பொற்கோயில் : பஞ்சாப், அமிர்தசரஸ்ஸில் அமைந்துள்ளது.  மிகப்பெரிய கோயில், கோயில் வாசல் எப்போதும் திறந்திருக்கிறது, எந்த மதத்தினரும் செல்லலாம். பாதுகாப்பு கருதி நம்மூர் கோயில்களில் செய்யப்படும் எந்த பரிசோதனையும், கட்டுப்பாடுகளும்,
இம்சைகளும் இங்கு இல்லாதது அவர்களின் தைரியத்தையும் நம்பிக்கையையும் காட்டியது. ஈட்டி ஏந்திய ஒன்றிருண்டு காவலாளிகளை பார்க்கமுடிந்தது. புகைப்படமும் எடுக்கலாம். செருப்பு அணியக்கூடாது, பெண்கள் தலையில் முக்காடும், ஆண்கள் தலையில் துணியும் கட்டியிருக்க வேண்டும். இதுத்தவிர வேறு எந்த தடையும் கட்டுப்பாடும் இல்லை.

அவர்களின் வேதப்புத்தகம் சகல மரியாதையுடன் வைக்கப்பட்டிருக்க, பஜனைப்பாட்டை சிலர் மூல அறையில் உள்ளேயே அமர்ந்து பாடிக்கொண்டிருக்க கோயிலின் உட்பகுதி, மேல் பகுதி (2 மாடிகள்)  சுற்றி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வரும் போது சுடசுட சர்க்கரை பொங்கல் போன்றதொரு பிரசாதத்தை (அதே சுவை, ஆனால் அரிசியில் செய்தது இல்லை) வரும் அனைவருக்கும் வழங்கியவாறே உள்ளனர். ஏனோ திருப்பதி கோயிலும் அதன் பாதுகாப்பு, கூட்ட நெரிசல், எதைத்தொட்டாலும் பணம், கால் வைக்கமுடியாத அசுத்தம்,  பிரசாதம் கொடுக்கும் இடம், சுற்றியுள்ள இடங்கள் நினைவுக்கு வந்தன.

அழுத்தமாக சொல்லவேண்டிய தகவல், இங்கு பலதரப்பட்ட மக்களின் வசதிக்காக வசதிவாரியாக தரிசன வரிசைகள் இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை. பணம் செலுத்தி வேகமாக பார்க்கக்கூடிய வசதிகள் இங்கு செய்யபப்டவில்லை. உள்ளே சென்று வெளியில் வரும் வரை ஒரு பைசா செலவு இல்லை.
 
கோயிலில் சுத்தம் வியக்க வைத்தது. வேலையாட்கள் தொடர்ந்து கோயிலை சுத்தப்படுத்தியவாறே இல்லை, சுத்தம் செய்யும் ஒரு ஆளைக்கூட நான் பார்க்கவில்லை. வரும் மக்களே சுத்தமாக தான் வைத்திருக்கின்றனர்.  கோயிலை சுற்றியுள்ள தடாகத்தில் பெரிய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றிற்கு பக்கதர்களால் எந்த பிரச்சனையும் இல்லை, குளித்தில் குளிப்பவர்களும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மூழ்கி எழுந்து வருகின்றனர். பிரசாதம் சாப்பிடும் இடமும் அதனைச்சுற்றியுள்ள இடங்களும் கூட அதே சுத்தத்தோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியை போலவே இங்கும் அன்னதானம், அதுவும் இடைவிடாது நேரம் காலம் இல்லாத அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். வருகின்ற அனைவரும் இங்கு சாப்பிடாமல் செல்வதில்லை. திருப்பதியில் வசதி படைத்தோர் அன்னதானம் இருக்கும் பக்கமே தலையை திருப்பமாட்டர். இங்கு அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். உள்ளே செல்லும் போது ஒரு தட்டு, ஒரு கிண்ணம், ஒரு ஸ்பூன் தருகிறார்கள். சப்பாத்திக்கு சப்ஜி கொடுக்கும் போது, நான் அகலமான பேசின் போன்ற அந்த கிண்ணத்தைக்காட்ட, பரிமாறுபவர் அது தண்ணீருக்கு என்று சொல்லி தட்டிலேயே சப்ஜியை வைத்துவிட்டுப்போனார்.   கிட்டத்தட்ட 50000 பேர் உட்கார்ந்து உண்ணும் அளவு பெரிய இடம், எவ்வளவு சாப்பிட்டாலும் கேட்டு கேட்டு கொடுத்துக்கொண்டே இருப்பதையும் கவனித்தேன். வரும் பக்தர்கள் காய்கறி நறுக்குதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை செய்துவிட்டு செல்கின்றனர்.

பல ஆண்டுகளாக பொற்கோயில் சென்றே ஆகவேண்டும் என்ற ஆவலைத்தூண்டிய வரலாற்று நிகழ்வு அன்னை இந்திராவின் Operation Blue Star - http://en.wikipedia.org/wiki/Operation_Blue_Star.  கோயில் அருங்காட்சியகத்தில் கோயில் இடிககப்பட்டப்பிறகு எடுத்தப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.  இந்த நிகழ்வை படித்தப்பிறகே கோயிலை பார்க்கவேண்டும் என்ற என் ஆவல் அதிகமாகியது. இந்திராஜி' ஐ சுட்டவரின் புகைப்படமும் கோயிலில்  வைக்கப்பட்டிருந்தது. என் கனவுகளில் என்னைக்கவர்ந்த இக்கோயில் நேரிலும் கவர்ந்துவிட்டது.
 
வாகா எல்லை : அமர்தசரசில் இந்திய பாக்கிஸ்தான் எல்லையில், தினமும் கொடி ஏற்றம் & கொடி இறக்கும் விழா நடைபெறுகிறது. இங்கு நம் எல்லையில் செய்யும் அதே நேரம், பாக்கிஸ்தான் எல்லையிலும் இதே விழா நடைபெறுகிறது. அந்தப்பக்கம் "பாக்கிஸ்தான் சிந்தாபாத்" என்ற சத்தமும், அதை மிஞ்சும் படியாக இந்தப்பக்கம் "ஹிந்துஸ்தான் சிந்தாபாத்" என்ற சத்தமும் காதைக்கிழித்தது. மிக அருகில் பாக்கிஸ்தான் எல்லைக்கதவு, அந்த ராணுவ வீரர்கள், அந்த மக்களைப்பார்க்கும் போது, உள்ளிருந்து "இந்தியன்" என்ற உணர்வும், தொடர்ந்து அவர்களை எதிர்த்த கோஷங்களும் நமுக்குள்ளிருந்து தானாகவே பொங்கிவருகிறது.
அனைவரும் பார்க்கவேண்டிய நிகழ்வு. கோவா சென்றிருந்த போது கொடி இறக்க நிகழ்ச்சியை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கண்டுகளித்தேன். ஆனால் வாகா எல்லையில்  நாட்டுப்பற்றோடு வெறித்தனமாக கொண்டாடடிய ஒரு நிகழ்ச்சி என்று சொல்லலாம். :)ஜாலியன்வாலா பாக் : பொற்கோயிலிலிருந்து நடக்கும் தொலைவில் இவ்விடம் இருக்கிறது. மனதை பிசைந்தெடுக்கும் வரலாற்று நிகழ்வு. சுவற்றில் குண்டடிப்பட்ட சுவுடுகள் இன்னும் பரமாரிக்கப்பட்டு வருகின்றன.கனத்த இதயத்தோடு சுற்றிப்பார்த்தேன். ஜெனரல் டயர் சந்ததியினர் மற்றும் அவரது
நாட்டவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய இழிச்செயல்.
Wagah border Video : Thx Youtube