Showing posts with label பயணம்/இடங்கள். Show all posts
Showing posts with label பயணம்/இடங்கள். Show all posts

லே-லடாக் பிரயாணமும் - பிராணவாயுவும்.....

இந்த லே பயணம் என் வாழ்க்கையில் இதுவரை சந்திக்காத மிகவும் கடினமான அனுபவத்தை எனக்குக் கொடுத்துள்ளது.

அந்த அனுபவத்தைப் பகிர்வதற்கு முன், என் உடல்நிலை குறித்து ஒரு சிறிய குறிப்பு. 2025 ஜூலை மாதம் முதல் சில உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறேன். அதனால்,  லே பயணம் இந்த ஜூலை மாதத்தித்தில் செல்லலாம் என முடிவானது.

விமானத்திலிருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே என் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. நான் விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டேன், ஆனால், என் உடம்பு எங்கேயோ சென்றது. மூளையை செயற்படுத்தி விமான நிலையத்தினுள் நுழைந்தேன். நிற்க முடியாத அளவுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதால் உடனே அமர ஒரு இடத்தைத் தேடினேன். என் கணவர் பெட்டிகளை எடுக்க சென்றார்.  அதைப் பற்றிய கவனமில்லாமல், ஒரு இருக்கை கண்டுபிடித்து அமர்ந்தேன். கண்களில் தன்னிச்சையாகக் கண்ணீர் வந்தது. தலை தொங்கிவிட்டது. இரண்டு கைகளும் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் கீழே விழந்தன. 

என் கணவர் விரைந்து வந்து முதலில் என் கண்ணீரைத் துடைத்தார். உயரமான இடத்தின் (High Altitude) தாக்கம் எனக்குத் தொடங்கியிருப்பதை அவர் புரிந்து கொண்டார். Diamox மாத்திரை கொடுத்து, மீண்டும் பெட்டிகளை எடுக்கச் சென்றார்.

தட்டு தடுமாறி வெளியே வந்த பிறகு, ஹோட்டல் வண்டிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் வெளியே அமர இடமே இல்லை. என்னால் நிற்க முடியாததால் தரையில் அமர்ந்தேன். மீண்டும் கண்களில் கண்ணீர். என் நிலையைப் பார்த்த டாக்ஸி ஓட்டுநர்கள் அனைவரும் என்னைச் சுற்றி வந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிக்கச் சொல்லி, ஆறுதல் படுத்த முயன்றனர்.ஆனால் தண்ணீர் குடித்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை. மாறாக உடல்நிலை இன்னும் மோசமானது.

ஹோட்டலுக்கு வந்ததும்  நவீனை அழைத்தேன். என்னால் அடக்க முடியாமல் கதறி அழுதேன். உடலில் இருந்த சக்தி முழுவதும் இழந்தது போல மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். நான் ஏன் அழுகிறேன் என்று அவனுக்குப் புரியவில்லை. என் கணவர் போனை வாங்கி என் நிலையை விளக்கினார். அவர் நவீனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே தூங்கிவிட்டேன்.

அவர்கள் ஏற்கனவே பேசியபடி, என் கணவர் 6 லி கொள்ளளவு கொண்ட போர்ட்டபிள் ஆக்ஸிஜன் கேனை வாங்கி வந்தார். நான் தூங்கிக்கொண்டிருந்ததால் என்னை எழுப்பாமல், ஆக்ஸிஜன் கேனை என் அருகில் வைத்து புகைப்படம் எடுத்து நவீனுக்கு அனுப்பினார். அதாவது, "அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள், தொந்தரவு செய்யவில்லை. ஆனால் ஆக்ஸிஜன் வாங்கிவிட்டேன்" என்பதை அவனுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். :)

மாலை எழுந்த பிறகு ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டேன். மிகவும் மெதுவாக உணவகத்திற்குச் சென்று தேநீர் குடித்தேன். பிறகு சிறிது தூரம் நடந்து என் உடல்நிலை சற்று சீராக இருக்கிறதா என்று பார்த்தேன். கொஞ்சம் பரவாயில்லை போலவும், இன்னும் சரியில்லை போலவும் இருந்தது.

இரவு உணவுக்குப் பிறகு அறைக்குத் திரும்பி சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். மெதுவாக தலைவலி ஆரம்பித்தது. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டேன். ஆனால் அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. தலைவலி அதிகரித்து, பத்து பேர் சுத்தியலால் தலையை அடிப்பது போல் தாங்க முடியாத வலியாக மாறியது.

என் கணவர் தூங்கிக் கொண்டிருந்தார், அவரை எழுப்ப விரும்பவில்லை. அதற்குள் காய்ச்சலும் ஆரம்பித்தது. காய்ச்சல் மெதுவாக அதிகரிக்க, வேறு வழியில்லாமல் அவரை எழுப்பினேன். அவர் பேராசிட்டமால் மாத்திரை கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கச் சென்றார். ஆனால் தலைவலி மட்டும் குறையவே இல்லை.

அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் அவரை எழுப்பி, "என்னை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்" என்றேன். அவர் எங்கள் சுற்றுலா வழிகாட்டியைத் தொடர்புகொண்டு மருத்துவர் குறித்து விசாரித்தார். லே'வில் ஒரே ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே இருப்பது தெரியவந்தது. புறப்படுவதற்கு முன் தலைவலிக்காக நீராவி பிடித்தேன். அதனால் சற்று நிவாரணம் கிடைத்தது போல உணர்ந்தேன்.

