வெண்மேகம்

வெள்ளை உடை தேவதைகள்..
நடுவில் நானும் ...

உணர்வுகள் ???
உடல் பஞ்சாக .......

பார்வைகள் சந்திக்கின்றன...
தேவதைகள் சிரிக்கிறார்கள்...
நானும் !

விடுபட்டு வந்தவர்கள்....
நானும் !
.



.

திரைக்கதை / Screen Play

திரைப்படங்களில்   "கதை, திரைக்கதை, இயக்கம்" இப்படி போடுவார்கள். இதில் திரைக்கதை என்பது என்ன?. திரைக்கதை என்ற வார்த்தையை சாமானியர்கள் கூட மிக சாதாரணமாக பயன்படுத்துவதை பார்த்து இருக்கலாம். திரைக்கதை என்பதின் அர்த்தம் புரிந்து தான் பயன்படுத்துகிறார்களா? ம்ம் தெரியவில்லை பார்ப்போம். !

கதை என்பதைவிடவும்,திரைக்கதை என்பது ஒரு படத்திற்கு மிகவும் முக்கியமானது. திரைக்கதை சரியாக அமைக்கப்படாத படங்கள், கதை எத்தனை சுவாரசியமாக எழுதப்பட்டு இருந்தாலும் வெற்றி பெறுவது என்பது கடினம். கதையை ஒரே வரியில் கூட சொல்லிவிட முடியும், ஆனால் அந்த கதையை காட்சிப்படுத்துவது திரைக்கதையே. திரைக்கதை போன்றே "எடிட்டிங்" ங்கும் ஒரு படத்தின் வெற்றிக்கு உதவக்கூடியது. எந்த காட்சி எந்த இடத்தில் வரவேண்டும், எத்தனை நீளமாக இருக்கவேண்டும், எது தேவை, தேவையில்லை என்பதை மிக சரியாக ஊகித்து படத்தை "எடிட்" செய்வதின் மூலம், திரைப்படத்தின் தேவையில்லாத காட்சிகளை எடுத்தும், தேவையான காட்சிகள் மிக சரியான இடத்தில் புகுத்தியும் பார்வையாளர்களை நெளியாமல் உட்காரவைக்கமுடியும். 

திரைக்கதை என்றால் என்ன ?. கதாப்பாத்திரம் எங்கிருந்து பேசுகிறான், எதில் அமர்ந்து, நின்று, நடந்து பேசுகிறான், அமரும் போது எந்த கோணத்தில் அமருகிறான், அவனின் உடை, அலங்காரம், அவனை சுற்றியுள்ள கதாப்பாத்திரங்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள் போன்றவற்றை திரைக்கதையே நிர்ணயம் செய்கிறது. சில மாதங்களுக்கு முன் பார்த்தப்படங்களில் "நான் மகான் அல்ல" படத்தின் திரைக்கதை மிகவும் என்னை கவர்ந்தது. ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து, திட்டமிட்டு, அதன்படியே காட்சியை அமைத்தலே திரைக்கதை என்பதாகும்.  அதாவது, ஒரு காட்சி தொடங்கியது முதல், அந்த காட்சி முடியும் வரை, காட்சியில் வரும் கதாப்பாத்திரங்கள், அவர்கள் இருக்கும் இடம், இடத்தை சுற்றி பின்னால் நடப்பவை, காட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களின் நடை உடை பாவனைகள், ஒரு வீடாக இருக்குமாயின் அது கதையில் சொல்லப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கு  தகுந்த மாதிரி அமைப்பது வரை எல்லாமே திரைக்கதையில் அடக்கமாகும்.

நான் மகான் அல்ல படத்தில் மிக யதார்த்தமாக காட்டப்பட்ட "ஒரு லோயர் மிடில் க்ளாஸ் வீடு", அங்கங்கே கிடக்கும் பொருட்கள், அந்த வீட்டு சமையல் கட்டு, திரைப்படத்திற்காக ஒரு செயற்கைத்தனம் இல்லாமல், எப்படி ஒரு வீட்டின் சமையல் அறை இருக்குமோ அப்படியே இருக்கும். பல படங்களில் இவையெல்லாம் செட்'போடப்படும் அல்லது மிகவும் அழகாக யதார்த்திற்கு அப்பாற்பட்டு காட்டப்படும். அப்படி இல்லாமல் மிக யதார்த்தமாக, அல்லது மிக சரியாக கவனமாக அமைக்கப்படும் காட்சிகளில் திரைக்கதை சரியாக அமைக்கப்பட்டு இருக்கிறது எனலாம்.

