்காங்க.
கவிதா:- இவ்வளவு படிச்சி இருக்கீங்க..ஆனா தெரியவே இல்ல.. ரொம்ப தன்னடக்கம் உங்களுக்கு.. உங்களின் வேலை சம்பந்தமா உங்களின் வருங்கால திட்டம் என்ன?
என்னது...தெரியவே இல்லியா? ஏன் நம்ம மூஞ்சைப் பாத்தா மாங்கா மடையனாட்டம் இருக்கா? தன்னடக்கம் எல்லாம் ஒன்னுமில்லீங்க. சான்ஸ் கெடச்சா சந்துல சிந்து பாடிடுவோம்ல? வருங்கால திட்டம்னு பாத்தா... இன்னும் நெறைய காசைச் சேர்க்கனும். வாங்கி அதை கல்லால போட்டுக்கணும். அம்புட்டுத் தான்.
கவிதா:- பெண் – Define
ஆஹா! கெளம்பிட்டாங்கையா...கெளம்பிட்டாங்கையா! எங்கடா ஆப்புன்னு எதுவும் இன்னும் வரலியேன்னு பாத்தேன். அப்படியே தலைல துண்டைப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்தா கேப்பங்கஞ்சின்னு ஒன்னு குடுத்தீங்களே அதை வேற குடிச்சிட்டேன்?

ஒன்னு பண்ணறேன். காலேஜ் படிக்கும் போது ‘வாட்டாக்குடி இரணியன்’னு படம் ஒன்னு வந்துச்சு. அந்தப் படத்துல கோழி குஞ்சுகளை மீனா கொஞ்சற மாதிரி ஒரு ஸ்டில் ஒன்னு செய்தித் தாள்ல வந்துச்சு. அதை அப்படியே(!) காப்பியடிச்சிட்டு, எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு நாலு வரி ஃபீலிங்ஸ் ஃபீலிங்ஸா கிறுக்கி வச்சிருக்கேன். அதை கீழே இருக்கற சுட்டியில போய் படிச்சிப் பாருங்க. அதுலேயே நாங்க டிஃபைனி வச்சிருக்கோம்.
http://beta.blogger.com/
கவிதா :- உங்களின் interest எழுதுவது, படிப்பது தவிர..
எழுதுவதும் படிப்பதும் என் interestனு யாரு சொன்னா? நெறைய விஷயத்துல மூக்கை நுழைச்சி ஒன்னையும் உருப்படியாத் தெரிஞ்சிக்காம இருக்கறது தான் நம்ம ஒரே interest. அதுலேயே ரொம்ப நாளா இருக்கறதுன்னு பாத்தா கேலிகிராஃபியும்(Calligraphy) தபால் தலை சேகரித்தலும், இப்போ புதுசா போட்டா புடிக்கிறதும்
அனிதா:- தல, பெண்ணியம் பற்றி உங்களின் கருத்து...
இதுக்கு அம்மணியே பரவால்ல போலிருக்கு. இன்னிக்கு எனக்கு டின்னு கட்டி விடாம அனுப்பப் போறதில்லைனு நெனக்கிறேன். இருந்தாலும் நீ கேக்கறியேங்கிறதுனால சொல்றேன். உண்மையில சொல்லப் போனா எனக்கும் பெண்ணியத்தைப் பத்தி ஒன்னும் தெரியாது. சரி, என்னான்னு தெரிஞ்சிக்கலாம்னு விகிபீடியாவுக்குப் போய் ‘Feminism’னு தேடுனேன். எக்கச்சக்கமா மேட்டர் வந்துச்சு. யார் யாரோ ஃபிரெஞ்சு, பிரிட்டிஷ் மேடம் பேரெல்லாம் போட்டுருந்துச்சு. பெண்கள் கல்விக்காகவும், ஓட்டுரிமைக்காகவும், சம உரிமைக்காகவும் போராடறது தான் பெண்ணியம் அப்படீங்கற மாதிரி போட்டிருக்கு. அப்படியே மேல படிச்சா வர்ஜினியா உல்ப்(Virginia Woolf) அப்படீங்கற எழுத்தாளர் ‘Feminism’ அப்படிங்கற சொல்லையே வெறுக்கறதா போட்டுருந்துச்சு. அவங்களைப் பொறுத்தவரை ‘Feminism’னு தனியா எதுவுமில்லையாம். எல்லாமே ‘Humanity’ தானாம். அவங்களோட பர்சனல் வாழ்க்கை பத்தி எல்லாம் படிச்சும், அதைப் பத்தி எல்லாம் ஆராயாம அவங்களோட கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்தா ‘பெண்ணியம்’னு சொல்றது மனிதத் தன்மைக்குள்ள அடங்குனதுன்னு தான் எனக்கும் படுது. ஆண் பால், பெண் பால்ங்கிறதை மறந்து இரு பாலரும் அந்த மனிதத் தன்மையை மட்டும் மதிக்கக் கத்துக்கிட்டா ‘பெண்ணியம்’ அப்படின்னு தனியா எதுக்கும் தேவையிருக்காதுன்னு நெனக்கிறேன். அந்த மனிதத் தன்மைக்குள்ள பல பல மைக்ரோ சமாசாரங்கள் அடங்கியிருக்குன்னும் நெனைக்கிறேன். அது என்னென்னன்னு வெளக்கமாச் சொல்லவும் பேசவும் நெறைய அனுபவமும் அறிவும் தேவைன்னும் நெனக்கிறேன்.

