தூங்கி எழுந்தவுடன் கனவுகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை. நினைவில் இருப்பவையும் கோர்வையாக இருப்பதில்லை. பல நேரங்களில் நண்பர்கள், உறவுகள் கனவில் வருவதுண்டு. சில நண்பர்களிடம் அவர்கள் கனவில் வரும் போது, நினைவு வைத்து சொல்வதுண்டு.

சமீபத்தில் கனவில் ஒரு நண்பர் வர, அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். கனவில் அவர் ஒரு பெண் டாக்டரிடம் ஜொள்ளுவிடுவதில் பொறுமை இழுந்து, நான் வெளியில் வந்து காத்திருக்க, அவருடைய கார் ஒரு சாய்வான ரோடில் தானாக நகர ஆரம்பிக்க, எனக்கு காரை நிறுத்தத்தெரியாமல், காரை நிறுத்தவேண்டி, உதவிக்கு ரோடில் இருந்தவர்களை "கத்தி கத்தி" அழைக்க என, என் கனவு சென்றதை நண்பரிடம் சொல்லி, எனக்கு கார் ஓட்டத்தெரியாது, அதனால் கனவில் காரை நிறுத்தத்தெரியலன்னு சொன்னேன். அதற்கு அவர், காரை பார்க்கிங் செய்ய, கையால் பிரேக் போடும் வசதி இருக்கு, இனிமே கனவு வரும் போது, அதை ஞாபகம் வச்சி காருக்கு ப்ரேக் போடுங்கன்னு சொன்னார்.  (நம்ம ஃப்ரண்ட் ஆச்சே, வேறு எப்படி இருப்பாங்க?) ஆனால் அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து, அதே கனவு திரும்பவும் தொடர, ஒருவழியாக, அந்த டாக்டர் பெண்ணிடம், ஜொள்ளுவிடுவதை நண்பர் நிறுத்திவிட்டு வந்துவிட்டதையும் அவரிடம் சொல்ல,  அந்த டாக்டர் பொண்ணு எப்படி இருந்தாங்க" கேட்டாரு. ரொம்ப ஞாபகப்படுத்தி, "எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நதியாவிற்கு ஊசிப்போடும் டாக்டர் போல இருந்தார்" என சொல்லியது தான், "அட நதியா இருக்கும் போது எதுக்கு அந்த டாக்டர், நதியாவே போதும்னு" சொல்லிவிட்டு சென்றார்.

ஆக, கனவுகளும் விட்ட இடத்திலிருந்து தொடர்கின்றன. சில கனவுகள் நல்ல திரைகதையோடு, எதிர்பார்க்காத டிவிஸ்ட்களோடு தொடர்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். உறவுகள், நண்பர்கள் வரும் கனவுகள் தவிர்த்து, பொதுவான கனவுகள் எவ்வளவு நினைவுப்படுத்தினாலும் சரியாக நினைவில் இருக்காது. நேற்றிரவு வந்த ஒரு நீண்ட கனவு. இப்படியும் கனவு வருமா என்று யோசிக்க வைத்தக்கனவு. எப்படியும் இதை எழுதி வைத்தே ஆகவேண்டுமென, ரொம்பவும் முயற்சி செய்து நினைவுப்படுத்தி..............

இது ஆங்கிலெயர்கள் நம்மை ஆண்ட காலத்திற்கு என்னைக்கொண்டு சென்று, அங்கு நடந்த ஏதோ ஒரு நிகழ்வு.

என்னையும் சேர்த்து இன்னும் இருவரை ஆங்கிலேய கும்பல் ஒன்று பெரிய நீண்ட
துப்பாக்கிகளோடு, பூட்ஸ் சத்தங்களோடு துரத்தி வருகிறது. ஆளொக்கொரு திசையாக தலைத்தெறிக்க ஓடுகிறோம். அது ஒரு கிராமும் நகரமும் கலந்த  இடம்போல இருந்தது, துணிகள் நிறைய காயவைத்து இருக்கிறார்கள்,  செம்மண் ரோடுகள், ஓடும் போது செம்மண் புழுதி பறக்கிறது, துணிகளுக்கு நடுவில் நுழைந்து, துணிகள் தலையில் அடிக்க ஓடுகிறேன்.  என்னுடன் ஓடி வந்த இரண்டு ஆண்கள், நடுவில் எந்த பக்கம் போய் தொலைந்தார்கள் என எனக்கு த்தெரியவில்லை.