மருத்துவமனைக்குச் செல்ல டாக்ஸிக்கு ₹300 செலவானது. மருத்துவமனையில் நுழைவுக் கட்டணம் ₹10.

மருத்துவர் முதலில் என் ரத்த அழுத்தத்தையும் ஆக்ஸிஜன் அளவையும் பரிசோதித்தார். ரத்த அழுத்தம் 137/65. ஆக்ஸிஜன் அளவு வெறும் 72% மட்டுமே இருந்தது. நான் கடுமையான தலைவலி பற்றி சொல்லிக் கொண்டிருந்தாலும், அவர் என்னை திரும்பிக்கூட பார்க்காமல் நேரடியாக "admit" என்று எழுதிவிட்டார்.

பின்னர் ₹30 கட்டணம் செலுத்தினோம். எங்களுடன் வந்த டாக்ஸி ஓட்டுனரே என்னை வார்டுக்குள் அழைத்துச் சென்று, ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்.

வேகமாக ஒரு செவிலியர் வந்து ஆக்ஸிஜன் பொருத்தினார். இடது கை நரம்பில் ஒரு ஊசியும், இடுப்பில் மற்றொரு ஊசியும் போட்டார். ஆக்ஸிஜன் கொடுக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எனக்கு நன்றாக இருந்தது. தூங்கவும் ஆரம்பித்தேன்.

இவை அனைத்தும் காலை 7.30 மணிக்குள் நடந்துவிட்டன.

சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவர் மீண்டும் வந்து, ஆக்ஸிஜன் இல்லாமல் நடக்கச் சொன்னார். என்னால் நடக்க முடிந்தது. என் கணவர்,  "என்னால் இந்த லே சுற்றுலாவைத் தொடர முடியுமா?" என மருத்துவரிடம் கேட்டார்.

மருத்துவர், "போர்ட்டபிள் ஆக்ஸிஜன் போதாது. 2000 லி ஆக்ஸிஜன் சிலிண்டருடன் பயணித்தால் தொடரலாம்" என்றார். அதற்கு மேல் வேறு எந்த மருந்து, மாத்திரை, ஊசி, ஆலோசனையும் வழங்கவில்லை.

வேறு வழியில்லாமல் லே-லாடக் சுற்றுலா ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தொடர்ந்தது. கார்டுங்லா 18 ஆயிரம் அடி உயரம், பேங்காங் ஏரி 14 ஆயிரம் அடி உயரம், சாங்லா 17.6 ஆயிரம் அடி உயரம் - இந்த 3  இடங்களிலும் தலை வலி  உயிர் போனது, ஆக்சிஜனும் குறைந்து, மிகவும் கஷ்டப்பட்டேன். சிலிண்டர் கொண்டு போனாலும் இந்த வலி, மூச்சு திணறலில் மிகவும் கஷ்டப்பட்டேன். பேங்காங் ஏரியில் மயக்க நிலையிலேயே இருந்தேன், நடு இரவில் தலை சுற்றல் காரணமாக  நிலநடுக்கம் வந்துவிட்டதென சொல்லி அவரை பயமுறுத்தி, அன்றிரவு ஆக்சிஜன் வைத்தவாரே தூங்கினேன். 

திரும்பி லே விற்கு வரும் வரை, அவ்வப்போது ஆக்சிஜன் வைத்துக்கொண்டே வந்து சேர்ந்தோம். பல இடங்களில் வண்டியை விட்டு நான் இறங்கவேயில்லை. 

சென்னை திரும்ப விமானநிலையம் வந்தபோது, ஆக்சிஜன் குறைந்து, ஸ்ப்ரே ஆக்சிஜனை கொண்டு சமாளித்து விமானம் ஏறி மும்பை வந்தவுடன் பாதி உயிர் வந்தது. சென்னை வந்ததும் -

'சென்னை டா, ஆக்சிஜன் பூமி டா, நாங்க யாரையும் கொல்ல மாட்டோம் டா..' னு உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி என் மகிழ்ச்சியை பகிர்ந்தேன். 

அணில் குட்டி : எங்க எப்படி தகனம் செய்யனும்னு வூட்டுக்கார் கிட்டவும், புள்ள கிட்டயும் சொன்னதை எல்லாம் விட்டுட்டாங்க....  பொழச்சி வந்து இருக்காங்க... அடுத்த பதிவில் வச்சி செய்வோம்.. இப்ப விட்ருவோம்.. 

பயணக்குறிப்புகள் - ஸ்ரீநகர்/குல்மார்க்/சோனாமார்க்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடை காலத்தலைநகர். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தென்னிந்திய நதிகளுடன் ஒப்பிடும் போது, அதிக நீர்வரத்தோடு, அகலம் குறைவாகவே எனக்குப்பட்டது, நாங்கள் பார்த்த இடம் அப்படி இருந்ததோ என்னவோ.

