சிராப்பள்ளி -என்ற பெயரோடு, திரு சேர்க்கப்பட்டு திருச்சிராப்பள்ளி ஆகியிருக்கிறது.

அம்மா அப்பாவோடு ஒரு வருடம் பொன்மலையில் தங்கியிருந்தோம். 3 ஆம் வகுப்பு படிச்சேன், முதலில் தனியார் பள்ளியிலும், பின்பு ரயில்வே பள்ளியிலும் படித்தோம். அப்போது ஒருமுறை அப்பா, என்னையும் சின்ன அண்ணனையும் கல்லணை & முக்கொம்பு விற்கும் அழைத்து சென்றது நினைவில் இருக்கிறது. குறிப்பாக, கல்லணை.

கல்லணை : புளிசாதம் கட்டி எடுத்துக்கொண்டு, பேரூந்தில் கல்லணை சென்று, அப்பாவின் கையைப்பிடித்துக்கொண்டு, அணையின் இந்தப்பக்கத்திலிருந்து நடந்து அந்தப்பக்கம் வரை சென்றதும், அப்பா அணையைப்பற்றி சொன்ன சில தகவல்களும் பசுமரத்தாணியாக மனதில் பதிந்தது மட்டுமல்லாது, இத்தனை ஆண்டுகள் கழித்து சென்றும், அணை மற்றும் அதை ஒட்டிய பூங்கா நினைவில் இருந்தது...முக்கொம்பு சுத்தமாக நினைவில்லை. :)

அப்பாவின் காலத்தில் இணையமில்லை,அவரின் கட்டிடம் சார்ந்த தொழில்நுட்ப ஆர்வமும், அதைத்தெரிந்துக்கொள்ள எடுத்த முயற்சியும், சிராப்பள்ளியைச் சுற்றி பிராம்மாண்ட கோயில்கள் பல இருக்க, அவரின் பணிகளுக்கு இடையே எங்களை கல்லணை & முக்கொம்பு விற்கு மட்டும் அழைத்து சென்றது, அவரின் ஆர்வத்தையும், அவர் குழந்தைகளுக்கு எது முக்கியம் என்பதில் அவரின் தேர்வும் தெரிகிறது.
.
கல்லணையைப்பற்றி ஏராளமான தகவல்கள் இணையம் முழுக்கக்கிடைக்கிறது. அவற்றில் பகிரப்பட்டுள்ள தகவல் எல்லாவற்றிலுமே, அணை இன்றளவும் சிதையாமல் இருக்க, கற்கலுக்கு இடையே வைக்கப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட பசை, ஆனால் அந்த பசை எப்படி எதனால் செய்யப்பட்டதென  கண்டுப்பிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவும் இதைப்பற்றி சொல்லியிருந்தார், சுண்ணாம்பு கலவையோடு, முட்டை உடைத்து ஊற்றித்தயார் செய்ததாக சொன்னார். இதைத்தவிர அணையைப் பற்றி அவர் சொன்னது எதும் நினைவில்லை..

தாஜ்மகலை விடவும், உலக அதிசயத்தில் ஒன்றான இந்த அணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழக சுற்றுலாத்துறை, இந்த இடத்தை சிறந்தமுறையில் பராமரிக்க ஆவன செய்யவேண்டும், உணவகங்கள், கழிவறை, நிழல் குடைகள், குடிநீர் வசதிப்போன்றவை செய்துத்தரவேண்டும். பராமரிப்பின்றி மிகவும் அசுத்தமாகவும் இருக்கிறது.

உச்சிப்பிள்ளையார் கோயில் ; கல்லணையில் மணலை வாரிக்கொண்டு பேய் க்காற்று வீசியது, பிள்ளையார் கோயிலில் மலையின் மேல் நிற்கவே முடியவில்லை, ஆளை கீழேத்தள்ளிவிடுமளவு காற்று. நடுவே தாயுமானவர் கோயிலின் உயர்ந்த தூண்கள், சிற்ப வேலைபாடுகள் மிகவும் கவர்ந்தது. தாயுமானவருக்கு வேண்டிக்கொண்டு வாழைத்தார்கள் வைத்து பூசை செய்து, பின்பு அதை பக்தர்களுக்கு விநோயகம் செய்கின்றனர். கடுப்பான ஒரே விசயம், உச்சி மலையின் ஓரங்களில் நின்று 'செல்ஃபி' எடுத்தவர்கள்>..

