Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

என்னாது..... சினிமாக்கு போலாமா?

மொபைல் அழைத்தது.....மோகன் தான், ஆள்காட்டி விரலால் தேய்த்து எடுத்து காதில் வைத்தேன்.

"ஹல்லோ.. சொல்லுடா…" 

"கொரானா முடிஞ்சி, தியேட்டர்ஸ் திறக்க ஆரம்பிச்சிட்டாங்க. சினிமாக்கு போலாம் வரியா.. வீட்ல வேற, எங்கேயாவது வெளியில் போலாமானானு கேட்டுட்டே இருக்காங்க. ஃபேமிலியோட போலாம்… என்ன சொல்ற.."

"என்னாது ஃபேமலியோட சினிமாவா? எங்கூட்டம்மா கண்டிஷனுக்கு எல்லாம் எந்த தியேட்டரிலும் சீட் கிடைக்காது என்னாலையும் அந்தம்மாவ கூட்டிட்டு வரமுடியாது.… ஆள விடு சாமி.. நீ போயிட்டு வா…"

"டேய்..என்னடா இப்படி சொல்ற.. சிஸ்டர் அப்படி என்ன கன்டிஷன் போடறாங்க.. சொல்லு கேப்போம்.."

"ஞாயித்துக்கிழமை சினிமாக்கு போகனும்னா.. ஞாயித்துக்கிழமை காலையில் தான் சொல்லுவாங்க.. அதுல.. சீட் நம்பர் A-E வரைக்கும் தான் இருக்கனும்.."

"ஓ..அது ஏன்"

"அந்த தூரத்தில் இருந்து பாத்தாதான் கண்ணுக்கு நல்லதாம். அதுக்கு கீழ இருந்தா வேணாம்னு சொல்லிடுவாங்க. 10 நிமிசம் முன்னாடி போய் சீட்ல உக்காந்துக்கனும், லேட் ஆகக்கூடாது, லைட் ஆஃப் ஆகி விளம்பரம் ஓடிட்டு இருந்தாக்கூட நான் செத்தேன்…"

"சினிமா தான் ஆரம்பிக்கலையே அப்பவுமா கோவப்படுவாங்க.."

"அவங்க பிரச்சன சினிமா ஆரம்பிக்கறதை பத்தி இல்ல… லைட் ஆஃப் பண்ண பிறகு போனா,, உக்காந்து இருக்கவங்கள தொந்தரவு செய்து உள்ள போய் உக்காரனும், பின்னாடி இருக்கவங்களுக்கு மறைக்கும்.. அப்புறம் நடக்கும் போது சீட்ல உக்காந்து இருக்கவங்க மேல இடிக்காம நடந்து போகனும்..  உட்கார்ந்து இருப்பவங்க காலை மிதிச்சிட்டு நடக்கனும்.. இதெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது…"

"டேய்..சிஸ்டர் சொல்ற எல்லா விசயமும் கரெக்ட் டா.. இதுக்கா அவங்கள சினிமாவுக்கு கூட்டுட்டு போகமாட்டேன்னு சொல்ற? அராஜகம் டா. "

"அடப்போடா.. அதுக்காக நம்மள ஊருக்கு முந்தி கிளம்ப சொல்லுவாங்க.. கொஞ்சம் லேட் டா ஆனாலும் ..போற வழியெல்லாம் சீக்கிரம் சீக்கிரம் னு உசுற வாங்குவாங்க.. ஜாலியா போனோமா படம் பாத்தோமான்னு இருக்காதுடா.. "

"அவங்க சொல்ற பாயின்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான். நீ தான் தேவையில்லாம ரியாக்ட் பண்ற. நான் டிக்கட் புக் பன்றேன், நீ அவங்கள கூட்டிட்டு வர வழிய மட்டும் பாரு.. " டோக் ஃபோனை கட் பண்ணிட்டான். 

