BiggBossTamil - ஒரு பார்வை

Animal Planet , Discovery & National Geographic channel களில் விலங்குகள், பறவைகள், ஊர்வன, கடல்வாழ் உயிரினங்களை 24 மணி நேரமும் கேமரா வைத்து நாம் கண்காணிப்பது போல, அவை மனிதர்களை கண்காணித்தால்?? அது தான் பிங்பாஸ் !!  முன்னதில், கலவி முதல் , குழந்தைப்பேறு & இத்தியாதிகளையும் பாரபட்சமின்றி, ஒளிவு மறைவின்றி படம்பிடிக்கிறார்கள். பின்னதில், மனிதனுக்கு வளர்ந்துவிட்ட அறிவு & நாகரீகம் காரணமாக  பதிவாக்கப்படவில்லை.

முதல் இரண்டு நாளில் எனக்குத்தோன்றிய எண்ணங்களை முதலில் பகிர்கிறேன். உலகநாயகனின் தகுதிக்கு (அறிவுசார்ந்து) ஏற்ற நிகழ்ச்சியில்லை, "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் "லக்ஷிமி ராமக்கிருஷ்ணன்" போன்ற தொகுப்பாளர் போதுமானது ,

அறிமுக நிகழ்ச்சியில், சினிமாவைப்போல நினைத்து பேச ஆரம்பித்தாரா எனத்தெரியவில்லை,  காதில் ரகசியமாக சொல்வதை உள்வாங்கி, அதை பார்வையாளர்கள் அறியாதவாறு தொகுத்து வழங்கமுடியாதது அப்பட்டமாக தெரிந்தது. எதையும் அதிக கவனத்தோடு செய்பவர்களுக்கு இதெல்லாம் பிரச்சனையே !!  ஆரம்ப நிகழ்ச்சி, கமலில் தொகுப்பில்- கொஞ்சம் சொதப்பலே.

அடுத்தவாரத்தில் உசாராகிவிட்டார். கலைஞானியாச்சே! கற்றும் கேட்டும், பயின்றும் அறிந்திருப்பார்,, சாதூர்யமான பேச்சைக்கொண்டு அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும், இந்த நிகழ்ச்சி கலைஞானிக்கு தேவைதானா என்ற கருத்தில் மாற்று இல்லை.
நிகழ்ச்சிக்கு போவோம்: மற்ற நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக இருந்தாலும், வணிக ரீதியாக பணம் பார்க்க தேவையான அனைத்தும் உள்ளன.  அறிமுக நாளன்று, நடிகர் பரணி யை பார்த்தவுடனேயே விஜய் டீவி என்ன எதிர்ப்பார்க்கிறது எனப்புரிந்து போனது. பரணி அடிப்படையிலேயே சட்டென உணர்ச்சி வசப்படக்கூடியவர், கோபப்பட க்கூடியவர் அவரை சேர்த்தால், தினப்படி ஏதாது பிரச்சனைவரும்.

அதே சமயம், எல்லோரிடத்திலும் அன்போடும், அமைதியாகவும் பிரச்சனை ஏதுமில்லாமல் இருந்தாலும் அவரை நல்லவர் என, பிங்பாஸ் வீட்டில் தொடர்ந்து விஜய் டீவி அனுமதிக்கப் போவதில்லை. ஸ்ரீ & அனுயா சிறந்த உதாரணம்.. சண்டையிட்டு பிரச்சனை செய்துக்கொண்டே இருப்பவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு வேண்டும், அவங்க தான் மக்களை கவர்ந்திழுப்பார்கள். ஒவ்வொரு வாரம் வரும் "முன்னோட்ட' ங்களும் அதைத்தான் சொல்கின்றன. 

