ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமா? அதுவும் நம் குழந்தை ஒன்று இருக்கும் போது? ஆகாயநதி அம்மாக்கள் பதிவில் என்னுடைய கன்னத்தில் முத்தமிட்டால் என்ற பதிவை படித்தபின் குழம்பி போய் கேட்டு இருக்கிறார்.
என்ன சொல்லுவது? சரி அவருக்கு அங்கு பதில் சொல்லுவதை விடவும், தனியாக பதிவு போடுவது சரியென்று பட்டது. பொதுவாக குழந்தை இல்லாதவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் போது எந்த பிரச்சனைகளும் வருவதற்கு வாய்பில்லை என்றே நினைக்கிறேன். ஒரே குழந்தையாக இருக்கும், அந்த குழந்தையின் மேல் தனி கவனம் செலுத்தி வளர்ப்பார்கள்.
நம்மில் பலருக்கு உடனே தோன்றக்கூடிய சந்தேகம், இப்படி எடுத்து வளர்க்கும் போது சொந்தங்கள் ஏதும் சொல்வார்களா? அந்த குழந்தையை தனியாக பிரித்து பார்ப்பார்களோ, அதனால் அந்த குழந்தை மனதளவில் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் வரும். உண்மையாக இருந்தாலும், குழந்தைகள் இல்லாதவர்கள், அப்படி ஒரு குழந்தையை தத்து எடுக்கும் வளர்க்கும் போது முதுகுக்கு பின்னால் என்ன வேண்டுமானாலும் பேசினாலும் நேரில் கண்டிப்பாக அப்படி எதுவும் யாரும் சட்டென்று சொல்லிவிடவும், நடந்து க்கொள்ளவும் மாட்டார்கள். ஒன்று குழந்தைகள் இல்லாதவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதும், இரண்டாவது, அந்த குழந்தையால் அவர்களுக்கு கிடைத்திருக்கும் சந்தோஷமும் காரணங்களாக இருக்கும்.
அடுத்து சொந்த பிரச்சனைக்கு வரலாம், நமக்கு முன்னமே ஒரு குழந்தை இருந்து, இரண்டாவதாக ஆதரவற்ற குழந்தையை எடுத்து வளர்க்க முற்படும்போது நாம் யோசிக்க வேண்டியவை
1. சரி சமமாக அந்த குழந்தையை நடத்தும் அளவிற்கு நமக்கும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்ல எண்ணங்களும், முதிர்ச்சியும் இருக்க வேண்டும். குறிப்பாக நம் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.
நான் எந்த வீட்டிற்கும் தத்து குழந்தையாக சென்றது இல்லை, ஆனால் அப்பாவும் தாத்தாவும் இறந்த பிறகு என்னை சொந்தங்கள் வீட்டிற்கு அனுப்பி தங்க வைத்தார்கள். அண்ணன் மகளாக, தங்கை மகளாக சென்று தங்கியிருக்கிறேன். குழந்தையாக அங்கே நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பது இன்னும் பசுமரத்து ஆணி போல் என் நெஞ்சில் இருக்கிறது. அவர்களின் சொந்த குழந்தைகளை போன்று என்னை அவர்கள் நடத்தியது இல்லை.
