எங்கவீட்டு சமையல் - சுறா புட்டு

இன்று எங்க விட்டு சமையலில் சுறா புட்டு செய்வதை பார்ககலாம்..

தேவையான பொருட்கள் : 

சுறா - 1 

மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1.5 ஸ்பூன்

மிளகு பொடி - 1 ஸ்பூன்

வடவம் : 1/2 ஸ்பூன் - தாளிக்க வடவம் இல்லயென்றால் கடுகு, உளந்து, சீரகம், வெந்தயம்.

வெங்காயம் : 2 

பூண்டு - 10-12 பல்
 

உப்பு - தேவைக்கு

நல்லெண்ணெய் - 1 கரண்டி

கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை ; மற்ற மீன்கள் மாதிரி இல்லாமல் சுறா சுத்தம் செய்வது, தோல் நீக்கி வேகவைப்பது எல்லாமே வித்தியாசம். சுறா மீன் வாங்கும் போதே தோல் நீக்கி , கட் செய்து வாங்கி வந்துவிடுவது நல்லது. 

மீனை சட்டியிலோ, கோடுகள் டிசைன் நிறைந்த பாத்திரத்திலோ கொட்டி உப்பு கொஞ்சம் சேர்த்து மீனை நன்கு கழுவி, பின்னர் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் போட்டு நன்கு கலக்கி நன்கு கழவவும். மெல்லிய மண் இந்த மீனில் அங்கங்கே இருக்கும். அதனால் நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மீன் நன்கு மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்கவைத்து, அதை மீனில் ஊற்றி 10 -12 நிமிடம் மூடிவைக்கவும்.

12 நிமிடம் கழித்து, தண்ணீரை வடிகட்டி, அதில் 1 ஸ்பூன் மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து மீனை பொடியாக உதிர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.

வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், வடவம் தாளித்து, கருவேப்பிலை, நசுக்கிய பூண்டு போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கொட்டி நன்கு வதக்கவும். பொன்னிறமாக ஆகும் போது உதிர்த்து வைத்த மீனை கொட்டி, மிளகாய் தூள் வாசம் போக நன்கு வதக்கி,
இரக்கும் போது மிளகு பொடி போட்டு கலக்கிவிட்டு  எடுத்தால் சுறா புட்டு ரெடி. 

சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும், தொட்டுக்கவும் செய்யலாம்.

பீட்டர் தாத்ஸ் : Featuring & realsing the flavors of the ocean.

ஏதோ ஒரு சினிமா படப்படிப்பு

 சோழிங்கநல்லூர்,  TNHB சிமெண்டு சாலையில் , மாலை 4 மணி வாக்கில் ஒரு காரும், 2, 3 இருசக்கர வாகனங்களும் வந்து நின்றன. அதில் வந்தவர்கள் ஒன்று கூடி பேசியும், தனித்தனி குழுக்களாக பிரிந்தும் பேசினர், சாலையில் அமர்ந்து ஏதோ வரைப்படைத்தை சரிசெய்வது போல தெரிந்தது. சிமெண்டு சாலை அத்தனை சுத்தமாக இருக்கும். 

இதற்கு பிறகு வந்தவற்றை fast forward ல் சினிமா காட்சிகளில் பார்ப்பதுப்போல கோர்வையாக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.இவை அத்தனையும் அவ்வப்போது போர்ட்டிக்கோவிற்கு வரும் போதும், சமையல் அறை சன்னல் வழியாகவும் கவனித்தவை ; -

1. 2-3 கார்கள் வந்தன. ஆங்காங்கே பார்க் செய்யப்பட்டு, இட நெருக்கடி காரணமாக திரும்ப எடுத்து வேறு இடங்களிலும் பார்க் செய்யப்பட்டன.

2. ஒரு சின்ன தண்ணீர் லாரி வந்தது ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது.

3. ஆட்டோக்கள் 2-3 வந்தன, அதிலிருந்தோர்  இறங்க, அவையும் இடம் பார்த்து பார்க் செய்யப்பட்டன.

