உனக்கு 20 எனக்கு 18

கவி : நவீன் கால் நகத்தை எல்லாம் வெட்டு, எவ்ளோ அசிங்கமா இருக்குப்பாரு.. இந்தா நெயில் கட்டர்

நவீன் : ம்ம்மா.. நீயே வெட்டி விடேன் , 5 ரூ தரேன்...

கவி : யப்பாஆஆ.. பாருங்க உங்க பையன், நகத்தை வெட்ட சொன்னா, நீ வெட்டு 5 ரூ தரேங்கறான்.. .

பழம்நீ : சரி அதுக்கு ஏண்டி கத்தர, வேணும்னா இன்னும் 2 ரூ மேல கேட்டு வாங்கிக்கோ..

கவி : ஞே !

 ***************

கவி : நவீன் டோஃபல் படிச்சிட்டியா.. எந்த அளவில் இருக்கு .......

நவீன் :  டோஃபல் னு ஒரு வார்த்தைய தெரிஞ்சி வச்சிக்கிட்டு ஓவரா டார்ச்சர் பண்ணாத.. .. அப்ரிவியேஷன் தெரியுமா உனக்கு?

கவி : ஓ தெரியுமே...  டெஸ்ட் இன் இங்லீஷ் லேங்குவேஜ்..

நவீன் : கிர்ர்... அப்பா பாருங்கப்பா உங்க பொண்டாட்டியின் பொது அறிவை....

கவி : ம்க்கும்...ரைட்டா சொல்லிட்டா மட்டும் நீ என்ன எனக்கு பாராட்டு விழாவா நடத்தப்போற  போடா டேய்.. !

*********

நவீன்: குறுக்குசித்ரா (குருஷேத்ரா) நடக்குது அண்ணா யுனிவர்சிட்டி போறேன்

கவி: குறுக்குசித்ரா ஏன் அண்ணா யுனிவர்சிட்டிக்கு போய் நடக்கறா?

நவீன்: ஓஓஓ.... இது மொக்கையா? ஹி ஹி ஹி.. சிரிச்சிட்டேன் போதுமா? ஆமா உனக்கு யார் இப்படி எல்லாம் பேச கத்துக்கொடுக்கறா? அந்த வெட்டி ப்ளாகர்ஸா? எல்லாரையும் துப்பினேனு மட்டும் சொல்லு... தாங்கமுடியல உன் மொக்கை..

கவி: ஸ்ஸ்யப்பா கோ-ப்ளாகர்ஸ் இருக்கவரை நான் சேஃப்

**************

கவி: (ஏதோ ஆங்கிலப்படம் பார்த்துக்கிட்டு இருக்கான்:) இந்த ஹீரோ அக்ஷைகுமார் மாதிரியே இருக்காரு

நவீன்: ஓ நீ ஹிந்தி படமெல்லாம் கூட பார்ப்பியா?

கவி : ஆமா முன்னெல்லாம் ஹிந்தியும், மலையாளமும் தான் அதிகம் பார்ப்பேன், 

நவீன்.: ஆனா உனக்கு தான் இங்கிலீஷூம் சேர்ந்து எந்த லேங்குவெஜும் தெரியாதே மதர்,  எப்படி பார்ப்ப? ஹோ ..இதுக்கு பேர் தான்  "படம் பார்ப்பதா" ???? :))))))))

கவி : அடிங்....... ஓடிப்போயிடு.. பிச்சிடுவேன்.. ! :)))))))

**************

கவி : என்னோட எஸ்.எம்.எஸ் பார்த்து உங்கப்புள்ள பயந்து நடுங்கிட்டான் போல, பவ்யமா இனிமே செய்யமாட்டேனு பதில் வந்து இருக்கு ?

பழம்நீ : ஆமாண்டி, உன் புள்ளைக்கு மட்டுமா , உன்னை பார்த்தா எனக்குக்கூட பயம், பாரு பேசும் போதே நடுங்குது எனக்கு... 

கவி : :))))) சரி சரி.. ரொம்ப பயப்படாதீங்க நான் ஒன்னும் செய்ய மாட்டேன்.. ! :)

பழம்நீ : உன் புள்ளைக்கு ஃபோன் செய்து அவன் உன் மெசேஜ் பார்த்து எப்படி நடுங்கினான்னு விளக்கச்சொல்லவா? 