இது இப்படியிருக்க... கருத்தம்மா படத்துல பார்த்த ஒரு காட்சி. டைரக்டரோட ‘டச்’ வெளிப்படற ஒரு காட்சி. கைகால் முடமானத் தன் தந்தையான பேராசிரியர் பெரியார்தாசனைக் கருத்தம்மா ராஜஸ்ரீ குளிப்பாட்டுவது போல அமைந்த ஒரு காட்சி. தென்னங்கீற்று இடுக்குகளின் வழியாக முதியவர் குளிப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் “டேய்! தாத்தா அம்மணமா குளிக்கிறாருடா”ன்னு சொல்லுவதாக வரும். “டேய்! போங்கடா” என அந்தச் சிறுவர்களை ராஜஸ்ரீ விரட்டுவார். அதன் மூலம் கருத்தம்மா எனும் கதாபாத்திரத்தை உயர்வாகச் சித்தரிக்கும் நோக்கிலும் இயக்குனர் வெற்றி பெறுவார். குழந்தையாக இருக்கும் போது தன்னையே கொல்ல முனைந்த, தன் தந்தையின் நிர்வாணத்தையும் பொருட்படுத்தாமல், அவரைத் தன் குழந்தை போல பாவிக்கும் ஒரு பென்ணின் தாய்மை உணர்வு பெண்ணியத்துள் வருமா? இல்லை படிப்பறிவில்லாததால் தான் என்னைக் கொல்ல முனைந்தவனுக்கும் சேவை புரியும், அடிமைத் தனத்துக்கும் அவல நிலைக்கும் நான் உட்படுத்தப் படுகிறேன், இதில் எனக்கு ஒப்புதல் இல்லை என்று போராடுவது பெண்ணியத்துள் வருமா? நக்கலுக்காகக் கேக்கவில்லை. ஏனெனில் விகிபீடியாவில் liberation, suppression, equality இவைகளைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறார்கள். தமிழகக் கிராமங்களில் மேலே சொன்னது போன்ற எண்ணற்றப் பெண்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது என் கருத்து. அப்பெண்களின் பார்வையில் பெண்ணியம் என்பது எது? பதில் தெரியாததாலும், பெண்ணியத்தைப் பற்றி பேச கவிதா வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாலும் உண்மையாகவே தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்கிறேன். யாருக்கிட்டயாச்சும் விளக்கம் இருந்தாச் சொல்லுங்க. நானும் தெரிஞ்சிக்கிறேன்.

ஒன்னை பதிலு சொல்லச் சொன்னா கேள்வியாடா கேக்குறேன்னுட்டு, பேட்டியை முடிச்சிட்டு கெளம்பற நேரத்துல கேப்பங்கஞ்சிக்கு பில்லை நீட்டிடாதே தாயீ. ஜோபியில துட்டு வேற இல்ல!