4. இரண்டு கேரவன் வந்து, எங்களது போர்ட்டிக்கோவிற்கு நேரெதிரில் நிறுத்தப்பட்டன.

5. இரண்டு க்ரேன் லாரிகள், ரிங் ரோட்டின் முகப்பில் நிறுத்தப்பட்டன.

6. இரண்டு பேட்டரி வைத்த லாரிகள் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன.

இதற்குள் மாலை மணி 5.30-5.45 ஆகியிருந்தது.

7. ஒரு சின்ன லாரி வந்தது, வேக வேகமாக இரண்டு டேபிள், நாற்காலிகள் இன்னும் இதர பொருட்கள்  இறங்கின. சாலையில் ஓரமாக ஒரு இடம் பார்த்து, மேஜைகள் போடப்பட்டு, காபி, டீ க்கான கேன்'கள் வைக்கப்பட்டு, தேவைப்பட்டவர்கள் வந்து வாங்கிக்கொண்டு சென்றனர்.

வேலை மிக வேகமாக நடப்பதே தெரியாமல் நடந்துக்கொண்டிருந்தது. அதாது நான் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 7 ஆவது மாடியிலிருந்து கவனிப்பதால் எல்லாமே ஊமைப்படமாக தெரிந்தது. அவர்களது வேலையில் எங்கேயும் ஒரு தடங்கலோ, சோர்வோ, தயக்கமோ இல்லை. வேலை சொல்லிவைத்தார் போல / திட்டமிட்டார் போல அதுப்பாட்டுக்கும் நடந்துக்கொண்டே இருந்தது.

சில பல லாரிகள் அவ்வப்போது வந்து தொழில்நுட்ப கருவிகள், நாற்காலிகள், படப்பிடிப்பிற்குத்தேவையான செட்டுகள் அமைக்க தேவையான பொருட்கள் என இறக்கி வைத்துவிட்டு தொலைவில் மக்கள் நடமாட்டமில்லா இடங்களில்  நிறுத்தி வைக்கப்பட்டன.

கேரவன் நிறுத்தியிருந்த எதிர் வீட்டுக்காரம்மா வெளியில் வந்து வண்டிக்காரர்களிடம் 'இங்கே வண்டியை நிறுத்தக்கூடாது, இங்கே கூட்டம் போடக்கூடாது' என சண்டையிட, வேன் ஓட்டுனர் உடன்பட்டு, இரண்டு வண்டியையும் அவங்க வீட்டின் எதிரிலிருந்து நகர்த்தி சற்று தள்ளி நிறுத்தினார். அந்தம்மா, அடுத்து விடாமல் அவங்க வீட்டு பக்கத்தில் காலி இடத்தில் டீ விநோயகம் நடத்தும் இடத்திற்கும் போய் சத்தம் போட, அவங்களும் சிமெண்டு ரோடுக்கு இடத்தை மாற்றினர். 

நேரம் ஓடியது, நடுவில் நான் கடைக்கு செல்ல  வெளியில் செல்லும் போது 'ஹோட்டல் சென்னை கிங்' , ஒரு மளிகைக்கடை பெயர் பலகையும் எங்கள் குடியிருப்பின் மதில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.கடைக்கு செல்லும் வழியெங்கும் சாலையோரங்களில் கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. காரில் இருந்தோர், அங்கிருந்து தொலைவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கும் இடத்தை நோட்டம் விட்டவாரே கைப்பேசியை நோண்டிக்கொண்டு இருந்தனர். 

இதில் அநேகமாக இளைஞர்/இளைஞிகள் இருந்தனர்.  வழியிலிருந்த டீ கடையில் விரைவாக தொழில் நடந்துக்கொண்டிருந்தது. படப்பிடிப்புக்கு வந்தவர்வர்கள் குழுக்களாக அங்கு இருக்கும் எல்லா டீ கடை சிற்றூண்டி கடைகளை ஆக்கிரமித்து இருந்தனர், சிலரின் கைகளில் சிகிரெட். திரும்ப வரும் போது எங்கள் குடியிருப்பு செக்கியூரிட்டி, 'ராகாவா மாஸ்டர்' நடிக்கும் படம் என்றார்.

