கீச்..கீச்..கீச்....

பள்ளிக்கூடத்தில் எழுதிய தமிழ். தமிழில் "Assignment/Project " என்றாலே பாரதியார் பாடல்கள் அல்லது காந்தி தாத்தா பற்றிய ஏதாவது ஒன்றைதான் செய்திருக்கிறேன். முண்டாசோடு பாரதியாரை வரைந்து அவருடைய கவிதையை பெரிய சார்ட் பேப்பரில் எழுதிச்சென்றது நினைவிருக்கிறது.

பள்ளிக்கு பிறகு தமிழில் எழுதும் பழக்கமே இல்லாமல் போனது, 2003-04 சென்னை வானொலி நிலையத்தில் தற்காலிக அறிவாப்பாளராக இருந்தபோது, என் நிகழ்ச்சிகளுக்கு நானே எழுதிக்கொண்டு போகவேண்டிய கட்டாயம். 15-20 நிமிடம் வரக்கூடிய கவிதைகள் கூட எழுதவேண்டிய நிர்பந்தம். கட்டாயம் வரும் போது, எழுத்தும் தானாக வந்ததென்னவோ உண்மை. A4 தாளில் 6-7 பக்கத்திற்கு கவிதை எழுதிச்சென்றிருக்கிறேன். அதுவுமே பத்தாமல், நேரத்தை சரிக்கட்ட ஒரு பத்தியை இரண்டு முறை படிக்கவேண்டி வந்தது.
 
நிற்க, தமிழ் எழுதுவது இத்தோடு நின்றது. இணையத்தில் எழுதுவது இல்லை டைப்புவது மட்டுமே. ஆக எழுத்துப்பழக்கம் அறவே நின்று போனது. நவீனுக்கு பள்ளியில் செய்துக்கொடுத்த, வரைந்துக்கொடுத்த "Assignment/Project " எல்லாமே ஆங்கிலம். அவர் பொறியியல் படிக்கும் போதுக்கூட "Practical " நோட்டுப்புத்தகத்தில் வரைந்து கொடுப்பது என் வேலையாகவே இருந்தது. ஆனால் என்ன, பள்ளிக்காலத்தில் கடமை, கல்லூரி காலத்தில் ஒரு படத்திற்கு இவ்வளவு என பேரம் பேசி காசு வாங்கிடுவேன். (ஹி ஹி.ஹி.....). கொடுக்கற காசை எப்படியாச்சும் நாமளே ஆட்டயப்போடனும்னு செய்யற சதி தான் வேற ஒன்னுமில்ல. :)

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஒரு "Project". பாட்டு டீச்சர் இதை சொல்லும் போதே, கிரியேட்டிவாக செய்யனும்னு சொல்லிட்டாங்க. சொன்னவுடனேயே "வாத்தும்,மீனுமே" என் நினைவுக்கு வந்தது. அங்கேயே நோட்டில் குறித்துக்கொண்டு வந்தேன். பிறகு இரண்டு நாட்களுக்கு ரொம்பவே ப்ளாக்' காக இருந்தேன்.  இதுல என் போட்டியாளர்கள் எல்லாம் 3.5 வயது குழந்தையிலிருந்து 10 வயது வரையிலான குழந்தைகள். போட்டியிலிருந்து விலகிடலாமான்னு யோசிச்சேன்."ச்சே.. கூடாது. இதுங்கள எப்படியும் ஜெயிக்கனும்னு" முடிவுக்கு வந்து, இரண்டு நாட்கள் கழித்து, கூகுள் ஆண்டவர் ஏதிரில் வந்தமர்ந்து வாத்தை அன்னமாக மாற்றி "அன்னம், மீன்" படங்களை தேடி எடுத்தேன். அதை தேடப்போக பட் பட்டென்று மற்றவை செய்யவும் ஐடியா வந்துக்கொண்டே இருந்தது.

