எண்கண் முருகன் கோயில்

 திருவாரூரிலிருந்து குடவாசல் தாலுகாவில் ஒரு சின்ன கிராமம் எண்கண், இங்கே மிக பிரபலமான எண்கண் முருகன் கோயில் அமைந்துள்ளது. இது சதிருவாரூர் பெரியநாயகி உடனுறையும் பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள சிவன் கோயில், இதில் முருகனுக்கு தனிசிறப்புண்டு, தவிர முருகன் கோயில் என்றே சொல்லப்பட்டு வருகிறது.இங்கு முருகன் சுப்ரமணியசுவாமியாக அருள் பாலிக்கிறார்.

மிக சிறப்பாக கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலின் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் என் கவனத்தை கவர்ந்தன.  பெருமாளின் சில அவதாரங்களை பார்க்கமுடிந்தது. கிருஷ்ணரின் லீலைகளிலை வடித்து, நிர்வாண பெண் சிற்பங்கள்  அவரைசுற்றி வடிக்கப்பட்டிருந்தன. காளியின் சில அவதாரங்களை காணமுடிந்தது. 

கோபுரங்களை புகைப்படம் பிடித்துக்கொண்டிருந்த போதே, கையும் களவுமாக பிடிபட்டேன். அர்ச்சகர் ஒருவர், 'அம்மா புகைப்படம் எடுக்காதீங்க, கோயிலை சுற்றி கேமரா இருக்கு, உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்லை, எங்கள் வேலைக்கு தான் பிரச்சனை' என்றார். சரி நம்மால் அவருக்கு ஏன் பிரச்சனையென பாதியில் நிறுத்திக்கொண்டேன். 

கோயிலின் வரலாறு -கூகுள் புண்ணியத்தில் தெரிந்துக்கொண்டேன். நீங்களும் அப்படியே தெரிந்துக்கொள்ளுங்கள், தகவலை இங்கே பகிர்வது சரியான்னு தெரியல.

இன்றிலிருந்து நவராத்திரி திருவிழா ஆரம்பிப்பதால், மாமி ஒருவர் அற்புதமாக உற்சவர் சிலைகள் வைக்கப்படும் பல்லக்குக்கு எதிரில், பச்சரிசி மாவில் இழைக்கோலம் வரைந்துக்கொண்டிருந்தார், அவரின் அனுமதியோடு புகைப்படம் எடுத்து அவரிடமும் காட்டினேன். சந்தோஷப்பட்டதோடு, கொஞ்சம் காய்ந்தால் இன்னும் பளீர்னு தெரியும்...னு லேசாக ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

அழகான சிற்பங்களைக்கொண்ட கோயில் பரமாரிப்பு போதவில்லை. மூலவரை வெகு தொலைவிலிருந்து பார்க்க நேரிட்டது, அருகே செல்ல நினைத்தாலும் முடியவில்லை, கும்மிருட்டு, பக்தர்கள் சென்றுவர அனுமதி இல்லை போலவே. கோயில் தேரின் பாகங்கள் தனித்தனியாக பிரித்துப்போடப்பட்டும் குவிந்து, பாழடைந்து கிடந்தது.  கோயிலுக்கு செல்லும் வழியிலும் சுற்றிலும் மதுபாட்டில்கள் கிடந்தன. அன்னதானம் செய்யும் மண்டபத்தின் கதவு சன்னல்கள் சிதலமடைந்து இருந்தது, ஏன் கோபுர சிற்பங்களும் பல உடைந்திருந்தன, உடைந்துக்கொண்டும் இருக்கின்றன. ஊர் மக்கள் ஒன்று கூடி அரசிடம் முறையிட்டு இதையெல்லாம் சரிசெய்யலாம்.  

கோயிலையும் சுற்றியிருக்கும் இடங்களையும் சரியாக பராமரிக்க தமிழக அறநிலையத்துறை தகுந்த நடவடிக்கை எடுத்தால் இப்படியான கோயில்களையும் அதன் அற்புதமான சிற்பங்கங்களும் மக்களுக்கு காணக்கிடைக்கும்.

கும்பகோணம்-திருவாரூர், தஞ்சாவூர்-திருவாரூர் வழியில் பயணம் செய்ய நேர்ந்தால், எண்கண் முருகனை தரிசித்துவிட்டு வாருங்கள்.

தரிசன நேரம்: காலை 6.30AM – 11.00 AM மாலை 4.00PM – 8.30 P.M

குடும்ப அரசியல் - ஒரு பார்வை.

பொதுவாக காங்கரஸ் & திமுக போன்ற கட்சிகளின் மேல் வைக்கப்படும் முதன்மையான குற்றச்சாட்டு, குடும்ப அரசியல், கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைப்பத்தவர்களுக்கு முக்கிய பதவிகள் கிடைப்பதில்லை.. ஒரே குடும்பமே அரசியல் ஆதாயம் தேடிக்கொள்கிறது, கொள்ளையடிக்கிறது... இன்னும் பல...

