யாரும் உதவி செய்ய முடியுமா?

பேரூந்தில் தொடர்ந்து பிரயாணம் செய்து பல ஆண்டுகள் சென்ற நிலையில், திடீரென பேரூந்து பயணம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு, இந்த பதிவு. :(. இரு சக்கர வாகனத்தில் போகும் போதும் நம்மைச்சுற்றி நடக்கும் பலவற்றை பார்க்க நேரும் தான், ஆனால், இத்தனை நிதானமாக, வேடிக்கை பார்த்து செல்லும் பயணமாக அது இருந்ததில்லை. பேரூந்து பயணத்தில், அதிக நேரம், நிதானம், பார்வையை வெகுதூரம் செல்ல வைக்கமுடிகிறது, அதற்காக யோசிக்கவும் முடிகிறது.

தினந்தோறும், சென்று திரும்பும் வழியில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10-12 திக்கற்ற, தெருவில் தன் நிலை உணராத, வித விதமான மனித உயிர்களை பார்க்கிறேன். இது வரையில் பார்த்ததில் எல்லோருமே ஆண்கள். பெண்கள் இன்னும் கண்ணில் படவில்லை. பெண்கள் பட்டு இருந்தால் இன்னமும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பேன்.

பல வீடுகளில் பார்த்திருக்கிறேன், நாய், பறவைகள் மற்றும் மரம்,செடி,கொடிகளை தன் வீட்டு குழந்தைகளை போல கவனித்துக்கொள்வார்கள். அந்த அன்பில் ஒரு 5 சதவிகிதமாவது இந்த சக மனித உயிர்களிடம் நாம் காட்டலாம் என்பது என் கருத்து. நேற்று கிண்டி அருகில் ஒரு பெரியவரை பார்க்க நேர்ந்தது. உட்கார்ந்த நிலை, கிழிந்து நைந்துப்போன ஆடைகள், முழங்காலுக்கு கீழே ஏதோ நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கூட்டமாக கொசுக்களும், ஈக்களும், பூச்சிகளும், புழுக்கழும் மொய்க்க , நடக்க இயலாத நிலை. அவற்றை பார்த்து பழகிப்போன அவரின் மனம், கண்கள், கைகள்....செயலற்று இருந்தன.  இடுப்பை இழுத்து இழுத்து நகர்ந்து வந்துக்கொண்டு இருந்தார். என்ன கொடுமை இது??!! இதை நான் பார்த்திருக்கிறேன்... :(( ..என் நெஞ்சை விட்டு அவரின் புழுக்கள் மொய்த்த கால்கள் இன்னும் நீங்கவில்லை.

முன்னரே, இது சம்பந்தப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ,இவர்களை ப்பற்றிய தகவல் சொல்லி உதவிக்கேட்டு பழக்கம் இருந்தாலும், தகவல் கொடுப்பதோடு நம் வேலை அங்கு முடிந்துவிடுவதில்லை. தொண்டு நிறுவன ஊழியர்கள் சொல்லும் நேரத்திற்கு, நாம் அங்கு நின்று, ஆட்களை அடையாளம் காட்டி, நாம் தான் அவர்களை அழைத்தோம் என்பதை சொல்லி, இந்த மனிதர்களை அவர்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். இப்படி, பல சமயங்களில் என்னால் அந்த குறிப்பிட்ட இடங்களில், தொண்டு நிறுவன ஊழியர்கள் வருகிறேன் என்று சொல்லும் நேரத்தில் காத்திருக்க முடியாமல் போகும் போது, அவர்களை பற்றிய விபரங்கள் சொல்லி உதவி கேட்டு வைப்பதிலும் எந்தவித பயணம் இல்லை என்று உணர்கிறேன். ஏனென்றால், நாம் வர முடியவில்லை என்று சொன்னால், தொண்டு நிறுவன ஊழியர்களும் வரமாட்டார்கள்.

இந்த நடைமுறை பிரச்சனையால், நாமே ஏன் இவர்களை அழைத்துக்கொண்டு விட்டுவிட கூடாது என்ற யோசனை தோன்றியது. இதனை என்னால் தனியாக செய்யமுடியுமா என்றால், முடியாது என்ற பதிலோடு, உங்களிடம் உதவி க்கேட்டு நிற்கிறேன்.