ரொம்ப யோசிக்க வைத்தது "தாளங்கள்". தாளங்களுக்கு நான் முதலில் தேர்வு செய்தது "பியோனா". பியோனாவின் கருப்புக்கட்டைகளை "லகு" த்ருதம்" மாக மாற்ற உத்தேசித்திருந்தேன்.ஆனால் அதை செயற்படுத்தும் போது தான் சிக்கல் தெரிந்தது. ஆன் தி ஸ்பாட் "குழல்" கண் முன் வர, குழலுக்கு தாவினேன். அடுத்து ஆரோஹணம், அவரோஹணம்" . புத்தகத்தில் படிக்கட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தன. எப்படி மாற்றலாம்னு யோசிக்கும் போது ஸ்ட்ரைக் ஆனது "சறுக்கு மரம்". ஆனால் ஏணி சரியாகவும் சறுக்கு ஓவராக சறுக்குமே தப்பாகிடுமோன்னு நினைச்சி, அப்புறம் சறுக்கிலும் தேவையான இடத்தில் கால்களை பக்க சுவர்களில் ஊன்றி நம்மை சறுக்காமல் நிறுத்திக்கொள்ள முடியும்னு நினைத்து அதையே எடுத்துக்கொண்டேன்.

எழுத கஷ்டப்பட்ட தமிழ்/ வடமொழி எழுத்துகள். (தயவு செய்து யாரும் துப்பாமல் படிக்கவும்) பலவருடங்களாக தமிழ் எழுதாமல் இருந்ததில் கிடைத்த பலன் இதுன்னு சொல்லனும். "ற" இதை றா என்று அந்தகாலத்தில் வளைத்து எழுதுவாங்க இல்லையா அது எழுதவே வரல. :). பிறகு கால் சேர்த்து "றா" என்றே எழுதினேன். ஏன் வரலன்னு கேட்கக்கூடாது. எழுதிப்பாருங்க தெரியும். அடுத்து இ,ஜ,க்ஷ், ஹ, ஸ போன்ற எழுத்துக்களும் சிலமுறை தனியாக எழுதிப்பார்த்து பழகியப் பின்பே சார்ட்டில் எழுதினேன். எகொகஇ!!  இதனால் சொல்லவருவது என்னவென்றால், கீபோர்ட்டில் தமிழில் டைப்பினால் மட்டுமே போதாது, அவ்வப்போது தமிழை நோட்டுப்புத்தகத்திலும் எழுதிப்பழகனும்.

ஹான்.. சொல்லமறந்துட்டேனே... என்னுடைய "Project" ஐ தான் Display க்கு தேர்ந்தெடுத்திருக்காங்க. :). குட்டீஸ் எல்லாத்தையும் பின்னுக்கு தள்ளியாச்சி.. ஸ்ஸ்ப்ப்பா.... எத்தனைமுறை நான் பாடுவதைப்பார்த்து நக்கல் சிரிப்பு சிரிச்சி இருக்குங்க இதுங்க.. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி பழிக்கு பழி, ரத்தத்திற்கு ரத்தம்.. !

அணில் குட்டி : நானும் எத்தனைதரம் தான் இந்தம்மாவை கழுவி கழுவி ஊத்தறது??!. சின்ன ....சின்னக்கூட இல்ல.... இப்பதான் நடக்க ஆரம்பிச்ச நண்டு சிண்டுக்கூடவெல்லாம் போட்டிப்போட்டு அதையும் ஜெயிச்சிட்டேன்னு தம்பட்டம் அடிச்சிக்கறாங்களே.... துப்பக்கூட எச்சியில்ல வாயில அவ்ளோ துப்பியாச்சி...ச்சே..!