சென்னையிலிருந்து தில்லிக்கு, தில்லியிலிருந்து  ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் சென்றோம். 24*7 ராணுவம் மற்றும் CRPF கண்காணிப்பில் ஸ்ரீநகர் இரண்டு கட்ட பாதுக்காப்பின் கீழ் இருப்பதாக விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டது. அதை அங்கிருந்த திரும்பும் வரையில் கவனித்தோம்.  கடைத்தெரு, சுற்றுலாப் பயணிகள் குவியும்  இடங்கள், அரசு அலுவலகங்கள் என எங்கும் பாதுகாப்பு தெரிந்தது.

ஸ்ரீநகர் செல்ல ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் சிறந்த நேரம். . 

ஸ்ரீநகரில் பார்க்க வேண்டிய இடங்கள் -

மிக முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்களில் "தால் ஏரி" முதலிடத்தை பிடிக்கிறது. ஏரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு படகு வீடுகளில்


வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரைக்கு வந்து செல்ல சிகாரா எனப்படும் படகுகளை பயன்படுத்துகிறார்கள். நமக்கு இந்த படகுகள் ரூ.600/- லிருந்து கிடைக்கும். திறமையிருந்தால் இன்னும் குறைத்துக்கூட பேசலாம். டீ, காபி, காஷ்மீர் காவா எனும் டீ போன்றவை படகில் வந்து விற்பனை செய்கிறார்கள். எதுவாகினும் பேரம் பேசி விலை குறைத்து  வாங்குவது நல்லது. உதாரணத்திற்கு 100 ரூ மதிக்கத்தக்க பொருளை ரூ.500/- என்கிறார்கள்.

முகலாய தோட்டங்கள் -முகலாயர்களின் காலத்தில் கட்டப்பட்டவை. உள்ளே கட்டிடங்களின் வடிவமைப்புகள் இதனை உணர்த்துகின்றன. முக்கியமாக ஷாலிமார் கார்டன்ஸ், நிஷாத் பாக் தோட்டங்களுக்கு சென்றோம். 

தங்கியிருந்த விடுதியிலிருந்து 100 ரூ கொடுத்து தால் ஏரிக்கும், அங்கிருந்து ஷாலிமார் பார்க்கிற்கு 250 ரூ, திரும்ப அங்கிருந்து நிஹாத் பார்க்கிற்கு 100 ரூ யும் ஆட்டோவிற்கு கொடுத்தோம். 500 ரூ வரை கேட்டார்கள், பேரம் பேசி பிரயாணம் செய்தோம்.
 
Jamia Masjid - ஒரே நேரத்தில் 33,333 பேர் தொழுகை செய்யக்கூடியளவு பெரிய மஸ்ஜீத். உள்ளே அனுமதி உண்டு.சுற்றி கடைத்தெரு இருக்கிறது, தேவைப்படுபவை வாங்கலாம்.

காஷ்மீரில் இருந்து சால்வைகள் மற்றும் கம்பளிகளை வாங்கலாம். தவிர காஷ்மீர் டிசைன் சல்வார் வகைகள்  வாங்கலாம். காட்டன் என்று சொல்கிறார்கள், ஆனால் காட்டன் இல்லை. துணியும் அப்படி ஒன்றும் நன்றாகயில்லை.மரத்தால் ஆன கைவினை பொருட்கள் அதிகம், படகு ஒன்று நினைவுக்காக வாங்கிவந்தேன். 

நூடுல்ஸ் லிருந்து, தோசை, சப்பாத்தி,பூரி வகையறாக்கல், அசைவ உணவுகள், பிரியாணி என எல்லாம் கிடைக்கிறது. சாப்பாட்டுக்கு குறைவில்லை. 

குல்மார்க் ;

இது ஸ்ரீநகரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 2,690 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஒரு நாள் பயணமாக டாக்ஸி அமர்த்திக்கொண்டு கிளம்பினோம். போகிறவழி நெடும்பயணமாக மலைகளின் கிராமங்களின் ஊடே சென்றது.  குல்மார்க் கில் பனிமலைக்கு செல்ல முன்கூட்டியே இங்கிருந்தே


ஆன்லைன்லில் பதியவேண்டும், எங்களுக்கு தெரியவில்லை. அங்குபோய் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. குதிரை மூலம் மேலே சென்று வரலாம் என்றனர். அதிக பணம். கீழே மட்டும் சுற்றிவர ஒரு குதிரைக்கு 3000 ரூ என பேசினர். ரொம்பவும் பேசி ஒருவருக்கு 1000 ரூ என பேசி மலையேறாமல் கீழே இருந்த இடங்களை மட்டும் சுற்றினோம். ஒரு கட்டத்திற்கு மேல் என் எல்-5 எலும்பு வலி பிரச்சனையால் குதிரைமேல் உட்கார்முடியால இறங்கி 1 கிமி தொலைவு நடந்தே வந்தேன். இடுப்பு வலி இருப்பவர்களுக்கு வெகுதொலைவு, மலை ஏற்ற இறக்க குதிரை சவாரி சரிவராது.குதிரை சவாரிக்கு தனியாக ஒரு ஷூ வாடகைக்கு வாங்கவேண்டும். அதுவும் பேரம் தான். சாமர்த்தியமிருந்தால் அதிக நஷ்ட ப்படாமல் இருக்கலாம்.

