Showing posts with label பழம்-நீ. Show all posts
Showing posts with label பழம்-நீ. Show all posts

பொன்னியின் செல்வன் -2 PS-2 -Review

படம் சாதாரணமாக இருக்கு. ஏன் ஆஹா ஒஹோ ன்னு எழுதறாங்கன்னு தெரியல. அதிலும் சிலர் பாகுபலி யை மிஞ்சிவிட்டதாக எழுதுவது சத்தியமா ஏன்னு புரியல. பாகுபலி பிரம்மாண்டம். இதில் அப்படி ஒன்றும் பிரம்மாண்டமில்லை.

நடிகர் கார்த்தியை தவிர எல்லா நடிகர்களின் முகத்திலும் மணிரத்னத்தின் முகத்தை ஒட்டிவிட்டு படத்தைப் பார்த்தால் தெரியும், ஒரே மாதிரியான வசன உச்சரிப்புகள், எந்த உணர்ச்சியானாலும் அதே முகபாவனை.. பாவனைன்னு க்கூட சொல்லமுடியாது.

ஐஸ்வர்யாராய் விக்ரம் வரும் கடைசி காட்சிகளை அதிகமாக பாராட்டுகிறார்கள். அந்தம்மா என்னவோ எங்கேயோ பார்த்தபடி/முழித்தபடி/வெறித்தபடி முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வசனம் பேசுகிறார். விக்ரம் பதிலுக்கு அதே மாதிரியான முழித்த பார்வையோடு அல்லது அதற்கான முயற்சியோடு கொஞ்சம் நெற்றியை சுருக்கி பேசுகிறார். என்னத்த சூப்பரான நடிப்பு இதில் இருக்குன்னு தெரியல.. Over hyped scene by public.

சுந்தரசோழர் எங்கேயுமே சுந்தரசோழராக தெரியாமல் ' ஹாய் செல்லம்' னே சொல்றமாதிரி இருந்தது எனக்கு. தலையை எப்பவும் போல ஒரு பக்கமாக திருப்பிக்கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். 

வானதி , பூங்குழலி & மணிமேகலை கதாப்பாத்திரங்கள் புத்தங்கத்தில் வேற லெவலில் இருக்கும். படத்தில் அவர்களும் மணிரத்னத்தின் முகத்தை மாட்டிக்கொண்டு வருகிறார்கள், btw மணிமேகலை படத்தில் இல்லவே இல்லை. 

சின்ன வயது நந்தினி, கரிகாலன் நடிப்பும் அதே. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் வசனத்தை பேசுவது, நடப்பது, ஓடுவது.. தளபதி'யில் ஆரம்பித்து துக்கம்/கோவம் னு வந்தால்.. ஆஆ..... ஓ ன்னு ஆகாயத்தைப் பார்த்து தொண்டக்கிழிய கத்துவது தான் மணிரத்னத்தின் ஸ்டைல். இதை விக்ரம் பிரபு 2-3 இடங்களில் செய்யும் போது கடுப்பாகிறது. ஏன் கத்தறாரு.. அழத்தானே செய்யனும்னு தோணிச்சி. 

குந்தவை வந்தியத்தேவன் காதல் காட்சியும் Over hyped scene by public.ரொம்ப சாதாரணமா இருக்கு. படகை ஓட்டிவந்த படகோட்டிகள் நட்ட நடு ஏரியில் எங்கே காணாப்போனார்கள் என்று தெரியவில்லை. குந்தவையின் குரலை வந்தியத்தேவனால் கண்டுபிடிக்க முடியலங்கறதே இந்த காட்சியின் உட்சக்கட்ட தவறு/தோல்வி. திரிஷாவின் வயது முகத்திலும் உடலிலும்.தெரிகிறது,

விக்ரம்பிரபு விக்ரமை சந்தித்து பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கி இறந்துபோனார் என்று சொல்லும் காட்சியில் விக்ரம் தலைமுடி காதை தாண்டியுள்ளது. அதற்கு அடுத்து விக்ரம் வரும் காட்சிகளில் எல்லாம் தலைமுடி தோளைத்தாண்டி வளர்ந்து தொங்குகிறது. 

சோழ சாம்ராஞ்சியத்தில் நாட்டின் உள் கட்டமைப்பு, கோட்டை, அதன் பாதுகாப்பு, கட்டிட அமைப்பு, பாதாள வழிகள் எல்லாம் எத்தனை பாதுகாப்போடு அமைக்கப்பட்டவை என்பதும்,  சோழர்களின் நிர்வாகத்திறமை வாய்பிளக்க வைத்த வரலாற்று சான்றுகளாக இன்னும் இருக்கின்றன.. இதில் பாதாள வழியில் உள்ள ஒரு சின்ன ஓட்டை வழியாக சுந்தர சோழரின் அறை தெரிய, அங்கிருந்து அவரை தாக்கி கொல்ல பாண்டியர்கள் முயற்சி செய்கிறார்கள். நம்ப முடியல. அதே சமயம், சுந்தர சோழர் அறையிலிருந்து அந்த துவாரம் தெரியவில்லை. எப்படி இது சாத்தியம். ஒரு அரசரின் அறைக்கு இவ்வளவு தான் பாதுகாப்பா? இதைக்கூடவா இத்தனைப்பெரிய படத்திற்கு home work செய்யல?. 

ஊமைஅரசி - இந்தம்மா தான் பொன்னியின் செல்வனின் hidden queen. இவரை பின்பக்கத்திலிருந்து சில காட்சிகளில் காட்டிவிட்டு, முகத்தை காட்டும் போது கொன்றுவிடுகிறார்கள்.

ஜெயம்ரவி தான் கதாநாயகன், ஆனால் பொம்மை போல எப்பவும் ஒரு புன்முறுவலோடு, மணிரத்னத்தின் நாயகனாக வளம் வருகிறார்.

ஜெயசித்ரா - பாவமா இருக்காங்க. அதே மணிரத்னத்தின் முகமூடி. பிரபு ஒரு காட்சியில் நன்றாக நடித்துள்ளார், முகமூடியில்லை. சரத்குமார், பார்த்திபன் எல்லாம் சுமார். ஒரு வேளை நன்றாக நடிக்கக்கூடியவர்களாக இருந்தாலும், மணிரத்னம் அவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை கொடுக்க வாய்பில்லை.

நாகை புத்தபீடம்  பிரம்மாண்டம், இதனை கடல் அடித்துசெல்லும் காட்சி ஒன்று புத்தகத்தில் இருக்கும், அது படத்திலில்லை. ஏமாற்றம்.  

கடைசியில் போர் தேவையில்லாத ஆணி. 

இசைப்புயலின் இசை படத்திற்கு +. BGM ரொம்பவே நல்லாயிருக்கு.

மூலக்கதை" பொன்னியின் செல்வன்" னு டைட்டிலில் வருகிறது. அதனால்.. அதிலிருந்து இது எடுக்கப்பட்டதுன்னு நினைச்சிக்கிலாம். யாரும் எடுக்கவே முடியாதுன்னு விட்டுவிட்டுதை, மணிரத்னம் எடுத்து இயக்கி வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுகள். A Manirathnam movie. Historical movie in his view & stand. 

எல்லாவற்றையும் விட இன்ட்டலெக்சுவல் சுஹாசினியை படத்திலும் எழுத்திலும் பேச்சிலும் எங்கும் கொண்டுவராமல் இருந்ததற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி & பாராட்டுகள். 

எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி படத்தை கண்டிப்பாக குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம். 

 #ponniyinselvan2 #ponniyinselvan2review #ponniyinselva2_review 

 Pictures courtesy : Thankyou google.

கள்ளி (Cactus) செடிகள் கதை

வீட்டு பால்கனி தோட்டத்தில், நான் அதிகம் விரும்பி வளர்க்கும் தாவரம் காக்டஸ். இதில் கற்றாழையில் ஆரம்பித்து பலவிதமான கள்ளி செடிகளை வளர்த்து வருகிறேன். பொதுவாக காக்டஸ் க்கு பாட்டில் மூடியில் தண்ணீர் ஊற்றினால் போதும். என்னிடம் குட்டி குட்டி காக்டஸ் நிறைய உள்ளது. அதில் குட்டியா உருண்டையா இருக்க காக்டஸ் லேசா கைப்பட்டா போதும் கையோடு வந்துடும். 

சென்னையிலிருந்து திருவாரூர் சென்றபோது, எல்லாவற்றையும் கொண்டு வந்துட்டேன். பின் பக்கம் வராண்டா போன்ற இடத்தில், மழை கொட்டாத இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தேன். 

 போன வாரத்தில், பக்கத்தில் எங்கேயோ நாய் குட்டிபோட, அதை தேடிக்கொண்டு தோட்டத்தின் பின் பக்கத்தில் வந்து தேடிய 3-4 பசங்க கண்ணில் இந்த காக்டஸ் பட்டுவிட்டது. 

ஆசையை அடக்கமுடியாமல், நேர்மையாக முன் பக்கம் கேட்டில் வந்து நின்று, ' ஆண்ட்டி, அந்த காக்டஸ் எங்களுக்கு கொடுக்கறீங்களா?' ன்னு கேட்டானுன்க.. உங்களுக்கு ஏன்டா நான் தரனும்னு மைன்ட் வாய்ஸ்ல நினைச்சிக்கிட்டு, 'ஸாரிப்பா, அது சென்னையிலிருந்து கொண்டு வந்து வச்சியிருக்கேன், கொடுக்கற ஐடியா இல்ல" ன்னு சொல்லிட்டேன். முகமெல்லாம் வாடிப்போய்.. 'ஓக்கே'ன்னு போயிட்டானுங்க. 

ஒரு ஓசி நாய் குட்டிங்களயே ஒரு வாராம வீடு வீடா தேடறானுங்க.. இதை விட்டு வைப்பானுங்கன்னு எனக்கு தோணல. உடனே வூட்டுக்காருக்கிட்ட '.ப்பா கண்டிப்பா நாளைக்கு வந்து இத திருடுடிட்டு போயிடுவானுங்க.. நாம வேற இடத்தில் மாத்தி வச்சிடுவோம்னு' சொல்ல.. 

எப்பவும் போல,' சின்ன பசங்க எவ்ளோ டீசன்ட்டா வந்து கேட்டுட்டு போறானுங்க.. அவனுங்கள போய் சந்தேகப்படறியே' ன்னு திட்டு விழுந்தது. எனக்கு என்னவோ, அவனுங்கள நம்ப முடியல.... நானே மாடியில் உள்ள போர்ட்டிகோவிற்கு மாத்திட்டேன். அதில் அந்த குட்டி ரவுண்டு, தொட்டா கையோட வரும்னு சொன்னேனே, அதில் இரண்டு பிச்சுக்கிட்டு வந்தத, குட்டி கப்பில் நட்டு வச்சிருந்தேன். அது வளராமல் காய்ந்து போய் இருந்தது, நானும் மனம் தளராமல் தண்ணீர் விட்டுக்கிட்டு இருந்தேன். அதையும், கற்றாழையும் மட்டும் அங்கேயே வைத்துவிட்டேன். 

அடுத்தநாள் மாலை, சமையலறையில் வேலையாக இருக்க, இவனுங்க சத்தம் கேட்டது. தோட்டத்தின் பின்பக்கம் செல்வதும் தெரிந்தது. குடுகுடுன்னு ஓடி பின்னாடி ரூம் ஜன்னல் வழியாக கவனித்தேன். 'எங்கடா காணோம்'னு கிட்ட வந்தவனுங்க, அந்த காய்ந்த காக்டஸ் சில் ஒன்னை நைசா கிள்ளி எடுத்து, எடுத்ததே தெரியாத மாதிரி உள்ளங்கைய வச்சிக்கிட்டு போயிட்டானுங்க. 


வூட்டுக்கார் ஆபிஸ் விட்டு வந்ததும் சொன்னேன். ஆயிரம் வேலையில் என்னோட புலம்பலெல்லாம் அவர் காதில் எப்ப விழுந்திருக்கு... இல்ல எப்ப நாம சொல்றதை மதிச்சி கேட்டு இருக்காங்க..' ஓ..'னு ஒரு பதில் சொல்லிட்டு அவர் வேலைய பாக்க போயிட்டாரு.. காய்ந்ததை எடுத்தாலும் எனக்கு மனசு கேட்கல.. அதையும் தூக்கிட்டு வந்து உள்ள வச்சிட்டேன். திருட்டு பயபுள்ளைங்க... கம்ளைன்ட் செய்லாம்னு நினைச்சி.. பின்ன நாம மாங்கா அடிச்சது.. ன்னு நம்மோட சின்ன வயசு கேவலங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வர.. சரி தொலையட்டும்னு விட்டுட்டேன்.  

பீட்டர் தாத்ஸ்:“I think that the best thing we can do for our children is to allow them to do things for themselves, allow them to be strong, allow them to experience life on their own terms, allow them to take the subway... let them be better people, let them believe more in themselves.” ― C. JoyBell C. 

Picture courtesy - Thank-you Google.

மயக்கம்..

