"அம்மாக்கள் தினம்" கொண்டாட்டம் !! முல்ஸ் அம்மாக்கள் வலைப்பூக்களில் அம்மாக்கள் தினம் சிறப்பாக அம்மாக்களை பற்றி எழுத ச்சொல்லி இருந்தார். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு எழுதி தள்ளுகிறார்கள். ஆனால்

கவிதா
ஒரு
அம்மாவாக
ஆயிரமாயிரம்
பக்கங்கள் எழுதமுடியும் !

குழந்தையாக
எதுவுமே
எழுத தோன்றவில்லை
எழுதுபவர்களை
பார்த்தால்
பொறாமை
ஏக்கம்..

'கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் கதாபாத்திரமான அமுதா என்ற குழந்தையை போன்று இன்னமும் அம்மாவை தேடும் ஒரு குழந்தையாகவே இருக்கிறேன். இந்த பதிவில் என்னுடைய ஏக்கத்தையும், அம்மா இருப்பவர்களையும் அவர்களுக்கு அம்மாவிடம் கிடைக்கும் பாசத்தையும் பார்க்க பொறுக்காத பொறாமையிலும் எழுதுகிறேன். பொறாமை என்பது கூடாது தெரியும்..ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு வந்துவிடும்.. கொஞ்சமாக எல்லாம் இல்லை ஏகத்துக்கு பொறாமை உண்டு. :)

கண்டிப்பாக சோகம், துக்கும், துயரம், அழுவாச்சி எதுவும் இல்லை. :)

எனக்கு அம்மாவாக இருந்து தோற்றுப்போனவர்கள்-

ஆயா
அப்பா
சின்ன அண்ணன்
என் கணவர்
என் மகன்
என் நண்பர்கள்
நண்பர்களின் அம்மாக்கள்
நண்பர்களின் குழந்தைகள்

இவர்கள் எல்லோருமே என் மேல் அதிகமாக அன்பு செலுத்தக்கூடியவர்கள். செலுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நான் எதிர்ப்பார்க்கும் அன்பை என் அம்மாவாக அவர்களால் கொடுக்க முடியவில்லை. கொடுப்பது எனக்கு என் அம்மாவின் இடத்தை மனதளவில் இன்னமும் நிறைவு செய்யவில்லை எனலாம்.

சொல்ல விரும்புவது, ஒரு குழந்தைக்கு அம்மா' வாக அந்த குழந்தையை பெற்ற தாயை தவிர்த்து யாராலும் முழுமையான அந்த குழந்தையின் மனதை நிறைவு செய்யும் அளவிற்கு அம்மா'வாக இருக்கவே முடியாது என்பது என் அனுபவத்தில் நான் கற்றது, பெற்றது. என்னுடைய ஆயாவை போன்று என்னை கவனித்தவர் இல்லை, என்னை வளர்த்தவர் இருக்குமுடியாது என்றாலுமே அவர் கூட என் அம்மா வாக முடியாது என்பது பல நேரங்களில் நான் உணர்ந்தது. என் அண்ணன் மகனிற்கு நான் அம்மாவாக இருக்கும் வாய்ப்பை பெற்றபோதுக்கூட அவனுக்கும் என்னால் அவனின் அம்மாவை போன்று இருக்கமுடியவில்லை என்பது உண்மை. அத்தையாக இருப்பது எளிது, அம்மாவாக.... :(


அம்மா - ?????? அன்பை பெற்றதில்லை அதனால் எனக்கு தெரியவில்லை.. அறிந்தவரை- குழந்தைகள் அம்மாவின் மடியில் உட்காரும், தலைவாரிக் கொள்ளும், சாப்பாடு ஊட்டிக்கொள்ளும், பள்ளியில், கல்லூரியில், சினிமா தியேட்டர்களில், கடைகளில் பார்க்கும் இடமெல்லாம் குழந்தைகள் அம்மாவோடு வரும், இறுக்கமாக அம்மாவை கட்டிக்கொண்டும் வரும். பள்ளியில் பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் வரும் போது எல்லாம் என் தோழிகளின் அம்மாக்கள் வருவார்கள், அம்மாக்கள் எல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் டீச்சரிடம் சிரித்து சிரித்து பேசுவார்கள். :( எனக்கு பிடிக்காது. ஓரமாக நின்று கவனிப்பேன். பொறாமை வரும் இடங்களில் முக்கியமானது பள்ளி. பிரச்சனை என்று வந்தால் உடனே குழந்தைக்கு சப்போர்ட் செய்துக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். எனக்கு எப்பவுமே நானே துணை. (அதனாலே வாதிட பழகிக்கொண்டேனோ என்று நினைப்பேன்.) ஆயாவின் வயதிற்கு அவர்களால் அழைத்ததற்கு எல்லாம் வர முடியாது. அதனால் அவரை தொந்தரவு செய்தது இல்லை.

