கொலை செய்ய போகிறேன்..

சில மாதங்களாக தான் இப்படி. என்னை மீறிய விடுபடமுடியாதொரு ஆழ்சிந்தனை. ஆம் அந்த மனித உருவத்தை கொன்றே தீரவேண்டும். என் முடிவில் மாற்றம் வர பலமுறை யோசித்தும் விட்டேன், ஆனால் கொல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும் போகவில்லை அதற்கு என்னளவில் நியாயமான காரணங்கள் கூறப்பட்டுவிட்டது. அடுத்தது என்ன செய்யவேண்டும் என்பதில் என் கவனம் செல்ல ஆரம்பித்துவிட்டது. அந்த உருவத்தினை அதற்கு தெரியாமல் எப்போதும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறேன்.

எப்படி கொல்லலாம் என்று திட்டமிடுவதில் தான் பெரிய சிக்கல். கொலை செய்வது கொடூரமான ஒரு செயல் என்பதை உணர்ந்தவளாக இருக்கிறேன், ஆனால் அந்த உருவம் உயிருடன் இருக்கக்கூடாது என்ற எண்ணத்திலும் எனக்கு மாற்று கருத்து இல்லை. இப்படி இரண்டு வெவ்வேறு மனநிலையை ஒன்றாக்கி, அதுவும் அந்த மனநிலை கொலைசெய்ய வேண்டும் என்ற மனநிலையாக மட்டும் ஆக்கிக்கொள்வது அத்தனை சுலபமானதாக எனக்கு தெரியவில்லை.

இருந்தாலும், அதை கொண்டு வர என்னைத்தயார் படுத்துக்கிறேன். கொலை செய்தால், உருவத்திற்கு முதலில் வலிக்கக்கூடாது, கஷ்டப்படக்கூடாது, கொலைசெய்கிறேன் என்றும் தெரியக்கூடாது. அப்படிப்பட்ட நாசுக்கான கொலையாக இருக்கவேண்டும். என் மேல் பழியும் வந்துவிடக்கூடாது. இது சட்டம் சார்ந்த பயமில்லை, மனசாட்சி சார்ந்த பயம். கொலை செய்துவிட்டு நிம்மதியாக எப்படி இருந்துவிட முடியும். நியாயமான காரணங்கள் சொல்லப்பட்ட ப்பிறகு அதை கொலை என்று சொல்லக்கூடாது, வேறு வார்த்தை கண்டுப்பிடிக்க வேண்டும்.

தீவரமான சிந்தைனைக்கு தீனிப்போட தமிழ், ஆங்கில, மலையாள க்ரைம் படங்களை தேடிக்கண்டுபிடித்து பார்க்கத்தொடங்கினேன். வலிக்காமல் செய்தாலும் தடையம் இல்லாமல் செய்வது அத்தனை சுலபமான காரியமாக த்தெரியவில்லை. இப்படி சுலபம் இல்லை என்று த்தெரிய வரும் போது, கொலை செய்ய வேண்டாமென்ற முடிவுக்கும் வந்தேன். ஆனால் அந்த முடிவு ஒன்றிருண்டு நாட்களில் காணாமல் போய், எப்படியும் கொலை செய்தே ஆக வேண்டுமென என்ற நிலைக்கே வந்துவிடுகிறது.

மருத்துவ, போலிஸ்கார நண்பர்களின் சகவாசத்தை அதிகப்படுத்தினேன். அவர்களுக்கு கண்டிப்பாக எளிமையாக சாட்சியமின்றி கொலைசெய்ய வழிகள் தெரிந்திருக்கும். அதில் ஏதாவது ஒன்றை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள வேண்டும். நாட்கள் நகர்ந்து மாதங்கள் ஆனது. ஆனால் நான் நினைத்தப்படி கொலை செய்ய எனக்கு சரியானதொரு திட்டம் கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சியை மட்டும் விடவில்லை. அது சம்பந்தமாக எதையாவது ஒன்றை செய்தவாரே இருந்தேன். உருவத்தை தொடர்வதையும் விடவில்லை. விலகாமல் இருந்தால் தான், தீடீர் திட்டங்களை செயற்படுத்த முடியும்.

