Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

நண்பர்

அது ஒரு மாலை வேளை, ஒரு கூட்டுக்குடும்பத்து வீடு போல சத்தத்தோடு இருக்கிறது. ஆனால் என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை.

ஒரு ஹால், வராண்டா, வாசல், வாசலுக்கும் தெருவிற்கும் இடையே நடக்க சிமெண்ட்டால் போடப்பட்ட பாதை, பாதையின் இருப்பக்கமும் தோட்டம் என ஒரு சாதாரண விட்டிற்கு தேவையான அனைத்தும் கண்ணில் பட்டது.

ஏதோ கை வேலையாக இருக்கிறேன்.. யாரோ வரும் சத்தம் கேட்டு வாசலை எட்டிப்பார்க்கிறேன். நண்பரின் நண்பர் வருகிறார், எனக்கு அவரைத்தெரியும்….ஆனால் எனக்கு நண்பரில்லை, நான் பேசியதில்லை.

வந்த வேகத்தில், சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வரான் பாருங்க, சாப்பிட எதாது கொடுத்து தூங்க வைங்க’ ன்னு சொல்றார், அவர் வழியை மறைப்பதால் , எட்டிப்பார்க்கிறேன்.

ஒரு கருப்பு நிற நாய்.. பழுப்பு நிறத்தில் குட்டி நாய் இரண்டும் கழுத்தில் பெல்ட்டில் கட்டி, சங்கிலி கோர்க்கப்பட்டு அந்த சங்கிலி சங்கரின் கையில் இருக்க நடந்து வருகிறார். நடையில் விருவிருப்பு இல்லை…எதோ ஒரு சோம்பல், தளர்ச்சி தெரிகிறது. முகமும் வாட்டமாய்...

என்னிடம் பேசிய நண்பர், நான் பார்க்க வழிவிட்டு வீட்டுனுள் சென்றுவிடுகிறார்.

நான் சங்கரை பார்க்க அவரும் என்னைப்பார்க்கிறார். ஏதும் பேசவில்லை.. ஆனால் கண்கள் மட்டும் பேசிக்கொள்கின்றன.. நெருங்கும் போது, என் கையில் நாய்களை கட்டிய சையினை கொடுத்துவிட்டு, வராண்டாவில் போடப்பட்டிருக்கும் ஒரு நாற்காலியில் போய் அக்காடான்னு உட்கார்ந்துக்கொள்கிறார். நாயை நான் கொண்டுப்போய் கட்ட வேண்டும் - இதுதான் கண்ணால் பேசி புரிந்துக்கொண்டது….

அவர் சென்று உட்காருவதை ப்பார்த்தவாரே நானும் நாய்களை கொண்டுக்கட்டுகிறேன். என் கவனம் முழுக்க நண்பரின் மேல் இருக்கிறது..ஏன் என்ன ஆச்சி,முன் வந்த இவரின் இன்னொரு நண்பருக்கு சொல்லியிருக்கலாம். எனக்கு எதும் தெரியவில்லை, அவர் சொல்லவும் மாட்டார் னு நான் கேட்கவும் நினைக்கல.

ஆனால் ஏதோ சரியில்லை எனமட்டும் தெரிந்தது.

கையைக்கழுவிக்கொண்டு  (கொரோனா எஃபெக்ட் மட்டுமில்ல, நாயை கட்டியதாலும்) இவரை நெருங்கி, 'டீ வேணுமா இல்ல் காஃபியா ' ன்னு கேக்கறேன்.

டீ … என்று சொல்லும் போதும் இருவரின் கண்களும் சந்திக்கின்றன.  எனக்கு புரியுது, அவரும் எனக்குப்புரியுமென்று நினைப்பதை உணர்கிறேன்.

சமையலறை சென்று இரண்டு அடுப்பு பற்ற வைத்து, ஒன்னில் டீ, இன்னொன்னில் காஃபி செய்து , இரண்டு கப்புகளில் ஒன்றில் டீ, ஒன்றில் காப்பின்னு எடுத்துட்டுப் போய் டீ கப்பை தரேன்.

கப்பை வாங்கி எதிரில் டீபாயில் வைத்துவிட்டி, என்னைப்பார்த்து, 'எனக்கு காஃபி வேணும்' என்கிறார். இதைத்தான் கண்ணில் பார்த்துட்டு போனேனேன்னு மையிண்ட் வாய்ஸில் நினைத்து இன்னொரு கையில் இருந்த கப்பை கொடுக்கிறேன்.

ஆச்சிரியப்படல… வாங்கிக்குடிக்கிறார்.  ஆனால் மனதில் இருக்கும் அழுத்தம் முகத்தில் தெரிகிறது. அவரின் நண்பர் சொல்லியது போல, சங்கருக்கு தேவை நல்ல தூக்கம்னு எனக்கும் புரிந்தது.

காஃபி குடிக்கும் வரை எதிரில் உட்கார்ந்து அவர் வேணாம் என்று வைத்த டீ யை நான் குடிக்கிறேன்.

முதல் இரண்டு சீனில் இருந்த அவரின் இன்னொரு நண்பர் என்ன ஆனார்னு தெரியல.. அவர் திரும்ப வரல..

காஃபி கோப்பையை வைத்ததும்… படுக்கறீங்களா…. ன்னு கேக்கறேன்.

அதுக்கும் பதில் இல்லை, எழுந்து படுக்கை அறை நோக்கி  செல்கிறார்.  நான் தொடர்வதை உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

அறைக்குள் செல்லும் வரை பின்னால் செல்கிறேன்..  உள்ளே சென்றதும் அவரை பக்கவாட்டிலிருந்து அன்போடு அணைத்து, அந்த அணைப்பில் எதுவானாலும் பாத்துக்கலாம், நாங்கள் இருக்கிறோம் னு சொல்லாமல் சொல்ல, அழைத்து சென்று படுக்க வைத்து,ஏசியை ஆன் செய்து, போர்வை போத்திவிட்டு, சன்னல் ஸ்கீர்ன் எல்லாம் மூடி இருட்டாக இருக்கிறதா என ஊர்ஜிதம் செய்துக்கொண்டு , கதவை சாத்திக்கொண்டு வெளிவருகிறேன்.

நாயில் ஒன்று குலைக்கும் சத்தம் கேட்கிறது.. எழுந்துக்கொண்டேன்…

 

நண்பரை கடைசியாக நேரில் சந்தித்தது 2009 ல்.

அதன் பிறகு இப்பவும் தொடர்பில் இருந்தாலும் மெயில் இல்லனா வாட்சப்..அதுவும் தொடர்ந்து இல்ல. குறிப்பா இந்த கனவு வந்த அன்றோ முன்னமோ அவரிடம் நான் எதும் பேசல..

அவங்க வீட்டில் நாய் இருக்குன்னு எனக்கு தெரியாது. ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டு ரீகால் செய்தால், ஆர்குட் டில் அவர் ஃபோட்டோ பகிர்ந்ததாக நினைவு..ஆனால் அதுவும் சரியான்னு எனக்கு நினைவில்லை.

கனவுக்கு பிறகு தொடர்பு கொண்டு கேட்டேன்.. ஆமாம் நாய் 1 வீட்டில் இருக்குன்னு சொன்னாரு.

ஆனால் கனவில் வந்த வீடு….நான் இருக்குமிடம் போல இருந்தது.

அவருக்கு முன்னால் வந்த நண்பரையும் தெரியும்..நான் பேசியதேயில்லை.

இதெல்லாம் எந்தமாதிரியான நினைவுகளில் சேர்த்திக்கை என்பது தெரியவில்லை…

எப்படியோ.. நண்பரின் நலம் விசாரித்து…நலமுடன் இருக்கிறார் என்று பதில் கிடைத்ததும் நிம்மதியாய் இருந்தது.

 

கனவே.... தயவுசெய்து வெள்ளி சனிக் கிழமைகளில் வந்து தொலைக்கவும், எனக்கு உன்னை நினைவு வச்சி வார இறுதியில் எழுதமுடியல.. ரீகால் செய்துட்டே இருக்க வேண்டியிருக்கு….தயவுக்காட்டு… அடுத்த நாள் நினைவு படுத்தி எழுதறதே தலைவலி, இதுல இப்படி 2-3 நாள் நினைவு வச்சிக்கறது இன்னும் பெரிய  தலைவலியா இருக்குது..

----------------------------

அணில்குட்டி ; அம்மணி, நண்பரிடம் கனவு கண்டேன் னு சொன்னவுடனே அவரு சிரிப்பு அடக்க முடியாம சிரிச்சாரு..இதுல அதை எழுதி வேற வைக்கறாங்க...  என்னத்த பெரிசா இதுல இருக்குன்னு எழுதி வைக்கறாங்கன்னு தான் தெரியல.

பீட்டர் தாத்ஸ்; I wonder how I can talk through eyes in my dreams.

