எங்க வீட்டு சமையல் - சிற்றுண்டி வகைகள்

சம்பா கோதுமை ரவை அடை:
சம்பா கோதுமை ரவை - 2 கப்
அரிசி மாவு : 1/4 கப்
உப்பு
வெங்காயம் பெரியது - 1
காய்ந்தமிளகாய் 3-4
லவங்கம் - 1
சோம்பு : 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை

சம்பா கோதுமை ரவையை 1-2 மணி நேரம் ஊறவைத்து , காய்ந்தமிளகாய், லவங்கம், சோம்பு கொஞ்சம் ஊறிய ரவை சேர்த்து மைய அரைத்துக்கொண்டு, மிச்சமுள்ள ரவை சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து அத்துடன் உப்பு, பொடியாக நறுக்கி வதக்கிய வெங்காயம், கருவேப்பிலை, அரிசிமாவு சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்து, அடை சுடவும்..

இன்னொரு முறை : அரிசி மாவு இல்லாமல் , துவரம் பருப்பு 1 கப், சோயா ச்சங்க்ஸ் (ஊறவைத்தது 10), கொண்டகடலை (ஊறவைத்தது)2 கை சேர்த்து அரைத்து செய்யலாம். காரம் இதற்கு தகுந்தார் போல மாற்றிக்கொள்ளவும்
தேங்காய் சின்னத்துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம். 
 
***********
 
ராஜ்மா வடை:

ஊறவைத்த ராஜ்மா - ஒரு கப்
4 ஸ்பூன் பச்சரிசி மாவு
காய்ந்தமிளகாய் -2
2 வெங்காயம்
5-6 பல் பூண்டு
இஞ்சி - சின்னத்துண்டு
கருவேப்பிலை
சோம்பு 1/2 ஸ்பூன், லவங்கம் -2
உப்பு

இஞ்சி, பூண்டு , சோம்பு, லவங்கம், காய்ந்தமிளகாய் நல்லா அரைச்சிட்டு, ராஜ்மாவை பாதி நைசாகவும், மிச்சம் பாதியை ஒன்னும் பாதியுமாக அரைச்சிக்கனும், வெங்காயம் மிக்ஸியில் ஒருமுறை அடிச்சிட்டு, உப்பு, அரிசிமாவு கருவேப்பிலை போட்டு நல்லா கலந்து. .வடையாக தட்டி எடுக்கனும்
 
*********** 

சோயா + கேழ்வரகு மாவு பஜ்ஜி :

கடலைமாவு 1/2 கப்
சோயாமாவு 1/2 கப்
கேழ்வரகு மாவு 1/2 கப்
அரிசி  மாவு 1/4 கப்
மிளகாய் தூள் : 2 ஸ்பூன்
நெய் : 1 1/2 ஸ்பூன்
சமையல் சோடா 2 சிட்டிகை
கேசரி பவுடர் 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய்
 
காய்கறி : வெங்காயம் & கருணைக்கிழங்கில் செய்தேன்.  உருளை, வாழைக்காயிலும் செய்யலாம்,

மாவு எல்லாவற்றையும் கொட்டி, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு , சோடா, கேசரி பவுடர், நெய் ஊற்றி நன்கு கலக்கிக்கொண்டு,கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து க்கொள்ளவும். கருணைக்கிழங்கை காய்கறி சீவலில் வைத்து சிப்ஸ் போல சீவிக்கொண்டு, பஜ்ஜி மாவில் நனைத்து, காய்ந்த எண்ணெய்யில் போட்டு , நன்கு வெந்தவுடன் எடுக்கவும். கருணைக்கிழங்கு சிப்ஸ் மாதிரி சீவினாலும் சில சமயம் உடையும். அதனால் பரவாயில்லை, வந்தவரை செய்யலாம். 

இதே மாவில் வெங்காயம், உருளை, வாழைக்காயை கொண்டும் செய்யலாம்.

பீட்டர் தாத்ஸ் : When a man's stomach is full it makes no difference whether he is rich or poor.- Euripides

தெரு நாய்


தெருநாய்களை தெருவில் மட்டுமே பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த வீட்டுக்கு குடிவந்தப்பிறகு தெரு நாய்கள் வீட்டிற்குள்ளும் இருக்கும் என்று தெரியவந்தது அவற்றின் தொல்லையும் தாங்கமுடியவில்லை.

பொதுவாகவே நம்ம யாருக்குமே தெரு நாய்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் பழக்கமில்லை. சாப்பாடு வைத்தாலும் கூட, காம்பவுண்டு சுவரை தாண்டி உள்ளே வராமல் பார்த்துக்கொள்வோம். கடித்துவிடும் என்ற பயமே முதல் காரணமாக இருக்கும். இங்கு காம்பவுண்டு சுவர் கதவு என்னவோ மூடிதான் இருக்கும், ஆனால் இதுங்க, சுவரேறி குதித்து, உள்ளே கூட்டமாக வந்து உட்கார்ந்துக்கிட்டு, குரைச்சிக்கிட்டு, ஊளையிட்டுக்கிட்டு எப்பவும் ஒரே சத்தம். இரவு நேரங்களில் ரொம்பவே மோசம்..ஏன் குரைக்குதுங்க..எதுக்கு குரைக்குதுங்கன்னே தெரியாது... தூக்கம் களைந்து போகுமளவிற்கு சத்தமிருக்கும்..

