எதை எழுதவேண்டும் என்றாலும், அதைப்பற்றிய விஷய ஞானம் கொஞ்சமாவது நமக்கு இருந்தால், ஓரளவு சிறப்பாக எழுதமுடியும். பொதுவாக எனக்கு தெரியாத விஷயத்தை எழுதும் போது, தெரிந்தவர்களிடம் கேட்பேன், பிறகு அதை கூகிலில் தேடி, இன்னும் கொஞ்சம் விபரங்கள் அறிய முற்படுவேன். இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன், என்னோட குடிகார நண்பர்கள் யாரிடமாவது கேட்போம் என்று நினைத்தேன். நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே சொல்லிவைத்தார் போல குடிப்பழக்கம் இல்லாமல் போனது வருத்தமளித்தது :(. சரி எப்படியாச்சும் இதை பத்தி எழுதியே ஆகனும் னு முடிவு செய்து. .வூட்டுக்காரை கேட்டு பார்ப்போம்னு ஆரம்பிச்சேன்.
"ப்பா.. என்னை டாஸ்மாக் கூட்டிட்டு போறீங்களா? அங்க எல்லாரும் என்ன செய்யறாங்கன்னு நான் பாக்கனும்.." ன்னு சொல்லி முடிக்கல. .
"ஆஹா..எனக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா.? எவ்வளவு நல்லவளா இருக்கா? கட்டின புருஷன டாஸ்மாக் கூட்டுட்டு போன்னு சொல்றாளே... உலகத்திலேயே நாந்தாண்டி கொடுத்து வச்சவன்... "
" அடடா..நிறுத்துங்க..உங்கள டாஸ்மாக் கூப்பிடாட்டாலும், நான் நல்லவத்தான்..(இப்ப சொல்லிக்கிட்டாத்தான் உண்டு) ஆனா ஒன்னு. அங்க வந்து என்னை கம்பெனி கொடுன்னு சொல்லக்கூடாது, குடிக்கறவங்கள மட்டும் வேடிக்கை பாத்துப்பேன், அதுக்கு ஒன்னும் சொல்லப்பிடாது..."
"ஆஹா..இது அதைவிட நல்லா இருக்கே. புருஷன குடிச்சிக்கோ னு சொல்ற பொண்டாட்டி உலகத்திலேயே நீதாண்டி. .சரி சொல்லு சொல்லு எப்ப போலாம்?
ஏன் இவரு இப்படி அலையராரு.. தண்ணீ 'ன்னா.. எல்லாரும் இப்படித்தான் நாக்கை தொங்கப்போட்டு அலைவாங்களோ..? அப்படீன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு .... "போலாம் போலாம்.. ரொம்ப அலையாதீங்க.. " ன்னு சொல்லி வேறு பேச ஆரம்பித்துவிட்டோம்.
நிற்க, 1995 ல் பக்கத்துவீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்ணை பற்றி, பக்கத்து வீட்டு பெண், கதை கதையாக சொல்ல, அப்போது ஒரு "Rehabilitation Centre" அட்ரஸ் கண்டுபிடித்து, அந்த பெண்ணை வரவைத்து, "ரூ.5000/- செலவாகுமாம். உன் புருஷனை சரியாக்கிவிடுவார்கள். ஒரு முறை கொண்டு போய் காட்டிவிட்டு வாயேன் "என்று சொன்னேன். "நான் சம்பாதிக்கற பணத்தையும் சேர்த்து வாங்கி குடிச்சிபுடுது, தெரியாம மறச்சி வச்சி ஏதோ குடும்பத்தை ஓட்டறேன், புள்ளக்குட்டிகளை படிக்க வைக்கிறேன். நான் எங்கம்மா போவேன் 5000 ரூபாய்க்கு" என்றார். அவரிடம் எதுவும் சொல்லாமல், அவர் சென்றவுடன் பக்கத்துவீட்டு பெண்ணிடம் இதைப்பற்றி பேசியபோது, "ஏன் தேவையில்லாத வேல நீ செய்யற, என் புருஷன் குடிச்சிட்டு இருந்தாலும் பரவாயில்ல.. 5000 ரூபாய் எல்லாம் செலவு செய்யறது வேஸ்ட்டு அது இருந்தா 3/4 பவுன் நகை வாங்குவேன் னு சொல்லுது.. அதுக்கு போயி ஹெல்ப் பண்ண நினைக்கறயே நீனு" என்றார். அத்தோடு இந்த விஷயத்தை விட்டுவிட்டேன்.