பரணி தன் இயல்பை மாற்றிக்கொண்டு அநியாயத்திற்கு அமைதியாகியிருக்கிறார். இது தனிப்பட்ட முறையில் அவருக்கு நல்ல மனப்பக்குவத்தையும், பலத்தையும் கொடுக்கும் பிங்பாஸ் வெற்றிக்கு உதவாது. இதே கோட்டில் தான் வையாபுரி, ஆரவ், கனேஷ்,ரைசா வருகின்றனர். இவர்களாலும் யாருக்கும் பிரச்சனையில்லை, எந்தவித சூழலிலும் தன்னை வளைத்து நெளித்து சுருக்கி  சுமுகமாய் இருப்பவர்கள், சுவாரசியம் இல்லாதவர்கள் அதனால் வெளியேறுவார்கள் !

முதலில் வெளிவந்த, அனுயாவின் முதிர்ச்சி ஆச்சரியப்பட வைத்தது. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாலும், எல்லோரைப்பற்றியும் ஓரளவு
சரியாகவே கணித்திருக்கிறார். அதற்கான வாய்ப்பை விஜய்டிவி வழங்கியது நல்ல விசயமே.

அறிமுக தினத்தன்று, ஜூலி, ஒரு தமிழ் பெண், ஜல்லிக்கட்டு போராளி எனத் தன்னைப்பற்றிய தகவலை (மட்டும்) சொல்லி, Fake identity யோடு உள்நுழைந்தார்.  தான் ஒரு ஆல்பம் பாட்டில் நடித்திருப்பதையும், தொகுப்பாளாராக ஒன்றிரண்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்ததையும்  மறைத்திருக்கிறார். இது தான் முதல்மேடை என்றும் பொய் சொல்லியிருக்கிறார். இவர் செவிலியராக வேலைசெய்தவர் என்பதையும் நம்பமுடியவில்லை. ரொம்பவே நாடகத்தன்மை, எங்கு,எந்த சூழலில் இருந்தாலும், எந்த கேமரா தன்னை 'கவர்' செய்கிறது என்பதை கவனித்து திறம்பட நடிக்கிறார்.  எரிச்சல் தரும் இவரை நிச்சயம் விஜய் டிவி அத்தனை எளிதில் அனுப்பிவிடாது. !

ஆர்த்தி வெற்றிப்பெற வேண்டுமென குறுக்குவழியில் மெனக்கெடுக்கிறார். காயத்திரி, சக்தி இருவரும் ஒரே மாதிரியான குணமுடையவர்கள். சக்தி யின் "பிங்பாஸ்" ஸ்க்ரிப்ட் செம!! குறைந்த நேரத்தில், மிகச்சிறப்பாக நடித்துக்காட்டப்பட்ட குறும்படம் ! சூப்பர் !!  இவர் இயக்குனரானால் நல்ல படங்கள் நமக்கு பார்க்கக்கிடைக்கும்.

இந்த வீட்டில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஓவியா. அவரே பிங்பாஸ் நிகழ்ச்சியில் வெல்வார், வெல்லவேண்டும் என நினைக்கிறேன்  ஹை லைட்ஸ் : கேமராவோடு பேசுவது, குலைக்கும் நாயைப்பற்றி பேசியது !! இவையெல்லாம் சட்டென வந்துவிடாது.  வெளிப்படையாக தெரியாவிட்டாலும் She is very determined. நிச்சயம் இவர் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது.

இவரைத்தவிர வெல்ல வாய்ப்பிருப்பவர்கள் நமிதா & கஞ்சாகருப்பு !! பார்ப்போம் !

கடைசியாக, என்னைச்சுற்றி இப்படி கேமரா வைக்கப்பட்டால்? -  ஆடை மேல் என் முழுகவனமும் இருக்கும். அனுயா, சொன்னது போல "என்னை கேமரா கவனிக்கிறது " என்ற பிரஞ்ஞை எப்போதும் இருக்கும்.  அதற்காக "ஆடை விசயத்தை" தவிர வேறெதிலும் கவனமாகவோ, பொய்யாகவோ இருக்கமாட்டேன். இருக்கவராது . ஓவர் ஆக்டிங் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. :))).தொடர்ந்து செய்யமுடியாது என்பதால், ஒன்றிரண்டு நாள் ஓவர் ஆக்டிங் செய்து ஓய்ந்து இயல்பாவேன் முதல் தலைவர் சிநேகன் போல ! குடும்பத்தைவிட்டும் இருப்பேனா என்பதும் சந்தேகமே !! Though its been involved a huge money etc.. குடும்பத்தைத் தாண்டி தான் எல்லாமும்.. !!