வீட்டுக்கு வந்து என் வேலையை பார்க்க ஆரம்பித்து, படப்பிடிப்பை மறந்தேவிட்டேன். 8-8.30 மணியிருக்கும், எப்படியிருந்தாலும் இங்கிருந்து ராகவா மாஸ்டரை பார்க்க முடியாது , ஆனாலும் படப்பிடிப்பு எந்த நிலையில் இருக்குன்னு பார்க்க போனால்- அங்கு நடப்பவை எனக்கு புதிதாக, பார்த்திராத ஒரு விசயமாக இருந்தது. 

இப்போது கேரவன் விளக்குகள் எரிந்தன, ஏசி ஆன் செய்யப்பட்டிருந்தது. இரண்டு கேரவன்'களுக்கும் முன் ஒரு டேபில் போட்டு அதில் ஒருவர் துணிகளுக்கு பொட்டிப்போட்டுக் கொண்டிருந்தார். 

இன்னொரு பக்கம் சாப்பாடு ஒரு வேனில் வந்து இறங்கியது, இரண்டே பெண்கள், பாத்திரம் கழுவ (அந்த தண்ணீர் லாரி இப்போது சாப்பாடு இருக்கும் இடத்திற்கு அருகில் வரவைக்கப்பட்டு அதிலிருந்து தேவையான தண்ணீரை அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருந்தது), வந்த உணவுகளை சிறிய பாத்திரங்களுக்கு மாற்றினர்.  ஆண்கள் இடைவெளி விட்டு 3 டேபில்களை   போட்டு, ஒவ்வொரு டேபிலின் முன்னும் அரைவட்ட வடிவில் நாற்காலிகளை அடுக்கினர். இப்போது இவ்விடத்தை நோக்கி வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் நகர்ந்தனர். சாப்பாட்டை வாங்கிக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். 

3-4 பேரில் ஆரம்பித்த இந்த படப்பிடிப்பு முன்னேற்பாடு 250-300 பேர் வரை கூடியிருந்தது. 

இன்னொரு பக்கம் கேமரா வைக்குமிடம், லைடிங் என தொழில்நுட்ப கலைஞர்கள் ஆவன செய்துக்கொண்டிருந்தனர்.

சினிமா, ஒரு நாளையில் சில மணி நேரங்களுக்கு எத்தனைப்பேருக்கு சாப்பாடு போடுகிறது, அவர்களின் வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இரவு 9-30 வரை படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை.  எப்போது ராகவா வந்தார் , எப்போது படப்படிப்பு முடிந்தது எனத்தெரியவில்லை.

காலையில் எழுந்து ப்பார்த்த போது,அந்த இடத்தில் இத்தனைக்கூட்டம் இருந்த சுவடே தெரியவில்லை.. குறிப்பாக சாலை சுத்தமாக இருந்தது.

என்னாது..... சினிமாக்கு போலாமா?

மொபைல் அழைத்தது.....மோகன் தான், ஆள்காட்டி விரலால் தேய்த்து எடுத்து காதில் வைத்தேன்.

"ஹல்லோ.. சொல்லுடா…" 

"கொரானா முடிஞ்சி, தியேட்டர்ஸ் திறக்க ஆரம்பிச்சிட்டாங்க. சினிமாக்கு போலாம் வரியா.. வீட்ல வேற, எங்கேயாவது வெளியில் போலாமானானு கேட்டுட்டே இருக்காங்க. ஃபேமிலியோட போலாம்… என்ன சொல்ற.."