எதிர்பார்க்கும் உதவியும் திட்டமும் :-

1. ஒரு வேன் (அதற்கான கட்டனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பவர்கள் உதவி செய்யலாம், வாடகைக்கு அமர்த்துவதாயின் அதையும் நான் செய்துக்கொள்கிறேன்)
2. இவர்களை அழைத்து,/தூக்கி செல்ல இரண்டு அல்லது மூன்று நபர். குறிப்பாக ஆண்கள்.
3. ஏதோ ஒரு விடுமுறை நாளில் அரை நாள் / ஒரு நாள் சென்னை நகரில் ஒவ்வொரு பகுதியாக செல்ல திட்டம்
4. இந்த மனிதர்களை தொட்டு தூக்கி/ அழைத்து செல்லும் மனப்பக்குவம் சகிப்புத்தன்மை உடல்வலிமை
5. அவர்களை தொண்டு நிறுவனத்தில் சேர்க்கும் வரை, உடன் வருவது.

தன்னார்வு தொண்டு நிறுவனங்களில் முன்னரே பேசி இவர்களை சேர்க்க அனுமதி ப்பெற்று விடுகிறேன். இதை அவர்களிடம் சொல்லி, ஒரு விடுமுறை நாளில் நீங்களே செய்யலாமே என்று கேட்கலாம். தன்னார்வு தொண்டு நிறுவனங்களில் இதுவரை பேசியதில், யாரும் நம் நேரத்திற்கு தகுந்தார் போன்று வர தயாராக இல்லை. அவர்கள் அழைக்கும் நேரத்திற்கு நாம் அங்கு இருக்க வேண்டும். பொதுவாக அவர்கள் அழைக்கும் நேரங்கள், அலுவலக நேரங்களாகவே உள்ளதால் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் இந்த உதவியை செய்ய விரும்புபவர்கள், தானாகவே, நல்ல உள்ளத்தோடு, மனமுவந்து செய்ய முடியுமாயின் வரவும்.

ஆர்வமும் எண்ணமும் இருப்பவர்களும், இதைத்தவிர்த்து இதனை வேறு எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்று யாருக்கும் தெரிந்தாலும் எனக்கு
gkavith [at] gmail [dot] com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.

அணில் குட்டி : ம்ம்ம்ம்... . அம்மணி.. எல்லாத்தையும் தனியா செய்வீங்களே இதுக்கு மட்டும் ஏன் ஆள் சேக்கறீங்க..?


பீட்டர் தாத்ஸ் : If we have no peace, it is because we have forgotten that we belong to each other - Mother Teresa
.

ரேடியோ ஜாக்கி !

ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம் ! :) / இதே புதுச்சேரி க்கும் பெயர் மாறி வரும். அறிவிப்பாளாராக இரண்டு வானொலி நிலைத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுச்சேரி க்கு அவர்கள் அழைக்கும் நேரம் இங்கிருந்து சென்று வர முடியாமல் ஏறக்கட்டி விட்டு, சென்னையை மட்டும் தொடர்ந்தேன்.

காலை 6 மணிக்கு இருக்க வேண்டும். என்ன பேசப்போகிறோம் என்பதை எழுதி வைத்து, நிகழ்ச்சி இயக்குனரிடம் அப்பூருவ் வாங்கிட்டு தான் ஸ்டூடியோ விற்கு போகனும். சென்னை வானொலி நிலைத்தில் ஏகப்பட்ட ஸ்டூடியோக்கள். பலதை நான் பார்த்ததில்லை என்றே சொல்லனும். ஆனால் சில ஸ்டூடியோக்கள் மட்டுமே தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்துவார்கள். தனிப்பட்ட்ட ரெக்கார்டிங் என்றால் நம் இஷ்டத்திற்கு, ஏதோ ஒரு ஸ்டூடியோவிற்கு சென்று செய்துக்கொள்ளலாம். லைவ் நிகழ்ச்சிகள் நடக்கும் ஸ்டூடியோக்கள் மட்டும் பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்கும். எல்லோரும் ரொம்பவும் பிசியாக இருப்பார்கள். குறிப்பாக பிரபலங்கள் பலர் வருவார்கள்.