இருக்கும் வேலை, இடம் அத்தனையும் ஒரே நாளில் மாறியது. மாற்றம் எதிர்பார்க்கவில்லை, கட்டாயம் சென்றாகவேண்டும். அது ஒரு மலைசார்ந்த குளிர் பிரதேசம், வண்ண வண்ணப்பூக்களும்,  ரீங்காரமிடும் வண்டுகளும், மேகம் அருகில் வந்து நம்மை தொட்டு அழைக்கும் சிலிர்ப்பும், பறவைகளின் கூக்கூ சத்தமும், ஓவென்ற கூச்சலிட்டு கொட்டும் அருவியும், அருவி ஓரத்தின் பச்சைப்புல் வெளியில் துள்ளித்திரியும் மான்குட்டிகளுமென இயற்கையோடு என்னை பிணைத்துக்கொள்ளக்கூடிய ஒரு இடமாக அமைந்துவிட்டது. இயற்கை பிரியர்களுக்கு இதைவிட ஒரு வரப்பிரசாதம் வேண்டுமோ.. விடுமுறை நாட்களிலும், வேலை முடிந்தவுடன் கிடைக்கும் நேரத்திலும் பறவைகளுடன் பேசுவதும், வண்ணத்து பூச்சியின் வண்ணத்தை ரசிக்கவும், குயிலோடு சேர்ந்து பாடவும், அருவியில் குளித்து ஆனந்த சயனம் கொள்ளவும் எனக்கு நேரம் போதாமல் இருந்தது. பல நாட்களில் ஆகாரம் கூட மறந்திருந்தேன்.

அப்படியொரு அற்புத இடத்தில் தான் அவனை சந்தித்தேன். நான் அவனை சந்தித்தென் என்றால், அவனும் என்னை சந்தித்தான் என்று தானே அர்த்தம். அவனும் என்னைப்போலவே இந்த இடத்திற்கு புதிது. ஒருவருக்கு ஒருவர் பரிச்சயம் ஆனோம். என்னைப்போன்றே அவனும் இயற்கை விரும்பியாக இருந்தான். என்னைப்போலவே அவனும் அருவியின் அழகையும் சத்தத்தையும் ரசித்தான்.  "என்னைப்போலவே" முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது...  

உருவத்தை தொடர்வதை மறந்து வெகுநாளாகிவிட்டது, அவனைத் தொடர ஆரம்பித்து இருந்தேன். என் கொலைகார எண்ணம் ஏனோ காணாமல் போயிருந்தது. நானும் ஏன் காணாமல் போனது என்று யோசிக்க நேரமில்லாமல் அவனுடைய நினைவில் லயித்திருந்தேன். அவனுடன் சேர்ந்து கனவுகளில் உலாவர இயற்கை எனக்கு துணையாக இருந்தது. அவனை நினைக்க வைப்பதில் அவனும் தீவரவாதியாக மாறி என்னை அவனுடயவளாக மாற்றியிருந்தான். அவனின் காதலியாகியிருந்தேன். வாழ்வதற்கும், இந்த வாழ்க்கையை அவனோடு சேர்ந்து ரசிக்கவும் தொடங்கியிருந்தேன். அவனுக்காக புதிதாக பிறந்து, வளர்ந்து வர ஆரம்பித்தேன். சில நேரங்களில் என் அன்பின் மிகுதியை தாங்கமுடியாத அவன், "ஏனடி எனை கொல்'கிறாய்" என்று சொல்லும் போது மட்டும்,  எது நிஜமான கொலை என்ற குழப்பம் எனக்குள் ஏற்பட்டது.

மாற்றங்கள் எப்போது எப்படி யாரால் வரும் என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் வந்துவிட்டது. இது எதிர்பார்த்தது அல்ல, ஆனாலும் என்னை கொலைகாரி ஆக்குவதிலிருந்து இயற்கையாகவே தப்பிக்க வைத்துள்ளது. இப்படி ஒரு மாற்றம் வருவதற்கு முன், ஒரு வேளை அவசரப்பட்டு அந்த உருவத்தை கொலை செய்திருந்தால்....?!! 