பொதுவாக, எனக்கு மனிதர்களின் பல முகங்களை, அவர்களுடன் பேசியபடியோ, பேசவிட்டு அமைதியாகவோ கவனிக்கப்பிடிக்கும். பிங்பாஸ் இப்போதைக்கு நல்ல பொழுதுப்போக்கு, தொடர்ந்து 100 நாளும் பார்ப்பேனா என்பதும் தெரியாது!!

எங்க வீட்டு சமையல் : சிக்கன் நூடுல்ஸ் / Chow Mein Chicken

தேவையான பொருட்கள் - இருவருக்கு தேவையான அளவு
 
நூடுலஸ் : 3/4 பாக்கெட் (படத்தில் இருப்பது போல, ப்ளைன் நூடுல்ஸ்)
எலும்பு நீக்கிய சிக்கன் : 300 கி

நெய் - 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகு : 10
எண்ணெய் : தேவைக்கேற்ப
உப்பு : தேவைக்கேற்ப
கோஸ் : சின்ன கப் அளவு
கேரட் : 1
குடமிளகாய் - 1/2
வெங்காயம் - 2
பூண்டு - 8-10 பல்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை :
பெரிய பாத்திரத்தில் 3/4 பாகம் தண்ணிர் ஊற்றி, நன்கு கொதிவரும் போது நொறுக்காமல் நூடுல்ஸ் ஐ கொட்டி, 3-4 நிமிடம் கொதிக்க வைத்து, வெந்தவுடன், வடிகட்டி, உதிர்த்து உலர்த்தி வைக்கவும்.

காய்கறி எல்லாவற்றையும் மெல்லிய குச்சிகளாக, வத்திகுச்சி நீளத்திற்கு வெட்டி வைத்துக்கொள்ளவும், வெங்காயமும் நீட்டுவாட்டத்தில் வெட்டிக்கொள்ளவும்
சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி, நெய் காயவைத்து, மஞ்சள் பொடி , 3 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கி, லேசாக தண்ணீர் தெளித்து குக்கரில் ஒரு விசிலில் வேகவைத்து எடுத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு & இஞ்சியைப்போட்டு நன்கு வாசனை வருமளவு வதக்கவும், லேசாக சிவக்கும் போது, வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறி எல்லாவற்றையும் கொட்டி வதக்கவும். ஓரளவு வதங்கும் போது மிளகாய் தூள், மிளகை பொடித்து சேர்த்து நன்கு வதங்கியவுடன் சிக்கன், நூடுலஸ் ஐ கொட்டி , உப்பு சேர்த்து  3-4 நிமிடம் நன்கு கலந்து இறக்கவும். முட்டை சேர்க்க விரும்புவோர் நூடுல்ஸை கொட்டும் முன், முட்டையை உடைத்து ஊற்றி பொடிமாஸ் போல கிளரி, பின்பு நூடுல்ஸ் ஐ சேர்த்து இறக்கலாம்

நூடுல்ஸ் ஐ சேர்க்கும் போதே உதிர்த்து சேர்க்க வேண்டும். தனித்தனியாக இல்லாமல் இருந்தால், அடுப்பிலிருந்து இறக்கி , கரண்டி காம்பால் நன்றாக உதிர்த்தப்பிறகு திரும்பவும் அடுப்பில் வைத்து கிளரலாம். நூடுல்ஸ் வெகுநேரம் அடுப்பில் இருக்க வேண்டியதில்லை. காய்கறி நன்கு கலந்தவுடன் இறக்கிவிடலாம்.


குறிப்பு : நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவல்ல. எப்போதாவது ஒருநாள் ஆசைக்கு சாப்பிடலாமே ஒழிய, எளிதாக செய்யக்கூடிய உணவென அடிக்கடி செய்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல.