போன வாரம் தஞ்சாவூர் போயிட்டு வந்ததிலிருந்து சிவா'விடம் ஒரு மாற்றம் தெரிந்தது. சொந்தக்காரர்கள் திருமணம் என்று சென்று வந்தான். ஆனால் அவன் வந்தலிருந்து கவனிக்கிறோம்... எப்போதும் போல இல்லை. வேலை நேரங்களில், விசிட்டர் ரூம் சோபாவில் அடிக்கடி சென்று தனியாக அமர்ந்து கொள்கிறான், அங்கிருக்கும் கண்ணாடியிட்ட கதவின் முன் வேடிக்கை பார்த்தவாறு நேரம் போவதே தெரியாமல் நிற்கிறான். கத்தி கதறி கூப்பிட்டால் தான் சாப்பிடவே வருகிறான். எப்போதும் போல் நடக்கும் அரட்டை கச்சேரி எல்லாம் நின்றுவிட்டது, தனிமையில் இருப்பதை விரும்புவதாக தெரிந்தது... விட்டறவா முடியும்..?!
".............................................. .......... ஒரு பொண்ணை பாத்தேன்.. ரொம்ப பிடிச்சி போச்சி... உன் கிட்ட சொல்லனும் தான் இருந்தேன்.. ஆனா எப்படி சொல்றது தான் தெரியல.. "
"ஓ...அதான் மேட்டரா.. ஹே பொண்ணு எப்படிடா இருக்கா...? "
"ம்ம் போட்டோ இருக்கு பாக்கறியா? "
"என்ன கேக்கற....எடுடா முதல்ல... "
ஓடி போயி, அவனுடைய டெஸ்க்கிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து வந்து "யார் ன்னு சொல்லு பாக்கலாம்". என்று சிரித்தான்.
அது ஒரு குரூப் போட்டோ, ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடிவில், தாவணி போட்ட இரண்டு பெண்கள் இருந்தனர். ஒரு பெண் அழகாக லட்சணமாக இருந்தாள், மற்றவள் ரொம்பவே சுமார் ரகம், கொஞ்சம் குண்டு, கண்ணாடி போட்டு இருந்தாள். நான் அந்த அழகான பெண்ணை காட்டி "இவள் தானே ?" என்றேன்.
சிரித்துக்கொண்டே "நினைச்சேன் நீ அவளை தான் சொல்லுவேன். .அவ இல்ல. .பக்கத்துல இருக்கு இல்ல கண்ணாடி அது தான்.."
சட்டென்று மறைக்க முடியாத முக வாட்டத்தோடு . "ஏன்ன் இப்படி? நிஜமாவே இவளையா பிடிச்சி இருக்கு...?
"ம்ம்.. அவ ரொம்ப நல்ல பொண்ணு அனுஷ்... அவள கல்யாணத்தில் தான் முதல்ல பாத்தேன்...உனக்கு தான் தெரியுமே எங்க வீட்டு கல்யாணம் எல்லாம் மூணு நாள் நடக்கும். அவள கவனிச்சிட்டே இருந்தேன். ரொம்ப இன்னசன்ட்.. அவள கூப்பிட்டு "அங்க பாரு
வெள்ளை காக்கா பறக்குது ன்னு சொல்லி பார்... அவளும் ஓடி வந்து எங்க எங்க ன்னு பார்ப்பா" அதான் எனக்கு அவக்கிட்ட பிடிச்சி இருந்தது...அவ்ளோ குழந்தைத்தனம் வெகுளித்தனம் அவ கிட்ட இருக்கு..... ரொம்ப யோசிச்சி அவ தான் என் வாழ்க்கை ன்னு முடிவு செய்துட்டேன்.
"சொல்லிட்டியா? "
"சொல்லிட்டேன் ... ஆனா ரொம்ப பயப்படறா... பதில் எதுவும் சொல்லல... அவ சொல்லாட்டி பரவாயில்ல. .அவ எனக்கு தான், அதை நான் முடிவு பண்ணிட்டேன்.. போக போக சரின்னு சொல்லிடுவா...... குழந்தை அவளுக்கு என்ன தெரியும்.."
"டேய்... உனக்கே ஓவரா இல்ல.. குழந்தைய போய் லவ் பண்றேன் னு சொல்ற... "
திரும்பவும் வாய்விட்டு சிரித்தான். "மனசால அவ குழந்தை ன்னு சொன்னேன்.... " சரி உனக்கு பிடிச்சி இருக்கா...? "
"அது எப்படிடா மனசாட்சியே இல்லாம இப்படி எல்லாம் கேள்வி கேக்கனும்னு உனக்கு தோணுது...என்னைய பாத்தா கேனச்சி மாதிரியே இருக்கா உனக்கு???.. கேக்கறான் பாரு கேள்வி.. ...அது சரி என்ன படிச்சி இருக்கா?"
"ப்ளஸ் 2....."
"என்னது ப்ள்ஸ் 2 வா? ஏண்டா.. இது எல்லாம் வேலைக்கு ஆகுமா.. ரொம்ப சின்ன பொண்ணு.. அவ எப்ப படிச்சி முடிச்சி. . உன்னைவிட ரொம்ப சின்னவ டா..."
