இந்த மாதிரியொரு கனவு இதுவரை வந்ததேயில்ல. ஜெகஜோதி' ன்னு சொல்லுவாங்களே அதன் அர்த்தத்தை இந்த கனவில் கண்டேன்.

என் கணவரின் (சென்னை) அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் இரண்டு பெண்களோடு எனக்கு பேச வேண்டியிருந்தது.(நிஜத்திலும் பேச வேண்டியிருக்கு, ஆனால் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கல) அவர்கள் அலுவலகத்தில் உள்ள மற்றவர்கள் அறியாதவாறு வேறு எங்காவது ரகசியமாக சந்தித்து பேசலாம் என முடிவு செய்து என்னிடம் முன்கூட்டி தெரிவித்திருக்கின்றனர்.

மூவரும் ஒன்றாக கிளம்பினாலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என ஒருவர் முன்னே செல்ல, நான் இரண்டாவது, எனக்கு பின்னே ஒருவர் என நடக்க ஆரம்பிக்கிறோம்.

நாங்கள் நடந்துக்கொண்டிருக்கும் சாலை முக்கிய பிரதான சாலையாக தெரிகிறது. அந்த சாலையில், அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்த இடம் வெகு தொலைவில் இருக்கிறது. என்னால் நடக்கமுடியுமென நடக்கிறேன். எனக்கு பின்னால் வரவங்க கொஞ்சம் உடல் பருமனானவங்க, அவங்களால் முடியல.. ஆனா நிக்காமல் ரொம்ப மெதுவா நடந்து வராங்க.

எனக்கும் அவர்களுக்குமான இடைவெளி அதிகமாயிட்டே இருக்கு. எனக்கு முன்னால் சென்றவர், ஓரளவு வேகமாக சென்று இடத்தை நெருங்கிட்டாங்க. நடுவில் பெரிய மேம்பாலம், மேல ஏறி இறங்கனும், நான் இறங்கிட்டேன், இதற்கு பிறகு எங்களை கண்காணிப்பவர்கள் யாருமிருக்க வாய்பில்லை என்பதால், எனக்கு பின்னால் வருபவர் வரும்வரை காத்திருந்து அவர்களோடு சேர்ந்து நடக்க உத்தேசித்து, சாலை ஓரமாக நிற்கிறேன்.

நிற்கும் நேரத்தில் அக்கம் பக்கம் சுற்றி நோட்டம் விட, ஒரு கோயில் தெரிகிறது, எனக்கு பின்னால் வரும் அந்தப்பெண்ணை கவனித்து, நிற்கும் நேரத்திற்கு அந்தக்கோயிலுக்கு சென்று வந்துவிடலாமென,  செல்கிறேன்.

ஆஹா..என்னே ஒரு காட்சி.!!!!!  சிவலிங்கம் !!!! ஜெகஜோதியாக
காட்சியளிக்கிறார். அட்டகாசமான அலங்காரம், லிங்கத்தின் தலையில் தங்கத்தால் செய்யப்பட்ட பாம்பு வடிவில் கிரீடம் போல ஏதோ ஒன்று அலங்கரிக்கப்பட்டு வசீகரிக்கிறது !கர்பகிரகமே விளக்குகளால் ஒளிர்ந்து ஜெகஜோதியாக என் கண்களுக்கு விருந்தளிக்கிறது. மெய் மறந்து ரசிக்கிறேன்.

வித்தியாசமான லிங்கமாக இருந்ததால், சாமியின் பெயரை அறிய, கோயில் வாசலின் மேல் பார்க்கிறேன்.... "நசாவா லிங்கம்" என்று படிக்கிறேன்.

திரும்ப படிக்க எத்தனிக்கும் போது விழிப்பு..

பெயர் மறக்காமல் இருக்க, தலைமாட்டிலிருந்த மொபைலை எடுத்து,, அவருக்கு வாட்சப்பில், பெயரை டைப்பி அனுப்பிவிட்டு, கனவை ரீகால் செய்ய ஆரம்பித்தேன்...

*****
படம் (நன்றி கூகுல்) : ஏகாம்பரநாதர், காஞ்சிபுரம். 
கிட்டத்தட்ட என் கனவு லிங்கம் இப்படிதானிருருந்தார்.. ஆனால் இவரைவிட உயரம்..காலஹஸ்தி லிங்கத்தை ஒற்று இருந்தாலும், அவருமில்லை.

கூகுலில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. எங்கிருக்கிறாரோ இந்த சிவபெருமான்?. என் கனவில் வந்து, காட்சிக்கொடுத்ததற்கு தவம் தான் செய்திருக்கிறேன்....

கனவுகளில்..நம்பமுடியாத பிரம்மிக்க வைத்த கனவு இதுவே... !!