"என்னாது ஃபேமலியோட சினிமாவா? எங்கூட்டம்மா கண்டிஷனுக்கு எல்லாம் எந்த தியேட்டரிலும் சீட் கிடைக்காது என்னாலையும் அந்தம்மாவ கூட்டிட்டு வரமுடியாது.… ஆள விடு சாமி.. நீ போயிட்டு வா…"

"டேய்..என்னடா இப்படி சொல்ற.. சிஸ்டர் அப்படி என்ன கன்டிஷன் போடறாங்க.. சொல்லு கேப்போம்.."

"ஞாயித்துக்கிழமை சினிமாக்கு போகனும்னா.. ஞாயித்துக்கிழமை காலையில் தான் சொல்லுவாங்க.. அதுல.. சீட் நம்பர் A-E வரைக்கும் தான் இருக்கனும்.."

"ஓ..அது ஏன்"

"அந்த தூரத்தில் இருந்து பாத்தாதான் கண்ணுக்கு நல்லதாம். அதுக்கு கீழ இருந்தா வேணாம்னு சொல்லிடுவாங்க. 10 நிமிசம் முன்னாடி போய் சீட்ல உக்காந்துக்கனும், லேட் ஆகக்கூடாது, லைட் ஆஃப் ஆகி விளம்பரம் ஓடிட்டு இருந்தாக்கூட நான் செத்தேன்…"

"சினிமா தான் ஆரம்பிக்கலையே அப்பவுமா கோவப்படுவாங்க.."

"அவங்க பிரச்சன சினிமா ஆரம்பிக்கறதை பத்தி இல்ல… லைட் ஆஃப் பண்ண பிறகு போனா,, உக்காந்து இருக்கவங்கள தொந்தரவு செய்து உள்ள போய் உக்காரனும், பின்னாடி இருக்கவங்களுக்கு மறைக்கும்.. அப்புறம் நடக்கும் போது சீட்ல உக்காந்து இருக்கவங்க மேல இடிக்காம நடந்து போகனும்..  உட்கார்ந்து இருப்பவங்க காலை மிதிச்சிட்டு நடக்கனும்.. இதெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது…"

"டேய்..சிஸ்டர் சொல்ற எல்லா விசயமும் கரெக்ட் டா.. இதுக்கா அவங்கள சினிமாவுக்கு கூட்டுட்டு போகமாட்டேன்னு சொல்ற? அராஜகம் டா. "

"அடப்போடா.. அதுக்காக நம்மள ஊருக்கு முந்தி கிளம்ப சொல்லுவாங்க.. கொஞ்சம் லேட் டா ஆனாலும் ..போற வழியெல்லாம் சீக்கிரம் சீக்கிரம் னு உசுற வாங்குவாங்க.. ஜாலியா போனோமா படம் பாத்தோமான்னு இருக்காதுடா.. "

"அவங்க சொல்ற பாயின்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான். நீ தான் தேவையில்லாம ரியாக்ட் பண்ற. நான் டிக்கட் புக் பன்றேன், நீ அவங்கள கூட்டிட்டு வர வழிய மட்டும் பாரு.. " டோக் ஃபோனை கட் பண்ணிட்டான். 

'சுஜா..சுஜா..எங்க இருக்க.. மோகன் குடும்பத்தோட படத்துக்கு போறானாம். நம்மையும் கூப்பிட்டான் நான் ஒக்கே'ன்னு சொல்லிட்டேன்.

"என்ன படம்? ரிவியூ படிக்காம நான் படத்துக்கு வரமாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா..?  ஆமா.. ஏந்த தியேட்டர்? சவுண்டு சிஸ்டம் எல்லாம் சரியா இருக்குமா?.  ஏசி’ய பாதியில் நிறுத்தாம இருப்பாங்களா..? கண்ட தியேட்டரில் நான் சினிமா பாக்க மாட்டேன்.'

அடக்கடவுளே!…இந்த ரிவியூ, ஏசி, சவுண்டு பத்தியெல்லாம் அவன்’ட்ட சொல்லலியே… அய்யோ... முதல்ல ஃபோனை போடுறா என் சிப்சு…..இல்லனா உனக்கு ஊதிடுவாங்கடா சங்கு......