மகாராஜா மாளிகை, சிறு குன்று என ஒரு சில இடங்களே காண்பிக்கப்பட்டது. குதிரை மேய்ப்பவர் அலேக்காக லாகவமாக என்னைத்தூக்கி ஒவ்வொரு முறையும் ஏற்றியது ஆச்சரியபடும்படி இருந்தது. ஆனால் இடுப்பு வலிதான்..இப்ப நினைத்தாலும் குதிரை சவாரி பயமாகவேயுள்ளது. மகாராஜா அரண்மனை இப்பவும் ஏதாது விழாக்களுக்களின் விருந்துக்கு பயன்படுத்த படுகிறது என தெரிந்தது. முகலாய அரசர்களின் கோடை வாசஸ்தலமாக இவ்விடம் அமைக்கப்பட்டுள்ளதாக அரண்மனை குறிப்புகள் சொல்கின்றன.

குதிரையில் 2-3 மணி நேரத்தில் சுற்றி வந்துவிடலாம். குதிரையிலிருந்து இறங்கியபிறகு ராணி கோயில் ஒரு குன்றின் மேல் இருக்கிறது. அதை நாமே சென்று பார்த்துவிட்டு வரலாம். 

குல்மார்க்கில் வேறொன்றுமில்லை. திரும்ப இரவுக்குள் ஶ்ரீநகர் திரும்ப வந்துவிட்டோம். 

சோனாமார்க்;

ஸ்ரீநகரின் வடகிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிந்துநதி வழி நெடுக பார்க்கமுடிந்தது. குழாங்கற்கலில் வெள்ள வெளேரென தண்ணீர் உருண்டு 
ஒரு சலசலப்பு சத்தத்தோடு ஓடுகிறது. கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி.இங்கேயும்
குதிரை சவாரி. ஒரு வேன் பிடித்து சில சுற்றுளா இடங்களுக்கு சென்றோம். இங்கேயும் 
பேரம் பேசவில்லையெனில் நஷ்டம் தான். ஒருவருக்கு 100 ரூ அதிகமே. ஆனால் 5000 ரூ 
வரை கேட்கிறார்கள்.இருவருக்கும் சேர்த்து 800 ரூ கொடுத்தோம்.

இங்கேயும் எல்லா உணவு வகைகளும் கிடைக்கும். சின்னதாக ஒரு குளம், ஒரு ஆறு,  போய் 
வருகின்ற பாதையில் உள்ள மலைகள் என ஒன்றும் சுற்றிப்பார்க்க அதிகமில்லை. இரவுக்குள் ஶ்ரீநகர் வந்துவிட்டோம்.

பேரம் பேச தெரிந்தால், பாக்கெட் காலி ஆகாமல் வீடு திரும்பலாம் என்பதே இப்பயணத்தில் கற்றுக்கொண்டது.

 Picture courtesy : Thankyou Google. 

பயணக்குறிப்புகள் - ஜெய்சல்மேர் & ஜோத்பூர்

ராஜஸ்தான் மாநில தார் பாலைவனத்தில் அமைந்த ஜெய்சல்மேர் , ஜோத்பூர் நகரங்களைக்காண சென்றிருந்தோம். தனிப்பட்ட சூழ்நிலை காரணமாக உடனுக்குடன் இந்த பயணத்தைப்பற்றி எழுத இயலவில்லை. 

குறைந்தபட்சம் 4-5 நாட்கள் இல்லாமல் இரண்டு இடங்களையும் பார்க்க முடியாது.  இதில் 2 நாட்கள் இங்கிருந்துசென்று வர சரியாகயிருக்கும். ஜோத்பூருக்கு அநேகமாக எல்லா நகரங்களிலிருந்தும் விமானம், பேரூந்து, ரயில் சேவை உள்ளது. ஆனால் ஜெய்சல்மேர்'க்கு ஜோத்பூர் சென்று தான் செல்ல வேண்டியிருக்கும். நேரடியாக போக்குவரத்து வசதி குறைவே. 

ஜெய்சல்மேர் முழுவதும் மணல் பாலைநிலமாக உள்ளது.  ராஜஸ்தானின் "தங்க நகரம்" (Golden City) என்று அழைக்கப்படும் இந்நகரத்து வீடுகள், கட்டிடங்கள், கோட்டை, அரண்மனை என எல்லாமே அங்கு கிடைக்கும் மஞ்சள் நிற மணற்கற்கலால் கட்டப்பட்டு, நகரமே மஞ்சள் நிறமாக காட்சி அளிப்பதால் இப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. நவம்பரில் சென்றதால் பகலில் அதிக வெயிலும், இரவும் அதிக குளிருமாக இருந்தது. ஆண்டு முழுவதும் வறண்ட வானிலை கொண்ட இடமாகவே இருக்கிறது. இங்கு கம்பு, சோளம், வரகு, பார்லி போன்ற சிறுதாணியங்களைப் பயிரிடுகின்றனர். உணவு பழக்கமும் இவை சார்ந்தே உள்ளது. சோளம், வரகு , கம்பு சப்பாத்திகள் கிடைத்தன. கோதுமை சாப்பாத்தியும் கிடைக்கிறது. தவிர ராஜஸ்தானின் தாலி கிடைக்கிறது. இதில் பாஸ்மதி அரிசி சாதம், இரண்டு வகை காய்கறிகள், ஒரு பருப்பு குழம்பு, அப்பளம், சப்பாத்தி மற்றும் ராஜ்மா பயறு வகையில் செய்த ஒரு குழம்பு, ஒரு இனிப்பு, ஊறுகாய் என ராஜஸ்தான் மதிய உணவு பிரமாதம்.