மயக்கம்' என்னுடனேயே பலவருடங்களாக தொடர்ந்து பயணம் செய்து வருகிறது. எல்லாவிதமான மயக்கமும் அத்துபடி. முதல் மயக்கமே எனக்கு பசி மயக்கமாக இருந்ததால் இன்றளவும் அதை மறக்க முடியவில்லை. சென்னை பல்கலைகழகம் அருகில் நடை பாதையில் நடந்து கொண்டு இருக்கும் போது விழுந்தேன்.தொடர்ந்து சாப்பிடாமல் இருந்தால் மயக்கம் வரும் என்பதை அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததுன்னு நினைச்சிக்கலாம். :)

பிறகு இதே போன்று ஒரு முறை திநகர் ரங்கநாதன் தெருவில் மயக்கம் வர, விழுந்து மானம் போகாமலிருக்க, ஓடிச்சென்று ஒரு கடை வாசலில் உட்கார்ந்துக்கொண்டேன். எப்போது தெளிந்ததோ, நானாகவே எழுந்து வந்துவிட்டேன். மயக்கம்'  இரண்டாவது முறையே பழகிவிட்டது..

அடுத்து, உடல் சார்ந்த மயக்கங்கள். மாதாந்திர தேதிகளில் முதல் இரண்டு நாளில் ஏதோ ஒரு நாளில் கண்டிப்பாக மயக்கம் அடித்து விழுவேன். இரத்த சோகையே இதற்குப்பெரிய காரணம். இது தெரிந்ததால், பலவாறு என்னை பாதுக்காப்பாக வைத்துக்கொள்வேன் என்றாலும், சில நேரம் விழுந்து விடுவது உண்டு. அதிகமான மன உளைச்சலோடு அலுவலகம் சென்று, எனையறியாமல் மயக்கம் அடித்து விழுந்து, கூட்டம் கூடி,அது அலுவலக முதல்வர் வரை சென்று பெரிய விஷயமானது. அலுவலகத்தில் விழுந்த இடம் அப்படி !


இது தவிர்த்து, மருத்துவமனை மயக்க மருந்து கொடுக்கும் போது வரும் மயக்கம். கை நரம்பில் ஊசிப்போடும் போது, 1, 2 சொல்ல சொல்லுவார்கள். 4-5 வரை எண்ணியிருந்தால் அதுவே அதிகம் என்று நினைக்கிறேன். அவ்வளவு தான் தெரியும், சுற்றி இருப்பது எதும் தெரியாது,  ஏதோ சத்தங்கள் மட்டும் மிக லேசாக கேட்கும், மிக அடர்த்தியான அடர் ஆரஞ்சு நிறம் நிரம்பிய ஒரு பெரிய குழாய் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றில் அதி வேகமாக நுழைந்து 300-400கிமீ வேகத்தில் சென்றுக்கொண்டே இருப்பது போல இருக்கும்.. எவ்வளவு நேரம் என்று தெரியாது, ஆரஞ்சு நிறம் தெரியும் வரை பார்த்துக்கொண்டிருப்பேன், வேகமாக செல்வதை உணர்வேன்..பிறகு அதும் காணாமல் போய் ஆழ்ந்த நித்திரைக்கு செல்வேன் என்று நினைக்கிறேன். ..அப்படி ஒரு நாளில்.......

******

ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து அறைக்கு வந்துவிட்டதாக நினைவு. படிக்கையில் கிடத்துகிறார்கள். போர்வையால் என் உடல் தெரியாமல் போர்த்தி விடுகிறார்கள். யாரெனத்தெரியவில்லை. நேரம் செல்கிறது... (செல்வதாக நினைத்துக்கொள்கிறேன்).
 
"கவிதா காலை தூக்கி வைங்க..." செய்தேனா என்று தெரியவில்லை. அவர்களாக என் காலை தூக்குகிறார்கள், என் கால்கள் தான் ஆனால் எனக்கு ஏதும் தெரியவில்லை. கால்களை நீட்டிவிடுகிறார்கள்... என்ன செய்தார்கள் என தெரியவில்லை. கண்ணை திறக்கமுடியவில்லை. வயிற்றை தடவ முயற்சித்து கையை தூக்குகிறேன்.. கை என் சொல் பேச்சிக்கேளாமல் 'தொப்'பென்று கீழே விழுகிறது.

"ச்சும்மா இரும்மா.. கைய எல்லாம் தூக்காத என்ன வேணும் உனக்கு....

" ............. ட்ரஸ்.........."

"போட்டுத்தான் இருக்கு........ பேசாம தூங்கு...." போர்வை சரிசெய்கிறார்....

 கண் விழிக்க முயற்சித்துத் தோற்கிறேன். நினைவுகளிலும் தெளிவில்லை.

"தண்ணி....." நடப்பவற்றை உணர்ந்துக்கொள்கிறேன். பாட்டிலில் நேராக என் வாயில் ஊற்ற முயன்று... எடுத்துவிடுகிறார். . சற்று இடைவெளி.......... இப்போது பாட்டில் மூடி என் உதட்டை தொடுகிறது. வாயைத்திறக்க முயற்சி செய்கிறேன். வாயில் பழச்சாறு ஊற்றப்படுகிறது. இரண்டு முறை வாயை திறந்திருப்பேன்..

"போ.....து...... ..........எ..... குழந்த....."

"வந்துடுவான்...சொல்லி இருக்கேன்...." வாயின் ஓரத்தில் வழிந்த பழச்சாறு துடைக்கப்பட்டது. அதற்கு மேல் நினைவில்லை... ... திரும்ப எவ்வளவு நேரத்தில் எனக்கு நினைவு திரும்பியது என்று தெரியவில்லை. உடனேவாகக்கூட இருக்கலாம்.. நினைவு வரும்போதும், வெளி சத்தம் கேட்கிறது, என்னால் கண்களை திறக்க முடியவில்லை.....

 "என் குழந்த ........"

".. ..வந்துட்டே இருக்கான்... ." ...

மிதப்பது போன்ற உணர்வு..... வாய் மட்டும் பேசுவதை நிறுத்தவில்லை, கண் விழிக்காமாலேயே.............. "சாப்...டீங்க.......ளா..?

"இன்னும் இல்ல.."

"அவன் வந்தா........................................... வாங்கித்தர............................................ சொல்லுங்.......................................................... .என்ன தனியா விடாதீங்க............................ .."

 ".. போகலம்மா... தூங்கு...முடியாம பேசாத.." ..

.இன்னமும் கண்ணை திறக்க முடியவில்லை, மறுபடியும்... ஆழ்ந்த உறக்கம்... நேரம் செல்கிறது....நினைவு வரும் போது, நேரம் சென்றதாக நினைக்கிறேன்... என் குழந்தையின் குரல் கேட்கிறது... கண் திறந்து பார்க்க முடியவில்லை....ஆனால் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன்..

 "ம்ம்மா....." ..................................அம்ம்மாஆ............" ...............................

 "ஏன்ப்பா கண்ணைத்தொறக்க மாட்டறாங்க... ? ............ கூப்டாங்கன்னு சொன்னீங்க... ?" "

அவளுக்கு மயக்கம் இன்னும் தெளியலடா..... நடுநடுவுல முழிக்கிறா.. உன்னைத்தான் கேக்கறா........"

அம்ம்மாஆ............"

அம்ம்ம்மாஆ............................."

"ஏய்..............." .................................... "

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....நோயாளி... ...................... "

முயன்றும் கண்களை திறக்க முடியவில்லை......................"..ம்ம்......... சாப்டியா...?" நான் பதில் சொன்னது அவனுக்கு கேட்கவில்லை.

 "அப்பா நான் கிளம்பறேன்.. கண்ணைக்கூட தொறக்க முடியாம கிடக்கறாங்க..ஏன்ப்பா ..???


 "மயக்க ஊசிப்போட்டு இருக்காங்கடா.. மயக்கம் இன்னும் தெளியல... "

"வலி சரியாப்போச்சாப்பா.. .. இனிமே அழமாட்டாங்க இல்லப்பா..."


."ஆமா. ... வலி இனிமே இருக்காதுன்னு தான் நினைக்கிறேன்.. . .கண்ணு முழிச்சி அவளே சொன்னாத்தான் உண்டு.... .."

********

 விழிக்கிறேன்.. இன்னமும் மயக்கம் முழுமையாக தெளியவில்லை. தள்ளாட்டம் இருந்தது.

"சாப்பிட்டீங்களா?"

"மணி 4.30 ஆச்சிடி.. சாப்பிடாம இருப்பேனா? உன்னை மாதிரி நினைச்சியா என்னை? டாக்டரை கூப்பிடவா.. நடப்பியா... போலாமா? நீ எழுந்துட்டா போலாம்னு சொன்னாங்க...

"பாத்ரூம் போகனும்ப்பா... . ."

"வா.... "

"நீங்க வேணாம் சிஸ்டர் கூப்பிடுங்களேன்.. "

"வா வா நானே வரேன்.. " கைத்தாங்களாக நடக்கிறேன்.. பாத்ரூம் சென்று...

"நானே போறேன்.. நீங்க வேணாம்.. "

"தள்ளாடற விழுந்துடுவ.. நான் வரேன்.."

"ம்ம்ம்..இல்ல வேணாம்ப்பா..... விழமாட்டேன்.. பிடிச்சிக்கிறேன்"

"கதவை மூடாத.." "சரி.. " திரும்ப வெளியில் வரும் வரை கதவோரம் நிற்கிறார்.

"போலாம்ப்பா.. இங்க வேணாம்.. ! வலிக்குதுப்பா... .நவீனை பாக்கனும் ! "

"ஏண்டி உனக்கே ஓவரா இல்ல. .காலையில தானே வந்தே. .அதுக்குள்ள என்ன ஆயிரம் வாட்டி அவனை பாக்கனும் சொல்ற... "

 "போலாம்ப்பா.. இங்க வேணாம்.. ! "

 "சரி சரி.. போலாம். .இரு டாக்டரை பார்த்துட்டு வரேன்.. "

தனியே பேசியபடி செல்கிறார். "மயக்கமா இருந்தாலும் விடாம பேசறா.. முழிச்சாலும் பேசிக்கிட்டே இருக்கா..... எப்பத்தான் வாய மூடுவாளோ தெரியல.... :( "

 (அவ்ளோவா பேசிட்டேன்.. ????! )
 
Picture Courtesy : Thx Google.

அணில் குட்டி அனிதா :
எல்லாஞ்சரி.. இது எப்ப நடந்தது.. இப்ப பதிவிடறீங்க? 
 
பீட்டர் தாத்ஸ் : When I faint, I feel guilty & Shy.   But my husband besides always to give his hand.

Senthil Ashokkumar

யாருக்கோ நடக்கும் போது, அடடே..அய்யோ பாவம்.. என்ன இப்படியெல்லாம் நடக்குது என்று கடந்து போக முடிகிறது. நமக்கு நெருக்குமானவர்கள் என்றால், அதைவிட்டு இப்படி அப்படி நகரமுடியாமல் போவதும், நியாயமே இல்லாமல் நடந்துவிட்ட அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமலும் போகிறது.

இந்தப்புள்ள மற்ற நண்பர்கள் போல் இல்லாது சற்றே வித்தியாசமானவர். அதிகம் பேசக்கூடியவரில்லை, அவருடைய பேச்சும் நடவடிக்கையும் அதிகம் சமூகம் சார்ந்தே இருக்கும். எதையோ சாதித்தே தீரவேண்டும் என்ற சிந்தனையும் அதை செய்து கொண்டும் இருந்தார். 'தஞ்சாவூர் கல்வெட்டு' அவர் பெயர் சொல்லும்.
இருவரும் வேளச்சேரி, நேரிலும் , தொலைபேசியிலும் அதிகம் பேசியிருக்கிறோம். பேச்சு அநேகமாக சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கும். சொந்த விசயமோ, வேறு யாரைப்பற்றியோ பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்குட்'டில் முதலில் என்னுடன் பேச ஆரம்பித்தார், தயக்கத்தோடு ஆரம்பித்த அந்தப்பேச்சு, என்னுடைய Blog ல் வந்து ஏதோ பதிவில் பேச ஆரம்பித்த போதுதான் தெரிந்தது அவரும் HR என்பது. எந்தவித எதிர்ப்பார்ப்பும், தேவையும் இல்லாமல் பேசக்கூடியவர். அதனாலேயே என் மனதுக்கு நெருக்குமான நண்பராக இருந்தார்.
 
அம்மாவின் இறப்பின் போது எனக்கு ஆறுதல் சொல்லி, அடுத்தடுத்த வருடங்களில் அம்மாவின் நினைவு நாளில் whatsapp இல் மறக்காமல் msg் அனுப்புவார்.
 
அணிலுக்கும் எனக்குமான சம்பந்தம் அநேகமாக எல்லா blogger களுக்கும் தெரியும், ஆனால் ஒருசிலர் மட்டுமே அணில் சம்பந்தட்ட தகவல்கள், படங்களை எந்த பிரதிபலனும் பார்க்காமல் அனுப்புவார்கள். அப்படி கிடைத்ததுதான் FB Cover ல் உள்ள photo. லண்டனில் சில மணி நேரம் காத்திருந்து எடுத்ததாக சொல்லி அனுப்பியிருந்தார். யார் செய்வாங்க? என் மனதுக்கு நெருக்குமான அணில், இந்த லண்டன் அணில் தான்.
 