'சுஜா..சுஜா..எங்க இருக்க.. மோகன் குடும்பத்தோட படத்துக்கு போறானாம். நம்மையும் கூப்பிட்டான் நான் ஒக்கே'ன்னு சொல்லிட்டேன்.

"என்ன படம்? ரிவியூ படிக்காம நான் படத்துக்கு வரமாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா..?  ஆமா.. ஏந்த தியேட்டர்? சவுண்டு சிஸ்டம் எல்லாம் சரியா இருக்குமா?.  ஏசி’ய பாதியில் நிறுத்தாம இருப்பாங்களா..? கண்ட தியேட்டரில் நான் சினிமா பாக்க மாட்டேன்.'

அடக்கடவுளே!…இந்த ரிவியூ, ஏசி, சவுண்டு பத்தியெல்லாம் அவன்’ட்ட சொல்லலியே… அய்யோ... முதல்ல ஃபோனை போடுறா என் சிப்சு…..இல்லனா உனக்கு ஊதிடுவாங்கடா சங்கு......

பீட்டர் தாத்ஸ்; Conditions differ in life. Some extent it makes sense, some extent it annoys.



 

வெங்காயம் நறுக்கிய "கத்தி"

எலிப்டிக்கலை ((elliptical) மிதித்தபடி, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்  ..."என்னாச்சு....?"

சலிப்பும் எரிச்சலுமாய்.. "கோச்சிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா..."
"...................................." 

எப்படி ரியாக்ட் செய்யறதுன்னு தெரியல....  சின்ன சின்ன விசயத்தை பெருசாக்கி.. ...... ச்சே...!! உப்பு பொறாத விசயமெல்லாம் மனுசனுக்கு எவ்வளவு மன உளைச்சலை தருது???.... அதும் பெண்ணுக்குள் தான் எத்தனை "multiple personality?". அம்மா' வாக அதீத அன்பை பொழியும் அவளே,  மருமகளாக/மாமியாராக/நாத்தனாராக .."வில்லி" என பெயரெடுப்பதும்..? அவளைப்படைத்த ஆண்டவனுக்கே அவளை புரிந்துக்கொள்ள முடியுமான்னு தெரியல.

எலிப்ட்டிகல்ஸ் ஐ விட்டு இறங்கி தரையில் செய்ய வேண்டிய
உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். அவளும் நேரம் முடிந்து பக்கத்தில் வந்து நின்றாள்.

"எத்தனை நாள் தான் போட்டும் போட்டும்னு சும்மா இருக்கறது? நானும் பலமுறை இப்படி செய்யாதீங்கன்னு அமைதியா பொறுமையா சொல்லிப்பாத்துட்டேன்... திரும்ப திரும்ப அதையே செய்யறா....சுத்தமா ப்பிடிக்கல எனக்கு...."

"நீ அம்மாவை விட்டு சொல்ல சொல்லியிருக்கலாம்...."

"ம்க்கும்.....அடிக்கடி சொல்ற என்னையே மதிக்கல... இதுல அம்மாவையா மதிப்பா அவ? திமிர் பிடிச்சவ.... இவள எல்லாம் ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கனும்.. இல்லைனா... தலமேல ஏறி உக்காந்து மொளகா அரைச்சிடுவா.."

கல்யாணம் முடிஞ்சி 4 மாசம் கூட ஆகல. வீட்டுக்கு வந்த அண்ணி'யை இவளால சகிச்சிக்க முடியல... இவ கல்யாணம் செய்துக்கிட்டு போய் எப்படி இருக்கப்போறாளோ? ..............இதெல்லாம் மைன்ட் வாய்ஸ் தான்.. அவளிடம்..

"உனக்கு டாலரன்ஸ் ரொம்ப கம்மி அலர்."

"எத்தனை தரம் சொல்லிக்கொடுத்தாலும், தினம் செய்யற தப்பையே திரும்ப திரும்ப செய்தால் உனக்கும் டாலரன்ஸ் இருக்காது.."

