கன்னா பின்னா'ன்னு ஒரு கதம்பம்

=> ஆட்டோ டிரைவர் ஒருவர், மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல், கூவம் ஆற்றில் குதித்து விட்டார். தீயணைப்பு துறையினர் வந்து கூவத்தை துழாவி அவரை காப்பாற்றிவிட்டனர். அந்தம்மா, இந்த மனுசனை எவ்ளோ டார்ச்சர் செய்து இருந்தால், ஓவ்வ்வ்வ்வேக் கூவத்தில் குதித்து இருப்பார்? ஆட்டோ டிரைவரே.. உங்களை மாதிரி எல்லாரும் குதிக்க ஆரம்பித்தால், கூவம் ஆறு முழுக்க ஆண்கள் தான் நீச்சல் அடித்துக்கொண்டு இருப்பார்கள், தீயணைப்பு துறைக்கு 24 மணி நேரமும் வேலை இருந்துக்கொண்டே இருக்கும்.

=> மனைவி பொது இடங்களிலும், சினிமா அரங்குகளிலும் வாய்விட்டு சத்தம் போட்டு எல்லோரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு சிரிப்பதால், அவனமானப்பட்டு, அசிங்கப்பட்டு கூனி குறுகி அவஸ்தைப்பட்ட ஒருவர், மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டார்- செய்தி. பெண்கள் வெளி இடங்களில் சத்தம் போட்டு சிரிப்பது அத்தனை அசிங்கப்படக்கூடிய விசயமா?? நான் வேற இப்ப எல்லாம் பாலாஜி நிகழ்ச்சிய ரேடியோவில் கேட்டு, அநியாயத்துக்கு தனியாவே ரோடுல சத்தம் போட்டு சிரிக்கறேன்.. விவாகரத்து அளவுக்கு போச்சின்னா பாலாஜி மேல கேஸ் போட்டுக்கலாம்னு முடிவு செய்து இருக்கேன்.




















=> " ழ கஃபே " - (Zha Cafe) உணவு விடுதி என்ற எண்ணமே வராமல் நம் வீடு போல உணரச்செய்தது. நண்பர்கள் கூட மிக சிறந்த இடம். காற்று, வெளிச்சம், கவனிப்பு இவை மூன்றுமே இன்னும் தேவை. விலை அதிகம். கருப்பட்டி காப்பி கொடுத்த கண்ணாடி குடுவை பிடித்திருந்தது. கேமராக்கும். சஞ்சய் தனியாக அங்கிருக்கும் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது கவர்ந்தது. வேறு இடங்களில் குழந்தைகள் இத்தனை சுதந்திரமாக விளையாட வாய்ப்புகள் குறைவு அல்லது இல்லை.

=> பஸ் டிக்கட் விலை ஏற்றம் கட்டுப்படி ஆகலை, வண்டியிலேயே போனால் பஸ்ஸில் போவதை விட 450 ரூ குறையுது. வாங்கற சம்பளத்தை அம்மாவிற்கு மொய் எழுதவே சரியாகிடும் போல இருக்கு. அதற்கு பதில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிடலாம். ஐடி'யில் சம்பாதிப்பவர்கள் தவிர வேறு யாரும் தொடர்ந்து பஸ்'ஸில் போக முடியாது என்றே நினைக்கிறேன். எல்லாமே இரு மடங்கு. ! # அம்மா (போட்ட) நாமம் வாழ்க !

=> ஒரு வருடம் முடிய போகிற நேரம், இன்று தான், ஜிம் ட்ரைனரை "நீங்க பிசியோதெரிஃபி படிச்சி இருக்கீங்களா" என்று கேட்டேன். அவருக்கே அவரிடம் நான் பேசியது ஆச்சரியம். ரொம்ப ஆர்வமாக மேற்கொண்டு கேட்க போவதற்கு பதில் சொல்ல நிமிர்ந்து உட்கார்ந்தார். முதுகு வலிக்கு என்ன எக்ஸர்ஸைஸ் செய்யனும், என்றேன். எடுத்தவுடனே ஹீல்ஸ் போடறீங்களா..(ஆமாம் ) போடாதீங்க, வண்டி ஓட்டாதீங்க.. (பஸ் ஸில் போக சொல்றாரே, அம்மாவோட ஆளா இருக்குமோ?) பந்து மேல மல்லாக்க படுத்து முன்ன பின்ன மூவ் பண்ணுங்க, சின்ன பந்து மேல் பக்கம் தூக்கி கொடுக்கற எக்சர்சைஸ் செய்ங்க. இரண்டுக்குமே இன்னொருவர் கூட வேணும், இது வேலைக்கு ஆகாது என யூடியூபில் தேடினேன். ரொம்ப ஈசியாக யோகா "பூனை ஸ்ட்ர்ச்சஸ்" விடியோ கிடைத்தது. http://www.youtube.com/watch?v=3zaW9a1ouC4 முதுகு வலி போயே போச்சி. ! :)

=> முதலில் வேலாயுதம் பார்த்த பிறகு 7 ஆம் அறிவு பார்த்ததாலோ என்னவோ, எல்லோரும் சொன்ன அளவு படம் மோசமில்லை. குறிப்பாக வேலாயுதம் அளவிற்கு தலைவலி இல்லை. சுருதி இடுப்பை வளைத்து (சுற்றும்) ஆடும் இடங்களில் கமல்ஜி ஆடுவதை போன்றே இருக்கிறது.