கவி : அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஏன்ன்ன்ன் ?? எப்பவோ ஒரு தரம் மரியாதையா மெசேஜ் செய்து இருக்கான் , பொறுக்காதே உங்களுக்கு....எதுவும் கேக்க வேணாம்.

பழம்நீ : ம்ம்ம்..அது  !! அந்த பயம் இருக்கட்டும்.. ! 

கவி : அவ்வ்வ்... எகொகஇ ?!

*************

ஸ்டவ் க்ளீன் பண்ண கஷ்டப்படறேனு, மளிகை வாங்க சென்றபோது மிஸ்டர் மஸ்ஸில்ஸ் ஸ்ப்ரே லிக்விட் வாங்கிக்கொடுத்தான். வீட்டுக்கு வந்து, ஸ்டவ் துடைக்க யூஸ் பண்ணிட்டு, புள்ளக்கிட்டவும் காமிச்சிசாச்சி...

"அப்படியே உலகமே தெரிஞ்ச மாதிரி பேசத்தெரியும், ஆனா, ஈசியா இருக்க எதையும் வாங்கத்தெரியாது.. பத்தியா எவ்ளோ ஈசியா இருக்கு...  (கமெண்ட் அடிச்சிட்டு வெளியில் போயாச்சி..)

திரும்ப வீட்டுக்கு வந்தவுடன்....

யம்மாஆ......

என்னடா..?

அதை  Oven'க்கு யூஸ் பண்ணக்கூடாது, நீதான் அதிபுத்திசாலியாச்சே..  Oven ஆயிலா இருக்குன்னு அதுக்கு போட்டுட்டாத..

ஹி ஹி...  எப்பவோ இதைப்போட்டு க்ளீன் பண்ணிட்டேனே.. நீ ஏன் முதல்ல சொல்லல.. வா வந்து பாரு, ஜிகு ஜிகுன்னு இருக்கு... :)

கிர்ர்ர்ர் ஏன்ன்மா இப்படி இருக்க..?  ஃபேனை தண்ணிக்குள்ள விட்டு க்ளீன் பண்ண ஆள் ஆச்சே, எங்க செய்துடப்போறன்னு நினைச்சி வந்தா.?? Oven சாப்பாடு செய்யறதும்மா, இதெல்லாம் போடக்கூடாது, அதுல ஆசிட் கன்ட்டைன்ஸ் இருக்கும்..

ஃபேனை பத்தி மட்டும் பேசாத, ஃபேன் சூப்பரா சுத்தமாச்சா இல்லையா?  Oven' ல இதைப்போட்டு துடைச்சிட்டு, தண்ணிப்போட்டும் துடைச்சிட்டேன். ஒன்னும் பிரச்சனையில்லைடா...  எதா இருந்தாலும் நீ முன்னமே சொல்லிட்டு போயிருக்கனும்...

ம்க்கும் சொன்னா மட்டும் கேட்டுடுவியா... ஆனா.. இன்னும் ஒன்னே ஒன்னு தான் நீ இந்த வீட்டுல பண்ணல...

இன்னுமா பாக்கி இருக்கு? என்னடா அது சொல்லு சொல்லு சீக்கிரம், அதையும் பண்ணிடறேன்..

அப்பாவையும் என்னையும் ஆசிட் ஊத்தி சுத்தம் பண்ணல.. :((((

அட சூப்பர் ஐடியாவே இருக்கே.... ஒழுங்கா இரண்டு பேரும் குளிச்சி சுத்தமா இருங்க.. இல்லைன்னா மறந்து போயி குளிக்கிற தண்ணியில ஆசிட் ஐ கலந்தாலும் கலந்துடுவேன்...

அடப்பாவி அம்மா..?!

*********

அணில் குட்டி : ஒரு 15 அடி எப்பவும் தள்ளியெ  இருக்கனும், சுத்தம்னு சொல்லி, என்னையும் தண்ணிக்குள்ள போட்டு எடுத்து பிழிஞ்சி எடுத்தாலும் எடுத்துடுவாங்க..