ஒரு ரவுடியின் குடும்பம்

எனக்கு தூக்கம் சரியாக இல்லையென முந்தைய இரவு, 'விடியற்காலை 5.30 மணிக்கு எழுந்துக்ககூடாது, ஜிம் போகக்கூடாது' என அதட்டி மிரட்டி தூங்க கட்டளையிட்டிருந்தார் வூட்டுக்காரர்.

ஒருநாள் அவருக்கும், அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்காட்ட நல்லாவே தூங்கினேன். எழுந்த போது மணி காலை 8.30, கூடவே கனவில் கண்ட ரவுடியின் குடும்பமும் எழுந்து வந்தது.

இந்தமாதிரியான கனவு எனக்கு எப்படி ஏன் வந்தது என பிடிபடல. சினிமா எதும் பார்க்கல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பார்த்து மாதக்கணக்காகிறது.  ஆகவே அந்த பாதிப்புகளும் இல்லை. கனவிலிருந்து வெளிவந்தபிறகு இதை எழுதும் இந்த நொடி வரை அங்கு நான் ஏன் இருந்தேன், என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.

எப்போதும் போல கனவை மறக்கும் முன், குடுகுடுவென அவரிடம் சொல்ல ஓடினேன். வாழ்க்கைப்பட்டவர் தலையெழுத்து கேட்டுத்தானே ஆகனும். கனவை சொல்ல ஆரம்பிக்கும் முன்னமே 'அங்கே நான் எப்படி போனேன், எதுக்கு போனேன்னு கேக்கப்பிடாது..ஏன்னா எனக்கும் தெரியாது..' ன்னு கன்டிஷன் போட்டுவிட்டு ஆரம்பித்தேன்.

கனவுக்குள் செல்வோம். பிஜிஎம் சேர்த்துக்கொண்டு படிக்க ஆரம்பிங்க...

பகலா இரவா ன்னு தெரியாத ஒரு சூழல், பெரிய வீடு... உள்ளே இருக்கிறேன்.  என்னை சுற்றி அழகான ஒரு குடும்பம்.

'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது'

இந்த பாடலில் வரும் அஜித் போல, அங்கிருப்போருக்கு நானிருப்பது ஒரு பொருட்டாகவே இல்லை, நானும் அவர்களை கவனிக்கிறேனே ஒழிய எதும் பேசவில்லை.  பெரிய குடும்பம். குடும்பத்தலைவர் தமிழ் திரைப்படங்களில்
காட்டுவது போல ஒரு ரவுடியாக இருந்து பெரிய அரசியல் வாதியாக மாறியிருக்கலாம், அல்லது வெறும் ரவுடியாகவும் இருக்கலாம்.. அச்சு அசலாக அமைச்சர் ஜெயக்குமார் சாயல், அதே வயது. கொஞ்சம் உயரம் அதிகம், அதே தலை, சொட்டை பளபளன்னு மின்னுது. இந்த மின்னவதை மட்டும் நீங்க நினைவில் வச்சிக்கனும், கடைசியில் திரும்ப வரும். 

அவருடைய மனைவி நல்ல லட்சணம். அந்த வயதிலும்  சுறுசுறுப்பாக  சிரித்த முகத்தோடு வளம் வருகிறார்,  இரண்டு அழகான மகள்கள்,  ஒருவர் மருத்துவர், திருமணம் ஆகி அவருடைய குழுந்தைகளுடன் அதே வீட்டில் இருக்கிறார். ஒரு அறையில் க்ளீனிக் வைத்து, சன்னல் வழியாகவே அக்கம் பக்கம் இருக்கும் ஏழைகளுக்கு இலவசமாக மருந்து மாத்திரை கொடுத்து சேவை செய்துவருகிறார்.  இன்னொரு மகள் கல்லூரியில் படிப்பதாக கருதுகிறேன். அதுபோலவே அவருக்கு வளர்ந்த திருமணமான மகன்களும் இருப்பதாக யூகிக்கிறேன்,அவர்களை பார்க்கவில்லை. பேரக்குழந்தைகளும் அவ்வப்போது வீட்டில் ஓடி ஆடி விளையாடுகின்றனர்.

இவர்களை தவிர வீட்டினுள் இவருக்கு பாதுகாப்பாக முடிக்களைந்து, தொப்பையோடு, கட்டுமஸ்தான மொட்டை தலை உட்பட மூன்று அடியாட்கள் இருக்கின்றனர்.

நம்ம சொட்டத்தலை, அடியாட்கள்  இருக்கும் தெம்பில் சோபாவில் ரிலாக்ஸ் ஆக உக்காந்து வடிவேலு காமெடி பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்.  வெளியில் ஏதோ சத்தம் கேட்க, சன்னல் அருகில் சென்று பார்க்கிறேன், இரண்டு வெள்ளை நிற போலேரோ வேகமாக வருகிறது, உள்ளிருப்போர் கண்ணாடியை இறக்கிவிட்டு பெரிய பெரிய கத்தி, கம்புகளை சுற்றிவாரே கத்திக்கொண்டு வருகின்றனர்.

அடியாள் ஒருவரும் என்னோடு சேர்ந்து சன்னல் வழியே ப்பார்க்கிறார். என்னன்னு நான் கேக்க, எனக்கு பதில் சொல்ல நேரமில்லாமல், 'கதவு, சன்னல் எல்லாம் சாத்துங்க ' ன்னு கத்திக்கொண்டே  நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த சன்னல் சேர்த்து ஒவ்வொன்றாக சாத்துகிறார். நம்ம சொட்டத்தலையும் விபரீதம் தெரிந்து அவர் பங்குக்கு ஓடி சென்று சன்னல்களை சாத்துகிறார்.  மருத்துவம் பார்க்கும் பெண் அறைக்கு அடியாள் ஓட , பின்னால் நானும் பரபரக்க செல்கிறேன். முன்னமே அங்கே ஒரு சுருட்டை முடி அடியாள் நிற்கிறான். ஆனால் மருந்துக்கொடுக்கும் சன்னலை மூடவில்லை. உள்ளே சென்றவன் மூட முயல, டாக்டரம்மா 'ஏய்..என்ன செய்யற...வெளியில் பேஷன்ட் நிக்கறாங்க நீ பாட்டுக்கும் மூடற.. போ இங்கிருந்து ' என கருமமே கண்ணாக நிமிர்ந்துக்கூட பார்க்காமல் கத்த, உள்ளே போனவன் அதே வேகத்தில் வெளியே போயிடறான்.

எனக்கு மட்டும் பதட்டம் அதிகமாகி... என்ன இந்தம்மா ஆபத்தை விலைக்கு வாங்க காத்திருக்கே... இதுக்கு என்ன ஆகுமோன்னு நினைக்கும் போதே இரண்டு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடியவாரே உள்ளே வந்து ஒரு ரவுண்டுப்போட்டு கட்டிலில் எகிறி குதித்து வெளியே ஓடுகின்றனர். என் கவனமோ அந்த அறைக்குள்ளேயே இருக்கும்  அடியாளிடம் சென்றது..'அடேய் பத்தரமாய் அந்தம்மாவை பாத்துக்குவியா?? ' என்பது ப்போல கண்ணாலேயே கேட்க... அவனும் புரிந்து லேசாய் பெருமையாய் 'அதுக்குத்தானே என்னை இங்கவே நிக்க வச்சி இருக்காங்க ' வென கண்ணாலேயே பதில் சொல்றான்.

அந்தம்மா சன்னல் அருகில் அமைக்கப்பட்டுள்ள டேபிலில் உக்காந்து சீட்டில் மருந்து விபரங்கள் எழுதி, மருந்தும் எடுத்துக்கொடுத்துட்டு இருக்கு.. அதுக்கு வேற்று சிந்தினையோ சிதறலோயில்லை. (எல்லாரும் நம்மை மாதிரியேவா இருப்பாங்க??)

 அந்தம்மா வேலை செய்வதை பார்த்தவாரே வெளியில் வரேன். பளீச் சொட்டை & மற்ற இரண்டு அடியாட்களின் முகத்திலும் ஒரு நிம்மதி தெரிய.. சரி வந்தவங்க போயிட்டாங்க போலவே ன்னு ஒரு அடியாளிடம் கேட்க.. 'தட்டிப்பாத்துட்டு போயிட்டானுங்க.. இனிமே பயமில்ல..இன்னைய கோட்டா ஓவர்.. இனி வரமாட்டானுங்க.. '

ஓ' ன்னு வியப்போடு பார்க்கும் போதே... பளீச் சொட்டை கதவை திறந்துட்டு வெளியில் போறாரு. 'எங்கையா போறார்' ன்னு கேட்க முன்ன.. சன்னல் வழியா பார்க்கிறேன். அம்மாடி எவ்ளாம் பெரிய குளம்.?? குளம்னு சொல்லமுடியாது ஜெனிவா ஏரி கணக்கா இருக்கு. அங்கங்க சின்ன சின்ன படகுகள்,  இவர் வீட்டு வாசலில் ஒரு பக்கமா படிக்கட்டுகள் நேராக இந்த ஏரிக்கு படித்துரைப்போல அமைந்திருக்கு..  நெருக்கமா படகுகளும் கட்டப்பட்டு இருக்கு.  இதையெல்லாம் நான் கவனித்துவிட்டு நம்ம பளீச் சொட்டை எங்கன்னு தேடும் போது கண்ணுக்கு எட்டிய தொலைவில் உல்லாசமாக நீந்தி மிதந்து குளிச்சிட்டு இருக்கார்.