Insta வில் அதிகம் என் புகைப்படங்களுக்கு like செய்பவர் இவர் மட்டுமே. சிறந்த புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. Twitter லும் என்னுடைய முக்கிய பதிவுகளை கவனிப்பவர், ஒரே மாதிரியான சிந்தனையும் இதற்கு காரணம். சில வருடங்களாக நிறைய zoom , youtube link எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தார், எல்லாமே கல்வி, வாழ்க்கை, வேலை என சமூகம் சார்ந்தவை. என்னை கலந்துக்கொள்ள சொல்லி ஒருமுறை சொன்னார், இயலாது என்று சொல்லவும், அதன்பின் என்னை கேட்பதில்லை ஆனால் link மட்டும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது.
 
அவருடைய Whatsapp profile photos எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும், இப்போது ஒரு Dubbing Photo இருக்கிறது. அதைப்பற்றி அவரிடம் விசாரித்திருந்தேன். எந்த புகைப்படமாயிருந்தாலும், சட்டுன்னு கடந்துப்போகாமல் கவனிக்கக்கூடிய வகையில் இருக்கும்.
 
நான் யாரோ...., என்னாலேயே இந்த நியாயமே இல்லாத நிகழ்வை தாங்கமுடியவில்லை, வெளிவரவும் முடியவில்லை... அவருடைய தாயார், தமக்கை & மனைவி, குடும்பத்தாருக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை.
நல்ல நண்பர் என்பதைவிட நல்ல மனிதர், நாகரீகமாக பழகக்கூடியவர், ஒரே ஒரு முறைக்கூட தவறான, தரம் தாழ்ந்த வார்த்தைகளை அவருடைய பேச்சில் நான் கண்டதில்லை. அவருடைய Twitter, FB, Insta & Linkedin கணக்குகள் அவரைப்பற்றி சொல்லும். 
 
இதை எழுதும் போதும் என்னால் நம்பமுடியவில்லை, தவிர என்ன காரணம், எதனால் இப்படின்னும் எனக்கு விவரமான தகவல் எதுவும் தெரியவுமில்லை...
 
செந்தில் .....   Rest in Peace. 

குறிப்பு - கொரானா வால் பாதிக்கப்பட்டு குணமாகி இருக்கிறார், Heart Attack வந்திருக்கிறது.- நண்பர் தகவல் சொன்னார்.

ஜவ்வரசி கஞ்சி

ஜவ்வரிசி பாயசம் னு தான் சொல்லனும்.. ஆனா இன்னைய  தேதிக்கு இதை கஞ்சிப்போல தான் சாப்பிடறேன். அதனால் இந்த பதிவுல ஜவ்வரசி கஞ்சி'னே சொல்லுவோம்.  சேமியா பாயசம், பயத்தம்பருப்பு பாயசம், அரிசி பாயசம் னு பல வகை பாயசத்தில், இந்த ஜவ்வரிசி பாயசம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். எவ்ளோ பிடிக்கும்னா... .... வத்தி சுத்தனும்.. அப்படிக்கா மேல பாருங்க..  

3-4 ஆவது படிச்சிட்டு இருக்கேன், பள்ளி விடுமுறைக்கு அத்தை வீட்டுக்கு  போயிருந்தேன். அத்தைப் பொண்ணு என்னைவிட  2 மாசம் சின்னவ, பையன் ஒரு வருசம் என்னைவிட பெரியவன், அப்புறம் ஒருசில சொந்தக்காராங்க இருந்தாங்க.  அன்னைக்கு சமையலோட பாயசம் செய்யறதுன்னு முடிவாகுது. அத்தை சமையல் ரூம்ல இருக்காங்க, மெதுவா அப்ரோச் செய்து..'அத்த.. எனக்கு ஜவ்வரிசி பாய்சம் செய்யறீங்களா?..ன்னு அன்போட ஆசையோட கேட்டேன். அத்தையும் என்னை நாலு ஐந்து வார்த்தையில் கொஞ்சிட்டு.. 'சரிடீ ஜவ்வரிசி பாயசமே செய்துடலாம்' னு  ப்ராமிஸ் செய்து தொரத்தி விட்டாங்க.  

சாப்பாடு நேரம்... எல்லாரும் ரவுண்டா உட்காந்து இருக்கோம், நான் மட்டும் ஜவ்வர்சி பாயச கனவோட உக்காந்து நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு உட்காந்து இருக்கேன், சாப்பிட்டு முடிச்சிட்டு, அத்தை ஒரு பாத்திரத்தை எடுத்துட்டுவராங்க... எச்சில் ஊறுரது.. ஒரு டம்ளரை என்னிடம் கொடுத்துட்டு, அடுத்தடுத்தடுத்து எல்லாருக்கும் கொடுக்க...  ஒரு சிப் குடிச்சவுடனே டம்ளரை குனிஞ்சி பாக்கறேன்... 

அவ்வ்வ்.... அது ஜவ்வரசி பாயசமே இல்ல சேமியா பாயசம்.. அப்படியே டம்ளரை கைல வச்சிட்டு அழ ஆரம்பிச்சேன்.'.அத்த.. ஜவ்வரிசி பாயசம் தானே கேட்டேன்..நீங்க சேமியா பாயசம் செய்து இருக்கீங்க.. ' எனக்கு வேணாம்..  இது.ன்னு. .ஒரே அழுகை..  அத்தையுடன் சேர்த்து வீட்டில் இருந்த அத்தனைப்பேரும், சமாதானம் செய்யறாங்க ஒன்னும் வேலைக்கு ஆகல..

அழுகை நிக்கல...  என்னைத்தவிர ஜவ்வரிசி பாயசத்தை வேற யாருமே விரும்பி சாப்பிட மாட்டாங்களாம். அதனால சேமியா பாயசம் செய்தாங்களாம்.  சரி, இருந்துட்டு போட்டும். அப்ப எதுக்கு என்கிட்ட செய்யறேன்னு சொல்லனும்..அப்பவே முடியாதுன்னு சொல்லியிருக்கலாம் தானே..  இதான் என்னுடைய கோவத்துக்கும் அழுகைக்கும் காரணம். அழுது ஓஞ்சி உக்காந்தேன்.. ஆனா யாரோடவும் பேசல.

எல்லாரும் வெளியில் கிளம்பி போனாங்க.. நான் போகல. அடம் புடிச்சி உக்காந்த இடத்தைவிட்டு ஏன்சிகல..  இவ்ளோ மோசமா அடம் பிடிக்கிறதைப்பாத்து எல்லாருமே அசந்துப்போயிட்டாங்க.  அடுத்தநாள் காலையில் ஒரு தூக்கு நிறைய ஜவ்வரசி பாயசம் செய்துக்கொடுத்து அவங்க செய்த தப்பை திருத்திக்கிட்டாங்க...   :)))))))))))). சரிரிரீரஈ...... வேற எப்படிதான் கதைய முடிக்கிறதாம்.??..   ஆனா அன்னைக்கு அழுதது, பலவருஷம் அந்த அத்தை விசயத்தில் எனக்கு பயன்பட்டது..எந்த விசயமானலும்.. எங்கே நான் அடம் பிடிப்பேனோ, அழுவேனோன்னு ஒருவித பயத்திலேயே இருப்பாங்க. நவீன் வயிற்றில் இருக்கும் போது.. வீட்டுக்கு வரும்போதெல்லாம்.. 'எங்கையாவது ஒதுக்குப்புறமா இருக்க hospital லா பாத்து சேருங்க.. பிடாரி கத்த ஆரம்பிச்சா..அக்கம் பக்கம் ஒருத்தரும் இருக்கமுடியாது.. ஊரையே கூட்டிடுவான்னு சொல்றளவு அவங்களுக்கு  திகில் இருந்துதுன்னா பாத்துக்கோங்க..  நம்ம அழுகை சவுண்டு அப்படி.... ஹி ஹி..

இப்ப வயிறு வாயி எல்லாம் வெந்து போய்.. இந்த கஞ்சிய குடிக்க சொல்லி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறேன்.. அத்தையை அன்னைக்கு தொல்ல பண்ணத்துக்கான தண்டனையா இருக்குமோன்னு திங்க்கிங்கு..  சும்மா இத குடிக்க பிடிக்கவேயில்ல.. ஒரே திகட்டுது.. ;(

அணில்குட்டி : தெய்வம் நின்று கொல்லும்..! யாருக்கு பொருந்துமோ இல்லையோ அம்மணிக்கு பொருந்தும்.. என்னா வேதனை என்னா வேதனை ..வாயத்தொருந்து சொல்ல முடியுமா இப்ப??  இந்த பாயசத்தை விடுங்க.. இனி இவங்க வாழ்க்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிடவே முடியாதாம்... ஹா ஹா ஹா...   இதுக்கு மேல இவங்க இருந்தா என்ன செத்தா என்ன ????  :)))))))))))

பீட்டர் தாத்ஸ் : When you cant eat something which you love the most,then it should be a punishment.

இரை

'இரை' - உணவு ன்னு சொல்லலாமா ? ,  ஆங்கிலத்தில் - இரை = Prey - an animal that is hunted and killed by another for food. பொதுவா இரை 'ங்கற சொல்லை மனிதனுக்கு பயன்படுத்த மாட்டோம். ஆனால் மனிதனின் வாழ்க்கையும் ஏதோ 'ஒரு' இரையைத்தேடி தான்.... 😜

இப்போது தங்கியிருக்குமிடத்தில் 'இரை' என்ற சொல்லின் அர்த்தத்தை &  தேவையை உணர்த்தியிருக்கு. சுற்றி ஒவ்வொரு உயிரினமும், தான் வாழ, மற்ற உயிரினத்தை அழித்தவாரே இருக்கிறது. அதன் அன்றாட தேவையே 'தனக்கு தேவையான உணவை - இரையை தேடிப்பிடித்து உயிருடனோ, கொன்றோ தின்பது தான்.

Discovery, Animal Planet n National Geo Channels பார்ப்பதை நேரடியாக இங்கே பார்க்கிறேன்.மரங்கள் காற்றுக்கு தலையசைத்து ஆடும் போது கிளம்பும் சத்தமும், பறவைகள் , பூச்சிகள் & தவளை எழுப்பும் ஒலியும் BGM.

என்ன .....புலி சிங்கம் கரடி யானை னு பெரிய விலங்குகள்  இல்லை. ஆனால் அவற்றிக்கு சற்றேனும் குறையாத விதவிதமான பறவைகள், பாம்புகள், பூச்சிகள், வண்டுகள், குளவி, தேனி, ஈசல், 10-15 செ.மீ நீளமுள்ள கம்பளிப்பூச்சி, தவளை, தேரை, நத்தை, அட்டை, மண்புழு, எலி, அரணை, ஓனாண் விதவிதமான அளவில் சிலந்திகள், மரவட்டை,  பூரான்,கருப்பு பல்லி (இது தோட்டத்தில் மட்டுமே இருக்கிறது,வீட்டிற்குள் வருவதில்லை),தேள், நட்டுவாக்கிலி, செய்யான் பாம்பு நண்டு, மீன், பட்டாம்பூச்சி, தும்பி, கழுகு, பருந்து, கொக்கு, நாரை வகைகள், வெளிநாட்டு பறவைகள், செல் பூச்சி (கறையான்), கரப்பான்பூச்சி, கட்டெரும்பு வகைகள்,  மயில்கள், உடும்பு, கீரி, ஓநாய், ஆமை....  னு...ஸ்ஸ்ப்பா மூச்சு வாங்குது.. இன்னும் பெயர் தெரியா ஜீவராசிகள், கூடவே பெயர் தெரியாத விதவிதமான செடி கொடிகள் மரங்கள்.  
 
தினப்படி இவற்றில் அநேகமானதை சந்திச்சி,  கடிவாங்கி (பொதுவா பூச்சி வகையறாக்கள் தான்), அது பெருசு பெருசா வீங்கி, மருத்துவர் கிட்ட ஓடி, ஊசியப்போட்டுன்னு .... தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு.  ஒரு மனுஷி எத்தன தடவதான்  ஊசிப்போட்டுக்கறது  அலர்ஜி மாத்திரைய முழுங்கறது? ..சரி என் கதையை அப்புறம் பாக்கலாம். இப்ப இரை'க்கு வருவோம்.

இதுல மேல சொன்ன எல்லாமே ஒன்றை ஒன்று அடிச்சி  புடிச்சி கடிச்சி ன்னு தான் உயிர்வாழ்கிறது. அப்படியான ஒரு இயற்கை சுழற்சி அத்தியாவசியமானது. குறிப்பாக மனிதனின் வாழ்வாதாரத்திற்கு மிக மிக அவசியமானது. மனிதனுக்கு இயற்கை ஒரு வரம், இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை அதைவிடப் பெரிய வரம்.
எலி & தவளை யை தேடி பாம்பு, பாம்பை பிடிக்க கீரி,  விட்டேனா பாருன்னு கீரி, மயில், உடும்பு முட்டையை முழுங்க  ஓநாய்,  மீன், நண்டு, பாம்பு, ஆமையை எப்ப தூக்கலாம்னு மேலேயிருந்து கழுகு வட்டம் அடிக்க, பக்கத்திலிருந்து சத்தமேயில்லாம காத்திருந்து தூக்குதுங்கு கொக்கும், நாரையும். இதெல்லாம் பத்தாதுன்னு பாம்பும் உடும்பும் நீயா நானான்னு பூரான், அரணை, பல்லி, பறவைங்கன்னு பதம் பார்க்குதுங்க.  பாம்பு பறவையை பிடிக்கறதெல்லாம் இங்கதான் பாக்கறேன். 

ஒரு இரவு மழையின் விடியலில், சொன்னாக்கூட யாரும் நம்ப மாட்டாங்க. வீட்டு வாசலில் ஆயிரக்கணக்கில் ஈசல் செத்துக்கிடக்க, அதன் இறக்கைகளை பெருக்கி அள்ள முடியல.. காற்றில் பறந்து வாசல் முழுக்கவும் இண்டு இடுக்கெல்லாமும் பரவி..ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி.. நான் ஒரு பக்கம் பெருக்க, இன்னொருப்பக்கம் எனக்கு சரிசமமாக, கொஞ்சக்கூட பயமில்லாம, மதிக்காம பறவைகள் கூட்டமாக வந்து ஒரு ஈசல் விடாம கொத்தி முழுக்கிட்டு போச்சிங்க.  இதுல கொச்ச முச்சா கொச்ச முச்சான்னு அதுங்களுக்குள்ள பேசி சிரிப்பு வேற...கண்டிப்பா என்னைய கிண்டல் செய்து தான் பேசியிருக்குங்க... 😩


இதுல என்ன சுவாரசியம்னா, எப்படி ஒரு புலியோ, சிங்கமோ மானை துரத்திப்பிடிக்க வெறித்தனத்தோடு ஓடுதோ..அதனிடமிருந்து தப்பிக்க மான் எப்படி உசுர கையில பிடிச்சிட்டு ஓடுதோ.... அந்த வெறித்தனத்தை இங்க ஒவ்வொரு உயிரனமும் அதன் இரையைத்தேடி பிடிக்கும் போது பார்க்கமுடிகிறது. வேகம், வெறித்தனம், விட்டுட்டா நாம பட்டினி, திரும்ப இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது ங்கற மாதிரி தான் துரத்திப்பிடிக்கின்றன. தன்னை எதிரியிடமிருந்து காத்துக்கொள்ள நினைக்கும் உயிரனங்களும் முடிந்தளவு உயிர் போகும் வரை போராடுகின்றன... 

பாம்பு தன் இரையைப்பிடித்து விழுங்கும் போது அந்த இரை உள்ளே செல்ல செல்ல, இரை நகரும் இடத்தில் பாம்பின் மேல்புறத் தோல் விரிந்து அதன் Normal Texture, design, colour மறைந்து வேறு புதுவிதமான design, colour தெரிகிறது. தோலில் சுருக்கத்தில் ஒரு மாதிரியும், அதுவே விரியும் போது வேறு மாதிரி design னும் பார்க்கவே அழகு. அய்யோ பாவம் உள்ள இருக்க 'இரை ''. அந்த இரையும் இப்படி எதையோ ஒன்னை முழுங்கிட்டு த்தானே உயிர் வாழ்ந்துட்டு இருந்துச்சி ன்னு நாம அழகை மட்டும் ரசிச்சிட்டு இப்படிக்கா வந்துடுவோம்... 


இது போன்ற இயற்கை சுழற்சியில், ஒன்றை ஒன்று சார்ந்த எல்லா ஜீவராசிகளின் இனப்பெருக்குமும் நிச்சயம் கட்டுப்பாட்டுக்குள்  இருக்கும்.  அவைக் கட்டுப்பாட்டுக்குள்  இருக்கும் வரை மனிதனுக்கு இயற்கை சார்ந்த பிரச்சனைகள் வராமல் இருக்கும். இது மனிதனுக்கு சுற்று சூழல் சார்ந்த  காவல்.

Picture Courtesy : Thx Google.

உனக்கு 20 எனக்கு 18


கவி  :  நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா?

நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ ? வாங்கி த்தர முடியாது !

கவி :  ஆங்ங்ங்ங்.......

************
கவி : (இரவு லைட் எல்லாம் நிறுத்திட்டு படுத்தப்பிறகு, ஒரு 10 நிமிஷம் கழித்து)  மொட்டு, இந்த ஜன்னல் பக்கமும்தான்  பின்னாடி வீடு கட்டியிருக்காங்க, இந்த ரூம் நல்லா வெளிச்சமாதான் இருக்கு, கிச்சன் பக்கம் கட்டற பில்டிங் ல அவங்க இதே மாதிரி லைட் கலர் பெயிண்ட் அடிச்சிட்டா கிச்சனும் வெளிச்சமா இருக்கும். வாட் யூ சே..?!! அம்மா சரியா யோசிக்கிறேனா?

நவீன் : தூங்கும் போது..... மூளையயும் தூங்கவச்சிட்டு தூங்கு...... அது தனியா வேல செய்துப்பாரு....

கவி : ஸ்ஸ்ஸ்.... 

***********
கவி :: அப்பா வரார்டா... அவர் சொன்ன வேலையெல்லாம் முடிச்சிட்டியா?

நவீன் : எப்ப வரார்..?

கவி : வெள்ளிக்கிழமை ராத்திரி இங்க இருப்பாரு...

நவீன் : அவர் வரத்துக்குள்ள முடிச்சிடுவேன்.

கவி : அடேய்..2 மாசமா இப்படியே சொல்ற..ஆனா வேல நடக்கல.. அவர் வந்து கேட்டா என்னடா செய்வேன்..?

நவீன் : ஹா ஹா ஹா...எப்படியும் என்னைக்கேக்க மாட்டார், உன்னைக்கேட்டு, உன்னதான் திட்டப்போறாரு...  நான் ஏன் கவலப்படனும்...

கவி :.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

************

கவி : (இரவு 9 மணி இருக்கும் ) இந்த நேரத்தில் எங்க கிளம்பர.. இப்ப அவரு ஏன்னு கேப்பாரு, தினம் இப்படிதான் போறானான்னு கேப்பாரு...

நவீன் :உன்னை பாத்துக்க, இன்னைக்கு 'கட்டப்பா இருக்கையில், இந்த பாகுபலி எதற்கு...?! '

கவி: ஸ்ப்பஆ..... ........... ! அவர் ரூமைவிட்டு வரத்துக்குள்ள கெளம்பித்தொல...

நவீன் : அந்த பயம் இருக்கட்டும் !! :)))))))

கவி; ..........
********

கவி; கேமரா சரியில்ல.. கொஞ்சம் சரி செய்து தாயேன்..

நவீன் ; எத்தன மாஸ்டர் வாங்கியிருக்க..

கவி; அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல 

நவீன் ; கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...எத்தன மாஸ்டர்..
 

கவி :   .................

நவீன்;  MFT, MBA.....ஹ்ம்ம் ............இன்னொன்னு என்ன..

கவி;  Masters in Sociology

நவீன் ; ஆஹான்.. ஆனா நான் ஒரே ஒரு மாஸ்டர் தான்.. உன்னைவிட கம்மியாத்தான் படிச்சியிருக்கேன்..உன்னைவிட அறிவும் கம்மி.... நீயே சரிப்பண்ணிக்கோ...

கவி; போடாங்க...

**********
நவீன் ; குண்டாகிட்டே போறியே உனக்கு வெக்கமா இல்ல

கவி;  ம்ம் இருக்கு... ஆனா ஏதோ பிரச்சனை.. ஆப்ரேஷனுக்கு அப்புறம், உடம்பு நான் செய்யற எதுக்கும் ரெஸ்பான்ட் செய்ய மாட்டேங்குது... 

நவீன் ; இப்படி சொல்லிக்கிட்டே நல்லா குண்டாகிட்டேப்போ ..ஒரு நாள் வீல் சேர் தான்...

கவி ; ஞே !!! 

*******

நவீன் ; அம்மா.. கேமரா வ சரிப்பண்ணிட்டியா...

கவி ; ப்ப்ச்.. இல்ல..அதான் எப்படின்னு படிச்சிக்கிட்டு இருக்கேன்..

நவீன் ; ஹா ஹா ஹா ஹா...படிப்படி... நல்லாப் படி..

கவி;    7.5 ........ கிளம்புடா...

நவீன் : ஹா ஹா ஹா.. டென்ஷன் ஆவறப்போல..

கவி; ஸ்ஸ்ஸ்ஸ்.......

*********** 

கவி ; மதர்ஸ் டெ' க்கு அம்மாவ எங்க கூட்டிட்டு போகப்போற.......

நவீன் ;  திருவாரூர் ;)))))))))))

கவி ; அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..............  ;)))))))))) 

***************
பீட்டர் தாத்ஸ் ; The eternal love between man and woman really exists! It`s the love between mother and her son.

உனக்கு 20 எனக்கு 18

நண்பியிடமிருந்து 9.20 க்கு ஃபோன்.......

ஹல்லோ..

இப்பதான் தூங்கி ஏன்சியா? ஏன் குரல் ஒருமாதிரியா இருக்கு? உடம்பு சரியில்லையா?

இல்லல்ல....

சரியா கேக்கல..ஆமா ..நீ ஏன் இவ்ளோ மெதுவா பேசற?

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.....மெதுவா பேசு... என் கொழந்த தூங்கறான்...

ஹா ஹா ஹா... உன் கொழந்த தூங்கினா நீ மெதுவா பேசு.. நான் ஏன் மெதுவா பேசனும்..?!!

உலகமே மெதுவா தான் பேசனும்.. ... !!!!

அடிப்பாவி..... :))))))

# விடுமுறை நாளில் நவீனின் தூக்கம் !!

****************************************
 
Interstellar ஆ பாக்கற?

ம்ம்...

இதுவரைக்கும் உனக்கு என்ன புரிஞ்சிது (சிரிப்பை அடக்கிக்கிட்டே)

...................

என்ன லுக்கு.... ?? ஹா ஹா ஹா.. (அவனால இப்ப சிரிப்ப அடக்கவேமுடியல.. ) இதுவரைக்கும் ..உனக்கு..... என்ன ..... புரிஞ்சிது...?!

...................
 
ஹா ஹா ஹா... :))))   ஏதோ ஆக்ஷன் படம் பாத்தோமா, ஹாரார் படம் பாத்தோமான்னு இல்லாம ..உனக்கெதுக்கு இந்த வேல? :))))) ஹா ஹா ஹா

இங்லீஷ் ல சப் டைட்டில் போடறாங்கடா.. (சீரியஸ்லி வாட்சிங் மூவி)

போட்டா..? உனக்கு புரிஞ்சிடுமா? :))))))))))))

அடிங் ஓடிப்போடா... ! :)))

****************************
 
கடைக்கு போயும் மறந்துட்டேன், வரும் போது ஒருகிலோ வெங்காயம் வாங்கிட்டு வா...

வீட்டுக்குள் நுழையும் போதே, பக்கத்துக்கடையில் வெங்காயம் நல்லாயில்ல....

ஏண்டா வர வழியெல்லாம் விட்டுட்டு , பக்கத்துக்கடைக்கு வந்த? அங்க விலை அதிகம், நல்லாவும் இருக்காது, இங்கன்னா நானே வாங்கியிருக்க மாட்டேனா? சரி போய் வேற எங்கையாச்சும் வாங்கிட்டு வா, வெங்காயம் இல்லாமல் எதும் செய்யமுடியாது.

பரவாயில்ல செய்யாத ...
*******

ரீஃப்ரெஷ் செய்துட்டு வந்து...

 வெங்காயம் வாங்கித்தரலன்னு, வேணும்னே எதாச்சும் உப்புமா மட்டும்  நாளைக்கு செய்தேன்னு வை, காசு கையில் இருக்கு, உடனே உன் புருஷன் மாதிரியே "ஒன்வே" டிக்கெட் புக் பண்ணி உன்னை கொல்கத்தா பேக் பண்ணிடுவேன் ஜாக்கறதை.!!!.

அடப்பாவி... :))))))))))))) (ஒன்வே' வாஆஆஆம்..)
****************************
 
(கம்பியூட்டரில் தலையை விட்டுட்டு இருக்கிறான்)
 
டேய்....இங்கப்பாரு.. அம்மா சொல்றதை கொஞ்சம் கேக்கறியா?

அன்னாந்து கேவலமா ஒரு லுக் விட்டு..    'ம்ம்ம் ம்ம்ம்'

ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சி இருக்கறது கண்ணுக்கு நல்லதில்ல,

நெக்ஸ்ட்

8 மணி நேரம் கண்டிப்பா தூங்கினா தான் மூளை தெளிவா வேல செய்யும்..

நெக்ஸ்ட்

தூக்கம் இல்லாம போனா உடம்பு ரொம்ப ஹீட் ஆகி,, தலைமுடி கொட்டும், ஹீட் ல வர எல்லா டீஸீஸும் ஒன்னொன்னா வரும்..

நெக்ஸ்ட்..

எரும.. என்ன நெக்ஸ்ட் நெக்ஸ்ட் ங்கற சொல்றது புரிஞ்சிச்சா இல்லையா?

நீ சொன்னதை கேட்டாச்சி , உன் டைம் முடிஞ்சிப்போச்சி கெளம்பு...