4 மணிக்கு எழுந்து வீட்டு வேலை முடித்து, நவீனுக்கு சாப்பாடு, எனக்கு சாப்பாடு காலை மதியம் எல்லாம் பேக் செய்துவிட்டு, எனக்கு கையில் எடுத்துக்கொண்டு, 5.30 க்கு கிளம்பி. வண்டியை என் வேகத்திற்கு விரட்டுவேன். எப்படியும் சரியான நேரத்திற்கு போகாமல் திட்டு வாங்குவேன். எனக்கு முன் நிகழ்ச்சி செய்பவர் நான் வரும் வரை காத்திருந்து மைக் ஐ தருவார். :). அதனால் கூட பயமில்லாமல் லேட்டாக போவேனோ என்னவோ. :). 8.30 க்கு என் நேரம் முடியும். வானொலி நிலைய கேண்டினில் காலை டிபன் எடுத்து சென்றதை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து நேராக அலுவலகம், வீடு வர மாலை 6.15 ஆகும்.

என்னால் முடியும் என்று உழைத்த நாட்கள் இவை. இனியும், எப்பவும் இப்படி உழைத்துக்கொண்டு இருக்க ஆவலாக த்தான் இருக்கிறது. இப்போது, பஸ் ஸில் போவதால் தினமும் ரேடியோ கேட்க முடிகிறது. எங்களுக்கு உச்சரிப்பு, வார்த்தை பிரயோகம், எந்த வார்த்தைகள் ஏர்' ல் போகக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டது. குறிப்பாக "அம்மா" வந்தால் எடுத்து விடுவார்கள் ! :)))))))

ழ என்ற வார்த்தை சரியாக உச்சரிக்கவேண்டும். தேர்வில் அதிகமாக ழ வரும் வார்த்தைகள் தான் கொடுக்கப்பட்டு இருந்தன. அவள் அவல் வாங்கி வந்தாள், ஏழை கிழவன் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்தான். போன்றவை தேர்வில் கொடுக்கப்பட்டது இன்னும் நினைவிருக்கிறது. அது போல நாம் பேசும் சில வார்த்தைகளில் "க" என்பதை "ஹ" வென உச்சரிப்போம். "எடுத்துக்காட்டாக' - இதை சொல்லும் போது கடைசி 'க' வில் ஹ சத்தம் கூட சேர்ந்து வரும். இப்படி பல "வார்த்தைகள்" உள்ளன. உச்சரித்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

பள்ளி படிப்பின் போது ஷோபனா ரவி அவர்கள் செய்தி வாசிப்பதை பார்த்து, ஈர்க்கப்பட்டு பாடப்புத்தகத்தை அவரைப்போலவே படித்து பார்ப்பேன். இப்படி பழகியே வானொலி குரல் தேர்வின் போது சொல்ல சொன்ன "ஆல் இந்திய ரேடியோ, சென்னை வானொலி நிலையம்" என்று இயல்பாகவே கொஞ்சம் ஸ்டைலிஷ் ஆக சொல்ல வந்தது. "க" வில் தான் தவறு செய்தேன் , திருத்தி திரும்ப திரும்ப பல வார்த்தைகள் சொல்லச் சொல்லி கேட்டார்கள். ஆங்கிலமே கலக்காமல் பேசவேண்டும் :)

ஆனால் இப்போது ?! :))))))))) ஆர்.ஜே க்கள் பேசுவதை கேட்டால், நாம் தமிழை சரியாக படிக்கவும் உச்சரிக்கவும் இத்தனை சிரமப்பட்டு இருக்கிறோம் என்று தெரிகிறது.

மறக்க முடியாதது - இன்று ஒரு தகவல் சொன்ன நிகழ்ச்சி இயக்குனர் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களுடன் லைவ் நிகழ்ச்சி ஒன்று செய்தது. :). மிகவும் எளிமையானவர். மைக் ஆன் செய்வதற்கு முன் என்ன பேசப்போறீங்க என்பதை கேட்டுக்கொண்டாலும், தவறு செய்தோமே ஆனால் அதை அப்படியே சிரித்தபடி வேறு விதமாக பேசி, தவறு வெளியில் தெரியாமல் செய்து விடுவதில் கெட்டிக்காரர், சுவாரசியமானவர், நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்.


அணில் குட்டி : ஆஹா......................... அம்மணி ஆரம்பிச்சிட்டாங்கய்யா...

பீட்டர் தாத்ஸ் : When your hobbies get in the way of your work - that's OK; but when your hobbies get in the way of themselves... well.