பீட்டர் தாத்ஸ்; Conditions differ in life. Some extent it makes sense, some extent it annoys. 

கொல்கத்தா நாட்கள்

ஒரு டாக்ஸியில் பயணம் செய்துக்கிட்டே, ஹவுரா மேம்பாலத்தை Top, Side னு ஏதோ ஒரு angle லில் காட்டனும், இல்லைன்னா drone ஐ பறக்கவிட்டு ஹவுரா மேம்பாலத்தை இந்தப்பத்திலிருந்து அந்தப்பக்கமா ஒரு தரம் காட்டிட்டா ..நாம் கொல்கத்தாவில் இருக்கோம்னு அர்த்தம்.

ஆனால் கொல்கத்தா நகரம் இது மட்டுமல்ல, பழமை மிகுந்த, பெருமை வாய்ந்த ,இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் முதன்மையான, அதிக வரலாற்று சிறப்பு பெற்ற ஒரு நகரம்.

முதல் முதலாக ஹவுரா ரயில் நிலையத்திற்கு போனது, டார்ஜிலிங் சுற்றுப்பயணத்தின் போது தான்.  சென்னை-ஹவுரா , ஹவுரா-நியூஜல்பாய்குரி, அங்கிருந்து டார்ஜலிங் செல்ல ரயில் பிடிக்கனும். ஹவுரா ரயில் நிலையத்தில் மாடியில் பயணிகள் தங்குமிடத்தில் தங்கி குளித்து,  சீக்கியர் ஒருவர், குளியலறை கண்ணாடியில் ஒரு முழு காட்டன் புடவையை தலையில் முண்டாசாக லாகவமாக கட்டிக் கொண்டிருந்ததை வியந்து பார்த்தது.. நீங்காது நினைவு. 

 ஆனால் இப்போ கொல்கத்தா பயணம் என்பது, அங்கேயே வேலை, சில வருடங்கள் அங்கேயே தங்கியிருக்க போறோம். கொஞ்சம் பயம், பதட்டமென இருந்ததென்னவோ உண்மை. சென்னையிலிருந்து ரொம்ப தொலைவு, அம்மாவின் எண்ணம் சுமையாக இருந்த போதிலும், கொல்கத்தா செல்வதறிந்து அம்மாவின் உயிர் முன்னமே பிரிந்து,அவரின் இறுதி சடங்குகளை சரிவர செய்து முடித்துவிட்ட திருப்தியோடு கிளம்பினேன்.

ஹவுராவில் ரயிலை விட்டு இறங்கினோம், அலுவகத்திலிருந்து சுப்ரியா என்ற நபர் (ஆண்) வந்திருந்தார், கார் ரயில் நிலையத்தின் உள்ளேயே அனுமதிக்கப்படுகிறது, சுமைகளை தூக்கிக்கொண்டு ரயில் நிலைய முகப்புவரை நடக்கவேண்டி இல்லாமல், காரில் ஏறிக்கொண்டோம். ஹவுரா ரயில் நிலையம் முன்னைப்போல இல்லாமல் கொஞ்சம் சுத்தமாக இருந்தது.

சுப்ரியா போகிற வழியில் எதைஎதையோ க்காட்டிக்கொண்டே போனார். பெங்காலி'கள்  மெதுவாக ஆரம்பித்து அதிகமாக பேசக்கூடியவர்கள்.  அதிக சத்தம், அதிக அசுத்தம், அதிக கூட்ட நெரிசல் என எல்லோருக்கும் தெரிந்த கொல்கத்தாவின் வாழ்க்கையில், அதி மேதாவிகளாக ஒவ்வொரு பெங்காலியும் தன்னை நினைத்துக்கொண்டு நடந்துக்கொள்வது பேசுவது போன்றவை எனக்கு சற்றே ஆற்றாமையை கொடுத்தது.ஆனால் அவர்களுக்கு நம்மேல் அதிக மரியாதை இருப்பது என்னவோ உண்மை. தவிர, நாமெல்லோரும் சைவர்கள் (Vegetarians) என நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்களின் வாழ்க்கையில் சில பல முக்கிய நிகழ்வுகள் அங்கே நடந்தன. முதல் கார் அங்கே வாங்கினோம். மேற்கு வங்க பதிவில் கார் இருந்ததால், அநேகமாக சுற்றியுள்ள பல ஊர்களை எளிதாக பார்த்துவந்தோம். அதிகமாக கிராமங்கள், வீட்டுக்கு ஒரு குளம், தென்னை, வாழை, பலா, மாங்காய், தேக்கு என மரங்கள், இமயத்திலிருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகளும், கிளை நதிகளும், வாய்க்கால்களுமாக வருடத்தின் 365 நாட்களும் தண்ணீருக்கு பஞ்சமில்லை. எல்லையே தெரியாத

