குளிர்
காலங்களில் ஆரஞ்சு நிறத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கும் ஒரு கொடி வீட்டு
முகப்பிலும் , அதே கொடி இரண்டாவது மாடி வரையிலும் வரவழைத்து விட்டாச்சி..
தினமும்
மாலையில், பக்கத்திலிருக்கும் மைதானத்திற்கு நடக்க செல்வேன். அப்படி
செல்கையில் ஒருநாள், தெரு முக்கை தாண்டுவதற்குள் இடது கையில் வளையல் போடும்
இடத்தில் அரித்தது. லேசாக சொறிந்தபடி, நவீனிடம் .."திடீர்னு
அரிக்குதுடா'னு சொன்னேன். எப்பவும் போல.." கொசு கடிச்சி இருக்கும்..
என்னைக்கூட தான் கடிக்குது.. உன்ன மாதிரி சொல்லிட்டா இருக்கேன்.. சும்மா
வாம்மா" என்றான்.
"கொசுக்கடிக்கறது எல்லாம் நமக்கு புதுசா? கொசுக்கடிச்சா இப்படி அரிக்காதுடா... சரி வா.." ன்னு நானும் பெருசா ஒன்னும் கண்டுக்கல... ஆனால்.. நேரம் ஆக ஆக கை..மற்றொரு கை, கழுத்து, காது..இடுப்பு , தொடைன்னு, முதுகுனு அரிப்பு பரவிக்கொண்டே வந்தது. முகத்தில் மட்டும் நானே கை வைக்கல..மற்றபடி எல்லா இடத்திலும் தாங்கமுடியாமல் சொறிந்து கொண்டிருந்தேன்.. இருட்டு ஒன்றும் தெரியவில்லை.
வீட்டிற்கு வந்தப்பிறகு தான் கவனித்தேன்., அல்மோஸ்ட் 40% ஐ படம் விக்ரம் போல ஆகியிருந்தேன். பெருசு பெருசா தண்டு தண்டாக வீங்கி கை, கால் முகம்னு பாரமட்சமின்றி வீங்கி இருந்தது. நவீனும் அவரும் பார்த்து பயந்துட்டாங்க..
நான்
கம்பளி பூச்சியாக இருக்குமென்று நினைத்து, உடனே சுடுதண்ணீர் வைத்து
குளித்தேன். 10 நிமிடம் அரிப்பு இல்லை,, ஆனால் திரும்பவும் ஆரம்பித்தது.
சுடுதண்ணீரில் குளித்தவுடன் வீக்கம் லேசாக குறைந்து சிகப்பு திட்டு
திட்டுகளாக உடல் முழுக்கத்தெரிய ஆரம்பித்தது. ஆனால் அதன் மேல் வீக்கமும்
ஆரம்பித்தது.
நமக்கு தான் உணவே மருந்தாச்சே? ஆயா சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வர, 15 மிளகை எடுத்து வாயில் போட்டு, அடிநாக்கில் பட்டுவிடாமல் மென்று, காரம் நாக்கை தொடுவதற்குள் தண்ணீர் குடித்து விழுங்கினேன்..
நேரம் சென்றதே ஒழிய அரிப்பும்,
வீக்கமும் குறையவேயில்லை. சரி இரவானால் டாக்டர் கிடைக்காமல் போக
வாய்ப்பிருக்கிறது, என மருத்துமனை சென்று விடலாம்னு கிளம்பினோம்.
மருத்துவமனையில் மருத்துவர், தைரியம் சொல்லி ஊசிப்போட்டுக்கொள்ள
பரிந்துரைத்தார். நர்சம்மா வந்து ஒரே சமயத்தில் இரண்டு இடுப்பிலும் இரண்டு
ஊசிப்போட்டாங்க.
பெரிய லிஸ்ட் டாக மருந்து சீட்டு கொடுக்கப்பட்டது. ஏன் இப்படி? ன்னு கேட்டால், விஷப்பூச்சி ஏதோ கடிச்சியிருக்கு, விஷம் இரத்தத்தில் பரவி, உடல் முழுக்க இப்படி ஆகிவிட்டது, இரத்தத்தில் கலந்த விஷத்தை முற்றிலும் எடுக்கனும். அதற்கு குறைந்தது 15 நாளாவது 3 வேலை மாத்திரை சாப்பிடனும்னு சொல்லிட்டார்.
என்ன கொடுமை இது.. மாத்திரை மருந்துன்னாவே தெறிச்சி ஓடுவேன்.. எனக்கு 15 நாள், ஒரு பிடி மாத்திரை அதும் 3 வேலையும்.... நினைக்கும் போதே கண்ணைக்கட்டியது. ஆனால்.. வீக்கத்தையும், சிகப்பு திட்டுகளையும் பார்க்கும் போது.. மாத்திரை எவ்ளோ பரவாயில்லை என்றே தோன்றியது.