ஆம், அவன் அந்த உருவத்தை சந்தித்திருக்கவே மாட்டான். அந்த உருவம் யாரெனக்கூட அவனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லாமல் இருந்திருக்கும். வேறு யாரோ அவனுக்கு காதலியாகியிருக்கலாம்.
.
  

அப்பா -அற்புதமாகிய அருட்பெருஞ்சுடரே

அப்பா என்றால் கம்பீரம். அவரின் தோற்றம், நடை, பேச்சு, உடல் மொழி எல்லாவற்றிலும் ஒரு கம்பீரம் இருக்கும். அப்பாவின் உயரமே (6 அடிக்கு சற்றே குறைவு) அந்த கம்பீரத்திற்கு முதல் காரணம்.

அப்பாவைப்பற்றி சொல்ல ஏராளம் இருந்தாலும், அப்பாவிடமிருந்து நான் பெற்றவற்றை விட, பெறாமல் விட்டுப்போனதைப்பற்றி எழுதி வைக்க விரும்பிகிறேன். அதில் முக்கியமானது பொறுமை.  அடுத்து தேவையில்லாமல் பேசவே மாட்டார். ஏன் தேவைக்குமே அப்பாவின் புன்னகையும், மெளனமுமே பல சமயங்களில் பதில்களாக இருக்கும்.  அதிகமாக பேசுவதாக வீட்டில் யாரும் திட்டும் போதுக்கூட, பெரியவன்/ர் அமைதிக்கு இப்படி ஒரு வாயாடி பொண்ணா? என சொல்லியே என்னை திட்டுவார்கள்.

என் படிப்புப்பற்றிய கனவு அப்பாவிடம் நிறையவே இருந்தது. ஆண் குழந்தைகளுக்காக அப்படி ஒன்றும் அவர் திட்டம் வைத்திருக்கவில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.  என்னை டாக்டர் ஆக்கவேண்டும் என்பதே அப்பாவின் கனவு. மெடிக்கல் இன்ஸ்ட்ருமென்ட் பாக்ஸ் ஒன்றை, நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் போது வாங்கி, மர அலமாரியில் வைத்திருந்தார். அடிக்கடி அவரே அதை எடுத்து பிரித்துப்பார்த்து கொள்வார். என்னிடம் நீ டாக்டர் ஆகவேண்டும் என சொன்னதுமில்லை, கட்டாயப்படுத்தியதுமில்லை. சின்ன அண்ணன் அந்தப்பெட்டியை ப்பற்றி கேட்கையில், "பாப்பாக்கு வாங்கி வச்சி இருக்கேன். நல்லா படிக்குது, நிச்சயம் டாக்டருக்கு படிக்கும், அப்ப தேவைப்படும்" என்று சொன்னார்.

ஆனால் நமக்கு அறிவியலில் வேதியியல் மட்டும் எட்டிக்காயாக இருந்தது அப்பாவிற்கு தெரியாது.  (+1 படிக்கும் போது அப்பா இல்லை), அவருக்கு தெரிய வாய்ப்பே இல்லாமல் போனது. :(. வேதியியலை மனப்பாடம் செய்து எழுதும் நிலையில் தான் என் அறிவு இருந்தது.

என்னை டாக்டராக்க ஆசைபட்டு இருந்தாலும், நடுநடுவில், ஏர் ஹோஸ்டர்ஸ்'க்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வமும் அப்பாவிடம் இருந்தது. இதை நேரடியாக என்னிடம் சொல்லி இருக்கிறார். அப்போதைய காலக்கட்டத்தில் நல்ல உயரம், கலர் இருக்கும் பெண்கள் தான் தேர்வு செய்யப்படுவார்கள். நான் அதிக உயரம் வளரமாட்டேன் என அப்பா கணித்தும் இருந்தார். அதைச்சொல்லியே, நீ ஆவது கஷ்டம் என்றும் அவரே கவலைப்பட்டு க்கொள்வார்.

