பயணக்குறிப்புகள் -சபரிமலை-அச்சன்கோயில்-ஆலப்புழா
தொலைவிலிருந்தே அவர் வருவதை நானும், நான் இருக்குமிடத்தை அவரும் கவனித்துவிட்டோம். வந்தும் வராததுமாக ‘சாப்பிட்டியா’ ன்னு கேட்டார். ‘எலுமிச்சை ஜூஸ் குடிச்சேன் இங்க சாப்பாடெல்லாம் இல்லை. பம்பைக்கு போயிருக்கலாம், ஒருவேளை நீங்க வந்தா தேடுவீங்கன்னு போகல.. ஃபோனும் சிக்னல் இல்ல’ ன்னு சொல்லிட்டு அவர் சென்று வந்த கதையைக்கேட்க ஆரம்பித்தேன்.
பொதுவாக சாமி மலை ஏறும் போது செருப்பில்லாமல் போயிதான் பழக்கம், அதனால் இங்கேயே செருப்பை விட்டுட்டு சென்றார். 10 மீட்டர் கூட போகலையாம், கல் குத்த ஆரம்பித்து, திரும்ப வந்து செருப்பைப்போட்டு போகலாம்னு தோணாமல் அப்படியே நடந்து, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைன்னு எப்படியோ நடந்தது மட்டுமில்லாமல், ‘தாயே நல்லவேள நீ வரல, வந்திருந்தா உன்னை சமாளிக்கத்தான் கஷ்டப்பட்டிருப்பேன்’ னு சொன்னப்ப, ‘ம்ம்ம்… ஒரு மனுஷன எந்தளவு நாம டார்ச்சர் பண்றோம் ‘னு புரிஞ்சி, பாவமா இருந்துச்சி.
இப்படி, நடக்க முடியாமல் அவதிப்பட்டதில் ஆரம்பித்து, இடுமுடி இல்லாமல் 18 படியில் ஏற அனுமதியில்லாமல், பின் பக்கமாக தரிசனத்திற்கு அனுப்பிய வேறு வழியே சென்று கூட்டமில்லாததால் நன்றாகவே தரிசனம் செய்ததாகவும், திரும்ப ஒரு முறை எனக்காகவும் நவீனுக்காகவும் சென்று வேண்டிக்கொண்டு வந்ததாகவும் சொன்னார். அந்தக்கோயிலுக்கு போகனும்னு நினைக்காதவருக்கு இரண்டுமுறை தரிசனமும், எப்பவும் அங்க போகனும்னு நினைச்சிக்கிட்டு இருந்த எனக்கு மலையேறும் சந்தர்ப்பம் கிடைக்காததும் தான் வாழ்க்கை & விதி. அவரின் கண்ணால் கடவுளைக் கண்ட திருப்தி மட்டுமே.
மேலேயே நல்ல சாப்பாடு விடுதிகள் இருக்க, மதிய உணவை சாப்பிட்டுவிட்டு, பஞ்சாமிர்தம் வாங்கிக்கொண்டு இறங்கிவிட்டார். இருவரும் கணபதி கோயிலைவிட்டு கிளம்பும் போது, ‘இன்னொரு முறை பம்பையில் குளிக்கலாமா? ‘ என மெதுவாக கேட்டேன். நான் எதிர்பாராமல், உடனேயே ‘சரி’ ன்னு சொல்ல என் மகிழ்ச்சிக்கு அளவேயில்ல. இன்னொருமுறை ஆசைத்தீர குளித்துவிட்டு, பசியோடு நானிருந்ததால், டீ சாப்பிட்டு பம்பையை விட்டு செல்ல மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பி ‘நிலக்கல்’ வந்தோம்., அங்கு ஒரு உணவு விடுதியில் அப்பம் கடலை சாப்பிட்டுவிட்டு, ஆலப்புழைக்கு புறப்படும் போது மாலை 5.00 மணி இருக்கும்.