தூக்கத்திற்கு மிக வீரிய தூக்கமாத்திரை எழுதித்தரப்பட்டது. அதும் ஒன்றல்ல..இரண்டு. மருந்துக்கடைக்காரர், என் மேல் பரிதாபப்பட்டு, "அந்தம்மா தூங்காட்டியும் பரவாயில்ல.. இந்த மாத்திரை உடலுக்கு நல்லதல்ல...நீங்க இதை அவங்களுக்கு கொடுக்க வேணாம்,, அதனால் வாங்கிக்கவும் வேணாம்னு" சொல்லி கொடுக்கவேயில்லை. கெட்டதிலும் ஒரு நல்லது.
விடியற்காலை பெங்களூர் பயணம். கையும் காலும் இப்படி வீங்கி இருந்தால் நிச்சயம் விமானத்தில் அனுமதிக்க மாட்டாங்க, இது இரவுக்குள் சரியாகனும்னு படுத்தேன். ஊசி , மாத்திரைகள் மயக்கத்தை த்தாண்டி ஏதோ உடல் உபாதை சரியாக தூங்கல.. 3 மணிக்கு எழுந்தாச்சி. குளிக்கும் போது கையில் ஓரிடத்தில் எரிந்தது. லேசாக கறுத்து, பெரிய கடுகு அளவில், பூச்சிக்கடித்த வடு ரணம் மாறாமல் தெரிந்தது.
நவீனிடமும்
அவரிடமும் காட்டினேன். "இவ்ளாம் பெருசா ஏதோ கடிச்சியிருக்கு,
இப்பவரைக்கும் அது என்ன ஏதுன்னு உனக்கு தெரியலன்னு" திட்டு விழுந்தது.
இத்தனை மாத்திரை மருந்துன்னு சாப்பிட்டும் அந்த பூச்சிக்கடித்த இடத்தில்
ரணம் போக மூன்று நாட்கள் ஆகின. நச்சு அதிகமுள்ள பூச்சின்னு புரிந்தது.
மாத்திரையை 15 நாளும் சாப்பிட்டு தொலைக்க வேண்டியிருந்தது. வீட்டு ஓனரிடம் 2 நாள் முந்திதான் இதைப்பற்றி சொன்னேன். அதிர்ச்சியாகி,, நம்மையும் கடித்துவிட்டால் என்னா செய்வதுன்னு, தோட்டக்காரனிடம் சொல்லி, கொடியை எடுக்க சொல்றேன்னு சொன்னாங்க. நான் மறுத்து, "குளிர் காலம் இப்பதானே ஆரம்பிக்குது, அது பூத்து முடித்தவுடன் எடுத்துக்கலாம், மருந்து மட்டும் அடிக்க சொல்லுங்கன்னு"" சொன்னேன். மெதுவா...கேக்கறாங்க..."உங்கள கடிச்சது பாம்பா??"
"ஞே"
அடப்பாவிகளா,,,பாம்பா??? ..பாம்புக்கூட கடிக்குமா இங்க? ன்னு மனசுல நினைச்சிக்கிட்டு, "பாம்பு கடிச்சா கடிச்ச இடத்தில் இரண்டு மார்க் இருக்கும் (அறிவு?? இந்த அறிவுக்கு காரணம் ..நம்மோட தமிழ் சினிமாக்கள்) ஆனா எனக்கு ஓரு மார்க் தான் இருந்துச்சி.. பாம்பு மாதிரி ஏதோ ஒன்னு தான் கடிச்சியி்ருக்கு...ஆனா அது பாம்பு இல்லைன்னு" சொன்னேன்.
இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு.. கேரளாவில் வேறு விதமான அனுபவங்கள் கிடைத்தது.. இங்கே இப்படி....
மொத்தத்தில்.. நம் உடலில் விஷப்பூச்சி கடிச்சாலும் சாகாமல் இருக்குமளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று ஒரு நிம்மதி.
இன்று தோட்டக்காரர் வந்து என்னை பெங்காலியில் விசாரித்துவிட்டு, "இதுல அந்தமாதிரி பூச்சியெல்லாம் இருக்காதும்மா"ன்னு ,முக வாட்டத்தோடு, கொடி, செடின்னு எல்லாவற்றிலும் பூச்சி மருந்து அடிச்சிட்டு போனார்.
பீட்டர் தாத்ஸ்: Everyone can identify with a fragrant garden, with beauty of sunset, with the quiet of nature, with a warm and cozy cottage.