என் திருமணம் குறித்த பேச்சு வரும் போது, தென்பெண்ணை ஆற்றில் தான் பாப்பாவின் திருமணம் என்று சொல்லியிருந்தார். அப்பா அதற்கு சொன்னக்காரணங்கள், மிக யதார்த்தமானவை, அவரின் குணத்தின் பிரதிபலிப்பாகவே அவை வந்திருந்தன. ஆற்றில் எவ்வளவு கூட்டம் வந்தாலும், நெருக்கிக்கொண்டு இல்லாமல் தாராளமாக புழங்க முடியும். வருபவர்கள் திருமணம் முடிந்து உடனே கிளம்பிவிடாமல், ஆற்றில் குளித்து,விளையாடி , நாம் அங்கேயே சமைத்து தரும் உணவை சுடச்சுட சாப்பிட்டு சுற்றுலா சென்று வருவதைப்போல இருக்கலாம். திருமணம் என்ற சடங்கு இப்படித்தான் செய்யவேண்டும் என்பதை மீறி, சுதந்திரமாக, நம் செளகரியத்திற்கு, சந்தோஷத்திற்கு ஏற்றவாறு செய்ய வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது. சாப்பாடு வெரைட்டி ரைஸ் ஆக நிறைய செய்து வைத்துவிடவேண்டும் என்றும் சொல்லி இருந்தார். ப்ஃவே டைப். எல்லாமே அவரின் கனவுகளாக மட்டுமே நின்றுவிட்டன !

அப்பா வீட்டின் முதல் பிள்ளை, அந்த மரியாதையும் மதிப்பும் அவர் இறக்கும் வரை அவர் நடந்துக்கொண்ட முறையில் அவருக்கு கிடைத்தது.  அப்பாவிற்கென தனி நாற்காலி, அதில் வேறு யாரும் அமரமாட்டோம். பெயரே அப்பா சேர். அதேப்போல, அப்பா தட்டு, அப்பா பீரோ, அப்பா ரூம், அப்பா தலையணை, அப்பா போர்வை, அப்பா டிபன் பாக்ஸ், அப்பா சவரடப்பா என தனித்தனியாக இருந்தது. மற்றவர் யாரும் அதை பயன்படுத்தியதில்லை.
 
அப்பாவிற்கு எல்லா இசைக்கருவிகளையும் வாசிக்க தெரிந்திருந்தது.  ஹார்மோனியம் , எலக்ட்ரிக் கிட்டார் + ஆம்லிஃபையர் , மோர்சிங் போன்றவை வைக்க தனி அறையும் அதில் அப்பா மட்டுமே சென்று வரலாம் என்பதும் சொல்லப்படாத ரூல்ஸ். நாங்கள் சென்றால் எதையாவது நோண்டி, வாசிக்கும் போது சுருதி தப்புவது அப்பாவிற்கு கோவத்தை உண்டாக்கும். அதனால் எங்களுக்கு அந்த இடம் தடைசெய்யப்பட்டு இருந்தது. அப்பா இருக்கும் போது சென்று எதைத்தொட்டு என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லாமல் இருப்பார் என்பது வேறு விசயம். ஒரு காலி வயலின் பெட்டியும் வீட்டில் இருந்தது.   மிருந்தங்கம், தபேலா, வயலின், வீணை போன்றவை அவர் வாசித்து நான் பார்த்தவை. ஆனால் வீட்டில் இல்லை. மோர்சிங் மட்டும் அவரைத்தவிர வேறு யாருக்கும் வீட்டில் வாசிக்க அனுமதி இல்லை.

அற்புதமான குரல்வளம் கொண்டவர்,  கர்நாடக மற்றும் சினிமா பாடல்கள் இரண்டுமே பாடுவார். லதாஜி' யின் குரல் அப்பாவிற்கு மிகவும் பிடித்தக்குரல். அப்பாவின் ஃபேவரேட் &அடிக்கடி பாடும் பாடல்கள்,

1.கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
2. உள்ளம் உருகுதய்யா
3. விநாயகனே விணைத்தீர்ப்பவனே
4. அய்யப்பன் பாடல்கள் அணைத்தும் .
5. "நானொரு முட்டாளுங்க"  - திரு.சந்தரபாபு பாடல்
6. காற்றினிலே வரும் கீதம் -  எம்.எஸ் அம்மாவின் பாடல்

தாத்தாவின் குரலை ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் அப்பாவின் குரலை செய்யவில்லை..... ........ அப்பா அத்தனை சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நினைக்கவில்லை. :((.


