விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சாந்தி திரை அரங்கம் (நான் படிக்கும் காலத்திலேயே ஏதோ பிரச்சனையில் மூடிவிட்டார்கள்) வரும் வழியில் ரயில் நிலையத்தை ஒட்டி, அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளி செல்லும் தெருவில் ஒரு ஐயங்கார் வெதுப்பகம் இருந்தது. (இப்போது இருக்கிறதா என தெரியவில்லை). எனக்கு தெரிந்து அந்த பகுதியில் அது ஒன்று தான் வெதுப்பகம்.  

எனக்கோ அண்ணன்'களுக்கோ காய்ச்சல் வந்தால், அங்கு சென்று சுடச்சுட ரொட்டி வாங்கிட்டு வந்து தருவார்கள்.  மாலை 3-4 மணி வாக்கில் சென்றால், சுடச்சுட ரொட்டி கிடைக்கும்.  அது ஐயங்கார் வெதுப்பகத்தின் சொந்த உருவாக்கம், ரொட்டி கேட்டப்பிறகு, முழுசாக இருக்கும் ரொட்டியை நம் எதிரில் கட்டை மேல் வைத்து துண்டுகள் போட்டு, மெல்லிய வெள்ளை கவரால் சுற்றித்தருவார்கள். அதற்கு தயாரிப்பாளர் பெயர் எதுவும் இருக்காது. ரொட்டி. மிருதுவாக ருசியாக  இருக்கும். இப்போது போல மளிகை க்கடையில் எல்லாம் ரொட்டி கிடைப்பது இல்லை. ரயில் நிலையம் வரை நடந்து சென்று வாங்கி வர வேண்டும் என்பதால் ரொட்டி வாங்குவதை மிகப்பெரிய வேலையாக நினைப்போம்.

எங்களுக்கு காய்ச்சல் என்பது வருடத்திற்கு ஒரு முறை வந்தால் அதிகம்.அப்படியே வந்தாலும், மிளகு ரசமும், மிளகு தட்டிப்போட்ட மீன் குழம்பும், வயக்காட்டு நண்டு குழம்பும் வைத்து ஒரே வேளையில் காய்ச்சலை இறக்கி விடுவதில் ஆயா கெட்டி. வயல் நண்டுவை பற்றி சொல்லியே ஆகனும். காய்ச்சல் வரும் நேரம், விடாத நெஞ்சு சளி, இருமல் இருக்கும் நேரங்களில், இந்த நண்டு வரும். யாரிடமோ சொல்லி வைத்து வாங்குவார்கள், இது வரும் போதே கச்சா முச்சான்னு ஒன்றோடு ஒன்று மோதி சத்தம் எழுப்பிக்கிட்டே வரும். அதை வேடிக்கை பார்க்கும் போதே பாதி காய்ச்சல் ஓடிப்போயிடும். :). உயிரோடு அதை ஒவ்வொன்றாய் எடுத்து அம்மியில் வைத்து நச்சக்" ன்னு குழவியை அதன் உடம்பின் மேல் போடுவார்கள். அவ்வளது தான் ஆள் அவுட்.  பிறகு எடுத்து சுத்தம் செய்து குழம்பு ரெடி. கடல் நண்டுவை விட, கழனிவெளி நண்டு தான் சூப்பர் ருசி.