மொத்தமாக ஒரு 4-5 நாய்கள் இந்த வீட்டை குத்தகைக்கு எடுத்திருந்தன.
நாங்கள் இருப்பதென்னவோ இரண்டாம் தளம், இவை படிக்கட்டில் சொகுசாக காலை நீட்டிப்படுத்து தூங்கிட்டு இருக்கும். எங்களின் நடை சத்தம் கேட்டதும், திரும்பி பாத்துட்டு, கொஞ்சம் கூட மதிக்காம திரும்பவும் அதேமாதிரி படுத்துக்கும். இதுவே வீட்டு ஓனர் வீட்டிலிருந்து யாராவது இறங்கினால், உடனே எழுந்து வழிவிடும்.

எங்கள பாத்தாவே இளச்சிவாய்ன்னு அதுங்களுக்கு தெரிஞ்சிப்போச்சி போல.  இதுங்கல மிதிக்காம இறங்கிப்போக சில தாண்டவங்களை நாங்க பழக வேண்டி வந்தது. இரண்டு மூன்று மாதங்களிலேயே, அதுங்களை மிதிக்காமல் தாண்டி, குதித்து கீழ் படிக்கு செல்ல ‘ஹைஐ லாங் ஜம்ப்” ஐ  நல்லாவே பழகிட்டோம்.  
வெளியூர் சென்று, திரும்ப நடு இரவாகிவிடும் என்ற ஒருநாளில்,  வீட்டு ஓனரிடம் வெளி கேட்’ சாவி கேட்க சென்றோம். அவங்களோ..

“வெளிக்கதவை நாங்க பூட்டறதே இல்லையே.. ஆனா.. இருட்டில் ஜாக்கறதையாக வாங்க.. இந்த தெருநாய்கள் அங்க இங்கன்னு படுத்துக்கிட்டு இருக்கும்.. அதுங்கள மிதிக்காம வந்தாவே நாம பிழைச்சோம். அதுங்களைத்தவிர இங்க வேற எந்த பயமும் இல்லை” ன்னாங்க..

“ஏன் துரத்தி விடலாமே” என்றோம்.

“ ம்ஹூம், எவ்ளோ முயற்சி செய்துட்டோம்.. எதுக்கும் கட்டுப்படல,  நீங்களே பார்த்திருப்பீங்களே....எல்லாப்பக்கத்திலும், சுவர் ஏறி குதிச்சி வருது.. என்னதான் செய்வோம்.. இப்ப அதுங்க ராஜ்யம் தான்..” என்று சோகத்தோடு சொல்லி முடித்தனர்.


பகலும் இரவும், நாய்களின் சத்தத்தோடு ஓரளவு பழகிவிட்டது. அப்பறம் கவனிக்கும் போது தான் தெரிந்தது, அக்கம் பக்கம் எதிர்வீடு என யார் வீட்டுக்கும் இந்த நாய்கள் போவதே இல்லை. அட..?! இது எப்படி சாத்தியம், அங்கவும் சுவர் ஏறி குதித்து செல்லலாமே ஏன் போக மாட்டேங்குதுங்க..? ன்னு எனக்கு மண்டை காய ஆரம்பிச்சிது.

பயாஸ்கோப் கண்களோடு காரணத்தை அறிய அவற்றை கவனிக்க ஆரம்பித்தேன்.  ஒரே ஒரு நாய் உள்ளே சென்றாலும் கூட, அதை அடித்து விரட்டாமல் அடுத்த வேலைக்கு யாரும் போவதில்லை. ஆனால் எங்க வீட்டில் நேர் மாறாக நடந்துக்கொண்டிருந்தது.

கீழ் வீட்டில் , கல்லூரிக்கு செல்லும் பெண் ஒருத்தி இருக்கிறாள். சாக்கடையிலும், தெருவில் கண்டதை சாப்பிட்டு, தோலில் சிரங்கு வியாதியோடு திரியும் இந்த நாய்களை, கையால் தொட்டு தடவி, அதுங்களை செல்லம் செல்லமாக கொஞ்சி, பிஸ்கெட், சாப்பாடு எனப்போட்டு... .....

எப்படி அதுங்க இங்க வராம இருக்கும் ?!!

அவளுக்கு அந்த நாய்கள் மேல் உள்ள பிரியம் ஆச்சரியமாக இருந்தது. இன்றுப் பார்க்கிறேன். ஒரு நாய்க்கு, ப்ளாஸ்ட்டிக் குடுவையில் தண்ணீர் கொண்டு வைத்து... வா வந்து குடின்னு கெஞ்சிக்கிட்டு இருக்கா... “
அது குடிக்காமல் இங்கவும் அங்கவும் போகுது... ஓடிப்போய் நெற்றியில் ஒரு முத்தமிட்டு, அது போகிற இடத்துக்கெல்லாம் தண்ணியை பின்னாடியே எடுத்துட்டு போறா...

நடுநடுவில் அவளின் முத்தங்களை நெற்றியில் வாங்கிக்கொண்டு.. முறுக்கிக்கொண்டு இவளுக்கு போக்குக்காட்டி, அங்குமிங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறது அந்த தெருநாய்..!! 

Images courtesy Google : Thanks