=> நேத்திக்கு முழுக்க உன்னை பார்க்கல' ன்னு வேலைக்கு செல்லும் முன் நவீனை எழுப்பி அவனுடன் இரண்டு வார்த்தை பேச, ஒரு நாள் பாக்கலன்னு வந்து நிக்கற, வேலை, படிப்புன்னு வெளியூர் போனா என்ன செய்வ. ?! :( . பிரிவை சந்திக்கும் நாள் நெருங்கிக்கொண்டு உள்ளது. அவனை பார்க்காமல் என் நாட்களை நகர்த்த என்னை நான் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அவன் செல்லுமிடமெல்லாம் செல்லவும் முடியும் என்றாலும், கணவரை தனியே விட்டு செல்லவும் முடியாது. என்னுள்ளே நானே கலங்கியும், தெளிந்தும், தெளிந்தும் கலங்கியும்... .. வாழ்க்கையின் கட்டங்கள்

=> முத்துலட்சுமியின் மகள் மாதினி பாடிய பாடல், பாடுவதற்கு ரொம்பவே கஷ்டமான பாடல், நல்ல முயற்சி செய்து பாடியிருக்கிறார். http://youtu.be/Hj0QGoYQB80. கேட்டு பாருங்கள்.. உங்களுக்கும் பிடிக்கும்.


=> கிரண் பேடி யின் நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்த்தேன். அவரின் பதில்களிலிருந்து - சமைக்க தெரியும், ஆம்லெட் செய்வேன், எல்லா காய்கரியையும் மூன்று நிமிடங்கள் வேகவைத்து சூப்பு செய்து குடிப்பேன். பிரியாணி செய்யத்தெரியுமா என்றால் தெரியாது.

கைப்பை என்ற ஒன்று என்னிடம் இல்லவே இல்லை. என் உடையில் 4 பாக்கெட்கள் இருக்கின்றன. அவை இருக்கும் போது கைப்பை எதற்கு?

அணில் குட்டி : கவி, பதிவை உங்களுக்காக எழுதறீங்களா இல்ல மத்தவங்களுக்காக எழுதறீங்களா.... ?  கூடவே இருக்க எனக்கு தெரியல... உங்களுக்காச்சும் தெரியுமா?

பீட்டர் தாத்ஸ் : Every creature is better alive than dead, men and moose and pine trees, and he who understands it aright will rather preserve its life than destroy it.

சில நேரங்களில் சில மனிதர்கள்......

........நம்மை ஆச்சரியப்பட வைத்துவிடுகிறார்கள். அவர்களை பற்றிய எண்ணங்கள் சில பல நாட்கள் நம்மைவிட்டு நீங்குவதில்லை.. அப்படி ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன்.

அலுவலகத்திற்கு, காசோலை வாங்க வந்தவர், காசோலையை பெற்றுக்கொண்டு, அதை பையில் வைத்தபடி என்னைப்பார்த்துக்கொண்டே இருந்தார். ஏதோ சொல்ல போகிறார், அல்லது ஏதோ கேட்கப்போகிறார் என எதிர்பார்த்து அவ்வப்போது பார்வையை அவர் மேல் செலுத்தியும், என் வேலையையும் பார்த்தபடி இருந்தேன். நினைத்தபடியே

"மேடம்... இதெல்லாம் கொஞ்சம் பார்க்கறீங்களா?"

பையில் இருந்து பட்டாம்பூச்சி, பச்சைக்கிளி சிறிய முதல் பெரிய படங்கள் அடங்கிய குளிர் சாதனப்பெட்டி மற்றும் சுவர்களில் ஒட்டக்கூடிய ஸ்டிக்கர்கள் அவை.

"கொடுங்க பார்க்கலாம்..." வாங்கிப்பார்த்தவாரே, சற்றே ஆச்சரியத்துடன். .இதெல்லாம் எப்படி உங்கக்கிட்ட...?? என்ன விதமான வியாபாரம் இது புரியல...

"எனக்கு வீடு அரக்கோணம் மேடம், எங்க ஆபிஸ் அட்ரஸ் தான் தெரியுமே உங்களுக்கு, ஸ்பென்ஸர்ஸ் ல வேல, அங்க இருந்து ரயில் ல வர போக வர 3 மணி நேரம் செலவாகும். இதில் ரயில் வரைக்குமே போக வர இரண்டு மணி நேரத்துக்கு மேல செலவிட வேண்டி இருக்கு. ரயிலில் சும்மா உட்கார்ந்து இருக்கும் நேரம் இதை வித்துடுவேன்... " சிரிக்கிறார்.

(அட? எப்படி இப்படி எல்லாம்ம்ம்ம்ம்ம்... )

"நல்ல ஐடியாங்க.. இதெல்லாம் நல்லா விற்குமாங்க ?"

"வித்துடும் மேடம்.... நிறைய வாங்கறாங்க.. பேமென்ட் வாங்கப்போற இடத்தில் கூட சில சமயம் வியாபாரம் ஆகும் மேடம்.."

"ம்ம்ம்...அதான் தெரியுதே... சரி வாங்கிக்கிறேன்... எவ்ளோ ?

"25 ரூபாய் மேடம்"

" :))))) விலை அதிகம்... கவரை விட்டு எடுக்கும் போதே பட்டாம்பூச்சி தனித்தனியா வந்துடும் போல இருக்கே.. ....(குத்து மதிப்பாக சொன்னேன்) "

"தனியா வந்துட்டா லைட்டா ஃபெவி ஸ்டிக் தடவி ஒட்டிடுங்க.. வேற ஒன்னும் ஆகாது மேடம்.. நல்லா இருக்கும் மேடம்"

"அப்ப ஃபெவி ஸ்டிக்'க்கு யாரு காசு தருவா?"

"20 ரூ தாங்க மேடம்..."

"ம்ம்ம்ம் குட்"

அதிகம் பேசாமல் டக்கென்று பேரத்தை முடித்து, பணத்தை வாங்கிக்கொண்டும் கிளம்பிவிட்டார். ஒரு தனியார் ட்ராவல்ஸில், "ஆபிஸ் பாய்" ஆக வேலை செய்யும் இவர்,வருமானத்திற்கு தன் பயண நேரத்தையும் பயன் படுத்திக்கொள்வது ...