அதிருக்கட்டும்..இவ்ளோ நேரம் எருமையா படிச்சீங்களே.... ஹி ஹி..டங் ஸ்லிப்டு, பொறுமையா படிச்சீங்களே தலைப்புக்கும் பதிவுக்கும் என்னா சம்பந்தம்னு யோசிச்சீங்களா...?!  பாட்டு வகுப்பில், இவிங்க சொன்ன அந்த 3.5 -10 வயசு குழந்தைகள்  சும்மா கணீர்னு பாடும்.. நம்ம அம்மணி குரல் தான் தெரியுமே ..என்னாட்டுமே.. கீச் கீச். டீச்சர் தனியா அம்மணிய பாட சொல்லும் போது, அம்மணி வாய் அசையும் ஆனா வார்த்தைக்கு பதிலா "கீச் கீச் கீச் னு சத்தம் மட்டும் வரும். எல்லா குட்டீஸும் வாயில் கைய வச்சி மூடிக்கிட்டு, ரகசியமா சிரிக்குங்க... ..அம்மணி முகத்தை அப்ப பாக்கனுமே...  :))))))))))))

பீட்டர் தாத்ஸ் : Education is what remains after one has forgotten what one has learned in school.
.

எங்க வீட்டு சமையல் : கீரை

எங்க ஆயா, "ஆடு, மாடு மாதிரி இந்த பொண்ணு கீரையை சாப்பிடுது, இதுக்கு விருந்துன்னா கீரை செய்துவச்சா போதும் போலருக்கே.." ன்னு சொல்லுவாங்க.  அந்தளவுக்கு கீரையை சாப்பிடுவேன். :) எங்க வீட்டு சமையலில் ஸ்பெஷல் உணவு  "கீரை" தான். ஆயாவிடம் வளர்ந்ததாலோ என்னவோ, கீரையின் அனைத்து வகைகளும் அவங்க செய்துக்கொடுத்து சாப்பிட்டு இருக்கேன். அதில் சிலவற்றை எழுதியிருக்கேன்.

1. கீரை பருப்பு கடைசல் : 

தேவையானப்பொருட்கள் :

1. துவரம் பருப்பு :  100 கி
2. அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை  - இதில் ஏதாவது ஒன்று ஒரு கட்டு.
3. வெங்காயம் -1
4. பூண்டு - 4 பல்
5. தக்காளி -1  
6. பச்சைமிளகாய் - 2
7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
8. தாளிக்க - சிறிது வடவம் & பெருங்காயம்
9. எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை : கீரையை ஆய்ந்து நன்றாக கழுவி, பின்பு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கியப்பின் கழுவக்கூடாது. துவரம்பருப்பை மஞ்சள் பொடி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், அதில் நறுக்கிய கீரையைப்போட்டு, கீரை வெந்தவுடன் (பச்சைநிறம் மாறிவிடாமல்) உப்புப்போட்டு கலக்கி இறக்கி, கீரைக்கடையும் சட்டியில் கொட்டி, நன்கு கடைந்து கடைசியாக வடவம் + பெருங்காயம் தாளித்துக்கொட்டி அதையும் லேசாக கடைந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். 

2.  சிறுக்கீரைக்கு மட்டும் பைத்தம் பருப்பு சேர்த்து , மேற்சொன்ன அதே முறையில் செய்ய வேண்டும்.

3. கீரைப்பொரியல் : முளைக்கீரை தவிர மற்ற கீரைவகைகளை பொரியல் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள் :
1. கீரை : ஒரு கட்டு
2. கடுகு : 1/4 ஸ்பூன்
3. உளத்தம்பருப்பு : 1/2 ஸ்பூன்
4. காய்ந்தமிளகாய் : 2
5. துவரம் பருப்பு / பைத்தம்பருப்பு : ஒரு பிடி
6. தேங்காய் துருவல் : சிறிது
7. எண்ணெய் : தாளிக்க
8. உப்பு : தேவைக்கேற்ப
 