"என்னோடா அம்மா, நான் ஆபிஸ் விட்டு வரத்துக்கு முன்ன எனக்கு ஈசியா இருக்கும்னு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சி வைப்பாங்க. தினம் மாவு கீழக்கொட்டி இருக்கும், ஆபிஸ் விட்டு வர டென்ஷன்ல
அதப்பாத்தா..கத்துவேன்.... ஆனா அவங்களால முடிஞ்சது அவ்ளோதான்..  'போடி உனக்கு மாவு பெசஞ்சி தரதே பெரிய விசயம்னு" சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.. நான் கத்தறத காதுலக்கூட வாங்க மாட்டாங்க.."

..எனக்கு அம்மா.. அதனால இதைப்பெரிய விசயமா பேசறதில்ல... அதுவே மாமியாரா இருந்தா யோசிச்சிப்பாரு... என்னால கத்தவும் முடியாது.. கத்தினா..அவங்களும் தொடச்சிவிட்டுட்டு போகமாட்டாங்க.....அதான் வித்தியாசம்.. நாம தான் இடத்துக்கு ஆளுக்கு தகுந்தாப்ல போயிட்டே இருக்கனும்... சின்ன சின்ன விசயத்தை பெருசு படுத்தாம விட்டுட்டாவே..பாதி பிரச்சனையை வராது..

"வாஸ்தவம் தான்.. ஆனா சின்னதா இருந்தாலும் ஒவ்வொரு விசயமும் ஒவ்வொரு ரிசல்ட் தரும். ஒரு நாளைப்போல வெங்காயத்தை நறுக்கிட்டு கத்தியை கழுவாம வச்சிப்பாரு, எவ்ளோ நாத்தம் அடிக்கும் தெரியுமா? சமையல் ரூமே நாத்தம் அடிக்கும். கத்தியில் ஒருமாதிரி அழுக்குப்படிய
ஆரம்பிச்சுடும். அந்த கத்தியை வச்சி வேற என்ன நறுக்கினாலும் இந்த வெங்காய நாத்தம் அதிலேயும் வந்துடும்.  இதை அவக்கிட்ட பலமுறை சொல்லிட்டேன். ஆனா அவ எங்க கேட்டா.. ? அதான் நேத்து புடுச்சி வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்.. ! "

".... போக போக சரியாகிடும்ப்பா.. அவங்களுக்கு நீங்க செய்யறாப்ல செய்து பழக்கமிருக்காது. ..கொஞ்சம் டைம் குடு.."

"ம்க்கும் கொடுத்துட்டாலும்,...!!!. என் அண்ணனுக்கு தூபம் போட்டு , அம்மாவையும் என்னையும் தினம் எதாது காரணம் சொல்லி நோண்ட மட்டும் நல்லா தெரியுது.. இது தெரியலையா??..."

"...விடு.. திரும்ப வந்தா எப்படியோ இருக்கட்டும்னு இருக்க பாரு...சண்டை ப்போடாத.. உன்னைத்தான் குத்தம் சொல்லுவாங்க.."

"வந்தாப்பாக்கலாம்.. நீ வேணாப்பாரு, தனிக்குடித்தனம் அடிப்போட்டுட்டு அவங்க அம்மா அப்பா தான் வருவாங்க.. அவ எங்க வரப்போறா?

"..........................."

தெரு நாய்


தெருநாய்களை தெருவில் மட்டுமே பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த வீட்டுக்கு குடிவந்தப்பிறகு தெரு நாய்கள் வீட்டிற்குள்ளும் இருக்கும் என்று தெரியவந்தது அவற்றின் தொல்லையும் தாங்கமுடியவில்லை.