1995 ல் எங்களிடம் தொலைபேசி, கம்பியூட்டர், இண்டர்நெட் வசதி இல்லை. வெளிஉலகம் தெரியாது, குதிரைக்கு கடிவாளம் இட்டது போல், வேலைக்கு செல்வேன், வருவேன். அவ்வளவே. இதற்கு எல்லாம் வைத்தியம் இருக்கிறது என்பதும் தெரியாது, ஆனால் அந்த பெண் கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்து சும்மா இருக்க முடியாமல், எப்படியோ அங்கிங்கு விசாரித்து ஒரு மறுவாழ்வு இல்லத்தை கண்டுபிடித்து சொல்ல முடிந்தது.
சமீபத்தில், உறவினர் ஒருவருக்காக, "Just Dial" க்கு ஃபோன் செய்து, மறுவாழ்வு இல்லங்களை பற்றி தகவல் கேட்டேன். எத்தனை மருத்துவமனைகள்... எண்ணி சொல்லமுடியாத அளவு வந்து குவிந்தன. பலர் அவர்களாக என்னை அழைத்து பேசினர். நானாக சிலரை அழைத்தும் பேசினேன். சென்னையில் மற்றும் சுற்று வட்டாரத்தில் தடுக்கி விழுந்தால் மது மற்றும் போதை மறுவாழ்வு இல்லங்கள் உள்ளன. இந்த நோயாளிகள் குணமாகி வந்த பிறகு, அவர்களை தனிமைப்படுத்த கூடாது அல்லது தனியாக இருக்கவிடக்கூடாது என்பதே மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.
இதற்கு குறைந்த பட்சம் ரூ.300/- லிருந்து அதிகபட்சம் ரூ.10000/- & 15000/- வரை சிகிச்சை முறைக்கு தகுந்தார் போன்று வாங்குகிறார்கள். Out patient ஆக 3 நாட்கள் (வாரத்தில் 1 சிட்டிங் வீதம் 3 வாரங்கள்) முதல், In patient ஆக ஒரு மாதம் - மூன்று மாதம் வரையிலான சிகிச்சை அளிக்கப்படுகிறது.நோயாளியின் ஒத்துழைப்பை பொறுத்து, இந்த சிகிச்சை காலம் மாறுபடுகிறது.
ஒருவர் அளவுகடந்து குடிக்கிறார் /போதைப்பொருள் பயன்படுத்துகிறார் என்று தெரிந்தால், அதனால் நமக்கும், அவருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பிரச்சனைகள் வருகிறது என்ற தெரிந்தால், புரிந்தால், தேவையான சிகிச்சையை, அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு மனிதனுக்கு நிதானம் தவறி போகும் அளவிற்கு இருக்கும் பழக்கங்கள் அவர்கள் வேண்டுமென்றே தனக்கு தேவையென்று பழக்கப்படுத்திக் கொள்வது இல்லை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் பழக்கமாகி, அதை விட்டுவிடக்கூடிய மன உறுதி இல்லாத போது, அதையே நாடி சென்று, அதில் தான் வாழ்க்கையின் அத்தனை சந்தோஷமும் இருப்பதாக அடிமையாகி விடுகிறார்கள். அது உண்மையில்லை என்பதை உணரவைப்பது, அந்த மனிதர்களை சுற்றியுள்ள நம்மின் கடமையாகிறது. ஒருவன் குடிக்கிறான், போதை வஸ்து சாப்பிடுகிறான் என்று வெறுத்து ஒதுக்குவதை விடவும், அவனிடம் அன்புக்காட்டி, அவனுக்கு தேவையான சிகிச்சையை அளிப்பதன் மூலம் அவனுக்கும் மறுவாழ்வு கிடைக்க செய்யலாம், அவனால் அவனுக்கும் துன்பம் இருக்காது, மற்றவர்களுக்கும் இருக்காது.
இப்படிப்பட்டவர்களை சரிசெய்ய, நமக்கு நல்ல மனப்பக்குவமும், சமயோஜித புத்தியும், முதிர்ச்சியும், நிதானமும், அவர்களின் கொடுஞ்செயல்களை கண்டு அஞ்சாத மனவலிமையும், அவர்களை எதிர்த்து விடாமல், அன்பாகவும், அமைதியாகவும் தகுந்த தீர்வை காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவர்களை வெறுத்து ஒதுக்குவதன் மூலம், இன்னமும் மோசமான நிலைமைக்கு தான் அவர்கள் செல்வார்களே ஒழிய, மாறிவிட மாட்டார்கள். ஒருவரின் வாழ்க்கை நம் கண் எதிரில் அழிய நாம் காரணமாக இருக்கக்கூடாது. தெருவில் குடித்துவிட்டு விழுந்துக் கிடப்போர் அனைவருக்கும் நம்மால் உதவி செய்ய முடியுமா என்றால் முடியாது, ஆனால் நம்மை சுற்றி உள்ளவர்களில் யாரும் அப்படி இருந்தால், உதவமுடியும். இதற்கு அடிப்படை தேவை அந்த மனிதனின் மீது நாம் வைக்கும் உண்மையான அன்பும், அவனும் நம்மை போன்ற ஒரு மனிதன் என்ற நினைவும் தான்.
இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா, குடிப்பழக்கதிற்கு அடிமையாகி, அதனால் உடல் பாதிக்கப்பட்டு, நலிவடைந்து இறந்தார் என்பது அனைவரும் அறிந்தது. இவை வெளிச்சத்தில் இருக்கும் ஒரு உதாரணம் இப்படி பல, நாம் அறியாமல் நடக்கத்தான் செய்கின்றன.
நம் ப்ளாகர் நண்பர் செந்தழல் ரவி க்கு, சிகிரெட் பழக்கம் ஓவராகவே இருந்தது. இப்போது அறவே இல்லை, நிறுத்திவிட்டார். மன உறுதியும், மனைவி, குழந்தை, குடும்பம் போன்ற கூடுதல் பொறுப்புகளும் காரணமாக இருந்து இருக்கின்றன. இதனை அவர் பதிவொன்றில் படித்தேன்.
என்னுடைய அலுவலகத்தில் ஒரு முறை, புது பிராஜக்ட் கிடைத்தவுடன், தண்ணி பார்ட்டிக்கு ஏற்பாடாகியிருந்தது. என்னை சேர்த்து இருவர் பெண்கள். மற்ற அனைவரும் ஆண்கள், மொடா குடியர்கள். எல்லோரும் குடித்துக் கொண்டு இருக்க, என்னுடன் வந்த பெண்ணை அழைத்து, என் சியிஓ ஏதோ தனியாக பேசிக்கொண்டு இருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்த பெண் இரு கண்ணாடி டம்ளர்களில், கோல்ட் காஃபி என்று எதையோ எடுத்துவந்தாள். "லேடிஸ், உங்களுக்கு கோல்ட் காஃபி" என்று சிரித்துவிட்டு சென்று விட்டார் சியிஓ. நானும் அந்த பெண்ணும் தனி அறையில் இருந்தோம். அவள் அதனை குடிக்க ஆரம்பித்து இருந்தாள், எனக்கு ஏன் சியிஓ அவளை தனியாக அழைத்து பேசினார் என்ற சந்தேகம் இருந்ததால், குடிக்காமல் முகர்ந்து பார்த்தேன், அறியாத வாசனை எதுவும் வரவில்லை.
அவளிடம் "ஆல்கஹால் கலந்துள்ளதா "என்றேன். அவள் சிரித்துவிட்டு, "இல்லை கவி, இதோ பார் நான் குடிக்கிறேன்" என்று குடித்துக்காட்டினாள், எனக்கு நம்பிக்கை வரவில்லை. நான் குடிக்கிறேனா என்பதை சியிஓ வேறொரு இடத்தில் இருந்து கவனிப்பதாக எனக்குப்பட்டது. சந்தேகம் போகவில்லை, எனக்கு அந்த பாட்டிலை காட்டு என்றேன். அவள் பேன்ட்ரி சென்று, அங்கிருந்தபடியே ஒரு பக்கம் காஃபியும், மற்றொரு பக்கம் பாலும் நிறைந்து இருந்த பாட்டிலை காட்டினாள், மலேசியாவிலிருந்து வந்தது, இந்தியாவில் இது போல் இல்லை என்றாள். அவள் துபாயில் சிறிது காலம் வசித்துவந்தவள். அவளுக்கு அந்த பானத்தை பற்றி தெரிந்திருப்பதாக நினைத்தென். என் க்ளாஸை பார்த்தேன், அந்த காஃபியும், இரண்டு ஐஸ் க்யூப்ஸ் போட்டு இருந்தாள். சரி என்னத்தான் ஆகிறது பார்க்கலாம் என ஒரு சிப்' குடித்தேன். குளிர்ச்சியுடன், லேசான எரிச்சலுடன் வயிறு முழுக்க ஏதோ ஒன்று பரவலாக பரவியது போன்று இருந்தது. வெறும் காஃபி இப்படி இருக்காது. இதில் ஆல்கஹால் கலந்து இருக்கும் என்று ஊர்ஜிதம் செய்தபோது சியிஓ என் பக்கம் வந்து. "எப்படி இருக்கிறது" என்றார். எப்படி இருந்தது என்று சொன்னேன். ஒரே சிப் க்கு இவ்வளவு சீன் ஆ.. ? அது வெறும் காஃபி தான். மலேசியா காஃபி என்றார். எதுவும் எதிர்த்து வாதிடவில்லை, அவரிடமும், அவளிடமும் நார்மலாக பேசிக்கொண்டே பேன்ட்ரி சென்று அந்த பாட்டிலை எடுத்து படித்து பார்த்தேன், 45% ஆல்கஹால் & காஃபி, மில்க், சுகர் இன்னும் சில பெயர்கள் எழுதி இருந்தன. வாஷ் பேசினுக்கு நேராக சென்று வாய் கொப்பளித்து, அவர்கள் அறியாமல் இதையும் ஊற்றிவிட்டு வந்துவிட்டேன். இந்த ஒரு சிப்'கே எனக்கு உடல் நலம் சரியில்லை என்று அடுத்த நாள் வேலைக்கு போகாமல் மட்டம் போட்டு ஓவர் சீன் போட்டது வேறு கதை. :))
இத்தனை சென்ஸிடிவ் வாக எடுத்துக்கொண்ட என்னையும், சாதாரணமாக இரண்டு கிளாஸ் குடித்த மற்றொரு பெண்ணை பார்த்து கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது, அது அவள் விருப்பம், இது என் விருப்பம். யாரும் யாருடைய விருப்பதிலும் தலையிட அவசியம் என்ன இருக்கிறது. அவளுக்கு அது பிடித்து இருந்தது, மாறாக என்னால் அதை குடிக்கவே முடியவில்லை. இது தான் தனிமனிதர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட வித்தியாசங்கள்.