திருவரங்கம் ;  திருச்சியில் இருந்தபோது, அப்பா அழைத்து செல்லாவிடினும், உறவினர்களின் வருகையின் போது ஶ்ரீரங்கமும், உச்சிப்பிள்ளையார் கோயிலும் சென்றிருக்கிறோம், ஆனால் நினைவில்லை. வரிசையில் காத்திருந்து சென்றும் நொடி'ப்பொழுது ரங்கநாதரை ப்பார்க்க அனுமதிக்கறாங்க. ஆனானப்பட்ட வெங்கடாசலபதியைக்கூட தொலைவிலிருந்தே தரிசனம் செய்துக்கொண்டுப் போகமுடியுது.. ஆனால் இங்க 'ரொம்ப பண்றாங்க..' ஏன் இத்தனை கெடுபிடி, இத்தனை ஜருகண்டீ ' ன்னு பிரியல...

அழகான அம்சமான தெய்வக்கடாச்சம் மிக்க கோமாதா, அதன் பின்னே தேவதையைப்போல வெள்ளை வெளேரென ஒரு குதிரை, அதன் பின்னே ஆடி அசைந்து வரும் யானையின் மேல் குடத்தில் தண்ணீரோடு ஒரு ஐயங்கார்.. னு இவங்க மூவரும் முதலில் சென்று வந்தப்பின்னரே பக்தர்கள் அனுப்பப்பட்டனர். இவங்க மூவரும் என்ன பூசைசெய்ய அழைத்துச்செல்லப்பட்டனர்னு தெரியல...

கோயில் யானை வெளிப்புர சாலையில் என்னை வழிமறித்து நகரவிடாமல் காசுக் கேட்க (அதை காதோரம் குத்தி குத்தி கேட்கவைத்தான் பாகன்), அதையும்,  அந்த பாகனையும் பார்த்தபோது, எங்க அது கடுப்பாகி, சமயபுரம் யானைமாதிரி தூக்கி அடிச்சிடப்போதுன்னு பயந்து, அது தும்பிக்கையை என்னிடம் தூக்கி காட்டுவதற்குள் அநியாயத்துக்கு குனிந்து காசைக்கொடுக்க, காசை வாங்கிட்டு நான் நிமிருவதற்குள், அது என் முதுகைத்தொட்டு ஆசிர்வாதம் செய்ய. லைட்டா பகீர்னு இருந்துச்சி, அது அலேக்கா சுத்தி தூக்கிப்போட வசதியாயில்ல நின்னுருக்கேன்???. தூரக்கிருந்து, இந்தக்காட்சியை என் வூட்டுக்கார் நமட்டு சிரிப்புடன் கவனித்தார். பொண்டாட்டி பயப்படறதப்பாத்த எந்த வூட்டுக்காருக்குத்தான் சந்தோஷமா இருக்காது சொல்லுங்க.. ??

சமயபுரம் ; ரொம்பவே கூட்டம், கூட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் அசிங்க அசிங்காம திட்டிக்கொண்டு சண்டை, அதில் பெண்களும் அடக்கம். இவர்களின் பொன் மொழிகளில் முதலில் நனைந்துவிட்டு தான், அம்மனை தரிசனம் செய்ய முடிந்தது.  ஏன் இந்த அம்மனுக்கு இத்தனைக்கூட்டம்னு தெரியல... 250 ரூ டிக்கெட் வாங்கி போயும், கூட்டத்தில் சிக்கி சின்னா பின்னமானோம் என்பதே யதார்த்தம்.

திருவானைக்காவல் :  அடேங்கப்பா.. திருவாரூர் கோயிலை விட பிரம்மாண்டமாக இருந்தது.  இத்தலத்தின் வரலாறு, ஹாலிவுட் கதைப்போல இருக்கு, நம்பும்படியாகவும் இருக்கு என்பதை தான் நம்பமுடியல.  நம்மூரில் இப்படியான பல வரலாற்று/இதிகாசக் கதைகள்  இருந்தாலும், இந்தக்கதையை அடிச்சிக்கவே முடியாது. கோயிலைக்கட்டிய மன்னர் கோச்செங்கட் சோழன். இவரைப்பற்றியக் கதையும் மிக சுவாரசியமானது. மன்னரின் தாயார், பிரசவ நேரத்தில், வலி எடுத்தப்பின்னும், சேவகியிடம் , குழந்தைப்பிறக்காமல் இருக்க, தன்னை தலைகீழாக க்கட்டி தொங்கசெய்து, ஜோதிடர் குறிப்பிட்ட அதே நேரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். பிரசவ வலி எடுத்தும், குழந்தை வெகுநேரம்,கருப்பையிலேயே இருந்ததால், குழந்தையின் கண் சிவந்துவிட்டிருக்கிறது. அதனாலேயே குழந்தைக்கு 'கோச்செங்கட்' என்ற பெயர் வந்ததாம். ஹூம்...

