மருத்துவமனை. காத்திருக்கும் இருக்கைகளில் ஒன்றுக்கூட காலியில்லை. மருத்துவர் இருக்கும் அறையைப்பார்த்தேன். யாரோ உள்ளிருக்கிறார்கள், நிச்சயம் உடனேவோ.. சிறிது நேரம் கழித்தோக்கூட அவரைப்பார்க்க முடியாது.
என்னால் முடியவில்லை.. ஏதோ உடல் உபாதை, மயக்கம் தள்ளுகிறது, நிற்க முடியவில்லை, சமாளிக்கிறேன். உட்காரவும் இடம் இல்லாததால் சிஸ்டரை பார்த்து, அப்பாயின்ட் வாங்கிய விபரம் சொல்லி, என்னால் நிற்க முடியவில்லை, உடனேயே டாக்டரை பார்க்க அனுமதிக்குமாறு கேட்கிறேன்.
சிஸ்டருக்கு என் நிலைமை புரிந்தாலும், மருத்துவர் யாரோ ஒரு நோயாளியை பார்ப்பதால் என்னை உள்ளே அனுமதிக்க முடியவில்லை. கொஞ்சம் யோசித்தவர்,என்னை வேறொரு அறைக்கு அழைத்து சென்று, ஏதோ ஒரு மருந்தை எடுத்து ஊசியில் செலுத்தி, மருத்துவரை பார்க்கும் வரை, இது உங்களுக்கு நல்லாயிருக்கும், போட்டுக்கோங்கன்னு சொல்லி, போடுகிறாள்.
ஊசிப்போட்ட சிறிது நேரத்தில், மருந்தின் தாக்கம் உடல் பிரச்சனையை விட அதிகமாக, அங்கிருக்கும் பெட்டிலேயே முடியாமல் படுக்கிறேன். 5-10 நிமிடங்கள் சென்றிருக்கும்.... ஊசிப்போட்ட கையை தூக்க முடியவில்லை.. தலையை தூக்கி கையைப்பார்த்த எனக்கு சொல்லமுடியாத அதிர்ச்சி.......
கையில் நரம்பு குழாய்கள் செல்லும் அத்தனை இடங்களும் மேல்பக்கம் கருப்பாக மாறி கோடு கோடாக தெரிந்தது....
"சிஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... "
நான் கத்திய கத்தில், சிஸ்டர் தவிர பக்கத்து அறையில் இருந்த டாக்டரும் வந்துவிட்டார்...ரூமுக்கு வெளியில் கூட்டம் சேருகிறது.
கையைப்பார்த்த இருவருக்கும் என்னைவிட அதிர்ச்சி.....
"என்ன
செய்தீங்க.. ?! ஊசிப்போட்ட இடம் கூட பாருங்க..எப்படி வீங்கியிருக்கு...
இதுமாதிரி எனக்கு ஆனதேயில்ல.. என்ன ஆச்சி எனக்கு... டாக்டர்...சீக்கிரம்
எதாச்சும் செய்ங்க." .
டாக்டர் கோவமாக சிஸ்டரிடம்
..."என்னமா செய்த.. நான் சொல்லாம என்ன ஊசிய இவங்களுக்கு போட்ட... யார்
உனக்கு இந்த அதிகாரத்தைக்கொடுத்தா.. என்ன ஊசிப்போட்ட காட்டு..."
சிஸ்டர்
வேகமாக மருந்து பாட்டிலை எடுக்க செல்கிறார், டாக்டர் முதலுதவிக்கு
திரும்பவும் வேறு ஏதோ ஒரு மருந்தை எடுத்து வந்து எனக்குக்கொடுத்து
"சீக்கிரம் இந்த மாத்திரையை முழுங்குங்க.."ன்னு தண்ணி
பாட்டிலைக்கொடுக்கிறார்...
கருப்புக்கோடுகள் கையில் தெரிய... கட்டிலிருந்து இறங்கி... முடியாமல் வெளியில் வருகிறேன்....
பின்னாலேயே டாக்டரும் சிஸ்டரும் "மேடம் எங்கப்போறீங்க.. நில்லுங்க... சரிசெய்து அனுப்பறோம் நில்லுங்க... " ன்னு சத்தம் போட்டுக்கொண்டே துரத்துகிறார்கள்..
திரும்பி பார்த்தவாரே... "ஹாஸ்பிடலா நடத்தறீங்க?... இதோ இந்த கையை காட்டியே உங்கள உள்ள தள்றேன் பாருங்க.".ன்னு அழுகையும் ஆத்திரமும் ஒன்று சேர ஓட்டமும் நடையுமாக வெளியே வருகிறேன்..
கேட்டில் இருவர் என்னை தடுத்து நிறுத்தப்பார்க்கிறார்கள்.. அவர்களை என் உடல் வலுவெல்லாவற்றையும் வரவைத்து, ஒரே தள்ளாக தள்ளிவிட்டு ஒருவழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளி வந்துவிட்டேன்..
... என்னை யாராவது துரத்துகிறார்களா? என அவ்வப்போது திரும்பி ப்பார்க்கிறேன்......
********
Images Courtesy : Thx Google.