அமிர்தசரஸ் - பயணக்குறிப்பு

பொற்கோயில் : பஞ்சாப், அமிர்தசரஸ்ஸில் அமைந்துள்ளது.  மிகப்பெரிய கோயில், கோயில் வாசல் எப்போதும் திறந்திருக்கிறது, எந்த மதத்தினரும் செல்லலாம். பாதுகாப்பு கருதி நம்மூர் கோயில்களில் செய்யப்படும் எந்த பரிசோதனையும், கட்டுப்பாடுகளும்,
இம்சைகளும் இங்கு இல்லாதது அவர்களின் தைரியத்தையும் நம்பிக்கையையும் காட்டியது. ஈட்டி ஏந்திய ஒன்றிருண்டு காவலாளிகளை பார்க்கமுடிந்தது. புகைப்படமும் எடுக்கலாம். செருப்பு அணியக்கூடாது, பெண்கள் தலையில் முக்காடும், ஆண்கள் தலையில் துணியும் கட்டியிருக்க வேண்டும். இதுத்தவிர வேறு எந்த தடையும் கட்டுப்பாடும் இல்லை.

அவர்களின் வேதப்புத்தகம் சகல மரியாதையுடன் வைக்கப்பட்டிருக்க, பஜனைப்பாட்டை சிலர் மூல அறையில் உள்ளேயே அமர்ந்து பாடிக்கொண்டிருக்க கோயிலின் உட்பகுதி, மேல் பகுதி (2 மாடிகள்)  சுற்றி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வரும் போது சுடசுட சர்க்கரை பொங்கல் போன்றதொரு பிரசாதத்தை (அதே சுவை, ஆனால் அரிசியில் செய்தது இல்லை) வரும் அனைவருக்கும் வழங்கியவாறே உள்ளனர். ஏனோ திருப்பதி கோயிலும் அதன் பாதுகாப்பு, கூட்ட நெரிசல், எதைத்தொட்டாலும் பணம், கால் வைக்கமுடியாத அசுத்தம்,  பிரசாதம் கொடுக்கும் இடம், சுற்றியுள்ள இடங்கள் நினைவுக்கு வந்தன.

அழுத்தமாக சொல்லவேண்டிய தகவல், இங்கு பலதரப்பட்ட மக்களின் வசதிக்காக வசதிவாரியாக தரிசன வரிசைகள் இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை. பணம் செலுத்தி வேகமாக பார்க்கக்கூடிய வசதிகள் இங்கு செய்யபப்டவில்லை. உள்ளே சென்று வெளியில் வரும் வரை ஒரு பைசா செலவு இல்லை.
 
கோயிலில் சுத்தம் வியக்க வைத்தது. வேலையாட்கள் தொடர்ந்து கோயிலை சுத்தப்படுத்தியவாறே இல்லை, சுத்தம் செய்யும் ஒரு ஆளைக்கூட நான் பார்க்கவில்லை. வரும் மக்களே சுத்தமாக தான் வைத்திருக்கின்றனர்.  கோயிலை சுற்றியுள்ள தடாகத்தில் பெரிய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றிற்கு பக்கதர்களால் எந்த பிரச்சனையும் இல்லை, குளித்தில் குளிப்பவர்களும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மூழ்கி எழுந்து வருகின்றனர். பிரசாதம் சாப்பிடும் இடமும் அதனைச்சுற்றியுள்ள இடங்களும் கூட அதே சுத்தத்தோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியை போலவே இங்கும் அன்னதானம், அதுவும் இடைவிடாது நேரம் காலம் இல்லாத அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். வருகின்ற அனைவரும் இங்கு சாப்பிடாமல் செல்வதில்லை. திருப்பதியில் வசதி படைத்தோர் அன்னதானம் இருக்கும் பக்கமே தலையை திருப்பமாட்டர். இங்கு அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். உள்ளே செல்லும் போது ஒரு தட்டு, ஒரு கிண்ணம், ஒரு ஸ்பூன் தருகிறார்கள். சப்பாத்திக்கு சப்ஜி கொடுக்கும் போது, நான் அகலமான பேசின் போன்ற அந்த கிண்ணத்தைக்காட்ட, பரிமாறுபவர் அது தண்ணீருக்கு என்று சொல்லி தட்டிலேயே சப்ஜியை வைத்துவிட்டுப்போனார்.   கிட்டத்தட்ட 50000 பேர் உட்கார்ந்து உண்ணும் அளவு பெரிய இடம், எவ்வளவு சாப்பிட்டாலும் கேட்டு கேட்டு கொடுத்துக்கொண்டே இருப்பதையும் கவனித்தேன். வரும் பக்தர்கள் காய்கறி நறுக்குதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை செய்துவிட்டு செல்கின்றனர்.