சில உதாரணங்கள். சாப்பிட ஏதாவது பலகாரம் வாங்கி வந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு போக த்தான் எனக்கு கொடுப்பார்கள். சில நேரங்களில் அவற்றை மறைத்து வைத்து கொடுப்பதை கூட பார்த்து இருக்கிறேன். சாப்பாடும் அப்படித்தான், தன் குழந்தைகள் விருப்பத்திற்கு செய்வார்கள், என்னை அப்படி கேட்டு செய்ததும் இல்லை, சமமான உணவை கொடுத்ததும் இல்லை. அதை பார்த்து பார்த்து நான் என் எதிர்பார்ப்புகளை அந்த வயதிலேயே குறைத்துக்கொண்டேன். அடுத்து உடைகள், அதுவும் எனக்கென்று ஒரு பட்ஜெட் வைத்து இருப்பார்கள். :) அவர்கள் குழந்தைகளுக்கு அப்படி எதுவும் பட்ஜெட் இருக்காது. என்ன பணம் சொல்லுகிறார்களோ அந்த அளவில் உடைகளை செலக்ட் செய்ய பழக்கிக்கொண்டேன். சில சமயம் உனக்கு இப்போது செய்ய முடியவில்லை என்றும் சொல்லுவார்கள், நானும் சரி பரவாயில்லை என்று சொல்லுவேன். வீட்டு வேலைகளும் எனக்கென்று கொடுத்துவிடுவார்கள். அவர்கள் குழந்தைகளை குழந்தையாக பார்ப்பார்கள், ஆனால் என்னை அப்படி பார்க்க மறந்துவிடுவார்கள். எல்லாவற்றிக்கும் மேல் என்னை ஒரு பாரமாக நினைத்தார்கள், அதற்கு காரணமாக நான் நினைப்பது , அவர்களின் வருமானத்திற்கு நான் அவர்களுக்கு அதிகபடியாக ஒரு ஆள். ஒரு ஆள் வீட்டில் அதிகமானால், சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே பட்ஜெட் டில் அதிகமாகும், அதனால் ஏற்படும் கஷ்டம், கோபம் அப்படியே என் மேல் வெறுப்பாகவும், கோபமாகவும் திரும்பும். அதனால் என்னுடைய தேவைகள் என்று எதையுமே கேட்காமல் என்னை நானே கட்டுப்படுத்திக்கொள்ளவும், இருப்பதை வைத்தே என் தினப்படி வாழ்க்கையை ஓட்டவும் கற்றுக்கொண்டேன். என் ஆயாவிடம் கூட அப்படித்தான் இருப்பேன்,. நமக்கு அவர்கள் செய்வது பெரிய விஷயம், இதில் என்னுடைய விருப்பம் என்று எதையும் கேட்கக்கூடாது என்று அவர்கள் செய்வதை சரி என்று சொல்ல பழக்கிக்கொண்டேன்.
இப்படி என் இயல்புக்கு அப்பால், மற்றவர்களை கவனித்து என்னை மாற்றிக்கொண்டதால், என்னுடைய விருப்பங்கள் எல்லாமே பின்னுக்கு தள்ளப்பட்டது, அதனால் கிடைக்கும் வெறுமையும், பாதிப்பும் இன்றும் எனக்கு இருக்கிறது என்பதற்கு யார் காரணம் என்று நீங்களே முடிவு செய்து க்கொள்ளலாம்.
குழந்தைகள் எல்லாமே குழந்தைகள் தான், அவர்களை ஒரே மாதிரியாக நம்மால் நடத்தமுடியவில்லை என்றால், அது கண்டிப்பாக அந்த குழந்தையை மனதளவில் பாதிக்கும். அந்த பாதிப்பு பாஸிட்டிவாகவும் மாறலாம், நெகடிவ்வாகவும் மாறலாம்.
2. பெண் குழந்தை என்னும் போது அந்த குழந்தைக்கு படிப்பை தவிர, கல்யாணம், அதற்கு பின் அந்த குழந்தைக்கு செய்ய வேண்டிய எல்லாமே நாம் தான் செய்ய வேண்டும், அதனால், அதன் கணக்கு வழக்குகளை போட்டு பார்த்து , அந்த குழந்தையின் மனநிறைவுக்கு நம்மால் அவற்றை வாழ்நாள் முழுதும் செய்ய முடியுமா என்று யோசித்துக்கொள்ளவேண்டும்.
3. அடுத்து சொத்து, நாம் சேர்த்து வைக்கும் நம்முடைய சொத்தை நம் குழந்தைக்கும், வளர்ப்பு குழந்தைக்கும் சரி சமமாக கொடுக்க நம் மனம் இடம் கொடுக்குமா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.
4. நம் குழந்தைக்கு, இன்னொரு குழந்தை வளர்ப்பு குழந்தை என்று தெரிய வந்தால், வரும் விளைவுகளை சந்திக்க தயாராகவும், அதனால் வளர்ப்பு குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளை யோசித்து ப்பார்க்கவேண்டும்
5. சொந்த பந்தங்களை பற்றி இந்த விஷயத்தில் கவலைப்படவேண்டியது இல்லை. நாம் எல்லாவற்றிலும் சரியாக இருக்கும் பட்சத்தில், எப்படி அவர்கள் பிரச்சனை செய்தாலும், அவற்றை சரி செய்துவிட நம்மால் முடியும்.
6. நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏற்ற தாழ்வுகளை நாமும், நம் குழந்தையும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் மற்றொரு குழந்தையை அழைத்து வந்து அந்த குழந்தையை கஷ்டப்பட வைக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.
இது நேரில் நான் பார்த்த ஒரு விஷயம், நன்றாக போய் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் அந்த குடும்ப தலைவரின் தவறான சகவாசத்தினால், சொத்து சுகம் இழந்து நடுவீதியில் நிற்க நேரிட்டது, அப்போது அந்த குடும்பத்தலைவி எங்களிடம் சொன்னது, இந்த வளர்ப்பு குழந்தை மட்டும் இல்லை என்றால், எப்படியோ ஒரு வேலை சாப்பிட்டு நான் பிழைத்துக்கொள்வேன். இப்போது இந்த குழந்தை எனக்கு பாரமாக உள்ளது என்றார்கள். இது அவர்கள் சொந்த குழந்தையாக இருந்தால் சொல்லி இருப்பார்களா என்றால் நிச்சயமாக இருக்காது.
ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகள் அவர்களை போலவே சக குழந்தைகளுடன் வளரும் போது அவர்களுக்கு எந்த காம்ளக்ஸும் இருக்காது. ஆனால் இப்படி வெளியில் வரும் போது தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து கஷ்டப்பட்டு கொள்வார்கள், எனக்கு தெரிந்து வெளியிலும் சொல்லமாட்டார்கள். நான் ஒரு முறை தாம்பரத்தில் உள்ள ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு சென்றிருந்தேன். அங்கே வளரும் குழந்தைகள், நன்றாக படித்து மிக பெரிய அளவில், அதிகாரத்திலும், வேலையிலும் இருப்பதை பார்த்தேன். அதிலும் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் நல்ல இடமாக பார்த்து திருமணம் கூட செய்து வைக்கிறார்கள், எனக்கு அங்கு சென்று அவர்களுடன் நேரம் செலவிட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது, அவர்களுக்கு என்ற வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.
ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளை எடுத்து வந்து வளர்த்து, அவர்களும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு, ஒரு நாள் இல்லை ஒரு நாள், சே இந்த குழந்தையை ஏன் தான் தத்து எடுத்தோமோ என்று நாமும், ஏன் தான் இங்கு வந்தோமோ என்று அந்த குழந்தையும் நினைக்கும் படி இல்லாமல் இருந்தால் நலம். எடுத்து வளர்ப்பதை விடவும், தனியாக ஒன்று என்ன நிறைய குழந்தைகளுக்கு பணம் கொடுத்து அவர்களுக்கு உதவலாம், பிறந்தநாள், பண்டிகை நாட்களில் அவர்களுடன் சென்று நேரத்தை செலவிடலாம், செலவிட்டு பாருங்கள் எத்தனை சந்தோஷப்படுகிறார்கள் என்று உங்கள் மனதளவில் உணர்வீர்கள்.
அணில் குட்டி அனிதா : ம்ம்.. என்ன சொல்றீங்க.... வேண்டாம் னு சொல்றீங்களா.. ஏன் கவி.. ஏதோ ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சா ..உங்களுக்கு பொறுக்கலையா? ..
பீட்டர் தாத்ஸ் : “Poetry is an orphan of silence. The words never quite equal the experience behind them.”
ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமா?
Posted by : கவிதா | Kavitha
on 11:02
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
34 - பார்வையிட்டவர்கள்:
நல்ல பதிவு!
யதார்த்தங்களை சொல்லி இருக்கிறீர்கள்!
@ சிபி - நன்றி..
திருமணம் செய்யாத தனிநபர்கள் குழந்தையை தத்து எடுப்பதற்கு இந்திய(இலங்கை)சட்டத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.. குறிப்பாக ஆண்கள் தத்தெடுக்கவே முடியாது என்று படித்த நினைவு...
பெண்களுக்குமா என்று தெரியவில்லை..
யாராவது தெளிவுபடுத்தினால் நன்று..
@ விஷ்ணு - எனக்கு தெரியலைங்க.. விபரங்களை தேடி கண்டுபிடித்து பின்னூட்டம் இடுகிறேன்..
///நிறைய குழந்தைகளுக்கு பணம் கொடுத்து அவர்களுக்கு உதவலாம், பிறந்தநாள், பண்டிகை நாட்களில் அவர்களுடன் சென்று நேரத்தை செலவிடலாம், செலவிட்டு பாருங்கள் எத்தனை சந்தோஷப்படுகிறார்கள் என்று உங்கள் மனதளவில் உணர்வீர்கள்///
சென்னையில் இயங்கி வரும் சாரல் சமூக நல அமைப்பு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி வருகிறது...
தனி முயற்சியை விட குழு முயற்சியை முன்னிறுத்தி வருகிறோம்.
மேலும் விவரங்களுக்கு : wwww.saaral.co.in வசிக்கவும்.
சாரல் பற்றிய விகடன் கட்டுரைக்கு:
http://rammohan1985.wordpress.com/2008/11/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%af%e0%ae%be/
திருமணமாகாத பெண்கள் தத்து எடுக்கலாம். ஆனால் எளிதாக அல்ல.
சுஷ்மிதா சென் ஒரு உதாரணம்
பொதுவாக திருமணம் ஆகாத ஆண்கள் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. அப்படியே எடுத்தாலும் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க முடியும்.
தனி பதிவாக(பதிலாக) போட்டுவிட்டீர்கள்... மிக்க நன்றி...
முதலில் நான் எங்கள் விருப்பத்தைத் தெளிவாகக் கூறுகிறேன்...
//
நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்ல எண்ணங்களும், முதிர்ச்சியும் இருக்க வேண்டும். குறிப்பாக நம் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.
//
இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய மேட்டர்...
//
பெண் குழந்தை என்னும் போது அந்த குழந்தைக்கு படிப்பை தவிர, கல்யாணம், அதற்கு பின் அந்த குழந்தைக்கு செய்ய வேண்டிய எல்லாமே நாம் தான் செய்ய வேண்டும், அதனால், அதன் கணக்கு வழக்குகளை போட்டு பார்த்து , அந்த குழந்தையின் மனநிறைவுக்கு
//
நான் பெற்ற பிள்ளையானால் எப்படி செய்வேனோ அப்படிதான், எங்களால் இயன்ற அளவு எந்தக் குறையும் இன்றியே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்...
//
4. நம் குழந்தைக்கு, இன்னொரு குழந்தை வளர்ப்பு குழந்தை என்று தெரிய வந்தால், வரும் விளைவுகளை சந்திக்க தயாராகவும், அதனால் வளர்ப்பு குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளை யோசித்து ப்பார்க்கவேண்டும்
//
பொழிலன் சம்மதித்தால் தான் இறுதி முடிவு... நீங்கள் கூறிய பல விஷயங்களையும், பெற்றோர் மன நிலையையும் அலசி ஆராய்ந்து பின் பொழிலனிடம் பேச வேண்டும்.
//
3. அடுத்து சொத்து, நாம் சேர்த்து வைக்கும் நம்முடைய சொத்தை நம் குழந்தைக்கும், வளர்ப்பு குழந்தைக்கும் சரி சமமாக கொடுக்க நம் மனம் இடம் கொடுக்குமா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.
//
இது பொழிலன் கையில் தான் உள்ளது... ஏனெனில் அவன் விருப்பத்துடன் தான் குழந்தையே தத்தெடுப்போம்.. (இன்னும் முடிவிற்கு வரவில்லை இப்படியாக யோசனை தொடர்கிறது)
//
6. நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏற்ற தாழ்வுகளை நாமும், நம் குழந்தையும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் மற்றொரு குழந்தையை அழைத்து வந்து அந்த குழந்தையை கஷ்டப்பட வைக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.
//
நியாயமான விஷயம்...
//
ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளை எடுத்து வந்து வளர்த்து, அவர்களும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு, ஒரு நாள் இல்லை ஒரு நாள், சே இந்த குழந்தையை ஏன் தான் தத்து எடுத்தோமோ என்று நாமும், ஏன் தான் இங்கு வந்தோமோ என்று அந்த குழந்தையும் நினைக்கும் படி இல்லாமல் இருந்தால் நலம்.
//
உண்மைதான்...இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டால்???
//
பிறந்தநாள், பண்டிகை நாட்களில் அவர்களுடன் சென்று நேரத்தை செலவிடலாம், செலவிட்டு பாருங்கள் எத்தனை சந்தோஷப்படுகிறார்கள் என்று உங்கள் மனதளவில் உணர்வீர்கள்.
//
பொழிலனின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எங்கள் கொண்டாட்டம் இப்படிதான் இருக்க வேண்டுமென முடிவெடுத்தாயிற்று... பொழிலனின் பல உடைகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்... நல்ல உடைகள் அளவில் சிறிது பொழிலனுக்கு அதை அவர்களாவது பயன்படுத்தட்டுமே என்று! :)
இந்த தத்துக் குழந்தை விஷயம் தான் இப்போது யோசிக்க வைக்கிறது...
அதுவும் இன்றி எதோ ஒரு குடும்பவிழாவில் பொழிலனை ஒரு மாதிரியாகவும் அக்குழந்தையை ஒரு மாதிரியாகவும் நடத்தினால் எங்களுக்கும் மன உளைச்சல், குழந்தையும் ஒன்றும் புரியாமல் தவிக்கும்...
