ராஜஸ்தான் மாநில தார் பாலைவனத்தில் அமைந்த ஜெய்சல்மேர் , ஜோத்பூர் நகரங்களைக்காண சென்றிருந்தோம். தனிப்பட்ட சூழ்நிலை காரணமாக உடனுக்குடன் இந்த பயணத்தைப்பற்றி எழுத இயலவில்லை.
குறைந்தபட்சம் 4-5 நாட்கள் இல்லாமல் இரண்டு இடங்களையும் பார்க்க முடியாது. இதில் 2 நாட்கள் இங்கிருந்துசென்று வர சரியாகயிருக்கும். ஜோத்பூருக்கு அநேகமாக எல்லா நகரங்களிலிருந்தும் விமானம், பேரூந்து, ரயில் சேவை உள்ளது. ஆனால் ஜெய்சல்மேர்'க்கு ஜோத்பூர் சென்று தான் செல்ல வேண்டியிருக்கும். நேரடியாக போக்குவரத்து வசதி குறைவே.
ஜெய்சல்மேர் முழுவதும் மணல் பாலைநிலமாக உள்ளது. ராஜஸ்தானின் "தங்க நகரம்" (Golden City) என்று அழைக்கப்படும் இந்நகரத்து வீடுகள், கட்டிடங்கள், கோட்டை, அரண்மனை என எல்லாமே அங்கு கிடைக்கும் மஞ்சள் நிற மணற்கற்கலால் கட்டப்பட்டு, நகரமே மஞ்சள் நிறமாக காட்சி அளிப்பதால் இப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. நவம்பரில் சென்றதால் பகலில் அதிக வெயிலும், இரவும் அதிக குளிருமாக இருந்தது. ஆண்டு முழுவதும் வறண்ட வானிலை கொண்ட
இடமாகவே இருக்கிறது. இங்கு கம்பு, சோளம், வரகு, பார்லி போன்ற சிறுதாணியங்களைப் பயிரிடுகின்றனர். உணவு பழக்கமும் இவை சார்ந்தே உள்ளது. சோளம், வரகு , கம்பு சப்பாத்திகள் கிடைத்தன. கோதுமை சாப்பாத்தியும் கிடைக்கிறது. தவிர ராஜஸ்தானின் தாலி கிடைக்கிறது. இதில் பாஸ்மதி அரிசி சாதம், இரண்டு வகை காய்கறிகள், ஒரு பருப்பு குழம்பு, அப்பளம், சப்பாத்தி மற்றும் ராஜ்மா பயறு வகையில் செய்த ஒரு குழம்பு, ஒரு இனிப்பு,
ஊறுகாய் என ராஜஸ்தான் மதிய உணவு பிரமாதம்.
ஜெய்சல்மேரில் முக்கியமாக பார்க்கவேண்டியது கோட்டை. மஞ்சள் நிற மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டை, பகல்
நேரத்தில் சூரியக் கதிர்களால் தங்கம் போல் ஜொலிக்கிறது. இதனால் 'தங்கக்
கோட்டை' என்றும் சொல்லப்படுகிறது. இங்கு இப்போதும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோட்டைக்குள் சென்று வந்தது போல இல்லாமல் ஒரு நகரத்தினுள் சென்று வந்தது போல இருந்தது. அன்றாட வேலைக்காக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள், தள்ளுவண்டியில் காய்கறிகள்
விற்றுக் கொண்டிருக்கும் வியாபாரி, சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும்
மாணவர்கள், வெளிநாட்டுப் பயணிகள், தெரு ஓர டீக்கடைகள், பிரெஞ்சு, இத்தாலிய,ராஜஸ்தான் உணவகங்கள், கார், சைக்கில், இரு சக்கர
வாகனங்கள், வண்டி கடைகள், பால்/தயிர் விற்பவர்கள் என மன்னர்கள்
காலத்தில் இங்கே வாழ்ந்த மக்களின் வம்சாவளிகள் இன்று வரை இடம் பெயராமல்
வாழ்கிறார்கள். மக்கள் தொகை காரணமாக, கோட்டையை விட்டு வெளியேறி, சுற்றியுள்ள இடங்களில் குடியேறி இருக்கிறார்கள்.