ஜெய்சல்மேரில் முக்கியமாக பார்க்கவேண்டியது கோட்டை. மஞ்சள் நிற மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டை, பகல் நேரத்தில் சூரியக் கதிர்களால் தங்கம் போல் ஜொலிக்கிறது. இதனால் 'தங்கக் கோட்டை' என்றும் சொல்லப்படுகிறது. இங்கு இப்போதும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோட்டைக்குள் சென்று வந்தது போல இல்லாமல் ஒரு நகரத்தினுள் சென்று வந்தது போல இருந்தது. அன்றாட வேலைக்காக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள், தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருக்கும் வியாபாரி, சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வெளிநாட்டுப் பயணிகள், தெரு ஓர டீக்கடைகள், பிரெஞ்சு, இத்தாலிய,ராஜஸ்தான் உணவகங்கள், கார், சைக்கில், இரு சக்கர வாகனங்கள், வண்டி கடைகள், பால்/தயிர் விற்பவர்கள் என மன்னர்கள் காலத்தில் இங்கே வாழ்ந்த மக்களின் வம்சாவளிகள் இன்று வரை இடம் பெயராமல் வாழ்கிறார்கள். மக்கள் தொகை காரணமாக, கோட்டையை விட்டு வெளியேறி,  சுற்றியுள்ள இடங்களில் குடியேறி இருக்கிறார்கள்.

கோட்டைக்கு உள்ளே அழகான சிற்ப ஓவிய வேலைபாடுகள் நிறைந்த 7 ஜெயின் கோவில்கள் மற்றும் பல அரசகுடும்ப அரண்மனைகள் உள்ளன. வியாபாரிகள் கட்டி வசித்து வந்த வீடுகளை ஹவேலிகள் என்று அழைக்கிறார்கள். ஹவேலிகள் அவர்களின் வாழ்க்கை முறையையும், மேட்டிமைத் தனத்தையும், அன்றாட பழக்க வழக்கங்களையும் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.  ஒவ்வொரு மாடியிலிருக்கும் ஜன்னல்கள் வழியாக ஜெய்சல்மேர் நகரத்தின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.இந்த கோட்டையை முழுமையாக சுற்றிப்பார்க்க 5-6 மணி நேரம் ஆகும். 

தவிர, இங்கு 28 கிலோ மீட்டர் தொலைவு வரை மட்டுமே பாயக்கூடிய கக்னி (Kakni) என்ற ஆறும், ஓர்ச்சில்/புஜ்-ஜில் எனும் ஏரியும் உள்ளது. இந்திய-பாகிஸ்தான் நாட்டு சர்வதேச எல்லை இங்கு உள்ளது.  அரசு அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது, கூட்டமேயில்லை. ஆர்வம்/நேரம் இருப்பவர்கள் சென்று பார்க்கலாம்.

ஜெய்சல்மேர் சென்றால் ஒரு நாள் இரவு பாலைவனத்தில் அமைக்கப்பட்ட ஏதோ ஒரு விடுதியில் (உங்களின் பட்ஜெட் க்கு தகுந்தார் போல) தங்கி, மாலையில் பாலைவனத்தில் ஒட்டக சவாரி, ஜீப் சவாரி, இரவு அவர்களின் பாரம்பரிய நடனத்துடன் சேர்ந்து அளிக்கப்படும் பாரம்பரிய உணவு போன்றவற்றை கண்டும் உண்டும் களிக்கலாம். காலையில் கோட்டை & மற்ற இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு , இரயில் பயணமாக ஜோத்பூருக்கு வரலாம். 

 ஜோத்பூர் பயணம் -

ஒரு முக்கியமான கலாச்சார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமான ஜோத்பூர் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்நகரம் 'நீல நிற' நகரம் Blue City என்றும் 'சூரிய நகரம்' என்றும் பெருமையாக அழைக்கப்படுகிறது. இங்கு வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கும் நீல நிறத்தில் வண்ணம் பூசுகிறார்கள்.

ஜோத்பூரிலும் மிகப்பெரிய கோட்டை உள்ளது, இங்கு மக்கள் வசிக்கவில்லை ஆனால் 'Royal Marriages' நடைபெறுகின்றன. நாங்கள் சென்ற இரவு, ஒரு திருமணத்திற்காக 'கத்ரீனா கைஃப்' பின் நடனம் இருப்பதாக பேசிக்கொண்டனர். அநேக ஹாலிவுட் நடிகை, நடிகர்களின் திருமணங்கள் இங்கு தான் நடக்கின்றன. 