அடக்கடவுளே  இத்தனை ஆபத்து இருக்கப்ப , இந்த ஆளு என்ன இப்படி
குளிச்சிட்டு இருக்காரு?? ன்னு நினைச்சபடியே  ரூம்'மில் லுக் விட்ட மாதிரியே இங்க இருக்க அடியாளை லுக் விட.. அவர் என்னை கவனிக்காமல் சன்னல் வழியே பார்க்கும் போதே அவர் முகத்தில் கலவரம் தெரிய.. நானும் திரும்பி பார்க்கிறேன்.

குளத்தில் ஆங்காங்கே தண்ணீருக்குள்ளிருந்து அருவாளோடு ஆட்கள் வெளிவர சொட்டை பாஞ்சி வருசையாய் நிறுத்தி வைத்த படகில் படுத்து தன்னை மறைத்துக்கொள்ள...  எதிராளிங்க.. தள்ளியிருந்த படகிலிருந்து எழுந்து நின்று சொட்டையை தேட.. நம்ம சொட்டை படுத்தவாரே பிரண்டு பிரண்டு நெருக்கமான நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் மாறிக்கொண்டே வருகிறார். அவரோடு முன்னும் பின்னுமாக 4-5 பேர் ஒரே மாதிரி உருண்டு வருகிறார்கள்.  [ஏது ஆட்கள்னு சின்னப்புள்ளத்தனமா கேட்கப்பிடாது. உள்ளவே 3 பேர் இருக்காங்களே வெளிய இருக்க மாட்டாங்களா? கனவு கண்ட எனக்கே இந்தக்கேள்வி வரல. சும்மா உக்காந்து படிக்கற உங்களுக்கு வரலாமா?]

இப்படி படகுகளில் அமைச்சர் ஜெயகுமார் வயதுக்காரர் உருண்டால் என்னாகும்?... அதே..கடைசி படகுக்கு முதல் படகில் கழுத்து சுளுக்கி..வலி தாங்காமல் கழத்தை பிடிச்சிக்கிட்டு லேசா நிமிரும் போதுதான்.. அவரோட அந்த மின்னும் சொட்டைத்தலை பளீச் பளீச் ன்னு லைட்டு மாதிரி மின்ன..[நோட் பண்ண சொன்னேனில்ல இதுக்கு தான், எனக்குமே அப்பதான் அவர் எங்க இருக்கார்னு தெரிஞ்சிது.. ஹிஹி...] ..மின்னலில் சொட்ட எங்க இருக்கார்ன்னு தெரியவர... எதிராளிங்க பாய்ந்து தாக்க ஆரம்பிக்க.. இவரை காப்பாற்ற அடியாட்கள் முன்னே பாய்ந்து அடிவாங்க..  சொட்ட சொட்ட நனைந்த சொட்டை சந்தில் புகுந்து துண்டக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவர.. ஒருவித பதட்டத்தோடு வாய்ப்பொலந்து பார்த்துக்கிட்டு இருந்த அடியாளை..'யோவ்..அந்த ஆளு ஓடிவராரு ப்பாரு ஓடு ஓடு கதவை திற... அவனுங்கக்கிட்ட சிக்கிட போறாருன்னு நான் கத்த...  அவன் ஓடி கதவை திறக்க.. ஜஸ்ட் மிஸ்ஸிங் ல..சொட்டை தப்பிச்சி உள்ளே வந்து குனிந்து முட்டியை பிடிச்சிட்டு மூச்சு வாங்குகிறார்.

இப்பதான் அடியாளிடம் நான் கேக்கறேன். 'ஆமா.. வீட்டுக்குள்ள வந்துட்டா விட்டுடுவாங்களா...கதவ சன்னல உடைச்சிட்டு உள்ள வரமாட்டாங்களா??'

அடியாள்... தெனாவட்டாய் சிரித்தபடி 'முடியாதே.. நம்ம வீட்டுக்கு மேல் ஏ ஜி ச்ர்ச் இருக்கே.. கட்டடத்தில் கை வைக்கவே மாட்டாங்க.. மத கலவரமாகிடுமில்ல .'... ன்னு சொல்ல...

'என்னது ஏ ஜி ச்ர்ச் ஆ'..ன்னு அண்ணாந்து மேல பார்க்க..எனக்கு தெரிஞ்சது என்னவோ..அந்தவீட்டின் சீலிங் தான்.... 

சீலீங் பார்த்துட்டே முழிச்சிட்டேன்...

**************

வூட்டுக்கார்... 'செமயா இருக்குடி..எழுதி வை.. அப்படியே டெவலப் செய்து பெருசாக்கு.... ஆமா நீ ஏன் அங்க போன.. ? ..அந்த வீட்டுல உனக்கென்ன வேல?'" ... நான் பதில் சொல்லாமல் முறைக்க...  'ஓ.... நீ..இந்த கதைப்பார்த்து சொல்ல போய் இருக்க போல..' ன்னு அவரே முடிச்சிட்டார்.

கவுதம் மேனன் படத்தில், ஹீரோ ஒருபக்கம் பின்னாடி கதை சொல்லிட்டே இருப்பாரே..அதுமாதிரின்னு வச்சிக்கலாம்.. ஆனா நானு இந்த கதைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு ஆள்.  இந்த ஏ ஜி ச்ர்ச் எல்லாம் என் வாழ்க்கையில் ஒருதரம் கூட சொன்னது இல்ல. ச்ர்ச் னு தெரியுமே தவிர ஏஜி ச்ர்ச் எல்லாம் வேற லெவல்.

பீட்டர் தாத்ஸ் ;  I always get  long dreams. It is always contain a solid story with different characters, clear tone, body languages, silent speeches, with people faces, dialogs , dress colour etc., - Kavitha

என்னாலேயே முடியல..

என் கணவர், என்னுடைய கனவுகளை எழுதிவைக்க சொன்னக்காரணமே, என் கனவுகள் கதைகளாக இருப்பது மட்டுமல்ல, அதை அவரிடம் சொல்லும் விதமே!.

ஒரு தயாரிப்பாளரிடம், அறிமுக இயக்குனர் கதை சொல்வதைப்போல இருக்குமென நினைக்கிறேன். அவர் எதிரில், அந்தக்கனவு நிஜத்தில் நடந்தால் எப்படியிருக்குமோ அப்படி சொல்லுவேன். பின்னணி இசை மட்டுமே இருக்காது.

ஓவராக கற்பனை செய்துக்கொள்வதில் என்னை வெல்ல என்னாலேயே முடியாதுதான். இருந்தாலும், நேற்று வந்த கனவை நினைத்து சிரிப்பதா அழுவதா.. இல்லை ஏன் இப்படியெல்லாம் எனக்கு கனவு வந்து தொலைக்குதுன்னு நினைச்சி ஆச்சரியப்படுவதான்னு தெரியல...

தினப்படி எத்தனையோ நிகழ்வுகள் நடக்குது..

ஓவியா சென்றதிலிருந்து பிக்பாஸ் பாதிப்பு இல்லை.... 

அதிமுக வால் பிரேக்கிங் நியூஸ் அடிக்கடி வந்து அந்த சத்தமும் பழகிப்போச்சி

ரஜினி அரசியல் - பெருசா யோசிக்கல..

கமல் டிவிட்டர் - யோசிச்சாலும் ஒன்னும் புரியப்போறதில்ல..

என் சொந்தப்பிரச்சனைகள்.. அது ஏகத்துக்கும் இருக்கு...

என் கணவரின் அலுவலகப்பிரச்சனை, அதை அவர் எப்படிக்கடக்கப்போகிறார் என்ற கவலை...

வெளி மாநிலத்தில் இருப்பதால், இங்கு சந்திக்கும் மனிதர்கள்..னு

என்னென்னமோ தினப்படி நடக்குது.. இதுல..நேற்று எனக்கு வந்த கனவு இருக்கே.... படிங்க..நீங்களும் கடுப்பாக சான்ஸ் இருக்கு...

காலையில் எழுந்துவரும் போது கனவு நினைவில் இல்லைதான். ஆனால் பல் விளக்கும் போது நினைவுக்கு வர, மறந்துவிடுவேனோன்னு , பிரஷ்ஷை வாயிலிருந்து எடுத்துவிட்டு அவரை அழைத்து கனவை சொன்னேன்.

"இன்னைக்கு எனக்கு ரொம்ப ஸ்ட்ரேன்ஜ்ஜா ஒரு கனவு வந்துச்சிப்பா..."