பல ஆண்டுகளாக பொற்கோயில் சென்றே ஆகவேண்டும் என்ற ஆவலைத்தூண்டிய வரலாற்று நிகழ்வு அன்னை இந்திராவின் Operation Blue Star - http://en.wikipedia.org/wiki/Operation_Blue_Star.  கோயில் அருங்காட்சியகத்தில் கோயில் இடிககப்பட்டப்பிறகு எடுத்தப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.  இந்த நிகழ்வை படித்தப்பிறகே கோயிலை பார்க்கவேண்டும் என்ற என் ஆவல் அதிகமாகியது. இந்திராஜி' ஐ சுட்டவரின் புகைப்படமும் கோயிலில்  வைக்கப்பட்டிருந்தது. என் கனவுகளில் என்னைக்கவர்ந்த இக்கோயில் நேரிலும் கவர்ந்துவிட்டது.
 
வாகா எல்லை : அமர்தசரசில் இந்திய பாக்கிஸ்தான் எல்லையில், தினமும் கொடி ஏற்றம் & கொடி இறக்கும் விழா நடைபெறுகிறது. இங்கு நம் எல்லையில் செய்யும் அதே நேரம், பாக்கிஸ்தான் எல்லையிலும் இதே விழா நடைபெறுகிறது. அந்தப்பக்கம் "பாக்கிஸ்தான் சிந்தாபாத்" என்ற சத்தமும், அதை மிஞ்சும் படியாக இந்தப்பக்கம் "ஹிந்துஸ்தான் சிந்தாபாத்" என்ற சத்தமும் காதைக்கிழித்தது. மிக அருகில் பாக்கிஸ்தான் எல்லைக்கதவு, அந்த ராணுவ வீரர்கள், அந்த மக்களைப்பார்க்கும் போது, உள்ளிருந்து "இந்தியன்" என்ற உணர்வும், தொடர்ந்து அவர்களை எதிர்த்த கோஷங்களும் நமுக்குள்ளிருந்து தானாகவே பொங்கிவருகிறது.
அனைவரும் பார்க்கவேண்டிய நிகழ்வு. கோவா சென்றிருந்த போது கொடி இறக்க நிகழ்ச்சியை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கண்டுகளித்தேன். ஆனால் வாகா எல்லையில்  நாட்டுப்பற்றோடு வெறித்தனமாக கொண்டாடடிய ஒரு நிகழ்ச்சி என்று சொல்லலாம். :)



ஜாலியன்வாலா பாக் : பொற்கோயிலிலிருந்து நடக்கும் தொலைவில் இவ்விடம் இருக்கிறது. மனதை பிசைந்தெடுக்கும் வரலாற்று நிகழ்வு. சுவற்றில் குண்டடிப்பட்ட சுவுடுகள் இன்னும் பரமாரிக்கப்பட்டு வருகின்றன.கனத்த இதயத்தோடு சுற்றிப்பார்த்தேன். ஜெனரல் டயர் சந்ததியினர் மற்றும் அவரது
நாட்டவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய இழிச்செயல்.
Wagah border Video : Thx Youtube

உனக்கு 20 எனக்கு 18

பழம்நீ : பரிட்சை எப்படிடி எழுதின?

கவி : ம்ம் நல்லா எழுதியிருக்கேன்ப்பா... ஆனா ஹால் மாத்தி உக்காந்துட்டேன்..ஒரே டென்ஷனாப்போச்சி..கொஞ்ச நேரம் வீணாப்போச்சி..