நம்மில் பலர் பயண நேரங்களில் செய்யும் வேலை.. பேச்சு,தொலைபேசியில் மணிக்காக பேச்சு, அதைவிட்டால் ஒருவரோடு ஒருவர் அக்கம் பக்கம் மக்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து கேவலமான சண்டை. .அதையும் விட்டால் தூக்கம், இப்ப அதிகமாக பார்ப்பது காதில் ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்பது..

தேவை என்ற ஒன்றும் இதில் அடங்கி இருக்கிறது. தேவை என்பது இங்கு பணம் மட்டுமே இல்லை. பணத்தை தாண்டி அந்த பயண நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த அவருக்கு தோன்றி இருக்கிறது. அதையுமே ஒரு தேவையாக (தேடலாக) எடுத்துக்கொள்ளலாம்.

நம் தேவைகள் பேசவதிலும், பாட்டுக்கேட்கபதிலும் முடிந்து போகிறது..... . :(

அணில் குட்டி : ஹி ஹி ஹி.... மனசாட்சியே இல்லாம பேசறதுல யாருக்காச்சும் அவார்டு கொடுக்கனும்னா அது அம்மணிக்கு தான்... கடைசி வரிய படிங்க.. அதை மட்டும் தான் இவங்க செய்யறாங்க...

பீட்டர் தாத்ஸ் :

It’s not enough to be busy, so are the ants. The question is, what are we busy about?

Ordinary people think merely of spending time. Great people think of using it.

Time = life; therefore, waste your time and waste of your life, or master your time and master your life.

Time is the school in which we learn, time is the fire in which we burn.

Better three hours too soon, than one minute too late.
- William Shakespeare

கலாசலா கலசலா கல்லாச கலசலா .........

எலந்தபயம் எலந்தபயம் ஆஆஆங்க்க்...



காதோடு தான் நான் பாடுவேன்..



பளிங்கினால் ஒரு மாளிகை.....



பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என எண்ண வேண்டும்..



என்னா மாதிரி பாட்டுங்க.......... என்னமா பாடியிருக்காங்க...

ம்ம்ம்..... என்னத்த சொல்றது ”கலாசலா கலசலா” பாட்டை கேட்கும் போது, எல்.ஆர். ஈஸ்வரி அம்மா பாடிய மற்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நினைவுக்கு வருகிறது...

அணில் குட்டி : சரி இப்ப என்ன சொல்லவரீங்க... ??

பீட்டர் தாத்ஸ் : Old is Gold ! what else can tell ?! :)

எங்க வீட்டு சமையல் - வாழைப்பூ

வாழைப்பூ வடை : 

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ ஆய்ந்து நறுக்கியது : 1 கப் (250 கி -300கி)
கடலை பருப்பு : 200 கிராம்
காய்ந்தமிளகாய் : 4 -5
லவங்கம் : 2
சோம்பு - 1/4 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
கருவேப்பிலை : சிறிது
வெங்காயம் : 1 (போடாமலும் செய்யலாம்)
எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை : கடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். கடலை பருப்பை முக்கால் பங்கு எடுத்து அதனுடன், நறுக்கிய வாழைப்பூ, காய்ந்தமிளகாய், சோம்பு, லவங்கம், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்,. நன்கு அரைந்தவுடன், மிச்சம் இருக்கும் கால் பகுதி பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்ந்து பிசைந்து, வடைகளாக தட்டி போட்டு, சிவந்தவுடன் எடுக்கவும். சுடச்சுட சாப்பிட்டால் தான் இது ருசியாக இருக்கும்.

வாழைப்பூ பொறியல் :

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ ஆய்ந்து நறுக்கியது : ஒரு கப்
காய்ந்த மிளகாய் : 2
பயத்தம் பருப்பு : 1/4 கப்
கடுகு , உளத்தம் பருப்பு : தாளிக்க
மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
கருவேப்பிலை : சிறிது
 எண்ணெய் : தாளிக்க
தேங்காய் துருவியது : தேவையான அளவு

செய்முறை : வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, உளத்தம் பருப்பு , காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு , கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், லேசாக சிவந்தவுடன், பயத்தம் பருப்பை போட்டு வதக்கவும், லேசாக சிவக்கும் போது வாழைப்பூவை கொட்டி கிளரி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும். நடுநடுவே கிளரி விடவும். 5-8 நிமிடங்களுக்குள் வெந்துவிடும். வெந்தவுடன் தேங்காய் தூவி கிளரி இறக்கிவிடவும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் : வாழைப்பூவை ஆய்ந்து எடுக்கும் போது கடைசியாக வெள்ளை நிறத்தில் ஆயமுடியாமல் ரொம்ப குட்டி இதழ்கள் மாவுப்போல மிஞ்சும், அதை அப்படியே பச்சையாக சாப்பிட குடல் புண் ஆற்றும், மற்றும் கர்ப்பபைக்கும் நல்லது.

துவர்ப்பாக இருப்பதால் சமைக்கும் முன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து ஊறவைத்து பிறகு சமைக்கலாம். சற்றே துவர்ப்பு குறையும்.

அணில் குட்டி : மக்கா.. வாழைப்பூவில் கூட்டு, அவியல் கூட செய்யலாம். ஆனா நம்ம கவி'க்கு அதெல்லாம் செய்ய தெரியாது. ...ஹி ஹி... தெரியாததை தெரியாதுன்னு சொல்லாம வாழைப்பூவில் இவ்ளோ தான் செய்யமுடிந்த மாதிரி எழுதிட்டு போயிட்டாங்க... . நீங்க அதெல்லாமும் செய்து பாருங்க.. ..