பொதுவாகவே நம்ம யாருக்குமே தெரு நாய்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் பழக்கமில்லை. சாப்பாடு வைத்தாலும் கூட, காம்பவுண்டு சுவரை தாண்டி உள்ளே வராமல் பார்த்துக்கொள்வோம். கடித்துவிடும் என்ற பயமே முதல் காரணமாக இருக்கும். இங்கு காம்பவுண்டு சுவர் கதவு என்னவோ மூடிதான் இருக்கும், ஆனால் இதுங்க, சுவரேறி குதித்து, உள்ளே கூட்டமாக வந்து உட்கார்ந்துக்கிட்டு, குரைச்சிக்கிட்டு, ஊளையிட்டுக்கிட்டு எப்பவும் ஒரே சத்தம். இரவு நேரங்களில் ரொம்பவே மோசம்..ஏன் குரைக்குதுங்க..எதுக்கு குரைக்குதுங்கன்னே தெரியாது... தூக்கம் களைந்து போகுமளவிற்கு சத்தமிருக்கும்..

மொத்தமாக ஒரு 4-5 நாய்கள் இந்த வீட்டை குத்தகைக்கு எடுத்திருந்தன.
நாங்கள் இருப்பதென்னவோ இரண்டாம் தளம், இவை படிக்கட்டில் சொகுசாக காலை நீட்டிப்படுத்து தூங்கிட்டு இருக்கும். எங்களின் நடை சத்தம் கேட்டதும், திரும்பி பாத்துட்டு, கொஞ்சம் கூட மதிக்காம திரும்பவும் அதேமாதிரி படுத்துக்கும். இதுவே வீட்டு ஓனர் வீட்டிலிருந்து யாராவது இறங்கினால், உடனே எழுந்து வழிவிடும்.

எங்கள பாத்தாவே இளச்சிவாய்ன்னு அதுங்களுக்கு தெரிஞ்சிப்போச்சி போல.  இதுங்கல மிதிக்காம இறங்கிப்போக சில தாண்டவங்களை நாங்க பழக வேண்டி வந்தது. இரண்டு மூன்று மாதங்களிலேயே, அதுங்களை மிதிக்காமல் தாண்டி, குதித்து கீழ் படிக்கு செல்ல ‘ஹைஐ லாங் ஜம்ப்” ஐ  நல்லாவே பழகிட்டோம்.  
வெளியூர் சென்று, திரும்ப நடு இரவாகிவிடும் என்ற ஒருநாளில்,  வீட்டு ஓனரிடம் வெளி கேட்’ சாவி கேட்க சென்றோம். அவங்களோ..

“வெளிக்கதவை நாங்க பூட்டறதே இல்லையே.. ஆனா.. இருட்டில் ஜாக்கறதையாக வாங்க.. இந்த தெருநாய்கள் அங்க இங்கன்னு படுத்துக்கிட்டு இருக்கும்.. அதுங்கள மிதிக்காம வந்தாவே நாம பிழைச்சோம். அதுங்களைத்தவிர இங்க வேற எந்த பயமும் இல்லை” ன்னாங்க..

“ஏன் துரத்தி விடலாமே” என்றோம்.

“ ம்ஹூம், எவ்ளோ முயற்சி செய்துட்டோம்.. எதுக்கும் கட்டுப்படல,  நீங்களே பார்த்திருப்பீங்களே....எல்லாப்பக்கத்திலும், சுவர் ஏறி குதிச்சி வருது.. என்னதான் செய்வோம்.. இப்ப அதுங்க ராஜ்யம் தான்..” என்று சோகத்தோடு சொல்லி முடித்தனர்.


பகலும் இரவும், நாய்களின் சத்தத்தோடு ஓரளவு பழகிவிட்டது. அப்பறம் கவனிக்கும் போது தான் தெரிந்தது, அக்கம் பக்கம் எதிர்வீடு என யார் வீட்டுக்கும் இந்த நாய்கள் போவதே இல்லை. அட..?! இது எப்படி சாத்தியம், அங்கவும் சுவர் ஏறி குதித்து செல்லலாமே ஏன் போக மாட்டேங்குதுங்க..? ன்னு எனக்கு மண்டை காய ஆரம்பிச்சிது.