பல சமயம் நினைத்துப்பார்த்ததுண்டு, ஒரு வேளை எம்ஜிஆர்’க்கு ஒரு மகன்/மகள் இருந்திருந்தால் ஜெயலலிதா அம்மையார் வந்திருப்பாரா.…. மாட்டார் தானே ?

இங்கே குடும்ப அரசியல் என்பது, பதிவிக்காகவோ பணத்துக்காகவோ வருவதில்லை. ஒரு தனி மனிதன், ஒரு கட்சி ஆரம்பித்து அதை எப்பாடுப்பட்டாவது (இதில் நல்லது கெட்டது எல்லாமே அடக்கம்) எல்லாவற்றையும் கடந்து, அனுசரித்து, சாணக்கியத்தனம் செய்து,  எதிரிகளை சம்பாதித்து படிப்படியாக கட்சியை உயர்த்தி, மக்களின் நன்மதிப்பை பெற்று, மிகப்பெரிய நம்பிக்கை சக்தியாக (அக்கட்சியை சார்ந்தவர்களுக்கு) மாற்றி, அந்தக்கட்ச்சிக்காண எல்லாவித நல்லது கெட்டதற்கும் பொறுப்பேற்று.. வளர்த்த, வளர்ந்த ஒரு ஆலமரம் போன்ற ஒரு கட்சியை.. வேற்று கையில் கொடுக்கும் போது அது கொஞ்சம் கொஞ்சமாக சுயலாபத்திற்காக பிய்த்து எறியப்படும் தானே…?? எத்தனையோ பேர் கட்சித்தொடங்குகின்றனர்… எல்லோராலும் அதை கச்சிதமாக கட்டுக்கோப்புக் குறையாமல் வளர்க்க முடிகிறதா? …இங்க சரத்குமாரோ, டி.ராஜேந்தரோ நினைவு வந்தால்….

பல லட்சம் தொண்டர்கள் யாரோ ஒரு தலைவரின் மேல் கொண்ட நம்பிக்கைதான் ஒரு கட்சி, அதை எளிதாக உடையவிட அத்தலைவரை சுற்றி இருக்கும் இரத்த சம்பந்த உறவுகள் விட்டுவிடுவார்களா? அல்லது பல லட்சம் பேர் கொண்ட கட்சியில், பல நூறு கட்சி பதவிகளில் இருக்கும் யாரோ ஒருவரை தேர்ந்தெடுத்து கட்சியை கையில் கொடுத்தால்.. அது எத்தனை முட்டாள் தனமான முடிவாக இருக்கும். தேர்ந்தெடுக்கும் ஒருவர் மட்டுமா அந்த கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்?  உட்பூசல், கட்சி சார்ந்தவர்களுக்கு, சார்ந்தவர்களின் சாதி மக்களுக்கும், சார்ந்தவர்களின் சொந்த பந்தகளுக்கு ஆத்திரமும் ஆவேசமும் வராதா? இவற்றையெல்லாம் யோசித்தே  ஆரம்பித்தவரின் குடும்பமே கட்சி உடையாமல் இருக்க அதிகாரத்தை தன் கையிலேயே வைத்திருக்கிறது.  தலைவரின் குடும்பம் வாரிசு எனும் வரும் போது, கட்சியை சார்ந்தோர்க்கிடையே பெரிதாக பூசல் வாராது.. அது பிடிக்காவிட்டாலும், உரிமை, கட்சியின் பாதுகாப்பு கருதி உடன்பட்டுவிடுவார்கள். எனக்குப்பிறகு என் குடும்பம் வராது என்று சொன்ன எத்தனையோ பேர், தன் குடும்பத்தினரையே வாரிசாக கொண்டுவந்துள்ளனர்…

இந்திய வரலாற்றை எடுத்துக்கொள்ளுங்கள், தமிழர்களை ஆண்ட மன்னர்கள் அனைவருமே குடும்ப வழிவழியாக வந்தவர்களே.. சோழர், சேரர், பாண்டியர் னு.. அரசருக்கு பின் அவரின் மகன், மகள் தான் அரசனைக்கு வருவார்கள். யாருமே இல்லையென்றால் அரசியார், இல்லையென்றால் அண்ணன் தம்பி ன்னு யாரோ அரசரின் குடும்பத்தை சார்ந்தவர்களே வருவர்.  அமைச்சரவையில் இருக்கும் யாரோ ஒருவருக்கு அரசனென்ற பட்டத்தை சூட்டமாட்டார்கள். இதுவேதான் உலகெங்கிலும் வழக்கம்.