புதுசா என்ன..ங்கற மாதிரி லுக்கு விட்டுட்டு என் முகத்தையே கவனிச்சார்..

"காடை இருக்கில்ல..."

"ஆங்...??????"

"காடை ப்பா காடை... பறவை..கோழிமாதிரி..நாமக்கூட மூனார்ல காடை முட்டை ஆம்லெட் சாப்பிட்டோமே..?! அந்த காடை..."

"ம்ம்ம்..சொல்லு.. " னு சொன்னக்குரல் கடுப்பாக இருந்தது.


"அந்த காடையை பிடிச்சி, பால் கறந்து.. அதை ஒரு ஃபில்டரில் வடிகட்டி உங்களுக்கு தரேன்" ப்பா..

ஞே.... அவர்ட்ட ரியேக்ஷனே இல்ல..என்ன சொல்றதுன்னு தெரியாம.. என்னையே ப்பாக்கறாரு..  [கனவை சொல்ல முன்னமே கடுப்பா?  யார்கிட்ட??? ]

ரியாக்ஷன் செய்யமுடியாம திகைச்சிப்போய் நிக்கறவரை பாத்து சிரிப்பு வந்தாலும், வெளியேக்காட்டிக்காம... 

"எப்படிப்பா காடை க்கிட்ட பால் கறக்க முடியும்? எனக்கு ஏம்ப்பா இப்படியெல்லாம் கனவு வருது..?"

"உனக்கு இப்படியெல்லாம் கனவு வராட்டிதான் பிரச்சனை..காடை என்ன காடை.. எரும்பை ப்பிடிச்சிக்கூட நீ பால் கறப்ப.. போடி போ.. போய் பல்ல வெளக்கு...."

"ஆவ்வ்வ்.... அப்ப நெக்ஸ்ட் பால் எரும்புக்கிட்டவா..? " ன்னு நினைச்சிக்கிட்டு அவர் மேற்கொண்டு திட்டும்முன்ன எஸ் ஆகிட்டேன். :

கனவை சொல்லியாச்சி...இதோ எழுதியும் வச்சாச்சி. ஆனா என்னாலேயே இந்த கனவை இப்பவரை ஜீரணிக்க முடியல.. ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் கனவு வருதுன்னு தெரியமாட்டேங்குது..

நேத்திக்கோ..அதுக்கு முன்னமோ... காடையோ..கோழியோ மற்ற பறவைகளைப்பற்றியோ பேசல.. பார்க்கல.. காடை ஆம்லெட் சாப்பிட்டுக்கூட ஒரு 4-5 வருசமிருக்கும்..

என்னமோ போங்க.. என்னாலேயே முடியல..

அணில் குட்டி : பாருங்க..கொஞ்ச கொஞ்சமா சந்தரமுகியா மாறிக்கிட்டு இருக்க கவிதா வை பாருங்க.!!!.

பீட்டர் தாத்ஸ் : I'm interested in the dream and subconscious mind, the peculiar dream-like quality of our lives, sometime nightmare quality of our lives. - Anthony Hopkins

சிவலிங்கம்

இந்த மாதிரியொரு கனவு இதுவரை வந்ததேயில்ல. ஜெகஜோதி' ன்னு சொல்லுவாங்களே அதன் அர்த்தத்தை இந்த கனவில் கண்டேன்.

என் கணவரின் (சென்னை) அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் இரண்டு பெண்களோடு எனக்கு பேச வேண்டியிருந்தது.(நிஜத்திலும் பேச வேண்டியிருக்கு, ஆனால் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கல) அவர்கள் அலுவலகத்தில் உள்ள மற்றவர்கள் அறியாதவாறு வேறு எங்காவது ரகசியமாக சந்தித்து பேசலாம் என முடிவு செய்து என்னிடம் முன்கூட்டி தெரிவித்திருக்கின்றனர்.

மூவரும் ஒன்றாக கிளம்பினாலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என ஒருவர் முன்னே செல்ல, நான் இரண்டாவது, எனக்கு பின்னே ஒருவர் என நடக்க ஆரம்பிக்கிறோம்.

நாங்கள் நடந்துக்கொண்டிருக்கும் சாலை முக்கிய பிரதான சாலையாக தெரிகிறது. அந்த சாலையில், அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்த இடம் வெகு தொலைவில் இருக்கிறது. என்னால் நடக்கமுடியுமென நடக்கிறேன். எனக்கு பின்னால் வரவங்க கொஞ்சம் உடல் பருமனானவங்க, அவங்களால் முடியல.. ஆனா நிக்காமல் ரொம்ப மெதுவா நடந்து வராங்க.

எனக்கும் அவர்களுக்குமான இடைவெளி அதிகமாயிட்டே இருக்கு. எனக்கு முன்னால் சென்றவர், ஓரளவு வேகமாக சென்று இடத்தை நெருங்கிட்டாங்க. நடுவில் பெரிய மேம்பாலம், மேல ஏறி இறங்கனும், நான் இறங்கிட்டேன், இதற்கு பிறகு எங்களை கண்காணிப்பவர்கள் யாருமிருக்க வாய்பில்லை என்பதால், எனக்கு பின்னால் வருபவர் வரும்வரை காத்திருந்து அவர்களோடு சேர்ந்து நடக்க உத்தேசித்து, சாலை ஓரமாக நிற்கிறேன்.

நிற்கும் நேரத்தில் அக்கம் பக்கம் சுற்றி நோட்டம் விட, ஒரு கோயில் தெரிகிறது, எனக்கு பின்னால் வரும் அந்தப்பெண்ணை கவனித்து, நிற்கும் நேரத்திற்கு அந்தக்கோயிலுக்கு சென்று வந்துவிடலாமென,  செல்கிறேன்.

ஆஹா..என்னே ஒரு காட்சி.!!!!!  சிவலிங்கம் !!!! ஜெகஜோதியாக
காட்சியளிக்கிறார். அட்டகாசமான அலங்காரம், லிங்கத்தின் தலையில் தங்கத்தால் செய்யப்பட்ட பாம்பு வடிவில் கிரீடம் போல ஏதோ ஒன்று அலங்கரிக்கப்பட்டு வசீகரிக்கிறது !கர்பகிரகமே விளக்குகளால் ஒளிர்ந்து ஜெகஜோதியாக என் கண்களுக்கு விருந்தளிக்கிறது. மெய் மறந்து ரசிக்கிறேன்.

வித்தியாசமான லிங்கமாக இருந்ததால், சாமியின் பெயரை அறிய, கோயில் வாசலின் மேல் பார்க்கிறேன்.... "நசாவா லிங்கம்" என்று படிக்கிறேன்.

திரும்ப படிக்க எத்தனிக்கும் போது விழிப்பு..

பெயர் மறக்காமல் இருக்க, தலைமாட்டிலிருந்த மொபைலை எடுத்து,, அவருக்கு வாட்சப்பில், பெயரை டைப்பி அனுப்பிவிட்டு, கனவை ரீகால் செய்ய ஆரம்பித்தேன்...

*****
படம் (நன்றி கூகுல்) : ஏகாம்பரநாதர், காஞ்சிபுரம். 
கிட்டத்தட்ட என் கனவு லிங்கம் இப்படிதானிருருந்தார்.. ஆனால் இவரைவிட உயரம்..காலஹஸ்தி லிங்கத்தை ஒற்று இருந்தாலும், அவருமில்லை.

கூகுலில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. எங்கிருக்கிறாரோ இந்த சிவபெருமான்?. என் கனவில் வந்து, காட்சிக்கொடுத்ததற்கு தவம் தான் செய்திருக்கிறேன்....

கனவுகளில்..நம்பமுடியாத பிரம்மிக்க வைத்த கனவு இதுவே... !! 

சர்பம்

பாம்பு, என் கண்ணில் அடிக்கடி படக்கூடியது, பயமில்லை தான். நாம ஒன்னும் செய்யாதவரை அதும் ஏதும் நம்மை செய்வதில்லை என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை. பாம்புக்கு காதில்லை, நம் காலடி அதிர்வுகளை க்கொண்டு வேகவேகமாக கடந்துப்போகும். அதிலிருந்தே, நாம் அதைப்பார்த்து பயப்படுவதுப்போல அதும் நம்மைப்பார்த்து பயப்படுதுன்னு ஒரு தைரியம் வந்துவிடும்..

பாம்பு கனவுகளும் எனக்கு புதிதல்ல. ஒரு நாளும் பாம்பு கனவுகள் என்னை பயமுறுத்தியதல்ல. எப்பவும் எனக்கும் அதற்கும் ஒரு ஸ்நேகம் இருக்கும்.

அதான் என் வூட்டுக்கார் கனவெல்லாம் எழுதி வைக்க சொல்லி இருக்காறே, போன வாரத்தில் வந்த பாம்பு கனவுக்குள் போகலாமா?