ரொட்டிக்கு வருவோம், குடும்ப டாக்டர் ராஜாராம் மனசு வைத்தால் மட்டுமே ரொட்டி சாப்பிட வாய்ப்புண்டு. சாப்பாடே கூடாது என அறிவுரை செய்தால் ஒழிய இந்த ரொட்டியும் கிடைக்காது. சாப்பாடு வேண்டாம் என்றாலும் அடுத்து வந்து நிற்பது கஞ்சி தான். நொய் அரிசிக்கஞ்சி, அர்ரொட்டி மாவு கஞ்சி என்று எதையாவது செய்து க்கொடுப்பார்கள். தொட்டுக்கொள்ள காரமில்லாத உப்பு நார்ந்தங்காய் ஊறுகாய். (ஸ்ஸ்ஸாஆ.)  இதை எழுதும் போது, அந்த கஞ்சியும் ஊறுகாயும் கிடைக்காதா என மனம் ஏங்குகிறது. கஞ்சிக்கூட வைத்து விடலாம், அந்த ஊறுகாய். சான்சே இல்ல.  ஆனால் அப்போதோ மனம் ரொட்டிக்கு தான் ஏங்கியது. . அதற்கு கண்டிப்பாக சாப்பாடு சாப்பிட முடியாத வாய் கசப்போடு கூடிய காய்ச்சல் வந்தே ஆகவேண்டும். அநாவசியமாக ரொட்டி வாங்கித்தரவே மாட்டார்கள். கடையில் சென்று ரொட்டி வாங்கி சாப்பிடுவது கெட்ட பழக்கம், காய்ச்சல் என்றால் மருந்து போல் சாப்பிட வேண்டிய லிஸ்டில் மட்டும் வருபவை.

ஓரிரு முறை அந்த வெதுப்பகத்திற்கு நானும் சென்று ரொட்டி வாங்கி வந்த நினைவு இருக்கிறது. பொதுவாக வெளி வேலைகளுக்கு, கடைகளுக்கு என்னை அனுப்பவுதில்லை. அனுப்பினாலும் கூட அண்ணன், அத்தை, அத்தை மகள், மகன் என்று யாராவது வருவார்கள்.

இருங்க..இருங்க..... தலைப்பில் ரொட்டிக்கும் திரட்டிக்கும் என்ன சம்பந்தம் னு தெரியாமல் படித்துக்கொண்டு வருபவர்களுக்கு............... சங்கமம் திரட்டியின் அறிமுகம்..
================================================================
பிரபல பதிவர் + இயக்குனரும், இந்திய நாட்டின் மீதும்,  தமிழ் நாடு மற்றும் மொழியின் மீதும் தீராத தீவிர காதல் கொண்டிருக்கும் அமெரிக்கரான (?!) திருவாளர் இளா அவர்கள், தமிழ் நல்லுலகத்திற்கு ஒரு தமிழ் திரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார்.  நம்மை எல்லாம் நம்பி ஆரம்பித்த அவரை நாம் கைவிடலாமா?? விடவேக்கூடாது. அந்த திரட்டியில் உங்களின் பதிவை சேர்ப்பது மிகவும் எளிதுதான். ஒரு Gmail கணக்கு இருந்தாலே போதுமானது.  இதை படிக்கும் போதே, www.isangamam.com லிங்கை க்ளிக்கி, ஓடிப்போய்  ஒரு "உள்ளேன் ஐயா"  போட்டுட்டு, உங்க வலைப்பதிவையும் இணைச்சுட்டு வந்து  மிச்சத்தை படிங்க. அப்பத்தான் அமெரிக்காவில் இருந்து எனக்கு கமிஷன் வந்து சேரும்.
    
உங்க பதிவை சேர்த்துட்டீங்களா?  வாங்க திரும்ப ரொட்டி சாப்பிட கிளம்புவோம்.
===============================================================
வீட்டில் எங்கள் மூவருக்கு மட்டும் தான் இந்த ரொட்டி கணக்கு. அதுவும் காய்ச்சலை சாக்காக வைத்து அடம் பிடித்து ரொட்டி வேண்டுமென கேட்கும் ஒரே ஆள் நான் தான். அண்ணன்கள் கஞ்சி கொடுத்தால் குடித்துவிட்டு பேசாமல் இருப்பார்கள். எல்லாவற்றிற்கும் அடம் பிடிப்பது,  கேட்டதை தராவிட்டால் உண்ணாவிரதம் இருந்து சாதிப்பது போன்ற எல்லா நற்செயல்களும் செய்து, நற்செயல்களுக்கு ஏற்றவாறு எல்லோரிடமும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிவாங்குவதும் நானாகத்தான் இருக்கும். பெண் குழந்தை இப்படித்தான் இருக்கனும்னு சட்டம் திட்டம் பேசும் வீட்டில், பெண் குழந்தையை அடிப்பதில் மட்டும் தயவு தாட்சன்யம் பார்த்தது இல்லை. யப்பா என்னா அடி.. அதுவும் எது கையில் கிடைக்குதோ அதை வைத்து அடி பின்னிடுவாங்க பின்னி..ம்ம்ம்...இப்ப நினைத்து பார்த்தால் கூட, என் உடம்பு எவ்வளவு அடி உதைகளை தாங்கி, கடந்து வந்து இருக்கிறது என்பதை நினைத்து பிரம்மிப்பாக உள்ளது.  குடும்ப குல விளக்கு என ஒரு பக்கம் போற்றப்பட்ட என்னை மட்டுமே பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது....... எவ்வளவு நல்லவளா இருந்து இருக்கேன்னு மட்டும் புரியுது. . 