குறிப்பிட்டு சொல்லவேண்டியது, தம்பி, தங்கைகள் (ஒரிஜினல், ஒன்று, இரண்டுவிட்ட உறவுகள் என சில டசன் இருக்கும்), அவரின் மூன்று பிள்ளைகள் என அத்தனைப்பேரில், பெண் குழந்தையான என்னைமட்டுமே அவரின் வாழ்நாளில் 4-5 முறை அடித்திருக்கிறார். அதுவும் இரண்டு முறை சக்கையாக பிழிந்து, தூக்கிப்போட்டு மிதித்திருக்கிறார் என்பது என்னையும் சேர்த்து நாங்களே எங்களை கிள்ளிக்கொண்டு, இது உண்மைதானா? அப்பாவா அடித்தது? என கேட்டுக்கொள்ளும் நிகழ்வு. ஆம், அப்பாவின் பொறுமைக்கே சவால் விடக்கூடிய குழந்தையாக இருந்திருக்கிறேன்.   [அடிச்சி என்ன பிரயோசனும், நல்லப்புள்ளையாக பெத்து இருக்கனும். :) ]

மேல் சொன்ன எல்லாவற்றிற்கும் மேல் அப்பா, அப்பா மட்டும் இல்லை. தாயுமானவர். !! இன்றைய தினத்தில் அப்பாவைப்பற்றி எழுதி வைப்பதில் மனதிற்கு ஒரு நிறைவு.

இனிய தந்தையர் தின வாழ்த்துகள் ! 



விஷத்தை கலந்து கொடுத்துடுவாங்களோ..?!


'என்ன முட்டை இது?'

'காடை முட்டை'

'ஏன் ஒரே மாதிரி இல்லாம கலர் கலரா இருக்கு..'

'அது அப்படித்தாங்க மேடம்'

.'....... காடை எல்லாம் ஒரே மாதிரி இருக்குமா , வேற வேற மாதிரி இருக்குமா?'

'ஒரே மாதிரித்தான் இருக்கும்..'

'அப்ப முட்டை மட்டும் ஏன் கலர் கலரா இருக்கு?'

ஞே.. !

'பாம்பு முட்டை எதும் மிக்ஸ் செய்து வச்சி இருக்கீங்களா?'

ஞே...!!

'வேற எதாச்சும் முட்டைய டூரிஸ்ட்டை அட்ராக்ட் செய்யனும்னு கலர் செய்து வச்சி இருக்கீங்களா?'

ஞே..!

'அது கலரா இல்லையான்னு ஒரு முட்டைய எடுத்து செக் பண்ணவா?'

'அய்யோ..மேடம் ஏன் உங்களுக்கு இவ்ளோ சந்தேகம். .அது காடை முட்டைத்தானுங்க..'

'ம்ம்ம்.. ஒடச்சி ஊத்தும் போது எனக்கு காமிங்க..'

ஞே... !

'ஆனா..நீங்க பாம்பு முட்டைய ஒடச்சி ஊத்தினாக்கூட எனக்கு தெரியாதுங்க..'

'அய்யயோ மேடம்.. அப்படியெல்லாம் செய்ய மாட்டோங்க.. நம்புங்க இது காடை முட்டை தான்'

'ம்ம்... நம்பத்தான் வேண்டி இருக்கு... வேற வழி.. கலர் அடிச்ச பாம்பு முட்டையாவும் இருக்கலாம்..'

ஞே..!!

*******


'மேடம். உள்ளி போடலாமா?'

'போடுங்க போடுங்க.. .. '(வூட்டுக்கார் எனக்கு டப்பிங் )

'மேடம் பச்சை மிளகாய் போடலாமா?.'

'போடுங்க போடுங்க..' (வூட்டுக்கார் எனக்கு டப்பிங் )

'.........ப்பா வெயிட்.. அவர் என்னைத்தானே கேக்கறாரு. .நீங்க ஏன் பதில் சொல்றீங்க. ஏங்க .நிஜம்மாவே உங்களுக்கு ஆம்லெட் போடத்தெரியுமா? தெரியாதா? எப்படி வெங்காயம் பச்சைமிளகாய் இல்லாம ஆம்லெட் போடுவீங்க?'