நான் நகரத்தில் உள்ள சில வீடுகளில் நுழைந்து மறைந்து ஒளிந்து கடக்கிறேன். சாலையாக இருந்தால் ஓடுகிறேன், வீடுகளாக இருந்தால் மெது மெதுவாக என்னைப்பின் தொடர்பவர்களை கவனித்தவாறு நகர்கிறேன்.  அப்படி நுழையும் வீடுகளில் விதம் விதமான மனிதர்களை பார்க்கிறேன். அவர்கள் அநேகமாக ஆங்கிலோ இந்தியர்கள், அவர்களின் உடைகள் அப்படிதான் இருந்தன. பஃப் கை வைத்த முழு ஃப்ராக் அணிந்த பெண்கள், கைகளிலும் கால்களிலும் வெள்ளை களுவுஸ் அணிந்திருக்கிறார்கள். ஃப்ராக்கின் கை கால்களில் முடிவில் ஃப்ரில்கள் இருக்கின்றன. ஃப்ரில்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ளன. ஆடைகள் நீல வண்ணம், பச்சை வண்ணம் கலந்த நிறத்தில் இருக்கின்றன. அதில் ஒரு வீட்டில் நுழையும் போது மிகவும் குண்டான, 5.6" இருக்கக்கூடிய உயரமான ஒரு பெண், மேற்சொன்ன ஆடையோடு இருக்கிறார். நான் ஓடி ஒளியும் போது, "என்னை சிலர் துரத்தி வருகிறார்கள், நான் இருப்பதை சொல்லவேண்டாம்" என்கிறேன். அந்த பெண்ணும், துரத்தி வந்தவர்களிடம் "அப்படி யாரும் இந்தப்பக்கம் வரவில்லை" என பதில் சொல்கிறார். அவர்கள் சென்றவுடன், "இந்தப்பக்கம் ஒரு  சின்ன சந்து இருக்கிறது, அதன் வழியாக என் கணவர் சென்றுக்கொண்டு இருக்கிறார், அவர் பின்னால் போனால் நீங்கள் தப்பித்து விடலாம் " என்கிறார். அவர் கணவர் என்று சொன்ன நேரத்தில், அவர் எப்படி இருப்பார் என்ற கற்பனையோடு, அவர் சொன்ன வழியே ஓடுகிறேன், ஆனால் என் கற்பனை தவிடு பொடி ஆகிறது. ஆம், நான் பின்னாலிருந்து பார்க்கும் அந்த உருவம் 4 அடியே இருக்கும் ஒரு சிறிய உருவம். சந்தன நிற பேன்ட்டும், மெல்லிய வண்ணங்கள் பலவும் கலந்த நிறத்தில், முழுக்கையை மடித்துவிட்ட சட்டையும் அணிந்து சாய்ந்து சாய்ந்து நடக்கிறார். அவரை நெருங்கி விட்டேன், அவரிடம் பேசவில்லை, அந்தம்மாவுடைய கணவரா இவர் என்ற சிந்தனையோடு அவரை அவர் நடக்கும் வேகத்தில் தொடர்கிறேன். அந்த சந்து முடியும் போது.....

கொஞ்சம் தொலைவிலிருந்து மற்றொரு காவி உடை அணிந்த கும்பல் ஒன்று (இந்துத்துவா?) வெறித்தனமாக ஓடிவருகிறது. இந்த கும்பலுக்கும், என்னைத்துரத்தி வந்த கும்பலுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் என்னை த்துரத்தி வந்த கும்பலை எதிர்த்து போராடுபவர்கள் என்பதை அவர்களின் பேச்சு மற்றும் அணுகுமுறையை வைத்து கணிக்கிறேன். இவர்களிடமும் துப்பாக்கி, கற்கள், கத்தி, கட்டை என என்னென்னமோஇருக்கிறது. என்னைப்போன்று இவர்கள் ஒளிந்து ஓடவில்லை. ஆங்கிலேயர்களை கொன்றே தீருவோம் என கோஷமிட்டுக்கொண்டு எதிர்த்து ஓடி வருகிறார்கள். நடுவில் என்னைக்கண்டு, பிடித்து இழுத்து ஒரு கட்டிடத்தில் ஓடி ஒளியச்சொல்லுகிறார்கள், நானோ, அவர்களை முரட்டுத்தனமாக பயங்கரமாக சண்டையிட வேண்டாம் என சொல்ல நினைக்கிறேன். ஆனால் சொல்வதற்குள் இரண்டு குழுவும் சண்டையிடதுவங்குகிறார்கள்.  துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், சண்டை சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக  குறையும் தொலைவிற்கு நான் வந்து விடுகிறேன். நான் வந்து சேருமிடம், வீடைப்போல இல்லை, ஆனால் கட்டிடம், நிறைய வாசல்கள், வளைந்து வளைந்து செல்லும்படியாக இருக்கின்றன. அந்த கட்டிடத்தில், உட்கார்ந்த நிலையில் கால்களை நீட்டியவாரே நகரும் ஒரு உருவம், அது ஒரு பெண். ஃபிரில் வைத்த முழு ஃப்ராக் அந்த கால்களை மறைக்க, அந்த (காலின்) பகுதி மட்டுமே என் கண்களுக்கு தெரிகிறது. அந்த கட்டிடத்தில், நான் தப்பித்து செல்லும் பல இடங்களில் இந்த உருவமும் என் கண்களில் படுகிறது. என்னை தொடர்வதாக தெரியவில்லை. ஆனால் என்னைப்போன்று ஓடி ஒளியும் நடக்க முடியாத ஒரு பெண் என்பது மட்டும் தெரிகிறது.