பீட்டர் தாத்ஸ் : One cannot think well, love well, sleep well, if one has not dined well.

நண்பர்களின் உதவியை எதிர்பார்த்து....

என் சொந்த வேலைகள் போக நேரம் கிடைப்பின், குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவிட  பிடித்தமானதாக இருந்தது. ஆனால், இரண்டு முறை குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று வந்ததில், அந்த குழந்தைகளின் முகத்தில் இருக்கும் ஏக்கம், அவர்களின் வயதுக்கும், வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லா ஆடைகள், அவர்களின் படிப்பு, பேச்சு என என்னால் மனதளவில் ஏற்றுக்கொள்ளமுடியாத  சில விஷயங்களால் மனபாரம் அதிகமானதால் போவதை நிறுத்திக்கொண்டேன். தள்ளியிருந்து உதவி செய்வது மட்டுமே என்னால் முடிந்தது என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். பல வருடங்களுக்கு பிறகு, போகும் வழியில் இந்த இல்லத்தின் பெயர் பலகை பார்த்து, ஒரு முறை சென்று பார்க்கலாமே என ஆவலில் சென்றேன்.. ஒரு மணி நேரம், அவர்களுக்கு என்னால் நிச்சயம் சந்தோஷம் தான்... நம்மை பார்க்க ஒருவர் வந்திருப்பதாக நினைத்து முகத்தில் அத்தனை சந்தோஷம். எல்லோருமே வயதானவர்கள். ஆண், பெண் என கலந்து தான் இருந்தார்கள். 

சரஸ்வதி பாட்டி 90 வயது, திரும்பவும் என்னை அதே மனநிலைக்கு  எடுத்துவந்துவிட்டார். :(. பார்வையில்லை, ”குட் ஈவினிங்” என்று சொல்லி என்னை இழுத்து மிகவும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார். சில நிமிடங்கள் என்னை விடவில்லை. பிறகு பேச ஆரம்பித்தார், அப்போதும் என் கையை இறுகப்பிடித்தவாரே பேசினார். நடு நடுவே ஆங்கிலம் :). சாப்பிட்டு விட்டு போகச்சொல்லி தொந்தரவும் செய்தார்.:) இரண்டு மனநிலை சரியில்லாத ஆண்கள், இவர்களில் பலருக்கும் சொந்தங்கள் இருந்தும் ஆதரவற்று இருப்பது, வேதனை. 

வந்தப்பிறகு அதை நடத்தும் திரு.சூரியக்குமாரிடம் விபரங்களை கேட்டு மெயில் அனுப்பினேன்.  நீங்களும் அவற்றை படித்து, அவர்களின் இணையத்தளத்தை பார்வையிட்டு, உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில், தயவு கூர்ந்து உங்களால் ஆன உதவியை செய்யவும்.

அவரிடம் கேட்டறிந்தவை :

1.  எத்தனை ப்பேர் இங்கே வசிக்கிறார்கள்?
11 பாட்டிகளும் 2 தாத்தாக்களும் 2 மாற்றுதிறனாளிகளுமாய் மொத்தம் 15 நபர்கள் இல்லத்தில் வசிக்கின்றனர். இரு பாட்டிகள்  (80 வயது & 65 வயது) விரைவில் சேர இருக்கிறார்கள். மொத்தம் 17 நபர்கள் மட்டுமே இங்கு தங்க இயலும்.

2. எந்த வயதினர் ?
பெரும்பாலான பாட்டிகளுக்கு வயது 80க்கும் அதிகம். அனைவரையும் சேர்த்த சராசரி வயது 74 ஆகும்.

3. மனநிலை பாதிக்கப்பட்டவர் நிலைப்பற்றி.
எங்கள் இல்லத்தில் சஞ்ஜீவிக்கு 48 வயது ஆகிறது. பிறவியிலேயே உடல்வளர்ச்சி குன்றி படுக்கையிலேயே காலம் கழிக்கும் இவருக்கு இவரையும், இவரது இடத்தையும் சுத்தமாக பராமரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாலகுமார் (26) மனப்பிறழ்ச்சி நோயால் அவதிப்படுபவர். அடுத்தவருக்கு தீமை விளைவிக்கும் செயல்களை தவிர்க்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ருத்ரன் அவர்களின் மருத்துவ ஆலோசனையுடன் பாலகுமார் விரைவில் குணமடையும் வாய்ப்புகள்  தென்படுகின்றன.

கமலம்மாள் (95) ஆதரவில்லாமல் வந்து சேர்ந்திருக்கும் இவரது தள்ளாமை பிரச்சினைகளுடன், கத்துவது, துணியை அவிழ்த்துக்கொள்வது போன்ற குணம் மாறி நடந்து கொள்பவர். இவ்வில்லம் இவர்களையும், சாதாரணமானவர்களுடன் இணைத்து போதுமான அளவில் கவனித்துக்கொள்ள உதவியாளர்களுக்கும் சொல்லித்தரப்பட்டுள்ளது.

4.  என்னுடைய தோழியாகிவிட்ட சரஸ்வதி பாட்டி  :) பற்றி 
சரஸ்வதி (90) முழுவதுமாக பார்வையின்றி சிரமப்படுபவர். அனைத்து உறவினர்கள் இருந்தும் ஒதுக்கப்பட்டுள்ள இவர் இல்லத்திற்கு வந்து சேர்ந்த முதல் சிலபேர்களுடன் மூத்தவர். சிறிது சிறிதாக (20-25 வருடங்களில்) பார்வை போனதற்கு தாம் சிந்திய கண்ணீர்கள் காரணமாகும் என்கிறார். பார்வையற்ற இவரை வெளியே தள்ளி விரட்டிவிட்டார் இவரது மருமகள்.