புதிதாக ஆரம்பிக்கும் ஒரு கம்பெனியை எடுத்துக்கொள்ளுங்கள்.. அது வளர வளர , அதன் லாபத்தில் தன்னையும் சார்ந்தவங்களையும் மேலும் மேலும் வளர்க்கப்பார்ப்பகளே ஒழிய அதில் வேலைசெய்யும் யாரோ ஒருவருக்கு கம்பெனி பொறுப்புகளை க் கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்க மாட்டார்கள்.

ஏன், ஒன்னுத்துக்கும் பொறாத வாட்சப் குரூப் ஆரம்பிக்கறவங்களே , ஆரம்பிச்சவர் கண்டதை அனுப்பாதீங்க, பேசாதீங்க ன்னு ஆயிரத்தெட்டு சட்டம் போடுவாரு. ஏன்னா அவங்க தலைமை.. அவங்க ஆரம்பிச்சது.. அதில் யாருக்கும் அதிகாரமில்லை என்பதை அப்பப்ப சுட்டிக்காட்டிட்டே இருப்பாங்க. அது அன்பான வேண்டுகோளாக இருக்கலாம். நமக்கு பிடித்தால் இருக்கலாம் இல்லைன்னா வெளியில் வந்து வேறொரு குரூப் ஆரம்பிக்கலாம்.. ஆனால் அந்த குரூப் தலைமைக்கிட்ட சண்டைப்போட்டு , நீ போடா நான் தான் தலைமை தாங்குவேன்னு சொல்ல முடியுமா?? அப்படிக் கேட்க முடியாதுன்னு ஒரு அடிப்படை புரிதல் வேணுமில்லையா.. .. தம்மாத்தூண்டு வாட்சப் குரூப் க்கே இப்படின்னா.. ஆண்டாண்டு காலமாக பகல் இரவு பார்க்காமல் ஒரு வெறித்தனத்தோடு உருவாக்கி வளர்த்த கட்சியை ..யாரையாவது நம்பிக்கொடுக்க முடியுமா? அப்படியே கொடுத்தால் தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்குமென உத்திரவாதம் உண்டா? நீயா நானா ன்னு அடித்துக்கொள்ள மாட்டார்களா?

குடும்பத்தை சார்ந்தவர் என்றால், அதற்குப்பட்ட கஷ்ட நஷ்டங்களை…ஏன் அதில் வரும் வருமானத்தையும் சேர்த்துக்கொள்ளலாம், வருமானத்தையும் பல வருடங்களாக ப்பார்த்தவர்கள், எதையுமே பகிர்ந்துக்கொடுக்கும் மனது இருக்குமே ஒழியே மொத்தத்தையும் கொடுத்துவிட்டு ஓட்டாண்டியாகி நடு ரோட்டில் நிற்கும் முடிவை எடுக்கும் முட்டாளாக இருக்கமாட்டார்கள்.

அரசியில் கட்சி என்பதும் ஒரு கம்பெனியே....என்ன வருமானத்தோடு, பொது சேவையும், நாட்டு நலன்களையும் பார்க்கவேண்டும். பார்க்கின்றமாதிரி நடிக்கவாவது செய்ய வேண்டும். கேப்டன் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார்… நல்ல மனிதர் என்பது எல்லோருக்கும் தெரியும்.. அவரின் உடல்நிலை மோசமானபோது, அவரின் குடும்பத்தினர் தானே முன்னின்று நடத்தினர், அவரின் குடும்பம் கையில் எடுத்தபோதே, அந்த கட்சியின் நிலை என்னவென்பதை அனைவரும் அறிவோம், மாறாக அந்த பொறுப்பை அக்கட்சியை சார்ந்த ஒருவரிடம் ஒப்படைத்திருந்தால்? யோசியுங்கள்.. விஜய்காந்த் என்னவானார் என்று கேள்விக்கேட்டுக்கொண்டல்லவா இருந்திருப்போம்.

பணத்தைத்தாண்டி கட்சிக்கட்டுகோப்பாக இருக்க வேண்டுமென்பதில் தான், ஏதோ ஒரு நோக்கத்தோடு ஆரம்பித்த அந்த தலைமைக்கு தோணும். எப்படியோ போகட்டும், யாரோ நடத்தட்டும், யாரோ பொறுப்பை எடுத்துக்கொள்ளட்டும் என்று எந்த நல்ல தலைவனும் நினைக்க மாட்டான். அப்படி நினைத்தால் அவன் தலைவனுமில்லை.