அனிதா:- தல உங்களின் அழகின் ரகசியம் என்ன?
இப்போ கேட்டியே இது கேள்வி. இப்பச் சொல்றதை, நல்லா கொட்டை எழுத்துல ஃபாண்ட் சைஸ் அம்பதுல போட்டுக்க. நம்ம மேனி எழிலோட ரகசியம் என்னான்னு கேட்டீன்னா சமீப காலம் வரைக்கும் ‘மஞ்சளும் சந்தனமும் சேர்ந்த விக்கோ டர்மெரிக் இல்லை காஸ்மெடிக் தான்’. ஆனா பொண்ணுங்க போடற ஃபேர்னஸ் க்ரீம் எதுக்குன்னு சூர்யா கேள்வி கேக்கச் சொல்லிக் குடுத்ததுக்கப்புறமா இப்பல்லாம் ‘ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம்’ தான். இதெல்லாமும் பூசிக்கலைன்னாலும் நாம அழகோ அழகு தான். ஆனா நாம க்ரீமைப் பூசிக்கிட்டா ஒரு நாலு பேரு வீட்டுல அடுப்பெரியுமில்ல? அதுனால இதை ஒரு பொது சேவையா செய்றேன். வேற ஒன்னுமில்லை. இந்தப் பதிலை மட்டும் போல்ட் இட்டாலிக் அண்டர்லைன்ல கட்டம் கட்டிப் போட்டுடு சரியா?
கவிதா :- நீங்க சாதிக்கனும்னு நினைக்கற ஒரு விஷயம்...
ஒரு விஷயமாவது முழுசா உருப்படியாத் தெரிஞ்சு வச்சிக்கணும். இத சாதிக்க முடிஞ்சாலே அது எனக்குப் பெரிய விஷயம் தான்.
அனிதா :- ஏன் தல... எல்லார் கிட்டயும் ஒத வாங்கறத ஒரு தொழிலாவே ஆக்கிட்டீங்க?
என்ன அனிதா பண்ணறது? ஒத வாங்குனதுக்கப்புறம் ‘எவ்வளோ அடி வாங்குனாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவண்டா’னு ஒரு சர்டிஃபிகேட் குடுத்துடறாங்களே? அது அடுத்ததா ஒத வாங்குறதுக்கு ஒரு ஊக்க மருந்தா அமைஞ்சுப் போயிடுது. என்ன பண்ணறது?
கவிதா:- நீங்க
சிவகுமார் சார் பதிவில் ஒருமுறை பொருளாதாரம் பற்றிய உங்களின் கருத்து சொன்னதற்கு புத்தகம் பரிசா வாங்கனீங்க.. அது போன்ற விஷயங்களை, அதாவது பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவற்றை உங்கள் பதிவிலும் எழுதுலாம் இல்லையா? நீங்க எழுதாம இருக்க என்ன காரணம்.?
ஹி...ஹி...எழுதலாம் தான். ஆனா அடுத்தவங்க கிட்டேருந்து கத்துக்கறதுல இருக்கற ஆர்வம், நாம நாலு பேருக்கு நல்லது செய்யனும்னு வரும் போது இல்லாத போயிடுதுன்னு நெனக்கிறேன். சுயநலமும் சோம்பேறித் தனமும் தான் உருப்படியா எதுவும் எழுதாததுக்குக் காரணம். வேற என்ன?

கவிதா :- சரிங்க தல, நிறைய வெளியிடங்களுக்கு போயிருக்கீங்க.. அப்படி நீங்க போகும் போது கற்றுக்கொண்ட சில விஷயங்கள்?
எந்த ஒரு புது இடத்துக்குப் போனாலும் புதுசா கத்துக்க எதாவது இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதே ஒரு பாடம் தான்.

ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு :-

1. உங்களுக்கு இருக்கற நிக்நேம்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?
மோசி, மோகா, மோகு, மாமா, கைப்பு, கைப்ஸ்...அம்புட்டுத் தான்னு நெனக்கிறேன்.
2. உங்க பள்ளிபடிப்புல உங்களுக்கு மறக்க முடியாத டீச்சர் ?
படிப்போட சேர்த்து, நல்லது கெட்டதுகளையும் சொல்லிக் குடுத்த எங்கத் தமிழ் மிஸ்.
3.உங்கக்கிட்ட உங்களுக்கு பிடிக்காத 3 விஷயம்
சோம்பேறித்தனம், அவநம்பிக்கை, சுயநலம்
4.ப்ளாக்ல சந்திக்க விரும்பற 3 பேர்..
அப்படின்னு குறிப்பா யாருமில்ல. சென்னையில் ஒரு வாரம் தொடர்ச்சியாத் தங்க வாய்ப்பு கெடச்சா, சென்னையில் இருக்கற பதிவர்கள் ஒரு சிலரை-யாவது சந்திக்க ஆசை. அடுத்த வாட்டி சென்னை போகும் போது தான் முயற்சி செய்யனும்.