நான்  வேலை செய்யும் அமெரிக்க கம்பெனி முதலாளியின் சொந்த ஊர் ஜோத்பூர், அதிர்ஷடவசமாக அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கும் சமயம் நாங்களும் அங்கு சென்றதால், அவரின் ஆலோசனை மற்றும் ஏற்பாட்டின் படி ஜோத்பூரின் கோட்டை மற்றும் பிற இடங்களை சுற்றிப்பார்த்து வந்தோம். 2 நாட்கள் அவரின் உபசாரத்தில் தலைசுற்றி போனோம். எங்களை கண்ணும் கருத்துமாக கவனித்துகொண்டார். ஜோத்பூர் கோட்டை மிக பிரம்மாண்டம். சுவரோவியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், அரச குடும்பங்கள் பயன்படுத்திய அரிய பழங்கால பொருட்கள் மற்றும் சேகரிப்புகளை கண்டு வியக்கலாம்.. குழந்தைகளான விதவிதமான தொட்டில் ஒரு அறை முழுக்க வைக்கப் பட்டிருந்தன. கால்கள் வலி எடுத்து நடக்க முடியாமல் எப்போது உட்காருவோம்னு ஆகிவிட்டது.

ஜோத்பூரில் மேலும் பார்க்கவேண்டிய இடங்கள் -

தூர்ஜியின் படி கிணறு - Step well. படி படியாக இறங்கிக்கொண்டே போகிறது. இரவு நேரங்களில் ஒவ்வொரு படியிலும் விளக்கேற்றி வைத்து அழகு படுத்துக்கிறார்கள். 

உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகம்;; உமைத் பவன் தற்போது ஒரு ஹோட்டலாக உள்ளது. இருப்பினும், ஹோட்டலின் ஒரு பகுதி பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது, அரச குடும்பங்களின் சில அரிய பழங்கால பொருட்கள் மற்றும் சேகரிப்புகளை கண்டு களிக்கலாம்.

ஜஸ்வந்த் தடா - மகாராஜா சர்தார் சிங்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கல்லறை 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கொஞ்சம் தாஜ்மகலை நினைவு கூர்கிறது.

கடிகார கோபுரம்- ஆங்கிலேயர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட கடிகாரம்.

மேலும் கடிகாரம் பார்க்க போகும் வழியில் இருக்கும் பெரிய கடைத்தெரு, துணிக்கடைகள், உணவு விடுதிகள், இனிப்பு பலகார கடைகள் என கடைசியாக இவற்றையும் சுற்றிப்பார்த்து விட்டு வரலாம். 

என் கம்பெனி முதலாளி'யின் குடும்பத்தினர் நடத்திவரும் மிகப்பெரிய சாயி கோயிலுக்கு (Sai Mandir, Motiba Nagar, Pal Road, Jodhpur) சென்று பிராத்தனை செய்து வந்தோம். 

இக்கோயில், அவர்களின் சொந்த செலவில் மிக அருமையாக பராமரிக்கப்பட்டு , தினப்படி ஆரத்தி, பூஜை, வியாழக்கிழமை தோரும் பொது மக்களுக்கு அன்னதானம் என எல்லாமும் செய்யப்பட்டு வருகிறது. தவிர, தங்கும் அறைகள், விநாயகர், நவகிரகங்கள், சிவன் சக்தி, லக்‌ஷ்மி தேவி என தனித்தனியாக எல்லா தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன.

முதலாளி குடும்பத்தினரும் ஜோத்பூர் நகரத்தின் நடுவில் ஒரு ஹவேலியில் வசித்து வந்தவர்களே. இப்போது சாயி கோயில் அமைந்திருக்கும் மோதிபா நகரில் சாய் கோயில் அருகில் வசித்து வருகின்றனர்.

ஜெய்பூரும் அருகில் தான் உள்ளது, பல ஆண்டுகள் முன்னமே இங்கு சென்று வந்துவிட்டதால், ஜோத்பூர் & ஜெய்சல்மேர் மட்டும் சுற்றிப் பார்த்து வந்தோம்.

Pictures courtesy : Thankyou Google.

பீட்டர் தாத்ஸ் : Travel isn’t always pretty. It isn’t always comfortable. Sometimes it hurts, it even breaks your heart. But that’s okay. The journey changes you; it should change you. It leaves marks on your memory, on your consciousness, on your heart, and on your body. You take something with you. Hopefully, you leave something good behind.” – Anthony Bourdain



கொல்கத்தா நாட்கள்

ஒரு டாக்ஸியில் பயணம் செய்துக்கிட்டே, ஹவுரா மேம்பாலத்தை Top, Side னு ஏதோ ஒரு angle லில் காட்டனும், இல்லைன்னா drone ஐ பறக்கவிட்டு ஹவுரா மேம்பாலத்தை இந்தப்பத்திலிருந்து அந்தப்பக்கமா ஒரு தரம் காட்டிட்டா ..நாம் கொல்கத்தாவில் இருக்கோம்னு அர்த்தம்.

ஆனால் கொல்கத்தா நகரம் இது மட்டுமல்ல, பழமை மிகுந்த, பெருமை வாய்ந்த ,இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் முதன்மையான, அதிக வரலாற்று சிறப்பு பெற்ற ஒரு நகரம்.

முதல் முதலாக ஹவுரா ரயில் நிலையத்திற்கு போனது, டார்ஜிலிங் சுற்றுப்பயணத்தின் போது தான்.  சென்னை-ஹவுரா , ஹவுரா-நியூஜல்பாய்குரி, அங்கிருந்து டார்ஜலிங் செல்ல ரயில் பிடிக்கனும். ஹவுரா ரயில் நிலையத்தில் மாடியில் பயணிகள் தங்குமிடத்தில் தங்கி குளித்து,  சீக்கியர் ஒருவர், குளியலறை கண்ணாடியில் ஒரு முழு காட்டன் புடவையை தலையில் முண்டாசாக லாகவமாக கட்டிக் கொண்டிருந்ததை வியந்து பார்த்தது.. நீங்காது நினைவு. 