நான் இப்படி கூட யோசித்தது உண்டு... என்னிடம் தாய்ப்பால் இருக்கும் போதே இன்னொரு குழந்தையைத் தத்தெடுத்தால் அவளுக்கும் நானே பாலூட்டி தாய்க்கான கடமையை ஆற்றிவிடுவேனே என்று...
ஏனென்றால் அப்படி தத்தெடுக்கும் முடிவு உறுதியானால்
ஒரு பச்சிளம் குழந்தையைத் தான் தத்தெடுக்க வேண்டும்...
@ ஆகாய நதி :)) - உங்களின் பதில்களை பார்த்து எனக்கு என்ன சொல்வெதென்று தெரியவில்லை.
முதலில் பொழிலன் முடிவு என்பது சரியா என்று தெரியவில்லை.. :) அவன் குழந்தை அல்லவா? பெரியவர்களே சரியான முடிவை எடுக்க முடியாத போது குழந்தை எப்படி எடுப்பான். எனக்கு இதற்கு மேல் சொல்ல தெரியவில்லை... உங்கள் மற்றும் உங்கள் கணவரின் முடிவு இறுதியானது.
அதாவது பொழிலனின் 5வயதிற்கு மேல் ஒரு வருடமாவது அவனிடம் இது பற்றி பேசி அவனுடைய எண்ண ஓட்டங்களைப் புரிந்து பின்பே செய்ய வேண்டும்...
அதனால் அக்குழந்தைக்கும் நானே பாலூட்ட வேண்டும் என்பது பேச்சோடு போனது...
நீங்கள் கூறிய பல விஷயங்களையும் ஆழ்ந்து யோசிக்க வேண்டும் கவிதா... அத்தனையும் நியாயமானதே...
நல்ல பதிவு கவிதா! மிக பிராக்டிக்கலாக அணுகியிருக்கிறீர்கள்!
மிகுந்த மனப்பக்குவத்தோடு எடுக்கப் பட்ட முடிவாக இருந்தால் நலம்!!
@ ராம் மோகன் - நல்ல விஷயம் கண்டிப்பாக என் பதிவுகளை படிக்கும் அனைத்து நண்பர்களும் இதை கவனித்து தேவையை செய்வார்கள் என்று நம்புகிறேன்..
@ கபீஷ் - நன்றி.. விஷ்ணு விற்கு தேவையான பதில் கிடைத்துவிட்டது என நினைக்கிறேன்.. ராஜாவும் சொல்லி இருக்கிறார்.
@ ராஜ் - நன்றி
@ முல்ஸ் - நன்றிடா..
//அதாவது பொழிலனின் 5வயதிற்கு மேல் ஒரு வருடமாவது அவனிடம் இது பற்றி பேசி அவனுடைய எண்ண ஓட்டங்களைப் புரிந்து பின்பே செய்ய வேண்டும்...
//
ஆகாயநதி.. திரும்பவுமா? என்னங்க இது.. 5 வயதுக்கு மேல் என்றால் 6 வயது.. எப்படிங்க குழந்தையிடம் இத்தனை பெரிய விஷயத்தை பேசுவீர்கள்..?? ம்ம்... இந்த வயதில் என்னையே என் கணவரும், நண்பர்களும் குழந்தையாக இருக்கிறேன்.. முதிர்ச்சி இல்லை என்கிறார்கள்.. எப்படிங்க அத்தூண்டு குழந்தையிடம் முடிவை எதிர்பார்க்கிறீர்கள்.
ஆகாயநதி.. என்னுடைய எந்த பாயிண்டிலும் நம் குழந்தையின் முடிவை பற்றி சொல்லவே இல்லை. அதாவது நம் குழந்தை இருக்கும் போது மற்றொரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் போது, நாம் எப்படி நம் குழந்தையை நல்ல எண்ணங்களோடும், நல்ல பண்புகளோடும், நல்ல புரிதலோடும் வளர்க்கிறோம் என்பது இங்கு முக்கியம்.
ஒரு வேளை நம் குழந்தைக்கு அந்த குழந்தை நம் உடன் பிறந்தவர் என்று தெரியும் பட்சத்தில் அதை பாஸிட்டிவாகவும், அந்த வளர்ப்பு குழந்தையின் மேல் முன்பை விடவும் அதிக பாசம் காட்டும் படியாகவும் இருக்குமாறு நாம் வளர்க்க வேண்டும். அடிப்படை குணம் அப்படி இருக்கும் பட்சத்தில் மட்டுமே பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்பது என் கருத்து.
