விடியற்காலை 6 மணிக்கு சென்னை -பெங்களூர் சதாப்தி ரயில். இங்கிருந்து குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்னர் கிளம்பினால் தான் சரியாக இருக்கும். முதல் நாளே, கிண்டி சென்று, வண்டியை அங்கே நிறுத்திவிட்டு, ரயிலில் செல்வதாக திட்டம். காலை எழுந்தது என்னவோ 4.15 மணிக்கு. ஆனால் எப்படி எதனால் தாமதமாகியது என தெரியவில்லை. இருவரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு தான் கிளம்பினோம். கதவை தாழிடும் போது 5.30 ஆகியிருந்தது. எனக்கு அப்போதே டென்ஷன் ஆரம்பித்தது.

அவரிடம், "நான் வண்டியை ஓட்டுகிறேன்" என்றேன். டென்ஷனாக இருப்பது தெரிந்து "வேணாம் நானே ஓட்டுகிறேன்" என்றார். வண்டியை தெருவில் இறக்கியபோது,  நேரே சென்ட்ரலுக்கு சென்றுவிடுவதாக முடிவு செய்து கிளம்பினோம்.

விடியற்காலை, சென்னை சாலைகள்  வெறிச்சோடி இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டிகள். அண்ணாசாலையில் எங்கும் நிற்காமல் வேகமாக செல்ல முடிந்தது. சென்ட்ரலை நெருங்கிய  போது 5.55. இன்னும் 5 நிமிடம் , சென்றுவிடுவோம் ஆனால் வண்டியை பார்க் செய்வது ஒரு பக்கம், வெளியூர் ரயில் நிலையம்  ஒரு பக்கம்.  "சீக்கிரம் சீக்கிரம்" என குடைச்சல் கொடுக்க தொடங்கினேன். வண்டி பார்க்கிங் வந்தவுடன், "நீங்க வாங்க நான் போறேன்" என பைகள் இரண்டையும் தூக்கிக்கொண்டு அவருக்காக காத்திராமல் ஓட ஆரம்பித்தேன்.

ரயில் நிற்கும் ப்ளாட்ஃபாரம் தேடி நின்றபோது, நிமிடங்கள், நொடிகளாக மாறி இருந்தன.  இவரை காணவில்லை. ஓடும் போதே மூன்று முறை அழைத்துவிட்டேன்,  அவர் பேசியது எனக்கு காதில் விழுவில்லை, என்றாலும் நான் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருந்தேன்.

"நடக்கக்கூடாதுப்பா ஓடி வரணும், ஓடி வாங்க..ஓடிவாங்க.. சிக்னல் போட்டுட்டுடாங்க.. வண்டி எடுக்கப்போறாங்க.." என்று கத்திக்கொண்டு இருந்தேன்.  முதல் பெட்டியின் அருகில் அவர் வரும் வழிப்பார்த்து, ஃபோனும் கையுமாக, கத்துவதுமாக இருந்தேன். வண்டி நகரத்தொடங்கியது....அவரை காணததால் நான் வண்டியில் ஏறவில்லை. அவரிடமிருந்து கால்,

"எங்க இருந்தாலும் உன் எதிரில் இருக்கும் கம்பார்ட்மென்டில் ஏறு"

"நீங்க எங்க இருக்கீங்க, நான் தனியா எப்படி போக? ... "

"நான் ஏறிட்டேன்.. நீ ஏறு .."

என்னைத்தாண்டி எப்படி சென்றார் என தெரியவில்லை, தட தடவென பைகளை தூக்கிக்கொண்டு, நகரும் வண்டியில் ஏறிவிட்டேன், என் படப்படப்பு குறையுமுன்னே, என் பின்னால் என்னைப்போலவே ஓடி வந்து ஏறிய ஒருவர், ஈஸ் திஸ் சதாப்தி ? என்றார்.. (ஆமாய்யா ஆமா) .."எஸ்.." என்றேன்.

இவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை, நான் ஏறியது தான் முதல் பெட்டி, அதில் அவரை காணவில்லை, ஏனோ அவர் மேல் சொல்லமுடியாத கோவம் வந்தது ...பைகளை தூக்கிக்கொண்டு வெகுதூரம் ஓடிவந்ததில், கைகள் வலிப்பதை அப்போது தான் உணரத்தொடங்கினேன். படப்படப்பு குறையவில்லை, வியர்த்துக்கொட்டியது. திரும்பவும் அழைத்து, கோவத்தோடு, ...

'தனியா நிக்கறேன்.. எந்த சீட் தெரியல, இது எந்தப்பெட்டின்னு (பெயர்) தெரியல, நான் முதல் பெட்டியில் ஏறினேன்.. நீங்க எங்க இருக்கீங்க?