ஏன் இப்ப இருக்கும் அதிமுக வில் குடும்ப அரசியில் நடக்கலையா, பாஜக வில் குடும்ப அரசியலே இல்லையா.. அதென்ன எப்பவும் காங்கரஸ், திமுக வை மட்டுமே வண்டியில் ஏத்தறது…. எல்லாக்கட்சிகளிலும் குடும்ப அரசியல் தான் நடக்குது.…… மூக்கை இப்படிக்கா மட்டும் நுழைக்காம எல்லா இடத்திலும் நுழைத்துப்பார்த்து வண்டியில் ஏத்தலாமே.…

இது எந்தக்கட்சிக்கும் வக்காளத்தில்ல…எல்லாக்கட்சியிலும் எல்லாமும் இருக்கு… அதில் குறைந்தபட்ச ஆபத்து எதிலிருக்கு… ஓரளவு நிம்மதியாக இருக்க முடியுமான்னு பாத்துத்தான் முடிவு செய்யனுமே ஒழிய…. மொக்கைக்காரணங்களை சொல்லி நம்மை அதிபாதளத்தில் தள்ளுவார்கள் என்று தெரிந்தும் போய் விழுவது…உங்களோடு சேர்த்து எல்லோரையும் படுகுழியில் தள்ளிவிடும்…

அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் கம்பெனிகள் தான்… யாரும் இங்கே தியாகிகள் இல்லை….

அணில் குட்டி ; வொய்..அம்மணி வாலின்டியரா டையருக்கு அடியல் படுத்திங்?  எனக்கே தெரியாம எதாது கட்சியில் சேர்ந்து இருப்பாங்களோ... ?? ம்ம்ம்...அம்மணிய வேவு பாக்கனும்......

பீட்டர் தாத்ஸ் : A political party cannot be all things to all people. It must represent certain fundamental beliefs which must not be compromised to political expediency, or simply to swell its numbers. -Ronald Reagan

நண்பர்

அது ஒரு மாலை வேளை, ஒரு கூட்டுக்குடும்பத்து வீடு போல சத்தத்தோடு இருக்கிறது. ஆனால் என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை.

ஒரு ஹால், வராண்டா, வாசல், வாசலுக்கும் தெருவிற்கும் இடையே நடக்க சிமெண்ட்டால் போடப்பட்ட பாதை, பாதையின் இருப்பக்கமும் தோட்டம் என ஒரு சாதாரண விட்டிற்கு தேவையான அனைத்தும் கண்ணில் பட்டது.

ஏதோ கை வேலையாக இருக்கிறேன்.. யாரோ வரும் சத்தம் கேட்டு வாசலை எட்டிப்பார்க்கிறேன். நண்பரின் நண்பர் வருகிறார், எனக்கு அவரைத்தெரியும்….ஆனால் எனக்கு நண்பரில்லை, நான் பேசியதில்லை.

வந்த வேகத்தில், சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வரான் பாருங்க, சாப்பிட எதாது கொடுத்து தூங்க வைங்க’ ன்னு சொல்றார், அவர் வழியை மறைப்பதால் , எட்டிப்பார்க்கிறேன்.

ஒரு கருப்பு நிற நாய்.. பழுப்பு நிறத்தில் குட்டி நாய் இரண்டும் கழுத்தில் பெல்ட்டில் கட்டி, சங்கிலி கோர்க்கப்பட்டு அந்த சங்கிலி சங்கரின் கையில் இருக்க நடந்து வருகிறார். நடையில் விருவிருப்பு இல்லை…எதோ ஒரு சோம்பல், தளர்ச்சி தெரிகிறது. முகமும் வாட்டமாய்...

என்னிடம் பேசிய நண்பர், நான் பார்க்க வழிவிட்டு வீட்டுனுள் சென்றுவிடுகிறார்.

நான் சங்கரை பார்க்க அவரும் என்னைப்பார்க்கிறார். ஏதும் பேசவில்லை.. ஆனால் கண்கள் மட்டும் பேசிக்கொள்கின்றன.. நெருங்கும் போது, என் கையில் நாய்களை கட்டிய சையினை கொடுத்துவிட்டு, வராண்டாவில் போடப்பட்டிருக்கும் ஒரு நாற்காலியில் போய் அக்காடான்னு உட்கார்ந்துக்கொள்கிறார். நாயை நான் கொண்டுப்போய் கட்ட வேண்டும் - இதுதான் கண்ணால் பேசி புரிந்துக்கொண்டது….

அவர் சென்று உட்காருவதை ப்பார்த்தவாரே நானும் நாய்களை கொண்டுக்கட்டுகிறேன். என் கவனம் முழுக்க நண்பரின் மேல் இருக்கிறது..ஏன் என்ன ஆச்சி,முன் வந்த இவரின் இன்னொரு நண்பருக்கு சொல்லியிருக்கலாம். எனக்கு எதும் தெரியவில்லை, அவர் சொல்லவும் மாட்டார் னு நான் கேட்கவும் நினைக்கல.

ஆனால் ஏதோ சரியில்லை எனமட்டும் தெரிந்தது.