5.நீங்க ஓவரா அடிவாங்கி அழுதது எப்ப?
ஒன்னா ரெண்டா...நெனைவு வச்சி சொல்றதுக்கு? பெரும்பாலும் சாப்புட மாட்டேன்னு அடம்புடிச்சி அடி வாங்குனது தான் அதிகமா இருக்கும். அடுத்ததா ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு அழுது அடிவாங்கினதா இருக்கும்.

6. ஆமா, நீங்க எதுக்கு ப்ளாக் எழுத வந்தீங்க?
தமிழ்ல எழுதறதும், படிக்கறதும் மறக்காம இருக்கறனும்ங்கிறதுக்காக.
7. இதுவரைக்கும் நல்லா இருக்குன்னு நினைக்கற உங்க 3 பதிவுகள்?
அப்படின்னெல்லாம் பாக்க ஆரம்பிச்சா மொத்தமாவே மூனு தான் தேரும். இருந்தாலும், படிக்கிறவங்க ரொம்ப ரசிச்சதுன்னு நான் நெனைக்கிற மூனு பதிவுகள்.
வச்சான்யா ஆப்பு,
தடிப்பசங்க #3 ,வயசாயிடுச்சாங்க
8.ப்ளாக்ல உங்களுக்கு பிடிக்காத 3 விஷயம்..
என்னோட ப்ளாக்ல தானே?...மூனென்ன மூவாயிரம் இருக்கு! வளவளன்னு எழுதுறது, சமீபகாலமா பின்னூட்டம் போடுறவங்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்லாம இருக்கறது, ஜாலியானப் பதிவா எல்லாரும் எதிர்பாத்துட்டு இருக்கும் போது பெரிய இவனாட்டம் செமத்தியா பிளேடு போடறது.
9.உங்களின் தம்பியிடம் பிடித்த விஷயம் என்ன?
பாசக்காரப் பய. ஆனா நேர்ல பாத்துக்கும் போது எலியும் பூனையும் தான்.
10.கைப்புள்ள /மோகன், ஒற்றுமை& வேற்றுமை.
ஒற்றுமை - நிறம், அப்பப்போ உதார் விடறது, நமக்குன்னே அங்கங்கே தயாரா இருக்குற ஆப்பு.
வேற்றுமை - ஒரு இளைஞனாயிருந்தும், இன்னும் ஒரு இளைஞி கையைக் கூடப் புடிச்சு இழுத்ததில்லை. அதுக்கான தில்லுமில்லை J

அனிதா :- நன்றி தல, சூப்பரா பதில் சொன்னீங்க.. இன்னைக்கு பீட்டர் தாத்ஸ் க்கு பதிலா நீங்க ஒரு தத்துவம் சொல்லி இந்த நேர்காணலை முடிச்சி வைங்க.
கைப்புள்ள :- ஓகே. சாக்ரடீசோட ஒரு கிரேக்கத் தத்துவத்தைச் சொல்லி முடிச்சுக்கிறேன்.

In Greek :-Έν οίδα ότι ουδέν οίδα - Hen oida hoti ouden oida
In English “I know one thing, that I know nothing”

வாய்ப்பளித்தமைக்கு நன்றி அனிதா, கவிதா. அடுத்த வாரம் வரப் போறவங்களுக்காவது கேப்பங்கஞ்சியை, இட்லி மாவுல செஞ்சு குடுக்காம இருக்க முயற்சி பண்ணுங்க. வர்ட்டா?