திரு.கமல்ஹாசன் படங்களில் இந்த யதார்த்தங்களை நிறைய காணமுடியும். காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக, தனிப்பட்ட முறையில் அவர் எல்லாவித முயற்சிகளையும், உழைப்பையும் கொட்டி இருப்பார். "அன்பே சிவம்" மிக சிறந்த உதாரணம். இருப்பினும்,சில காட்சிகளில் நாடகத்தன்மை, சினிமாத்தனம் தெரியும் தான். "உன்னை போல் ஒருவன்" திரைப்படத்தில், கமல்ஜி, அந்த கட்டிடத்தில் ஏறும் முதல் காட்சியில் தக்காளி சிலது கூடையில் இருந்து கீழே விழும். அதை திரும்ப எடுத்து தன் கூடையில் போட்டுக்கொண்டு மேலே செல்வார். அந்த காட்சி வரும் போதே, அந்த தக்காளி கூடை கண்டிப்பாக வேறொரு காட்சியில் வருமென்று ஊகிக்கமுடிந்தது. அதே கூடை கடைசி காட்சியில், அவர் திரு.மோகன்லால் அவர்களோடு பேசும் போதும் வரும். தக்காளி கீழே விழும். இவை எல்லாம் திரைக்கதையில் தொடர்புடைய காட்சிகள். இதில் கவனித்தது, முதல் காட்சியை விடவும், கடைசி காட்சியில் கூடையில் தக்காளி அதிகமாக இருக்கும்,   தக்காளி கூடையிலிருந்து விழவேண்டும் என்பதற்காக கொஞ்சம் அதிகமாக வைக்கப்பட்டு இருக்கலாம். பார்வையாளர்கள் இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று எண்ணியிருக்கலாம்.. இருப்பினும், இதை ஒரே அளவாக  வைத்திருக்கலாம் என்பதே பார்வையாளனாக நான் எதிர்ப்பார்த்தது. அப்படி இருந்தால் தான் அது யதார்த்தம் இல்லையேல் சினிமாத்தனம்/கவனமின்மை ஆகிவிடுகிறது.

சில காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக யதார்தத்தை மீறுதல் மிகைப்படுத்திக்காட்டுதல், அப்படிக்காட்டும் போது பல நேரங்களில் அந்த காட்சிகள் மனதில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பார்வையாளனை சேர்ந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.  இதைத்தாண்டி நாம் அத்தனை உன்னிப்பாக காட்சிகளை கவனிக்கமாட்டோம் என்றும் இயக்குனர், மற்றும் திரைக்கதை வடிவமைப்பாளர் நினைத்திருக்கலாம். 

இன்னுமொரு உதாரணம், மைனா படத்தில், அனைவரும் பேரூந்தில் பயணம்  செய்யும் போது ஒரு பாடல் வரும், அந்த பாடலின் நடுவே சம்பந்தமே இல்லாமல் ஒரு "எவர்சில்வர் தூக்கை" காட்டுவார்கள். அது, விபத்து நடந்து, இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரம் கண்ணாடியில் விழுந்து கிடக்கும் போது, நமக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அந்த தூக்கு விழுவதற்கும், கதாநாயகன், இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தை தூக்கி, மயிரிழையில் காப்பாற்றுவது போன்று காட்டப்படும். அந்த தூக்கிற்கு பதிலாக எதை வேண்டுமானாலும் அங்கே காட்டியிருக்கலாம். ஆனால் ஒரு சின்ன தூக்கை பயனபடுத்தி இருப்பது திரைக்கதையின் புதிய உத்தி அல்லது சாமர்த்தியம். 

எப்படியோ திரைக்கதை என்பது - ஒரு காட்சியினை, அதனை அழகுப்படுத்த, மெருகேற்ற படம் முழுக்க  பெருந்துணையாக தொடர்ந்து வரக்கூடிய காட்சி அமைப்புகள் எனலாம். சில திரைக்கதை அமைப்புகள் நம்மை வெகுவாக கவர்ந்து இழுத்துவிடும்.