கையைக்கழுவிக்கொண்டு  (கொரோனா எஃபெக்ட் மட்டுமில்ல, நாயை கட்டியதாலும்) இவரை நெருங்கி, 'டீ வேணுமா இல்ல் காஃபியா ' ன்னு கேக்கறேன்.

டீ … என்று சொல்லும் போதும் இருவரின் கண்களும் சந்திக்கின்றன.  எனக்கு புரியுது, அவரும் எனக்குப்புரியுமென்று நினைப்பதை உணர்கிறேன்.

சமையலறை சென்று இரண்டு அடுப்பு பற்ற வைத்து, ஒன்னில் டீ, இன்னொன்னில் காஃபி செய்து , இரண்டு கப்புகளில் ஒன்றில் டீ, ஒன்றில் காப்பின்னு எடுத்துட்டுப் போய் டீ கப்பை தரேன்.

கப்பை வாங்கி எதிரில் டீபாயில் வைத்துவிட்டி, என்னைப்பார்த்து, 'எனக்கு காஃபி வேணும்' என்கிறார். இதைத்தான் கண்ணில் பார்த்துட்டு போனேனேன்னு மையிண்ட் வாய்ஸில் நினைத்து இன்னொரு கையில் இருந்த கப்பை கொடுக்கிறேன்.

ஆச்சிரியப்படல… வாங்கிக்குடிக்கிறார்.  ஆனால் மனதில் இருக்கும் அழுத்தம் முகத்தில் தெரிகிறது. அவரின் நண்பர் சொல்லியது போல, சங்கருக்கு தேவை நல்ல தூக்கம்னு எனக்கும் புரிந்தது.

காஃபி குடிக்கும் வரை எதிரில் உட்கார்ந்து அவர் வேணாம் என்று வைத்த டீ யை நான் குடிக்கிறேன்.

முதல் இரண்டு சீனில் இருந்த அவரின் இன்னொரு நண்பர் என்ன ஆனார்னு தெரியல.. அவர் திரும்ப வரல..

காஃபி கோப்பையை வைத்ததும்… படுக்கறீங்களா…. ன்னு கேக்கறேன்.

அதுக்கும் பதில் இல்லை, எழுந்து படுக்கை அறை நோக்கி  செல்கிறார்.  நான் தொடர்வதை உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

அறைக்குள் செல்லும் வரை பின்னால் செல்கிறேன்..  உள்ளே சென்றதும் அவரை பக்கவாட்டிலிருந்து அன்போடு அணைத்து, அந்த அணைப்பில் எதுவானாலும் பாத்துக்கலாம், நாங்கள் இருக்கிறோம் னு சொல்லாமல் சொல்ல, அழைத்து சென்று படுக்க வைத்து,ஏசியை ஆன் செய்து, போர்வை போத்திவிட்டு, சன்னல் ஸ்கீர்ன் எல்லாம் மூடி இருட்டாக இருக்கிறதா என ஊர்ஜிதம் செய்துக்கொண்டு , கதவை சாத்திக்கொண்டு வெளிவருகிறேன்.

நாயில் ஒன்று குலைக்கும் சத்தம் கேட்கிறது.. எழுந்துக்கொண்டேன்…

 

நண்பரை கடைசியாக நேரில் சந்தித்தது 2009 ல்.

அதன் பிறகு இப்பவும் தொடர்பில் இருந்தாலும் மெயில் இல்லனா வாட்சப்..அதுவும் தொடர்ந்து இல்ல. குறிப்பா இந்த கனவு வந்த அன்றோ முன்னமோ அவரிடம் நான் எதும் பேசல..

அவங்க வீட்டில் நாய் இருக்குன்னு எனக்கு தெரியாது. ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டு ரீகால் செய்தால், ஆர்குட் டில் அவர் ஃபோட்டோ பகிர்ந்ததாக நினைவு..ஆனால் அதுவும் சரியான்னு எனக்கு நினைவில்லை.

கனவுக்கு பிறகு தொடர்பு கொண்டு கேட்டேன்.. ஆமாம் நாய் 1 வீட்டில் இருக்குன்னு சொன்னாரு.

ஆனால் கனவில் வந்த வீடு….நான் இருக்குமிடம் போல இருந்தது.

அவருக்கு முன்னால் வந்த நண்பரையும் தெரியும்..நான் பேசியதேயில்லை.

இதெல்லாம் எந்தமாதிரியான நினைவுகளில் சேர்த்திக்கை என்பது தெரியவில்லை…

எப்படியோ.. நண்பரின் நலம் விசாரித்து…நலமுடன் இருக்கிறார் என்று பதில் கிடைத்ததும் நிம்மதியாய் இருந்தது.