பிச்சைஎடுக்கும் சோம்பேறிகளும்-செருப்பு தைக்கும் மூதாட்டியும்

ஆபிஸ்சில் நடக்கும் போது, என்னுடைய செருப்பு அறுந்து விட, செக்யூரிட்டியுடம் பக்கத்தில் எங்கே தைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு , அவர் சொல்லிய இடத்தை கண்டுபிடித்து சென்று பார்த்தால், ஒரு தள்ளாத பாட்டி இருந்தார்கள், சரி செருப்பு தைப்பவர் இங்கே எங்காவது பக்கத்தில் தான் இருப்பார் என்று என் கண்கள் தேட, பாட்டியோ என்னை “வாம்மா, வாம்மா” என்றார்கள். கொஞ்சம் தூரத்தில் ஒரு சின்ன பையன் எல்லா கலரும் கலந்த கலவை சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருந்தான். இந்த பையன் தான் தைப்பவனோ..அவன் சாப்பிடுவதால் பாட்டி வர கஸ்டமர்களை விடாமல் கூப்பிடுகிறார்களோ என்று தோன்றியது.

எனக்கு அவரிடம் செருப்பை தைக்க கொடுக்கலாமா என்று தயங்கிய நேரத்தில், பாட்டி கையை நீட்டி செருப்பை கேட்டார்கள்..தயங்கியபடியே செருப்பை கொடுத்தேன். பாட்டிக்கு எப்படியும் 80 வயதுக்கு மேல் இருக்கும், கை, கால் தோல் சுருங்கி, வெளுத்து போன பரட்டை தலையுடன், இடுக்கிய கண்களோடு இருக்கும் அவர்கள் எப்படி இந்த வேலையை செய்ய முடியும் என்று நினைத்தேன்.... செருப்பை கழட்டி அவர்களிடம் கொடுத்து விட்டு எப்படி செய்ய போகிறார்களோ என்று பார்த்து கொண்டு இருந்தேன்.

பார்வை மங்கிபோன பாட்டி, பார்வையை முடியாமல் கூர்மையாக்கி, நடுங்கிய கையோடு நூலை எடுத்து, மெழுகு தடவி, குத்தூசி எடுத்து குத்துகிறார்கள் குத்துகிறார்கள்..ம்ம்ஹீம் எங்கே.... முடியவில்லை.. விடவில்லை அவர்களும்.. ஒருவழியாக குத்தி பின்புறம் நுலை மடக்கி உள்ளே இழுக்கும் சமயம் நூல் வராமல் சிக்கிவிட.. திரும்பவும் ஊசியை வெளியே எடுத்து விட்டு.. நூல் சிக்கலை எடுத்துவிட்டு குத்தூசியை முடியாமல் செருப்பினுள் நுழைத்தார்கள்..

எனக்கோ அவர்கள் ஒவ்வொரு முறை ஊசியை குத்தும் போதும் எங்கே கையில் குத்திக்கொள்ள போகிறார்ளோ என்று திக் திக் என்றது.... ஒருவழியாக முடித்துவிட்டு, குரல் எழும்பாமல் “அஞ்சு ரூபா குடு” என்றார்கள். ஆனால் எனக்கு இன்னும் சேர்த்து கொடுக்கலாம் என்று தோன்றிய மறுகணம், பணம் நிறைய கொடுக்கிறார்கள் என்று அந்த பையன் கவனித்து விட்டால் பாட்டியையே செருப்பு தைக்க நிரந்தரமாக உட்கார வைத்து விடுவானோ என்று தோன்ற,..கேட்ட பணத்தை கொடுத்து விட்டு கிளம்பினேன்..

ஆனால் மனதுக்குள் பாரம்...தினமும் டி.டிகே சாலையை கடக்கும் போது, அங்கிருக்கும் மேம்பாலத்திற்கு கீழே.. 35-45 வயதுக்குட்பட்ட திடகாத்திர தேகம் கொண்ட ஆண்கள் (3 பேர் இதுவரை தினமும் நான் பார்ப்பது), அந்த இடத்தை தங்களுது நிரந்தர வீடாக்கி, முழுநேர வேலையாக பிச்சை எடுத்து கொண்டிருப்பது நினைவுக்கு வர..

தள்ளாத வயதில் பாட்டியும் உழைப்பும் ..சோம்பேறிகளின் பிச்சை எரிச்சாலாகவும்............வாழ தகுதியில்லாத மனிதர்கள் என்று அவர்களை வெறுக்க தோன்றியது.......