பீட்டர் தாத்ஸ் : “A person might be an expert in any field of knowledge or a master of many material skills and accomplishments. But without inner cleanliness his brain is a desert waste.”


போவோமா ஊர்கோலம் ..

<=  கடலூர் - (மருதாடு கிராமம் செல்லும் சாலை) தானே' க்கு முன்
தானே' க்கு பின் அதே சாலை =>

தானே ' புயலின் தாக்கத்தை ரொம்ப லேட்டாகத்தான் பார்க்கமுடிந்தது. இருந்தாலும், மனிதர்களை பற்றிய விபரம் தெரியவில்லை, ஆனால் மரங்கள், நிலங்கள் என, தானே' வின் ஆட்டம் ரொம்பவே அதிகம். 

குறிப்பாக தென்னை மரங்கள் இனி காய்கள் கொடுக்குமா என தெரியவில்லை. பண்ரூட்டி பக்கம் முக்கிய விவசாயம், வியாபாரம் முந்திரி மற்றும் பலாப்பழம். இந்த வருடம் மட்டுமில்லை, புயலில் அழிந்த முந்திரி தோப்புகள் திரும்ப அப்படியே கிடைக்க இன்னும் 10 வருடம் உழைக்க வேண்டி இருக்குமாம். 10 வருடத்திற்கு அதை நம்பியவர்களின் சாப்பாட்டுக்கு வழி?.

தானே வந்து போனது மொத்தமே 10 மணி நேரம். ஆனால் அதன் விளைவுகள் பல ஆண்டுகள் தொடரும்.. நிலை... :(
 
   





ஒரு நாளைக்கு பயிர் அறுவடை செய்ய 70ரூ கூலியாம், ஒரு பெண் 2 ஆள் வேலைய செய்வாங்களாம். ஒரு நாளைக்கு 4 ஏக்கரா முடிப்பாங்களாம் . 
ஒரு  ஏக்கரா = 43560 Sq Ft.  ஒரு நாளைக்கு ஒரு பெண் 4 ஏக்கராவிற்கு 140 ரூ சம்பளம் மட்டுமே வாங்கறாங்க. :(((         =>
விபரம் சொன்னது ரோஸ் கலர் புடவையம்மா.             

காற்றில் தென்னைமரம் அப்படி இருப்பதாக நினைக்கவேண்டாம். பாண்டிச்சேரி தொடக்கத்திலிருந்து, கடலூர் மாவட்டம் முழுக்க அத்தனை தென்னை மரங்களும், மேற்கு நோக்கி திரும்பி, தன் நிலைகுலைந்து, நிற்கின்றன.  இவற்றில் திரும்ப, காய்கள் வருமா என காத்திருந்து தான் பார்க்கவேண்டும் என சொல்கிறார்கள் அங்கிருக்கும் மக்கள்.  :( 



<=  இந்த (டேரியா) பூவை தலையில் வைத்து 25 வருடங்களுக்கு மேலாகவே இருக்கும், பள்ளிக்காலங்களில், கலர் கலராக தேடி தேடி எடுப்பேன்.  பிறகு விருப்பம் வாசனை பூக்கள் மட்டுமே வைப்பது என மாறிய ப்பிறகு இந்த பூவை வைப்பதே இல்லை, கிடைப்பதும் இல்லை. திருமண வீட்டில் மாமியார் வீட்டு மக்கள் கொடுத்ததால், எதுவும் சொல்லாமல் வைத்துக்கொண்டேன். :))

   இனி வருங்காலம் இப்படித்தான்  இருக்கும். இதுவே நிரந்தரம். =>


மரங்கொத்தி ????  மிக அருகில் சென்று போட்டோ எடுத்தும் பறக்கவேயில்ல.. .


<=   இந்த அம்மாவுக்கும் ஒரு நாளைக்கு அதே ரூ.70 கூலி.  நாள் பூராவும் வெயில்ல வேல செய்யனும். 