எல்லா போதைக்கும் இப்போது சிகிச்சை உள்ளது. அடிமையானவர்கள் தவிர்த்து, பொழுதுப்போக்கு, பார்ட்டியில் குடிப்பது போன்றவை தேவையா தேவையில்லையா என்பதைவிடவும், அதனால் பிரச்சனையில்லாத போது, அது தனிமனித சுதந்திரம் என்று விட்டுவிட வேண்டியது தான். எல்லாவற்றிற்கும் இப்போது சிகிச்சை உள்ளது. அதை புரிந்து, அறிந்து, தேவையான நேரத்தில், அதை சரிவர பயன்படுத்தி நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவரையும் சந்தோஷமாக வாழ வைப்போம்.
அணில்குட்டி அனிதா : அம்முனி.. எப்ப நீங்களும் உங்க வூட்டுக்காரரும் சோடி'யா டாஸ்மாக் போறீங்க....சொன்னீங்கன்னா..நானு
பீட்டர் தாத்ஸ் : Drunkenness is temporary suicide: the happiness that it brings is merely negative, a momentary cessation of unhappiness”
“Drink moderately, for drunkenness neither keeps a secret, nor observes a promise”
“Water is the only drink for a wise man.”
படங்கள் : நன்றி கூகுல்
.
குடிகாரன் பேச்சி பொழுதானப் போச்சி
Posted by : கவிதா | Kavitha
on 08:56
Labels:
சமூகம்,
நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
38 - பார்வையிட்டவர்கள்:
அணிலு , இந்த தத்து மம்மியை நம்பி போகாதே, உன்னை சைட் டிஷ் ஆக்கிடுவாங்க :)
"ப்பா.. என்னை டாஸ்மாக் கூட்டிட்டு போறீங்களா? அங்க எல்லாரும் என்ன செய்யறாங்கன்னு நான் பாக்கனும்.." ன்னு சொல்லி முடிக்கல. .//
பளார்னு வாய் மேல ஒண்ணு போட்டாருன்னுல்ல இந்த இடத்தில வந்திருக்கனும்,, என்ன தத்து மம்மி டாடி பேரை டேமேஜ் பண்ரே
கவி காமெடியா ஆரம்பிச்சி இருந்தாலும் பகிர்வும் தகவல்களும் நல்லாயிருக்குடா..
கவி உண்மையிலே நல்ல பயனுள்ள பதிவு.. நல்ல தகவல்கள்,,
திருந்திட்டியோ #டவுட்டு
@ விஜி : என்னையத்தான் மம்மி ங்கற சரி ன்னு விட்டா..ஏண்டி மாம்ஸ் ஐ டாடி'ங்கற... ஒதப்படுவ.மகளே!! உனக்கேல்ல்லாம் அவரு அப்பா வாகி இருந்தா. .எப்பவோ.. உன்னை நசுக்கி தூக்கி போட்டு இருப்பாரு.. ஓடி போயிடு..
//அணிலு , இந்த தத்து மம்மியை நம்பி போகாதே, உன்னை சைட் டிஷ் ஆக்கிடுவாங்க :)//
ஓ தண்ணிக்கு பிரியாணி எல்லாம் சைட் டிஷ் வைப்பாங்களா. ?? ஒரு சினிமால க்கூட காட்டவே இல்ல..?? ரொம்பத்தாங்ஸ் விஜிக்கா.. அப்ப கண்டிப்பா அணிலை கூட்டிட்டு போயிட வேண்டியது தான்..