5. இந்த இல்லம் தொடங்கிய திரு. சாரதி பற்றிய விபரங்கள் .
இல்லத்தின் அமைப்பாளர் ஸ்ரீ.பார்த்தசாரதி அவர்கள் ஆச்சரியப்படத்தக்க ஒரு சமூக சேவகர். சென்னை கிண்டி-யில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிபருவத்திலேயே சிவானந்த குருகுலத்திற்கு சென்றுவந்தபின் ஏற்பட்ட தூண்டுதலால் தமது சேவைகளை துவங்கிவிட்டவர். பல சேவை நிலையங்களுக்கும் சென்று அவர்களுடன் நாள்முழுதும் தங்கியிருந்து பணிகளை செய்து வாரஇறுதிகளை கழித்தவர். 
புற்றுநோய் மருத்துவமனை - இல்லம், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், பிறவி பிரச்சினைகளுடன் உள்ளவர் என பலதரப்பட்டவர்களுக்கும் அன்புடன் பணிசெய்தவர். அவரது அனைத்து நண்பர்கள் - அவர்களது நண்பர்களும் என சேவைப்படையை உருவாக்கிக்கொண்டு இருந்தவர். குடிசைபகுதிகளுக்கு சென்று சுத்தம் செய்து உதவியும், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள் என அமைத்து எளியோரின் அன்பை பெற்றவர். எக்ஸ்னோரா, காவல்துறையின் நண்பர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் பல மக்கள் பங்களிப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்.

பார்த்தசாரதி அவரது 26 வயதில் நம்மையும் அவரது குடும்பத்தினரையும் விட்டு மறைந்து ஒரு பெரிய இழப்பை உணர்த்தியுள்ளார். தன்னார்வ தொண்டுகளை அவர்தம் செயல்களிலிருந்தே கற்றவர்கள் நாங்கள். அவர் காட்டிய வழியிலேயே அவருக்காகவும், அவர்மீது கொண்டிருந்த நட்பிற்க்காகவும், கைவிடப்பட/உதவிகிடைக்காத இளைஞர் - நலிந்த - முதிர்ந்த மக்களுக்காகவும் பலவிதமான சேவைகளையும் தொடருகிறோம். மனித சேவை மகத்தானது, பங்குகொண்டு பெரும்பேறடையுங்கள்.


6. உங்களின் வங்கி முகவரி, வங்கி கணக்கு விபரம் :
Bank Particulars:
C R Suriyakumar,
Indian Overseas Bank, (Br Code: 001296)
SB A/c: 1296 010000 18606,
Velachery, Chennai 600042
IFSC Code: IOBA0001296

7. Tax exception details.
Donation to this Trust is exempted U/S 80G of the Income Tax Act 1961 vide notification No. DIT(E). NO.2(1035)/08-09 dt. 29-07-2009.

இல்லத்திற்கு (ஆரதி அறக்கட்டளைக்கு) அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரித்துறையின் அறிக்கை எண். DIT(E). NO.2(1035)/08-09 தேதி. 29-07-2009. படி வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

8. Contact Person:
Dr. C.R.Suriyakumar, Ph.D.,D.Ag.,
Secretary - Aarathy Trust

முனைவர். சௌ.ரா. சூரியக்குமார்
செயலாளர் - ஆரதி அறக்கட்டளை

கைபேசி எண்: 94449 04947, 8122002261
தொலைபேசி எண்: 2245 6596
மின்னஞ்சல்: info@aarathy.org, suryakmr@gmail.com
இணையத்தளம்: www.aarathy.org

முகவரி:
இதயவாசல் முதியோர் இல்லம்,
ஆரதி அறக்கட்டளை,
1-C, வேளச்சேரி மெயின் ரோடு,
நாகேந்திரா நகர்
வேளச்சேரி செக்போஸ்ட்
சென்னை 600042

அணில் குட்டி : இவ்ளோ சொல்லி இருக்காங்க, ஹோம் ல பாட்டிங்க தீபாவளிக்காக செய்துக்கிட்டு இருந்த கை முறுக்கை நல்லா அமுக்கிட்டு வந்தாங்க சொன்னாங்களா ???? நல்லா சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுட்டு...  ஒரு வார்த்தை க்கூட முறுக்கை பத்தி சொல்லல... நன்றியில்லா கவிதா...

நான் சொல்றேன்.... பாட்டிங்க செய்த கை முறுக்கு ஜூப்பரோ ஜூப்பர். கவி  தீபாவளிக்கு முன்ன ப்ளான் பண்ணி இதுக்காகவே போயி இருப்பாங்களோ ?!  கை முறுக்கு அம்புட்டு ருசி.. :) ஹி ஹிஹி... :)

பீட்டர் தாத்ஸ் : The tragedy of old age is not that one is old, but that one is young.

அப்பாடக்கர் ' ரின் டச்சோ டச்சூ....

இத்தனை நாள் வவாச வில் தனியாவே டீ ய ஆத்து ஆத்து ஆத்திக்கிட்டு இருந்தவரு, தீடீர்னு  பெரிய "அப்பாடக்கர்" ஆகிட்டாரு.  ..அதாவது....

இவரு...ஒரு குறும்படம் எடுக்கறேன் 'னு கிட்டத்தட்ட ஒரு வருச காலமாக சொல்லிக்கிட்டு இருந்தாரு...  சரி நிசமாத்தான் எடுக்கறாரு போலன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா.. இந்தா இன்னைக்கு .. இந்தா நாளைக்கு , இந்தா மறுநாளைக்கு, இந்தா முந்தா நாளைக்கு ரீலிஸ் ’ன்னு சொல்லி சொல்லி,  ஒரு கட்டத்தில் இனி படம் வரும் ஆனா வராது ங்ற ரேஞ்சுக்கு நம்மளை எல்லாம் கொண்டுவந்துட்டாரு..... ஒரு நாள் பாருங்க.. தீடீர்னு, அவருக்கே அவருக்கு தெரியாம படத்தை ரிலீஸ் செய்துட்டாரூஉ....