 

கனவே.... தயவுசெய்து வெள்ளி சனிக் கிழமைகளில் வந்து தொலைக்கவும், எனக்கு உன்னை நினைவு வச்சி வார இறுதியில் எழுதமுடியல.. ரீகால் செய்துட்டே இருக்க வேண்டியிருக்கு….தயவுக்காட்டு… அடுத்த நாள் நினைவு படுத்தி எழுதறதே தலைவலி, இதுல இப்படி 2-3 நாள் நினைவு வச்சிக்கறது இன்னும் பெரிய  தலைவலியா இருக்குது..

----------------------------

அணில்குட்டி ; அம்மணி, நண்பரிடம் கனவு கண்டேன் னு சொன்னவுடனே அவரு சிரிப்பு அடக்க முடியாம சிரிச்சாரு..இதுல அதை எழுதி வேற வைக்கறாங்க...  என்னத்த பெரிசா இதுல இருக்குன்னு எழுதி வைக்கறாங்கன்னு தான் தெரியல.

பீட்டர் தாத்ஸ்; I wonder how I can talk through eyes in my dreams.

வனிதா விஜயகுமார் செய்தது சரியா?

சரியா தவறான்னு வீடியோவில் சொல்லியிருக்கேன்.. ..


நன்றி.

15 நாட்களில் தொப்பையை குறைக்கலாம்

குறைந்த நேரத்தில் எளிமையாக ஒரு விசயத்தை பதிவிட முடியுது.  எழுத உட்கார்ந்தால் நேரம் அதிகம் எடுக்குது, எழுத்து பாதியில் விடறது, அப்புறம் வேலை பளு காரணமாக தொடராமல் போவதுன்னு....இல்லாமல் இனிமே யூடியூப் பதிவாகவே செய்யலாம்னு நினைச்சி ஆரம்பித்திருக்கிறேன். பார்க்கலாம் இது எப்படி போகுதுன்னு...

வீடியோ பாருங்க... கருத்து சொல்லுங்க.. சந்தேகம் இருந்தால் இங்க சொன்னாலும் சரி, யூடியூபில் சொன்னாலும் சரி...







நன்றி.

ஆன்லைன் க்ளாஸ் அட்ராசிட்டீஸ்

தலைப்பே  தங்கிலீஷில் கேவலமா இருக்குல்ல. வேணும்னா கொரோனா கால கொடுமைகள்/ கொடூரங்கள் னு மாத்தி படிச்சிக்கோங்க.

யோகா முதுகலை முதலாமாண்டு வகுப்புகள் ஆன்லைனில் ஆரம்பமாகி ஒரு வாரம் ஆச்சி.

இருங்க இருங்க…ஒரே ஒரு ரெக்குவஸ்டு, இந்த பதிவ FB யில் வரும் kellyskomedy ப்க்கத்தில் காமெடி வீடியோ பதிவுகள் செய்யும் பெண்ணின் குரல்ல படிங்க… அப்பத்தான் நல்லாயிருக்கும்.. இதையும் அப்படியே படிங்க..

நல்ல நாளிலேயே நாம வகுப்பில் நாயகம். முதல் பெஞ்சில் உக்காந்தாலும் சரி நடுவில் பின்னாடின்னு எங்க உக்காந்தாலும் ஆசிரியர் கூப்பிட்டு ஒன்னு திட்டுவாங்க.. அடியும் வாங்கியிருக்கேன். அடின்னா..என் இம்சை தாங்கமுடியாம சாக்பீஸ் தூக்கி அடிப்பாங்க.. சுர்ர்ன்னு வலிக்கும். என்னாலேயே சாக்பீஸ் டப்பா சீக்கிரம் தீந்துடும், இதுல க்ளாஸ் பெருக்கரவங்கக்கிட்ட வேற பாட்டு விழும். என்ன இம்சை கொடுத்தாலும் நல்ல மார்க் வாங்கிடுவேன். அதனால் என்னை பொறுத்துட்டு போகிற ஆசிரியர்களே அதிகம். என்னைக்கண்டாலே கடுப்பாகும் ஆசிரியர்களும் உண்டு தான்.

இந்த ஆன்லைன் வகுப்புகள் எனக்கு ரொம்ப ஈசியாப்போச்சி. திருவாரூரில் இணைய சேவை கிடைப்பதே பெருசு, இதுல அதன் வேகத்தைப்பத்தி சொல்லி என் வயித்தெரிச்சல நானே கொட்டிக்க விரும்பல. இதனால Zoom meeting ல் வீடியோ ஆன் செய்வதேயில்ல..செய்தால் வர ஆடியோவும் போயிடும். 80+ மாணவர்கள். எல்லாருமே அநேகமாக 35+ லிருந்து கிட்டத்தட்ட 60 வயது வரை இருப்பாங்க போல..

வீட்டிலிருந்து ஆன்லைன் க்ளாஸ் வரதால..