//பளார்னு வாய் மேல ஒண்ணு போட்டாருன்னுல்ல இந்த இடத்தில வந்திருக்கனும்,, என்ன தத்து மம்மி டாடி பேரை டேமேஜ் பண்ரே//
வேற மேட்டரா இருந்தா அடி விழுந்து இருக்கும் தான், இது தண்ணி மேட்டர் னால. .அடி விழல.. :)) ஆல் மென் ஆர் ஈசி இன் திஸ் :)) ஐ கெஸ்.. :))
@ தமிழ் : ஓ உனக்கு காமெடியா இருக்கா.. நிஜம்மாவே இதை ப்பத்தி தெரிஞ்சிக்க கேட்டதுப்பா.. நோ காமெடியா சீரியஸ்.. தண்ணி ய ப்பத்தி எப்படித்தான் நான் தெரிஞ்சிக்கறது நீயே சொல்லு..??
@ விஜி : எப்ப கெட்டுவளா இருந்தேன்.. திருந்த?? வேளச்சேரியில சிலை வைக்க ஏற்பாடு நடக்கது தெரியாது.. என்ன அதுக்கு நான் செத்துப்போகனும்னு சொல்றாங்க..அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.. :)))))
டாஸ்மாக் இருக்கும் தெருவழியாப் போனாவே போதுமே கவி.
நிலமை புரிஞ்சுறாதா?
நல்ல தகவல்கள்...!
"குடிகாரன் பேச்சி பொழுதானப் போச்சி"
’’குடிகாரன் பேச்சி பொழுது விடிஞ்சா போச்சி’’
எது சரி ...?
@ துளசிஜி : ம்ம் போதும்தான்.. ஆனா அவங்க போதையில் தன்னை இழந்து பேசற விஷயங்கள், கூத்துக்கள் எல்லாம் பார்க்கனும்னு ஆசை. தெருவில் பொதுவாக ரொம்ப ஓவரா இதெல்லாம் நடக்காது, அதிகபட்சம், ப்ளாட் ஆகி கீழத்தான் விழுந்து கிடப்பாங்க. :(
@ தமிழ் அமுதன் : நன்றி... தெரியல.. எனக்கு இப்படித்தான் தலைப்பு வைக்க வந்தது.. :))
\\விஜி said...
"ப்பா.. என்னை டாஸ்மாக் கூட்டிட்டு போறீங்களா? அங்க எல்லாரும் என்ன செய்யறாங்கன்னு நான் பாக்கனும்.." ன்னு சொல்லி முடிக்கல. .//
பளார்னு வாய் மேல ஒண்ணு போட்டாருன்னுல்\\
:))))))))
நல்ல பகிர்வு... அணில் குட்டியவும் கெடுத்துடாதீங்க... அப்புறம் அடுத்த பதிவுல தண்ணிய போட்டுட்டு வந்து கமெண்டப் போகுது.
விகடனில் தொடராக வந்த, சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” இந்த விஷயத்தை முழுமையாக கவர் செய்கிறது.
பார்க்க: http://jeeveesblog.blogspot.com/2008/03/blog-post_28.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
செம கிக்கான போஸ்ட்டுப்பா:-))
ஆமா ரவி விட்டாச்சா சிகரட்டை? மவனே நேர்ல பார்க்கும் போது ஒரு போன் பாக்கெட் காம்ப்ளிமெண்ட்டா குடுக்கனும்!
இதுக்கு எதுக்கு டாஸ்மாக் போகனும், லக்கியோட காண்டுகஜேந்திரன் படிச்சா போதுமே, பொங்கி பொங்கி வாந்தி எடுக்கலாமே:-)))
மது அடிமைகள் மறுவாழ்வு எல்லாம் சுத்த ஹம்பக்! எனக்கு தெரிஞ்சு ஒரு தெருகாரர் போயிட்டு 15 நாள் ட்ரீட்மெந்த்ல பைத்தியம் ஆகி அங்க இருந்து தப்பிச்சு வந்தாரு. இப்ப குடிக்க ஆரம்பிச்சு நல்ல மனுஷனா குடியும் குடித்தனமுமா இருக்காரு:-)))
@ சே.குமார் : அணிலு நல்ல நாளிலேயே அப்படித்தான் பேசுது.. :))
@ வித்யா :ம்ம்..ஒரு கூட்டமாத்தான் திரியராங்களா??? :))
@ ராகவன் சார் : ம்ம் நன்றி பார்க்கிறேன். :)
@ அபிஅப்பா : லக்கியோட பதிவ படிச்சதன் விளைவு தான் அதை எல்லாம் நேர் ல பாக்கனும்னு ஆசை :)
மறுவாழ்வு இல்லங்கள் : பணம் பார்க்கும் இடங்கள் அல்லது நபர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் திருந்தியவர்களும் அதிகம் உண்டு. அவர்களை திரும்பவும் அவ்வழி செல்லாமல் இருக்க உற்றார், உறவினர், நண்பர்கள் துணையும் அன்பும் அரவணைப்பும் க்கண்டிப்பாக வேண்டும்.