செய்முறை : கீரையை ஆய்ந்து, கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பருப்பை ஒன்றும் பாதியுமாக வேகவைத்துக்கொள்ளவும். வாணல் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு போட்டு பொரிந்ததும், உளத்தப்பருப்பு, கிள்ளிய காய்ந்தமிளகாய் போட்டு வதக்கி அதில் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி சிறுத்தீயில் வைத்து  மூடவும். 2-3 நிமிடத்தில் கீரை வதங்கிவிடும். பருப்பும், உப்பும் சேர்த்து நீர் நன்கு வடியுமளவு வதங்கியவுடன், கடைசியாக தேங்காய் துருவலைக்கொட்டி இறக்கவும். அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை பொரியல் ரொம்பவே ருசியாக இருக்கும். பருப்பு சேர்க்காமல் வெறும் தேங்காய்துருவல் சேர்த்தும் செய்யலாம். விரும்புவர்கள் வெங்காயம்,பூண்டும் சேர்க்கலாம். தாளிக்கும் போதே இவற்றையும் போட்டு வதக்கி லேசாக தண்ணீர்விட்டு வெங்காயம் வெந்தவுடன் கீரையை சேர்த்து செய்யவேண்டும்.

 4. கீரைக்கூட்டு :  முளைக்கீரை & கீரைத்தண்டில் மாத்திரமே கூட்டு செய்யமுடியும். மற்றக்கீரைகளுக்கு கூட்டு பொருந்தாது. 
 
தேவையானப்பொருட்கள் :

1. கீரைத்தண்டு, முளைக்கீரை இதில் ஏதாவது ஒன்று
2. கடலைப்பருப்பு : 100கி
3. வெங்காயம் : 1 
4. பூண்டு - 4 பல்
5. தக்காளி -1  
6. பச்சைமிளகாய் - 2
7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
8. தாளிக்க - கடுகு, சீரகம்
9. எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை : பருப்பை பூண்டு, மஞ்சள்பொடி போட்டு வேகவைத்து, அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கியக்கீரையை சேர்த்து நன்கு வெந்தவுடன் , கடுகு, சீரகம் தாளித்துக்கொட்டி கடைந்து பரிமாறலாம்.

5. முளைக்கீரை பூண்டு கடைசல் :

தேவையானப்பொருட்கள் :

1. முளைக்கீரை
2. பூண்டு : 10 பல்
3. பச்சைமிளகாய் : 2
4. வடவம் : சிறிது
5. பெருங்காயம் : சிறிது
6. சீரகம் : 1 ஸ்பூன்
7. எண்ணெய், உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை : ஒரு பாத்திரத்தில் பூண்டு நனையும் அளவு தண்ணீர் விட்டு, அதில் சீரகத்தை சேர்த்து வேகவைக்கவும். கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, பச்சைமிளகாயை நீள் வாட்டில் நறுக்கி, பூண்டு வெந்தவுடன் அதில் கொட்டி வேகவைக்கவும். கீரை வெந்தவுடன் கடைசியில் உப்பு சேர்த்து கலக்கி 1 நிமிடம் வைத்து, வடவம் பெருங்காயம் தாளித்துக்கொட்டி, சட்டியில் கொட்டி நன்கு மசித்துக் கடைந்து பரிமாறவும்.

6. கீரை புளி கடைசல் : அரைக்கீரையில் மட்டும் இதை செய்யலாம்.

தேவையானப்பொருட்கள் :

1. அரைக்கீரை
2. புளி : 1/2 எலுமிச்சை அளவு
3. பச்சைமிளகாய் : 2
4. வெங்காயம் : 1
5. வடவம் & பெருங்காயம் சிறிது
6. எண்ணெய் & உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை : அரைக்கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து சிறுத்தீயில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் புளியை க்கரைத்துவிட்டு (கெட்டியாக கரைக்கவேண்டும்)  வடவம் பெருங்காயம் தாளித்துக்கொட்டி, உப்பு சேர்த்து ஒரு கொதிவந்தவுடன், சட்டியில் கொட்டி நன்கு கடையவும்.