அணில் குட்டி அனிதா :- ஏன் கவிதா.. எப்பவும் பெரிய தியாகி ரேஞ்சுக்கு காட்டிக்கறீங்க. . மனசு பாரமா இருக்குன்னு சொன்னீங்களே பாட்டிய உங்க வூட்டுல கொண்டுப்போய் வச்சி சோறு போட வேண்டியதுதானே. .கூட கொஞ்சம் காசு கொடுக்கவே உங்களுக்கு மனசு வரல.. ஆனா.. வாய் நிறைய நல்லா பேசிங்க....... சரி சரி.. முறைக்காதீங்க.. ம்ம்... புரியுது.. உனக்கு இங்க இடம் கொடுத்து வளர்க்கறதே பெரிய விஷயம்..ன்னு சொல்றீங்க.. ம்ம்.... எதுக்கும் நான் கொஞ்சம் இனிமே அடக்கி..வாசிக்கறேன்..... அம்மணி கோவத்துல என்னைய தொறத்திட போறாங்க...

பீட்டர் தாத்ஸ் :- When we have done our best, we should await the result in peace.

காதலும் காமமும்.......

காதல் காமம் இரண்டுக்கும் என்ன அப்படி பெரிய வித்தியாசம் இருக்கிறது. காதல் தொடக்கம்..காமம் முடிவு என்று சொல்லலாமா..? இல்லை காமம் தான் முதல் அப்புறமே காதல் என்று சொல்லலாமா?.. நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் ஒரு படத்தில் சொல்லுவார் - ஒரு பெண்ணை பார்த்ததும், அவளை தொட்டுப்பார்க்க வேண்டும், அவளை நமக்கென்று சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் தோன்றும், அந்த தொட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் வருவதால் காமம் தான் முதல் அது பிறகு காதலாய் மாறுகிறது. பார்த்தவுடன் காதல் என்பது எல்லாம் பேத்தல் என்ற அவரின் மிக யதார்த்தமாக சொல்லப்பட்ட வார்த்தைகள்.

ஒரு பெண்ணை/ஆனண பார்த்தவுடன், இவள்/இவன் நமக்கு (தனக்கு மட்டும்) சொந்தம் ஆகவேண்டும் என்று நினைப்பதில் காதல் மட்டும் இருக்கிறாதா?.. நிச்சயம் இல்லை. காமம் கலக்காத காதல் இருக்கிறது என்பது எல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானம். அப்படி நிச்சயமாக ஒன்றும் இல்லை. ஆனால் காதல் கலக்காத காமம் நிறையவே நிரம்பி கிடக்கிறது. பார்க்கும் பார்வையிலிருந்து, நடந்துக்கொள்வது, பேசுவது, தொடுவது எல்லாவற்றிலுமே மிதி மிஞ்சி பார்க்கலாம். கவியரசு வைரமுத்து அவர்களின் மிக அழகாக அற்புதமான வரிகள்-

ஆடைக்குள் நிர்வானத்தை தேடுவது காமம்
நிர்வானத்துக்குள் ஆடையை தேடுவது காதல்

காதலுடன் எழுதும், பேசும் வரிகளில் ஆபாசமும், வக்கிரமும் சேர்ந்து இருக்காது. அதற்கு நேர் எதிர் காமத்துடன் பேசும், எழுதும் வார்த்தைகளில் நிறைய ஆபாசமும், வக்கிரமும் இருக்கும். நம் தமிழ் சினிமா பாடல்களில் நிறைய உதாரணங்கள் இரண்டிற்குமே உண்டு. ஒரு ஆணோ பெண்ணோ பேசும் போதே அதில் காதல் மிஞ்சி இருக்கிறதா இல்லை காமம் மிஞ்சி இருக்கிறதா என கண்டுக்கொள்ளலாம். மெல்லிய ஆழமான உணர்வுகளை பிரதிபளிப்பது காதல், வல்லிய ஆபாசமான உணர்வுகளை பிரதிபளிப்பது காமம்.