 ஆனால் இப்போ கொல்கத்தா பயணம் என்பது, அங்கேயே வேலை, சில வருடங்கள் அங்கேயே தங்கியிருக்க போறோம். கொஞ்சம் பயம், பதட்டமென இருந்ததென்னவோ உண்மை. சென்னையிலிருந்து ரொம்ப தொலைவு, அம்மாவின் எண்ணம் சுமையாக இருந்த போதிலும், கொல்கத்தா செல்வதறிந்து அம்மாவின் உயிர் முன்னமே பிரிந்து,அவரின் இறுதி சடங்குகளை சரிவர செய்து முடித்துவிட்ட திருப்தியோடு கிளம்பினேன்.

ஹவுராவில் ரயிலை விட்டு இறங்கினோம், அலுவகத்திலிருந்து சுப்ரியா என்ற நபர் (ஆண்) வந்திருந்தார், கார் ரயில் நிலையத்தின் உள்ளேயே அனுமதிக்கப்படுகிறது, சுமைகளை தூக்கிக்கொண்டு ரயில் நிலைய முகப்புவரை நடக்கவேண்டி இல்லாமல், காரில் ஏறிக்கொண்டோம். ஹவுரா ரயில் நிலையம் முன்னைப்போல இல்லாமல் கொஞ்சம் சுத்தமாக இருந்தது.

சுப்ரியா போகிற வழியில் எதைஎதையோ க்காட்டிக்கொண்டே போனார். பெங்காலி'கள்  மெதுவாக ஆரம்பித்து அதிகமாக பேசக்கூடியவர்கள்.  அதிக சத்தம், அதிக அசுத்தம், அதிக கூட்ட நெரிசல் என எல்லோருக்கும் தெரிந்த கொல்கத்தாவின் வாழ்க்கையில், அதி மேதாவிகளாக ஒவ்வொரு பெங்காலியும் தன்னை நினைத்துக்கொண்டு நடந்துக்கொள்வது பேசுவது போன்றவை எனக்கு சற்றே ஆற்றாமையை கொடுத்தது.ஆனால் அவர்களுக்கு நம்மேல் அதிக மரியாதை இருப்பது என்னவோ உண்மை. தவிர, நாமெல்லோரும் சைவர்கள் (Vegetarians) என நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்களின் வாழ்க்கையில் சில பல முக்கிய நிகழ்வுகள் அங்கே நடந்தன. முதல் கார் அங்கே வாங்கினோம். மேற்கு வங்க பதிவில் கார் இருந்ததால், அநேகமாக சுற்றியுள்ள பல ஊர்களை எளிதாக பார்த்துவந்தோம். அதிகமாக கிராமங்கள், வீட்டுக்கு ஒரு குளம், தென்னை, வாழை, பலா, மாங்காய், தேக்கு என மரங்கள், இமயத்திலிருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகளும், கிளை நதிகளும், வாய்க்கால்களுமாக வருடத்தின் 365 நாட்களும் தண்ணீருக்கு பஞ்சமில்லை. எல்லையே தெரியாத

ஹூக்ஹ்லி நதியின் அத்தனை தண்ணீரும் கடலில் கலக்கும் கொடுமை.  தண்ணீரீன் அளவு, வரத்து போன்ற காரணங்களால் நதிகளின் நடுவே மேற்கு வங்கத்தில் அணைகள் கட்ட வாய்ப்பே இல்லாத நிலை, ஒருவேளை கட்டினால் மாநிலமே நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம். அதனால் நதி தன்னோடு சேர்த்து மொத்த நீரையும் கடலில் கொண்டு சேர்த்துவிடுகிறது.

எப்படியாவது கடலோர மாநிலங்கள் வழியாகவே கங்கையை வளைத்து கொண்டு வந்தால், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடுன்னு ஓஹோ ன்னு செழிக்கும். ஆனால் நடக்கும் மத்திய ஆட்சியில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடமாட்டார்கள் என்பதால், இதைப்பற்றி யோசிப்பதே அபத்தம். இந்தியா எத்தியோப்பியாவை போல மாறும் காலம் கண்முன்னே தெரிகிறது. 

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறேன்.. தொடர்ந்து அடுத்த பதிவில் கொல்கத்தா நாட்கள் தொடரும் ...

ஐயாறப்பர் கோயில் -திருவையாறு

திருவையாறு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, தியாகராஜ ஆராதனை விழாவும் அனைத்து இசை கலைஞர்களும் ஒரே இடத்தில் நடத்தும் இசை நிகழ்ச்சிதான்.

இதைத்தாண்டி, இங்கே வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான ஐயாறப்பர் சிவன் கோயில் இருக்கிறது.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தருமசம்வர்த்தினி. 

இக்கோயிலில் நுழைந்துவுடன் அதன் பிரம்மாண்டம் கவனத்தை ஈர்த்தது. திருவாயாறில் இப்படியொரு ஒரு கோயிலா என்ற ஆச்சரியம் நீங்காது கவனித்தபோது தான் அத்தனைப்பெரிய கோயிலை மிக மிக சுத்தமாக பராமரித்து வருவதையும் பார்க்க முடிந்தது. 

