கடிதம் எழுதுதல் என்பது நம்மிடையே அறவே நின்றுவிட்டது. Communication என்பது மிகவும் துரிதமாக பல்வேறு வடிவங்களில் எளிதாக நமக்கு கிடைத்துவிட்டதால், கடிதங்கள் எழுதுதல் என்பதின் தேவைகள் குறைந்துவிட்டன.

சின்ன வயதில், தாத்தா, ஆயா சொல்ல சொல்ல பல கடிதங்கள் எழுதி இருக்கிறேன். அப்பா ஒரு முறை யாருக்கோ ஆங்கிலத்தில் கடிதம் எழுத சொல்லி டிக்டேட் செய்தார்,. யாருக்கு என்ன விஷயம் என்பது மறந்து போயிவிட்டது. என் கையெழுத்து நன்றாக இருக்குமென, எதை எழுதவேண்டும் என்றாலும்.. என்னை அழைத்துவிடுவார்கள்.

இதில் நாங்கள், "இன்லேன்ட் கவர்" அதிகம் பயன்படுத்தியதாக இருக்கும். எங்கள் அம்மாவிற்கு, மூவரும் ஆளுக்கு ஒரு பக்கம் என்று எழுதி அனுப்புவோம். இந்த கடிதம் மட்டுமே எங்களுக்கும் அம்மாவிற்கும் இருந்த தொடர்பாக இருந்தது. இதை க்கூட "பாவம், உங்களையே நினைச்சிக்கிட்டு இருக்கும், எழுதும்மா" ன்னு ஆயாவின் தொந்தரவின் பேரில் எழுதுவதாகவே இருக்கும். இன்லேன்ட் லெட்டரில் முதல் பக்கத்தில் நான் தான் எழுதுவேன் என்று அடம் பிடிப்பேன். ஆனால் உள்ளே விஷயங்கள் எல்லாம் ஆயா தான் சொல்லித்தருவார்கள். தனியாக எழுதியதே இல்லை. என்ன எழுதவேண்டும் என்று தெரியாது. பெரிய அண்ணன் மாத்திரம் தனியாக எழுதும். அதுவும் அவர் பீட்டர், எப்பவும் ஆங்கிலத்தில் எழுதுவார்.

ஆயா, தாத்தா எந்த கடிதம் என்றாலும் ஆரம்பிப்பது - "நலம், நலமறிய அவா. நிற்க. " என்பது தான் இருக்கும். இதை எழுதிவிட்டு, ஆயா சொல்லு ...சொல்லு ன்னு அவங்க வேலை செய்துக்கிட்டு இருக்கும் போது கேட்டு கேட்டு எழுதுவேன். பொதுவாக ஆயா லெட்டர் எழத சொல்லுவது, அத்தைகளுக்கு, சித்தப்பாவிற்கு என்று இருக்கும். அம்மாவிற்கு மாதம் ஒன்று என்பது கணக்கு.

அம்மா வீட்டுக்கு போகும் போது,ஒரு வேளை நாங்கள் எழுதிய கடிதத்தில் தவறுகள், வார்த்தை பிரயோகம் சரியாக இல்லாவிடில் கேட்பார்கள், திருத்துவார்கள். சின்ன அண்ணன் தான் நிறைய தப்பு செய்யும். எங்கள் கடிதங்கள் எல்லாமே சேர்ந்துவைத்து இருப்பார்கள்.  "ஆயா தான் சொல்லிகொடுத்தாங்கன்னு சொல்லிடுவேன்.." உடனே, அம்மாவும், மாமியாரை திட்டிவிட்டு என்னை அணைத்துக்கொள்வார்கள். :)

எட்டு (head) சித்தப்பா என்று எங்கள் சொந்தக்காரர் அப்பாவின் சித்தி மகன், அவருக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் தெரியாது. இதற்கு காரணம் அவரின் இடைவிடாது மூக்குப்பொடி போடும் பழக்கம் என்று அப்பா சொன்னார். அப்பா அவரின் கண் பார்வை வர எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார், முடியவில்லை. அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. எங்கள் வீட்டில் தான் பல வருடங்கள் இருந்தார். அவரும் யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமானால்.. என்னைத்தான் அழைப்பார்.

பிறகு, +1,+2 படிக்கும் போது,  தோழிகளுக்கு கடிதம் எழுதுவேன். அவர்களும் எனக்கு திருப்பி பதில் அனுப்புவார்கள். +1 ல் சித்தப்பா வீட்டில் சென்னையில் இருந்தேன்..அங்கு படிப்பை தொடர முடியாமல், பாதியில் ஆயாவிடமே வந்துவிட்டேன். அந்த பள்ளித்தோழிகளுக்கு விழுப்புரத்தில் இருந்து கடிதம் எழுதுவது வழக்கமாகிவிட்டது.

கடிதம் கதை இத்தோடு முடிந்தது என்றால் இல்லை. திருமணம் ஆகிவந்த பிறகு ஆயா எனக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவார்கள். தனியாக குழந்தையை வளர்க்கிறேன் என்பதால்,எப்படி இருக்க வேண்டும் என எழுதுவார்கள், ஆயாவின் கடிதங்களில் சிறப்பு அம்சம் என்னவென்றால், இடைவெளியில்லாமல் நெருக்குமாக எழுதுவார்கள். கடிதத்தை மடிக்கும் இடத்தை கூட விட மாட்டார்கள்.

கடிதங்கள் என்று சொன்னால், முதலில் நினைவுக்கு வருவது, நேரு மாமா சிறையில் இருந்த போது இந்திராஜிக்கு எழுதிய கடிதங்கள். அடுத்து 5 ஆம் வகுப்பு படிக்கும் போது "Kannan Writes from Kanyakumari" என்ற பாடம் ஆங்கில புத்தகத்தில் இருந்தது. வகுப்பில் கண்ணன்'னு ஒரு பையன் இருந்தான், கன்யாகுமரி'ன்னு ஒரு பெண்ணும் இருந்தாள். இந்த பாடம் வரும் போது எல்லோரும் அவர்கள் இருவரையும் கிண்டல் அடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. மற்றவர்கள் கிண்டலிலிருந்து தப்பிக்க கண்ணனும், கன்யாவும் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள். 5 ஆம் வகுப்பிலேயே இப்படி எல்லாம் பிள்ளைகள் கிண்டல் செய்து இருக்கிறார்கள்..ம்ம்ம்ம்.. என்ன உலகமடா இது.?

அடுத்து கடிதத்தின் மேல் ஒட்டும் ஸ்டாம்ப். :) ஸ்டாம்ப்ஸ் கலெக்ட் செய்வதை பொழுதுப்போக்காக நிறைய குழந்தைகள் ஒரு காலத்தில் செய்து வந்தார்கள். ஸ்டாம்பை எச்சில் தொட்டு ஒட்டக்கூடாது என்று தாத்தா சொல்லி இருந்தார். விளக்கம் கேட்டபோது, பின்னால் தடவியிருப்பது மயில் துத்தம்,அது விஷம் என்ற சொல்லப்பட்டது. அவர் சொன்னபடியே நடந்துக்கொள்வேன், ஸ்டாம்ஸ் 'ஐ தண்ணீர் தொட்டு, ஒட்டுவேன்.

இந்த காலத்து குழந்தைகளுக்கு கடிதம் தேவையில்லை என்றாகிவிட்டது. அடுத்து போஸ்ட் பாக்ஸ். என் மகன் இதை பார்த்து இருக்கிறானே ஒழிய பயன்படுத்தியதே இல்லை. போஸ்ட் ஆபிஸ் போகும் வேலையே இல்லாதபடி, தடுக்கிவிழுந்தால் கூரியர் சர்வீஸ்கள் வந்துவிட்டன, அவற்றின் துரிதமான சேவை, நம்மை போஸ்ட் ஆபிஸ் செல்லவைப்பதை தடுத்து விடுகிறது. ஆனாலும் என் கணவர் ஸ்பீட் போஸ்ட் ஐ இன்றும் பயன்படுத்தி வருகிறார். அவருடன் சமீபத்தில் அடையார் போஸ்ட் ஆபிஸ் சென்று வந்தேன். அரசு அலுவலகம் சார்ந்த சிலவற்றை தபால் துறை மூலம் தான் அனுப்பவேண்டும் என்று சொல்லி அனுப்புவார்.

மணி ஆர்டர், இதன் சேவை இப்போதும் தேவைப்படுகிறது தான். ஊர் பக்கம் பலருக்கு பேங்க் அக்கவுண்ட் இருப்பதில்லை. அதற்கு மணி ஆர்டர் தான் ஒரே வழி.

 தந்தி, ஒரு காலத்தில் தந்தி என்றால், படிப்பதற்கு முன்னமே துக்க செய்தியாகத்தான் இருக்கும் என, வீட்டு பெண்கள் அழ ஆரம்பித்து விடுவார்கள். தந்தி என்றாலே ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அதுவும் இப்போது சுத்தமாக இல்லை.

தபால்துறை இனி வரும் காலங்களில் நமக்கு பயன்படாமலேயே போய் விடுமோ என்ற எண்னம் கூட வந்தது. கூரியர் சர்வீஸ் போன்று, அலுவலகங்களுக்கு - டோர் ஸ்டெப் கலெக்ஷன், அக்கம் பக்கம் இருக்கும் கடைகளிலேயே கடிதங்களை பெற்றுக்கொண்டு,  டெலிவரி செய்தல் போன்ற சேவைகள் கிடைக்குமானால், தொடர்ந்து தனியார் பக்கம் போகாமல்,பழையபடி மக்கள் இவற்றை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

அணில் குட்டி அனிதா: வய் திஸ் போஸ்டு..? ஹை இது கூட போஸ்டு தான்.. அதான் ப்ளாக் ல தினம் போஸ்ட் பண்றீங்க இல்ல அப்புறம் என்னவாம்? .ஹி ஹி...ஹிஹி.. எப்புடீஈஈ !! :))))

பீட்டர் தாத்ஸ் : To send a letter is a good way to go somewhere without moving anything but your heart.”

படங்கள் : நன்றி கூகுல்.
.