ஒரு வேளை நம் குழந்தைக்கு அந்த குழந்தை நம் உடன் பிறந்தவர் இல்லை என்று தெரியும் பட்சத்தில் அதை பாஸிட்டிவாகவும், அந்த வளர்ப்பு குழந்தையின் மேல் முன்பை விடவும் அதிக பாசம் காட்டும் படியாகவும் இருக்குமாறு நாம் வளர்க்க வேண்டும். அடிப்படை குணம் அப்படி இருக்கும் பட்சத்தில் மட்டுமே பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்பது என் கருத்து.
நீங்கள் கூறுவதும் சரிதான்... எனக்கு இது விஷயத்தில் குழப்பமாகவே உள்ளது :( ஏனெனில் நீங்கள் முன் வைக்கும் அத்துணை பிரச்சனைகளும் உண்மை... அதை பற்றியும் சிந்தித்து செயல் பட வேண்டி உள்ளது
அதே சமயம் என்னுடைய பல வருட ஆசையையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை...
நீங்கள் கூறுவது ஏதாவது ஒரு குழந்தைக்கோ அல்லது சில குழந்தைகளுக்கோ ஸ்பான்ஸராக இருக்கலாம்
இந்தப் பதிவு போட வேண்டிய ஆளே போட்ட மாதிரி இருக்கு. நன்றி!
இப்போ குழந்தை தத்தெடுப்பு எது போன்ற சூழலில், யார் போன்ற மக்கள் எடுக்கலாங்கிறதிலிருந்து அதனையொட்டிய முன்னாய்வு எப்படியெல்லாம் சிந்திக்கணும் முன்னவே குழந்தை தத்தெடுப்பவர்கள்ங்கிற வரைக்கும் ஒகே, ங்க.
உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டு இந்தக் கட்டுரையை தைச்ச நேர்த்தியும் அவசியமான ஒன்று, தத்ததெடுக்கப் போற பெற்றோர்களுக்கு அது மாதிரியான குணாதிசியங்களை தவிர்க்கவும், அது போன்ற மக்களின் பார்வையிலிருந்து குழந்தைகளை பாதுக்காத்து கரையேற்ற தேவைங்கிறதெல்லாம் மிகச் சரி.
இருந்தாலும், நேர்ந்த அனுபவங்களைக் கொண்டு குழந்தைகளை தத்தெடுக்காமல் அதன் காப்பகங்களிலேயே வைச்சு வளர்ப்பதுதான் சரிங்கிற மாதிரி இருக்கிற முடிவு, சரியில்லைங்க.
முன்னயோ, பின்னயோ குழந்தைகள் எல்லாவிதமான வாழ்க்கை போரட்டாங்களையும் வளர்ந்தவர்களின் துணை கொண்டு சந்திப்பது ஒரு முழுமையை அக் குழந்தைகளுக்கு கொடுக்குமிங்க, அதுவும் கஷ்டங்களோ, மகிழ்ச்சிகளோ சரிசமமா எந்த பாகுபாடுமில்லாம பகிர்ந்துக்கும் பொழுது, கிடைக்குதில்லியா?
அதுனாலே குழந்தைகள் காப்பகங்களிலிருந்து தத்தெடுக்கப்பட்டு முறையான சூழலில் வளர்ந்து வருவது ரொம்ப அவசியமின்னு நான் நினைக்கிறேன்.
மற்றபடி பின்னூட்டங்களில் "ஆகாய நதிக்கு" கொடுத்த விசயங்களும் ரொம்ப அருமை. பின்பற்றக் கூடியதே!
பி.கு: வேறு கோணத்தில் குழந்தை தத்தெடுப்பதின் அவசியம் குறித்து என்னுடைய இந்தப் பதிவினுள் வைச்சிருக்கேன், முடிஞ்சா ஒரு விசிட் அடிங்க விடமாட்டான்யான்னு நினைக்காம ;-): புலம்பெயரவைக்கும் குழந்தை தத்தெடுப்பு முறை-1
நல்லதொரு விடயத்தை பற்றி எழுதியுள்ளீர்கள்.