7. கீரை சாம்பார் : முன்னரே எழுதியிருக்கேன் இங்கு செல்லவும்.   அரைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை சாம்பார் ருசியாக இருக்கும். மற்றக்கீரைகள் சாம்பாருக்கு பொருத்தமாக இருக்காது.

8. இவற்றைத்தவிர மருத்துவ குணம் வாய்ந்த முடக்கத்தான், தூதுளை, வல்லாரை, பிரண்டை கீரை வகைகளின் செய்முறையைத் தனியாக எழுதுகிறேன். 

அணில்குட்டி : எங்க... புளிக்கடைசல் ஃபோட்டோ மிஸ்ஸிங்....?! 

பீட்டர்தாத்ஸ் : Cooking is like love. It should be entered into with abandon or not at all.

சிரி சிரி சிரி...சிரி....

சிரிப்பைப்பற்றி எழுதனும்னு எனக்கு ஆர்வம் வந்ததற்கு காரணம் நண்பர் ஜே.கே. (ஜெயகுமார்). இவரை சந்தோஷ் திருமணத்தில் சந்தித்தேன். மற்ற நண்பர்கள் அனைவரும், விடுதியில் தங்கிவிட, இவர் சந்தோஷ்க்கு ஆஸ்தான ஓசி ஃபோட்டோகிராஃபராக சர்வீஸ் செய்ததால், இரவு வெகுநேரம் மண்டபத்திலேயே இருந்தார், காலையிலும் சந்தோஷ் தூங்கி எழுந்ததிலிருந்து ஃபோட்டோ எடுக்கவேண்டிய கடமை கட்டிப்போட்டதால், 5 மணிக்கு முன்னதாகவே வந்து அவர் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தார். எப்படியாவது சந்தோஷை "அழகாக" ஒரே ஒரு ஃபோட்டோவாது எடுக்க வேண்டுமென்பதே ஜே.கே'வின் அன்றைய லட்சியமாக இருந்ததுன்னா பாருங்களேன் !! ஸ்ஸ்யப்பாஆஆஆ....

அங்க பிரச்சனை என்னன்னா..நம்ம ஜே.கே' இருக்காறே அவருக்கு சிரிக்கவே வரலைங்க. சீரியாஸாக பேசினாலும் முகத்தை உர்ர்ன்னு வச்சி இருக்காரு, யாராவது சிரிக்க சிரிக்கப் பேசினாலும் முகத்தை உர்ர்ன்னே வச்சியிருக்காரு. அப்பப்ப... "நண்பா..இதுக்கு நீங்க சிரிக்கனும்னு" சொல்லித்தரவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டேன். அப்பதான் எனக்கு தோணிச்சி, இவரை இப்படி "சிரி சிரி" ன்னு சொல்லவேண்டியதாக இருக்கே. இவருக்குக்காக சிரிப்பைப்பற்றிய நல்ல விசயங்களை தொகுத்து எழுதினால் என்னன்னு. எப்ப?? சந்தோஷ் திருமணம் நடந்த நவம்பர் மாதம், ஆனால் அதை இப்பதான் எழுதறேன். சரி விசயத்திற்கு வருவோம்...

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் சிரிப்பு. சிரிக்கத்தெரியாத மனிதர்கள் என்றில்லை, எந்தவித உணர்ச்சிகளையும் அதாவது நவரசங்களையும் சட்டென்று வெளிப்படுத்தாத மனிதர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருமுறை நீயா-நானா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணியின் முகத்தை "டைட் க்ளோஸ் அப்" பில் காண்பித்து, "நிகழ்ச்சி ஆரம்பித்திலிருந்து முடியும் வரை, அதாவது 3 மணிநேரத்திற்கும் மேலாக, அவர் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் ஒரே மாதிரியாக அமர்ந்திருந்தார்" என்று குறிப்பிட்டனர். இப்படி ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்துவது எத்தனை சிரமம் என்று அவரின் கணவர் அன்று விவாதத்தில் கலந்துக்கொண்டு விளக்கம் அளித்தார். எகொசஇ !!!
 