*******
மிக நீளமான கருப்பு பாம்பு, 6 அடி இருக்கும், வீட்டினுள் வருகிறது. நானும் அவரும் அமர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அது எங்களை கண்டுக்கல, நாங்கள் கண்டுக்கிட்டாலும் காட்டிகல. அது எதாது செய்துவிடும் என்ற பயமெதும் எங்களுக்கு இருப்பதாக தெரியல. உள்ளே அறையில் சென்று சுருண்டுப்படுத்துக்குது.

"இருங்கப்பா, அதை எடுத்து வெளியில்போட்டுட்டு வரேன்", னு சென்று சர்வ சாதாரணமாக அதன் வாலைப்பிடித்து தூக்கி எடுத்துட்டு வரேன். அது நான் தூக்கிட்டு வரும் போது, எந்த ரியாக்ஷனும் பண்ணாமல் பேசாமல் இருக்கு, அதனைத்தூக்கிப்பிடித்து, , அவரிடம் அது எப்படி இருக்குன்னு காட்டறேன். எனக்கு ஏதோ ஒரு மீன்'ஐ கையில் பிடிச்சிக்கிட்டு இருக்காப்ல இருக்கே ஒழிய, பாம்பை பிடிச்சிருக்கோம்னு தோணல, அந்த பாம்பின் உடல் அப்படித்தான் இருந்தது, என்ன வகைன்னு தெரியல....

சன்னல் வழியாக மிக சாதாரணமாக ஏதோ பூச்சியை பிடிச்சி விடாற்பல விடறேன். அவரோ, "ஏண்டி இங்கவே விடற, அது திரும்ப வீட்டுக்குள் தான் வரும், வெளியில் போய் தூரமாய் விட்டுட்டு வரலாமில்ல" னு சொல்றார். அதே சமயம் நவீன் என் பக்கத்தில் வந்து உட்கார்றான். அவரும் நானும், அது என்ன செய்யுதுன்னு சன்னல் வழியா அதையே பார்க்கிறொம்.

அவர் சொன்னபடியே, அது யூ ட்ர்ன் அடிச்சி திரும்ப வீட்டுக்குள் மெதுவா வர ஆரம்பிக்குது. அது வரும் வழியில் தான் நவீன் உட்கார்ந்திருக்கான். அது ஒன்னும் செய்யாது என்று எனக்கு தோன்றினாலும், நவீன் அதனை எதாது
செய்ய, அது திரும்ப எதாச்சும் செய்யுமோன்னு, அவனை இடுப்பை அணைத்து என் பக்கமாக இழுத்து, "அசையாமல் கொஞ்சம் நேரம் அப்படியே உக்காரு குட்டி, அது போயிடட்டும்"னு சொல்றேன். கையை அவன் மேலிருந்து எடுக்காமல், அது அவனை கடந்து செல்லும் வரை என் பக்கமாகவே இழுத்துப்பிடிக்கிறேன். அது நவீனின் ஓரமாக மெதுவாக நழுவி நழுவி உள்ளேப்போகுகிறது.

அவன் இது எதையும் கவனிக்காமல், மொபைலை நோண்டிட்டு இருக்கான். அது முன்னப்போலவே உள்ளப்போயி சுருண்டு படுத்துக்குது.

இப்ப அதனை திரும்ப தொந்தரவு செய்ய நானும் நினைக்கல, அவரும் எதும் சொல்லல. ஆனா அது அங்க இருக்கக்கூடாதுன்னு மட்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நினைக்கிறோம். அவர் பார்வையை புரிந்தவளாக, "சரிப்பா, நான் பாம்பு பிடிக்கறவங்க யாராச்சும் வரவைக்கிறேன்" னு சொல்லிட்டே பாம்பை திரும்பி பார்க்கிறேன்.

கனவு கலைந்துவிட்டது... 

படங்கள் : நன்றி கூகுள் 

ஆனை ஆனை அழகர் ஆனை

நான் காணும் கனவுகளை, அவரிடம் சொல்லும் போது, அதை ரெக்கார்ட் செய்ய சொல்லுவார். நேற்றைய கனவை சொல்ல ஆர்ம்பித்த கொஞ்ச நேரத்தில்..

 "ரெக்கார்ட் பண்ண சொன்னேனே செய்யறியா? "

"அட கேளுங்கப்பா முதல்ல.. எல்லாம் எழுதி வைக்கிறேன்ப்பா"

 "எங்க எழுதி வைக்கிற? " . "

 என் ப்ளாகில் எழுதி வைக்கிறேன்பா.. நடுவில் பேசாம கேளுங்க..அப்புறம் மறந்துப்போவேனில்ல" ன்னு விடாம கனவை முழுக்க சொல்லிட்டு தான் மறுவேலை.

ஆனா பாருங்க, சில பல மாதங்களாகவே என் வூட்டுக்காரே கனவிலும் வந்து தொலைக்கறாரு... தூங்கி எழுந்தவுடன் கனவு நினைவில் வரும் போது என்னை நானே..எகொக இது?! ன்னு கேட்டுக்க வேண்டியிருக்கு.... ஒரு மனுசனோட குடும்பம் நடத்தறதே பெரிய விசயம்..இதுல கனவிலும் விடாம துரத்தினா.. ?!

 விடாது கருப்பு ....இதோ...

*******************
எங்கோ பெரிய மலை பகுதிக்கு அழைச்சிக்கிட்டு போயிருக்கார். மலையில் ஏறுகிறோம்.

இரவில் மழை பெய்து ஓய்ந்த ஒரு காலை பொழுது, வைக்கின்ற ஒவ்வொரு காலடியும் ஈர மண்ணில் நிற்காமல் வழுக்குது..களிமண்ணாக இருக்குமோன்னு யோசனையோடு ஒவ்வொரு காலாய் எடுத்து வைக்கிறேன்.. முடியல.. கையையும் துணைக்கு வச்சிக்கிட்டு மேலே ஊன்றி ஏற முயற்சி செய்கிறேன். கை, கால்னு ஒரே சேறு பூசிக்குது.. இவர் வருகிறாரான்னு பின்னால் திரும்பிப்பார்க்க, பேலன்ஸ் போயி சொய்ன்னு வழுக்கிடுது... வழுக்கிக்கிட்டே கத்தறேன்..

"எங்கப்பா போனீங்க..இங்க தனியா நான் ஏற முடியாம கஷ்டப்படறேனே..வந்து தொலைக்கக்கூடாதா?"

ஒன்னும் பதில் வராம..நானே தவ்வி தவ்வி மேலே எப்படியோ பேலன்ஸ் செய்து ஏறுகிறேன். ..

 எங்க வெளியில் போனாலும் என்னை இப்படி தனியா விட்டுட்டு அவர் வேலைய தனியா பார்க்கறது வழக்கம் தான்..எனக்கும் இப்படி கத்தி அவரை கூப்பிடறது வழக்கம் என்பதால்..நிஜத்தில் வரும் தலைவலி கனவிலும்....

ஒருவழியாக உச்சிக்கு வந்துடுறேன்.. வந்துவிட்டோம்..இனி, "மேல நின்னு, இயற்கையை ரசிக்கனும்னு" நினைத்துக்கொண்டே அடுத்த அடி வைத்து கையையும் மலை உச்சியில் வளைத்து பிடிக்கிறேன்...சில்லென்ற தண்ணீர் கையில் பட , வைத்த வேகத்தில் கையை எடுத்து ..ஏது தண்ணீன்னு எட்டிப்பார்க்கிறேன்...
அலைவந்து அடிக்க... கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிரம்பி தளும்பும் கங்கை...அது அங்கே ஏதோ ஒரு பக்கத்தில் அருவியாக கொட்டுகிறது ... "ஓஓஓவென...." பேய் சத்தம்..... எதிர்ப்பார்க்காத தண்ணீர்... அலை.. தண்ணீரின் ஆழம்....அதன் சத்தம்.. பயந்துப்போய்..

"அப்பாஆஆ..இங்கப்பாருங்க ...இங்க.கங்கை.இருக்கு . இன்னும் ஒரு அடி எடுத்துவச்சா.. பிடிக்க எனக்கு ஏதுமில்ல..இதுக்குள்ள விழுந்துடுவேன்..ன்னு திரும்பி, அவரை. பார்த்து சொல்லும் போதே பேலன்ஸ் போய் கால் தடுமாறி...வந்த வழியே வேகமாக வழுக்கி கல்லிலும் மண்ணிலும் புரண்டு கீழே வந்து விழுகிறேன்.. .

தொலைவிலிருந்து இதெல்லாத்தையும் நிதானமாக பார்க்கிறாரே ஒழிய..பொண்டாட்டி மேலிருந்து வந்து விழறாளே..வந்து தூக்குவோம்னு சின்ன பதட்டம் கூட அவரிடம் இல்ல.. தூக்கக்கூடாதான்னு கேட்டா.. "எப்பதான் நீ இதெல்லாம் கத்துக்கறதுன்னு டயலாக் டெலிவரி செய்வாரு.. சரி..நான் இருக்கட்டும்.. ஒருவேள அவர் வழுக்கி விழறாருன்னு வச்சிக்குவோம்.. ஓடிப்போய் தூக்கப்போனா, "ஏன் விழுந்த எனக்கு எழுந்துக்க தெரியாதான்னு" டயலாக் டெலிவரி செய்வாரு...