ஹூக்ஹ்லி நதியின் அத்தனை தண்ணீரும் கடலில் கலக்கும் கொடுமை.  தண்ணீரீன் அளவு, வரத்து போன்ற காரணங்களால் நதிகளின் நடுவே மேற்கு வங்கத்தில் அணைகள் கட்ட வாய்ப்பே இல்லாத நிலை, ஒருவேளை கட்டினால் மாநிலமே நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம். அதனால் நதி தன்னோடு சேர்த்து மொத்த நீரையும் கடலில் கொண்டு சேர்த்துவிடுகிறது.

எப்படியாவது கடலோர மாநிலங்கள் வழியாகவே கங்கையை வளைத்து கொண்டு வந்தால், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடுன்னு ஓஹோ ன்னு செழிக்கும். ஆனால் நடக்கும் மத்திய ஆட்சியில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடமாட்டார்கள் என்பதால், இதைப்பற்றி யோசிப்பதே அபத்தம். இந்தியா எத்தியோப்பியாவை போல மாறும் காலம் கண்முன்னே தெரிகிறது. 

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறேன்.. தொடர்ந்து அடுத்த பதிவில் கொல்கத்தா நாட்கள் தொடரும் ...

ஐயாறப்பர் கோயில் -திருவையாறு

திருவையாறு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, தியாகராஜ ஆராதனை விழாவும் அனைத்து இசை கலைஞர்களும் ஒரே இடத்தில் நடத்தும் இசை நிகழ்ச்சிதான்.

இதைத்தாண்டி, இங்கே வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான ஐயாறப்பர் சிவன் கோயில் இருக்கிறது.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தருமசம்வர்த்தினி. 

இக்கோயிலில் நுழைந்துவுடன் அதன் பிரம்மாண்டம் கவனத்தை ஈர்த்தது. திருவாயாறில் இப்படியொரு ஒரு கோயிலா என்ற ஆச்சரியம் நீங்காது கவனித்தபோது தான் அத்தனைப்பெரிய கோயிலை மிக மிக சுத்தமாக பராமரித்து வருவதையும் பார்க்க முடிந்தது. 

இக்கோயிலைப்பற்றி ஒன்றும் தெரியாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றாதாலேயே இதன் பிரம்மாண்டம் பிரம்மிக்க வைத்தது. திருவாரூர் கோயிலைவிடவும் பெரியக்கோயில், மூன்று பிரகாரங்கள். இக்கோயில் தனுசு ராசி அன்பர்களுக்கு உகந்தக்கோயில் என்பதை சென்றுவந்தப்பிறகு தெரிந்துக்கொண்டேன்.  

இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இதன் மூன்றாவது பிரகாரமான சப்தஒலி பிரகாரம். சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வந்தபோது, சப்தஒலி பிரகாரத்தின் பலகையை பார்த்தோம். ஆனால் இது மூன்றாவது பிரகாரம் என்பதால் இதில் யாருமே சுற்றவில்லை. இருப்பினும் பலகையைப்பார்த்த ஒரு ஆர்வத்தில் நானும் அவரும் மட்டும் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தோம்.