//சரி சமமாக அந்த குழந்தையை நடத்தும் அளவிற்கு நமக்கும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்ல எண்ணங்களும், முதிர்ச்சியும் இருக்க வேண்டும். குறிப்பாக நம் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.//
இது மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஒரு நல்ல சூழலை அக்குழந்தைக்கு அமைத்து கொடுக்க முடியும் என்றால் மட்டுமே தத்தெடுக்க வேண்டும்.பல விடயங்களை எல்லா விதத்திலும் யோசித்து நியாயமாக நடந்து கொள்ள முடியும் என்று தெரிந்தால் மட்டுமே தத்தெடுக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
110% உங்கள் கருத்துக்கு வழிமொழிக்கிறேன்.
எங்கள் உறவினர்களில் ஒரு குடும்பத்தில் நடந்ததை நினைத்து சொல்றேன். உதவி செய்றோம்னு நினைச்சி அந்த பிள்ளைக்கு நாமே கஷ்டத்தை கொடுத்துட கூடாது.
//இருந்தாலும், நேர்ந்த அனுபவங்களைக் கொண்டு குழந்தைகளை தத்தெடுக்காமல் அதன் காப்பகங்களிலேயே வைச்சு வளர்ப்பதுதான் சரிங்கிற மாதிரி இருக்கிற முடிவு, சரியில்லைங்க.//
தெகாஜி, ரொம்ப சிம்பிள், முடியும் என்றால் முடியும்... தேவையில்லாமல் ஒரு குழந்தையை (ஒரு மனிதனை) நமக்கு எந்த உரிமையையும் இல்லாத பட்சத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக கஷ்டப்படுத்துவது சரியில்லை என்பதால் அப்படி சொல்லி இருக்கிறேன்.
அதை எல்லாம் தாண்டி எங்களால் நல்ல முறையில் , நல்ல விதமாக எந்த பிரச்சனை இல்லாமல், அபப்டியே வந்தாலும் அதை யாருக்கும் பாதிப்பில்லாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கும் போது செய்யலாம்.
@ மணிநரேன் - நன்றி
@ Choco, ஓ நீங்களும் பார்த்து இருக்கீங்களா..?
நன்றி
"""முடியுமென்றால் முடியும், மனமிருந்தால் எதுவும் செய்யலாம்""" அதான் மந்திரம் இங்கே.
அது சரி, நம்ம சமூகத்தில மட்டும் இப்படி கசமுசான்னு இவ்வளவு பிரச்சினைகள் எட்டிப்பார்க்குதே, ஏன் வெள்ளக்காரய்ங்க மட்டும் நினைச்சவுடன் பண்ணிடுறாய்ங்களே, அதெப்படி?
இத்தனைக்கும், நம்ம ஆன்மீகத்திலயும், குடும்ப கட்டமைப்பிலயும் ரொம்ப ஸ்ட்ராங்குன்னு சொல்லிக்கிறோமே...
நான் கொடுத்த பதிவுங்க, 2005ல எழுதுனங்க, அதாவது போன நூற்றாண்டுல :-). அதோட பாகம் இரண்டு, அதே பதிவில தொடுப்பு இருக்கும் பாருங்க... நீங்க பார்க்கலையா?
//அது சரி, நம்ம சமூகத்தில மட்டும் இப்படி கசமுசான்னு இவ்வளவு பிரச்சினைகள் எட்டிப்பார்க்குதே, ஏன் வெள்ளக்காரய்ங்க மட்டும் நினைச்சவுடன் பண்ணிடுறாய்ங்களே, அதெப்படி?//
தெகாஜி, வர வர நீங்க என்னைய ரொம்ப கேள்வி கேட்கறீங்க..
சரி.. அவங்க நம்மை மாதிரி சென்டிமென்டல் இடியட்ஸ் இல்ல...அவ்வளவு தான் ரீஸன்..
//இத்தனைக்கும், நம்ம ஆன்மீகத்திலயும், குடும்ப கட்டமைப்பிலயும் ரொம்ப ஸ்ட்ராங்குன்னு சொல்லிக்கிறோமே...//
ஆமா நாம் எல்லாத்திலியும் ரொம்பவே ஸ்ட்ராங்கு.....