கிர்ர்ர்ர்ர்..
 
******************************

நீ பெரியவனா வளந்துட்டதால,  நான் உனக்கு சின்னவளா ஆகிடமாட்டேன். நான் உன்னோட அம்மாங்கறத மறந்துடாத.....

 :)))))) ஹே ஹே.... அப்புறம்... ?!!

(ஸ்ஸ்ஸ்.. எப்படி டயலாக் டெலிவரி செய்தாலும் அசர மாட்றானே..?! )
*****************************

அப்பா மாதிரியே உனக்கும் அபீஷியல் பர்த்டே வேறயா?

ஆமா...

ஏன் இரண்ரெண்டு??

இப்ப மாதிரியெல்லாம் இல்ல, அட்மிஷன் அப்ப பிறந்த தேதி வருஷம் கேப்பாங்க, அவங்க ஒரு தேதி வருஷம் வச்சியிருப்பாங்க, அதுக்கு அதிகமா இல்ல குறைச்சலா இருந்தா, அவங்களே ஒரு மாதம்/வருசத்தை தகுந்தமாதிரி மாத்தி போட்டுக்குவாங்க.. அப்பாக்கு வருசம் தவிர தேதி மாசம் இரண்டும் மாறியிருக்கு....எனக்கு மாசம் மட்டும்.

ஓ....

அதுமட்டுமல்ல, கைய வளச்சி காதை தொட சொல்லுவாங்க. தொட்டுட்டா வளந்துட்டோம், ஸ்கூல் ல சேர்த்துக்கலாம்னு  முடிவுசெய்துக்குவாங்க

இது வேறையா? உடம்பு வளந்தா போதுமா? அறிவு வளர வேணாம்..?? உன்னையெல்லாம் அப்படியில்ல செக் பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கனும்?

உஸ்ஸ்ஸ்ஸ் ..........(எங்க ஆரம்பிச்சாலும் என்கிட்டவேயில்ல வந்து முடிக்கிறான்?)
 
********************
 
பீட்டர் தாத்ஸ் : A Boy's best friend is his Mother - Joseph Stefano

எனக்கு 20 உனக்கு 18

எனக்கு எல்லாந்தெரியும்... வாயமூடும்மா....

ஆமா நவீன் உனக்கு எல்லாந்தெரியும்!!! தெரியாததுன்னு ஒன்னுமேயில்ல..  ஒன்னு செய்யி, நல்லா யோசிச்சி எதாது ஒன்னு உனக்கு  ''தெரியல' னு சொல்லுப்பாக்கலாம்...

(அடுத்த செகண்ட் ) 20 வருசமா சமைக்கற, இருந்தாலும் ஒழுங்கா சமைக்கமாட்ற, அதான் ஏன்னு எனக்கு "தெரியல"

:))))))))))))) ஏன்டா ஏன்ன்ன்?

*****************

அம்மாக்கு அடிக்கடி தலவலி வருதுடா... நேத்திக்கு பூரா தலவலி.. அங்கக்கூட இப்படி வரும்.. இங்க தொடர்ந்து வருது... இன்னைக்கு காலையிலேயே ஆரம்பிச்சிடுச்சி...(தலைவலியில் முகமெல்லாம் வாடி, ஒரே அழுவாச்சி டயலாக் டெலிவரி செய்யறேன்)

இல்லாத மூளைய ஓவரா ஓடவிட்டா இப்படிதான் தலவலி வரும்...

.. :))))))))))))))))))


  *************
காலையிலேயே வூட்டுக்கார்க்கிட்ட இருந்து ஃபோன்.. (அவரா அழைக்கல....மிஸ் கால் கொடுத்து கூப்பிட்டவச்சேன்.)

........ஹல்லோ.. நவீன் கிட்ட கொடுக்கட்டா?

குடு குடு..

இந்தப்பா... அப்பா லைன்ல....

............................

தாங்கஸ்....

..............................
....

எனக்கென்ன வேணும்??!! அதான் அம்மாவை அனுப்பி வச்சிட்டீங்களே.......

..............................
.........

ம்ம்ம்

.......................

ம்ம்ம்ம்

இந்தா... (என்னிடம் ஃபோன் வந்தாச்சி..)

பாத்தியாடி... உன் புள்ளைய..?? அவன் பொறந்தநாளைக்கு உன்னையே கிஃப்ட்டா நினைக்கிறான்...!! (வயித்தெறிச்சல்)

:)))..சரி சரி.. வைக்கிறேன் எனக்கு வேல இருக்கு.. !!

# ஐப்பசி 1 # நவீன் பிறந்தநாள் # ப்ரவுடு மம்மி !!

**************
ஏதோ சீரியல் பாக்கும் போது,  அந்தம்மாக்கு மருமகள் சாப்பாடு கொடுப்பாங்க..

அந்தம்மா - "அரை உசுரு தான் இங்க இருக்கு.அதுக்கு எதுக்கு சாப்பாடு...??" (ஏன்னா வூட்டுக்கார் வீட்டை விட்டு ஓடிட்டார், இவங்க சோகத்தில் இருக்காங்க)

நான் உடனே என் வூட்டுக்காரைப்பாத்து..

"ஏன்ப்பா..நான் சென்னை போயிட்டா,  உங்க அரை உசுரும் போயிடுமே என்னப்பா செய்வீங்க? " ன்னு முகத்தை சீரியல் ஃபீலிங் எஃபெக்டோட வச்சிக்கிட்டு ரொம்ப சோகமா கேட்டேன்..

டகால் னு என் பக்கம் திரும்பி..

"மிச்சமிருக்க அரை உசுரோட நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி நல்லா சுத்திக்கிட்டு நிம்மதியா இருப்பேன்.."

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர் *************

 ஒரு வேலையாக மாம்ஸ் ஆபிஸ் போயிருந்தேன். அவர் ரூமில் அவரை ஃபோட்டோ எடுத்து புள்ளைக்கு வாட்சப்பில் அனுப்பினேன்.

"ஏன் அவரு நெக் பேல்ட் போடல?

"அவரு ரொம்ப நாளா போட்டுக்கறது இல்லையே"

"டாக்டர் சொன்னாரா?"

"இல்ல, அவரே தான் போட்டுக்கறது  இல்ல"

"ஏன் நீ அவரை உன்ன மாதிரி மாத்தின"

"ம்க்கும் .... போட்டுக்கோங்கன்னு சொன்னா சிடு சிடுன்னு திட்றாரு... "

"டாக்டர் சொல்ற வர கழட்டக்கூடாது, வலி இல்லன்னா சரி ஆகிடுத்துன்னு அர்த்தம் இல்ல"

"அடேய்..இதெல்லாம் நீ அவர் கிட்ட நேரா சொல்லு..ஏன் என் உயிர வாங்கற? "

"அவரு என்னை திருத்த உன்னை அனுப்பறாரு இல்ல..for the same reason am sending you to him , no direct dealing...."

"அடப்பாவி..?!!! "

**************

தங்கும் விடுதியின் முகப்பு அறை, வூட்டுக்கார் அறை வாடகையை கொடுத்துட்டு இருந்தார்.

முகப்பு அறையில் ஒரு பக்கம் சுவர் ஓரமாக, ஒரு மிஷின் இருந்தது. கிட்டக்க போய்  பார்த்தேன். மிஷினின் மேல் பக்கம் Brown, Cream, Black என்று சரியான இடைவெளியில் எழுதியிருந்ந்தது. கீழே ஒரு உருளை, உருளையிலிருந்து காஃபி மிஷினில் இருப்பது போல சின்ன குழாய் போல் தெரிந்தது. சரி காஃபி மிஷின் போல, ரிப்பேர்னு இங்க வச்சியிருக்காங்க..ன்னு நானே நினைச்சிக்கிட்டு, அங்கு நின்றிருந்த, விடுதியில் வேலை செய்யும் ஒருவரிடம்..

ஹே க்யா? காஃபி மிஷின் ஹே?!!

"நஹி மேடம், ஓ ஷூ பாலிஷிங் மிஷின்.."

அவ்வ்... ஷூ பாலிஷ் மிஷினா...? இதையா காஃபி மிஷின் னு நினைச்சேன்.. ஆஹா எம்புட்டு அறிவுன்னு, அதை திரும்ப  நோட்டம் விட்டேன்,, ஷூ பாலிஷ் செய்ய பிரஷ் போன்ற அமைப்பும் இருந்தன.

நாம தான் ஓட்டவாயாச்சே.. வெக்கம் மானம் எல்லாம் பாக்காம வூட்டுக்கார்கிட்ட வந்து விசயத்தை சொன்னேன்.

அடிப்பாவி.. அது ஷூ பாலிஷ் மிஷின்னு தெரியாதா? ன்னு குபுக் குன்னு சிரிப்பு..

அவர் சிரிக்கும் போதே, பின்னாடி லைட்டா திரும்பி பாத்தேன். எனக்கு பதில் சொல்லும் போது சிரிக்காத அந்த வேலையாள் இப்போது சிரிப்பை மறைக்க முடியாமல் சிரிச்சிட்டு இருந்தாரூ..

....வூட்டுக்காரிடம் , பாருங்க உங்களால தான் அவரும் சிரிக்கறாரு...

"யாரா இருந்தாலும் சிரிப்பாங்க. உனக்கு ஓன்னு தெரியலைன்னா நேரா ..அது என்னன்னு கேட்டிருக்கலாம் இல்ல.... ஏன் காஃபி மிஷினா ன்னு கேட்டு அசிங்கப்பட்ட?"

ஆமா கேட்டிருக்கலாம். ஷூ வ மிஷின் ல பாலிஷ் பண்ணுவாங்கன்னு சத்தியமா எனக்குத்தெரியாது, இப்ப தான் முதல் முறையா பாக்கறேன். அதும் க்ரீம் னு எழுதியிருந்ததால் தான் காஃபின்னு நினைச்சிட்டேன்.. :((

# வெறி big பல்பு :((

***********
"இவருக்கு (விக்ரம்) ரொம்ப வயசாகிடுச்சிப்பா, இன்னும் என்ன ஹீரோ? இனிமே அப்பாவா தாத்தாவா நடிக்கலாம், பாக்க சகிக்கல.."

ஒரு மாதிரியா என்னை திரும்பி பாத்தாரூ.... (அப்பவே உசாரா ஆகியிருக்கனும்)

"அட... ஏன்ப்பா அப்படி பாக்கறீங்க.. (சன் டிவியில் சைமா நிகழ்ச்சி பாத்துட்டே இருக்கோம்) நீங்களேப்பாருங்க.. தாடையெல்லாம் கீழ இறங்கிப்போச்சி.. ரொம்ப வயசு தெரியுது... (இன்னொ்ரு சேனலில் அர்ஜுன் படம்) அந்த அர்ஜூன் கூட.. ரொம்ப வயசு தெரியுது. பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்துக்கொடுத்து பேரக்கொழந்த எடுத்தது எல்லாம்  ஏன் இன்னும் ஹீரோவா நடிச்சி தொலைக்கறாங்க.....

நிதானமா திரும்பிப்பாத்து.. "ஏண்டி உனக்கு மனசாட்சியே இல்லையா? உங்க தலைவருக்கு என்ன 16 வயசா?  அவரு நடிச்சா மட்டும் விசில் அடிச்சி பாக்கற? அவருக்கு வயசே தெரியலையா..? இதெல்லாம் முதல்ல அவருக்கு சொல்லு.."

ஆஆஆவ்வ்வ்வ்... (இதுக்கு தான் முதல்லேயே லுக்கு விட்டாரோ..??...) அவரு வேற இவங்கெல்லாம் வேற... எங்க தலைவர் ஸ்டைல் அழகு எல்லாம் இவங்களுக்கு வருமா?....இந்த வயசில் அவரு.....

வாயில் கையை வச்சி மூடி காமிச்சார்...

நானும் கப் சிப்........