கோட்டைக்கு உள்ளே அழகான சிற்ப ஓவிய வேலைபாடுகள் நிறைந்த 7 ஜெயின் கோவில்கள் மற்றும் பல அரசகுடும்ப அரண்மனைகள் உள்ளன. வியாபாரிகள் கட்டி வசித்து வந்த வீடுகளை ஹவேலிகள் என்று அழைக்கிறார்கள். ஹவேலிகள் அவர்களின் வாழ்க்கை முறையையும், மேட்டிமைத் தனத்தையும், அன்றாட பழக்க வழக்கங்களையும் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. ஒவ்வொரு மாடியிலிருக்கும் ஜன்னல்கள் வழியாக ஜெய்சல்மேர் நகரத்தின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.இந்த கோட்டையை முழுமையாக சுற்றிப்பார்க்க 5-6 மணி நேரம் ஆகும்.
தவிர, இங்கு 28 கிலோ மீட்டர் தொலைவு வரை மட்டுமே பாயக்கூடிய கக்னி (Kakni) என்ற ஆறும், ஓர்ச்சில்/புஜ்-ஜில் எனும் ஏரியும் உள்ளது. இந்திய-பாகிஸ்தான் நாட்டு சர்வதேச எல்லை இங்கு உள்ளது. அரசு அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது, கூட்டமேயில்லை. ஆர்வம்/நேரம் இருப்பவர்கள் சென்று பார்க்கலாம்.
ஜெய்சல்மேர் சென்றால் ஒரு நாள் இரவு பாலைவனத்தில் அமைக்கப்பட்ட ஏதோ ஒரு விடுதியில் (உங்களின் பட்ஜெட் க்கு தகுந்தார் போல) தங்கி, மாலையில் பாலைவனத்தில் ஒட்டக சவாரி, ஜீப் சவாரி, இரவு அவர்களின் பாரம்பரிய நடனத்துடன் சேர்ந்து அளிக்கப்படும் பாரம்பரிய உணவு போன்றவற்றை கண்டும் உண்டும் களிக்கலாம். காலையில் கோட்டை & மற்ற இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு , இரயில் பயணமாக ஜோத்பூருக்கு வரலாம்.
ஜோத்பூர் பயணம் -
ஒரு முக்கியமான கலாச்சார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமான ஜோத்பூர் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்நகரம் 'நீல நிற' நகரம் Blue City என்றும் 'சூரிய நகரம்' என்றும் பெருமையாக அழைக்கப்படுகிறது. இங்கு வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கும் நீல நிறத்தில் வண்ணம் பூசுகிறார்கள்.
ஜோத்பூரிலும் மிகப்பெரிய கோட்டை உள்ளது, இங்கு மக்கள் வசிக்கவில்லை ஆனால் 'Royal Marriages' நடைபெறுகின்றன. நாங்கள் சென்ற இரவு, ஒரு திருமணத்திற்காக 'கத்ரீனா கைஃப்' பின் நடனம் இருப்பதாக பேசிக்கொண்டனர். அநேக ஹாலிவுட் நடிகை, நடிகர்களின் திருமணங்கள் இங்கு தான் நடக்கின்றன.