சில அடிதூரம் நடக்கும் போதே அந்த பிரகாரம் மற்ற கோயில்களின் பிரகாரம் போல இல்லாது இரண்டுப்பக்கமும் மிக உயர்ந்த மதில் சுவர்களை கொண்டதாக இருந்தது. யாருமில்லாததால் ரொம்பவே அமைதியாக ஏதோ ஒரு அகன்ற குகைக்குள் செல்லும் அனுபவமாக இருந்தது.  சப்தஒலி என்பது எங்கு எப்போது வந்து நம்மை பயமுறுத்தும் என்ற எதிர்ப்பார்ப்போடு அன்னாந்து மதில் சுவர்களின் உயரத்தைக்கண்டு அசந்துப்போய் நடந்துக்கொண்டே போகும் போது இடது பிரகாரம் முடியும் இடத்தில், இங்கு நின்று வடக்கு நோக்கி "ஐயாறா" என்று குரல் எழுப்பினால் 7 முறை எதிரொலிக்கும் என்ற பலகையை பார்த்தவுடன் எது வடக்கு என்ற குழப்பம் வந்து என் கணவர் வலதுப்பக்கம் திரும்பி "ஐயாறா" என்று கூப்பிட.. அட.. ஆமாம்.. அக்குரல் 5 முறை எதிரொளித்தது, மீதமிருந்த இரண்டு ஒலி மிக மெல்லியதாக இருந்திருக்கிலாம், ஒருவேளை மிகநுட்பமான ரெக்கார்ட்கள் கொண்டு பதிவிட்டால் 7 முறை வெவ்வேறு ஒலியின் நீளத்தில் நமக்கு கேட்கக்கிடைக்கும். எதிரொலி என்பதைத்தாண்டி வெவ்வேறூ ஒலிவடிவில் கேட்பது வியப்பே. இதன் முக்கிய க்காரணம் இக்கோயிலின் கட்டிட அமைப்பே. 

அவர் வடக்கு நோக்கி சப்தமிட, நான் அவரை நோக்கி அதாவது தெற்கு நோக்கி சப்தமிட அதே ஒலியை வடக்கிலிருந்து கேட்க முடிந்தது. இது ரொம்பவே ஆச்சரியம் தான், இதையே இதன்பிறகு பார்த்த கோயில்களில் முயற்ச்சி செய்து ஒரு சத்தமும் வராதது ஏமாற்றமே.அம்பாள் சன்னிதிக்கு ஒரு 1/2 கிமீ நடந்து செல்ல வேண்டியிருந்தது. அத்தனைப்பெரிய கோயில். 

இந்த கோயிலுக்கு செல்ல திட்டமிடும் போது திருவையாறை சுற்றி 5 (இக்கோயிலை சேர்த்து 6) சிவத்தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுக்கொள்ளலாம். எல்லாமே 2-15 கிமீ ல் இருக்கிறது. 

புஷ்பவனேஸ்வரர் கோயில் 

திருப்பூந்துருத்தி

 

நெய்யாடியப்பர் கோயில் 

தில்லைஸ்தானம் 

 

 

 


 

ஐயாறப்பர் கோயில்

திருவையாறு 

 

ஆபத்சகாயேஸ்வரர் கோயில் 

திருப்பழனம்

 

சோற்றுத்துறை நாதர் கோயில் 

திருச்சோற்றுத்துறை

 

திருவேதிகுடி

திருவேதிகுடி 

 

பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் 

திருக்கண்டியூர்

 

டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு கோயிலுக்கு செல்ல திட்டமிட்டாலும், போகும் வழியில் உள்ள அத்தனைக்கோயில்களையும் கூகுளில் தேடி சென்றுப்பார்க்கலாம். கண்டிப்பாக 3-5 கிமீ ஒரு கோயில் இருக்கும். திரு' என்று ஆரம்பிக்கும் ஊர்களில் நிச்சயம் பெரிய வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி கூகுளில் தேடி தேடியே திருவாரூரை சுற்றியுள்ள பலக்கோயில்களை நாங்கள் தரிசித்துவருகிறோம்.