நண்பர் ஒருவர் ஒரு பெண்ணை விரும்பினார், திருமணமும் செய்துக்கொள்லும் அளவிற்கு விரும்பினார், அவரின் விருப்பம் என்ற வார்த்தைக்கு பொருள் காதல் இல்லை matching என்கிறார். இன்றுவரை புரியவில்லை, ஒரு பெண்ணை மனதிற்கு பிடித்து, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் ஒருவர் அது காதல் இல்லை என்று சொல்வது விளங்காத ஒன்று. அதாவது காதல் என்பது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வருவது, படிப்பு, பணம், அழகு, எதிர்காலம் எதையுமே பார்க்காமல் வருவது. ஒருவரை பார்த்தவுடன் வருவது. ஆனால் நண்பருக்கு வந்த விருப்பம், எதிர்பார்ப்புக்கு உட்பட்டது, இவள் நம் வாழ்க்கைக்கு சரியாக இருப்பாள், இவளின் குணம் நம் வாழ்க்கை துணையாக இருக்க பொருந்தும் என்ற எதிர்பார்ப்புடன் வந்ததால்..அதற்கு பெயர் matching என்றார்.

காதல் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் தொடங்கினாலும், பிறகு நிறைய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்குகிறது என்பது தான் உண்மை. காமத்திற்கு அப்படி ஒன்றும் இல்லை ஒன்றே குறிக்கோள் “உடம்பு”. காதலை போன்ற மனம் சம்பந்தபடாத மிக எளிதான விஷயம். காதல் மிக மெல்லிய, அற்புதமான உணர்வு என்றாலும், அதுனுடைய வலியும் சுமையும் அதிகம். காமத்திற்கு அப்படி மனதளவில் வலி ஒன்றும் இல்லை. காமம் முயற்சிப்போம் கிடைத்தால் சரி இல்லையேல் ஒரு பிரச்சனை இல்லை. காதல் கிடைக்கவில்லை என்றால், அதன் விளைவு அனுபவித்தவர்களுக்கு தெரியும் வேதனையும், விரக்தியும், காதல் எளிதல்லவே.... உடம்புக்கும்,மனதிற்கும் உள்ள வித்தியாசமே காமமும் காதலும்..

கவியரசு ஒரு படத்தில் சொன்னது - உன் காதல் மட்டுமே வேண்டும் என்பதால் உன்னையே சுற்றி வருகிறேன்.. யாரை வேண்டுமானல் காதலிக்கலாம் என்றால் ஒரு நாயை கூட காதலிக்கலாம். நீ மட்டுமே வேண்டும் என்பதால் உன் பின்னாலேயே இருக்கிறேன்.. இல்லையேல் ஒரு விபச்சாரியிடம் போய் இருக்கலாம்.. (வார்த்தைகள் மாறியிருக்கலாம் - எப்போதோ கேட்டது).

நிறைய குழப்பம் காமத்திற்கும் காதலுக்கும், நிறைய மக்கள் இரண்டையும் சரியாக புரிந்துக்கொள்ளாமல், சிலர் காதலை காமமாக நினைத்துக்கொள்வதும், மேலே சொல்லியது போன்று காதல் என்றாலும் அது காமத்தில் முடிவதால் காமமே கண்களுக்கு பெரிதாக தெரிவதால், காதலை காமமாக நினைத்து எழுதும் கவிதைகளையும், கதைகளையும் படிக்க நேர்ந்ததால்.. இதை எழுத நேர்ந்தது.....

அணில் குட்டி அனிதா:- ஐயோ....ஐயோ......ஐயோஓஓஓஓ......................... கவிதா..ஆஆ......... நீங்க லூசா.. டைட்டா..?!! அந்த குழப்பத்தை முதல்ல தீர்த்து வைங்க..!! தாங்க முடியலைங்க.. உங்க லக்ச்சர். ஏங்க இப்படி..?!! வர வர உங்க இம்ச தாங்க முடியலைங்க..சரி இப்ப என்னத்தான் சொல்லவரீங்க..?!! மக்களா! அம்மணிக்கிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்க.. .. எந்த நேரத்துல என்ன செய்வாங்களோ..?!! ஏன்னா.. அவங்க..இன்னும்.. லூசா ..டைட்டா?!! confirm பண்ணல...............

பீட்டர் தாத்ஸ் :- The joy that you give to others is the joy that comes back to you.