பழம்நீ : அட லூசே..ஏண்டி?

கவி : 10 நிமிஷம் முன்னாடி போர்ட்ல ஹால் நம்பர் ஒட்டறாங்கப்பா... ஒரே கூட்டம்.. தூரக்கிருந்து பார்த்தேனா..சப்ஜெக்ட் மட்டும் ஓரளவு தெரிஞ்சிச்சி...என் நம்பர் சரியா கண்ணுத்தெரியல..குத்துமதிப்பா இந்த ஹால் தான்னு போய் உக்காந்துட்டேன்..

பழம்நீ : என்னது கண்ணுத்தெரியலையா? அப்ப சப்ஜெக்ட் மட்டும் எப்படி படிச்ச?

கவி : அது ரெட் கலர் மார்க்கர்ல பெரிய எழுத்தா எழுதி இருந்தாங்க..நம்பர் எல்லாம் கம்பியூட்டர் பிரிண்ட் தூரக்கிருந்து ஒன்னும் தெரியலப்பா...

பழம்நீ: கண்ணாடி போட்டிருந்தியா?

கவி : ஹி ஹி..இல்ல...

பழம்நீ : ..நமக்கு தான் நொள்ளக்கண்ணாச்சேன்னு கண்ணாடி போட்டா என்னவாம்.. ஏழு கழுத வயசாச்சி..அட்டண்டன்ஸ்ல கையெழுத்து போடாட்டி ஆம்சென்ட் தெரியுமில்ல..? உன்னால அடுத்தவங்களுக்கு எவ்ளோ பிரச்சனை? ஒழுங்கா பாத்து ஒக்கார வேணாமா?...ஒன்னுக்கு 2 பிஜி முடிச்சி இருக்க..இதுக்கூட தெரியல.?...இதுல இன்னொரு பிஜி வேற எழுதற...10 பேருக்கு நீ சொல்லித்தரனும்..நீயே இப்படி இருக்கி........

கவி : ப்ப்ப்பா....... சும்மா இருங்கப்பா..!!!!  மாற்று திறனாளிகளை திட்டக்கூடாது அது ரொம்ப...பாவம்ப்பா.....

பழம்நீ : மாற்று திறனாளிய நான் எங்கடி திட்டினேன்..?! அவங்கள ஏன்டி நடுவுல வம்புக்கிழுக்கற?

கவி : அட..நாந்தாம்ப்பா... கண்ணுத்தெரியலல்ல..அப்ப நானும் மாற்று திறனாளி தான..?

பழம்நீ :அடி செருப்#$@$#@....#$@% @$%#^%^ @%$$#  $#%$#  $%@%  @%$%$%  @%$%$ %%$^%   @$^%#$^  @#$#@ #@$%$#^%$^&

கவி : எச்ச்சூமி பழம்...ஹோல்ட்...!!!  இதுக்கு மேல ஒரு வார்த்தைக்கூட வரக்கூடாது. ! இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு ?? என் கண்ணு தானே. என்னால பகல்ல கூட  நட்சத்திரத்தை ஒன்னு விடாம எண்ணமுடியும் .... என் கண்ணு அவ்ளோ பளீச்..பளீச்....போதுமா? .....

பழம்நீ : ம்ம்ம்ம்ம்ம்ம் ...அது..! 

*******************



கவி : ப்பாஆ....ப்பாஆ.. இப்ப நல்லாயிருக்கா?  (தலைவிரி கோலம்)

பழம்-நீ : இருக்கு......

கவி : இப்ப ?

பழம்-நீ : இருக்கு......

கவி : இது?!

பழம்-நீ : நல்லாயிருக்கு...

கவி : என்னப்பா நீங்க?  எப்படியிருந்தாலும் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க? இது சீட்டீங்...

பழம்-நீ :.............................
............................. நீஈஈஈ.... ரஜினிகாந்த் மாதிரிடி........ எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும் சூப்பர்ர்ர்ர்ர் தான். வேற மாதிரி மாத்தி சொல்லவே முடியாதுடி..........

கவி : அவ்வ்வ்வ்...!!


