தொலைக்காட்சியில் சின்ன வயதில் அதிகமாக பார்த்த விளையாட்டு, கால்பந்து, அடுத்து டென்னிஸ். கால் பந்து என்பது குடும்பத்து விளையாட்டு எனலாம், அப்பா நன்றாக விளையாடுவார், அடுத்து பெரிய அண்ணன். அப்பா, பெரிய அண்ணனுக்கு ஒரு வயதாக இருக்கும் போதே கால்பந்து வாங்கிக்கொடுத்து, தன் விளையாட்டு ஆர்வத்தை அண்ணனிடமும் உருவாக்கியிருந்தார். அப்போதே அண்ணன் அடித்த பந்து வீட்டில் உள்ள பல்புகளை உடைந்தன என்று அப்பா சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு நவீன். நவீன் அதிகமாக மேட்சஸ் விளையாடவில்லை என்றாலும், அதற்கான தேர்ச்சி வகுப்புகளுக்கு சென்றும், நேரம் கிடைக்கும் போதும் விளையாடி வருகிறான். அவனுடன் உட்கார்ந்து கால்பந்து பார்ப்பது, கேள்விகேட்டு இம்சை செய்வதும் தொடரும் நிகழ்வு.

இதில் டென்னிஸ் ணிக்கணக்காக அண்ணன்’களுனுடன் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். அதில் என்னை கவர்ந்த விஷயம், பந்து வந்து விழுந்த இடங்களை ரீ-ப்ளே காட்டுவார்கள். அதில், பந்து விழந்த இடத்தில் இருந்து அது எப்படி சென்றது என்பதை கிராஃப் போட்டு காண்பிப்பார்கள். நான் வியந்தும் பார்த்த விஷயம் அது தான். டென்னிஸ்’சிற்கு அடுத்து கிரிக்கெட். இதிலும் பந்து சென்ற திசைகள் மிக துள்ளியமாக படம் பிடிக்கப்பட்டு, கணக்கிடப்பட்டு காட்டப்படும். சில சமயங்களில் பந்து விழுந்த இடத்திலிருந்து எப்படி எல்லாம் போகும் என்று பிரடிக்ட் செய்தும் காண்பிப்பார்கள்.

அப்போதே கேமரா எங்கிருக்கிறது, எத்தனை கேமராக்கள் இருக்கின்றன, எப்படி இதை படம் பிடிக்கிறார்கள், படம் பிடித்தபின்னர், கண நேரங்களில் இவற்றை எப்படி (பந்து சென்ற வழித்தடங்களை) கோடுகளாக மாற்றி காண்பிக்கிறார்கள் போன்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும். பக்கத்தில் இருப்பவர் என் வாயில் துணியை அடைத்துவிட்டு விளையாட்டை கவனித்தால் மட்டுமே அவர்களால் விளையாட்டை ரசிக்க முடியும். அந்த அளவு நொச்சுத்தனமாக என் கேள்விகள் இருக்கும். கேமிராக்கள் எங்கு வைக்கப்பட்டு இருக்கின்றன போன்றவையை தெரிந்துக்கொண்டாலும், அவை எப்படி இப்படி மாற்றப்படுகின்றன என்ற கேள்விக்கு விடை தெரியாமலே இருக்க, போன வருடத்தில் ஒரு நாள், நண்பர் ஒருவர் சிக்கியபோது கேட்டேன். அவரிடம் (கணினியில்) கேட்டுக்கொண்டு இருக்கும் அதே சமயம் நவீனிடமும் கேட்டேன். இருவருமே அப்போது Hawk Eye Technology என்று சொன்னார்கள். எந்த கேள்வி எனக்குள் எழுந்தாலும் அது நவீனுக்கு தெரிந்து இருக்கிறதா என்பதை உடனுக்குடன் தெரிந்துக்கொள்வேன். தெரியாவிட்டால் சொல்லி கொடுக்கலாம் என்றே கேட்பேன். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடந்துவிடாமல் என் குழந்தை பார்த்துக்கொள்கிறான்.

Hawk Eye Technology என்பது கணினியில் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருளின் உதவிக்கொண்டு கணக்கிட்டு செய்யக்கூடியது. இதனை Hawk-Eye Innovations Ltd என்ற கம்பெனி ஆரம்பித்து செய்துவருகிறது. இதனை Roke Manor Research Limited சேர்ந்த Romsey, Hampshire என்ற இரண்டு பொறியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கான காணொலி செயலி (Video Processor) யை Dr Paul Hawkins and David Sherry என்ற விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

கழுகு கண் தொழிற்நுட்பம், நான்கு அதி வேக புகைப்பட கருவிகளை வேறு வேறு இடத்தில் வைத்து இயக்கி, அதிலிருந்து பெறப்பட்ட படங்களை முக்கோண உருவாக்கம் (Triangulation) முறைப்படி கணக்கிட்டு பயன்படுத்தக்கூடிய தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மென்பொருளின் உதவியுடன் பந்துகள் விழுந்த இடத்திலிருந்து எங்கெல்லாம் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை கணக்கிட்டு படங்களாக வெளியிடுகின்றன. படத்தொகுப்புகள் அதி வேக புகைப்பட கருவிகள் மூலம் எடுக்கப்படுவதால், மிகத்துள்ளியமாக பந்து விழுந்த இடத்தை படம் பிடித்துக் கொடுக்கிறது. டென்னிஸ் ஆட்டத்தில் இந்த கழுகு கண் தொழில்நுட்ப முறை பல நேரங்களில் விளையாட்டு வீரர்களுக்கு பந்து கோட்டை தொட்டு சென்றால், அது அவுட்’ டா இல்லையா என்ற சந்தேகத்தில் உதவியுள்ளது. டென்னிஸ்'ஸின் முதன்மை வீரர் ரோஜர் ஃபெடரர் க்கு மட்டும் இந்த தொழில்நுட்பம் அறவே பிடிப்பதில்லை. அமர்வு நடுவர் (Chair Umpire) சொல்லும் முடிவே போதுமானது, இது தேவையில்லை, இதில் பிழை இருக்கிறது என்ற கருத்தை கொண்டுள்ளார். அதனை வெளிப்படையாக தெரிவித்தும் உள்ளார்.

பந்தின் விட்ட அளவை பொருத்தும் இந்த முக்கோண உருவாக்க முறையில் கணக்கீடு செய்வதால், பூச்சிய புள்ளியிடங்களில் பிழை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதும் இதில் உள்ள ஒரு எதிர்மறையான விஷயம். இருந்தாலுமே அந்த பிழையின் அளவு மிக மிக சிறிய அளவில் இருப்பதால், அதை பெரிது படுத்தாமல், மேலும் பல வழிகளில் இது உதவியாகவும், உடனுக்குடன் தேவையான படத்தொகுப்புகளை நடுவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கொடுப்பதாலும், இதனை தொடர்ந்து பயன்படுத்துவதில் எந்த எதிர்ப்பும் வரவில்லை எனலாம்.

இதனை சேனல் 4 முதன் முதலில் 2001 ஆம் வருடம் இங்கிலாந்திற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் உபயோகப்படுத்தியது. கிரிக்கெட் டில் பொதுவாக LBW “OUT” கொடுக்கப்படும் இடங்களில் மைதானத்தில் உள்ள நடுவர்களுக்கு சரியான முடிவை அறிவிக்க முடியாதபட்சத்தில், மூன்றாவது நடுவருக்கு அனுப்பட்டு, அவரின் முடிவு இறுதியாக அளிக்கப்படும். மூன்றாவது நடுவர், இந்த கழுகு கண் தொழிற்நுட்ப வசதியுடன் பந்து விழுந்து எகிறி, மட்டை வீச்சாளரின் (BatsMan) கால்களில் பட்டதா, மட்டையில் பட்டதா,பந்து பிட்ச் ஆன இடம், அது சென்று ஸ்டெம்பைத் தாக்குமா என்பது வரையில் துள்ளியமாக கவனித்து ஆட்டக்காரர் ஆட்டத்தை இழந்தாரா இல்லையா என்று அறிவிப்பார். நாம் இதனை "மானிட்டர் பார்த்து" என்று மிக எளிதாக நினைத்துக்கொண்டாலும், இதற்கு பின்னால் கழுகு கண் தொழில்நுட்பமே வேலை செய்கிறது.

பிற்பாடு, கிரிக்கெட், டென்னீஸ் இரண்டு விளையாட்டிலுமே இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பிடிக்கும் படங்கள், தனிப்பட்ட முறையில் வீரர்களின் விளையாட்டு திறனை ஆராய்ந்து கொள்ளவும், அவர்கள் செய்யும் தவறுகளை துள்ளியமாக கவனித்து சரி செய்து க்கொள்ளவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழில்நுட்பம் கால்பந்து விளையாட்டுக்கு தேவை இல்லை என்றாலும் கால்பந்துக்காகவும் இதனை பரிந்துரை செய்யப்பட்டதுள்ளது.

இது தவிர்த்து ஸ்னூக்கர் விளையாட்டிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நன்றி
படங்கள்கூகுல் ,
விபரங்கள் - கூகுல், http://www.hawkeyeinnovations.co.uk
, விக்கிபிடியா
தெகாஜிஆங்கில தொழிற்நுட்ப வார்த்தைகள் தமிழ் மொழி மாற்றம்

அணில் குட்டி அனிதா: ம்ம்ம்ம் ஒரு வழியா மண்டைய போடறதுக்குள்ள எப்படி இதை செய்யறாங்கன்னு அம்மணி கண்டுபிடிச்சிட்டாங்க.....நமக்கெல்லாம் இதுல ஒரு நல்ல விஷயம் என்னென்னா. .அம்மணிக்கு பல விஷயம் தெரியாம இருக்கறதால. .நாம எல்லாம் தப்பிச்சோம் இல்லன்னா.. இப்படி தினம் ஒரு போஸ்ட் போட்டு ஹாஹா.. எனக்கு இது தெரியும் அது தெரியும் ன்னு சீனை போட்டு நம்மை கொல்லுவாங்க. அதையும் நாம் ஹி ஹி ஹி..ன்னு சிரிச்சிக்கிட்டேஏஏஏ பொறுத்துக்கனும்.. :(

பீட்டர் தாத்ஸ் : A film is never really good unless the camera is an eye in the head of a poet

.