**************
பீட்டர் தாத்ஸ் ;  You dont choose your family. They are God's Gift to you, as you are to them. -Desmond Tutu
u don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html
You don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html
You don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html

பாரிஸ் பயணக்குறிப்புகள் #8

உள்ளூரில் இன்னும் நான்கு முக்கிய இடங்கள் பாக்கி, அவரின் அண்ணன் மகன் பாரிஸ்ஸில் இருந்தாரு, அவங்க வீட்டுக்கும் ஒரு மாலை பொழுதில் போயிட்டு வந்தோம். பார்த்த இடங்கள் எல்லாவற்றிற்கும் இணைப்புகள் கொடுத்திருக்கேன். படம் சேர்த்தால், நேரமும் இடமும் பிடிக்குது. அதனால் இணைப்புகளை க்ளிக்கி, படங்களையும், விபரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.
Sacre-Coeur :  இந்தியர்கள் ( Gare du nord) பகுதியிலிருந்து காலார நடந்து சென்றுக்கொண்டே இருந்தால், 15 நிமிடங்களில் இந்த சர்ச் வந்துவிடுகிறது. சிறிய குன்றின் மேல் அமைந்த இந்த சர்ச் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது. மேலிருந்து மாலை நேர சூரிய வெளிச்சத்தில் பாரிஸ் நகரம் மிக அழகாக தெரிந்தது. உள்ளே நுழையும் முன் வெளி மதில் சுவர் மேல் வைத்திருந்த சிலை ஒன்று திடீரென்று அசைந்து எல்லோரையும் பயமுறுத்தியது. சுதாரித்து பார்த்தால்..அட !! சிலைப்போல வேஷமிட்ட மனிதர்.. ஃபோட்டோவிற்கு சிலைப்போல போஸ் கொடுத்தார். இங்கும் கறுப்பினத்தவர்கள் ஐஃபில் டவர் பொம்மைகளை கூவி கூவி விற்றுக்கொண்டு இருந்தனர். ஒரு ஈரோவில் ஆரம்பித்து 10-15 ஈரோ வரை விலைகள் இருந்தன. நவீனுக்கு வேலைக்காக இந்த சர்ச்சில் வேண்டிக்கொண்டு மெழுகுவற்றி ஏற்றினேன்.
இங்கு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயங்கும் கழிப்பிடம் இருந்தததால், சர்ச்'சின் ஒரு பகுதியில் சுற்றுளா பயணிகள் இயற்கை உபாதைக்கு ஒதுங்கி, துர்நாற்றம் வீசியது.
பக்கத்தில் நம்மூர் கோயில் இருப்பதாக சொன்னதில், வெகுதூரம் நடந்தும் கண்டுப்பிடிக்க முடியாமல், அவரின் அண்ணன் மகன் வீட்டுக்கு சென்றோம். கைப்பேசி வசதி எங்களுக்கு இல்லை, அதனால் முன்னமே இறங்கும் ரயில் நிலையம், வீட்டு முகவரி வாங்கிக்கொண்டு எத்தனை மணிக்கு வருகிறோம் போன்ற தகவலை சொல்லியிருந்தோம். ரயில் நிலையம் அச்சு அசலாக நம்மூர் கிராமத்து ரயில் நிலையம் போலவே இருந்தது, அவர் ரயில் நிலையம் வந்து எங்களை அழைத்துசென்றார்,அந்த இடம் பாரிஸ் நகரை தாண்டி புறநகர் பகுதி. நம்மூர் வீட்டுவசதிவாரிய குடியிருப்புகள் போன்றே இருந்தன, மூவர் கூட சரியாக நிற்கமுடியாத மிகக்குறுகிய லிஃப்ட்டில் 7 ஆவது மாடியிலிருந்த அவரின் குடியிருப்புக்கு சென்றோம். கட்டிடம் கட்டி பல வருடங்கள் இருக்கலாம். பாண்டிச்சேரியிலிருந்து ஃப்ரான்ஸ் குடியுரிமை பெற்று, பரம்பரையாக செட்டில் ஆகியிருந்த அந்த குடும்பத்தினருக்கு, அரசே அநேக சலுகைகள் செய்து வருகிறது. மாதந்தோரும் உதவித்தொகை, பிள்ளைகள் வேலைக்கு செல்ல அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதற்கான எந்தவித படிப்புக்கும் அரசே உதவுகிறது போன்ற தகவல்கள் எனக்கு அதிகபட்சமாகவே தெரிந்தன. இவை ஃப்ரான்ஸ்ஸில் குடியேறும் மற்ற நாட்டு அகதிகளுக்கும் பொருந்தும்.
மருமகள் சுட சுட சிக்கன் சமோசாவும், டீ யும் கொடுத்து உபசரிக்க, சிற்றூண்டி முடித்து, 7 ஆவது மாடியிலிருந்து, இரவு நேர பாரிஸ்ஸின் அழகை ரசித்துவிட்டு , வீடு வந்து சேர்ந்தோம்.
*********
மற்ற இடங்களைப் பார்க்க செல்லும் முன், ஐரோப்பாவின் பூக்கள் பற்றி சொல்லிவிடுகிறேன். எங்குப்பார்த்தாலும் கண்ணைப்பறிக்கும் விதவிதமான வண்ண வண்ணப்பூக்கள். குறிப்பாக நாங்கள் சென்றிருந்த மாதத்தில் மிக அருமையான தட்பவெப்ப சூழல் இருந்தது. மிதமான குளிர் (10-11 டிகிரி), லேசான மழைச்சாரல், சில நேரம் பலத்த மழை என சுற்றுப்பயணத்திற்கு ஏற்ற வானிலை ரசிக்கத்தக்க வகையில் இருந்தது.
பூக்களே......
சற்றே தயாராகுங்கள்...
கவிதா வந்துவிட்டாள்...
உங்களை படம் பிடிக்க..
ன்னு '' திரைப்பட பாடலை அடிக்கடி மனதிலும்/வாய்விட்டும் பாடிக்கொண்டே இருந்தேன்.
ஒரு பூவே
இன்னொரு பூவை
படம் பிடிக்கிறதே?!!
எனவும்.............. சரி சரி.. டென்ஷன் ஆவப்பிடாது... கூல் !!  
இந்தியா வந்தவுடன் புகைப்படங்களை சரிப்பார்த்து, கணினியில் சேமித்து வைக்கும் போது, ஐரோப்பாவின் பூக்கள் என்றே ஒரு ஆல்பம் தயார் செய்யுமளவு அதிகளவில் பூக்களை தான் படம் பிடித்திருந்தேன். பாரிஸை விட, ஜெனிவா & மான்ட் ப்ளான்க்'கில் தான் விதவிதமான பூக்கள் இருந்தன. பாரிஸ் & பார்சிலோனா'வில் வழிநெடுக மரங்களில் பூத்துக்குலுங்கிய பூக்கள், காய்ந்த இலைகளோடு சேர்ந்து நடைபாதைகளில் உதிர்ந்து, பெரிய பெரிய மலர் படுக்கை விரிப்புகளையும், அழகழகான கோலங்களையும் உருவாக்கியிருந்தன.
இவற்றை கண்டுக்களித்தவாரே அடுத்து சென்ற இடம் :
Notre Dame de Paris : சய்னி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த சர்ச் மிகவும் வித்தியாசமான கட்டிட வடிவமைப்பில் சுற்றுளா பயணிகளை கவர்ந்தது. கோதிக் என்ற கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டியிருக்கிறார்கள். நுழைவாயிலின் கதவுகளிலும், மேற்புற சுவரோடு ஒட்டி செதுக்கிய சிலைகளும் கவனத்தை ஈர்த்தன.  உள்ளேயும் ஆடம்பர விளக்குகள், ஆதீத உயரத்தில் மேல் கூரை ஓவியங்கள் என எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தன.
இங்கிருந்து சய்னி நதிக்கரையில் சற்று தூரம் நடந்து ஊரை சுற்றிப்பார்த்தோம். சாலையோர கடை ஒன்றில் பேன் கேக்கின் சிஸ்டர் என்று சொல்லப்படும் 'க்ரீப்ஸ்' உணவை தயாரித்துக் கொண்டிருந்தனர். இது வேற ஒன்னுமில்ல, நம்மூர் மைதா/கோதுமை தோசை தான். ஒருவேளை இந்த உணவை புதுச்சேரியிலிருந்து இவர்கள் கற்றுவந்திருக்கலாம். சீஸ், வெண்ணெய், நெய், சாக்லெட் என பல ஃப்ளேவர்களில் கலந்து விதவிதமான தோசைகளை, வித விதமான விலைகளில் விற்கிறார்கள். மாமிசம் கலக்கவில்லை (முட்டை மட்டும்) என்பதை ஊர்ஜிதம் செய்துக்கொண்டு, வெண்ணெய் தோசை ஒன்றை வாங்கி சாப்பிட்டோம். அடடா..!! என்னா ருசி!!. அதிலிருந்து இந்த தோசையை எங்குப்பார்த்தாலும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். மைதா மாவுடன் முட்டை கலந்து செய்கிறார்கள் என கூகுள் சொல்லுது.
அடுத்து சென்ற இடம் Arc de Triomphe நம் புதுதில்லி 'இந்தியா கேட்' போல இருக்கிறது. பாரிஸிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று. இதன் கீழே முதலாம் உலகப்போரின் "அறியப்படாத போர் வீரன்" கல்லறை உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கேட்'டிற்கு செல்லும் சாலை நம் சென்னை அண்ணாசாலையை நினைவுப்படுத்தியது. சாலையில் இருபுறமும் ஒரே வரிசையில் நெடுக வளர்ந்திருந்த பெரிய மரங்கள், மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள், சாலையோர கடைகள், உணவு விடுதிகள் என  ஆடம்பர ஷாப்பிங் இடமாக இருந்தது.
இங்கு, சிறுநீர் கழிக்க கழிப்பிடம் ஏதுமில்லாமல், நேரம் செல்ல செல்ல அடிவயிற்றில் அதிக வலி ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளானேன். வலியின் காரணமாக அத்தனை குளிரிலும் எனக்கு வியர்வை கொட்ட ஆரம்பித்தது. கழிப்பிடம் தேடி 40 நிமிடங்களுக்கு மேலாக அலைந்தோம். ஷாப்பிங் காம்லெக்ஸ்'ஸில் இருந்த ஒன்றிரண்டு இடங்களில்,  நீண்ட வரிசை இருந்ததால் வேறு இடம் தேடி அலைந்து, நேரம் கரைந்து, வலியும் அதிகமானது. இதன் நடுவில், கழிப்பறை பொருட்கள் விற்கும் ஒரு கடையில், கட்டண கழிப்பிடம் இருப்பதாக ஒருவர் சொல்ல, அதைக்கண்டுபிடித்து வரிசையில் நின்றேன். 2 ஈரோ கட்டணம் என்பதாலோ என்னவோ அதிக கூட்டம் இல்லை, இதுவே பாரிஸில் அதிகபட்ச கழிப்பறை கட்டணமாக இருக்கும். 50 சென்ட்ஸ் லிருந்து 1 ஈரோ தான் சாதாரணக்கட்டணம்.. நம் அவசரம் தெரியாமல், மிகுந்த பகட்டான அந்த கடையில் வேலை செய்பவர், உள்ளே சென்றவர் வெளியில் வந்ததும், ஒவ்வொரு முறையும் இவர் உள்ளே சென்று, நின்று நிதானமாக சுத்தம் செய்துவிட்டு வந்தார். "அடேய் அநியாய ஆபிசரே, எங்க அவசரம் தெரியாமல், ஏண்டா இப்படி செய்யறேன்னு" நினைச்சாலும் கேக்க முடியல. வெளியே வந்தும், எனக்கு அடிவயிற்றில் ஏதோ இறுக்கிப்பிடித்தது போலவே இருந்தது. மிகவும் சோர்ந்து, நடக்கக்கூட முடியாமல் சாலையோர பெஞ்சில் உட்கார்ந்துவிட்டேன். வலி குறைந்து நடக்கமுடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் தொடர்ந்து சுற்ற ஆரம்பித்தோம்
*********
மறுநாள், நவீன் இருக்குமிடத்திலிருந்து 3 ஆவது ரயில் நிறுத்தத்தில் அமைந்திருந்த Louvre அருங்காட்சியகம் சென்றோம். உலகில் அதிகளவு பார்வையாளர்கள் வந்து போகும் அருங்காட்சியகம் இதுவே. அங்கிருந்த அரண்மனை ஒன்றின் முகப்பு முதற்கொண்டு எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே மியூசியமாக மாற்றியிருந்தனர். மிகப்பெரிய மியூசியமான இதை சுற்றிப்பார்க்க இரண்டு முழு நாட்கள் நிச்சயம் தேவை. ஆனால் எங்களுக்கு 3/4 நாள் தான் கிடைத்தது. இந்த இடத்தைப்பற்றி தனிப்பதிவுக்கூட எழுதலாம். ஏனென்றால், என் வாழ்க்கை சம்பவத்தோடு, நெருங்கிய தொடர்புடையது என அங்கு செல்லும் வரை எனக்கே தெரியாது. ஆம், உள்ளே சென்ற எனக்கு பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது.
தொடரும்..

சிம்பு என்ற பெயர்சொல் !

நம்ம வாழ்க்கை கொல்கத்தா - சென்னை 'னு தொடர்ந்து ரவுண்டு அடிக்குது.

சென்னையில், இப்ப பார்க்கற இடமெல்லாம் பசங்க "பிரேமம் தாடி" யோட இருக்காங்க. முதல்ல வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறேன்..

எம்புட்டு அழகா , ரவுண்டா, வெல்லக்கட்டி மாதிரி ஒரு புள்ளைய பெத்து, அதுக்கு நல்லது கெட்டதை எல்லாம் தேவைப்படும் போது சொல்லிக்கொடுத்து, எப்பவும்.."குட் பாய்'யா இருக்கியா?" ன்னு கேட்டு கேட்டு கன்ஃபார்ம் செய்துக்கிட்டு....வளத்தா.......  இந்தப்பய.. மூஞ்சி முழுக்க தாடி வச்சிக்கிட்டு, அதான் Style, Comfort னு சொல்லிட்டு இருக்கு..

(உடனே நீங்க நடுவுல வந்து "நல்லப்புள்ளைக்கும் தாடிக்கும் என்ன சம்பந்தம் னு கேக்கப்பிடாது... கேட்டாலும் அதுக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது, அதனால கேள்விக்கேக்காம, அமைதியா படிக்கிற வழியப்பாருங்க)

தாடியோட  அவன் முகத்தை ப்பார்க்கும் போது... "இவன் என் புள்ள தானா" ன்னு  எனக்கே சந்தேகம் வந்துடுது. ஏன்னா நவீன் அப்படியே அவங்க அப்பா ஜாடை, அவர் இவ்ளோ தாடிவச்சி நான் பார்த்ததேயில்ல, ஆக இந்த முகம் எனக்கு பரிச்சயம் இல்லா முகமாவே இருக்கு..

