தலைப்பே தங்கிலீஷில் கேவலமா இருக்குல்ல. வேணும்னா கொரோனா கால கொடுமைகள்/ கொடூரங்கள் னு மாத்தி படிச்சிக்கோங்க.
யோகா முதுகலை முதலாமாண்டு வகுப்புகள் ஆன்லைனில் ஆரம்பமாகி ஒரு வாரம் ஆச்சி.
இருங்க இருங்க…ஒரே ஒரு ரெக்குவஸ்டு, இந்த பதிவ FB யில் வரும் kellyskomedy ப்க்கத்தில் காமெடி வீடியோ பதிவுகள் செய்யும் பெண்ணின் குரல்ல படிங்க… அப்பத்தான் நல்லாயிருக்கும்.. இதையும் அப்படியே படிங்க..
நல்ல நாளிலேயே நாம வகுப்பில் நாயகம். முதல் பெஞ்சில் உக்காந்தாலும் சரி நடுவில் பின்னாடின்னு எங்க உக்காந்தாலும் ஆசிரியர் கூப்பிட்டு ஒன்னு திட்டுவாங்க.. அடியும் வாங்கியிருக்கேன். அடின்னா..என் இம்சை தாங்கமுடியாம சாக்பீஸ் தூக்கி அடிப்பாங்க.. சுர்ர்ன்னு வலிக்கும். என்னாலேயே சாக்பீஸ் டப்பா சீக்கிரம் தீந்துடும், இதுல க்ளாஸ் பெருக்கரவங்கக்கிட்ட வேற பாட்டு விழும். என்ன இம்சை கொடுத்தாலும் நல்ல மார்க் வாங்கிடுவேன். அதனால் என்னை பொறுத்துட்டு போகிற ஆசிரியர்களே அதிகம். என்னைக்கண்டாலே கடுப்பாகும் ஆசிரியர்களும் உண்டு தான்.
இந்த ஆன்லைன் வகுப்புகள் எனக்கு ரொம்ப ஈசியாப்போச்சி. திருவாரூரில் இணைய சேவை கிடைப்பதே பெருசு, இதுல அதன் வேகத்தைப்பத்தி சொல்லி என் வயித்தெரிச்சல நானே கொட்டிக்க விரும்பல. இதனால Zoom meeting ல் வீடியோ ஆன் செய்வதேயில்ல..செய்தால் வர ஆடியோவும் போயிடும். 80+ மாணவர்கள். எல்லாருமே அநேகமாக 35+ லிருந்து கிட்டத்தட்ட 60 வயது வரை இருப்பாங்க போல..
வீட்டிலிருந்து ஆன்லைன் க்ளாஸ் வரதால..
- தம்பதியர் சண்டை, இது கேக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.. நாம வகுப்பில் இருக்கோங்கற பிரஞ்ஞை இல்லை..மறந்துப்போயிடறாங்க போல..
- அம்மாக்களை பிள்ளைகள் சரமாரியாக திட்டுதல் (கவனிக்க இங்க மாணவி அம்மா)
- ஆணாக இருந்தால், பிள்ளைகள் அவங்க முதுகில் மேல ஏறி கேமராக்குள் தலையைவிடும் பரிதாபங்கள்
- யோகா செய்யும் போது அவங்க முதுகின் மேல குழந்தைகள் வந்து ஏறி உக்காந்துகுதுங்க.
- அம்மாவோ அப்பாவோ வகுப்பில் இருக்கும் போது, பின்னாடி பல்விளக்கிட்டு, தலைசீவிட்டு, காபி குடிச்சிக்கிட்டு வந்து நிற்கும் பிள்ளைகள்
- சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு காப்பிக்குடிக்கும் கணவர்
- வீட்டினுள் சட்டையில்லாமல் சுற்றும் ஆண்கள் & தாத்தாக்கள்
- நைட்டியோடு சுற்றும் பெண்கள் , அதும் சில சமயம் opposite lighting ல வந்து நிப்பாங்க… கடவுளே கடவுளே ன்னு இருக்கும்..