"ஆமா 7 வருஷம்... "
"தெரிஞ்சுமா?"
"என்னவோ அவ என் மனசுல பதிஞ்சிட்டா... எத்தன வருஷம் னாலும் காத்திருக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..."
"என்னமோ போ... பொண்ணும் சுமார் தான்.......சிவா நல்லா யோசிச்சிக்கோ...... சரி நம்ம மக்க கிட்ட சொல்லிடவா? "
வாய்விட்டு சிரித்தான். ."சொல்லாமலா இருக்க போற... உன் கிட்ட சொன்னா பிபிஸி கிட்ட சொன்ன மாதிரியாச்சே... "
"ஹோ..நான் பிபிசி யா..போடா..யூஸ்லஸ்.. நான் போறேன்..நீயே சொல்லிக்கோ....."
"ஏய்ய் ஏய்ய்...ஏய்...நில்லு.... " கையை பிடித்து இழுத்தான்... "இப்படி போனா எப்படி..? நீதான் எனக்கு எல்லாம்........உன்னைவிட்டா எனக்கு யார் ஹெல்ப் பண்ணுவாங்க சொல்லு....."
"என்ன...நாய் வால் ஆட்டுது..?"
"ஆமா அனுஷ்.. அவங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்... பசங்க எல்லாம் போன் செய்து அத்தன ஈசியா பேசமுடியாது.... நீதான் போன் செய்து அவள கூப்பிட்டு என் கூட பேசவைக்கனும்.. ...
"ஆஹா.. ராசா... இதை தான் கண்ணாடி முன்ன நின்னு இத்தனநாளா யோசிச்சிக்கிட்டு இருந்தியா...? அடேய்.... என் ஆருயிர் தோழர்களா எல்லாரும் இங்க வாங்க. .அண்ணன் ஏதோ மேட்டர் சொல்றாரு..... வந்து கேளுங்க......, சிவா... எல்லாரும் ஒக்கே சொன்னா தான் செய்வேன். .இப்பவே சொல்லிட்டேன்... .எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்.. இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது......"
***********
நாங்கள் மொத்தம் எட்டு பேர், நான் மட்டுமே பெண்.. ஆனால் அந்த வித்தியாசம் இதுவரை எங்களிடம் வந்ததில்லை. எப்போதும் எங்கேயும் ஒன்றாகவே இருப்போம். இதில் ஒருவன் தான் சிவா. மற்றவர்கள் ராம், கணேஷ், ஆர்கே, ரகு, பட்டாபி, குமரன். எல்லோரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலுமே மற்றவர்களை விட ராம், சிவா, மற்றும் கணேஷ் ரொம்பவும் நெருக்கமானவர்கள்.
எங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லை... எப்போதும் சிரிப்பும் கூத்தும் பாட்டும் என்று அலுவலகத்தில் வேலை செய்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ரொம்ப ஜாலியாக இருப்போம்..... ..
குமரன், ஆர்கே தவிர வேறு யாரும் பெண்களை பற்றி அதிகம் பேசுபவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரும் எந்த நேரமும் பெண் தோழிகளை பற்றியும் அவர்களுடன் ஊர் சுற்றிய கதை, சைட் அடிச்ச கதை என்று பேசி க்கொண்டே இருப்பார்கள், இதில் ஆர்கே.. குமரனை விட ரொம்பவே அதிகம்.. காதலர்கள் தினத்தில் ஆர்கே அலுவலகமே வரமாட்டான்.. ஒன்றா இரண்டா.. சீக்கிரம் முடித்துவிட்டு வர... அந்த நாள் முழுதும் பெண்களுடனேயே கழிப்பான். அடுத்த நாள் வந்தால் , என்னை தவிர மற்ற எல்லோரும்.. "மச்சி. .இங்க வாடா உன்னை ஒரு தரம் கட்டி பிடிச்சிக்கிறோம்.. அப்படியாது எங்க ஆசையை தீத்துக்கறோம் ன்னு லைன் கட்டி கட்டிப்பிடிச்சி.. அவனின் காதலர் தினத்தை இவர்களும் கொண்டாடி மகிழ்வார்கள்..
எல்லாவற்றிக்கும் நடுவே சிவா'வின் காதல் தான் எங்கள் அனைவருக்குமே முதல் காதல். எல்லோருமே சந்தோஷமாக இருந்தோம், அவன் காதலை அவனுடன் சேர்ந்து நாங்களும் ரசிக்க ஆரம்பித்திருந்தோம். அவனுக்காக போன் செய்ய நானே நியமிக்க பட்டேன்.
ஆயிற்று.. போன் செய்ய ஆரம்பித்து, குந்தவை'வின் தோழி ன்னு அவங்க அம்மா க்கிட்ட அறிமுகம் செய்துக்கிட்டு ஃபோன் கை மாறியவுடன் சிவாவிடம் கொடுத்துவிட்டு அவன் பேசுவதை பார்த்து ரசிப்பது எங்கள் அனைவருக்கும் வாடிக்கையாகி விட்டது..