எதுக்கு இவர்கிட்ட ?!! எதையுமே கேக்காம இருக்கலாம்னு முடிவு செய்யறேனே ஒழிய...வாய் சும்மா இருக்கா? இல்லயே.."ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டு விட்டுட்டு போறீங்க..." ம்க்கும்.. எப்பவும் போல எந்த பதிலும் இல்லை..அலட்சியமாக ஒரு பார்வையோடு வேற எங்கேயோ போறார்... அவரை பின் தொடர்ந்து நானும் போறேன்...

அது ஒரு பெரிய கோயில்..மிகப்பழமை வாய்ந்த பெரிய கோயிலாக தெரிகிறது. பெரிய பெரிய சிற்பங்கள்..சிலைகள்னு அன்னாந்து பார்த்தபடி ஒவ்வொன்றாய் நின்று ரசிக்கிறேன்.. நின்றுவிட்டு நகரும் போது பார்த்தால்..எப்பவும் போல நம்மாளை காணல.. ஓடி ஓடி எந்தப்பக்கம் போகிறார்னு தேடி தொடர்கிறேன்.நடு நடுவில் சிற்பங்கள்...

அப்பதான் அந்த பெர்ர்ர்ர்ர்ரிய யானை சிலைகள் இருக்குமிடத்தைப்பார்க்கிறேன்.. நிஜ யானைகள் போலவே சிற்பங்கள். சிலது நிற்கின்றன.. சிலது உட்கார்ந்து, இரண்டு முன்னங்கால்களை தூக்கிக்கொண்டு சிலதுன்னு வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான சிலைகள்...

 அட...எத்தனை அழகா இருக்கு..இவ்ளாம் பெரிய யானை.. ஒன்னு செய்யறதே கஷ்டம் இந்த இடம் முழுக்க யானையாவே செய்து வச்சியிருக்காங்களேன்னு..ஒரு யானை சிலையின் அருகில் செல்கிறேன்... .டக்கென்று அது தன் தும்பிக்கையை தூக்கி பலத்த சப்தத்தோடு பிளறுகிறது.... அவ்வ்வ்... திடீர் சத்தத்தில் பயந்து நடுங்கி கத்தி அலறிக்கொண்டு ஓடுகிறேன்... ஓடி நின்ற இடம் இன்னொரு யானையின் கால்.

அந்த யானை கத்தாமல்...தும்பிக்கையால் எங்கிருந்தோ தண்ணீரை வாரி இறைக்கிறது.... மீண்டும் கத்திக்கொண்டே.. ".இந்த யானைக்கெல்லாம் உயிர் இருக்கு போல......இது என்னை பயமுறுத்துது.. சீக்கிரம் இங்க வாங்கன்னு கத்தறேன்" .. அந்தப்பக்கத்திலிருந்து ஒரு சத்தமும் வரல...

 அங்கிருக்கும் ஒவ்வொரு யானைக்கும் ஏதோ ஒரு செய்கையை செய்யும் படி..செயற்கை முறையில் செட்டப் செய்திருக்கிறார்கள் போலவே.. இதை மூன்றாவது யானை காலைத்தூக்கி இங்கும் அங்குமாக அசைக்கும் போது புரிந்துக்கொண்டு.. இதுங்க கிட்டக்க போகக்கூடாது , போனால் சென்சார் மூலம் தெரிந்து..ஆடுதுங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு தள்ளி வந்துடறேன்...


அதற்குள்ளாக இவர் வந்து, என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேறு பக்கமாக சந்துபொந்துன்னு எங்கோ வளைந்து வளைந்து ஒரு குகை மண்டபத்திற்குள் போறாரு...கும்மிருட்டு...கருப்பு நிறத்தில் வழு வழுவென்ற பாறைகள், கருங்கள் தூண்கள்.. குகை மண்டபத்தை கடக்கும் போது ....லேசான வெளிச்சம் உள்ளே வர, அதைப்பார்க்கிறேன்...

அட.. ?!! மலை உச்சியில் சென்று பார்த்த கங்கை... நீலநிறத்தில்.... , சூரியனின் வெளிச்சத்தில் மின்னுகிறது.. இழுத்து செல்லும் கையை நிறுத்தி, அந்த காட்சியை அவருக்கு காட்டி... இதைத்தான் நான் அந்தப்பக்கம் போய் பார்த்தேன்னு, வியப்பு மேலோங்க சொல்றேன்.. கவனிக்கிறார்... அதான் தெரியுமேங்கற கணக்கா... வாயத்தொறக்காம திரும்பவும் இழுத்துக்கிட்டு நடக்கிறார்.. இவர் இழுத்த இழுப்புக்கு நடக்க முடியாமல், கால் வலி அதிகமாக ....

முழுச்சிக்கிட்டேன்....

*******************

பொதுவாக எனக்கு சோர்வாக இருக்கு, முடியலைன்னா, (இன்ஸ்டன்ட் எனர்ஜிக்கு) Candy ஸ்டாக் வச்சி கொடுப்பாரு, (சாக்லெட் எனக்கு பிடிக்காது அதனால் கேண்டி) தண்ணிக்கொடுத்து உக்காந்து ரெஸ்ட் எடுக்க சொல்லுவாரு...கண்டிப்பா எதாச்சும் சாப்பிட உடனே கொடுப்பாரு.... ஆனா நானு மதிக்கமாட்டேன்..வாங்கி எல்லாத்தையும் திண்ணுட்டு.. முடியாட்டியும் அதே வேகத்தோடு நடக்க ஆராம்பிச்சிடுவேன்.... உட்கார்ந்து ஓய்வெடுக்கும் பழக்கமே எனக்கில்லை.. எங்க போய் சேரனுமோ அந்த இடம் வந்தாத்தான் நிப்பேன். எப்படி உல்டாவா அவர் என்னை விடாமல் இழுத்துக்கிட்டு போறாப்ல கனவு வந்துச்சின்னு தான் தெரியல...

 **********************


அணில் குட்டி : அடுத்து சினிமா தான் எடுப்பாங்க போல...?!

பீட்டர் தாத்ஸ் : “I think we dream so we don’t have to be apart for so long. If we’re in each other’s dreams, we can be together all the time.” ― A.A. Milne, Winnie-the-Pooh 

படங்கள் : நன்றி கூகுள் ! 

பெட்டி

தூரத்தில்
ஒரு அட்டைப்பெட்டி
உள்ளே
எனக்குப்பிடித்த பரிசுப்பொருட்கள்.. !!
ஒவ்வொன்றாய்...
வெளியே வருகிறது

ஆச்சரியம்..!
ஆனந்தம்..!

வெளிவந்தவை
என் கைக்கு வருமுன்
காணாமல் போகிறது-

பெட்டியின் அருகில் சென்று-
எட்டிப்பார்க்கிறேன்....

காலி..!!!

அமைதியாய்
பெட்டியின்
மேல் பக்க அட்டையை
ஒவ்வொன்றாய்
மூடுகிறேன் -

தூரமாய் செல்கிறேன் -
பெட்டியை என்ன செய்வது?!

*************

நேற்றிரவு வந்தக்கனவு.. எழுந்தபோது சுத்தமாக நினைவில்லை. சமையல் செய்யும்போது..இரவு ஏதோ ஒரு கனவு வந்ததே.. ரொம்ப நல்லாயிருந்ததே..சிரிச்சேனே... ?! ன்னு மண்டையை துருவி துளாவி ..இதோ...  ஒருவழியாய் நினைவுக்கு கொண்டுவந்து எழுதிவிட்டேன்....

கனவுகளில் கூட...
தொலைந்து போகவில்லை..



பீட்டர் தாத்ஸ் : I dream my life and My Life becomes my dream

அணில் குட்டி : பீட்டரு.. அம்மணிக்கு மவுத் பீஸ் ஆகிட்டாரு போல ?!


ஊசி


மருத்துவமனை. காத்திருக்கும் இருக்கைகளில் ஒன்றுக்கூட காலியில்லை. மருத்துவர் இருக்கும் அறையைப்பார்த்தேன்.  யாரோ உள்ளிருக்கிறார்கள், நிச்சயம் உடனேவோ.. சிறிது நேரம் கழித்தோக்கூட அவரைப்பார்க்க முடியாது.


என்னால் முடியவில்லை.. ஏதோ உடல் உபாதை, மயக்கம் தள்ளுகிறது, நிற்க முடியவில்லை, சமாளிக்கிறேன். உட்காரவும் இடம் இல்லாததால் சிஸ்டரை பார்த்து, அப்பாயின்ட் வாங்கிய விபரம் சொல்லி, என்னால் நிற்க முடியவில்லை, உடனேயே டாக்டரை பார்க்க அனுமதிக்குமாறு கேட்கிறேன்.