நான் மகான் அல்ல" திரைப்படத்தின் திரைக்கதையும், எடிட்டிங்கும் மிக நன்றாக இருந்ததாக எனக்கு தெரிந்தது.  உதாரணமாக ஒரு பெண்ணின் கொலை, அது எந்த சந்தர்பத்தில் நடந்தது என எளிதில் நாம் கணித்து விடாதபடி அமைந்த திரைக்கதை நிச்சயமாக"சபாஷ்" போட வைத்தது.  ஏனென்றால், கடற்கறையில் ஒரு காதல் ஜோடியினை பிரித்து, அந்த பெண்ணை மாணவர்கள் தூக்கிசெல்லவதாக ஒரு காட்சி இடம்பெறும். நடுவே ஒரே ஒரு முறை, மாணவர்களின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் மறைத்துவைக்கப்பட்ட பெண்ணின் உடல் வெளியில் இழுக்கப்பட்டு, தலைத்துண்டாக நறுக்கப்படுவது காட்டப்படும். ஆனால் முன்னர் தூக்கிச்சென்ற பெண்ணும், இந்த பெண்ணும் வேறுபட்டவர்கள் என்பது, கதையில் நாம் எதிர்ப்பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் காட்டப்படும். படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்ட விதம் தான், நமக்கு கொலைசெய்யப்பட்ட பெண்ணும், கடற்கரையில் தூக்கிச்சென்ற பெண்ணும் வேறு என்பதை உணர்த்தும். நல்ல திரைக்கதைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. விஜய் நடித்த "கில்லி" திரைக்கதை யில் ஒரு வேகம் இருக்கும், அடுத்து என்ன அடுத்து என்ன? என்ற ஆர்வத்தை உண்டாக்கும்.

சொதப்பல் திரைக்கதைக்கு நிறையவே எடுத்துக்காட்டுகள் உண்டு.  ஒரு படத்தை நல்ல திரைக்கதை அமைத்து எடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்த்துவிட்டு விமர்சனம் என்ற பெயரில் குத்தம் குறைகளை பார்த்த காசு செரிக்க எழுதிவிட முடியும். ஆனால் சினிமா எடுப்பது என்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை.  நம் விஜி ஒரு லைவ் டாக் ஷோ விற்கு சென்று அது எடுக்கும் விதத்திலும், இயக்குனர் சார்ந்து எல்லா விஷயங்களும் நடப்பதையும் பார்த்து பொறுமையின்றி வந்துவிட்டார். அதனை ஒரு பதிவாக எழுதி இருந்தார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லை, தொடர்கள், படங்கள் என்று எல்லாமே இப்படி மிகவும் சிரமப்பட்டு, நேரம் காலமின்றி, பல மனிதர்களை ஒருங்கிணைத்து, சரிக்கட்டி, சின்ன சின்னதாக, பல கெடுபிடிகளை சந்தித்து, பல மணி நேரம் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி,  பிறகு அதனை கோர்வையாக்கி வெட்டி, ஒட்டி நாம் பார்த்து மகிழ ஒரு நிகழ்ச்சியாக, தொடராக, திரைப்படமாக கொடுக்கிறார்கள்.

எந்திரன் திரைப்படத்தில் ஆசியாவில் இரண்டாவதாக அதிக சம்பளம் வாங்கிய திரு.ரஜனிகாந்த் அவர்களின் உழைப்பு?? தேவையா என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. அவர் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்துதான் அந்த சம்பளத்தை பெற முடியும் என்பதில்லை. ஆனாலும் உழைப்பை கொட்டி எடுக்கப்பட்ட ஒரு படம். நாம் நான்கு வரிகளில் படத்தைப்பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களை வைத்துவிடமுடியும்.

ஆரம்பத்திலிருந்தே  பார்வைகளில் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்று முடிவு செய்து எழுதுவதில்லை. நந்தலாலா முதலும் கடைசியுமாக இருக்கும். காரணம் மிகவும் கஷ்டப்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு நாம் மிக எளிதாக ஒரு பதிவின் மூலம் "நன்றாக இல்லை" என்று விமர்சனம் செய்துவிட முடியும், ஆனால் மாதக்கணக்கில் உழைப்பை கொட்டி, எதிர்காலத்தை எதிர்ப்பார்த்து பிழைக்கும் பலரை அப்படி எழுதும் போது மறந்துவிட முடிவதில்லை. மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில்,  நிறைய எதிர்ப்பார்ப்புகளை, அளவே இல்லாத கனவுகளை தேக்கிய வேலை இது. அது தான் வாழ்க்கை என இருப்பவர்கள், தங்களது உழைப்பை சரிவர பயன்படுத்தி வெற்றிப்பெற வாழ்த்துவதை தவிர்த்து, வேற என்ன செய்துவிட முடியும் நம்மால். :)