இக்கோயிலைப்பற்றி ஒன்றும் தெரியாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றாதாலேயே இதன் பிரம்மாண்டம் பிரம்மிக்க வைத்தது. திருவாரூர் கோயிலைவிடவும் பெரியக்கோயில், மூன்று பிரகாரங்கள். இக்கோயில் தனுசு ராசி அன்பர்களுக்கு உகந்தக்கோயில் என்பதை சென்றுவந்தப்பிறகு தெரிந்துக்கொண்டேன்.  

இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இதன் மூன்றாவது பிரகாரமான சப்தஒலி பிரகாரம். சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வந்தபோது, சப்தஒலி பிரகாரத்தின் பலகையை பார்த்தோம். ஆனால் இது மூன்றாவது பிரகாரம் என்பதால் இதில் யாருமே சுற்றவில்லை. இருப்பினும் பலகையைப்பார்த்த ஒரு ஆர்வத்தில் நானும் அவரும் மட்டும் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தோம்.

சில அடிதூரம் நடக்கும் போதே அந்த பிரகாரம் மற்ற கோயில்களின் பிரகாரம் போல இல்லாது இரண்டுப்பக்கமும் மிக உயர்ந்த மதில் சுவர்களை கொண்டதாக இருந்தது. யாருமில்லாததால் ரொம்பவே அமைதியாக ஏதோ ஒரு அகன்ற குகைக்குள் செல்லும் அனுபவமாக இருந்தது.  சப்தஒலி என்பது எங்கு எப்போது வந்து நம்மை பயமுறுத்தும் என்ற எதிர்ப்பார்ப்போடு அன்னாந்து மதில் சுவர்களின் உயரத்தைக்கண்டு அசந்துப்போய் நடந்துக்கொண்டே போகும் போது இடது பிரகாரம் முடியும் இடத்தில், இங்கு நின்று வடக்கு நோக்கி "ஐயாறா" என்று குரல் எழுப்பினால் 7 முறை எதிரொலிக்கும் என்ற பலகையை பார்த்தவுடன் எது வடக்கு என்ற குழப்பம் வந்து என் கணவர் வலதுப்பக்கம் திரும்பி "ஐயாறா" என்று கூப்பிட.. அட.. ஆமாம்.. அக்குரல் 5 முறை எதிரொளித்தது, மீதமிருந்த இரண்டு ஒலி மிக மெல்லியதாக இருந்திருக்கிலாம், ஒருவேளை மிகநுட்பமான ரெக்கார்ட்கள் கொண்டு பதிவிட்டால் 7 முறை வெவ்வேறு ஒலியின் நீளத்தில் நமக்கு கேட்கக்கிடைக்கும். எதிரொலி என்பதைத்தாண்டி வெவ்வேறூ ஒலிவடிவில் கேட்பது வியப்பே. இதன் முக்கிய க்காரணம் இக்கோயிலின் கட்டிட அமைப்பே. 

அவர் வடக்கு நோக்கி சப்தமிட, நான் அவரை நோக்கி அதாவது தெற்கு நோக்கி சப்தமிட அதே ஒலியை வடக்கிலிருந்து கேட்க முடிந்தது. இது ரொம்பவே ஆச்சரியம் தான், இதையே இதன்பிறகு பார்த்த கோயில்களில் முயற்ச்சி செய்து ஒரு சத்தமும் வராதது ஏமாற்றமே.அம்பாள் சன்னிதிக்கு ஒரு 1/2 கிமீ நடந்து செல்ல வேண்டியிருந்தது. அத்தனைப்பெரிய கோயில். 

இந்த கோயிலுக்கு செல்ல திட்டமிடும் போது திருவையாறை சுற்றி 5 (இக்கோயிலை சேர்த்து 6) சிவத்தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுக்கொள்ளலாம். எல்லாமே 2-15 கிமீ ல் இருக்கிறது. 

புஷ்பவனேஸ்வரர் கோயில் 

திருப்பூந்துருத்தி

 

நெய்யாடியப்பர் கோயில் 

தில்லைஸ்தானம் 

 

 

 


 

ஐயாறப்பர் கோயில்

திருவையாறு 

 

ஆபத்சகாயேஸ்வரர் கோயில் 

திருப்பழனம்

 

சோற்றுத்துறை நாதர் கோயில் 

திருச்சோற்றுத்துறை

 

திருவேதிகுடி

திருவேதிகுடி 

 

பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் 

திருக்கண்டியூர்

 

டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு கோயிலுக்கு செல்ல திட்டமிட்டாலும், போகும் வழியில் உள்ள அத்தனைக்கோயில்களையும் கூகுளில் தேடி சென்றுப்பார்க்கலாம். கண்டிப்பாக 3-5 கிமீ ஒரு கோயில் இருக்கும். திரு' என்று ஆரம்பிக்கும் ஊர்களில் நிச்சயம் பெரிய வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி கூகுளில் தேடி தேடியே திருவாரூரை சுற்றியுள்ள பலக்கோயில்களை நாங்கள் தரிசித்துவருகிறோம்.