அடுத்து திருமணத்திற்கு பிறகு என் குழந்தை பேறு..!! என் வாழ்நாளில் மறக்கமுடியாத அம்மா இல்லாத வலியை ஏற்படுத்தியது. யாரிடமும் சொன்னது இல்லை. விடுமுறைக்கு என் அக்கம் பக்கம் இருப்பவர்கள் குழந்தைகளுடன் அம்மா வீடு என்று சென்று விடுவார்கள். அல்லது குழந்தைகளையாவது அனுப்பிவிடுவார்கள். அப்படி ஒரு நாள் கூட என் வாழ்நாளில் எங்கும் சென்றது இல்லை. செல்ல இடமில்லை என்பது யதார்த்தம். சில சமயம் இது தான் வாழ்க்கை என்று தெரிந்தாலும் வருத்தப்படாமல் இருக்க முடிவதில்லை. . செல்ஃப் கவுன்சிலிங் கொடுக்கும் போது இதை எல்லாமும் யோசித்து என்னை நானே தேற்றிக்கொள்வேன். ஏக்கம் என்பது இப்பவும் இருக்கத்தான் செய்கிறது. இருந்துவிட்டு போகட்டும் என்று ரொம்பவும் கவுன்சிலிங் கொடுத்து என்னை தேற்றிக்கொள்ளவும் நினைப்பது இல்லை. அழவேண்டுமா அழுதுவிடு, சிரிக்கவேண்டுமா சிரித்துவிடு, யார் உயிரையாவது வாங்க வேண்டுமா வாங்கிவிடு என்பதை நடைமுறை படுத்திவிடுவதுண்டு :)

உலகத்தில் அம்மா இல்லாமல் நான் மட்டுமா இருக்கிறேன்.? இருப்பவர்களை பார்த்து பொறாமைப்படாமல், இல்லாதவர்களை பார்த்து சந்தோஷப்பட்டு க்கொள்ளலாமா? அது் தவறில்லையா? தவறாகத்தான் தோன்றி இருக்கிறது, அம்மா இல்லாத யாரைப்பார்த்தாலும் நான் படும் கஷ்டங்கள் கண் முன்னே வந்து என்னை போல் இவர்களும் கஷ்டப்படுகிறார்களே என்று தோன்றுமே தவிர்த்து, அவரை விடவும் நான் மேல் என்று என்றுமே நினைத்தது இல்லை. அம்மா இல்லாமல் யாரையும் இந்த உலகத்தில் படைக்காதே என்று வேண்டிக்கொள்வேன், வேண்டிக்கொள்கிறேன்....

குழந்தைகள் பெற்றுவிட்டால் மட்டுமே ஒரு பெண் அம்மா'வாகிவிட முடியாது.! * பதிவை அம்மாக்களில் வலைப்பூக்களுக்கும் அனுப்புகிறேன்.

அணில் குட்டி அனிதா : இதோடா ! அம்மணி அட்டண்டண்ஸ் கொடுத்துட்டாங்க..!! ஏழு கழுத வயாசாச்சு... பெத்தப்புள்ளைக்கு நாலு கழுத வயசாச்சி.. இன்னமும் ம்ம்மா...!! யம்மா.. ! ஆத்தா... ன்னு பதிவு போட்டுக்கிட்டு.. தாங்கலடா இந்த கொசு த்தொல்லை. .யாராச்சும் ச்சப்புன்னு அடிச்சி கொசுவ கொல்லுங்க முதல்ல...!!

பீட்டர் தாத்ஸ் :- When you are a mother, you are never really alone in your thoughts. A mother always has to think twice, once for herself and once for her child.