இந்த வலையுலகம் எத்தனை படங்களை விமர்சித்திருக்கிறது ?  அசிங்க அசிங்கமாக திட்டி இருக்கிறது...?? கேவல கேவலமாக துப்பி இருக்கிறது ?!! ஆனால்...வவாச டீ கடை ஓனர்,  கடலை யின் மொத்த குத்தகைக்கார
விவசாயி என்கிற விவாஜி என்கிற இளா இயக்கிய ”அப்பாடக்கரை ” பற்றி யாருமே எழுதலையே னு இந்த பக்கம் , அதோ அந்த பக்கம், அன்னாந்து பாத்தா கூரை மேல, ஓடிப்போயி தண்ணிக்குள்ளார  எல்லாம் உக்காந்து, உங்க மேல சத்தியமா கவலை எல்லாம் படலைங்க.. ஆனால்ல்ல்ல்ல்ல்,  நாம ஏன் இதை சான்ஸ் ஆ எடுத்துக்கிட்டு, இந்த வலையுலக விமர்சன மகாஜனத்தோட  ஜனமா ஐக்கிய மாகக்கூடாதுன்னு ஒரு ஆஆஆர்ர்ர்ர்ர்வத்தில் அப்பாடக்கரை பார்க்க உக்காந்தேன்..............ரைட்டூஉ................   குறும்படம்னு இல்ல சொன்னாங்க.........?!!
டீடெயில் ஆப்ஃ தி அப்பாடக்கர் க்கு போவோமா ஊர்கோலம் ?!

முதல் டச் :
இந்த படத்தை பார்த்தவுடனே எனக்கு என்னா தோணிச்சின்னா... இயக்குனர்க்கு இன்ஸ்டென்ட் ஆக  ”ஆள்காட்டி விரல் அப்பாசாமி” னு பேரு வைக்கலாம். இதுல நடிச்ச அத்தனை பயப்புள்ளைக்கும் ஆள்காட்டி விரலை காட்டி மிரட்டி மிரட்டி சொல்லி கொடுத்து இருப்பாரு போல... அத்தனை பயப்புள்ளையும் நம்மக்கிட்ட மட்டு மரியாதை இல்லாம விரலை காட்டி காட்டி பேசுதுங்க... சரி அதுப்போட்டும்னு பார்த்தா, இயக்குனரும், அவரோட ஆள்காட்டி விரலை ஒரு சீன் ல காட்டிட்டு போக மறக்கல...  இப்படி ஒரு சீன் லையாச்சும் அவரோட படத்தில் அவரு இருக்கனும்னு நினைச்சதால இயக்குனர் ரவிக்குமார் ஐ நினைவுப்படுத்தி ..தனக்குள்ளும் ஒரு ரவிக்குமார் இருப்பதை வெளிப்படுத்தி நம்மை டச்'சிட்டாரு.

இரண்டாவது டச் :

அமெரிக்காவில் படம் புடிச்சாலும் நேட்டிவிட்டி போவவே க்கூடாதுன்னு ரொம்ப பாடுப்பட்டு இருக்காரு... அதுல ஒரு சீனுக்காக.... குளம் குட்டையின் தேடி கண்டுப்பிடிச்சி போயி நின்னு , நம்மூரு பாசையில ......(அதை ஆள்காட்டி விரல் அப்பாசாமி யே டப் பும் செய்து இருக்காரு)   கசங்காத  பொட்டிப்போட்ட டீ சர்ட் டும், லுங்கியும் கட்டிக்கிட்டு பேசறாங்க பாருங்க. .இங்கத்தான் நம்ம இயக்குனர் நிக்கறாரு.. ! எப்படி?????  இயக்குனர் இமயம் பாரதிராஜை வை அப்படியே நம் கண்ணுமுன்னாடி கொண்டாந்து நிக்க வைக்கறாரு... உக்காரவைக்கறாரு... ஏன்சிக்க வைக்கறாரு... ஆக இயக்குனர் பாரதிராஜா' வை டச்சிட்டாருங்கோவ்..

மூணாவது டச் :

கறுப்பு'னு ஒரு பயபுள்ள.. வேல தேடுது தேடுது தேடுது தேடுது.... ... ம்ம்..பாக்கும்போது,....எனக்கெ
ல்லாம் ரத்தக்கண்ணீர் வந்துடுத்து .. வெளியப்போற ரத்தத்ததை சரிக்கட்ட ஒரு கையில ப்ளெட் ஐ ஏத்திக்கிட்டே பாக்கிறேன்...அப்படி ஒரு தேடல்... அந்த தேடலை.. நம்ம இயக்குனர் எப்படி டச்சிங் டச்சிங் ஆ சொல்லி இருக்காரு தெரியுமா??!   கறுப்பு’ வோட மொத்த  ஃப்லீங்சையும் புடிச்சி இழுத்தாந்து அவரு கால்கிட்ட போடறாரு...  காலை மட்டும்... டைட்டிங் டைட்டிங் க்ளோஸபில் காட்டராரு... ..அப்ப நம்ம கண்ணுக்கு தெரியறது யாருன்னு டக்குன்னு சொல்லுங்க.. ஆங்..அவரே தான்.. இயக்குனர் மிஷ்கின்.. :) அடடா.. நம்ம அப்பாசாமிக்குள்ள எத்தனை டச்சிங் டிச்சிங் இயக்குனர்ங்க..இருக்காங்க ..அப்படியே .வாயப்பொளந்துக்கிட்டு...அடுத்த டச்சிங்..க்கு போவோம்......

