முன்னரே இரண்டு பதிவுகளில் மனதின் மெளனப் போராட்டாங்களை பற்றி எழுதியாயிற்று..
மனதும் அறிவும் அசைபோடும் நேரங்கள்-
மனசின்ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக…

ஆனால் இப்படிப்பட்ட போராட்டங்களுக்கு முடிவு இல்லை என்றே படுகிறது.. அப்படி ஒரு முடிவு தேவை என்று நான் நினைக்கும் பட்சத்தில் எல்லாம், கெளதம புத்தர் என்னவோ எனக்கு நினைவுக்கு வருகிறார். அவரை போலவே ஒரு ராத்தியில் ஓடி போய் ஒரு மரத்திற்கு கீழ் அமர்ந்து கொள்ளலாமா? ஆனால் அடுத்த வினாடி எழும் கேள்வி - எப்படி அவரால் தன் மனைவி யசோதராவையும், குழந்தை ராகுலா' வையும் விட்டு விட்டு துறவு போக முடிந்தது ..?!! எத்தனை சுயநலம் அவருக்கு என்றே தோன்றுகிறது. அவரின் பக்க நியாயங்கள் ஆயிரம் இருக்கட்டுமே... ஏன் அவரின் மனைவி மற்றும் குழந்தையை பற்றி அவர் யோசிக்கவே இல்லை? என்ன மனிதர் இவர்?

துறவு என்பது எத்தனை எளிதானதாக வேண்டுமானால் அவருக்கு இருந்துவிட்டு போகட்டும் அதற்கான காரணம் ஒரே ஒரு முறை அவர் ஏழ்மையை கண்ணால் பார்த்தது என்று தானே அவரின் கதைகள் சொல்லுகின்றன. எத்தனையோ துயருக்கு நடுவில், நம் வாழ்க்கையை நாம் நடத்திச்சென்றுக்கொண்டு தான் இருக்கிறோம். இவரின் சொந்த முடிவுகளுக்காக தன் குடும்பத்தினரை துயரத்தில் விட்டது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. இவரை போல் எல்லோரும் ஒரு முடிவு எடுக்க ஆரம்பித்து இருந்தால் நம்மிடையே எத்தனை கோடி புதிய மதங்கள் உருவாகி இருக்கும்?!

மனதில் இருக்கும் இப்படிப்பட்ட முடிவில்லாத கேள்விகளுக்கு நாமே விடைத்தேடி அலையும் போது மனதும் அறிவும் போடும் சண்டையினை கூர்ந்து கவனிக்கும் போது அத்தனையும் மெளனத்தில் நடக்கும் பெரிய யுத்தமாகவே இருக்கிறது. தலை பாராமாகி போகிறது.....

"இன்னைக்கு செத்தால் நாளைக்கு பால்" இது தான் மனித வாழ்க்கையின் நிச்சயம் என்ற போதிலும் அதற்குள் நம்மிடையே எத்தனை எத்தனை

மன வேறுபாடுகள்
சண்டைகள்
நீயா, நானா என்ற போட்டி
நீ அறிவாளியா நான் அறிவாளியா
நீ ஜெயிப்பதா நான் ஜெயிப்பதா என்ற கேள்வி
உன்னை விடவும் நான் சிறந்தவன்/ள் என்று காட்டிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் தேவையற்ற முயற்சிகள்
ஒருவரை ஒருவர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புண்படுத்திக்கொள்ளுதல்
ஆத்திரம்
தான் என்ற அகங்காரம்
விட்டுக்கொடுத்தல் என்பதே மறந்து போகும் கோபங்கள்
ஆழ்ந்த மெளனங்கள்
அதனால் எழும் கோபங்களும், புலம்பல்களும்
பணமும் அதற்கான முக்கியத்துவமும்
சுயநலமான முடிவுகள்

என்று நம்மின் எல்லா எதிர்மறையும் வெளியில் வரவைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்துக்கொள்கிறோம்.