இந்த கட்டிடத்தை தாண்டி வெளியில் இறங்கி ஓடுகிறேன். அந்த காலத்து பேரூந்து ஒன்று எங்கோ புறப்படத்தயாராக உள்ளது. இருவர் இருக்கையில் பின் பக்கமாக சென்று ஒளிகிறேன். அவர்கள் கண்டுக்கொண்டு என்னை எழுப்ப முயற்சிக்கிறார்கள். நான் என்னைத்துரத்தும் கும்பலுக்குத் தெரியாமல் ஒளிகிறேன் என்று சொல்வதைக்கேட்டு, என்னை அவர்களே மறைக்கிறார்கள்.

தலை மிகவும் பாரமாக உணர்கிறேன், கண்ணும் ஒரே வலி.... எப்படியும் அந்த இடத்திலிருந்து வந்துவிட முயற்சி செய்து சிரமப்பட்டு வலியை தாங்கிக்கொண்டு கண்விழிக்கிறேன். கனவு கலைந்திருந்தது.  படுத்தவாரே, கனவை ஒரு தரம் ஓட்டிப்பார்த்து, இதில் வந்த உடைகள், செம்மன் புழுதி, கால் மட்டும் தெரிய நகரும் பெண், குள்ளமான மனிதர், அவருக்கு பெரிய உருவத்தில் ஆன மனைவி,  காவி உடுத்திய பயங்கரவாதிகள், என்னைத்துரத்தும் பூட்ஸ் அணிந்த ஆங்கிலேயர்கள், பேருந்தில் என்னைக்காப்பாற்றும் இருவர், யாரென்று தெரியாது ஆனால் என்னைப்போல ஓட ஆரம்பித்த இரண்டு ஆண்கள்.... என நிறையப்பேர்..... ஏன் எனக்கு இந்த கனவு வந்தது என்றேத்தெரியவில்லை. சமீபத்தில் இப்படி ஒரு சினிமா பார்க்கவில்லை. மனிதர்களையும் சந்திக்கவில்லை. .......

கனவுகள் எப்படி வருகின்றன என்பதைப் பற்றிய என்னுடைய இன்னுமொரு பதிவு இதோ கனவுகளை கட்டுப்படுத்துதல்........... [இவளுக்கு இதே வேலையோ? ன்னு நீங்க நினைக்கப்பிடாது, உங்களுக்கும் கனவு வரும்.. இப்படி இழுத்துக்கொண்டு வந்து எழுதாமல் இருப்பீங்களா இருக்கும்... :)]

அணில் குட்டி : அம்மணி எப்ப கனவு வந்தாலும் வூட்டுக்கார ஒக்காரவச்சி, ஒரு வாரம் நகரவிடாம கதை சொல்லுவாங்க... இன்னும் இந்த கனவை அவரிடம் சொல்லல.....  பாவம் மனுசன்.. எப்ப மாட்டாப்போறாரோ... ஆண்டவனே அவரை காப்பாத்து.........

பீட்டர் தாத்ஸ் : “The best thing about dreams is that fleeting moment, when you are between asleep and awake, when you don't know the difference between reality and fantasy, when for just that one moment you feel with your entire soul that the dream is reality, and it really happened.”

படங்கள் : நன்றி கூகுள் ! 
.