நான் வேலை செய்யும் அமெரிக்க கம்பெனி முதலாளியின் சொந்த ஊர் ஜோத்பூர், அதிர்ஷடவசமாக அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கும் சமயம் நாங்களும் அங்கு சென்றதால், அவரின் ஆலோசனை மற்றும் ஏற்பாட்டின் படி ஜோத்பூரின் கோட்டை மற்றும் பிற இடங்களை சுற்றிப்பார்த்து வந்தோம். 2 நாட்கள் அவரின் உபசாரத்தில் தலைசுற்றி போனோம். எங்களை கண்ணும் கருத்துமாக கவனித்துகொண்டார். ஜோத்பூர் கோட்டை மிக பிரம்மாண்டம். சுவரோவியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், அரச குடும்பங்கள் பயன்படுத்திய
அரிய பழங்கால பொருட்கள் மற்றும் சேகரிப்புகளை கண்டு
வியக்கலாம்.. குழந்தைகளான விதவிதமான தொட்டில் ஒரு அறை முழுக்க வைக்கப் பட்டிருந்தன. கால்கள் வலி எடுத்து நடக்க முடியாமல் எப்போது உட்காருவோம்னு ஆகிவிட்டது.
ஜோத்பூரில் மேலும் பார்க்கவேண்டிய இடங்கள் -
தூர்ஜியின் படி கிணறு - Step well. படி படியாக இறங்கிக்கொண்டே போகிறது. இரவு நேரங்களில் ஒவ்வொரு படியிலும் விளக்கேற்றி வைத்து அழகு படுத்துக்கிறார்கள்.
உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகம்;; உமைத் பவன் தற்போது ஒரு
ஹோட்டலாக உள்ளது. இருப்பினும், ஹோட்டலின் ஒரு பகுதி பார்வையாளர்களுக்காக
திறந்து வைக்கப்பட்டுள்ளது, அரச
குடும்பங்களின் சில அரிய பழங்கால பொருட்கள் மற்றும் சேகரிப்புகளை கண்டு களிக்கலாம்.ஜஸ்வந்த் தடா - மகாராஜா சர்தார் சிங்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கல்லறை 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கொஞ்சம் தாஜ்மகலை நினைவு கூர்கிறது. கடிகார கோபுரம்- ஆங்கிலேயர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட கடிகாரம்.
மேலும் கடிகாரம் பார்க்க போகும் வழியில் இருக்கும் பெரிய கடைத்தெரு, துணிக்கடைகள், உணவு விடுதிகள், இனிப்பு பலகார கடைகள் என கடைசியாக இவற்றையும் சுற்றிப்பார்த்து விட்டு வரலாம்.
என் கம்பெனி முதலாளி'யின் குடும்பத்தினர் நடத்திவரும் மிகப்பெரிய சாயி கோயிலுக்கு (Sai Mandir, Motiba Nagar, Pal Road, Jodhpur) சென்று பிராத்தனை செய்து வந்தோம்.
இக்கோயில், அவர்களின் சொந்த செலவில் மிக அருமையாக பராமரிக்கப்பட்டு , தினப்படி ஆரத்தி, பூஜை, வியாழக்கிழமை தோரும் பொது மக்களுக்கு அன்னதானம் என எல்லாமும் செய்யப்பட்டு வருகிறது. தவிர, தங்கும் அறைகள், விநாயகர், நவகிரகங்கள், சிவன் சக்தி, லக்ஷ்மி தேவி என தனித்தனியாக எல்லா தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன.
முதலாளி குடும்பத்தினரும் ஜோத்பூர் நகரத்தின் நடுவில் ஒரு ஹவேலியில்
வசித்து வந்தவர்களே. இப்போது சாயி கோயில் அமைந்திருக்கும் மோதிபா நகரில்
சாய் கோயில் அருகில் வசித்து வருகின்றனர்.
ஜெய்பூரும் அருகில் தான் உள்ளது, பல ஆண்டுகள் முன்னமே இங்கு சென்று வந்துவிட்டதால், ஜோத்பூர் & ஜெய்சல்மேர் மட்டும் சுற்றிப் பார்த்து வந்தோம்.
Pictures courtesy : Thankyou Google.
பீட்டர் தாத்ஸ் : Travel isn’t always pretty. It isn’t always comfortable. Sometimes it
hurts, it even breaks your heart. But that’s okay. The journey changes
you; it should change you. It leaves marks on your memory, on your
consciousness, on your heart, and on your body. You take something with
you. Hopefully, you leave something good behind.” – Anthony Bourdain