காதலிக்கறதே பிடிக்காது என்று இருந்த எனக்கு. .சிவாவின் காதல் கதை கேட்கவே நேரம் போதாமல் போனது. எந்த நேரம் பாத்தாலும் அனுஷ் வாயேன். .இன்னைக்கு அவ என்ன சொன்னா தெரியுமா.. .ன்னு ஆரம்பித்தால்.. என் காதில் ரத்தம் வரும் வரை பேசிக்கிட்டே இருப்பான்.. ..கேட்டு கேட்டு குந்தவை என் மனதிலும் ஆழ பதிந்துவிட்டாள்.. ஒரு சின்ன குழந்தையாக.....
அடுத்த வந்த மாதத்தில் ஒரு நாள் தஞ்சாவூர் சென்று வந்தான். வந்ததிலிருந்து அலுவலகத்தில் வேலை பளு காரணமாக யாருமே ஒழுங்காக பேசிக்கொள்ள முடியவில்லை... மாலை வீட்டிற்கு கிளம்பும் முன்... அனுஷ் நில்லு.. உன் கிட்ட பேசனும் னு சொல்லி, அலுவலகத்தில் வெளியே இருந்த தோட்டத்திற்கு கூட்டி சென்றான்... யாரும் இல்லாத ஒரு ஓரம்....நேரம் ஆகிறது என்பதை பொருட்படுத்தாமல் , கையை பிடித்து இழுத்து புல் தரையில் அமர வைத்தான்.
"பொண்ணுங்ககிட்ட இப்படி தனியா உட்காந்து... தொட்டு.. தடவி பேசறது எல்லாம் ஒரு சுகம் இல்ல அனுஷ்..."
"ஹான்...செருப்பு........ வந்த விஷயத்தை சொல்லு..".
"நீ கோவப்பட்டா ரொம்ப அழகா இருக்க அனுஷ்.."
"அடச்சீ... டைம் ஆச்சுடா. .சொல்ல வந்தத சொல்லு...போனும்..."
"ஐ லவ் யூ அனுஷ்..."
"நான் கிளம்பறேன்.. ஆளவிடு.......... .."
"சரி சரி.. கூல் கூல்..ச்சும்மா...... .... இந்த தரம்.. அவள பாத்தப்ப... தனியா கூட்டிட்டு போயி... ரொம்ப நெருக்கமா உட்காந்து பேசினேன் அனுஷ்...."
"ம்ம்ம்..."
"அது சொல்லவே முடியாத ஒரு உணர்வு....... அவளோட நெருக்கும்... பார்வை, மூச்சு காத்து... லேசா அப்பப்ப காத்துல வந்து தொட்ட தாவணி.. .. அவ தலைய ஆட்டி பேசும் போது எல்லாம் காதுல கூடவே ஆடின ஜிமிக்கி........ அவ உள்ளங்கைய பிடிச்சி இழுத்து வச்சி அழுத்தி பேசினது.......................
............................ அனுஷ்.. . பொண்ணுங்க எல்லாம் தேவதைங்க ....... அவங்களோட நெருக்கும்... நெஞ்சை உறுக்கி எடுக்குது..... என்னமோ ஒரு இனம் புரியாத சந்தோஷம்....இது வரைக்கும் கிடைக்காத சந்தோஷம்..................எப்
படி சொல்றது.... அவக்கிட்ட இப்படி பேசினது... அங்கேயே அவ கூடவே எப்பவும் இருந்திடனும் போல இருக்கு........மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா....."
"...டேய் என்னடா ஆச்சி உனக்கு......இப்படி உறுகி ஓடற..........."
"உனக்கு புரியலையா அனுஷ்.... "
"...........................ம்
ம்ம்... .....................புரியுது.
.. ..............................
... ஆனா .லிமிட் டா இரு... அவள உண்மையா காதலிச்சா. .இந்த நெருக்கத்தை எல்லாம் அவாய்ட் பண்ணு. .சின்ன பொண்ணு.. இப்பத்தான் +2 படிக்கறா.. அவ மனசு சலன படக்கூடாது.....உன்னை மாதிரி இல்ல அவ.. படிக்கனும்.. ஸ்கூல் ஃபைனல் .. நல்லா மார்க் எடுத்தாத்தான் காலேஜ் நல்ல சீட் கிடைக்கும்..... இதை மறந்துடாத... ... சரி நான் கிளம்பவா?"
"இல்ல இரு.. " இன்னும் சொல்லனும்...
"இல்லடா.. டைம் ஆச்சி நாளைக்கு சொல்லு கேக்கறேன்.. உன் மூடு வேற ஒரு மாதிரியா இருக்கு இன்னைக்கு, உன் பக்கத்துல உக்கார எனக்கே பயம்மா இருக்குடா............."
"ஹா ஹா ஹா ......." .வாய்விட்டு சிரித்தான்.......
அடுத்தநாள்... டீ டைம்... 'அனுஷ்... நீ சொன்னத யோசிச்சேன்....நீ சொல்றது ரைட் தான்.... அவ முதல்ல நல்லா படிக்கனும்......!!"
.......................