நன்றி : கேபிள்ஜி (நேரம் ஒதுக்கி, பதிவை வாசித்து, திரைக்கதை என்பதை பற்றிய என் புரிதலில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினார். திருத்திக்கொண்டேன்)

அணில் குட்டி : வூட்டுல படம் பாக்கும் போது வாய மூடாம அடிக்கிற கமெண்டு பத்தாதுன்னு.. இது வேறையா...  ???

பீட்டர் தாத்ஸ்: You convince yourself you can fix the screenplay, because there`s a lot of money involved. But you can never make it work. If the script has a hole in it, it will always have that hole.Nick Nolte

உனக்கு 20 - எனக்கு 18

கவி : நவீனா........ அடி வாங்கப்போற நீனு இப்ப...

நவீன் :  இரு இரு..!!  நானும் சின்ன புள்ளையில இருந்து பாக்கறேன், இந்த அம்மாங்க புள்ளைங்கள அடிக்கறது " ஒன் சைட்" ஆவே இருக்கே.... ??என்ன கதை இது???  பேலன்ஸ் இல்லாத இந்த  ஒன் சைட் ரூல் போட்டது யாரு..???  காலம் பூரா அம்மாங்க அடிப்பாங்க...புள்ளைங்க வாங்கனுமா..? என்ன நியாயம் இது? அதுக்கு முதல்ல நீ...பதில் சொல்லு...

கவி: இப்ப என்ன....?  உனக்கு என்னை அடிக்கனுமா?

நவீன் : ஹா ஹா ஹா.. .ஆனாலும் உன் காமெடி சென்ஸ் க்கு  அளவே இல்லாம போச்சிம்மா...... நீ இருக்க சைஸ் க்கு நானெல்லாம் அடிச்சா...  ஹய்யோ ஹய்யோ.. .. .. என் கால் ஹைட் கூட இல்ல நீனு... ..போ..போ... போ.....வேலைய பாரு.. போ.........

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... !!

*************************
காலிங் பெல் அடிக்க, கதவை திறக்கிறேன்.. நவீன்  & ஃப்ரெண்ட்ஸ் குரூப் நிற்கிறார்கள்

கவி ; :)) ஹாய் கைஸ்... :)) வாங்க.வாங்க....

வெங்கட் : ஹாய்....ஆன்ட்டி, யூ லுக் வெரி சிலிம்ம்ம்ம்...

கவி : ஏன்ன்டா???

வெங்கட் : நிஜம்மா த்தான் ஆன்ட்டி, லாஸ்ட் டைம் பாத்ததுக்கு ..ரியலி யூ பிக்கெம் தின் ஆன்ட்டி...

கவி : திருப்பியும் ஏன்ன்டா.. ???

நவீன் : டேய் சனியனே.. ...........மதியம் கண்டிப்பா சோறு போடுவாங்க........... போதும்......வந்து தொல... !!

கவி :  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
**********************************

துணி துவைக்கும் போது ஏகத்துக்கு திட்டிக்கொண்டே இருக்கிறேன்..

நவீன் : எச்சூச்சுமி... ஏன் என்னவோ தனியா பேசிக்கிட்டேஏஏஏஏ இருக்க? எனி கிளைமெட் சேன்ஜ் ப்ராப்ளம்..??

கவி : (செம கடுப்பில்) ம்ம்ம்ம்...எல்லாம் என் தலை எழுத்து. .எரும மாடுங்களோட துணியெல்லாம் துவைக்கனும்னு இருக்கு..........

பழம்நீ:  ஏன்டா, அவ கை தான் வீங்கி இருக்குன்னு தெரியுமில்ல, உன் துணிய நீ துவைச்சிக்கோன்னு சொன்னேனில்ல.. ஏன் செய்ய மாட்டற. .அவ பாரு எவ்ளோ கேவலமா திட்டறான்னு......