பீட்டர் தாத்தா ஜூப்பருங்கோ :)
Hai Thaththu Mummy! Ennaiyum Ange thookkittu ponga thathu mammy
"குடிமகன்களை" வைத்து தான் தமிழக அரசு இலவசங்களை அள்ளி கொடுக்கமுடிகிறது
ப்ளாக் எழுதறவங்களுக்கு அந்த பழக்கத்தை கை நடுக்கம் இல்லாம இருந்த ஏதாவது rehab இருக்கா ? உங்க influence யூஸ் பண்ணி கண்டுபிடிச்சி சொல்லுங்களேன் !
தமிழ்மண நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்.
இப்பல்லாம் பெரிய எழுத்தாளர் அளவுக்கு எழுதறீங்க !!!
@ சுல்தான் : நன்றி :)
@ சிபி : பாழுங்கிணத்துல அதுவும் தண்ணியில்லாத கிணத்துல தான் தூக்கிப் போடனும்.. :))
@ நா.மணி: ம்ம்ம்.. தெரியுமே.. நான் சொல்லியிருப்பது, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களைதான்.
@ மணிகண்டன்: :) நன்றி. கையை எப்பவுமே நடுங்காம செய்ய வழி இருக்கு.. .ஆனா ப்ளாக் த்தான் எழுத முடியாம போயிடும்.. ஓக்கே வா? :)))) (எடுடா அந்த அருவாளை)
@ ரவி : பார்றா... சிரிப்பான் போடாம காமெடி கமெண்டு போட்டுட்டு போறாரு இவரு... :))
மூன்று ரூபாய்க்கு குடித்த வாசம் வராமல் இருக்க மருந்து விக்கறாங்க டாஸ்மாக் இல்
குடி போதை நிறுத்தும் விளம்பரம் ஒரு வியாபாரம்
பொண்ணுக குடிச்சா ஆண்களுக்கு சந்தோசம்
குடிகாரன் பேச்சு பொழுதானா போச்சு ஆனா பொம்பளைங்க பேச்சு அப்பவே போச்சு
எது பெஸ்ட் யோசிங்க
மிகவும் அருமையான பதிவு. எப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்பதான அறிவுரை மிகவும் சிறப்பு. 'ஏனோ தானோ' என எழுதாமல் சிரத்தையுடன் எழுதி வருவதற்கு பாராட்டுகள்.
குடிப்பழக்கத்தை விடும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகள் என்ன என்பதை தொடர் பதிவாக எழுதினால் பலரும் பயன் பெறுவார்கள்.
குடிப்பழக்கத்தை திடீரென நிறுத்தி உயிர் போனவர்கள் உண்டு.
சென்ற பதிவின் பின்னூட்டத்திலும் இந்த பதிவின் பின்னூட்டத்திலும் நான் ரசித்த மற்ற விசயங்கள்.
உங்கள் மகன் பெயர் போலவே என் மகன் பெயரும் நவீன் தான் :)
'தத்து மம்மி' ஹா ஹா! தத்து பிள்ளை மட்டுமே கேள்வி பட்டு இருந்த எனக்கு இந்த தத்து மம்மி சிரிப்பை வரவழைத்தது. கலக்கல் பதிவர்கள். :)
'தத்து மம்மி'
மேடம்..
வூட்டுக்காரரோட டாஸ்மாக்குக்கு பவனி போகும்போது மறக்காம என்னையும் கூப்பிடுங்க. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நிகழ்வை மூன்று புல் பக்கங்களில் உங்களுக்காக எழுதுகிறேன்..
இதற்காக எனக்கு எந்த குவார்ட்டரும், ஆஃபும், ஃபுல்லும் வேண்டாம்..!
\\மூன்று ரூபாய்க்கு குடித்த வாசம் வராமல் இருக்க மருந்து விக்கறாங்க டாஸ்மாக் இல்\\
மூன்று ரூபாய்க்கு குடிச்சா வாசம் எப்படி வரும்? அரை மூடி சரக்கு தானே தருவான் மூன்று ரூபாய்க்கு. அதுக்கு பத்து பைசா பாக்கு தருவானோ வாசம் வராம இருக்க:-))
//அவள் பேன்ட்ரி சென்று, அங்கிருந்தபடியே ஒரு பக்கம் காஃபியும், மற்றொரு பக்கம் பாலும் நிறைந்து இருந்த பாட்டிலை காட்டினாள், மலேசியாவிலிருந்து வந்தது, இந்தியாவில் இது போல் இல்லை என்றாள்.//
Baileys Irish Coffee யா இருக்கும். இதைச் சேர்த்து 'கலக்கப்படும்' பி52, land slide மற்றும் ஒயிட் ரஷ்யன் காக்டைல்ஸ் ரொம்ப பிரபலம்!! வெறும் ஐஸ் போட்டும் சாப்பிடலாம்..
குடிப்பழக்கம் அளவுக்கு மீறும்போது ஆபத்துதான். குடிக்கிறவனெல்லாம் கெட்டவனும் இல்லை. குடிக்காதவனெல்லாம் யோக்கிய சிகாமணியும் இல்லை.
டாஸ்மாக் பக்கமெல்லாம் போயிறாதீங்க. சில கடைகள் வழியா குடிக்கிறவன் கூட போக முடியாது :)
Rehabilitation பத்தி நீங்க எழுதியது நன்றாக இருக்குங்க.
நேற்று ஆட்டோ காரங்களை ஒரு பிடி பிடிச்சீங்க. இன்னிக்கு விருப்பமில்லாதவர்கல்னு தெரிஞ்சும் மது ஊத்திக் கொடுக்கற CEO விட்டுட்டீங்க.
விடாதீங்க! உழைக்கிறவன் செய்யற தப்பும் உழைப்ப உரிஞ்சறவன் செய்யற தப்புக்கும் வித்தியாசம் உண்டு. விடாதீங்க.
என்ன சொல்லறது ! ..
ஓகே
good night !!!!..
thanks to share ....
2வது பின்னூட்டத்துக்கு ஒரு ரீப்பிட்டே ;))
//கவிதா | Kavitha said...
வேற மேட்டரா இருந்தா அடி விழுந்து இருக்கும் தான், இது தண்ணி மேட்டர் னால. .அடி விழல.. :)) ஆல் மென் ஆர் ஈசி இன் திஸ் :)) ஐ கெஸ்.. :)) //
நீங்க ஆண்களை தப்பவே நினைக்குறீங்க, எல்லா ஆண்களும் அப்படி இல்லை
என்னுடைய நண்பர்கள் பலபேருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ( எனக்கும்)
**எல்லா போதைக்கும் இப்போது சிகிச்சை உள்ளது. **
வ்லைதளத்தில் எழுதுவது, மற்றவர் நம் எழுத்தை வாசிப்பதை ரசிப்பது, போன்றவையும் ஒரு வகையான போதை மற்றும் அடிக்ஷன் தானாம். அதுக்கு மருந்து/சிகிச்சை என்னனு கொஞ்சம் சொல்றீங்களா?
@ கதிர்- நீங்க சொல்றது சரியா கூட இருக்கலாம்.. பெண்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்க முடியறதில்ல.. :)) அதனால இந்த சொல் வந்திருக்கும்
@ ராகிஜி: நன்றி :) தத்து மம்மி விஷயம்.. பேசி தீக்கனும்.. புள்ளைங்களுக்கு மம்மிய பத்தி இன்னும் சரியா தெரியல.. :))
குடிப்பதை நிறுத்தினால் இறந்து போவார்கள் என்பதே எனக்கு புதுத்தகவல், இதுல நான் இதை தொடர்ந்து வேற எழுதவா? மருத்தவம் படிச்சவங்க எழுதலாம், அல்லது இதனை சார்ந்து அதிகம் படித்து புரிந்து நான் எழுதவேண்டும்.. பாக்கலாம் :)
உங்க பையன் பேரும் நவீனா? அத்திவெட்டி பையன் பேர் கூட நவீன் தான் :))
@ முருகா : சரி முருகா அப்படினே ஆகட்டும்.. ஆனா என்னைப்பத்தி வேணுமான 3 பக்கத்துக்கு எழுத மேட்டர் வரும், என் வூட்டுக்காரை பத்தி எழுத ஒன்னும் இருக்காது. அதுவும் நீங்க எழுத வந்து இருக்கீங்கன்னு தெரிஞ்சா எந்த ரியாக்ஷனுமே இல்லாம இருப்பாரு.. எப்படி எழுதுவீங்க..? :))
@ தஞ்சாவூரான் : ம்ம்ம்.இருக்கலாம் பெயர் நினைவில்லை, என்னென்னமோ கொடுத்து நெட் ல தேடிப்பார்த்தேன்.. இந்த பாட்டில் வரல. :)) , டாஸ்மாக் பக்கம் போகவேண்டாம்னு சொன்ன ஒரே ஒருத்தர் நீங்க தாங்க.. என் வீட்டுக்காரர் க்கூட வேணாம்னு சொல்லல.. அதனால உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ்.. :)
@ சேது - பதிவை நல்லா படிச்சீங்களா? பார்ட்டி மற்றும் பொழுதுப்போக்குக்கு யாருக்கும் தொந்தரவு இல்லாமல் குடிப்பவர்களின் தனி சுதந்திரத்தில் தலையிட நாம் யார்? :) யோசிங்க..
@ முத்துவேல்: நன்றி
@ கோப்ஸ் : நீயெல்லாம் ஒரு தம்பியா? அக்கா அடிவாங்கறதுல என்னா ஒரு சந்தோஷம் பாரு..? ! :)
@ நவீன் : ஆண்களை தப்பாவே நினைக்கலங்க, அவர்கள் செய்யும் சில விஷயங்களை சொல்லி இருக்கேன், அது தப்புன்னு சொல்லவே இல்ல. முதல் பத்தியிலேயே சொல்லி இருக்கேன் ,என் நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே குடிப்பழக்கம் இல்லை, இது தெரிந்து நண்பர்கள் ஆகல,தானாக அமைந்தது, குத்தம் சொல்றதாவே பாக்காதீங்க.. உள்ள சொல்லி இருக்க சாராம்சத்தை கவனிங்க சரியா :))
@ வருண் : இருக்கு..தனியா ஒரு பதிவு போட்டுடவா? ரொம்பவே மோசமா இதனால் பாதிக்கப்பட்டவங்க.. கண் எதிரில் இருக்காங்க.. நான் அந்த லிஸ்டில் இன்னும் சேரல.அளவுக்கு அதிகமாக போகிறது என்றால், அதை கட்டுப்படுத்த கொஞ்சம் மூளையை அவ்வப்போது பயன்படுத்திக்குவேன்.. :) . நன்றி
***@ வருண் : இருக்கு..தனியா ஒரு பதிவு போட்டுடவா? ரொம்பவே மோசமா இதனால் பாதிக்கப்பட்டவங்க.. கண் எதிரில் இருக்காங்க.. நான் அந்த லிஸ்டில் இன்னும் சேரல.அளவுக்கு அதிகமாக போகிறது என்றால், அதை கட்டுப்படுத்த கொஞ்சம் மூளையை அவ்வப்போது பயன்படுத்திக்குவேன்.. :) . நன்றி***
நேரம் இருந்தால் எழுத மேட்டர் இருந்தால் எழுதுங்களேன்? இந்த "இஷூ" வை யாரும் "அட்ரெஸ்" பண்ணின மாதிரி தெரியலைங்க!
கவிதா,சென்னையில் எனக்குத் தெரிந்தாஆஆ வரை வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் உழைப்பாளிகள் 75% டாஸ்மாக் போகிறவர்கள். அவர்கள் பெண்டாட்டிகள் வீடுகளில் வேலை பார்க்கிறவர்கள். எங்கள் வீட்டில் வேலைப் பார்த்த ஒரு பெண்ணின் கணவன் அவளை அடிக்காத நாள் கிடையாது. நெற்றி பக்கம், மூக்கு உடைந்து அவள் வேலைக்கு வருவதைப் பார்த்து அவளை வரவேண்டாம். உதவித்தொகை கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பல வருடங்கள் கழித்து இப்போது பார்த்தால் அடையாளமே தெரியவில்லை மூன்றாவது குழந்தையும் பிறந்து ,ஒரு மீன்பாடி வண்டியில் கணவனுடன் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தாள்.:))இது ஒரு சந்தோஷமான எக்சப்ஷன்!!!
@ வல்லிஜி : ம்ம்ம்.. எங்க வீட்டுல வெளியில் ஆழ்குழாய் கழிவு அடைத்துக்கொண்டபோது சுத்தம் செய்ய ஆள் அழைத்தவந்த போது, அட்வான்ஸ் வாங்கி சென்று குடித்துவிட்டு வந்து தான் அந்த ஆழ்குழாயில் அவர் இறங்கினார். எனக்கு அது நியாயமோ ன்னு தோணிச்சி, இல்லைன்னா. அவ்வளவு துர்நாற்றம் வீசும் ஒரு சாக்கடையில் ஒரு மனிதன் எப்படி இறங்கி சுத்தம் செய்ய முடியும்.. ?! :( இவர்கள் பிழைப்பு எல்லாம் ரொம்பவே பாவம். வாங்கிய கூலி 500 ரூ அதில் 100 ரூ முன்னமே குடித்துவிட்டார், பின்னரும் குடிக்காமல் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். :(
Post a Comment