ஃப்ரான்ஸ் போகும் போது ஃப்ரென்ச் பியர்ட்' இல்லைன்னா 'கோ(Go)ட்டி' னு ஒன்னு வச்சித்தான் தீருவேனு அவன் அடம் பிடிக்க.." முடியவே முடியாது அச்சு அசலா தீவிரவாதி மாதிரியே இருக்க... சென்னை செக்கிங்''ல சந்தேகத்துல பிடிச்சி வச்சி விசாரிப்பான்.. அவன் விசாரிச்சா உன் வாய் சும்மா இருக்காது.. நீ ஏடா கூடமா பதில் சொல்லுவ , கடுப்பாகி.. என்னா வேணா பண்ணுவாங்க.. விமானமே ஏறமுடியாம போகலாம்.. முதல்ல தாடிய எடு" னு நானு ஒரு பக்கம் இம்சை செய்ய...

"யம்மா...தாயே.....ஒரு தாடிக்கு இவ்ளோ பெரிய பில்டப், டெரரிஸ்ட் ஸ்டோரி எல்லாம் ரொம்பவே ஓவரா தெரியலையா உனக்கு....?" ன்னு கேட்டுட்டு... நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கறதுன்னு முடிவெட்டும் கடைக்குப்போயிட்டான்..

இதா பக்கத்துல தான்...நமக்கு தெரிஞ்ச கடை தான், இந்த பய சின்னப்புள்ளையிலிருந்து அங்க தான் வெட்றான். 15 நிமிடம் கழித்து, கொட்ற மழையில், குடைய எடுத்துக்கிட்டு பின்னாடியே போனேன். நினைச்சபடி நாற்காலியில் உக்காந்துட்டு இருந்தான்... முடிவெட்டுபவர் தலையில் வேலைப்பாத்துட்டு இருந்தாரு.

"தம்பி இங்கப்பாருப்பா..அவரு இன்னைக்கு வெளிநாடு போறாரு.. கோட்டி வை, ஃப்ரென்ச் பியர்ட் வை ன்னு கேப்பாரு,  எதாச்சும் வச்சி அனுப்பாத, பாஸ்போர்ட் ல வேற ஃபோட்டோ இருக்கு...முகம் வேற மாதிரி தெரிஞ்சா, என் புள்ளைய ஏர்போர்ட்ல போலிஸ் புடிக்கும்.. ..அப்புறம் அதுக்கெல்லாம் காரணம் நீதான்னு உன்னை சும்மா விடமாட்டேன் சொல்லிட்டேன்.." னு சொன்னது தான்.. அவனும் தொறந்தவாய மூடல.. என் புள்ளையும் கடுப்பா என்னை முறைக்க...." .இரண்டுப்பேரும் சுதாரிச்சி திரும்ப பதில் பேசறதுக்கு முன்னாடி.. யூடெர்ன் அடிச்சி, வீட்டுக்கு ஓடி வந்துட்டேன். 

வந்தான் பாருங்க என் புள்ள..!!!  வழிச்சிவச்ச கோழியாட்டும்!!!!..அட அட அட என்னா அழகு.. :). அம்மா கண்ணே பட்டுப்போச்சி..!!! கிட்டக்க போகாமல் தூராம இருந்தே சுத்திப்போட்டுக்கிட்டேன்

என்னை முறைச்சிட்டு, (வீட்டில் விருந்தாளிகள் இருந்ததால்) நேரா என் வூட்டுக்கார்கிட்ட போனான்.. "எங்கெருந்துப்பா இத கல்யாணம் செய்துக்கிட்டு வந்தீங்க..?" முடி வெட்டற கடைக்கு வந்து.. அந்த அண்ணன் கிட்ட சத்தம் போடறாங்கப்பா.....முடியலப்பா..."

ம்க்கும்...இனிமே யார் நம்மை எப்படி திட்டினா என்ன..?  தாடிய எடுத்தாச்சு அது போதும்..னு வூட்டுக்கார் பக்கம் திரும்பவேயில்லயே....யார்கிட்ட??!! 

ஆனா.. இப்ப கதையே வேறயா இருக்கு.. !!!

பெரிய மனுசர் ஆகிட்டாரு. எதுக்குமே பதில் சொல்றது இல்லை. நானும் வந்த 10 நாளா தினப்படி "தாடிய எடுடா எடுடா.. யாரோ மாதிரி இருக்குடா" ன்னு சொல்றேன். ஒரே வார்த்தை "முடியாது".

நடுவில் டூர் போயிட்டு வந்தாரு. அந்த ஃபோட்டோவெல்லாம் பாக்கும் போது தான் தெரியுது.. கூட இருக்க அத்தன பயலும் அடர்த்தியா தாடி வச்சிக்கிட்டு இருக்கானுங்க..

சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போறேன்.. அங்க.. அக்கா பசங்க, அண்ணன் பசங்க எல்லாரும் தாடி. இதுல ஒரு அண்ணன் பையன் முறுக்கு மீச வேற... யார்னே அடையாளம் தெரியல.. அந்த பய..இப்பதான் கல்லூரி 3 ஆம் ஆண்டு படிக்குது. காலேஜ்'ஜில் எப்படிடா விடறாங்க? ன்னு கேட்டா... "அப்பப்ப அப்பா அம்மாவ கூப்பிடுவாங்க , இவங்களும் வருவாங்க.. அப்ப மட்டும் ஷேவ் செய்துக்குவேன்.. திரும்ப வளத்துக்குவேன்னு" அசால்ட்டா சொல்றான்.

இரண்டு நாள் பயணமாக வந்த என் வீட்டுக்காரரும் நவீனிடம் "இப்படி தாடி வச்சிக்கிட்டு ஆபிஸ் போகறது நல்ல பழக்கம் இல்ல" ன்னு சொல்லிப்பாத்தாரு.. "அப்படி எதும் கட்டுப்பாடு இல்ல... 90%  நாங்க எல்லாருமே தாடி தான்.. அவங்க ஒன்னும் செய்ய முடியாது"ன்னு பதில் சொல்றான்.

பாக்கற இடத்தில் எல்லாம் பசங்க..தாடியோட தான் இருக்காங்க.... எல்லாத்தும் அடிப்படை.. இந்த பிரேமம் படம் தான் போல...

தேர்தல் நேரம், சிம்பு ஓட்டுப்போட வந்த வீடியோவை பார்த்து, அடடே தாடியோட பாத்தா நம்ம புள்ளையாட்டும் இருக்காரே,ஆபிஸ் விட்டு வரட்டும் சொல்லலாம்னு.. வந்தவுடனே "தாடியோட நீ சிம்புவாட்டம் இருக்க..அப்ப உனக்கும் நிறைய பொண்ணுங்க ஃபேன்ஸ் கிடைப்பாங்க இல்லாடா? ன்னு கேட்டேன்.....

கிர்ர்ர்னு முகம் மட்டும் மாறிச்சி ஒன்னும் பதிலில்லை. ஆனா  அடுத்தநாளே... தாடிய ஒட்ட ட்ரிம் பண்ணிட்டு வந்துட்டான். என் கண்ணே பட்டுடும் போல...

இனிமே "சிம்பு" அடிக்கடி உதவுவார்னு நினைக்கிறேன். !! :)

பீட்டர் தாத்ஸ் : “...'beard' isn't really a superpower.” Amy Leigh Strickland, The Pantheon 

அந்த திகில் நிறைந்த நிமிடங்கள்...

அதிகமாக குளிரூட்டப்பட்ட அந்த அறையில், கைப்பிடித்து மெதுவாக அழைத்துச் செல்லப்பட்டேன். அறை வெளிச்சம் குறைவாக இருட்டாக இருந்தது. "நகையெல்லாம் கழட்டி கொடுத்திட்டியா? " வெற்றாக இருக்கும் என்னை இன்னும் ஒருமுறை சரிப்பார்த்துக்கொண்டாள் அவள் ..!!

உள்ளே ஒரே ஒருவர் இருந்தார், வேக வேகமாக பெரிய பெரிய ட்ரே போல் எதையோ எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.  ஏன் இத்தனை அவசரமாக இந்த வேலையை செய்யவேண்டும்? தெரியவில்லை...

என்னை சற்றே உயரமான ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்கள். என் கைகளை உடலோடு வைத்து கட்டிப்போட்டார்கள். திமிரவோ கத்தவோ முடியவில்லை. அவர்கள் அறியாமல் அசைந்து பார்த்தேன்..ம்ஹூம்.. ஒன்றும் நடக்கவில்லை.  மிக அழுத்தமாக கட்டப்பட்டிருக்கிறேன், நம் வேலை இங்கு பலிக்காதுன்னு தெரிந்துக்கொண்டேன்.

வேகமாக அந்த இளைஞன்  பெங்காலியில் ஆரம்பித்து, நான் முழிப்பதை கவனித்து..அதே வேகத்தில்.... "அச்சா" என்று ஹிந்தியில் மாற்றி ஏதோ சொல்லிக்கொண்டே போனான். என்னை கட்டிப்போட்டுவிட்டு "பேச்சப்பாரு பேச்சை"ன்னு அவன் சொல்வதை சரியா கவனிக்கல..... இன்னும் என்னை என்ன செய்யப்போறாங்களோ? தனியா வந்து இதுங்கக்கிட்ட இப்படி சிக்குவேன்னு நினைச்சிக்கூட பாக்கலையே...ன்னு சிந்தனை வேறெங்கோ இருந்தது.

ஹிந்தியில் சொல்லி முடிக்கும் போது, என் இடது கையில், எதையோ திணித்தான்.. ரப்பர் பந்து போல உணர்ந்தேன். இப்போது திறந்திருந்த என் கண்களை மூட சொன்னார்கள். "கண்ண திறக்கக்கூடாது சரியா...." என ஹிந்தியில் பயமுறத்தப்பட்டேன்.  தலையில் ஹெல்மெட் போல ஏதோ ஒன்றை மாட்டி அப்படி இப்படி என் தலையை திருப்ப முடியாமல் லாக் செய்தனர்..லாக் செய்யும் முன்னர் காதுகளும் அடைக்கப்பட்டன. அடேய் அப்பரெண்டீஸுகளா..." மூக்கும், வாயும், இன்னும் பாக்கி இருக்குடா..அதிலும் எதையாச்சும் வச்சி அடச்சிட்டா.." வேல சீக்கிரம் முடிஞ்சிடும், காசையும் வாங்கிட்டு, வீட்டுக்கும் நல்ல தகவலை சொல்லிடலாம் நீங்க" ன்னு .....ஹிஹி.. சொல்லல. .நினைச்சிக்கிட்டேன்.

இதுவரை நடப்பதைப்பார்த்தேன். இப்போது உணர ஆரம்பிக்கிறேன்.

என்னை ஏதோ ஒரு குகைக்குள் தள்ளுகிறார்கள்...  உடல், தலை இரண்டையுமே அசைக்க முடியல..ஆர்வத்தில் டகால்னு கண்ணைத்திறந்து பார்த்து மூடிக்கொண்டேன். குகைக்குள் வெளிச்சம் இருந்தது. ஆனால் இதுல என்னத்த தெரிஞ்சிக்க முடியும்? ,,,நடப்பது நடக்கட்டும்னு அமைதியாக படுத்துக்கிடந்தேன். வேற வழியும் இல்லை என்பதே உண்மை.

நான் இருந்த படுக்கை..குகைக்குள் செல்ல ஆரம்பித்தது.. "செத்துப்போயிட்டா.. உடலை இப்படி தள்ளி த்தான் எரிப்பாங்க போல" ன்னு நினைக்கும் போதே..."அடடே..நாம இன்னும் சாகலையே" ன்னும் தோணியது.

ட்ர்ர்ர்ர்ட்டக்க் ட்ர்ர்ர்ர்ட்டக்க்.....ன்னு சென்று நின்றுவிட்டது. மயான அமைதி.. லேசாக கண்ணைத்திறக்க முயற்சி செய்தேன். பயமாகவும் இருந்தது. முகத்துக்கு நேரே எதாச்சும் வந்து நின்னு..அதைப்பார்த்து பயந்து..ஹார்ட் அட்டாக் வந்துட்டா? இதுவே பெரிய தண்டனையா இருக்கு.. இதுக்கும் மேல நாமே  எதையும் இழுத்து விட்டுக்க வேணாம்னு , ரொம்ப முயற்சி செய்து கண்ணை த்திறக்காமல் கட்டுப்படுத்திக்கிட்டேன்.