நாலாவது டச் :

பேச்சிலர் ரூம் செட்டப்... ஆணியே அடிக்கமுடியாத ஒரு ரூமில், எலக்ட்ரிக் மெயின் பாக்ஸ் ஸில் கொடியை கட்டி,அதில கன்னாபின்னான்னு துணிகளை போட்டு வச்சி, ஒரு தலக்காணி கவர் போட்டு, இன்னொன்னு போடாம,  டபரா டம்ளர், டீ கடை நாயர், அவரிடம் வேல செய்யும் சின்னப்பையன் கையி, வாடிக்கா எண்ணெய் பாட்டில், தரையில் உக்காந்து தட்டற கம்பியூட்டர், மானிட்டரில் ஜோ ' னு யதார்தத்தை அங்க அங்க...இங்க இங்க நு அள்ளி தெளி தெளின்னு தெளிச்சி இருக்காரு... .....ம்ம்ம்ம்......இந்த தெளிப்பு எல்லாம் யாரை நமக்கு டச் பண்ணுது ????  ... ஆங் ...அவரே அவரே அவரே தான் இயக்குனர் மகேந்திரன்....... டச்சூஊ...

அஞ்சாவது டச் :
கேமராவும் லைட்டிங்கும் படம் முழுக்க நம்ம கூடவே விடாது கறுப்பாட்டுமே வருது... என்ன மா வளச்சி வளச்சி, மேல , கீழ , இந்தா அந்த சைட்ல, அந்தா இந்த சைட்ல, நடு நடுவுல என்னா ஜூமிங்கு.. அப்புறம்... லாங் ஷாட்டு.. . டைட்டு க்ளோசப்பூ... கைய தனியா,  காலத்தனியா.. மூக்கை தனியா.ன்னு,  .அட மீசைய ஒருத்தர் சீவுவாரு ...  பெல்ட்டு மாட்டறாரு.. . கிராமத்து சீன் ல ...  இந்த கோடியில நின்னு ஒரு ஷாட்...  டீக்கடை நாயரை கூப்பிடற காட்சியில சைட் ல வர லைட்டிங்கு..... ராத்திரி எஃபெக்ட் ப்ர்ஃவெக்ஷன் நு எங்க எல்லாம் கேமரா பேசனுமோ அங்க எல்லாம் கண்டிப்பா பேசல..ங்க ஆனா............ பாட்டா பாடி இருக்கு.....  இது யார் டச்சுன்னு கேட்டீங்க பிச்சிப்புடுவேன் பிச்சி.. .. பிசி ஸ்ரீராமையும் பாலுமகேந்திராவையும் கலந்துக்கட்டி சும்மா சூப்பரா டச்சி இருக்காரு......

ஆறாவது டச்
:
இது தாங்க இந்த படத்துலியே சூப்பர் டூப்பர் காட்சி.....  மாஸ்டர் சூர்யா னு ஒரு அப்பாடக்கர்...  இவரு . ஒரே ஷாட் ல இயக்குனர் சொன்னதை பேசி நடிச்சி இருக்காராம்.....அட நம்பவே முடியல...  இவரு தாங்க படத்தை ச்சும்மா கும்முனு தூக்கி நிறுத்தறாரு.... இவரையும் ஆள்காட்டி விரலை காட்டவச்சிட்டாரு நம்ம இயக்குனர்... இந்த பயப்புள்ள இப்பவே இம்புட்டு ஸ்டைலா இருக்கே.. வருங்காலத்துல எப்படி இருக்குமோஒ? (#லைட்டா பொறாமை.! சரி வுடுங்க தனியா கவனிச்சிக்கலாம்) ...நம்ம இயக்குனர்  இப்படி ஒரே ஒரு காட்சியில் மொத்த படத்தின் க்ளாப்ஸையும் வாங்கிக்கிட்டு போறதால...இயக்குனர் பாக்கியராஜ் ‘ஐ டக்குன்னு நினைவுக்கு கொண்டு வந்து டச்சு டச்சுன்னு டச்சராரு... . ..

ஏழாவது டச்.:

...  வவாச வின் போர்வாள்(ல்)... பவர் வாள்(ல்) எவர் கிரீன் கச்சேரி தேவ் தான் வசனகர்த்தா.. ..........னு...... டைட்டில் ல சொல்றாங்க.. ம்ம்ம்... ஸ்டெடியா, க்ளாசிக்கா .. தெரிஞ்சாலும் நடு நடுவில் ரேண்டி பேசற வசனங்கள் சிலதில் பஞ்ச்சிங் பஞ்சிங்...”தண்ணி அடிக்கும் போது பேசற வசனம்.... ..  குளக்கரையில் பேசும் வசனம் நு சிலது எல்லாம் டச்சிங் டச்சிங்.. . தேவ் அண்ணாச்சியின் மைக் பிடிச்சா நிறுத்தாத பேச்சு தெரிஞ்சதாலோ என்னமோ... வசனாகர்த்தாவின் கைகள் ரொம்பவும் இறுக்கமாக கட்டப்பட்டு விட்டதோ ????????? அப்படீங்கறா சந்தேகம் எழாமல் இல்லை. அப்பாடக்கர் இயக்குனர் "ஆள்காட்டி விரல் அப்பாசாமி" தான் விளக்கம் அளிக்கோனும்...