நவீன் : ஹா ஹா.. :))) எது கேவலம்.?!! அம்மா புள்ளைய திட்டறதெல்லாம்.... காலங்காலமா நடக்கற ஒரு சாதாரண விஷயம். இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணவே கூடாதுப்பா..
.
பழம்நீ : உன்னால...... என்னையும் சேர்த்து திட்டறாடா...

நவீன் : அய்யய்ய என்ன உங்களோட பெரிய பிரச்சனையா போச்சி... பொண்டாட்டின்னா அப்படித்தான்ப்பா.... நீங்களும் ரியாக்ட் செய்யாம இருங்க.. அவங்க பாட்டுக்கும் கத்திட்டு....  இருப்பாங்க... ஆனா ஒரு ஸ்டேஜ்ல ....பாருங்க...வேலயும் முடிஞ்சி இருக்கும் .. இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணா அப்புறம் நாம வேல செய்ய வேண்டியதா போயிடும்ப்பா...!

கவி : அடப்பாவி... :(((((( !
********************************

நவீன் : அப்பா, சனிக்கிழமை, க்ளாஸ் வைக்கறாங்க.. என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். உங்களுக்கு ஃபோன் வரும், காலேஜ் வந்து, கையக்கட்டிக்கிட்டு பவ்யமா நின்னு, "என் புள்ள மேல தான் தப்புன்னு சொல்லாதீங்க." என் மானம் மரியாதை எல்லாம் போயிடும்....அவங்கக்கிட்ட "ஆமா அவன் வரமாட்டான் அவனுக்கு வேற வேல இருக்குன்னு சொல்லுங்க " சரியா...!

பழம்நீ: ................................... (என்னைப்பார்க்கிறார்).. அப்படியே.. .......

நவீன் : என்ன அவங்கள பாக்கறீங்க. சொன்னது புரிஞ்சிச்சாஆ...?

பழம்நீ: ............................(என்னைப்பார்க்கிறார்).. அப்படியே.. .......

நவீன் : அப்பா உங்க கிட்ட தான் பேசறேன்..என்ன அவங்கள லுக் விடறீங்க..???

கவி :  டேய்...புரியலையா..? நீ  அப்படியே என்னை மாதிரி இருக்கியாம். !! :))))))))))  ஆனா, இந்த சீன் க்கு எல்லாம், அப்பா சரி வரமாட்டார்டா....  நான் வேணும்னா காலேஜ்'க்கு வரேன்.......சண்டப்போட்டு ரொம்ப நாள் ஆச்சிடா.. ப்ளீஸ், ப்ளீஸ்...நான் வரேண்டா....

பழம்நீ :.............. (என்னைப்பார்க்கிறார்.. பல்லை நற நறவென கடித்துக்கொண்டு) .......அதான்......அப்படியே.. .......
 

கவி :...ஹி ஹி... எப்படிப்பா உங்களுக்கு மட்டும் பல்லை கடிச்சா இவ்ளோ  சத்தம் வருது.. நாங்க கடிச்சா வரலியே.. ?!
 
பழம்நீ:  (ரொம்பவும் கடுப்பாகி.. வேற என்ன நற நற நற தான்... )

*******************
சமையல் அறையில் இருக்கிறேன், பழம்நீ தனியாக ஹாலில் பேசிக்கொண்டு இருப்பது கேட்கிறது..

பழம்நீ: ...கடவுள் கிட்ட.. ஒரு சாதாரண.. .ரொம்ப சாதாரண பொண்ணு வேணும்னு தான் கேட்டேன்.. .ஆனா.. எனக்கு இப்படி ஒரு எக்ஸ்ட்ராடினரி பொண்ணை கொடுத்து...................

கவி : (கொடுத்து ன்னு சொல்லும் போது - வெளியே எட்டி பார்க்கிறேன்..........)

பழம்நீ: (நான் பார்ப்பதை கவனித்தவர்) என்னை பெருமைப்படுத்திட்டாரேஏஏஏ..!! ( :(((((((((((( )

கவி:  ப்பா...நான் எட்டி பாத்ததுக்கு அப்புறம் ஒரு கேப் விட்டீங்களே.. அதை ஃபில் பண்ணுங்க.....உண்மையில என்ன சொல்ல வந்தீங்க??? அதை சொல்லுங்க..

பழம்நீ: சே..சே.... இல்லையே..... நிஜம்மாவே உன்னை நினைச்சி எனக்கு எப்பவுமே பெருமைத்தாண்டி... நீ ஒரு .................நீ ஒரு..........