கொஞ்சம் யோசிங்க, எப்போதும் ஒரே மாதிரியான இறுகின முகத்தோடு இருக்கும் ஒருவரைப்பார்த்தால், எப்படி நம் அன்றாட வேலைகள் சாதாரணமாக நடக்கும்.?! சீக்கிரமே, நம் முகமும் அவர்களைப்போலவே இறுக்கமாக மாறிவிடும். சிரிச்சிட்டா மட்டும் என்ன ஆகிடப்போகுதுன்னு கேட்கறீங்களா? சிரிப்பில் என்னவெல்லாம் இருக்கிறது எனப் பார்க்கலாமே:-

=> சிரிக்கும் போது, உடலில் 300 தசைகள் தளர்ச்சி அடைகின்றன.

 => நாம், ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடம் சிரித்தோமானால் கிட்டதட்ட 40 கலொரிகள் எரிக்கபடுகின்றதாம், அப்படியானால் ஒரு வருடத்தில் எந்த வித உடற் பயிற்சியும் செய்யாமல் 1.82 கி.கி உடல் எடையை குறைக்கலாமாம். ஆக, எந்த செலவும், உடல் உழைப்பும் இல்லாமல் நம்மால் உடல் எடையை குறைக்கமுடியுமானால்? பைத்தியம்னு சொன்னால் கூட சிரிக்கலாமே..

 => ஒரு நல்ல, ஆத்மார்த்தமான சிரிப்பு, நம் உடலின் தசைகளை, 45 நிமிடங்களுக்கும் அதற்கு மேலாகவும் தளர்த்தி, உடல் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை விடுவிக்க செய்கிறது.

=> நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்கள் குறைந்து, நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கிறது மற்றும் தொற்றுகளை எதிர்க்கவல்ல ஆன்டிபாடிகளை அதிகரிக்க உதவுகிறது, இதனால் நம் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தமுடிகிறது.

 => உடலில் இயற்கையாகவே நல்ல இரசாயனங்களை வெளியிடும் எண்டோர்பின்'ஐ சிரிப்பு தூண்டுகிறது. இந்த எண்டோர்பின்கள் ஒட்டுமொத்தமாக நம் உணர்வுகளை நேர்மறையாக, நல்லமுறையில் தூண்டவும், உடல் உபாதைகளால் ஏற்படும் வலியை தற்காலிகமாக குறைக்கவும் உதவுகிறது.

=> முக்கியமாக, சிரிப்பு , நம் இதயத்தை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் பிற இதய பிரச்சினைகளுக்கு எதிராக நம்மை பாதுகாக்க உதவுவதோடு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

சிரிப்புக்கும் நம் மனதிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அதையும் பார்க்கலாம்:-

=> சிரிப்பு, நமக்கு கவலையேற்படுத்தக்கூடிய உணர்ச்சிகளை எளிதாக கரைத்துவிடுகிறது. பொதுவாக நாம் சிரிக்கும் போது, நம் கவலைகளையும், வருத்தங்களையும் அந்த நேரத்திற்கு கண்டிப்பாக மறந்துவிடுவோம்.

 => நம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளவும், மன அழுத்ததிலிருந்து விடுபட்டு, மனதுக்கு தேவையான நேர்மறையான சக்தியைப் பெறமுடிகிறது. இதனால், நம் அன்றாட வேலையில் அதிக கவனம் செலுத்தவும், சாதிக்கவும் முடிகிறது

 => நகைச்சுவை, நம்மை மிகவும் யதார்த்தமான, மன அச்சுறுத்துல் இல்லாத நிலையில் பார்க்க/பழக/சிந்திக்க வைக்கிறது.

 => சிரிப்பைத்தவிர, வேறெதுவும், நம் மனதையும் உடலையும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேகமாக உதவுவதில்லை.

=> நகைச்சுவை, நம் மனச்சுமைகளை குறைத்து, நம்பிக்கையை தூண்டுகிறது, மற்றவர்களுடன் நம்மை இணைக்கும் கருவியாகவும், கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க உதவுகிறது.