சிஸ்டருக்கு என் நிலைமை புரிந்தாலும், மருத்துவர் யாரோ ஒரு நோயாளியை பார்ப்பதால் என்னை உள்ளே அனுமதிக்க முடியவில்லை. கொஞ்சம் யோசித்தவர்,என்னை வேறொரு அறைக்கு அழைத்து சென்று, ஏதோ ஒரு மருந்தை எடுத்து ஊசியில் செலுத்தி, மருத்துவரை பார்க்கும் வரை, இது உங்களுக்கு நல்லாயிருக்கும், போட்டுக்கோங்கன்னு சொல்லி, போடுகிறாள்.

ஊசிப்போட்ட சிறிது நேரத்தில், மருந்தின் தாக்கம் உடல் பிரச்சனையை விட அதிகமாக, அங்கிருக்கும் பெட்டிலேயே முடியாமல் படுக்கிறேன். 5-10 நிமிடங்கள் சென்றிருக்கும்.... ஊசிப்போட்ட கையை தூக்க முடியவில்லை.. தலையை தூக்கி கையைப்பார்த்த எனக்கு  சொல்லமுடியாத அதிர்ச்சி.......

கையில் நரம்பு குழாய்கள் செல்லும் அத்தனை இடங்களும் மேல்பக்கம் கருப்பாக மாறி கோடு கோடாக தெரிந்தது....

"சிஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... "

நான் கத்திய கத்தில், சிஸ்டர் தவிர பக்கத்து அறையில் இருந்த டாக்டரும் வந்துவிட்டார்...ரூமுக்கு வெளியில் கூட்டம் சேருகிறது.
கையைப்பார்த்த இருவருக்கும் என்னைவிட அதிர்ச்சி.....
"என்ன செய்தீங்க.. ?!  ஊசிப்போட்ட இடம் கூட பாருங்க..எப்படி வீங்கியிருக்கு... இதுமாதிரி எனக்கு ஆனதேயில்ல.. என்ன ஆச்சி எனக்கு... டாக்டர்...சீக்கிரம் எதாச்சும் செய்ங்க." .
டாக்டர் கோவமாக சிஸ்டரிடம் ..."என்னமா செய்த.. நான் சொல்லாம என்ன ஊசிய இவங்களுக்கு போட்ட... யார் உனக்கு இந்த அதிகாரத்தைக்கொடுத்தா.. என்ன ஊசிப்போட்ட காட்டு..."
சிஸ்டர் வேகமாக மருந்து பாட்டிலை எடுக்க செல்கிறார், டாக்டர் முதலுதவிக்கு திரும்பவும் வேறு ஏதோ ஒரு மருந்தை எடுத்து வந்து எனக்குக்கொடுத்து "சீக்கிரம் இந்த மாத்திரையை முழுங்குங்க.."ன்னு தண்ணி பாட்டிலைக்கொடுக்கிறார்...
கருப்புக்கோடுகள் கையில் தெரிய...  கட்டிலிருந்து இறங்கி... முடியாமல்  வெளியில் வருகிறேன்....

பின்னாலேயே டாக்டரும் சிஸ்டரும் "மேடம் எங்கப்போறீங்க.. நில்லுங்க... சரிசெய்து அனுப்பறோம் நில்லுங்க... " ன்னு சத்தம் போட்டுக்கொண்டே துரத்துகிறார்கள்..

திரும்பி பார்த்தவாரே... "ஹாஸ்பிடலா நடத்தறீங்க?...  இதோ இந்த கையை காட்டியே உங்கள உள்ள தள்றேன் பாருங்க.".ன்னு அழுகையும் ஆத்திரமும் ஒன்று சேர ஓட்டமும் நடையுமாக வெளியே வருகிறேன்..

கேட்டில் இருவர் என்னை தடுத்து நிறுத்தப்பார்க்கிறார்கள்.. அவர்களை என் உடல் வலுவெல்லாவற்றையும் வரவைத்து, ஒரே தள்ளாக தள்ளிவிட்டு ஒருவழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளி வந்துவிட்டேன்..

... என்னை யாராவது துரத்துகிறார்களா? என அவ்வப்போது திரும்பி ப்பார்க்கிறேன்......


********
மருத்துவமனைக்குள் செல்லும் போது, முகப்பு அறை, காத்திருக்கும் அறை எனத்தனி தனியாக இருந்தது, வரும் போது என்னவோ எங்கேயோ மேலே ஏறி, இறங்கி, தடுக்கி விழுந்து, எழுந்து, பல தடைகளை தாண்டி தப்பித்து வருகிறேன்.... ம்ம்ஹூம்..  # நேற்று இரவு வந்த கனவு....

Images Courtesy : Thx Google. 

அது....

துணிகளை காயவைக்க, மாடிக்கு செல்லும் போது தான் கவனித்தேன், பக்கத்து ஃப்ளாட்டில் யாரோ புதிதாக குடி வந்திருந்தனர்.

எங்கள் வீட்டு கதவை மட்டும் விட்டுவிட்டு வெளியில் எல்லா இடத்திலும் பொருட்களைப் பரப்பி இருந்தனர். அந்த வீட்டிலிருந்த பெண் காதுகளில் பெரிய லோலாக்குகள் பளீச்சென தெரிந்தன, பின்னலிடாத தலைமுடி, நெற்றியில் பெரிய பொட்டு, ஏதோ பாட்டுப்பாடிக் கொண்டே அங்குமிங்குமாக வேலைகளை செய்துக்கொண்டிருந்தார்.  நான் கண்டும் காணாமல் மாடிக்கு சென்று துணிகளை காயவைத்து திரும்பும் போது, படிகளுக்கு கீழே ஒரு பெண் குழந்தை நின்று என்னைப்பார்த்து சிரித்தது. நானும் சிரித்தேன்.....

வெளியிலிருந்த பொருட்களை கவனித்தவாறு, வீட்டினுள் நுழைந்து கதவை சாத்தும் முன், அந்த குழந்தை என் எதிரில் வந்து நின்றது. உள்ளே வருமா??...சற்று நின்றேன்... அதுவும் வந்தது, வந்தவுடன் கதவை சாத்திக்கொண்டேன். அது விளையாட ஆரம்பித்தது. கதவுக்கு பக்கத்திலிருந்த ஆள் உயர பெரிய ஜன்னலில் போடப்பட்டிருந்த ஸ்கீரின் மேலும் கீழும் ஆட, குழந்தை அங்கு சென்று விளையாட ஆரம்பித்தது.

நான், எதோ வேலை செய்துக்கொண்டிருந்தாலும், என் பார்வை குழந்தையை விட்டு விலகவில்லை. நான் எதிர்பார்த்து காத்திருந்தது நடக்க ஆரம்பித்தது...



கீழே உட்கார்ந்து, ஓரத்தில் ஒளிந்து என எல்லாப்பக்கங்களிலிருந்தும் ஸ்கிரீனை சுற்றி வந்து கவனித்தது. ஸ்கிரீன் காற்றில் ஆடவில்லை, ஜன்னல் கதவுகள் அத்தனையும் மூடப்பட்டிருந்தது. யாரோ உள்ளிருப்பதாக குழந்தை உணர ஆரம்பித்து..... அந்த சந்தேக கேள்வியோடு என்னைத் திரும்பி பார்த்தது..

நானும் ஆமாம் என்ற பதிலை பார்வையாக்கினேன். அதிர்ந்து பின்வாங்கி பின்னோக்கி நடந்து சுவற்றில் மோதி நின்று, ஸ்கிரீனையே வெறித்தது.

மனித உருவத்தை போன்ற ஏதோ ஒன்று அந்த ஸ்கீரினுக்கு பின்னால் இருப்பதை நான் பலமுறை பார்த்து பயந்திருக்கிறேன். ஆனால் என் கண்ணுக்கு யாரும் தெரிந்ததில்லை.. இன்று இந்த குழந்தையும் பார்த்துவிட்டது.. என் பயத்தை பகிர ஆள் கிடைத்துவிட்ட சந்தோஷம் என் முகத்தில். ஆனால், குழந்தையின் கண்களில் இன்னும் அதிர்ச்சி விலகவில்லை.....

குழந்தைக்கும் "அது" பழகிவிடும் என மனம் சொல்ல...குழந்தையின் முகத்தை கவனித்தபடியே படுக்கை அறையில் நுழைந்தேன்.

அந்த அறை ஜன்னலிலும் காற்றில்லாமல் ஸ்கிரீன் ஆடிக்கொண்டு இருந்தது......







(இன்று விடியலில் வந்த கனவு,  அந்த குழந்தையும் நானும் கடைசிவரை பேசிக்கொள்ளவே இல்லை,)

அணில் குட்டி : பிசாசுக்கு யார் வீட்டில இருக்கனும்னு தெரிஞ்சி இருக்கு பாருங்க....

