சிவகார்த்திகேயன், டிவியில் இருந்தவரை நிஜம்மாவே ரொம்ப பிடிச்சிது. ரசிச்சிப்பார்த்துக்கிட்டு இருந்தேன்.

சினிமாக்கு வந்தாலும் வந்தாரு.... உஸ்ஸ்ஸ்ஸ்...

கதாநாயகன் ஆனப்பிறகு விஜய் டிவி நடத்திய ஏதோ ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளாராக கேள்விக்கேட்ட சிவகார்த்திகேயனை, டாக்டர் விஜய்ண்ணா அவர்கள், "நீதான் ஹீரோவாயிட்டியே...இன்னும் இங்க என்னப்பண்ற?! " ன்னு கேட்டாரு.. அதுவரையில் எந்தபந்தாவும் இல்லாமல், எப்போதும் இயல்பாக இருந்தவர் அந்த நொடியிலிருந்து மாற ஆரம்பித்துவிட்டதாகவே எனக்குத் தெரிகிறது.

இப்பவெல்லாம் அவர் அடிக்கிற ஜால்ராவும், குறிப்பாக தனுஷ் பற்றி பேசும் போது.....#$#@$%$#%... (திட்டியிருக்கேன் வேற ஒன்னுமில்ல)  ...   ஓவர் பந்தாவும், நேர்காணல்களில் தேவையில்லாமல் தோள் குலுக்கி பேசுவதும் (இது டிவியில் இருந்தவரை அவரிடம் இல்லை என்பது தான் எரிச்சல்), எல்லாத்தையும் விட மான் கராத்தே'விற்கு பெட்ராமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு தயாரிப்பாளர்களை தொல்லைக்கொடுத்து ஹன்சிக்காவை புக் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாக பத்திரிக்கை செய்திகள் படித்ததிலிருந்து அறவேப்பிடிக்காமல் போனது.

என்னால் முடிந்தது, அவருடைய படங்களை பார்க்காமல் இருப்பது. முதல் படத்திலிருந்தே இதுவரையிலும் எதையும் தியேட்டரில் போய் பார்க்கல. டிவியில் பார்த்ததோடு சரி..அதுவும் விளம்பரங்களில் அரை குறையாக...

மனுஷன் முன்னுக்கு வர வேண்டியது தான்.. இதுவரையில் யாரும் வராமல் இருந்ததில்லை. அதுவும் சிவகார்த்திகேயன் போன்று படிப்படியாக முன்னுக்கு வருபவர்களிடம் எத்தனை எளிமையும் நிதானமும் இருக்கவேண்டும்.  காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை சிவகார்த்திகேயனுக்காக "காற்றுள்ள போதே தயாரிப்பாளர்களைத் தொற்றிக்கொள்" என்று மாற்றி எழுதி வைக்கலாம்.

அட்லியின் ராஜாராணி' போன்ற மிக மொக்கையான சக்கையான லாஜிக் இல்லாத தமிழ் திரைக்காவியங்கள் ஹிட்'டாகி வசூலை குவிக்கும் போது, என்னே தமிழ் சினிமாவிற்கு வந்த கேடுன்னு நினைச்சேன். இப்ப அதே கேடு மான் கராத்தே' விற்குமென பட்சி சொல்கிறது. 


இப்படியான ஊத்தல் படங்கள், விளம்பரங்களால் மக்களை ஈர்த்து வசூலை குவிக்கின்றன. பண்ணையாரும் பத்மினி'யும் போன்ற குறைந்த பட்ஜட்டில் எடுக்கப்பட்ட தரமானப்படங்கள் பேசப்படாதது நிஜமாகவே வருத்தம் அளிக்கிறது. தமிழ் சினிமாவில் மக்கள் என்னத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள் எனப்புரியவில்லை.

இதில் இணைய விமர்சனங்கள் படித்தால் .......நமக்கு பைத்தியம் தான் பிடிக்கும். அனைவருமே இங்கு இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், எடிட்டர்ஸ், கலை, நடன இயக்குனர்கள் & தயாரிப்பாளர்கள். அதுவும் சிலர் இசைஞானி & கமல்ஜி' யை எல்லாம் மிக மட்டமாக விமர்சனம் செய்வார்கள். ஏன் இவங்க விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்களா?ன்னு கேட்டால், அப்படியில்லை.. இசை என்றால் என்ன? சினிமா நுட்பங்கள், அனுபவங்கள் என்ன என ஏதுமே அறியாதவர்களே விமர்சனம் செய்கிறார்கள் எனும் போது ஏற்படும் ஆயாசமேயன்றி ஏதுமில்லை. வரவர இணையத்தில் திரைவிமர்சனம் கண்ணில் பட்டாவே தெறிச்சி ஓடிடறேன்.

அப்பா,  குமுதம் ஆனந்தவிகடன் திரைவிமர்சனம் படித்துவிட்டு, அந்தப்படத்தைப்பற்றி சொல்லி, என்னையும் படிக்க சொல்லுவார். என்னமோ சிறுவயதிலிருந்தே திரைவிமர்சனம் படிக்காமல் எந்தப்படத்தையும் பார்ப்பதில்லை. ஆரம்பத்திலிருந்து யுவா'வின் விமர்சனம் அநேகமாக என்னுடைய எதிர்ப்பார்ப்பை ஒட்டி இருப்பதால். அவருடைய திரைவிமர்சனங்கள் மட்டும் தவறாமல் படித்துவிடுவேன். நடுநிலையாக தான் எழுதுகிறாரா என எனக்குத்தெரியவில்லை. இருந்தாலும் அவர் நன்றாக இருக்கிறது என எழுதும் அத்தனைப்படங்களுமே எனக்கும் பிடித்திருந்தது. 

சினிமாவை ப்பற்றி இப்படித்தான் அதாது விமர்சனம் என்றப்பெயரில் வீட்டிலும் எதையாது புலம்பிக்கிட்டு இருப்பேன். அதனாலேயே நவீன் என்னை "நீ ஏன் ஒரு சினிமா க்ரிட்டிக்" ஆகக்கூடாது? இப்படி வெட்டியா எங்கக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கறதை விட எழுதேன்." ன்னு சொல்லுவான்.  உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்துவிடக்கூடாதுன்னு இன்னமும் அதையெல்லாம் செய்ய ஆரம்பிக்கல. நாட்டு மக்களின் மேல் எனக்கும் அக்கறை இருக்கிறது என்பதை சபையில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அணில் குட்டி : வேல வெட்டியில்லாத ஒருத்தன்............  ... யாரச்சும்  வந்து இந்த பழமொழிய அம்மணிக்கு சொல்லிட்டுப் போங்க..

பீட்டர் தாத்ஸ் : We will always tend to fulfill our own expectation of ourselves - Brian Tracy