//நான் கொடுத்த பதிவுங்க, 2005ல எழுதுனங்க, அதாவது போன நூற்றாண்டுல :-). அதோட பாகம் இரண்டு, அதே பதிவில தொடுப்பு இருக்கும் பாருங்க... நீங்க பார்க்கலையா?//
தொடுப்பு பார்க்கலை.... இன்னைக்கு பார்க்கிறேன்..சரியா.. :)
//அண்ணன் மகளாக, தங்கை மகளாக சென்று தங்கியிருக்கிறேன். குழந்தையாக அங்கே நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பது இன்னும் பசுமரத்து ஆணி போல் என் நெஞ்சில் இருக்கிறது. அவர்களின் சொந்த குழந்தைகளை போன்று என்னை அவர்கள் நடத்தியது இல்லை//
எனக்கு இதில் நிறைய அனுபவம். நீங்கள் எழுதிய அனைத்துடனும் சிறு துஷ்பிரயோகங்களுக்குக் கூட ஆளாகியிருக்கிறேன். அதனால் சமூகம், ஆண்கள் என்பதில் எல்லாம் பயமும் humiliation உம் என்னிடம் நிறைய இருந்திருக்கிறது; இப்போதும் இருக்கிறது.
@சதாநந்தன்.. - ம்ம்.. எனக்கு புரியுதுங்க.. ஆனா துஷ்பிரயோகம் னு சொல்லி இருக்கீங்க.. அப்படீன்னா? அடிப்பாங்களா?
ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் குழந்தைகளுக்குதான் மன பாதிப்பு அதிகம் வரும்.
அங்கு பணிபுரிந்தவன் என்ற முறைகள் புரிந்து கூறுகிறேன். தத்து எடுத்து வளர்க்கும்போது நடைமுறை பிரச்சனைகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அவர்களுக்கு உரிய அந்தஸ்தையும் கல்வியும் அளித்தால் எந்த பிரச்னையும் இல்லை.
ஆணித்தரமானப் பதிவு!
முழுக்க முழுக்க உண்மை!
பார்த்திபம்சீதா குடும்பம் இதற்கு ஒரு உதாரணம்!
எதையும் ஒரு உத்வேகத்தில் செய்துவிட்டு பின்பு விளைவுகளை எதிர்நோக்கும்போது சிந்தித்து பயன் இல்லை!
//
ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் குழந்தைகளுக்குதான் மன பாதிப்பு அதிகம் வரும்.
அங்கு பணிபுரிந்தவன் என்ற முறைகள் புரிந்து கூறுகிறேன்
//
உண்மைதான் என்ன தான் சகல் அவசதிகளும் இருந்தாலும் தனக்கென தனியே அன்பு செலுத்த ஒரு அப்பா அம்மா அண்ணா அக்கா தம்பி தங்கை போன்றோர் இல்லையே என்ற மன ஏக்கம் இறுதி வரை இருக்கும் :(
//ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் குழந்தைகளுக்குதான் மன பாதிப்பு அதிகம் வரும்.
அங்கு பணிபுரிந்தவன் என்ற முறைகள் புரிந்து கூறுகிறேன். தத்து எடுத்து வளர்க்கும்போது நடைமுறை பிரச்சனைகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அவர்களுக்கு உரிய அந்தஸ்தையும் கல்வியும் அளித்தால் எந்த பிரச்னையும் இல்லை.//
வாங்க..ராஜபார்வை !... நீங்கள் உள்ளிருந்து சொல்லுகிறீர்கள். .நான் வெளியிலிருந்து சொல்லுகிறேன்..
:) எல்லாவற்றையும் மீறி சில நல்ல விஷயங்கள் நடக்க வேண்டி இருந்தால் கண்டிப்பாக நடக்கும்... :))
//ஆணித்தரமானப் பதிவு!
முழுக்க முழுக்க உண்மை!
பார்த்திபம்சீதா குடும்பம் இதற்கு ஒரு உதாரணம்!
எதையும் ஒரு உத்வேகத்தில் செய்துவிட்டு பின்பு விளைவுகளை எதிர்நோக்கும்போது சிந்தித்து பயன் இல்லை!//
தமிழ்நாடான் நன்றி.. ம்ம்.. உதாரணம் நன்று... என்னவோ விளைவுகளை நினைக்காது நிறைய பேர் அப்படித்தான் முடிவு எடுத்து விடுகிறார்கள்...
மிகவும் அவசியமான பதிவு. முற்போக்கு என்றெல்லாம் சொல்லி உணர்ச்சிவயப்பட்டு செயல்படுபவர் பலர். முழுவதுமாக அலசிப் பார்க்க வேண்டும். எல்லா கோணத்திலும் விளக்கியிருக்கிறீர்கள். இதையெல்லாம் எண்ணிப் பார்த்து எனக்கு அந்த பக்குவமெல்லாம் இல்லை என்று தெளிவாகவே உணர்ந்திருக்கிறேன்...
நன்றி சாணக்கியன் !! :)
பயப்படாதீங்க ஒரு சிலர்தான் அப்படி
நன்றி
Post a Comment