எட்டாவது டச் :

மியூஜிக்... ஆரம்பமே அசத்தல்... கொஞ்சம் நடுவிலே டவுனு... திரும்ப.. கொஞ்சம் ஏத்தம்.. திரும்ப கொஞ்சம் டவுனு.. மொத்தத்தில்... பல இடங்களில் ஏத்தம்.. சில இடங்களில் சரிவு.. நடு நடுவுல  ச்சிசுவேசன் சாங்கு.போட்டு இருக்காரே ஆகாகஹாக..அதுல தான்  டச்சிங் டச்சிங்கு.. மியூஜிக் க்கும் இயக்குனரே போல...  அதனால் அதுக்கும் ஒரு டச்சிங் சேர்த்து மொத்தம் 3 டச்சிங் கொடுக்கலாம்..... எக்கச்சக்க மியூஜிக் இயக்கனருங்க வந்துட்டாங்க..அதனால இவரை இப்பத்திக்கு தேவா வோட புள்ள ஒருத்தர் இருப்பாரே அவரோட டச்சலாம்... :))) ( அணிலு இதுக்காக மட்டுமே இயக்குனர் இந்தியா வரும்போது இருக்குடீஈஈ)

எட்டாவது டச் :

இது குறும்படம் நு சொல்ற நெடும் படமாக இருந்தாலும்... ஓவராத்தான் ஒரு வருசமா உழைச்சி இருக்காங்க..  ரேண்டி'னு ஒருத்தர் வராரு... அடடா... அடா அடா ஆ படம் முழுக்க இவரோட நடிப்பூ... ஃப்பூ னு ஊதி தள்ளி இருக்காரு..... குடுத்த காசுக்கு மேலாள "நான் இருக்கேன்" நான் இருக்கேன்னு" ...கூவி கூவி நடிச்சி இருக்காரு...அடுத்து 'எட்டாம் அறிவு' னு ஒரு படம் எடுத்தா இவரைத்தான் ஹூரோவா ப்போட நானு ரெக்கமண்டு செய்வேன்... (என்ன கொஞ்சம் கிட்டக்க வந்து கையை நீட்டி பேசறப்போ, யோவ் இனிமே நீ கைய நீட்டின... கடிச்சி துப்பிடுவேன்.. நு சொல்லனும் போல மனசுக்குள்ள தோணிச்சி.. இதையெல்லாம் வெளியில சொல்ல முடியுமா சொல்லுங்க..) அப்புறம் கறுப்பு.....  வவாச த்து சிங்கம் ஒன்னு மூஞ்சி அச்சு அசலா இதே மாதிரி இருக்கும்..அதுவும் இப்ப இதே மாதிரி தாடி மீசை வச்சிக்கிட்டு சுத்துது...அது யார்னு சங்கத்து சிங்கங்களே மூஞ்சிய பாத்து பாத்து கடிச்சிக்கட்டும்... இவரு.. = நேச்சுரல்  நல்லாவே நடிச்சி இருக்காரு.. அப்புறம் நம்ம லிட்டில் அப்பாடக்கர் சூர்யா..  .. சொல்லனுமா என்ன? டச்சோ டச்சூஊ....

ஒன்பதாவது டச் :

இதுல சில ப்ளஸ் சஸ், கொஞ்சம் மைனஸ் சஸ்ஸ டச்சலாம்...  . ஒரு காட்சி நடக்கும் போது..சைட்ல பொட்டிப்போட்டு பின்னாடி நடப்பதை காட்டியது.. ரெசியூம் திருத்துவது, கூகுல் சர்ச் பண்றது.... மொபைல் ரிங் ஆகும் சீனு, பெல்ட் போடும் சீனு, (அது யாரு சீனு நு கேட்டா தலை மேல நறுக் குன்னு கொட்டுவேன்...) தலையில புத்தகத்தை கவுத்துப்போட்டு கையை அசைக்கும் சீனு, சூர்யாவின் நேம் போர்ட்... என ....சில காட்சிகள் சபாஷ்.. போட்டு நம்மை நிசமாவே டச்சுகிறது

படிக்கட் சீன்.. அப்பாடக்கரு... அப்பாடக்கர் வேல பார்த்து இருப்பது தெரியது..... டப்பிங் சில இடங்களில் சோம்பேரியா பின்னாடி வருது... இன்ட்ரவியூ போகும் சீனில் பின்னால் அமெரிக்க வண்டிகள், ரூம்களில் அமெரிக்க வாசனை னு லைட்டா அமெரிக்க மைனஸ் டச்சிங்ஸ் இருக்கு.. அதிகமாக இல்லாமல் இருக்க முயற்சித்த இயக்கனரின் திறமை டச்சிங் டச்சிங் ..


10 ஆவது டச் :

வேற என்னவா இருக்கும்... சொந்த புராணம் தான்... ஒரு வழியா அப்பாடக்கர் விமர்சனத்தை எழுதியாச்சி...  இனி... நானும் ஒரு வலையுலக விமர்சகர்..னு பேர் வாங்கிடுவேன்.. எளக்கியவாதி, முற்போக்கு, பிற்போக்குவாதி முக்கியவியாதி, முனுகியவியாதி ன்னு ஏதோ ஒரு பட்டம் எனக்கு கொடுக்கப்படும்னு நினைச்சாவே.... டச் டச் டச் டச் சிங்கா தான் இருக்கு....... அதுக்காகவே படம் எடுத்த இயக்குனர் ”ஆள்காட்டி விரல் அப்பாசாமி அப்பாடக்கர் - க்கு ஒரு கும்பிடு போட்டுக்கிட்டு எஸ் ஆகறேன்.... .

இதே போல நீங்களும் வந்து அவரை டச்சிட்டு மட்டும் போவாதீங்க.... நல்லா கொட்டி, தட்டி , திட்டிட்டும் போங்க.. ஹி ஹி..அப்பத்தானே எனக்கு பொழுது ப்போகும்...


இப்படிக்கு வலையுலக விமர்சகர் வரிசையில் இடம்பிடிக்க தவியா தவிக்கும்  உங்களின் -
அணில் குட்டி ! அணில் குட்டி !.அணில் குட்டி ! (இது எக்கோ) )
.