  • தம்பதியர் சண்டை, இது கேக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.. நாம வகுப்பில் இருக்கோங்கற பிரஞ்ஞை இல்லை..மறந்துப்போயிடறாங்க போல..
  • அம்மாக்களை பிள்ளைகள் சரமாரியாக திட்டுதல்  (கவனிக்க இங்க மாணவி அம்மா)
  • ஆணாக இருந்தால், பிள்ளைகள் அவங்க முதுகில் மேல ஏறி கேமராக்குள் தலையைவிடும் பரிதாபங்கள்
  • யோகா செய்யும் போது அவங்க முதுகின் மேல குழந்தைகள் வந்து ஏறி உக்காந்துகுதுங்க.
  • அம்மாவோ அப்பாவோ வகுப்பில் இருக்கும் போது, பின்னாடி பல்விளக்கிட்டு, தலைசீவிட்டு, காபி குடிச்சிக்கிட்டு வந்து நிற்கும் பிள்ளைகள்
  • சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு காப்பிக்குடிக்கும் கணவர்
  • வீட்டினுள் சட்டையில்லாமல் சுற்றும் ஆண்கள் & தாத்தாக்கள்
  • நைட்டியோடு சுற்றும் பெண்கள் , அதும் சில சமயம் opposite lighting ல வந்து நிப்பாங்க… கடவுளே கடவுளே ன்னு இருக்கும்..
  • அப்பாக்களுக்கு வீடியோவை ஆன் செய்துத்தரும் வயது வந்த பெண் குழந்தைகள்
  • அம்மா ஆடியோவை மியூட்டில் வச்சியிருந்தால்..ஓடிவந்து அன்மியூட் செய்வதும், அன்மியூட் டில் இருந்தால்..மியூட்டில் வைத்துவிட்டு ஓடும் வால் குட்டிகள்
  • இதையெல்லாம் விட .. சரியாக கேமராவை வைக்கத்தெரியாமல்..வீட்டின் பரன் மேல் இருக்கும் பொருட்கள் நமக்கு காணக்கிடைக்க செய்யும் அப்பாவிகள்..
  • பெயருக்கு பதிலாக ரெட்மி, ஓப்போ, ஈமெயில் ஐடி, நம்பர்கள் என ப்ரொபைல் பெயரில் வேற காமெடிகள்..
  • சில பெண்கள் வகுப்புக்கே நைட்டியில் வந்து உக்காந்து இருக்காங்க.. :(
  • இன்னும் சிலர் பரிதாபத்துக்கு உரியவர்கள். சின்னக்குழந்தைகளுக்கு எதாது விளையாடக்கொடுத்துவிட்டு.. பின்னால் அவ்வப்போது அவங்களை திரும்பி திரும்பி பாத்துட்டு இருப்பாங்க..

இத்தனையும் பொருத்துக்கொண்டு ஆசிரியர் கவனம் சிதறாமல் பாடமெடுக்கும் போது..

சார்…. ஒன்னும் கேக்கல..

சார் நீங்க சரியா தெரியல..

சார்.. ஆடியோ இல்ல..

சார்… கொர கொரன்னு கேக்குது

சார் எல்லாரும் பேசறாங்க..

Sir, we don’t know tamil, please teach us in English.

சார்…சார் சார்… ன்னு ஒரே chat messages ..இல்லனா எல்லாரும் நடு நடுவே குரல் கொடுக்கறது…

அய்யோ பாவம் ஆசிரியர்கள் நிலைமை…

சரி.. நம்ம கதைக்கு வருவோம்.….. முன்னமே சொன்னமாதிரி நம்ம இணைய சேவையின் வேகத்திற்கு எனக்கு வீடியோ எல்லாம் சரிவரல.. ஒன்லி ஆடியோ.. அதும் என் ஆடியோ மியூட் ல வச்சிப்பேன்.

முதல் நாள்..  அறிமுக வகுப்பு முடிந்தவுடன்.. பேஷியல் கிட் எடுத்து.. பொறுப்பா பேஷியல் செய்துக்கிட்டேன். கொரோனாவினால் பார்லர் போக முடியலல்ல.. வகுப்புக்கு வகுப்புமாச்சி.. என் வேலையும் முடிசின்சி.

ஆன் லைன்ல வச்சிட்டு. சார் வரத்துக்குள்ள ஓடிப்போய் குளிச்சிட்டு வரது.. சாதம் அடுப்பில் வச்சிட்டு வந்து அப்பப்ப போய் பார்த்து வடிக்கறது. காலை உணவு சாப்பிடறது.. காய்ந்த துணிகளை மடிச்சி வைக்கறது.. உக்காந்தே இருக்க முடியாம கொஞ்சம் நடந்தபடியே வகுப்பை கவனிக்கறது.. நடுவுல் வாட்சப்பில் யாராச்சும் பேசினா அவங்களுக்கு பொறுப்பா பதில் சொல்றது.