ரயில் சத்தத்தில் அவர் பேசியது துளியும் எனக்கு காதில் விழவில்லை. என் ஃபோன் சவுண்டு அடிக்கடி போயிட்டு வரும் பிரச்சனை வெகு நாட்களாக உள்ளது, அதை தூக்கிப்போட்டு புதுசு வாங்கச்சொல்லி பலமுறை இருவரும் சொல்லியும், மாற்றாமல் இருப்பது என் பிடிவாதம். அவர் பேசுவது காதில் விழாததில், அவர் ரயிலில் தான் இருக்கிறாரா ? விட்டுவிட்டு ஏறிவிட்டோனோ? சுற்றி கண்களை சுழட்டி அவரை தேடும் போது கறுப்பு கோட் போட்ட டிடிஆர் கண்ணில் பட டிக்கட் நினைவு வந்தது, டிக்கட் என்னிடம் இல்லை, அவரிடம் தான் உள்ளது.  டென்ஷன் அதிகமாகி, திரும்பவும் நானே அழைத்தேன். அவருக்கு என் மொபைல் நிலை  புரிந்துவிட்டது..

"நீ எங்க இருக்கியோ அங்கவே இரு, நான் வரேன்"  கத்தினார்.

ஃபோனை  நிறுத்திவிட்டு, காத்திருந்தேன். அவரும் கோபமாகவே வந்தார், அவர் பேசியதை காதில் வாங்காமல் திரும்ப திரும்ப அழைத்தது கோவமாக இருக்கும், நான் என்ன செய்யமுடியும், என் ஃபோன் பிரச்சனை அது. எனக்கு வியர்த்துக்கொட்டுவதை பார்த்து லேசாக பயந்தது தெரிந்தது.  எதுவும் மேற்கொண்டு இருவருமே பேசிக்கொள்ளவில்லை.  பையை என்னிடம் இருந்து வாங்கியவர், பிறகு என்னைத்தூக்கவே விடவில்லை. நானும் அவர் வெயிட் எடுக்கக்கூடாதே என பின்னால் நடந்துவாறே பிடிங்கியும் பார்த்தேன்.

 "வேணாம், முதல்ல நீ உக்காரு"  என சீட்டை தேடி இருவரும் அமர்ந்தோம்.

இதயத்துடிப்பின் வேகம் குறையவில்லை, பளுவாக இருந்தது.

" தண்ணீ வேணும்.. "

சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,  ரயிலில் உணவு கொடுக்கும் ஊழியர் ஒரு தட்டில் 2 சாக்லெட், 2 பிஸ்கெட் , 1 தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு போனார். தண்ணீரை பிரித்து குடித்தேன். இதயத்துடிப்பு நிதானத்திற்கு வந்திருந்தது. வலி குறைந்த லேசான உணர்வு. அன்னிச்சையாக, அவருடைய கைகள் இரண்டையும் தடவி திருப்பி திருப்பி பார்த்த்தேன். வீக்கமொன்றுமில்லை. விரல்களில் என் விரல்களை கோர்த்து அழுத்தி "வலிக்குதாப்பா?  "

"நீதான பையத்தூக்கிட்டு வந்த....."

"ஆமா... நான் தான் தூக்கிட்டு வந்தேன்.  பெருமூச்சு விட்டு நிம்மதியாக சிரித்தேன்.  "பசிக்குது.. இந்த ட்ரைன்ல எப்ப சோறு போடுவாங்க?"

"ஹா ஹா ஹா. .ஆரம்பிச்சிட்டா (இனி இவள பெங்களூர் வரை சமாளிக்கனும்)  டீ வரும்ம்மா வெயிட் பண்ணு.. "

"அப்புறம் ?"

"டிபன் ஆர்டர் செய்து இருக்கேன் வரும்."

"அப்புறம் ?"

"ஆங்,,,, மதியம் மைசூர் வரைக்கும் அப்படியே போனீன்னா இலப்போட்டு சோறு போடுவாங்க..உக்காந்து சாப்பிட்டுட்டு அப்படியே ஒரு தூக்கம் போட்டுட்டு வா!  10.30 பெங்களூர் போயிடும். .அதுக்குள்ள உனக்கு  இன்னும் என்னவெல்லாம் வேணும் ?"

"....... ஒன் மோர் டீ ?"

"தருவாங்க.."

அவர் சொன்னபடி எல்லாம் வந்தது.. சாப்பிட்டு முடித்து, மொபைலில் பாட்டைப்போட்டு, காதில் ஹெட் ஃபோனை மாட்டிக்கொண்டு, ஒரு காலை மடக்கி, ஒரு பக்கமாக திரும்பி உட்கார்ந்து, அவர் தோள் மேல் முகம் சாய்த்து தூங்கிப்போனேன்.

எழுந்தபோது , அவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்.  அவர் தோளில் வெகு நேரம் முகம் அழுத்தி தூங்கி இருக்கிறேன்...   கைகள் மறுத்திருக்கோமோ? ... இரண்டு கைகளையும் பார்த்தேன்...வீக்கமில்லை.... மீண்டும் ஒரு பெருமூச்சு.

தூக்கம் கலைந்து போயிருந்தது..... அவரை தொந்தரவு செய்யாமல், வேறு பக்கம் திரும்பி அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்..