பயாஸ்கோப் கண்களோடு காரணத்தை அறிய அவற்றை கவனிக்க ஆரம்பித்தேன்.  ஒரே ஒரு நாய் உள்ளே சென்றாலும் கூட, அதை அடித்து விரட்டாமல் அடுத்த வேலைக்கு யாரும் போவதில்லை. ஆனால் எங்க வீட்டில் நேர் மாறாக நடந்துக்கொண்டிருந்தது.

கீழ் வீட்டில் , கல்லூரிக்கு செல்லும் பெண் ஒருத்தி இருக்கிறாள். சாக்கடையிலும், தெருவில் கண்டதை சாப்பிட்டு, தோலில் சிரங்கு வியாதியோடு திரியும் இந்த நாய்களை, கையால் தொட்டு தடவி, அதுங்களை செல்லம் செல்லமாக கொஞ்சி, பிஸ்கெட், சாப்பாடு எனப்போட்டு... .....

எப்படி அதுங்க இங்க வராம இருக்கும் ?!!

அவளுக்கு அந்த நாய்கள் மேல் உள்ள பிரியம் ஆச்சரியமாக இருந்தது. இன்றுப் பார்க்கிறேன். ஒரு நாய்க்கு, ப்ளாஸ்ட்டிக் குடுவையில் தண்ணீர் கொண்டு வைத்து... வா வந்து குடின்னு கெஞ்சிக்கிட்டு இருக்கா... “
அது குடிக்காமல் இங்கவும் அங்கவும் போகுது... ஓடிப்போய் நெற்றியில் ஒரு முத்தமிட்டு, அது போகிற இடத்துக்கெல்லாம் தண்ணியை பின்னாடியே எடுத்துட்டு போறா...

நடுநடுவில் அவளின் முத்தங்களை நெற்றியில் வாங்கிக்கொண்டு.. முறுக்கிக்கொண்டு இவளுக்கு போக்குக்காட்டி, அங்குமிங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறது அந்த தெருநாய்..!! 

Images courtesy Google : Thanks 

திரைசீலை

எங்களின் ஆட்டோவைப் பார்த்ததும், மாமா வேகமாக இறங்கி தெரு கிரில் கேட்டை நோக்கி ஓடிவந்தார்....

"வாங்கக்கா.. நானே வந்து அழைச்சிட்டு வரேன்னு சொன்னா கேட்டீங்களா?"

"வழி தெரியாட்டி பரவாயில்ல.. நீ எதுக்கு வரனும்?! "

மாமி பின்னாலேயே வந்து வரவேற்றார்..

"மாமா எல்லாம் ஃபோன்ல சொன்னாருக்கா.. ..என்ன அனு எப்படி பிரிப்பேர் செய்திருக்க? " என்னை தோளோடு சேர்த்து அணைத்தபடி கேட்டார்.

"நல்லா பிரிப்பேர் செய்திருக்கேன் மாமா.."

மாமி... தண்ணீர் கொடுத்துவிட்டு குசலம் விசாரிக்க ஆரம்பிச்சாங்க..
மாமா ஆபிஸ் கிளம்பனும்னு சொல்லிட்டு, குளிக்க உள்ளே செல்ல, அம்மாவும் மாமியும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.. நான் சோபாவில் உட்கார்ந்து மாமாவின் குட்டி மகளுடன் விளையாட ஆரம்பிச்சேன்...

அம்மா... மாமியிடம்.. "என்னமா இது.. ஏன் மேல இருக்க வெண்டிலேட்டருக்கு எல்லாம் ஸ்கீரின் போட்டு வச்சியிருக்கீங்க? "

"ம்ம்க்கும்..அதை உங்க தம்பிய கேளுங்க..எதிர் வீட்டு ஆளு இங்கவே எந்த நேரமும் பாக்கறாராம்... அதும் என்னை தான் பாக்கறாராம்..அதுக்காக இந்த ஏற்பாடு.. " கடுப்பாக பதில் வந்தது..