யமுனா சித்தியின் கைவைத்தியம்

சென்னை மாநகர், தண்ணீர் பிரச்சனையில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த சமயம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, லாரிகளில் தண்ணீர் வந்து, தெருக்களில் வைக்கப்பட்டிருந்த, கறுப்பு நிற தொட்டிகளில் தண்ணீரை நிரப்பிவிட்டு செல்லும். குடங்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று/நிற்காமல் முட்டி மோதி தண்ணீர் பிடித்து வந்துவிட்டால், இமாலய சாதனைதான். இரண்டு நாளைக்கு ஒரு முறை இந்த சாதனையை செய்ய வேண்டிய நிர்பந்தம் சென்னை மாநகரில் அத்தனை குடும்பத்தினருக்கும் இருந்தது.

அப்படி ஒரு காலக்கட்டத்தில் தான் , யமுனா சித்திக்கு முதுகு வலி வர ஆரம்பித்தது. தண்ணீர் தூக்கி தூக்கியே முதுகு வலி வந்து விட்டதாக நினைத்த சித்தி, வலியை குறைக்க கை வைத்தியத்தில் இறங்க ஆரம்பித்தார். முதலில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்து பார்த்தார்.  இது ஒரு 15 -20 நாட்களுக்கு தொடர்ந்தது, முதுகு வலியும் விடுவேனா என தொடர்ந்தது. சித்திக்கு, வலியின் மேல் சந்தேகம் வர ஆராய்ச்சியில் இறங்கினார். எப்படி வலிக்கிறது, எங்கே வலிக்கிறது, எப்படி உட்கார்ந்தால், எழுந்தால், படுத்தால் வலிக்கிறது என ஒரு பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதி வைக்கும் அளவுக்கு முதுகு வலியின் தன்மையைப்பற்றி தெரிந்துக்கொண்டு, கட்டுரை முடிவையும் வெளியிட்டார். அது தான் முதுகு சுளுக்கு.

அடுத்து, கைவைத்தியம் முதுகு சுளுக்குக்கு மாறியது. ஒரு தட்டில் தண்ணீர் நிரப்பி வைத்து , சுளுக்குக்கு எண்ணெய் விட்டு நீவி விட்டு, தட்டில் குறைகிறதா என பார்த்துக்கொண்டே வந்தார். சுளுக்கு விலக விலக, தண்ணீர் குறைய ஆரம்பிக்குமாம். அட.. தண்ணீர் குறையவில்லை, சித்தியின் சுளுக்கும் விலகவில்லை.

வீட்டில் சித்தப்பாவும் , பிள்ளைகளும் டாக்டரிடம் வர சொல்லி எத்தனை முறை அழைத்தும், கைவைத்தியத்தில் கில்லாடியான சித்தி வர மறுத்துவிட்டு, சிரித்துக்கொண்டே சொன்னார், "தண்ணீ தூக்கறதுல வர முதுகு வலிக்கு, யாராச்சும் செலவு செய்து டாக்டர்கிட்ட போவாங்களா?" போங்க போங்க. .இதோ இன்னும் கொஞ்ச நாள்ல, என் கை வைத்தியத்தாலேயே குணப்படுத்தி காட்டறேன்னு " சவால் விட்டார்.

நாட்கள், மாதங்களாகி கடந்தது, முதுகு வலியுடன். நடு நடுவே குடும்ப மருத்துவரிடம் சென்று, வலிக்கு மருந்தும் வாங்கி சாப்பிட்டார். ஆனால் வலி அவரை விடுவில்லை. ஆமாம், வலியோடு சித்தி கடந்த மாதங்கள் மொத்தம் எட்டு.  எட்டாம் மாதத்தில் ஒரு நாள், வலி தாள முடியாமல் துடிக்க, குண்டுக்கட்டாக சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றுக்கு தூக்கிக்கொண்டு சென்றார்கள்.  அங்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மருத்துவர்கள் முதுகு வலிக்குக்காரணம் மார்பகப்புற்று நோய் என்றார்கள். .

ஆனால், சித்தி அசரவில்லை." எனக்கு புற்றுநோய் வர வாய்ப்பேயில்லை.என் மூன்று குழந்தைகளுக்கும், 3 வயது வரை தாய்ப்பால் கொடுத்திருக்கிறேன். எனக்கெப்படி புற்றுநோய் வரும். இதை நான் நம்பத்தயாராக இல்லை, வேறு எதாவது காரணம் இருக்கலாம் " என மருத்துவரிடம் வாதிட்டார். மருத்துவர்கள் அடுத்து, பயாப்சி டெஸ்ட் எடுத்து பார்த்துவிடலாம் என்று சொல்லவும், வீட்டில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தவும், டெஸ்ட் எடுக்கப்பட்டது.

முடிவு, புற்றுநோய் முற்றிய நிலை கண்டறியப்பட்டது. மார்பங்களை அகற்ற முடியாத நிலையில் புற்று நோய் பரவிவிட்டு இருந்தது. வேறென்ன செய்யமுடியும் இனி, ஒரளவு குணப்படுத்த மருத்துவர்கள் சொன்ன கிமோத்தெரஃபி(Chemotherapy) மற்றும் ரேடியஷன் தெரஃபி(Radiation Therapy) சிகிச்சை முறைகளை சித்தி தொடர்ந்து செய்ய வேண்டி வந்தது.

சென்னை, அடையாரில் உள்ள, புற்றுநோய் மருத்துமனைக்கு சென்று, தகுந்த சிகிச்சை மேற்கொண்டார்கள். முதுகு வலி ஆரம்பித்தது அவரது 50 ஆவது வயதில்.  எட்டு மாதங்கள் கழித்த நிலையில், நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டு , தொடர்ந்து இரண்டு வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். இரண்டாவது வருட முடிவில் பரவியிருந்த மார்பக புற்றுநோய் , விரைந்து குறைய ஆரம்பித்த நிலையில், சித்திக்கு திடீரென்று சாப்பாடு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. ஏனிந்த பிரச்சனை என , திரும்பவும் மருத்துவர்களை நாடியதில், மார்பகத்தில் குறைந்த புற்றுநோய், நுரையீரலை ப்பற்றி பரவ ஆரம்பித்தது தெரிய வந்தது.

மாதம் ஒரு முறை மருத்துவமனை சென்று, கீமோத்தெரஃபி மற்றும் ரேடியஷன் சிகிச்சைகளை பெற்று வந்த சித்தி, ஒரு கட்டத்தில், முடியாமையில், மருத்துவமனையில், நிரந்தர நோயாளியாக சேர்க்கப்பட்ட்டார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது 53 ஆவது வயதில் எங்கள் அனைவரையும் விட்டு மறைந்தார்.

இப்பவும் சித்தியின் மன தைரியத்தை அனைவரும் பாராட்டினாலும், கைவைத்தியம் பார்க்காமல், வலி வந்தவுடனேயே மருத்துவரை சென்று பார்த்து, அனைத்து பரிசோதனைகளையும் செய்திருந்தால், இன்றும் அவர் எங்களுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது.

படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி அனைவரும் செய்யும் ஒரே தவறு... நமக்கு நாமே டாக்டர் ஆவது தான்.

*** **** ***

மார்பகப்புற்று நோய் பற்றி மேலும் விபரங்கள் அறிய :


1. மார்பகப்புற்று நோயின் அறிகுறிகள் :


http://en.wikipedia.org/wiki/Breast_cancer
http://health.msn.com/health-topics/breast-cancer/5-surprising-signs-of-breast-cancer
http://www.medicinenet.com/breast_cancer/article.htm
http://www.webmd.com/breast-cancer/guide/breast-cancer-symptoms-and-types



2. மார்பகப்புற்று நோய் விளக்கப்புகைப்படங்கள் :


http://breastcancerpictures.blogspot.in/2010/08/sign-of-breast-cancer.html
http://beauty-healthcare.blogspot.in/2010/12/breast-cancer-treatment-breast-cancer.html



3. மார்பகப்புற்று நோய் காணொளிகள் : 

What Is Breast Cancer?  http://www.youtube.com/watch?v=YNUBnX9JHQs 

How to Recognize Breast Cancer Symptoms  http://www.youtube.com/watch?v=yTHyMNBkbOY

Breast Cancer Progression and Staging  http://www.youtube.com/watch?v=l2lRZuEK4Y0&feature=related

 


இது நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை க்காக எழுதப்பட்டது.