ஆலப்புழா வந்தடையும் போது 7.30-8.00 மணி இருக்கும். படகு சவாரி செய்யுமிடத்திற்கு அருகில், இணையத்தின் மூலம் பதிவு செய்திருந்த விடுதி அறையை அடைந்து, இரவு உணவை முடித்துவிட்டு, தூங்கினோம்
அடுத்தநாள் விடிந்தபோது ஓணம் பண்டிகை. ஆங்காங்கே பூக்கோலங்கள் வரவேற்றன. சைவ உணவகம் தேடி சாலையில் நடந்தபோது, படகு சவாரிக்கு ஆள் சேர்க்க படகு தரகர்கள் பின்னாலேயே வந்து தொந்தரவு செய்தனர். எல்லோரும் சொல்லும் கட்டணத்தை கவனித்துக்கொண்டே, வருகிறோம்னு சொல்லிட்டு உணவு விடுதிக்குள் சென்று காலை சிற்றுண்டி முடித்துவிட்டு திரும்புகையில், திரும்பவும் வந்தனர். முடிந்தளவு பேரம் பேசி ஒருவருக்கு ரூ.400/- ன்னு, பெரிய படகு கிடைத்தது சீசன் இல்லாததால் இருவர் மட்டுமே இருந்தோம். படுத்தவாரே வேடிக்கைப்பார்த்துக்கொண்டும் பயணம் செய்யலாம்.
படகு செல்ல செல்ல தண்ணீருக்கு நடுவில் மக்கள் வசிக்கும் இடம் வர ஆரம்பித்தது. ஒருப்பக்கம் ஆறு, மற்றொரு பக்கம் விவசாய நிலம். நடுவில் வீடுகள். சில இடங்களில் இரண்டு பக்கமும் தண்ணீர். உடனே எனக்கு அங்கிருக்கும் வீடுகளின் கழிப்பறை கழிவுகள் எப்படி வெளியேற்றப்படுகின்றன என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை. படகு தான் பிரதானப் போக்குவரத்து வாகனம், படகில் தான் இவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வரவேண்டும். அதே சமயம், ஒற்றையடி பாதையில் இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்கிறார்கள். காய்கரி, வீட்டுக்கு தேவையான பொருட்களை சிறு சிறு படகுகளில் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
இந்த ஆற்றுத்தண்ணீரில் தான் குளிக்கி- றார்கள், துணித்துவைக்கிறார்கள், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் படித்துரை இருக்கிறது. பயணிகள் படகுகள் நிற்க மட்டும் “Jetty” என்று சொல்லப்படும் படகு நிறுத்தம் இருக்கிறது. பேரூந்து நிறுத்தம் போல, அங்கு மக்கள் வந்து நின்று படகில் ஏறிச்செல்கின்றனர்
நெடுஞ்சாலையில் இருக்கும் மோட்டல்' கள் போல, படகுகள், சுற்றுளா பயணி- களுக்காக அமைக்கப்பட்ட உணவு விடுதிகளில் அரை மணி நேரம் நிறுத்துகின்றனர். உள்ளூர் மக்களையும் இங்கே பார்க்கமுடிந்தது. எல்லாவித அசைவ உணவுகளும் கிடைக்கின்றன. குறிப்பாக கோழி, ஆடு, மீன், இறால் அதிகம். படகோட்டி, உணவு விடுதி உரிமையாளரிடம் இதற்காக பணம் பெருகிறார்.
காலை 9 மணி வாக்கில் கிளம்பி, மதியம் 12 மணி வாக்கில் வந்து சேர்ந்தோம். கிளம்பும் போதே ‘போய் வர 3மணி நேரம் ஆகும், நேரம் பாத்துக்கோங்க’ன்னு சொல்லிட்டுத்தான் கிளம்பறாங்க.
அதே சாலையில் விடுதி இருந்ததால், நடந்தே நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து, அறையை காலிசெய்துவிட்டு, கூகுல் மேப்பில் அச்சன் கோயிலை தேடி வழியை மொபைலில் வைத்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்பும் போது மணி மதியம் 12.30 இருக்கும்.
இந்த் அச்சன் கோயிலுக்கு செல்வது எங்களின் பயணத்திட்டத்தில் இல்லை. போகின்ற வழியில் இருந்தால் போகலாம்னு இரவு பேசிக்கொண்டு இருக்கும் போது சொன்னேன். உடனே அதை திட்டத்தில் சேர்த்துவிட்டார் தன் கடமையிலிருந்து சற்றும் விலகாத என் வூட்டுக்காரர்.
சென்ற இரவில் பார்க்க முடியாத ஆலப்புழாவின் அழகை இப்போது ரசித்துக்கொண்டே, எங்களின் பயணம் அச்சன் கோயிலை நோக்கி தொடர்ந்தது…