இப்படி சிரிப்பின் சிறப்புகளை சொல்லிக்கிட்டே போகலாம். இப்போதெல்லாம், சத்தம் போட்டு சிரிக்க நேரமில்லாத நாட்களில் நகர்ந்துக் கொண்டிருக்கிறோம். இதில் குறிப்பாக பெண்கள் சத்தம் போட்டு சிரிப்பதென்பது நம் சமூகத்தில், சபையில் செய்யக்கூடாத செயல். அதனால் பொது இடங்களில் சிரிப்பு வந்தாலும் அதை வாய்மூடி சிரித்தோ, சிரிப்பை அடக்கியோ தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். மனைவி பொது இடங்களில் அதிகமாக சிரிக்கிறாள் என விவாகரத்து வாங்கிய ஆண்கள் இங்குண்டு. ஆண்கள் சிலரும் கூட பொது இடங்களில் சத்தம் போட்டு சிரிக்க தயங்குவர். நாம் வளர்க்கப்பட்ட விதம் அப்படி.

"Laughing Bird " என்ற செல்லப்பெயர் எனக்குண்டு. இதைத்தவிர ஓவராக அடக்கமுடியாமலும், சம்பந்தமில்லாமலும் சிரித்து, "லூசு, கழண்டக்கேசு' ன்னு பேரெல்லாம் அடிக்கடி வாங்குவதுமுண்டு. நமக்கு பேர் வாங்கறதா முக்கியம்? சிரிப்பது தானே முக்கியம்.. சிரிப்பதை வெட்கப்படும் ஒரு செயலாக நான் இதுவரை நினைத்ததில்லை. காரணம் ஒன்னும் பெரிசா இல்லை, என்னால சிரிப்பை அடக்கமுடிவதில்லை. அறிந்தவர் அறியாதவர் என யாரைப்பார்த்தாலும் புன்னகைக்கும் பழக்கமும் இருக்கிறது. சோகத்தில்/கவலையில்/பிரச்சனைகளில் இருப்பவரும், நாம் சிரிப்பதைப் பார்த்து பதிலுக்கு சிரிப்பர். சிரிக்கும் போது அடுத்தவர் முகத்தில் ஏற்படும் புத்துணர்ச்சியைப் பார்ப்பதில் எனக்கொரு சந்தோஷம் திருப்தி ஏற்படும், மேற்கொண்டு அவரிடத்தில் எளிமையாக நட்பு பாராட்டிக்கொள்ளவும் முடியும்.

சென்றவாரம் சென்னையில் நடனம் சம்பந்தப்பட்ட ஒரு Workshop' க்கு சென்றேன். அங்கு நவரசங்களையும் சொல்லிக்கொடுத்து, அவற்றிலிருந்து மன அழுத்தத்தை வெளிக்கொண்டு வருவதையும் சொல்லிக்கொடுத்தனர். அதில் ஒன்று சிரிப்பு. Laughter therophy பற்றிய ஒரு வீடியோ : pls watch this -> http://www.youtube.com/watch?v=w5KjERog9uM  

சிரிப்பின் சிறப்பு & வகைகளைப்பற்றி அந்தக்காலத்திலேயே "என்.எஸ்.கே" பாடியிருக்காரு... 
 

மதுரம் அம்மா சிரிக்கறதை பார்த்தப்பிறகும் நீங்க யாராச்சும் சிரிக்காம இருந்தீங்கன்னா... கண்டிப்பா உங்களுக்கு.......... ....... :)

அணில் குட்டி : //"லூசு, கழண்டக்கேசு'//....அட ?!!  புதுசா சொல்லிக்கறாங்களாம்...ஹய்யோ ஹய்யோ....!

 பீட்டர் தாத்ஸ் : To truly laugh, you must be able to take your pain, and play with it!

Thx to : Google & Youtube