'மேடம் மிளகுப்பொடி போடட்டூங்களா?'

'போடுங்க போடுங்க.. '(வூட்டுக்கார் எனக்கு டப்பிங் )

'ப்ப்பாஆ.... என்னப்பா நீங்க..வேற...  அவருக்கு ஆம்லேட்டே போடத்தெரியாது போல...'

'அவருக்கு தெரியாமயா கடை நடத்தறாரு.. ?! நீ ஒரே ஒரு ஆம்ப்லெட் ஆர்டர் பண்ணிட்டு, 20 நிமிஷமா அவரை கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ற, ஏண்டி.. உன்னை உங்க வீட்டுல வச்சிக்க முடியாமத்தான் என்கிட்ட தள்ளிவிட்டுடாங்களா?'

'உங்களுக்கு அப்புறமா விளக்கம் சொல்றேன்.... 20 நிமிஷமாவா அவரை நானு டார்சர் பண்றேன்.? .. என் டார்ச்சர் தாங்க முடியாம விஷம் ஏதாச்சும் ஆம்லெட் ல கலந்து கொடுத்துடுவாரா? 

:)))))))))))))))

என்னா சந்தோஷம்,,!!! .. எனக்கு விஷம் எல்லாம் ரொம்ப அதிகம்ப்பா.. பேதி மருந்து போதும்னு சொல்லுங்க..

ஏண்டி. .அப்பக்கூட பேச்சை நிறுத்த மாட்டியா.. ?

ஓ...நான் இன்னும் பேச்சை நிறுத்தலயாஆஆ?  ரைட்,  ஐ ரியலஸ் நவ்... ஷூயூர் ஃபார் சம் டைம் , அண்டில் தி ஆம்ப்லெட் கம்ஸ், ஐ கீப் சைலன்ட்டு..

ஸ்யப்பா... கொஞ்ச நேரம் என் காதுக்கு ரெஸ்ட்..

:((((...

*********

சென்னையில் ஹோட்டல்களுக்கு செல்லும் போது, மெனு கார்டில் "காடை" பெயரை பார்ப்பதுண்டு, ஆனால் வாங்கி சாப்பிட்டதில்லை. முட்டையை இப்போது தான் பார்க்கிறேன். என்ன முட்டை என்று கேட்கும் போதே ஆம்லெட் வேணுங்களா? என்ற கேட்டு, நான்கு முட்டை ஒரு ஆம்லெட் வரும் என்றார். சரி சாப்பிட்டு பார்ப்போமே என்று ஆர்டர் செய்தோம். அவர் ஆம்லெட் போடும் போது, இது கோழிமுட்டை போல வாடை அடிக்காது. நன்றாக இருக்குமென சொன்னார். அப்படித்தான் இருந்தது.  முட்டை கிடைத்த இடம் மூனார், எக்கோ பாயின்ட்.  இது மூனாரின் சுற்றுலா இடங்களில் ஒன்று. ஆற்றின் கரையில் நின்று கத்தினால், எதிர் பாறையிலிருந்து திரும்ப திரும்ப எதிரொளிக்கிறது.


காடை பறவையை பற்றி தெரிந்துக்கொள்ள இணையத்தில் தேடிய போது, மலையாளத்தில் காடை வளர்ப்பு பற்றிய ஒரு படம் யூடியூப்' பில் கிடைத்தது. மிக எளிமையாக, அதிக செலவின்றி, இயற்கை முறையில் காடை வளர்க்கப்படுவதாக சொல்லுகிறார்கள். மலையாளத்தை புரிந்துக்கொண்டாலும், மொழிப்பெயர்க்கும் அளவிற்கு நமக்கு தெரியல. அதனால் நீங்களே பார்த்து புரிஞ்சிக்கோங்க.