பிரம்மபுரீஷ்வரர் - திருப்பட்டூர் -  வரலாற்றைப் படிச்சிட்டு அப்புறம் இங்க வாங்க. தலையெழுத்தை அப்படியே மாற்றுவாராம் இங்கிருக்கும் பிரம்மர். வருகின்ற அனைவரும் ஜாதகத்தைக்கொடுத்து, சாமியின் பாதங்களில் வைத்து வாங்குகிறார்கள். ஐயர்கள் இதில் அதிகமாக வருமானம் பார்க்கிறார்கள். நாங்க அதை செய்யல, கவனிச்சோம் அவ்வளவே !!

வயலூர் ;   ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால், ஓடோடிவந்தோம், 12.53 க்கு கோயிலை எட்டியபோது, வெளிவாசல் சாத்தப்பட்டு விட்டது, இருப்பினும், இன்னொரு வாசல் வழியாக உள்ளே ஓடினோம், 5 நிமிடமே இருந்ததால், சன்னதியின் முன் கதவும் சாத்தப்பட்டிருந்தது. ஓடிவந்தும் பார்க்கமுடியவில்லையே என்று நினைத்த நேரத்தில், திடீரென இடதுப்பக்கமாக வந்த ஒருவர், இந்தப்பக்கம் ஒரு வழியிருக்கு, வந்துப்பாருங்க்கன்னு அழைத்தார். ஓட்டமாய் ஓடினோம். முருகர் காத்திருந்தார், நல்ல தரிசனம் கிடைத்தது. திருவரங்கத்தில் காத்திருந்தும் சரியாகப்பார்க்க முடியாமல் வந்தோம், இங்கு ஓட்டமாய் ஓடி, கடைசி சில நிமிடங்களில் முருகனை வள்ளி தெய்வானையோடு தரிசனம் செய்தோம்.

முக்கொம்பு ; நடை சாத்திடுவாங்கன்னு, வேக வேகமாக ஓடியதில் , முக்கொம்பு வரும் போது, அதீத சோர்வுடன் இருந்தோம். காரிலேயே அணையை ஒரு சுற்று , சுற்றிவிட்டு ஊர் வந்து சேர்ந்தோம்
*******
கர்நாடக எல்லையில் ஆடு தாண்டும் காவிரி, தமிழ்நாட்டில் குறிப்பாக கரூர் & திருச்சி மாவட்டங்களில் அகண்ட காவிரியாக மாறி ஓடுவதும், அதைச்சுற்றியுள்ள கோயில்களின் அமைப்பும், எனக்கு சில தெளிவுகளை ஏற்படுத்தியது.

சிராப்பள்ளியைச் சுற்றி அகண்ட காவிரி ஆர்ப்பரித்து அடங்காமல் ஓடிய காலத்தில். அடை மழைக்காலங்களில், ஆற்றின் குறுக்கே அணைகள் இல்லை, கட்டுப்படுத்தமுடியாத வெள்ளம் புரண்டு, ஊரினையும் மக்களையும் அடித்துச்செல்ல, ஆட்சியில் இருந்த சோழ மன்னர்கள், தன் நாட்டு மக்களையும், நாட்டையும் காக்க இக்கோயில்களைக் கட்டி அதில், மக்களை பாதுக்காத்தும், அணைகளைக்கட்டி நீர்ப்போக்கை கட்டுப்படுத்தியும்/ திசைத்திருப்பியும் காப்பாற்றியுள்ளனர்.

திருவரங்கம், திருவானைக்காவல் இரண்டும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே தீவாக உள்ளது. இக்கோயில்கள் ஒரே காலக்கட்டத்தில் ஒரே மாதிரியான கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது, 5 பிராகரங்கள், அவற்றில் வெளிப்பக்க பிரகாரங்களில், வீடுகள், கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாகனங்களும் சென்று வரமுடியும். அகலம் குறைந்த மிக உயரமான வாசல்கள், அவசரமாக சட்டென மூடிவிடக்கூடிய அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது, தவிர  வேறெங்கும் காணாத மிக மிக உயரமான மதில்கள்.
 
இந்தக்கோயில்களின் அமைப்பே, அகண்ட காவிரியின் நீர்வரத்தை நம் கண் முன் கொண்டுவருகிறது. குறிப்பாக கல்லணையில் பிரியும் ஆறுகள், டெல்டா பகுதிகளுக்கு திருப்பி விடவும், அடித்துவரப்படும் வண்டல் மண்ணின் தாக்கத்தால் அணை சேதமடையாமல் இருக்கும்படியாக அணைக் கட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நம் கோயில் வரலாறுகளும், அதன் பிரமாண்டங்களும், பயன்களும் வியந்து மாளாது.....

அடுத்து.... வர இருப்பது.. திருவாரூர் தேர்... :)