வாழ்க்கை என்ற இந்த சின்ன வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வந்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம், நில் என்றால் வாழ்க்கை நின்றுவிடுவதில்லை. போ என்றாலும் சென்று விடுவதில்லை. கடிவாளம் இல்லாத குதிரை என்று சொல்லலாமா? .... இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கோடிட்டு வரைந்து அதன் வழியே நடக்க முடியுமா? முடியும் என்றாலும் அது அத்தனை எளிதானதா? போகிற போக்கில் போகட்டும், நாமும் உடன் செல்வோம் என்று செல்லலாமா? அப்படி சென்றால் நம் எதிர்ப்பார்ப்புகள், சந்தோஷங்களை அடைய முடியுமா? எதிர்ப்பார்ப்புகளுக்கும், சந்தோஷத்திற்கும் எல்லைகள் உண்டா? அந்த எல்லைகளை நிர்ணயிப்பது யார்? நாமா? எதிராளியா? நாமாக இருந்தால் கட்டும் படுத்தலாம், அதிகவும் படுத்தலாம், ஆனால் எதிராளியின் எதிர்ப்பார்ப்பாக இருந்துவிட்டால்...?!! மிஞ்சி நிற்கும் கேள்வி இது.. விடை தெரியா கேள்வி இது.. அதை அவர் பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிடலாமா? விட்டுவிட்டு வந்துவிட்டால்...... .எதிராளியின் நினைவுகளையும் விட்டுவிட வேண்டுமல்லவா?

ஓ மனமே!! ஏன் அதை செய்ய மறுக்கிறாய்? கொஞ்சமாக சுயநலமாக இருந்துதான் பாரேன் என்று உன்னை எத்தனை கெஞ்சினாலும் இன்னமும் உன்னைத்தவிர மற்றவை கவனிக்கிறாயே .... எங்கே செல்கிறது உன் பாதை.. கோடிடாத... குறிக்கோள் இல்லாத..... ஏதோ நினைவலைகளின் பின்னால்... கட்டுப்பாடு இல்லாது ஓடும் உன் பாதங்களை நீயே இழுத்து நிறுத்திவிடு, நிறுத்திவிடாதே மண்ணுக்குள் புதைத்து விடு. புதைத்தால் மட்டுமே நகர்ந்து போகாமல் அங்கேயே இருக்கும்..

இப்படித்தான் யுத்தங்கள் மண்ணில் புதையும் வரை தொடர்கிறது.
மனிதனின் சந்தோஷம் எதில் இருக்கிறது? ஒருவருக்கு பிடித்த விஷயத்தை அவர் மனம் நினைக்கின்ற விஷயத்தை அறிவின் துணையுடன் முடித்துவிடும் போது கிடைக்கிறது. கிடைக்காத பட்சத்தில், நிறைவேறாத நேரங்களில் தான் கேள்வியும் பதிலும் மாறி மாறி வருகிறது.

எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு, தூங்கினோமா, எழுந்தோமா, சாப்பிட்டோமா, வேலைக்கு சென்றோமா, சம்பாதித்தோமா, அரட்டை அடித்தோமா, ஊரை சுற்றினோமா, சினிமா பார்த்தோமா, சண்டை போட்டோம்மா, இன்று நாம் சந்திக்கும் புதிய மனிதரிடம் உதட்டோர புன்னகையோடு பேசினோமா... கிரிக்கெட் பார்த்தோமா....கிண்டல் அடித்தோம்மா... என்று..இதற்கு மேல் என்ன இருக்கிறது வாழ்க்கையில்.. சரிதானே?

தினமும் நம்மை நம் வாழ்க்கையின் கையில் ஒப்படைத்து விட்டு, இப்படி ஓய்வாக இருந்தால்............

இருக்கமுடியாமல் போகும் போது தான்....... திரும்பவும் இந்த பதிவின் ஆரம்பமே இதன் தொடர்ச்சி............

அணில் குட்டி அனிதா :..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வெயக்காலம் அதுவுமா.. இவிங்களுக்கு தான் கழண்டு போச்சி சரி. .அதுக்குன்னு... அதை அப்படியே வெளியில காட்டிக்கனும்ம்மாஆஅ???? முடியல தாயீஈஈஈஈ... தயவுசெய்து.. .இந்த மாதிரி போஸ்ட் இனிமே எழுத மாட்டேன்னு எனக்கு பிராமிஸ் போடுங்க கவி. .அப்பத்தான் நான் இங்கே இருப்பேன்.. இல்லன்னா. .நான் பப்பு கூட ஜாயின்ண்டு...

பீட்டர் தாத்ஸ் : Whatever you hold in your mind will tend to occur in your life. If you continue to believe as you have always believed, you will continue to act as you have always acted. If you continue to act as you have always acted, you will continue to get what you have always gotten. If you want different results in your life or your work, all you have to do is change your mind.