விக்கியின் விளக்கம் : http://en.wikipedia.org/wiki/Quail

அணில் குட்டி : நாட்டுமக்களுக்கு ஒரு நல்ல சான்ஸ் மிஸ் ஆகிடுத்து.... :(

பீட்டர் தாத்ஸ் : Birds are a miracle because they prove to us there is a finer, simpler state of being which we may strive to attain

காடை படம் : நன்றி கூகுல்

உனக்கு 20 எனக்கு 18

கவி : நிஜம்மாவே நீ என் புள்ளதானா? ஆஸ்பித்திரியில் நம்பர் மாத்தி கட்டி என்கிட்ட உன்னை கொடுத்துட்டாங்களான்னு எனக்கு டவுட்டா இருக்கு..

நவீன்: எனக்கும் பல வருசமா இதே டவுட்டு தான் மதர்...  எப்படி சுத்தமா அறிவே இல்லாத நீ எனக்கு அம்மாவா இருக்க?

கவி:  ஞே........ !

*******

கவி : ஒழுங்கீனம் ஒழுங்கீனம்.. எனக்கு பொறந்த புள்ளதானாடா நீனு?

நவீன் : சே.. இந்த வீட்டுல இதே பிரச்சனையாப்போச்சி, முதல்ல ஒரு டி.என் ஏ டெஸ்ட் எடுத்து  பார்க்கனும்..

கவி : டெஸ்ட்ல நீ என் புள்ள இல்லைன்னு தெரிஞ்சிட்டா?

நவீன் : ஸ்யப்பா அப்படி மட்டும் வந்துட்டா, என் ரியல்  பேரன்ட்ஸ்ஐ தேடிக்கண்டுப்பிடிச்சி, அவங்க க்கிட்ட ஒரு அமவுண்ட் வாங்கி, என்னை வளத்ததுக்கு உனக்கு செட்டில் பண்ணிட்டு , அவங்களோட கிளம்பிடுவேன்..

கவி : அட மகாப்பாவியே... ..:(

****************

கவி : நவீனாஆஆ... ஒழுங்கா உக்காந்து சாப்பிடு..  முட்டிப்போட வச்சி தலையில குட்டி வளக்கவேண்டி இருக்கும்.. !

நவீன் : ஹா ஹா ஹா. .யாரு ? நீனு என்னை அடிக்கப்போறியா? நான் முட்டிப்போட்டா அந்த ஹைட் தான் நீ இருப்ப..

கவி : அடேய் மந்த புத்தி பாலக், அதனால த்தான் முட்டிப்போடவச்சி குட்டுவேன்னு சொன்னேன். எனக்கு குட்டறதுக்கு ஈசியா இருக்குமில்ல. திட்டும் போதுக்கூட நாங்க ப்ளான் பண்ணித்தான் திட்டுவோம். .எப்பூடீஈஈ ?!

நவீன் : ஞே... !

*************

நவீன் : (சீரியசாக) அம்மா இந்த GAS ஏன் கலர் கலரா எரியுது ?!

கவி : (நானும் சீரியசாக).. GAS GAS நீ ஏன் கலர் கலரா எரியற, என் புள்ளை கேக்கறான் பாரு.. சொல்லு..  கேட்டு இருக்கேண்டா..அது பதில் சொன்னவுடன் உனக்கு சொல்றேன்டா.... கிளம்பு..கிளம்பு....

நவீன் : .............. ................ ஞே...!


************

கவி : நவீன் இன்னைக்கு ஜிம்ல 'புதுசா' வீல் க்ரன்ச்சஸ் சொல்லித்தந்தாங்கடா..  ரொம்ம்ம்ம்ப கஷ்டம்டா.. செய்யவே முடியல.. .கால் செம வலி. .நடக்கவே முடியல இப்ப..

நவீன் : அப்படீன்னா?

கவி : இரு செய்து காட்டறேன்

நவீன் : அடச்சே.. .இதானா? இதுக்கா இவ்ளோ சீன் போடற நீனு..  ஃபுட் பால் கோச்சிங்ல தினம் இதை செய்யவைப்பாங்க. செம மொக்க எக்ஸர்ஸைஸ் இது. என்னமோ புதுசுன்னு சொன்னியேன்னு பார்த்தா.. ?! செய்ய செய்ய பழகிடும்.. ஓவர் சீன் போடாத ..அட்ட பழசு அது..