- அப்பாக்களுக்கு வீடியோவை ஆன் செய்துத்தரும் வயது வந்த பெண் குழந்தைகள்
- அம்மா ஆடியோவை மியூட்டில் வச்சியிருந்தால்..ஓடிவந்து அன்மியூட் செய்வதும், அன்மியூட் டில் இருந்தால்..மியூட்டில் வைத்துவிட்டு ஓடும் வால் குட்டிகள்
- இதையெல்லாம் விட .. சரியாக கேமராவை வைக்கத்தெரியாமல்..வீட்டின் பரன் மேல் இருக்கும் பொருட்கள் நமக்கு காணக்கிடைக்க செய்யும் அப்பாவிகள்..
- பெயருக்கு பதிலாக ரெட்மி, ஓப்போ, ஈமெயில் ஐடி, நம்பர்கள் என ப்ரொபைல் பெயரில் வேற காமெடிகள்..
- சில பெண்கள் வகுப்புக்கே நைட்டியில் வந்து உக்காந்து இருக்காங்க.. :(
- இன்னும் சிலர் பரிதாபத்துக்கு உரியவர்கள். சின்னக்குழந்தைகளுக்கு எதாது விளையாடக்கொடுத்துவிட்டு.. பின்னால் அவ்வப்போது அவங்களை திரும்பி திரும்பி பாத்துட்டு இருப்பாங்க..
இத்தனையும் பொருத்துக்கொண்டு ஆசிரியர் கவனம் சிதறாமல் பாடமெடுக்கும் போது..
சார்…. ஒன்னும் கேக்கல..
சார் நீங்க சரியா தெரியல..
சார்.. ஆடியோ இல்ல..
சார்… கொர கொரன்னு கேக்குது
சார் எல்லாரும் பேசறாங்க..
Sir, we don’t know tamil, please teach us in English.
சார்…சார் சார்… ன்னு ஒரே chat messages ..இல்லனா எல்லாரும் நடு நடுவே குரல் கொடுக்கறது…
அய்யோ பாவம் ஆசிரியர்கள் நிலைமை…
சரி.. நம்ம கதைக்கு வருவோம்.….. முன்னமே சொன்னமாதிரி நம்ம இணைய சேவையின் வேகத்திற்கு எனக்கு வீடியோ எல்லாம் சரிவரல.. ஒன்லி ஆடியோ.. அதும் என் ஆடியோ மியூட் ல வச்சிப்பேன்.
முதல் நாள்.. அறிமுக வகுப்பு முடிந்தவுடன்.. பேஷியல் கிட் எடுத்து.. பொறுப்பா பேஷியல் செய்துக்கிட்டேன். கொரோனாவினால் பார்லர் போக முடியலல்ல.. வகுப்புக்கு வகுப்புமாச்சி.. என் வேலையும் முடிசின்சி.
ஆன் லைன்ல வச்சிட்டு. சார் வரத்துக்குள்ள ஓடிப்போய் குளிச்சிட்டு வரது.. சாதம் அடுப்பில் வச்சிட்டு வந்து அப்பப்ப போய் பார்த்து வடிக்கறது. காலை உணவு சாப்பிடறது.. காய்ந்த துணிகளை மடிச்சி வைக்கறது.. உக்காந்தே இருக்க முடியாம கொஞ்சம் நடந்தபடியே வகுப்பை கவனிக்கறது.. நடுவுல் வாட்சப்பில் யாராச்சும் பேசினா அவங்களுக்கு பொறுப்பா பதில் சொல்றது.
வீடியோ மட்டும் இருந்திருந்தால்….இந்த அட்டூழியங்கள் சாத்தியப்படுமா ? மெதுவான இணைய சேவைக்கு நன்னி..
ப்ராக்டிகல் வகுப்பில் மட்டும் சின்சியரா இருப்பேன். ஆனாலும்.. அவரு 6 முறை செய்ய சொன்னால் நான் பொறுமையா 3 முறை செய்வேன். ‘நேரம் இல்லைன்னு வேக வேகமா செய்துட்டு போறாரா.. இல்ல நிசமாவே யோகா இவ்ளோ வேகமா செய்யலாமான்னு அவர்ட்ட கேக்கனும்..’ விடப்பிடாது.