அப்போது தான், என் வலது கை எதன் மேலோ உரசுவதை உணர்ந்தேன். அட அப்ரண்டீஸூகளா? கை தோல் உறிஞ்சிட போகுது..கட்டிப்போட்டீங்களே.. கைய ஒழுங்கா வச்சி கட்டலையான்னு....."... எனக்குள் நானே கேட்டுக்கிட்டு..கை உரசாதவாறு என் உடலோடு, அதாது..படுத்தபடி ஒரு கை மட்டும் சற்றே உயர தூக்கி க்கொண்டேன். சிறுது நேரத்தில் எந்த பிடிமானமும் இல்லாததால் கை வலிக்க ஆரம்பித்தது. கட்டப்பட்ட நிலையில் இதற்கு மேல் என்னால் கையை மேலே கொண்டு வர முடியவில்லை. கீழே கொண்டு சென்றால் எதன் மீதோ உரசி பயமுறுத்தியது.. ஆக வலியைப்பொறுத்துக்கொண்டேன்...

நான் சற்றும் எதிர்பாராத விதமாக... பலவிதமான அளவுகளினால் ஆன சுத்தியல்' கொண்டு, மாற்றி மாற்றி என் தலையில் அடிக்க ஆரம்பித்தார்கள். மூளை பிய்த்துக்கொண்டு வெளியில் வந்து, எதால் அடிக்கிறார்கள் எனப்பார்த்துவிடும் போல இருந்தது. சத்தம் தாங்காமல் காது கிழிந்துவிடும் போல இருந்தது..ஆனால் அடி என்னவோ....என் தலையில் படுவதாக தெரியவில்லை.

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டக்...ட்டாக்டக் ட்டாக்டக் ...ட்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர் ட்டாக்டக்க் ட்டாக்க்க்டக்...ஜட்ட்ட்ட்ட்ஜட்ட் ஜட்ட்ட் ஜட்ட்ட்.. வீவ்வ்வ்வ்ர்ர்ர்ர்ர்ர் வீவ்வ்வ்ர்ர்ர்...ட்டாக்டக் ட்டாக்டக்..டர்ர்ர்ர்ர்ர்ட்ஷ்ஷ்.. டார்ர்ர்ஷ்ஷ்...

இப்படியான தொடர் ஒலிகள்...இடைவிடாது மிக சத்தமாக கேட்க ஆரம்பித்தது...நிற்காமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது..

ஒலி நிற்கும் போது குகைக்குள் மேலும் கீழுமாக நான் தள்ளப்பட்டேன்.

கட்டை அவிழ்த்துக்கொண்டு எகிறி குதித்து தெறிச்சி ஓட வேண்டும் போல இருந்தது. ஆனால்....அப்போது தான் உணர்கிறேன்..... மூச்சுக்கூட என்னால் சரியாக விட முடியவில்லை...

அதீத சத்தத்தை கிரகிக்க முடியாமல், அதிலிருந்து தப்பிக்க முடியாமல், கத்தவும் முடியாமல்.. தொண்டை வரண்டு, இரும ஆரம்பித்தேன். ஆனால் மூச்சே சரியாக விடமுடியாமல் இருந்த எனக்கு இ்ருமவும் முடியவில்லை, எச்சில் கூட முழுங்க முடியவில்லை... மூச்சு விட கடினமாக....ஆக....என் பயம் அதிகமானது.

என்னை நானே அசுவாசப்படுத்த முயன்றேன். சத்தத்தினை கவனிக்காமல் என் மூச்சை கவனித்து மெதுவாக மூச்சை இழுத்து விட ஆரம்பித்தேன். இருமவும் முயற்சி செய்து உடல் தலை கட்டியிருப்பதால் முடியாமல் லேசாக வாய்த்திறக்காமல் இருமினேன்.

கையில் கொடுத்த ரப்பரை அழுத்தலாமான்னு நினைத்து, வேண்டாம்.... என்ன தான் நடக்கிறது பார்ப்போம், எவ்வளவு தான் என்னால் சமாளிக்க முடிகிறது என, திரும்பவும் சத்தத்தினை கவனிக்க ஆரம்பித்தேன்...

வரும் சத்தம் அதிகமாக இருந்தாலும் அதைக் கோர்வையாக்கி.. ஒரு கோரசாக மாற்றி இசையாக்க முயற்சி செய்தேன்... பிடிப்பட்டது... 2-3 வினாடிகளுக்கு ஒரு முறை இந்த கோரஸ்ஸில் நான் உருவாக்கி பாட ஆரம்பித்த வார்த்தைகள் மாறிக்கொண்டே இருந்தன....

"வீடு வீடு வீடு........./ஜெயா ஜெயா ஜெயா..../வீட்ர்ரு போதும்..விட்ரு போதும்.. / வீடு வீடு வீடு..../டாண்ன்னா டாண்ன்னா டாண்ன்னா டாண்ன்னா /கிர்னீஈஈப் கிர்னீஈஈப்.../வீடு வீடு வீடு.... ஜெயா ஜெயா ஜெயா...வீட்ர்ரு போதும்..விட்ரு போதும்........"..  இன்னும் எதேதோ அர்த்தமற்ற வார்த்தைகள்......

வீடு'ன்னா அது தொடர்ந்து 2-3 வினாடிகளுக்கு அல்லது மேலாக ஒலிக்கும்.... பிறகு ஒலி்யின் தன்மை வேறாக மாறும்..  ஜெயா'ன்னு எனக்கு ஒரு தோழி இருக்காங்க , அதனால் ஜெயா சொல்லும் போது தோழியை நினைத்தபடியே சொல்லிக்கொண்டு இருந்தேன்..."விட்ரு போதும்" சத்தம் கோர்வையாக வரும் போதெல்லாம்... இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தோடே சொல்லிக்கொண்டிருந்தேன். ..

ஆக... ஏதேதோ தமிழில் புதுப்புது வார்த்தைகளை அர்த்தத்தோடும், ஹாரிஸ் பாடல்கள் போல அர்த்தமற்ற ஆரம்பமாகவும் , சத்தத்திற்கு ஏற்றவாறு  உருவாக்கி இசையாக்கிக்கொண்டிருந்தேன்....

மல்லக்க ஒரே நிலையில் படுத்து, இறுக்க கட்டப்பட்டு இருந்ததால்.. நடு இடுப்பில் இனம் புரியாத வலி, வலது கை தூக்கியபடி வைத்திருந்த வலி ஒரு பக்கம்....இதில்.. கன்னா பின்னா கடும் சத்தம் ஒரு பக்கம் என..இதைவிட ஒரு பெரிய தண்டனையை இது வரையில் நான் வாழ்க்கையில் அனுவித்தது இல்லை....


சரியாக 45 நிமிடம்.. ?!!!! ஹய்யோ..45 நிமிடம்.?????. நல்ல நினைவோடு, ஒரே இடத்தில் , கட்டிப்போடப்பட்டு, ஏதும் செய்ய முடியாமல் , அசையாமல் என் வாழ்க்கையில் நான் அமைதியாக இருந்த முதல் மறக்க முடியாத திகில் அனுபவம் !!

எவண்டாது இந்த MRI SCAN ஐ கண்டுப்பிடிச்சது...?!! அவன் மட்டும் என் கையில் கிடைச்சான்.. .....

*******

படுக்கை வெளியில் வந்தது.... கட்டுகள் அவிழ்த்து, தலை கவசம் கழட்டப்பட்டது.  எழ சொன்னார்கள்... நானும் அவர்கள் சொல்லும் முன் முயற்சி செய்தேன்..."ஹைய்யா.... முடியலையே.. ?!!" அப்படியும் இப்படியுமாக.. இருவர் அலேக்காக என்னைத்தூக்கி உட்கார வைத்தனர்.

இளைஞர் ஹிந்தியில் ஆரம்பித்தார்..."ஆப்கா நாம் க்யாஹே...?" .....
"ஏ கித்தனா? ."

"அடேய்......உடம்பு சரியில்லாத மனுசங்கள, இவ்ளாம் பெரிய மெஷின்குள்ள, இவ்ளோ சவுண்டுல, உசுரோட உள்ள விட்டு எடுத்துட்டு.. .மூள  கலங்கி லூசாகி இருப்போம்னு தானே டெஸ்ட் பண்றீங்க..?!"

"டேய் டேய்...நாங்கெல்லாம் மெஷினியே லூசாக்கறவங்க டா....எங்கக்கிட்டவேவா?".. 

*********
பீட்டர் தாத்ஸ் : You can create a music in any circumstances,  depends on your interest.

ஆத்மலயா'வின் வண்ணமிகு நடன நிகழ்ச்சி

நவீன் வெளிநாடு சென்றதும், தனிமையில், வெறுமையில் மனம் சோர்ந்த நிலையில் இருந்த போது ஆத்மலயாவின் விளம்பரத்தை பார்த்தேன்.  கடந்த 1 1/2 வருடமாக ஆத்மலயாவில் நடனம் கற்று வருகிறேன்.  மனதிற்கும், உடலுக்கும் நல்லதொரு பயிற்சி,  மனசோர்விலிருந்து முழுமையாக என்னால் வர முடிந்ததற்கு இந்த நடன வகுப்புகள், அதில் கிடைத்த நட்பு என இவையும் பெரும் பங்கு வகிக்கிறது.

சென்ற நவராத்திரியில்,  தேனாம்பேட்டை ரயில்வே சங்கத்தினர் நடத்திய நவராத்திரி விழாவில் அவசர அவசரமாக ஒரு மேடை நிகழ்ச்சி செய்தோம். நன்றாக ஆடியிருந்தாலும் இப்போது பார்க்கையில் அது சுமாராக தெரிகிறது.. :)

இந்த வருடம்  ஆத்மலயா'வின்   ஆண்டுவிழா 27.04.2014 அன்று வெகு விமர்சையாக சென்னை செட்டிநாடு வித்யாசரமம் பள்ளி ஆடிட்டோரியத்தில் கொண்டாடப்பட்டது. 25 வயது முதல் 75 வயது வரையிலான பெண்கள் ஆத்மலயாவில் நடனம் கற்றுக்கொள்கின்றனர், இரண்டு மாதம் முழுமையாக அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.


அத்தனைப்பேரும் அதாவது 77 பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நடனம் ஆடினோம். ஜெயா டிவி, நிகழ்ச்சியை படம் பிடித்து செய்திகளில் காண்பித்தனர்.  முன்னாள் நீதிபதி. பிரபா ஸ்ரீதேவன்  தலைமை வகித்து, அனைவரையும் கவரும் வகையில் உரையாற்றினார்.

அம்மா'க்கள் நடனம் புரிய குழந்தைகள், கணவர் உட்பட மாமியார், மாமனார், அம்மா அப்பாவென அவர்களின் குடும்பங்கள் கண்டுக்களித்த முதல் விழா இதுவாகவே இருக்கும். 2 மணி நேரம் நகர்ந்ததே தெரியாமல் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.  வேளச்சேரி குழுவினர் இரண்டு பாடல்களுக்கு நடனம் ஆடினோம்.

இந்த வயதில் " நீ டான்ஸ் கத்துக்கிட்டு என்னத்த செய்யப்போற" ன்னு என்னை, எனக்கு நடனத்தின் மேலிருந்த ஆர்வத்தை முடக்கிவிடாமல், நடன வகுப்புகளுக்கு முழு மனதோடு செல்ல அனுமதித்த என் கணவருக்கு இந்நேரத்தில் என் நன்றியை சொல்லனும். குறிப்பாக இந்நிகச்சியின் பயிற்சிக்காக அங்கே இங்கே என நான் செல்லும் போது தடை சொல்லாமல், முகம் சுளிக்காமல் என்னை ஊக்கிவித்தும், ரிகர்சலின் போது உடல் நலமில்லாமல் இருந்தபோது, எனக்கு களைப்பு வராமல் இருக்க பழச்சாறுகள், பிஸ்கெட்கள் வாங்கிக்கொடுத்து, நடனம் ஆடும் இடத்திற்கு கொண்டுவந்து விட்டுச்சென்றது, மேடையில் நடனம் ஆடும் அன்று எனக்கிருந்த டென்ஷனை குறைக்க அவர் கொடுத்த அறிவுரைகளும், ஊக்குவிப்பும், எளிமையான சில மனப்பயிற்சிகளும் மிகவும் முக்கியமானவை.   #ஒய் ஹஸ்பண்ட் ஈஸ் தெய்வம்' மொமன்ட்: :)

நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை அவளின் அம்மா ஆடும் போது எடுத்த விடியோ ஒன்று பொதுவில் பகிரப்பட்டுள்ளது... கண்டு மகிழுங்கள்... 
எனக்கு மிக மிக பிடித்தப்பாடலும் நடனமும்...




அணில்குட்டி :  ஃபோட்டோ எடுக்கும் போதே இவங்களப்பாத்து ஃபோட்டோகிராஃபர் ஜர்க் ஆகி  2 அடி பின்னாடிப்போனாரு... பாவம் யார்
பெத்தப்புள்ளையோ... எப்படி இருக்காரோ என்னவோ ??!  இன்னும் அம்மணி ஆடின டான்ஸ் வீடியோ வரல.. அது வந்தாத்தெரியும்...சேதி..  கடவுளே அதைப் பாக்கப்போற எல்லாரையும் தயவுசெய்து காப்பாத்து...



பீட்டர் தாத்ஸ் :  Passion is energy. Feel the power that comes from focusing on what exist in you and  excites you

Dance Photos & Video courtesy : Thanks Ms. Pavithra Suresh, Athmalaya-Annanagar
& Ms. Malabharath, Founder - Athmalaya.