இப்படி அடி உதை வாங்கினாலும், அது ஒரு காலம், ரொட்டிக்காக ஏங்கிய காலம் ! வருசத்திற்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ கிடைக்குமா அதற்காக காய்ச்சல் வருமா என்று எதிர்பார்த்ததுப்போக , இன்று வாரத்திற்கு 3-4 நாட்கள் காலை நேர உணவில் ரொட்டி சேர்ந்துவிட்டது. மைதா ரொட்டி போக, இப்போது கோதுமை ரொட்டி வந்துவிட்டது. பிரட் ஆம்லெட், பிரட் ரோஸ்டு வித் ஜாம் , சீஸ் & பட்டர், பிரட் சான்ட்விஜ், பிரட் ஃப்ரென்ச் ஃப்ரை , பிரட் முட்டை பொரியல்,  பிரட் & பால். இப்படி ரொட்டியில் செய்யும் உணவுகள் உடலுக்கு நல்லது கலோரி குறைவு என சாப்பிடுவதும் அதிகமாகிவிட்டது.  காலை வேளை அவசரத்தில் செய்வதற்கும் மிகவும் எளிதாக உள்ளது.

சீஸ், பட்டர்,  முட்டை  பால் எல்லாம் கலோரி குறைச்சலா என கேட்டால், முட்டை தவிர மற்றவை கொழுப்பு நீக்கியதாகத்தான் வாங்குகிறோம். நாம் கடைக்கு போனாலே,  ரொட்டியை எடுத்து கையில் கடைக்காரர் கொடுப்பது வழக்கமாகிவிட்டது.   ரொட்டி இல்லாத வாரம் இருப்பதே இல்லை.

எப்போது ரொட்டி சாப்பிட்டாலும், காய்ச்சல் நினைவுகளும், காய்ச்சல் வரும் போது ரொட்டிக்காக அடம் பிடித்த நினைவுகளும், ஐயங்கார் வெதுப்பகமும் நினைவில் வராமல் இருப்பதில்லை.

அணில் குட்டி : மக்கா... ரொட்டிய பத்தி படிச்சதுல சங்கமம் திரட்டியில் பதிய மறந்துடாதீங்க. யாரும் பதியாமல் போனால், திரட்டி ஓனர் அமெரிக்காவிலிருந்து துப்பினால், எங்கையும் நடுவில் விழாமல் நேரா கவி முஞ்சி மேல வந்து தான் விழும்.. ஹி ஹி...அது அந்தம்மாவோட கவலை நமக்கென்ன..??

நீங்களும் உங்க பதிவில் சங்கமம் திரட்டியை விளம்பரம் செய்தீங்கன்னா, அமெரிக்காவில் இருந்து கமிஷன் வரும் ! அதான் இப்ப மேட்டர்..  விளம்பரம் செய்து கமிஷனை வாங்க மறக்காதீங்க .. திரட்டி ஓனர் அமெரிக்காஆஆஆ......ங்கறதையும் மறந்துடாதீங்க.. :)

பீட்டர் தாத்ஸ் : Good days are to be gathered like grapes, to be trodden and bottled into wine and kept for age to sip at ease beside the fire. 
Our memories are the only paradise from which we can never be expelled
.