இதைத்தவிர வகுப்பு ஆரம்பிக்கும் முன்ன நம்ம வாயிதான் சும்மா இருக்காதே..சமூக சேவை செய்ய..'அனைவருக்கும் வணக்கம், நான் கவிதா பேசுகிறேன்..என்னை நீங்க பாக்க முடியாது ஆனா கேக்கலாம்.. னு ஆரம்பிச்சி…தமிழ்/ஆங்கிலம் இரண்டிலும் 'யாருக்காவது ஏதாது உதவி வேணும்னா என்னை கூச்சப்படாம கேளுங்கன்னு சொல்லப்போயி..
ஒரு அம்மா இன்னைக்கு ‘கவிதா மேடம் கவிதா மேடம்’ னு கூப்பிட்டு ஒரு 2 பத்திக்கு பேசி, கடைசியில் புக்ஸ் வேணும் னு கேட்டு முடிச்சாங்க.. அவங்க மேடம் னு கூப்பிட்டதால எனக்கு டவுட்டு.. என்னைத்தான் கூப்பிட்டாங்களான்னு தெரியல. கொஞ்சம் நேரம் சைலன்ட் மோட் ல இருந்தேன். அவங்களும் 'பதில் சொல்லல' ன்னு முனுகினது கேட்டது, வேற யாரும் பதில் சொல்லல.. அப்புறம் நானே போய்.. 'கவிதா பேசறேன்.. என் கிட்டவா கேட்டீங்க.'.ன்னு கேக்க… ஆமா மேடம் ஆமா மேடம் ன்னு ..ஆர்வமா பதில் சொல்ல.. முதல்ல இந்த மேடம் மேடம் னு கூப்பிடாதீங்க.. கவிதா ன்னு கூப்பிடுங்க.. ன்னு சொல்லிட்டு... புத்தகம் விசயம் பத்தி விபரம் தெரிந்தவுடனே உங்களுக்கு சொல்றேன்.. னு சொல்லிட்டு.. நம்மையெல்லாம் புக் பிரிண்ட் செய்து பல்கலைகழகத்துக்கு கொடுக்கும் ஏஜன்ட்டா இல்ல இந்தம்மா நெனச்சிருக்கு'ன்னு .. வடிவேலு மாதிரி..அவ்வ்வ்வ்வ்வ்.. மொமென்ட்.
ஆசிரியர் உள்ள வந்ததை கவனிக்காமல்.. சமூக சேவை செய்துக்கிட்டு இருந்தேன். ஆசிரியர்…. வாட்சப்பில் வந்து.. 'அம்மா..உன்னோட ஈமெயில் ஐடி கொடு.. ஒரு ஃபையில் அனுப்பறேன்.. நீ கொஞ்சம் அதை வகுப்பு நடக்கும் போது ஷேர் செய்'னு சொல்ல..இந்த வாயி இருக்கே வாயின்னு என்னை நானே நொந்துக்கிட்டு, உக்காந்த இடத்தை விட்டு நகர முடியாமல், வகுப்பு முழுக்க வேற எதும் செய்யமுடியாமல் ஒரே இடத்தில் உக்காந்து பிபிடி ஃபைலை ஷேர் செய்தேன்.
ஆன்லைனில் நானும் பாடம் படிப்பேன் னு நினைக்கல. இந்த வீடியோ கொடுமையகளையும் பார்ப்பேன்ன்னு நினைச்சுக்கூட பார்க்கல..
நினைக்காததை எல்லாம் நடத்திக்கொடுக்குது இந்த கொரோனா…
இதை ஆசிரியர்கள் யாரேனும் படிக்க நேர்ந்தால்.. தயவுசெய்து.. மன்னிச்சு. உங்கள் சேவை நிச்சயம் மகத்தானது.
பீட்டர் தாத்ஸ் : A great teacher can teach Calculus with a paper clip and literature in an empty field. Technology is just another tool, not a destination.’ –Unknown