நவீன் :  நீ ஒரு லூசு .... ன்னு சொல்றாரு ம்மா..!! :)))))

கவி :   அவ்...... இவன் எப்ப வந்தான்... . ?!!  :(((((((( 
************************

கவி : ஏன்டா..அந்த பொண்ணு ஏன் இவ்வளாம் குட்டியா ஒரு ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு இருக்கு... ஃபேஸ் புக் ல பார்த்தேன்...

நவீன் : அவ ஸ்டெல்லா மெரிஸ் ல ப்டிக்கறா...அப்படித்தான் ட்ரஸ் பண்ணுவா... அது இருக்கட்டும், அவ ஷார்ட்ஸ் போட்டு இருந்தா உனக்கு என்ன?

கவி :  .  வீட்டுல ன்னா பரவாயில்ல.. காலேஜ் கூடவா அப்படி போறா?

நவீன் :  அவ என்ன ட்ரஸ் போட்டா உனக்கு என்னம்மா. .ஏன்ம்மா என் உயிர வாங்கற...நீ ஏன் இதெல்லாம் கேக்கற...

கவி : இல்லடா.. ச்சும்மா பொது அறிவை வளக்கலாம்னு தான்...

நவீன் : அது அறிவு இருக்கவங்க செய்ய வேண்டியது ..

கவி : :((((((((((((((


****************
பழம்நீ : ஆமா ஏதோ ஆசிரமத்துல போயி சேர போறேன்னு சொன்னியே எப்ப போக போற....??

கவி : ...............????????? ................... (என்ன குடும்பம் டா இது ?!! )

நவீன் : ஹா ஹா ஹா ஹா ஹா..... ஹய்யோஓ ஹய்யோஒ.... இந்த மாதிரி அவங்க சொன்னதை நீங்களும் நம்பிட்டீங்களா??? ஹா ஹா :))))))

பழம்நீ:  அடிக்கடி சொல்றாடா... அதான் கேட்டேன்

நவீன் : ம்க்கூம்.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா சொல்றாங்க ஆனா போகத்தான் மாட்டறாங்க... :)))))), உங்களுக்கும் கொஞ்ச நாள்ல பழகிடும்..... .விடுங்க :)))))))

பழனி : அப்ப போகவே மாட்டாளா...:(((((((

கவி :  :(((((((( . .. மே ஐ கம் இன்..... ..நீங்க இரண்டு பேரும் என்னைப்பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். வில் யூ போத் க்ளோஸ் தி டோர்.!!

நவீன் : அத நீ செய்தா இந்த வீடே நிம்மதியா இருக்கும் நீயும் ஆசிரமத்துக்கு  போக வேண்டி இருக்காது. !!

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
************

நவீன் : (சீரியஸாக) அம்மா  காலையில் செய்யற டிபன் எல்லாம் நீ ஏன் மதியம் செய்யற ???

கவி : ??????????????????????

நவீன் : (மறுபடியும் சீரியஸ்) எப்பவுமே பொங்கல் எல்லாம் காலையில் தானம்ம்மா செய்வாங்க??

கவி : ஞே !!

(அவ்வ்வ் நான் செய்து வைத்திருந்தது என்னவோ சிக்கன் பிரியாணி..?!!! .. :(((((((, என்னா கிருவித்தனம்!!  புள்ளையா இது..?!! )
*******************

அணில் குட்டி : காமெடி பீஸ் ன்னு உலகத்துக்கே தெரியும். இதுல இதை வரலாற்றுல வேற பதிஞ்சி வக்கறாங்களாமாம்..... ... வெளங்கிடும்..!!.

இந்த தலைப்புக்காக டைம் ஆனாலும் பரவாயில்லைன்னு க்யூல வந்து  ..ஒவ்வொருத்தரா அம்மணிய துப்பிட்டு போங்க.. யாரும் மிஸ் ஆகக்கூடாது சொல்லிட்டேன்.. !!

பீட்டர் தாத்ஸ் : A man loves his sweetheart the most, his wife the best, but his mother the longest

பிரார்த்தனை

எனக்கு மிகவும் பிடித்த பிரபலங்கள் இருவருக்காக அவர்களின் நீண்ட ஆயுள், அமைதியான வாழ்க்கை மற்றும் ஓய்விற்காகவும் பிரார்த்தனை செய்துக்கொள்கிறேன்.