"ஓஹோ..அது சரி.. ஜன்னலுக்கு ஒக்கே..அது ஏன் மேல வென்ட்டிலேட்டருக்கு எல்லாம் போட்டிருக்கான்.. ?!"

"ஹான் இங்கெல்லாம் ஸ்கிரீன் போட்டுட்டோம்னு, எதிர் வீட்டு ஆளு மேல மாடியில் நின்னு பாக்க ஆரம்பிச்சிட்டாராம். அதனால மேலயும் போட சொல்லி ஒரே வம்பு... "

"என்னமோ போ.. ஹால்ல சுத்தமா வெளிச்சமே இல்ல.."


"உங்க தம்பிக்கிட்ட சொல்லுங்க.. நீங்க சொன்னாவாச்சும் கேக்கறாரான்னு பாக்கலாம்..."

**************

அம்மா, மாமாவிடம் இந்த ஸ்கிரீன் விசயமா பேசல.. என் பரிட்சை விசயமா பேசிட்டு.. மதியம் கிளம்புவதாக சொல்லி, மதியம் சாப்பாடு முடித்த கையோடு கிளம்பிட்டாங்க..

மாமா அலுவலகம் செல்லும் போதே குட்டிப்பொண்ணையும் ஸ்கூலில் விட கூட்டிட்டு போயிட்டாரு...

எனக்கு நாளை தான் பரிட்சை, மாமா தான் கூட்டிட்டு போகனும். என் புத்தங்கங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிச்சேன்..

மாமா சென்ற கொஞ்ச நேரத்துக்கெல்லாம், மாமி, அவசர அவசரமாக ஜன்னல் ஸ்கிரீனை ஒதுக்கி வைத்து, ஜன்னல் கதவை சிறிய இடைவெளி இருக்கும் படி மூடிவைத்து,  (அதாது வெளியிலிருந்து பார்த்தால், உள்ளிருந்து யாரும் கவனிக்கிறார்கள் என்று தெரியாது), ஆர்வமாக எதையோ பார்த்துக்கிட்டு இருந்தாங்க.. அவங்க முகத்தில் அப்படியொரு பரவசம்.... .....

என்ன பார்க்கறாங்கன்னு தெரியல.... எதையோ பார்க்கட்டும் நமக்கென்னன்னு நான் படிச்சிக்கிட்டே இருந்தேன்.. தீடீர்னு என் நினைவு வந்தவங்களாக என்னை திரும்பி பாத்தாங்க..

லேசாக புன்வறுவல் செய்தேன்..

என்ன நினைச்சாங்கன்னு தெரியல.. "அனு அனு... இங்க வாயேன்.. இந்த சந்து வழியா எதிர்பக்கம் அந்த மூணாவது வீட்டைப்பாறேன்.. அங்க ஒருத்தர் பிங்க் கலர் சட்டைப்போட்டுட்டு பேசிக்கிட்டு இருக்கார் இல்ல..அவரு ஒரு டாக்டர்..  இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கி நம்ம வீட்டு வழியா நடந்து போவாரு.. .. அவர் பேசும் போது லேசா சிரிச்சாக்கூட அவர் முகம் சிவந்துடும் பாரேன்..அவ்ளோ கலரு அவர்... "

அவங்க ரகசியமாக பார்ப்பதை பார்த்து, தப்பா நினைச்சிக்க போறேன்னு,  என்னையும் அழைத்து காட்டறாங்கன்னு புரிந்தது. மாமி கூப்பிட்டும் போகாமல் இருந்தால் மரியாதை இல்லையேன்னு, சென்று பார்த்தேன்.

ஆமா, அவங்க சொன்ன மாதிரியே அங்க ஒருத்தர் நின்னு பேசிக்கிட்டு இருந்தார்...

"மாமி படிக்க நிறைய இருக்கு" ன்னு சொல்லிட்டு வந்து புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன்..

மாமா போட்டிருந்த  திரைசீலை காற்றில் அசைந்து வந்து என்னைத்தொட்டு சென்றது.... ............

 
Images courtesy Google : Thx.