வீடியோ மட்டும் இருந்திருந்தால்….இந்த அட்டூழியங்கள் சாத்தியப்படுமா ? மெதுவான இணைய சேவைக்கு நன்னி..

ப்ராக்டிகல் வகுப்பில் மட்டும் சின்சியரா இருப்பேன். ஆனாலும்.. அவரு 6 முறை செய்ய சொன்னால் நான் பொறுமையா 3 முறை செய்வேன்.  ‘நேரம் இல்லைன்னு வேக வேகமா செய்துட்டு போறாரா.. இல்ல நிசமாவே யோகா இவ்ளோ வேகமா செய்யலாமான்னு அவர்ட்ட கேக்கனும்..’ விடப்பிடாது.

இதைத்தவிர வகுப்பு ஆரம்பிக்கும் முன்ன நம்ம வாயிதான் சும்மா இருக்காதே..சமூக சேவை செய்ய..'அனைவருக்கும் வணக்கம், நான் கவிதா பேசுகிறேன்..என்னை நீங்க பாக்க முடியாது ஆனா கேக்கலாம்.. னு ஆரம்பிச்சி…தமிழ்/ஆங்கிலம் இரண்டிலும் 'யாருக்காவது ஏதாது உதவி வேணும்னா என்னை கூச்சப்படாம கேளுங்கன்னு சொல்லப்போயி..

ஒரு அம்மா இன்னைக்கு ‘கவிதா மேடம் கவிதா மேடம்’ னு கூப்பிட்டு ஒரு 2 பத்திக்கு பேசி, கடைசியில் புக்ஸ் வேணும் னு கேட்டு முடிச்சாங்க.. அவங்க மேடம் னு கூப்பிட்டதால எனக்கு டவுட்டு.. என்னைத்தான் கூப்பிட்டாங்களான்னு தெரியல. கொஞ்சம் நேரம் சைலன்ட் மோட் ல இருந்தேன். அவங்களும் 'பதில் சொல்லல' ன்னு முனுகினது கேட்டது, வேற யாரும் பதில் சொல்லல.. அப்புறம் நானே போய்.. 'கவிதா பேசறேன்.. என் கிட்டவா கேட்டீங்க.'.ன்னு கேக்க… ஆமா மேடம் ஆமா மேடம் ன்னு ..ஆர்வமா பதில் சொல்ல.. முதல்ல இந்த மேடம் மேடம் னு கூப்பிடாதீங்க.. கவிதா ன்னு கூப்பிடுங்க.. ன்னு சொல்லிட்டு... புத்தகம் விசயம் பத்தி விபரம் தெரிந்தவுடனே உங்களுக்கு சொல்றேன்.. னு சொல்லிட்டு.. நம்மையெல்லாம் புக் பிரிண்ட் செய்து பல்கலைகழகத்துக்கு கொடுக்கும் ஏஜன்ட்டா இல்ல இந்தம்மா நெனச்சிருக்கு'ன்னு .. வடிவேலு மாதிரி..அவ்வ்வ்வ்வ்வ்.. மொமென்ட்.

ஆசிரியர் உள்ள வந்ததை கவனிக்காமல்.. சமூக சேவை செய்துக்கிட்டு இருந்தேன். ஆசிரியர்…. வாட்சப்பில் வந்து.. 'அம்மா..உன்னோட ஈமெயில் ஐடி கொடு.. ஒரு ஃபையில் அனுப்பறேன்.. நீ கொஞ்சம் அதை வகுப்பு நடக்கும் போது ஷேர் செய்'னு சொல்ல..இந்த வாயி இருக்கே வாயின்னு என்னை நானே நொந்துக்கிட்டு, உக்காந்த இடத்தை விட்டு நகர முடியாமல், வகுப்பு முழுக்க வேற எதும் செய்யமுடியாமல் ஒரே இடத்தில் உக்காந்து பிபிடி ஃபைலை ஷேர் செய்தேன்.

ஆன்லைனில் நானும் பாடம் படிப்பேன் னு நினைக்கல. இந்த வீடியோ கொடுமையகளையும் பார்ப்பேன்ன்னு நினைச்சுக்கூட பார்க்கல..

நினைக்காததை எல்லாம் நடத்திக்கொடுக்குது இந்த கொரோனா…

இதை ஆசிரியர்கள் யாரேனும் படிக்க நேர்ந்தால்.. தயவுசெய்து.. மன்னிச்சு. உங்கள் சேவை நிச்சயம் மகத்தானது.

பீட்டர் தாத்ஸ் : A great teacher can teach Calculus with a paper clip and literature in an empty field. Technology is just another tool, not a destination.’ –Unknown