கலைஞர் :-  தோல்வியை முதன் முதலாக பார்ப்பவர் அல்ல. இருப்பினும் இந்த தேர்தலின் முடிவுகள் மிகவும் மோசமானவை. இந்த தள்ளாத வயதில் இது வேதனை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் ஒரு நாளில், அவரின் கோபாலபுரத்து வீட்டு மாடியில், எந்தவித டென்ஷனும், எதிர்ப்பார்ப்பும், பரப்பரப்பும் இல்லாமல் கதை எழுதியவர். அந்த அளவு மனதளவில் திடமான, நிதானமான, பதட்டம் இல்லாத மனிதர்.


80 வயதுக்கு மேல் இந்த அளவு ஞாபக சக்தியோடும், சோர்ந்து போகாத அவரின் உழைப்பும், பேச்சு மற்றும் எழுத்து ஆற்றலும் பாராட்டுக்குறியவை.  

அவரின் இந்த வயதான காலத்தில், அவரைச்சுற்றி நடக்கும் எல்லாவிதமான நல்லது கெட்டதுகளை தாங்கும் உள்ளத்தையும், தளராத மனதையும், மன அமைதியையும், உடல் மற்றும் அறிவுக்கு தேவையான ஓய்வையும்  கடவுள் அவருக்கு கொடுக்க வேண்டிக்கொள்கிறேன். 

திரு.ரஜினிகாந்த் : தலைவாஆஆஆஆஆ ??? என்ன இது மூன்றாம் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். கலைஞர் கூட பரவாயில்லை போலவே உங்களைப்பற்றிய கவலை ஆட்கொள்கிறது. :(.  இன்னும் எத்தனை குட்டி குட்டி கதாநாயகிகள் உங்களோடு நடிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள் என்று தெரியுமா? எல்லோருக்கும் கால்ஷீட் கொடுங்கள். நேற்று பிறந்த குழந்தைக்குக்கூட உங்களின் படங்கள் தான் பொழுதுப்போக்கு.

என் குழந்தை பல வருடங்கள் கழித்து உங்களின் எந்திரன் படம் பார்த்து ரசிகன் ஆகியிருப்பது ஆச்சரியம். படம் முடிந்து வந்து  " ரஜினி.. இல்லன்னா படம் இல்லம்மா.. ரஜினி க்காக படம் பார்க்கலாம்.. one man runs the movie " என்றான்.  அதற்கு பிறகு தொடர்ந்து உங்களின் படம் எப்போது டிவி யில் வந்தாலும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறான். இன்னும் எத்தனை குழந்தைகள் உங்களின் விசிறிகளாக...என்னையும் சேர்த்து... (ஏய் யாராது கல்லை எடுக்கறது..பேச்சு பேச்சா இருக்கனும்.!! )

உங்களின் உடல்நலம் சீக்கிரமே குணமடைய பிரார்த்தித்து கொள்கிறேன். மிக சீக்கிரம் உங்கள் உடல் நலம் தேறி வந்து....... உங்களுக்கு கொஞ்சமும் மேட்ச் ஆகாத அந்த மொக்கை ஃபிகர்.... யாராது ..ஹான்.அதான் அந்த... தீபிகா படுகோன் கூட ராணா படத்தை நடித்து முடிச்சி, அந்த அம்மாவை வீட்டுக்கு அனுப்பி விடுங்க......

தலைவர் ஸ்டைலுக்காக... எப்பவும் எனக்கு பிடித்த அவரின் எவர் கிரீன் பாடல்... 

"சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே.. " அவர் கோட் போட்டு இருக்க ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்.... ஹேர் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்... டான்ஸ் மூவ்மென்ட்ஸ் (அவருக்கு ஆட வராதுன்னு சொல்றவங்க இந்த பாடல் மற்றும் மன்னன் படத்தில் குஷ்பூ'வோடு ஆடும் பாடலை பார்க்கலாம்).....
தலைவா நீங்க சூப்பர்..!! உங்க ஸ்டைல் சூப்பர்.. !! உங்க டான்ஸ் சூப்பர்..!! உங்க சிரிப்பு சூப்பரோ சூப்பர்.. ....!! மொத்தத்தில் ....சரி வேணாம் விடுங்க.. பொறாமை பிடிச்ச கூட்டம் பின்னால் நிக்குது...



ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்...