கவி :...அவ்வ்வ்வ்..
********

கவி : மொட்டுக்குட்டி...

நவீன் : புக் 'கை கையில் வச்சிக்கிட்டு பேச்சு என்ன வேண்டி இருக்கு.. ம்ம்ம்ம் படி..

கவி : ஏய்.. என்ன ரொம்பத்தான் பண்ற.. நான் பேசவே ஆரம்பிக்கல. .ஜஸ்ட் கூப்பிட்டேன்..

நவீன் : உன்னைப்பத்தி தெரியாது.???. மொட்டுன்னு தான் ஆரம்பிப்ப.. அப்புறம் உன் வாயி மூடவே மூடாதே... நீ பேசறதை எவன் கேக்கறது ... ஒழுங்கா படிக்கற வழிய ப்பாரு...

கவி : அவ்வ்வ். .!

*********

நவீன் : ஆமா.... பரிட்சை நடக்கும் போது, உனக்கு சிஸ்டம்ல என்ன வேல..? ஏந்திரி ஏந்திரி போயிப்படி போ...

கவி : .................... (கண்ணால்..  'ஏண்டா ஏன்ன்ன்ன்ன்ன்?)

நவீன் : என்ன பாக்கற..?! இதெல்லாம் சும்மா.. இதை விட பலமடங்கு என்னை டார்ச்சர் செய்து படிக்க வச்சி இருக்க... இப்ப என் டேர்ன்.முதல்ல எழுந்திரு. பரிட்சை நடக்கும் போது, சிஸ்டம்லலாம் உக்காரக்கூடாது நீ.. போய் படி.. போ..

கவி : எகொகஇ?! :(

**********

கவி : நவீன்  நீ ஏன் இவ்ளோதூரம் என் பாத்ரூமுக்கு வர.. ..

நவீன் :  அய்ய, 4 அடி எடுத்துவச்சா உன் ரூம்மு, அதுவும் சீக்கா எடுக்கத்தான் போறேன்.. இதுல என்ன வந்துச்சு உனக்கு?

கவி : சீக்காவை இனிமே உன் பாத்ரூமில் தனி டப்பாவில் போட்டு வைக்கறேன்.. நீ இந்தப்பக்கம் வராத..

நவீன்: அம்மா..நடக்கறது எக்ஸர்ஸைஸ்ம்மா... தொப்பைக்குறையும்.!

கவி :  ஞே... ! (4 அடி நடந்தாவா?) 

************

கவி : நவீன் எனக்கு மேக்ஸ் கொஞ்சம் சொல்லித்தரியா..

நவீன் : ஹே ஹே.. முடியாது.. நீ தான் மேக்ஸ்ல ஸ்கூல் ஃப்ரஸ்ட் ஆச்சே.. ஏன் என்கிட்ட வந்து கேக்கற.. நீயே பாத்து புரிஞ்சி படிச்சிக்கோ..

கவி..: புரியுதுடா..ஆனா.. அதுலப்போட்டு இருக்க சிம்பள்ஸை எப்படி சொல்லனும்னு சுத்தமா மறந்துட்டேன். மேக்ஸ் எல்லாம் படிச்சி ரொம்ப வருசம் ஆச்சிடா..ஒருதரம் பாத்து சொல்லித்தாடா..

நவீன்.. :  சான்ஸே இல்ல.. நீ ஃபெயில் ஆகு !!. .உனக்கு இருக்க திமுருக்கு நீ ஃபெயில் ஆகனும்! அப்பத்தான் என்னை நீ திட்டினதுக்கு எல்லாம்..... பழிவாங்க முடியும்... 

கவி: அவ்வ்வ்....  (என்னா கொலவெறியோட இருக்கான்)

***********

அணில் குட்டி : அம்மா புள்ள இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் காரித்தூஊன்னு துப்பிக்க ரிசல்ட்க்காக வெயிட்டிங்கு.. நமக்கு இருக்கு....நல்ல டைம் பாசு..


பீட்டர் தாத்ஸ் Your son at five is your master, at ten your slave, at fifteen your double, and after that, your friend or your foe, depending on his bringing up.: