சொந்தபந்தம் என்று ஒருவரும் கிராமத்தில் வசிக்கவில்லை. திருக்கோயிலூர் - விழுப்புரம் சாலையில் அத்தையின் கொள்ளை இருந்தது. பள்ளிக்காலங்களில், விடுமுறைக்கு சென்று கிணற்றில், ஆற்றில் குளிப்பது, கரும்பு வயல்களில் கரும்பை இஷ்டத்திற்கு வெட்டி சாப்பிடுவது,, வாய்க்காலுக்கு நடுவில் கயிற்றுக்கட்டிலை போட்டு அதில் ஆட்டம் போடுவது, பம்பு செட் தொட்டியில் குதித்து நேரம் போவதே தெரியாமல் விளையாடுவது என அத்தை வீட்டு வயல், அதை ஒட்டி நெடுக கண்ணுக்கு எட்டிய தூரம் வயல் வெளிகள் மட்டுமே இருக்கும். அங்கும் கிராமத்துத் தெருக்கள், வீடுகள் என எதும் இல்லை.
முதன் முறையாக ஒரு கிராமம், இப்படியும் அப்படியுமாக மூன்றே மூன்று தெருக்கள், நடுவே பெரிய சிவன் கோயில், சிமெண்டு ரோடுகளாக இருந்தன, அதில் ஒரு தெருவில் முதலியார்கள், மற்றொரு தெருவில் சைவ முதலியார்கள், கடைசியாக ஒரு தெருவில் இடையர்கள்.
ஆக, ஒரு தெரு முழுக்க ஒரு சாதியினர்... ?!! ஏன் இப்படி, நகரத்து வாழ்க்கை இப்படியில்லையே. எல்லோரும் கலந்துகட்டி தானே இருக்கோம். சாதி மற்றும் அல்ல மதமும் பார்ப்பதில்லையே? இதென்ன இப்படி..? ன்னு எனக்கு கேள்வி ஆனால் அதற்கு பதில் சொல்ல அங்கு யாரமில்லை.
பெரிய
கோயில், அந்த காலத்து ராஜா யாரோ கட்டிவைத்தது , அதிக பராமரிப்பு இல்லை.
இப்போது தான் சீரமைத்து வருகின்றனர். அரசின் கட்டுப்பாட்டில் இல்லை,
(வருமானம் வரும் கோயில்கள் தான் அரசு கவனம் செலுத்துமா?) ஊர் மக்களே பணம்
போட்டு புதுப்பித்து வருகின்றனர். கோயிலில் மூன்று கால் சிவன் சிலையை
பார்த்தேன், அதற்கான வரலாறும் தெரியவில்லை.
பெரிய வன்னி மரம், அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இம்மரத்தை கட்டி அணைத்து வேண்டிக்கொண்டால், உடல் பிரச்சனைகள், வாழ்க்கைப்பிரச்சனைகள் தீரும் என்று சொல்ல, நவீனுக்கு வேண்டி நான் கட்டிக்கொண்டேன்.
நிற்க, கிராமங்களில் வெளியூர்காரர்கள் அத்தனை சுலபமாக விவசாயம் செய்ய முடியாது என கண்கூடாகத் தெரிந்தது. எல்லாவற்றி்லும்
வெளியூர்காரர்களுக்கு தனி ரேட், அதுவும் சென்னைக்காரங்கன்னா கோடீஸ்வரர்கள் என்று நினைத்துக்கொள்கின்றனர். வேலையும் வேண்டுமென்றே நிறுத்தி நிதானமாக செய்து நாட்களை இழுத்து அடிக்கின்றனர்.
விவசாயம் அத்தனை எளிதல்ல, அதும் சுற்றி யாரும் சுமுகமாக, நட்பாகவும், உதவக்கூடிய மனப்பான்மையோடும் இல்லாதபோது அது மிகுந்த மன அழத்தத்தை தான் கொடுக்கிறது. படித்த பட்டதாரிகள், ஆர்வத்தில் விவசாயம் பார்க்க செல்வது என்பது அத்தனை சுலபமான காரியமில்லை. உள்ளூர்க்காரர்களின் தயவை நம்பியும், அவர்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டும், போட்ட முதல் கிட்டாமல் நட்டப்பட வேண்டியும் இருக்கிறது.
போன இடத்தில், புதிதாக விதைத்த நிலத்தில், வாய்க்கால் வரப்புக்கட்டி, நீர்பாய்ச்சுதலை கற்றுக்கொண்டேன். வயலில் இறங்கி (செருப்பு காலோடு சென்று , அங்கு வேலை செய்பவர்கள் யாரும் செருப்பு காலோடு இல்லாததைப்பார்த்து செருப்பை கையில் எடுத்துக்கொண்டு நடந்தேன், பிறகு ஓரமாக விட்டுவிட்டு நிலத்தில் இறங்கினேன் :) ), கொஞ்சம் மடை திறப்புகளை அடைத்து தண்ணீர் பாய்ச்ச கற்றுக்கொண்டேன். தொப்பியோடு சென்றதால் வெயிலில் தலைவலி வரவில்லை. ஆனால் மண்ணில் இறங்கி வேலை செய்ததில் பாதம் கைகள் அநியாயத்திற்கு வரண்டு, இரவு மாய்ச்சரைசராக ஆலிவ் எண்ணெய் பூசிக்க்கொண்டு தூங்கும்படி ஆனது. ஒன்றும் கடினமான வேலையாக தெரியவில்லை, ஆனால் இரவு தொடை, கால், கை எல்லாம் ஏதோ ஒரு உள்வலி இருந்துக்கொண்டே இருந்தது.
இன்னும், விவசாயம் சார்ந்த மற்ற வேலைகளைப்பார்த்தால் உடம்பு என்னவாகும் என்று நினைக்கும் போதே "பக்" னு இருந்தது.
விளைந்த பொருட்களை அரசு மண்டியில் அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வியாபாரிகளுக்கு விற்று, பணத்தை அரசே கொடுத்துவிடுகிறது. அதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. அங்கும் திருடு, ஏமாற்று வேலைகள் இருக்கத்தான் செய்கிறது. கடக்கவேண்டும்.. இணையம், தகவல்கள், புகார்கள் என்று எதுவுமே அங்கு வேலைக்கு ஆகாது. அது ஒரு உலகம். ! இவை எதும் அறியாத மக்கள் !
மூட்டைத்தூக்குபவர்களின் உடல் கட்டைப்பார்த்து பொறாமையாய் இருந்தது. ஜிம்' க்கு எவ்ளோ காசு அழுவறோம், டய்ட்'ன்னு ஒவ்வொன்னையும் பாத்து பாத்து சாப்பிடறோம்.. ஆனாலும் உடம்பு நம்ம சொன்னப்பேச்சு கேக்கவே மாட்டேங்குது. ஆனா இவங்க. தொப்பையில்லாம ஸ்லிம்மா இருக்காங்க.. பொறாமையில் பொங்கி அங்கிருந்து வரும் வரை, தலைமுழுக்க இதுவே ஆக்கிரமித்து கடுப்பேற்றியது !!
சரி, விசயத்துக்கு வருவோம், நிலம் நம்மளுது இல்லீங்க.. அத்தை மகன் IBM இல், Team Head ஆ இருக்காரு....Software Engineer, அவரு நிலம் வாங்கி விவசாயம் செய்யறாரு, அவரோட நிலத்தை ஓசியில் போய் பார்த்துட்டு வந்துதான் இம்புட்டு கதை... :)
விவசாயம் செய்யனும்னு ரொம்ப ஆசை, சரி பார்த்தால் கஷ்டம் நஷ்டம் தெரியும்னு நினைச்சேன். இரண்டும் நல்லாவே தெரிந்தது.. அத்தோடு, விவசாயம் அறியாதோர் , கிராமங்களில் சென்று , அந்த மக்களோடு இணங்கி, அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி கட்டுப்பட்டு விவசாயம் செய்வது என்பது மிகப்பெரிய சவால்.
அத்தை மகன் நிலம் வாங்கி 2 வருடம் ஆச்சி, ஒரு தரம் அறுவடை செய்தாங்க, இப்ப திரும்ப விதச்சிருக்காங்க. ஆனால் லாபம் பார்க்க இன்னும் 3-5 ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார். காரணம், சுற்றி இருக்கும் மக்கள், அவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகள், பயிர் வளர்ப்பு, பராமரிப்பு பற்றிய ஆழ்ந்த அறிவு, அது குறித்தான பாதுகாப்பு காரணிகள் என.. ஏகப்பட்டவை பின்னால் இருக்கிறது. 'சிறு விவசாயி'களுக்கு அரசு "அடையாள அட்டை" கொடுக்கறாங்க, அதை வாங்கிட்டா, விதைகள், உரம், என எல்லாமே குறைந்த விலையில் சலுகையில் கிடைக்குமாம்.
பொட்டித்தட்டறது அவருக்கு எளிது என்றாலும், ஆர்வத்தில், பல இடையூறுகளுக்கு மத்தியில் அவர் செய்யும் இந்த முயற்சிக்கு குடும்பத்தில் அத்தனைப்பேரும் ஒரு சேர வாழ்த்துகள் சொல்லி, அவரை ஊக்குவித்தவாரே இருக்கிறோம்.
பீட்டர் தாத்ஸ் : “The ultimate goal of farming is not the growing of crops, but the cultivation and perfection of human beings.”
― Masanobu Fukuoka, The One-Straw Revolution
― Masanobu Fukuoka, The One-Straw Revolution