*************************

கவி : பின்னாடி வீட்டுல புதுசா ஒரு நாய் வளக்கறாங்க போல எந்த நேரமும் வாயமூடாம குலைச்சிக்கிட்டே இருக்கு...எரிச்சலா இருக்குப்பா...அவங்க வீட்டுல இருக்கவங்க அதை ஏன் வாயமூடு" ன்னு சொல்லவே மாட்டேங்கறாங்க?

பழம்-நீ : ..............................
...

(என்ன பதிலைக்காணமேன்னு திரும்பி பார்த்தால்...என் பின்னாடி அமைதியாக என்னைப்பார்த்தவாறே  புன்முறவலோடு நிற்கிறார்)

கவி :.(.நானும் புரியாமல் திரும்பிவிட்டு....... புரிந்து மீண்டும் ) ஆவ்வ்வ்வ்வ்...என் வாயக்கூடவாஆஆஆ????

பழம்-நீ : ஹா ஹா ஹா ஹா...

கவி : கிர்ர்ர்ர்ர்ர்.... :))

*************

கவி : நேருஜி ஜெயில்ல இருக்கப்ப அவரோட பொண்ணு இந்திராஜிக்கு லெட்டர் எழுதினாராம்..அதை படிச்சி படிச்சி அவங்க ரொம்ப வீராதி வீரியா வளந்தாங்களாம்.. அது மாதிரி நான் உனக்கு இனிமே லெட்டர் எழுதப்போறேன்...  

நவீன் : இப்ப ஜெயில்ல இருக்கறது நீயா? நானா?

கவி : ஜெயில்ல நேருஜி வெட்டியா இருந்தாரு...இப்ப அதே மாதிரி நானும் வெட்டியா இருக்கேன்னு வச்சிக்கோயேன்... .
 

நவீன் : நீ வெட்டி............ஆனா நான் வெட்டியில்ல.....அது மாதிரி எதாச்சும் வந்துச்சி.... நேரா ட்ரேஷ்க்கு போகும்...சொல்லிட்டேன்
 

கவி: என் செல்லக்குட்டி..பட்டுக்குட்டி....ராஜாகுட்டி..தானே..? படிடா குட்டி...நீ எதையும் இம்பிளிமென்ட் பண்ண வேணாம்..ஒன்னு இரண்டு பாயின்ட்ஸ் படிக்கும் போது தானா மனசுல பதிஞ்சுடும்..  
நவீன் : சரி சரி அனுப்பித்தொல..படிச்சித்தொலைக்
கிறேன்...

கவி : (அது!!)... குட் செல்லம்.!


**************************

கவி : கத்திரிக்காயில் இருக்க ஒரு என்சைம், மூளைய சுத்தி இருக்க கொழுப்பை சரியான % ல் வச்சிக்க பயன்படுதாம்..நீ கத்திரிக்காயே சுத்தமா சாப்பிடமாட்டற..உன் மூளைய நினைச்சி எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா...

நவீன் : ஹா ஹா...மூளைய பத்தியெல்லாம் நீ பேசறப்பாரு..அதான் இங்க காமெடி..:))) .  நானு... வெளியில் பிரியாணி சாப்பிடுவேன் இல்ல..அதுக்கு கத்திரிக்காய்  தான் தொட்டுக்க வைப்பாங்க..அப்ப சாப்பிட்டு இருக்கேனே...

கவி : அடி செல்லமே..?! கத்திரிக்காய் சாப்பிடுவியா நீனு? இது எனக்கு தெரியவே தெரியாதே?......  ஏண்டா இதை முன்னமே சொல்லல்ல ..!!! நான் வீட்டுல செய்தா துளிக்கூட சாப்பிடாம ஒதுக்கி வைக்கிற... ஹோட்டல சாப்பிடுவேன்னு வெக்க மானமே இல்லாம சொல்ற...

நவீன் : ஹே ஹே.. நீ செய்யறதை எவன் சாப்பிடறது..

கவி :கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..சோத்துக்
கு சிங்கி அடிக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிரா...?

நவீன் : நான் சாப்பாடே கிடைக்காம பட்டினி கிடந்தாக்கூட உன் சாப்பாடு நல்லாயிருக்குன்னு சொல்லுவேன்னு கனவுல கூட நினைக்காதே..நடக்காது..!!

கவி :... :(((((((( நீயெல்லாம் ஒரு புள்ளையா..?!

நவீன் : :))))))))


***************

அணில் குட்டி : .........

பீட்டர் தாத்ஸ் :  Miss U Naveen



ப்ப்ப்பாஆ....யார்ரா இது..?!

மெளனங்களின்
குவியங்களாய்

உணர்ச்சிகளற்ற
வழுக்கல்களாய்

கண்ணீர் சொறியும்
மரபாச்சியாய்

கிறுக்கல்களின்
முதல்வியாய்

ஆக்கமெடுத்து
வளர்கிறது (என்) மனிதம்..


வெல்லத் துடிக்கிறேன்
எனை நானே...




Image :Thx Google

முனுகல்

சுட்டெரிக்கும் வெயில், வெயிலை சொல்லிக்குறையில்லை, எனக்கு அப்போது தான் நேரம் வாய்த்தது. கையில் குடை, வெயிலுக்காக முகத்தை மறைக்கும் கண்ணாடி என அந்த இல்லத்துக்குள் நுழையும் போது மதியம் 12.30 இருக்கும். தூரத்திலிருந்து கவனித்துவிட்ட பாட்டிகள் "கவிதா வர்ரா.."ன்னு சொல்லியது காதில் விழுந்தது. எல்லாருக்கும் வயசாச்சின்னு நாந்தான் நினைச்சிக்கிறேன். ஆனா கூர்மையாக கவனித்து, தொலைவிலிருந்தே நாந்தான்னு கண்டுப்பிடிச்சிட்டாங்க. 

நேராக அவர்களை கவனித்துக்கொள்ளும் சிஸ்டரிடம் சென்று, "எல்லோருக்கும் பாயாசம் செய்து கொண்டுவந்தேன் கொடுக்கட்டுமா? " கையிலிருந்த ஒரு துணிக்கவரை சிஸ்டரிடம் கொடுத்து.."இது உங்களுக்கு"


வாங்கிக்கொண்டு சிரித்தபடி..."தாங்க்ஸ் கவி....நீ ஒவ்வொருத்தரா பேசிட்டு வா.. சாப்பாடு நேரம் எல்லாரும் டைனிங் ஹாலுக்கு வருவாங்க.. அங்க கொடுத்துடு...... கவி "புதுசா இரண்டு பேர் சேர்ந்து இருக்காங்க... மூணாவதா ஒருத்தங்க இன்னைக்கு வந்துடுவாங்க... உனக்குக்கூட அவங்கள தெரியும்..முன்னமே இங்க இருந்தவங்க..லட்சுமி அம்மா.."

"பெரிய பொட்டு வச்சி இருப்பாங்களே அவங்களா??

பின்னாலிருந்து ஒரு பாட்டி.. "கவிதா.. பொட்டெல்லாம் முன்னாடி..இப்ப அவ புருஷன் செத்துட்டான்..அதான் யாருமில்லாத ஆளா திருப்பி இங்கவே வர்ர்ர்ரா.."

சில பாட்டிங்க இப்படித்தான் ...மனசுல எதுவும் வச்சிக்காம சொல்லிடுவாங்க..  "சரி..வரட்டும்..முகத்தை பார்த்தா நினைவு வந்துடும்" ..... டைனிங் ஹால் சென்றேன்.

***********

டிவி பார்த்தபடி மத்த பாட்டீஸ் எல்லாம் சாப்பிட ரெடியாகிட்டே இருந்தாங்க. தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டிருந்தது. முள்ளங்கி சாம்பார், கீரை பொரியல், ஏதோ ஒரு வற்றல் இருந்தது. சில பாட்டிகள் சாம்பாரை கப்'பில் ஊற்றி வாங்கிக்கொண்டனர். எல்லோரையும் பார்த்து "பாயசம் எடுத்து வந்திருக்கேன், எதுலக் கொடுக்கட்டும்"

முதல்ல ஒரு பாட்டி, "கவி.. அந்த ஷெல்ப்ல நீலக்கலர் கப் இருக்குப்பாரு அதை எடுத்து, எனக்கு அதுல கொடுத்துடு.."

அடுத்தப்பாட்டி, "கவி..எனக்கு இதுல.."

இன்னொருப்பாட்டி, "கவி.. இந்த கப்புல சாம்பார் ஊத்திட்டேன்.. .சும்மா ஒரு அலசு அலசிட்டு இதுல கொடுத்துடு.."

4ஆவது பாட்டி... "ஆமா எதுக்கு பாயசம்..?"

"நீயூ இயர் வந்துச்சில்ல..அதை நீங்கெல்லாம் இனிப்போட ஆரம்பிக்கனும்னு பாயாசம் செய்து எடுத்துட்டு வந்தேன்.."

"ஓ....அதுக்கா... ? நீ கேக் இல்ல எடுத்துக்கிட்டு வருவேன்னு நினைச்சேன்.."

"கேக்  கடையில் கிடைக்கறது, எப்ப வேணாலும் கிடைக்கும் ..இது நானே செய்த பாயாசம்..... கிடைக்குமா..?

முதல் பாட்டி.."அடி யார்டி இவ.. நமக்குன்னு செய்து எடுத்துட்டு வந்திருக்கு ...எதாச்சும் நொட்டு சொல்லிக்கிட்டு பேசாம வாங்கி வச்சிக்கிட்டு குடி"

நடுநடுவில் எல்லாப்பாட்டிகளும் மாறி மாறி கவிதா சாப்பிடுன்னு ஒரே உபசரிப்பு. :). நமக்கு அவங்களை எல்லாம் பார்த்தப்பிறகு சாப்பாடே உள்ள இறங்காதுன்னு அவங்களுக்கு தெரியாதே... :(. 

எல்லோருக்கும் பாயாசத்தை கொடுத்துவிட்டு, திரும்ப படுக்கைகள் இருக்கும் அறைக்கு புதிதாக சேர்ந்தவர்களை பார்க்க வந்தேன். நான் இருந்த மறு மூளையில் முனுகல் சத்தம்...

ரொம்ப மெதுவாக யாரோ  சக்தியற்றக்குரலில் முனுகும் சத்தம் கேட்டது...

கிட்டேச்சென்றேன்.. எலும்பும் தோலுமாக  ஒரு பாட்டி படித்திருந்தார்,  யூரின் டியூப் இணைத்திருந்தனர்.

"பாட்டி...பாட்டீ..எங்கையாச்சும் வலிக்குதா..? உங்களுக்கு என்ன செய்யுது...? வலிக்குதாப்பாட்டி? "

"நீ ..யாஆ... ரு..?"

"கவிதா... "

"க..வி..தா..ஆஆ வா...? " இப்படியே ஒவ்வொரு எழுத்தாக விட்டு விட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்... கட்டிலில் கைவைத்து..எனக்கு காதும் கேட்கும் வரை குனிந்து  கவனித்தேன்....

"எ ன் ன.. அ ப்பா.... அம் மா .......அ னா தை யா........ விட் டு ட் ......  செ..த் து ட்டா ங் க........... அவ ங்க  ஒ ரு வீ ....... டு  கு...டுத் தா ங்க...... இ ங்க அ னா தை ...  யா ...கெ ட க் க.... றேன்.... ..

................................    "பாட்டி..... நீங்க அனாதை இல்ல..இங்க நிறையப்பேர் இருக்காங்க. இதோ நான் இருக்கேனே....உங்கள வந்து பாக்கறேன்..உங்களோட பேசறேன்..சரியா..??. இங்க இருக்க எல்லாரும் உங்களுக்கு சொந்தக்காரங்க தான்..... உங்கள நல்லா பாத்துக்குவாங்க...  ஜாலியா இருக்கலாம்......"

"இ ங்க... இ ப்ப.. டி .....அ னா த...யா...கெ..ட..க்..க...றே..னே.. .... எ..னக்...கு  வீ...டு இ..ரு..க்..கு.. பெ..ர்ர்..ர்...ரிய ......வீ....டு..  அ...ம்மா அ....ப்பா..... கு...டு...த்..தது...."

சிஸ்டரும், இன்னொரு பாட்டியும் உள்ளே வந்தனர். "கவிதா இந்த வாழைப்பழத்தை அந்த பாட்டிக்குக்கொடு".

"படுத்துக்கிட்டு இருக்காங்களே.. சாப்பிடுவாங்களா?"

"சின்ன சின்னதா கிள்ளி வாயில போடு..அது நல்லா சாப்பிடும்.."

:) சின்ன துண்டாக்கி ."பாட்டி ஆஆஆ காட்டுங்க" .....வாயை உலகம் தெரியும் படி திறந்து காட்டிய பாட்டிக்கு ஒரு துண்டை ஊட்டிவிட்டேன்.

இரண்டாவது துண்டிலிருந்து..வலதுகையை நீட்டி தானே வாங்கி சாப்பிட்டாங்க...(சரியா ஊட்டலையோ?! :) )

சிஸ்டரிடம் "அம்மா அப்பான்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.. இந்த பாட்டிய அவங்க அம்மா அப்பாவா கொண்டுவந்து சேர்த்தாங்க..?

"இல்ல கவிதா.. எல்லாத்தையும் மறந்துப்போயிட்டாங்க, ஏதோ பழைய நினைப்புல பேசறாங்க. டிசம்பர் மாதம் அவங்க புள்ள தான் கொண்டு வந்து சேர்ந்துட்டு போனாரு...பிறகு வந்து பார்க்கவேயில்லை.. எழுந்து ரொம்ப மெதுவா நடப்பாங்க..நல்லா சாப்பிடுவாங்க....வயசாச்சியில்ல ரொம்ப தள்ளாமை அவ்ளோதான். ....அடிக்கடி ஒன்னுக்கு போறேன்னு முடியாம எழுந்திருப்பாங்க....அதனால எழுந்துக்காதன்னு சொல்லி யூரின் டியூப் மாட்டிவிட்டுடறது,."

***********
இந்த நிகழ்வை எழுத முக்கியக்காரணம்..: பெற்றப்பிள்ளைகள் இருக்கும் போது இல்லங்களில் விடப்படும் அத்தனை வயதானோரும்.. தான் அனாதையாக்கப்பட்டோம் என்றே நினைக்கின்றனர். ஒரு சிலர் வீட்டை விட இங்கு நன்றாக இருக்கிறேன் என்றும் சொல்கின்றனர். இருப்பினும் 98%  முதியோர் தனிமையையும்.. பிள்ளைகளின் பிரிவையுமே நினைத்து வாடுகின்றனர், பிள்ளைகளின் பாசத்திற்காக ஏங்குகின்றனர்.

பெற்றோர் பிள்ளைகளை படிக்கவைத்து எல்லாமும் செய்து உருவாக்கிவிடுவதைப்போன்று, பிள்ளைகளும் பெற்றோரை கடைசிவரை வேலை, சூழ்நிலை, வசதி போன்ற காரணங்கள் காட்டி தள்ளாத வயதில் தள்ளிவைக்காமல், நேரடி கண்காணிப்பில் வைத்து பாதுகாப்பதை ஒரு கடமையாக நினைக்கவேண்டும். இதை அரசு ஒரு சட்டமாக்கினால் கூட வயதானோருக்கு ஒரு விடிவுக்காலம் பிறக்கும். 

அணில் குட்டி : அம்மணிய நினைச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது... அம்மணியோட புள்ள இரண்டு வருசம் முன்னமே இவிங்க இம்சை தாங்கமுடியாம, அம்மணிக்கு வயசானா எங்க கொண்டுப்போய் சேர்க்கனும்னு முடிவு பண்ணி சொல்லியும் வச்சிட்டாரு..வருங்காலத்தில் இவிங்க நிலைமையே காத்துல டண்டனக்கா டணக்குனக்கான்னு ஆடுது......... ஆனாலும் அம்மணியின் கடமை உணர்ச்சிய பாத்தீங்களா???... ..

பீட்டர் தாத்ஸ் : I die a little inside every time when I see an old person crying for being in an Old Age Home.  


Images : Thx Google