பீட்டர் தாத்ஸ் : Deep into that darkness peering, long I stood there, wondering, fearing, doubting, dreaming dreams no mortal ever dared to dream before.

கனவுகளை கட்டுப்படுத்துதல் ?!


கனவுகளை கட்டுப்படுத்துதல் என்பது சாதாரண விஷயமா என்றால் இல்லை என்றே சொல்லுவேன். அதிக மனக்கட்டுபாடு தேவை. இது தான் இப்படித்தான் என்ற முடிவுகள் தேவை. மேலும், அட.. கனவு, அதுவும் என் கனவு, இது எனக்கு மட்டுமே தெரியும், பிறர்/வெளியாள் அறிய வாய்பில்லை என்ற எண்ணம் என்னிடம் இருந்ததில்லை. அது எனக்கு சொந்தமானதாக இருந்தாலும், வந்த கனவு சரியா. .வரலாமா? கனவு என்பது அடிமனதின் ஆசையா?  என் அடி மனதில் அப்படி ஒரு ஆசை/ தேவை/தேடல்/பயம் இருக்கிறதா? அந்த ஆசை/தேவை/தேடல்/பயம் சரியா?  என்று என்னை நானே கேள்வி கேட்கும் போது, தேவை என்றால், வந்தால் வரட்டும் என்றும், தேவையில்லை என்றால் அது கனவாக வராமல் இருக்க, என் மனதை சரிபடுத்திக்கொள்ளவும், இரண்டுக்கும் நடுவில் "தெரியாத" விடையாக இருந்தால், தெரியும் வரை அதை விடாமல் துரத்துவதும் வேலையாக கொள்ளுவேன். முடிவு தெரிந்த பிறகே அதை விடுவதை பழக்கமாக்கி க்கொண்டுள்ளேன் அல்லது அப்படி ஒரு குணமுடன் பிறந்துவிட்டேன் னு சொல்லலாம். 

தேவையில்லை அல்லது அப்படி ஒரு கனவு நமக்கு வரக்கூடாது என்று நினைக்கும் நேரங்களில் வந்தால், அது தொடராமல் இருக்க வேண்டி, என் அறிவு என்னை இத்துடன் நிறுத்து என்று எழுப்பி விடுவது, ஒரு விஷயத்தை எந்த அளவு உள்நோக்கி சென்று கவனித்து, என் மூளையை அதற்காக பழக்கப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பது தெரிகிறது. எனக்கு பல சமயங்களில் கனவுகள் சந்தோஷம் கொடுத்தாலும், வேண்டாமென தொடராமல் நிறுத்திவிடுவது பிடித்திருக்கிறது.

ஆனால் இந்த கட்டுப்படுத்துதல் ஒருவித அழுத்தத்தைக்கொடுக்கிறது என்பது உண்மை. இதையும் நானே உணர்ந்திருக்கிறேன். அதாவது பிடித்த கனவுகளை கட்டுப்படுத்தாமல், அதனுடன் நான் பயணிக்கும் போதும், அதை தூங்கி எழுந்தவுடன் நினைவில் கொள்ளும் போதும், வெளியில் சொல்லும் போதும் என் மனம் லேசாக பறப்பதை போன்ற உணர்வை பெருவேன்.  அதே சமயம் கட்டுப்படுத்தும் போது, ஒரு வித இறுக்கும் பரவி அது நாளுக்கு நாள் வளர்ந்து வருவதும் உணர முடிகிறது. 

நிற்க, இதுவரையில், மூளையின் எந்த பகுதி கனவு வருவதற்கான காரணம் என்று கண்டுபிடிக்கபடவில்லை ஆனால், எந்த நேரத்தில் கனவு வருகிறது என்பதை ஆராய்ந்து கண்டுப்பிடுத்து இருக்கிறார்கள். நாம் தூங்கும் போது இரு வேறு நிலைகளில் தூங்குகிறோம். ஒன்று ஆழந்த சாதாரண தூக்கம், மற்றொன்று rapid eye movement (REM) sleep, இது ஒரு இரவில் 4-5 முறை வேவ்வேறு நேரங்களில் ஏற்படுகிறது, நம் தூக்கத்தின் 20-25% பகுதியை இது எடுத்துக்கொள்கிறது. அதாவது ஒரு இரவில் நம் தூக்கத்தில் 90-120 நிமிடங்கள் இது எடுத்துக்கொள்கிறது.  REM sleep ல், நம் மூளை நாம் விழித்திருக்கும் போது செயல்படுவது போன்றே செயல் படுகின்றது. இது வரையில் நம் மனம் அல்லது உடம்பு  எது சம்பந்தப்பட்டு கனவுகள் வருகிறது என்று இன்னும் கண்டுபிடிக்க ப்படவில்லை.  Parietal Lobe என்ற மூளையின் பகுதி பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு கனவுகளே வருவதில்லை என்றும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

REM sleep ல் நம் மூளையை இயக்கத்தில் இருந்தாலும், அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் திறன் மூளைக்கு அந்த நேரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. கட்டுப்படுத்தும் திறன் இருந்தால், கனவினை நம் இஷ்டத்திற்கு எடுத்துச்செல்லவும் முடியுமல்லவா? அப்படி ஒரு முயற்சியை நான் செய்ததில்லை. ஆனால் கனவு தொடராமல் இருக்க எழுந்து விடுவதையே இங்கு கட்டுப்படுத்துதல் என்று சொல்கிறேன். பல கனவுகளில் பயத்தில் திடுக்கிட்டு எழுந்துவிடுவது என்பது போல இல்லை இவை, வேண்டுமென்றே, தேவையில்லை என்று மூளையை கட்டுப்படுத்தி எழுந்துவிடுவது என்றே சொல்லவேண்டும்.

இதில் எனக்கு வரும் ஒரு சில கனவுகளை ரொம்பவே ரசித்து தொடருவேன். அந்த கனவுகளில் ஒரு குழந்தை வரும். அந்த குழந்தை வரும் கனவுகள் எல்லாமே நீண்ட நேரமுடையதாக 10-15-20 நிமிடங்கள் மேல் நீடிக்கும். அந்த கனவுகளில் ஒரு தொடக்கம், கதை, திரைக்கதை எல்லாமே இருக்கிறது. பகலில் அவற்றை ரீகால் செய்து, மறக்காமல் இருக்க எழுதியும் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த அதிக நிமிடங்களில் கனவுகள் வரும் போது, அது சந்தோஷமானதாக இருந்தாலும் கூட, எழுந்தவுடன் தலை பாரமாக இருக்கும்.

சில நிகழ்வுகள் முன்கூட்டியும் வருவதுண்டு. என் கனவில் நடந்தவை எப்போது நடக்கும் என்று தெரியாவிட்டாலும், இது நடக்கும் என்று எழுந்தவுடன் உள்மனது சொல்லும் அதை அறிவும் கூட இருந்து ஆமோதிக்கும்.  அப்படிப்பட்ட கனவுகள் நினைவில் நின்று, எப்போது அது நடக்கும் என்று காத்திருக்கும். அதே போல் அவை எல்லாமே அட்சரம் பிசுகாமல் நடக்குமென்றும் சொல்லிவிட முடியாது. சம்பந்தப்பட்டதாக, ஏதோ ஒன்று கண்டிப்பாக நடக்கும், நடந்தும் இருக்கிறது.

அப்பா இறந்து கிட்டத்தட்ட  20 வருடங்கள் ஓடிவிட்ட பிறகும், அப்பா என் கனவில் எப்போது வந்தாலும் "நான் இங்கே இருந்தேன் பாப்பா, அங்கே இருந்தேன் பாப்பா" என்று சொல்லி, ஏதோ ஒரு இடத்தை பற்றி விபரம் சொல்லி பேசுவார், அவர் அணிந்திருக்கும் சட்டை கலர், சட்டை கை மடிப்பு, தலை முடி உட்பட, எல்லாமே எழுந்தவுடன் எனக்கு நினைவில் இருக்கும். அப்பா இல்லை என்ற உண்மையை இந்த கனவுகள் மறைக்க பார்க்கும். அப்பா இப்படி என்றாவது என் முன் வந்து நிற்பார் என்றே தோன்றும்.

கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்று சொன்னாலும், அந்த கனவுகள் எப்படிப்பட்ட தாக இருக்கவேண்டும் என்பதையும் நாமே தான் முடிவு செய்கிறோம். இது டே டீரிம்ஸ் க்கு மட்டும் இல்லைங்க..  :)

அணில் குட்டி : .ச்ச்ச்சச்ச்சோஓஒ......அம்மணி ஆஸ்பித்திரிக்கு போக நேரம் வந்தாச்சி.....போலவே..... :(

பீட்டர் தாத்ஸ் : Do not spoil what you have by desiring what you have not; remember that what you now have was once among the things you only hoped for.”
  .
படம், தகவல் - நன்றி கூகுல்.